18 நவம்பர், 2009

சூரிய(க்) கதிர்!

சில காலமாக தமிழில் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படுகிறது. அல்லது விற்கப்படுவது மாதிரியான ஒரு மாயையாவது இருக்கிறது. ஆனந்த விகடன் புதிய அளவுக்கு மாறியதற்குப் பிறகாக புதிய பத்திரிகைகளின் படையெடுப்பு அதிகமாகியிருப்பதை உணரமுடிகிறது. பழைய வாசகர்களை விகடன் இழந்துவிட்டது, அவர்களை கைப்பற்றிவிடலாம் என்றொரு நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்.

எனக்கென்னவோ, புதிய வாசகர்கள் சொல்லிக்கொள்ளும்படி பெருகாவிட்டாலும், விகடன் தன் பழைய வாசகர்களை இழந்ததாக தெரியவில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் புத்தகத்தின் விலையேற்றம் காரணமாக வாங்குவதை நிறுத்திவிட்டு ஓசியில் படித்துக் கொண்டிருக்கலாம். வடக்கு வாசல் என்றொரு பத்திரிகையை பார்த்தேன். தொண்ணூறுகளில் வந்த விகடன், குமுதம் கலவை. பத்து ரூபாய் விலையென்று நினைக்கிறேன். வாசிக்க நன்றாகவே இருக்கிறது. காலச்சுவடு, உயிர்மை போன்றவை இடைநிலை அந்தஸ்தை எட்டிவிட அகநாழிகை மாதிரி சிற்றிதழ்களும் கூட கொஞ்சம் தெம்பாக களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஐந்து ரூபாய்க்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் புதிய தலைமுறையும் ஆரம்பத்திலேயே ஒரு லட்சத்தை தாண்டிய பிரதிகளை விற்றுக் கொண்டிருக்கிறது. விலை, விளம்பர வெளிச்சத்தின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, தமிழகத்தில் சன் குழுமத்தைத் தவிர வேறெவரும் எட்டமுடியாத சாதனையை புதிய தலைமுறை எட்டியிருக்கிறது. “சினிமா இல்லை. நடப்புச் செய்திகள் இல்லை, தகவல் களஞ்சியமாக இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது விமர்சனம் அல்ல பாராட்டு. ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியான ஜாம்பவான்கள் மற்றுமே பெற்ற பாராட்டு இது. “இளைஞர் மலர் மாதிரியிருக்கிறது” என்பது இன்னொரு விமர்சனம். ‘இளைஞர் இதழ்’ என்று விளம்பரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இதழ் இளைஞர் மலர் மாதிரி தானிருக்கும். எப்படியிருப்பினும், பத்திரிகையுலகத்தின் இவ்வருட வரவுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக ‘புதிய தலைமுறை’ மலர்ந்திருக்கிறது.

குழந்தைகள் தினமன்று ஒரு குஜாலான புதியப் பத்திரிகையை வாங்க முடிந்தது. ‘சூரிய கதிர்’ (க்-கன்னா மிஸ்ஸிங்) என்று பெயருக்காகவே, பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இன்று பல பத்திரிகைகளில் பணிபுரியும் பல்வேறு பத்திரிகையாளர்களும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் மூத்த பத்திரிகையாளர் ராவ் அவர்களால் பட்டை தீட்டப்பட்டவர்களே. ஒரு பத்திரிகையாளத் தலைமுறையை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். ‘ஆசிரியர் : ராவ்’ என்பதே சூரிய கதிரின் மிகப்பெரிய பலம்.

ஆசிரியர் குழுவில் வாசுதேவின் பெயரை பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. குமுதத்தில் அவர் கலாட்டா அடித்த பக்கங்கள் என்னுடைய பள்ளிநாட்களை சுவாரஸ்யமாக்கிய விஷயங்கள். குறும்புக்காக பெண் வேடத்தில் ஆண்களை அணுகி, அவரது கற்பு ஜஸ்ட்டில் தப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பத்திரிகையின் இம்ப்ரிண்டில் எனக்குப் பிடித்த வாசுதேவ். நமீதா, இலீயானா என்று ஜொள்ளு எழுத்துகளால் விகடன் பக்கங்களை ஈரமாக்கிய தோழர் மை.பாரதிராஜா, கோவக்காரப் பொண்ணு மு.வி.நந்தினி, சென்னைத் தமிழில் கொஞ்சும் பாண்டிச்சேரி நண்பர் மரக்காணம் பாலா என்று என்னுடைய நண்பர்களும் ஆசிரியர் குழுவில் இருப்பது பத்திரிகையை கொஞ்சம் மனசுக்கு நெருக்கமாக்கியது.

2004 தீபாவளிக்குப் பிறகு முதன்முறையாக ஜெயேந்திரரின் பிரத்யேகப் பேட்டி, எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், அரசியல் குறைவான வைகோவின் அதிரடி, சின்னக்குத்தூசியின் கட்டுரை, இச்சுக்கு இலியானா, லொள்ளுக்கு விவேக் என்று உள்ளடக்க அளவில் முதல் இதழிலேயே சிகரம் தொட்டிருக்கிறது சூரிய கதிர். பாலகுமாரனின் தொடர் ஒன்று கூடுதல் அட்ராக்‌ஷன். எல்லா அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை கூட இல்லை என்பது சற்றே நெருடல். பார்த்திபனும் கடைசிப் பக்கத்தில் ஒருபக்கத் தொடர் ஒன்றை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல என்ன எழுதியிருக்கிறார் என்பது நான்குமுறை வாசித்தும் புரியவில்லை. கடைசிப் பக்கம் கச்சிதமாக இருக்க வேண்டியது தற்கால பத்திரிகைச் சூழலில் அவசியம்.

வெகுஜன இதழாக மலர்ந்துவிட்டப் பிறகு விகடன், குமுதம், குங்குமம் மட்டுமன்றி வாரமலர், ராணி ஆகியவற்றிலும் இருந்தும் கூட மாறுபட்டு தெரியவேண்டிய சவால் சூரிய கதிருக்கு இருக்கிறது. முதல் இதழ் தீபாவளி சிறப்பிதழ் போல ஜூகல்பந்தியாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்த இதழ்கள் முதல் இதழைவிட சிறப்பாக அமையவேண்டியது கட்டாயம். அரசியல் – சினிமா – சமூகம் – கலை என்று சூரிய கதிருக்கான வெளி பரந்ததாக இருப்பதால், சிறந்தவர்களை கொண்ட ஆசிரியர் குழு சிறப்பாகவே இயங்கும் என்று நம்புகிறேன்.

லே-அவுட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது பெரியக்குறை. ராவ் சார் ஜூ.வி. ஆரம்பித்தபோது ஏதாவது க்ரிட்டிகலான டாபிக்கல் மேட்டர்களுக்கு கம்பிவேலி கட்டி லே-அவுட் போட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் லே-அவுட் செய்யும் இந்தக் காலத்திலும் அந்த கம்பிகளையே பிடித்து வாசகன் தொங்கிக் கொண்டிருக்க முடியாது இல்லையா? அட்டைப்படமும் ரொம்ப சுமார், இலியானா அழகாகவே இல்லை. ஆர்ட் பேப்பரில் இல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்டில் 80 பக்கங்கள். பதினைந்து ரூபாய் என்பது கொஞ்சம் அதிகம் என்று வாசகர்கள் அணுக அஞ்சுவார்கள். எனினும் மாதமிருமுறை இதழ் என்பதால் விலை ரெகுலர் வாசகர்களுக்கு பெரிய பொருட்டாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பத்திரிகை தொடக்கத்துக்கான விளம்பரங்கள் போதுமானவையாக இல்லை என்பது என் அவதானிப்பு. சென்னை நகரில் சொற்ப இடங்களிலேயே சூரிய கதிர் சுவரொட்டிகளை கண்டேன். டிவி விளம்பரங்களும் போதுமானவையாக இல்லை. சன் நியூஸ், கலைஞர் நியூஸ் போன்ற உப்புமா சேனல்களில் விளம்பரம் செய்தால் மட்டும் பத்தவே பத்தாது. அதுபோலவே வினியோகமும் சரியாக இருப்பதாக தெரியவில்லை. லயன் காமிக்ஸ் கூட கிடைக்கும் தி.நகர் ஏரியாவிலேயே கூட சூரிய கதிர் சரிவர கிடைக்கவில்லை.

சூரிய கதிர் – எனக்குப் பிடித்திருக்கிறது, வாசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே பிடிக்கும் என்று நம்புகிறேன்.

18 கருத்துகள்:

  1. நீங்கள் சூரிய கதிரில் வேலை பார்க்கறீர்களா?

    உங்கள் இடுகையை பார்த்தால் நீங்கள் அதன் கொ.ப.செ வாக இருப்பீர்களோ என்ற சந்தேகம் வந்ததால் இந்த வினா ;-)

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  2. புதிய தலைமுறை புதுமையாகவும் தகவல்களோடும் நல்ல தரமாயும் இருப்பதாய் நண்பர் கதிர் சொன்னார், இடுகையிலும் குறிப்பிட்டிருக்கிறார். இணையத்தின் மூலமாகவும் உடனுக்குடன் படிக்க தேவையானதை செய்யலாமே குருஜி? ஆயுள் சந்தா 2000 என்பதுபோல் இங்கேயும் செய்தால் நாங்களெல்லாம் படிக்க எதுவாயிருக்குமே?

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  3. பிரபாகர்!

    உங்களுக்கு இல்லாமலயா? என்னிடம் இருக்கும் காப்பிகளை தருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை யுவகிருஷ்ணா. ஊருக்கு வந்தா சூரியக்கதிர் வாங்கி பார்க்கிறேன்.

    ****
    பத்து ரூபாய் விலையென்று நினைக்கிறேன்.
    ****

    இத்தனை நாளா நான் பத்து ரூபாயை பணம்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.

    விலை பத்து ரூபாயென்று நினைக்கிறேன் - இது தான் சரி. (ஏதாவது ஒரு நல்ல தமிழ் வாத்தியார் கிட்ட கேட்டு சொல்லுங்க. )

    படிக்கும்போது அந்த இடத்துல ஒரு தடங்கல் வந்தது. அதுனால தான் இந்த கமெண்ட் :)- கடுப்பு ஆவாதீங்க.

    பதிலளிநீக்கு
  5. அறிமுகத்துக்கு நன்றி யுவா! ‘புதிய தலைமுறை’ இதுவரை பார்த்தும் வாங்கவில்லை.
    இப்போது ஆவலாக உள்ளது. ‘வெளிச்சம்’ போடும் பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  6. சூரிய(க்)கதிர் எனக்கும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. புதிய தலைமுறை மலர்ந்ததெல்லாம் சரிதான். எல்லா புத்தகங்களை போல வியாபார உத்திக்காக 5 ரூபாய்க்கு விற்பதாகத் தெரிகிறது. விலையேற்றம் வரும் போது தான் உண்மை புரியும்..பார்க்கலாம்..சூரிய கதிர் இதுவரை படிக்கவில்லை. படித்து பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. நான் போஸ்டர்ல கூட இன்னும் 'சூரிய(க்) கதிர்' என்று எங்கும் பார்க்கல.

    பதிலளிநீக்கு
  9. சேம் ப்ளட் லக்கி.. சன் டிவி உபயத்தில் வெளி நாடுகளிலும் ஓரளவு பிரபலமாகிவிட்டது புதிய தலைமுறை. விரைவில் இணைய சந்தாவை அறிமுகப் படுத்தலாமே?

    பதிலளிநீக்கு
  10. லக்கி,

    சூரியகதிர் வாசித்தேன். விண் நாயகனுக்கு ஏற்பட்ட கதி வராமல் இருந்தால் தமிழ் வாசகர்களுக்கு விருந்துதான்.

    பதிலளிநீக்கு
  11. புதிய தலைமுறை நன்றாக இருக்கிறது. ஆனால் சூரியக்கதிர் பற்றி எனக்கு தெரியவில்லை.வாசித்துவிட்டு சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. இந்த இடுகை புதிய தலைமுறைக்கா, சூரிய கதிருக்கா?

    தி.நகரிலேயே கிடைக்காத சூரிய கதிர், மதுரைல கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா5:40 PM, நவம்பர் 22, 2009

    சன் அளவுக்கு புதியதலைமுறை பாப்புலர் ஆகியிருக்கா?? அட... சன் தான் இதுக்கு நிதியுதவி செய்திருக்குமோ என்று மக்களுக்கு அய்யமில்லாமல் இல்லை லக்கி?? மாலன் ட்ராக் ரெக்கார்ட் அப்புடியா? ... சன் பிக்சர்ஸ் படத்துக்கு 10 நிமிசத்துக்கு ஒரு தடவ செவுள் பிய்யற மாதிரி தன்னோட சானல்களில் விளம்பரம் செய்வதுபோல் பு.த.க்கும் விளம்பரம் செய்ததை நாங்கள் கவனிக்காமல் இல்லை... காசு கொடுத்து இப்படி வெளம்பரம் செய்ய கட்டுப்படியாகுமா?? கூடிய விரைவில் சற்றொப்ப ஒரு வருடத்தில் இதை தினகரன் குழுமம் வாங்குவது போல் செய்தியை எதிர்நோக்கலாமா? தோற்றுவாய் எப்படியோ, அருமையான இதழ் ... வளரட்டும் நலமாய்

    பதிலளிநீக்கு
  14. நானும் படித்தேன் சூரிய கதிரை.
    தங்களுடன் உடன்படுகிறேன்.
    மிக அழகாக, விஷயத் தெளிவுடன் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.
    விகடனும் குமுதமும் கனவுலகுக்குச் சென்றுவிட்டன.
    கல்கி 75ஐத் தாண்டிய “சீனியர்”களுக்கு.
    குங்குமம் இங்கும் இல்லை; அங்கும் இல்லை. இரண்டும் கெட்டான்.
    புதிய தலைமுறை - இளைஞர்களுக்க்யு.
    இந்தச் சூழ்நிலையில் சூரிய கதிர் வெளிவந்திருக்கிறது.
    சுவை இருக்கிறது. தங்குதடையற்ற நதி ஓட்டத்தைப் போல நடை அமைந்திருக்கிறது. பல்சுவை இதழாகப் பரிணமிக்கலாம்.
    நீங்கள் சொல்லுவது போல “எனக்கும் பிடித்திருக்கிறது.” நான் விகடன், குமுதம் படிப்பதை நிறுத்திச் சில ஆண்டுகள் ஆகிவிட்டன.
    அன்புடன்
    கிருஷ்ணமூர்த்தி

    பதிலளிநீக்கு
  15. சமீப காலமாக தமிழ் இதழியல் வரலாற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 'சூர்ய கதிர்', திரிசக்தி குழுமத்தின் 'தமிழக அரசியல்', SRM கல்வி குழுமத்தின் 'புதிய தலைமுறை' என்று வார இதழ்களின் வரலாற்றில் பல பூக்கள் பூத்து வருகின்றது. உங்கள் விமர்சனம் சூர்ய கதிர் ஆசிரியர் குழுவிற்கு புத்துணர்ச்சியைத் தரும்.

    ஆனால், நாளிதழ்களைப் பொறுத்தவரை மும்பையோடு ஒப்பிடும் போது நாம் இன்னும் பின் தங்கிதான் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  16. லக்கி,
    சூரிய கதிர் இதழை வாசித்தேன். நீங்கள் கூறுவது போல நம்பிக்கையூட்டும் இதழாகவே தெரிகிறது. ஆனால் இதழ் வருவதே பலருக்கு தெரியவில்லை.
    000
    வடக்கு வாசல் பற்றிய உங்கள் கருத்து பொதுமையானது. ‘வடக்கு வாசல்‘ 90களில் வந்த சுபமங்களா, அமுதசுரபி பாணியிலானது.

    - பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  17. இவ்வளவு எழுதிப்புட்டு அந்த பத்திரிகையின் அலுவலக முகவரி, மின்னஞ்சல் முகவரி எழுதாம விட்டது நியாயமா?

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு