21 நவம்பர், 2009

பழசிராஜா - கேரளத்துப் பிரபாகரன்!


பழசி, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று கொரில்லா முறையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிடுகிறார். அவரது படையில் ஆர்வத்தோடு சேர்பவர்கள் பழங்குடிகள். ஒரு கட்டத்தில் வில்லும், வாளும் மட்டும் போதாது, துப்பாக்கிகளும் வேண்டுமென்று சொல்லி, வெள்ளையர்களை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றுகிறார் பழசி. நவீன ஆயுதங்களோடு பழசியின் பெரும்படை தாக்கும்போது வெள்ளையர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒப்பந்தத்துக்கு அழைக்கிறார்கள்.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் போடப்படும் ஒப்பந்தம் வெள்ளையர்களால் மீறப்பட, மீண்டும் போர்க்கோலம் காண்கிறார். சில அதிரடி வெற்றிகளை ஈட்டுகிறார். வெள்ளையர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி கேரள நாட்டைச் சேர்ந்த சிலரை ஆட்காட்டிகளாக பணிக்கு சேர்க்கிறார்கள். பழசியின் ரகசியங்களை அறிந்து, அவரது ஒவ்வொரு சகாக்களாக பிடித்து தூக்கிலிடுகிறார்கள். இறுதியில் தோல்வி உறுதி என்ற நிலையிலும் வீரத்தோடு மோதி இறவாப்புகழ் அடைகிறார் பழசிராஜா.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுக்கால ஈழநடப்பை வைத்துப் பார்த்தால், பழசிராஜாவையும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பலவகைகளில் ஒப்பிடலாம். (ஒரு காட்சியில் பழசிராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துகொண்டவர் என்றுகூட வசனக்குறிப்பு இருக்கிறது. அதை பழசியே மறுக்கும் வசனமும் உண்டு)

படத்தின் கதை இவ்வாறு இருக்க, வலைமனை ஒன்றில் வாசித்த பழசிராஜாவின் ஒரிஜினல் கதை சற்று வேறாக இருக்கிறது. பிரெஞ்சுப்படையே படத்தில் வரவில்லை. இறுதியில் பழசிராஜா தற்கொலை செய்துகொண்டதாக கதையில் இருக்கிறது. படத்திலோ வீரமரணம். எம்.டி.வாசுதேவன் மாற்றினாரா அல்லது படத்துக்காக மாற்றினார்களா என்றும் தெரியவில்லை.

‘இந்திய சுதந்திரத்துக்கு போராடிய முதல் வீரன்’ என்றெல்லாம் படம் வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ஆனால் படத்தில் இடம்பெறும் காலக்கட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கிறது. திப்புசுல்தான் மற்றும் கட்டபொம்மன் வாழ்ந்த காலத்திலேயே பழசியும் வாழ்ந்திருக்கிறார். தென்னிந்தியாவிலிருந்து வெள்ளையர்களை துரத்தியடிக்க திப்பு தலைமையில், குறுநில மன்னர்கள் திரண்டது குறித்த குறிப்புகளையும் படத்தின் வசனங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியவில்லை. மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரில்லாப் போரை ஒளிப்போர் (ஒளிந்துத் தாக்கும் போர்) என்று அழகாக மொழிபெயர்க்கிறார். தமிழ்படம் என்றாலும் சரத்குமாரை தவிர மற்றவர்கள் மூக்காலேயே பேசுவதால் மலையாளத்தில் படம் பார்க்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

தசாவதாரம் தொடங்கியது மாதிரியே கமல்ஹாசனின் கம்பீரக்குரலோடு படம் தொடங்கும்போது எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பு மடங்காகிறது. ஒருவேளை கமல் இப்படத்தை தயாரித்திருந்தால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். இருபது வருடங்களுக்கு முன்பு ராமனந்த்சாகர் எடுத்த ராமாயணம் மாதிரியிருக்கிறது பழசிராஜா. வெயிட்டான சப்ஜெக்ட்டை, வெயிட்டாக பணமிறக்காமல் கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்கள் கூட ரொம்ப சீப் ரேட்டில் மாட்டினார்கள் போலிருக்கிறது. காலையில் ஏழு மணிக்கே டாஸ்மாக் வாசலில் நிற்கும் நோஞ்சான்கள் மாதிரி பாவமாக இருக்கிறார்கள். அசிஸ்டெண்ட் கலெக்டராக நடித்திருப்பவர் வெள்ளைக்காரரா என்றே சந்தேகமாக இருக்கிறது.

படத்தின் முதல்பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. பழசிராஜா, ராணியைப் பார்க்கப் போகும்போது கூட முன்னால் நீட்டிய வாளோடே போகிறார். புகுந்து விளையாடப் போகிறார் என்று நினைத்தால், வெறும் ஐடியா மணியாக படையினருக்கு ஐடியா சொல்லியே காலத்தைத் தள்ளுகிறார். ராஜாவுக்கான ஆக்‌ஷன் பிளாக்குகள் ரொம்ப குறைவு. ஆனால் மம்முட்டியின் மெஜஸ்டிக் லுக்கும், ராயல் நடையும் அட்டகாசம். இரண்டாவது ஹீரோவாக வந்தாலும் சரத்குமார், கொடுக்கப்பட்ட வாய்ப்பை கனகச்சிதமாக கவ்விக் கொண்டார். மம்முட்டியோடு வாள்பயிற்சியில் ஈடுபடும்போது சரத்குமார் நான்கைந்து செண்டிமீட்டர் முந்துகிறார். சுமனுடனான மோதலிலும் அனல் பறக்கிறது.

கனிகா எவ்வளவு அழகாக நிஜமான ராணியைப் போலவே இருக்கிறார். பச்சைத் தமிழச்சியான இவரை ஏன் தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பாடலுக்கான லீடிங் காட்சியில் குளத்தில் குளித்துவிட்டு முண்டோடு படிக்கட்டில் ஓடி வருகிறார். டாப் ஆங்கிள் கோணத்தில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சி. விரிந்த திரையில் கண்கள் நிறைகிறது. இதற்கு இணையான ஒரு காட்சியை சொல்ல வேண்டுமானால், பம்பாய் படத்தின் உயிரே பாடலில் மனிஷா ஓடிவரும் காட்சியை சொல்லலாம். அழகான ராணியை ராஜா எப்போதும் அழவைத்துக்கொண்டே இருப்பது எரிச்சல்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ இளையராஜா. பழசிராஜாவுக்கான இசையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆஸ்கர் என்ன, நோபல் பரிசு கூட இளையராஜாவின் இசைக்கு தூசு. இளம் இசையமைப்பாளர்கள் பின்னணி இசை அமைக்க பழசிராஜாவை பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

உளியின் ஓசை தரத்தில் இருப்பதால் இப்படம் கலைஞருக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மருதநாயகம் ரேஞ்சுக்கு வரவேண்டிய பழசிராஜா, பட்ஜெட் குறைவால் கொஞ்சம் சூம்பிப்போயிருக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் என்னவாக இருக்குமென்பது படம் ஆரம்பித்த நான்காவது ரீலிலேயே யூகித்துவிட முடிகிறது. ஆகையால் இரண்டாம் பாதி இழுவையை சகித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டேமுக்கால் மணிநேரம் ஒரு சரித்திரப் படத்தை பார்த்துக்கொண்டு தமிழனால் பொறுமையாக ஒரு இடத்தில் இன்று அமரமுடியுமா என்பது சந்தேகமே.

13 கருத்துகள்:

  1. ஒரு பாடலுக்கான லீடிங் காட்சியில் குளத்தில் குளித்துவிட்டு முண்டோடு படிக்கட்டில் ஓடி வருகிறார். டாப் ஆங்கிள் கோணத்தில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சி. விரிந்த திரையில் கண்கள் நிறைகிறது//

    தகவலுக்கு நன்றி லக்கி

    பதிலளிநீக்கு
  2. பழசிராஜாவின் நான் படித்த முதல் விமர்சனம் உங்களிடமிருந்து. :)

    பதிலளிநீக்கு
  3. //.............//

    சீச்சி... இந்த பழம் புளிக்கும்

    இது எந்த வரிக்கான மறுமொழி என்று உங்களுக்கே தெரியும் :) :)

    பதிலளிநீக்கு
  4. புளிச்சிப்போன பழத்தை யாரும் சீண்டுவதில்லை - இது எந்த பின்னூட்டத்துக்கான மறுமொழி என்று எல்லாருக்குமே தெரியும் :-)

    பதிலளிநீக்கு
  5. //பச்சைத் தமிழச்சியான இவரை ஏன் தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. //

    பச்சைத் தமிழச்சியாக இருப்பதால் தான்.

    பதிலளிநீக்கு
  6. "படத்தின் கதை இவ்வாறு இருக்க, பழசிராஜாவின் ஒரிஜினல் கதை சற்று வேறாக இருக்கிறது. இறுதியில் பழசிராஜா தற்கொலை செய்துகொண்டதாக கதையில் இருக்கிறது. படத்திலோ வீரமரணம்"

    எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே

    பதிலளிநீக்கு
  7. பார்க்கனும்னு நினச்ச படத்த பாக்காதேன்னு சொல்லிட்டிங்க...

    நன்றி..

    இருந்தாலும் கனிகா வரும் காட்சியை நீங்கள் வர்னித்த விதம் படம் பார்கனும்னு தூன்டுது....

    எப்டியும் மலயாளி இன்னும் கொஞ்ச நாள்ள குருந்தட்டோட வீட்டுக்கு வருவான்.... அப்போ பார்த்துக்குறேன்......

    பதிலளிநீக்கு
  8. //புளிச்சிப்போன பழத்தை யாரும் சீண்டுவதில்லை //

    ஹாலிவுட் இயக்குனர்களின் கொள்கையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் !! நன்றி :) :)

    பதிலளிநீக்கு
  9. நல்ல விமர்சனம் லக்கி

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா3:12 PM, நவம்பர் 23, 2009

    //ராணியைப் பார்க்கப் போகும்போது கூட முன்னால் நீட்டிய வாளோடே போகிறார்./// :-))

    பதிலளிநீக்கு
  11. மோகனரூபன்5:26 PM, நவம்பர் 23, 2009

    கெரில்லா போருக்கு தமிழில் கரந்தடி போர் என்ற அழகான பெயர் ஏற்கெனவே இருக்கிறது. கரந்து என்றால் மறைந்து..
    மோகனரூபன்

    பதிலளிநீக்கு