12 நவம்பர், 2009

நக்சல் தரப்பு நியாயங்கள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!


ஒரு இயக்கம் திடீரென்று ஒரே நாளில் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளானைப் போல தோன்றிவிடுவதில்லை. நக்சல்பாரிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் 1960 காலக்கட்ட நாட்டு நடப்போடு பொருத்திப் பார்த்தோமானால் அந்த இயக்கம் தோன்றியிருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடியும்.

எந்த ஒரு நாட்டிலுமே அரசினை எதிர்க்கக் கூடிய மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அம்மக்களது அன்றாடத் தேவைகள் கூட அவர்களை ஆளும் அரசாங்கங்களால் நிறைவேற்றி வைக்கப்படாத நேரங்களில் அரசினை எதிர்த்து கலகக்குரல் எழுப்புகிறார்கள். முன்னேறிய பல நாடுகளில் கூட இதுபோன்ற புரட்சியாளர்களை காணமுடியும். எல்லாத் தரப்பு மக்களையுமே அரசாங்கங்களால் திருப்திபடுத்திவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது ஆராயக்கூடிய கேள்வி. வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் சில தரப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு கண்கூடாகவே தெரிகிறது. எனவே இங்கே புரட்சிக்குரல் எழுந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் புரட்சிகர சிந்தனைகளை வழிதொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சிந்தனைகளை தேடி, தேடி வாசிக்கிறார்கள். சமுதாய நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மனதளவில் தயாராகிறார்கள். கம்யூனிஸம் மக்கள் மனங்களில் ஒரு மதமாகிறது. இந்த மனப்பான்மை வியட்நாமில் எதிரொலித்து புரட்சி மலர்கிறது, அமெரிக்காவை வியட்நாமிய கொரில்லாக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

ஐரோப்பாவில் மாணவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர்போராட்டங்கள், பொலிவியக் காடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் தொடுத்து உயிரிழந்த சேகுவேரா, சீனாவில் மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று உலகளாவிய செய்திகளாலும், 1940களின் இறுதியில் ஆந்திராவில் நடந்த தெலுங்கானா போராட்டங்களாலும் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனதில் ‘புரட்சி' நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்தது. இவையெல்லாம் மனரீதியாக இந்திய விவசாயிகளையும், பாட்டாளிகளையும் புரட்சிக்கு தயார் செய்துவந்தன.

இமயம் முதல் குமரி வரை இந்தியாவில் சுரண்டப்பட்ட விவசாயிகளும், பாட்டாளிகளும் தங்களை காக்க ஒரு தேவமைந்தன் வரமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்களில் கதாநாயகன் விவசாயியாக, தொழிலாளியாக நடித்து வில்லன்களான பண்ணையார்களையும், தொழில் அதிபர்களையும் தட்டிக்கேட்டு, அடித்து உதைத்தபோது சந்தோஷமாக கைத்தட்டி ரசித்தார்கள். அதே வேலையை ஒரு அமைப்பு செய்கிறது என்றபோது ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி அந்த அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தனிமனிதனாக அதிகார வர்க்கத்தை யாரும் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நக்சல்பாரியாக மாறி அமைப்புரீதியாக இயங்கத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸம் - லெனினிஸம் - மாவோயிஸம், இந்த மூன்று முப்பெரும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நக்சல்பாரிகளின் கொள்கைகள் கட்டமைக்கப்படுகிறது. காரல்மார்க்ஸின் சிகப்புச் சிந்தனைகளை செயலாக்கிக் காட்டியவர் ரஷ்யாவின் லெனின். லெனினுக்கு பின்பாக இச்சிந்தனைகளை ஆயுதவழியிலும், ஏனைய வழிகளிலும் சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் மாவோ என்று கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்படுகிற மாசேதுங்க்.

மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் நக்சல்பாரிகள் பின்பற்ற விரும்புவது மாசேதுங்கையே. மாசேதுங் சீனாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய ‘மக்கள் போர்' தான் மாவோயிஸ்டுகளின் குறிக்கோள். மக்களுக்கான உரிமைகளை மக்களே ஆயுதம் தாங்கி, கொரில்லா போர் முறையில் வென்றெடுப்பது தான் மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் புரட்சி. இந்திய நக்சல்பாரிகளின் நதிமூலமாக போற்றப்படும் சாருமஜூம்தாரின் மொழியில் சொன்னால், “துப்பாக்கி முனையில் மக்களுக்கான அதிகாரம்!”

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!” என்பது நக்சல்பாரிகளின் இன்னொரு கோஷம். இது ஜனநாயகமுறையில் தேர்தல் நடக்கும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் கோஷம். தேர்தல் புறக்கணிப்பை நீண்டகாலமாக நக்சல்பாரிகள் பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தேர்தல் முறையால் நாட்டில் புரட்சி ஏற்படுவது தாமதமாகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஏழ்மை தான் ஒருவனை நக்சல்பாரியாக, புரட்சியாளனாக மாற்றியது, மாற்றுகிறது. இந்தியாவில் இன்றும் செல்வாக்கோடு நக்சல்பாரிகள் இருக்கும் மாவட்டங்களை சற்று கவனத்தோடு நோக்கினோமானால் ஒரு விஷயம் புரியும். எங்கெல்லாம் ஏழ்மை தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நக்சல்பாரிகள் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாபம் ஏழ்மை. இந்தியர்களின் ஏழ்மைக்கு ஆட்சியாளர்கள் காரணமா, அரசு அதிகாரிகள் காரணமா, நிலப்பிரபுக்கள் காரணமா, முதலாளிகள் காரணமா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய, விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் ஏழ்மை ஆயுதம் தூக்கவும் செய்யும் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நிலையைப் பாருங்கள். பழங்குடி கிராமத்தவர் அதிகம் வசிக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செல்வாக்காக இருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடல்ரீதியாக அதிகம் சுரண்டப்படும் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக மட்டுமே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரிஸ்ஸாவில் அசுரத்தனமாக காலூன்றி வருகிறார்கள்.

அடுத்ததாக கலாச்சாரத் திணிப்பும் கூட ஆயுதமேந்த செய்கிறது என்று சொல்லலாம். இந்தியா யாருக்கு சொந்தமோ இல்லையோ, இந்தியாவின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு சொந்தம் என்பதை நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டாக வேண்டும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீன பொருளாதாரத் திட்டங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், அவர்களது சொந்த நிலமான கிராமங்களையும், காடுகளையும் விட்டு துரத்தப்படுகிறார்கள். காடுகளை நகரமயமாக்கல் விழுங்குகிறது. கிராமங்களை தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்துவந்த பரம்பரைத் தொழில்கள் அந்நிய சந்தையாளர்களால் அழிக்கப்படுகிறது. “நீ வாழவேண்டுமா? நகரவாசியாக மாறு. உன் கலாச்சாரத்தை, தொழிலை மாற்றிக்கொள்” என்று மறைமுகமான அச்சுறுத்தல் அவர்களுக்கு விடப்படுகிறது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நகரவாசிகளால் நாட்டிலிருந்து காட்டுக்கு துரத்தப்பட்டவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வேரையும் விட்டுத்தர இயலாமல் நக்சல்பாரிகளாக மாறினார்கள். பழங்குடியின மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கங்கள் செல்வாக்காக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நக்சல்பாரி இயக்கங்களில் பணியாற்ற ஆதிவாசிகளும், தலித்துகளுமே அதிகமாக குறிவைக்கப் படுகிறார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கவும்.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஏழ்மை, வர்க்க வேறுபாடு, நிலப்பங்கீடு குறித்த அரசுகளின் முரட்டுத்தனமான அணுகுமுறை, சாதிய அடக்குமுறை, நீதிமறுப்பு என்று பல காரணிகள் நக்சல் இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பரவலாக கடைக்கோடி இந்தியனுக்கும் சரியாக கிடைத்திருந்தால், இன்று ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகளால் சரியான கட்டமைப்பும் - வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தால், நீதி அனைவருக்கும் சமமாக காவல்துறையாலும் - நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டிருந்தால், முதலாளிகள் - நிலப்பிரபுக்கள் மீது அரசுகள் காட்டும் முரட்டுத்தனமான பரிவை விவசாயிகள் - பாட்டாளிகள் மீது காட்டியிருந்தால்.. ஒருவேளை நக்சல்கள் உருவாகாமலேயே இருந்திருப்பார்கள்.

(அரசுத் தரப்பு நியாயங்கள் அடுத்த பாகத்தில்)

2 கருத்துகள்:

  1. பெயரில்லா11:20 AM, நவம்பர் 13, 2009

    ஏன் யாரோ தூர தேசத்து மாவோ சொன்ன துப்பாக்கிப் போராட்டம், நம் நாட்டு காந்தி சொன்ன அஹிம்சை வழியில் போராடலாமே

    பதிலளிநீக்கு
  2. //ஏன் யாரோ தூர தேசத்து மாவோ சொன்ன துப்பாக்கிப் போராட்டம், நம் நாட்டு காந்தி சொன்ன அஹிம்சை வழியில் போராடலாமே//

    காந்தி எல்லாம் எப்போவது தான் தோன்றுவார்கள்.. எங்கெல்லாம் அடக்கு முறை மேலோங்குகிறதோ.. அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும்.. அந்த போராட்டத்திற்கு மகாத்மாவாக இருக்க வேண்டியதில்லை மனிதனாக இருந்தாலே போதுமானது.. வாழ்கையை தேடும் இவர்களை காந்தியையும் தேடசொல்கிறிர்களா..

    பதிலளிநீக்கு