25 நவம்பர், 2009

நீங்க நல்லவரா? கெட்டவரா?

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் ‘தெரியலியேப்பா!’ என்று நாயகன் கமல் மாதிரி பதில் சொல்லக்கூடும். சென்னை கோடம்பாக்கத்துக்குப் போய் தெருமுக்கில் நின்றுகொண்டு, இதே கேள்வியைக் கேட்டால் ‘நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!’ என்று நெஞ்சை நிமிர்த்தி, பெருமிதமாய் பதில் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘நல்லோர் வட்டத்தை’ சேர்ந்தவர்கள்.

தெற்கு சிவன் கோயில் பகுதிக்கு சென்றபோது நமக்கே ஆச்சரியம். சென்னையிலா இருக்கிறோம்? ஒவ்வொரு வீட்டு வாசலும் சுத்தமாக, கோலம் போடப்பட்டு, ‘பளிச்’சென்று இருக்கிறது. சுவர்களில் சுவரொட்டிகளும், ‘கோடம்பாக்கத்தார் அழைக்கிறார்’ பாணி அரசியல் சுவர் விளம்பரங்களும் அறவே இல்லை. பொன்மொழிகளும், தத்துவங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சாலையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு கண்களுக்கு பசுமையையும், உடலுக்கு சில்லிப்பையும் ஏற்படுத்துகின்றன. கீழ்நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்டால் ‘நல்லோர் வட்டத்தை’ கைகாட்டுகிறார்கள்.

அதென்ன நல்லோர் வட்டம்?

கோடம்பாக்கம் சிவன் கோயில் அருகே டீக்கடை நடத்திவரும் பாலசுப்பிரமணியன் சொல்கிறார். “இந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். என் கடையில் பாரதியார், மகாத்மா என்று தேசத்தலைவர்களின் படங்களை வைத்திருப்பேன். பொன்மொழிகளை எழுதி வைத்திருப்பேன். கடைக்கு வரும் இளைஞர்கள் பலரும் அரசியல், உலக நடப்பு என்று பேசுவார்கள். ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அக்கறை அவர்களின் பேச்சில் தொக்கி நிற்கும். ஆனால் வெறுமனே தங்களது ஆதங்கங்களை கொட்டிவிட்டு செல்வதில் என்ன பலன் இருக்க முடியும்?

அந்த இளைஞர்களோடு பேசி, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு அமைப்பை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கினோம். அதற்கு நல்லோர் வட்டம் என்று பெயரும் இட்டோம். ‘நல்லது நடக்க வேண்டும்’ என்று விரும்புகிறவர்கள் அனைவருமே இந்த அமைப்பின் உறுப்பினர்கள். இந்த அமைப்புக்கு சந்தா கிடையாது. காசு என்று வந்தாலே அதை நிர்வகிக்க ஏராளமான மனித உழைப்பும், நேரமும் தேவைப்படுகிறது. அந்த உழைப்பையும், நேரத்தையும் உபயோகமாக பயன்படுத்த சந்தா என்ற ஒரு விஷயத்தையே நீக்கிவிட்டோம். நிர்வாகச் செலவுகளை இந்தப் பகுதியில் இருப்பவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். நல்லது நடக்குதுன்னா எல்லோருக்குமே பிடிக்குது. அதனால கேட்காமலே செலவு பண்ணுறாங்க.

ஆரம்பத்தில் ஏழெட்டு பேர்களாக இருந்த நாங்கள் எங்களது செயல்பாடுகள் மூலமாக நிறைய பேரை கவர்ந்தோம். இன்று பார்த்தீர்களென்றால் கிட்டத்தட்ட நூறு பேர் தீவிரமாக செயல்படுகிறோம். ஆயிரம் பேர் எங்கள் நல்லோர் வட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு உறுப்பினராக விதிமுறைகள் எதுவும் கிடையாது. அமைப்பை பதிவும் செய்யவில்லை. ஒரு மாதிரியான அன்கான்ஃபரன்ஸ் வடிவில் இருப்பதாலேயே மக்கள் பலரும் அச்சம் ஏதுமின்றி எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகி வருகிறார்கள்”

அப்படி என்னதான் செய்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்?

அப்துல் கலாமிற்கு ‘இந்தியா 2020’ என்று கனவு இருப்பதைப் போல, இவர்களுக்கு ‘கோடம்பாக்கம் 2020’ என்றொரு கனவு உண்டு. தாங்கள் வசிக்கும் பகுதி, நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு ‘மாதிரிப் பகுதி’ ஆக இருக்க வேண்டும் என்பது இவர்களது கனவு. உதாரணத்துக்கு திருவள்ளூர் மாவட்ட குத்தம்பாக்கத்தை காட்டுகிறார்கள். தங்கள் கனவு மெய்ப்பட சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரத்ததானம், உடல்தானம், கண்தானம், அன்னதானம், மரம் வளர்த்தல் போன்ற வழக்கமான செயல்பாடுகளோடு சில குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் மூலமாக இவர்கள் மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

‘அதிரடிச்சேவை’ என்ற பெயரில் நடைபெறும் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. அமைப்பினர் நூறு பேர் இச்சேவைக்கு தயாராகிறார்கள். ஒரு பகுதியில் இருக்கும் குப்பைகள் மொத்தத்தையும் அகற்றி தூய்மைப் படுத்த வேண்டுமா? மூன்றே மணி நேரத்தில் அதிரடி வேகத்தில் அகற்றி விடுகிறார்கள். ‘ஒரு பகுதியை சீர்ப்படுத்த மூன்று மணி நேரத்துலே முடியலேன்னா, நிச்சயமா முன்னூறு மணி நேரம் ஆனாலும் முடியாது! அதனாலே தான் இந்த மூன்று மணி நேரத்தை எங்களுக்கு அடையாளமா எடுத்துக்கிட்டிருக்கோம்!’ என்கிறார் பொறுப்பாளர்களில் ஒருவரான வெங்கடேசன். இந்த அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளே இல்லை. பணிகளின் தன்மைக்கேற்ப பொறுப்பாளர்கள் மட்டும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகை செயல்பாடுகளை இவ்வமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

‘ஒரு ரூபாய் திட்டம்’ மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம். இப்பகுதியில் இருப்பவர்களிடம் மாதம் ஒரு முறை ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வசூலிக்கும் பணத்தை பகுதியில் இருக்கும் அன்பு இல்லம் எதற்காவது (அனாதை இல்லம் என்ற சொல்லை நல்லோர் வட்டத்தினர் உபயோகிப்பதில்லை) தருகிறார்கள். ஒரு ரூபாய் என்பது மிகக்குறைந்த தொகை என்பதால் ஏராளமானோர் இத்திட்டத்துக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் பலமான வரவேற்பு இருக்கிறது.

மாநகராட்சி, காவல்துறை என்று அதிகார அமைப்புகளோடு நல்லோர் வட்டத்தினருக்கு நல்ல தொடர்பு இருப்பதால், இவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் எந்த சிக்கலுமின்றி நிறைவேறி விடுகிறது. “எங்களுக்கு இதுவரை எதிர்மறையான அனுபவம் எதுவுமே இல்லை!” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகளை கேட்டறிந்த டாக்டர் கலாம், இவ்வமைப்பினரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார். நல்லோர் வட்டத்தினரின் செயல்பாடுகள் சிலவற்றைக் கேட்கிறபோது விக்கிரமன் படக்காட்சிகளைப் போல எல்லாமே பாசிட்டிவ்வாக இருக்கிறது. “2020ல் நிச்சயமா கோடம்பாக்கம் வளர்ச்சி அடைந்தப் பகுதியா இருக்கும். இங்கே வசிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், நல்ல சிந்தனைகளோடும் வாழ்வாங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்.

மாற்றம், மாற்றம் என்று வறட்டுத்தவளையாக கத்திக் கொண்டிருப்பதை விட, நல்லோர் வட்டத்தினரைப் போல செயல்படுவதின் மூலமாக நாம் நினைக்கும் மாற்றங்களை நிறைவேற்றிவிட முடியும். ஊருக்கு ஒரு நல்லோர் வட்டம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு ஊரும் 2020-ஐ இலக்காக கொண்டு செயல்படுமேயானால் ‘இந்தியா 2020 கனவு', 2020க்கு முன்பே நிறைவேறிவிடும் என்பது உறுதி.

18 கருத்துகள்:

  1. தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

    பதிலளிநீக்கு
  2. இவர்களை பின்பற்றி நாமும் நம் பகுதி வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
    நல்ல பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்லோர் வட்டம் வாழ்க

    மிக நல்லதொரு பகிர்வு

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவுகள் எல்லாம் வேறு பாதை நோக்கி போராப்ல இருக்குங்களே. ரெண்டுமே நல்லா இருந்தாலும், இது வேற பாதை.. :)

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு அறிமுகம். தொடர்ந்து செய்யுங்கள்!

    பதிலளிநீக்கு
  6. நல்ல ஒரு பதிவு லக்கி..

    பதிலளிநீக்கு
  7. லக்கிண்ணா, மடிப்பாக்கத்திற்கும் இப்படி ஒரு குழு அமைந்தால் நல்லா தான் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  8. இந்த மாதிரி ஆட்களை ஊடகங்களில் சொல்லி வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
    முயற்சி செய்வோம். அப்போவாவது நம்ம திருந்துவோமா?

    பதிலளிநீக்கு
  9. அடுத்த பதிவு ஏற்றும் வரைக்கும் நீங்கள் இதன் பின் ஊட்டத்திற்கு எந்த பதில் அளிக்காமல் (?) ஒரே ஜம்பி விடுங்கள். அப்போது தான் இதன் மொத்த தாக்கமும் ஒரு ரெண்டு பேருக்காவது போய் சேரும்.

    பதிலளிநீக்கு
  10. பகிர்விற்கு நன்றி யுவா.

    நல்லோர் வட்டம் வாழ்க

    பதிலளிநீக்கு
  11. இத்தகவலைப்பற்றி எங்கேயோ ஒரு வார இதழில் படித்த ஞாபகம். ஆன போதும் நல்ல விசயத்திற்காக வாழ்த்துக்கள்.

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  12. நல்லோர் வட்டம் வாழ்க

    மிக நல்லதொரு பகிர்வு

    நன்றி

    பதிலளிநீக்கு
  13. இதைச் செய்யறாங்களே பாஸ்! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் ஊடகத் துறைக்குச் சென்ற பிறகு உங்கள் பதிவின் மூலம் பல நல்ல நேர்மறையான செய்திகளை அறிய முடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு