10 நவம்பர், 2009

தமிழ் நக்சலைட்டுகள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட இந்திய மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் இருந்த அளவுக்கு நக்சல்பாரிகளால் செல்வாக்கு பெற இயலவில்லை. இத்தனைக்கும் சாரு மஜூம்தார் கட்சி ஆரம்பித்தபோது தமிழ்நாட்டிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தலைவர்கள் இருந்தார்கள். 1970களின் இறுதியில் இங்கிருந்த நக்சல் இயக்கங்கள் தீவிரமாக இயங்கின. 70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் கடுமையான போலிசாரின் வேட்டைகள் காரணமாக நக்சல் இயக்கம் பெரிய அளவில் இன்றுவரை இங்கே வளர இயலவில்லை.

இருப்பினும் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லையோரமாக இருக்கும் வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நக்சல்பாரிகள் அவ்வப்போது ஊடுருவது உண்டு. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால் அங்கு நக்சல்பாரிகள் செல்வாக்கு பெறுவது சுலபம். தேனி, பெரியகுளம் பகுதிகளில் போர்ப்பயிற்சி வழங்கப்படுவதாகவும், போலிசார் தேடுதல் வேட்டையென்றும் அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற பெயரில் செயல்பட்ட குழு ஒன்று காவல்துறையால் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. அக்குழுவின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைபிடிக்கப்பட்டார்கள்.

70களின் இறுதியில் கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு காரணமான நிலமுதலாளி ஒருவரை நக்சல்பாரிகள் அழித்தொழிப்பு மூலமாக அப்புறப்படுத்தினார்கள். அழித்தொழிப்புப் பணிகளை மார்க்சிஸ்டு - லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஓரங்கட்ட நினைத்திருந்த நேரத்தில் நடந்த அழித்தொழிப்பு இது. அதிகாரப்பூர்வமாக நடந்த கடைசி அழித்தொழிப்பு என்றும் சொல்லலாம். கீழே சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘அழித்தொழிப்பு’க்கான சூழலே, நாடுமுழுவதும் அன்று இருந்தது. கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் தான் மாறியிருக்குமே தவிர, கொல்லப்பட்டதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் நிலமுதலாளிகள்!!

1968, டிசம்பர் 25. உலக மக்களின் பாவ பாரங்களை தன் முதுகில் சுமந்து பாவிகளை இரட்சிக்க தேவமைந்தன் அவதரிக்கப் போகும் கிறிஸ்துமஸ் தினம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுக்காவில் இருந்த அந்த குக்கிராமத்துக்கு மட்டும் இருள்நீங்கவேயில்லை. நீண்ட இருளுக்குப் பின்வந்த விடியல் தந்தது அதிர்ச்சி. ஒரே குடிசையில் போட்டு எரிக்கப்பட்டு, கருகிப்போன நாற்பத்தி நான்கு பிணங்களை தான் கிறிஸ்துமஸ் பரிசாக கீழ்வெண்மணி கிராமம் பெற்றது. பதினான்கு பேர் பெண்கள். இருபத்தி இரண்டு பேர் குழந்தைகள். மனித இனம் காட்டுமிராண்டி காலத்திலிருந்து முற்றிலுமாக நாகரிகமடைந்து விடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த ஒட்டுமொத்த படுகொலைகளால் நாடே அதிர்ந்தது. நாற்பத்தி நான்கு உயிர்களை பதற, பதற நெருப்பில் எரித்துக் கொன்றதற்கு என்ன காரணம்.. மதமா? சாதியா?

மதமும், சாதியும் கூட படுகொலைகளுக்கு சாக்குகளாக சொல்லப்படுபவை தான். உண்மையான காரணம் அவர்கள் உழைக்கும் வர்க்கம். தங்கள் உழைப்புக்கு தகுந்த கூலி கேட்கும் வர்க்கம். இந்த படுகொலைச் சம்பவத்தில் தன் உறவு, சுற்றத்தை இழந்தவர் ஒருவர் தெளிவாக சொன்னார், “இது ஜாதி, மதம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. வர்க்கப் பேதத்தால் நடந்த கொடிய சம்பவம்!”

தஞ்சை மண்ணில் அப்போது அதிகார வர்க்கம் ஆழமாய் வேரூன்றி இருந்த காலம். அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களுக்கு பெயர் பண்ணையார். கோயில்களுக்கும், மடங்களுக்கும் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கூட பண்ணையார்களின் மேற்பார்வையில், கட்டுப்பாட்டில் இயங்கின. பெருநிலம் கொண்ட இந்த நிலக்கிழார்களிடம் அநியாயமான கூலிக்கு தங்கள் வாழ்க்கையை விவசாயக் கூலிகள் அடகு வைத்திருந்தார்கள்.

சவுக்கால் அடித்தால் வலிக்கும் என்று நிலத்தில் உழும் மாடுகளுக்கு கூட பரிதாபம் பார்த்த பண்ணையார்கள் மனிதர்களுக்கு பார்க்கவில்லை. வேலையில் சுணங்கினால் சவுக்கடி, சாணிப்பால். உணவுக்காக உழைப்பை மூலதனமாக்கிய கூட்டம் பண்ணை அடிமைகளாய் தலைமுறை தலைமுறையாய் வாழ்க்கையை தொடர்ந்தது. எவ்வளவு நாட்களுக்கு தான் அரைவயிற்று கஞ்சியோடு காலம் தள்ள முடியும்?

உரிமைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு விவசாயக் கூலிகள் ஒரு அணியில் திரள தொடங்கினார்கள். செங்கொடி ஏந்தத் தொடங்கினார்கள். கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டு சங்கம் போராட்டக்களம் கண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. கூலிகளின் குடிசைகள் எரிக்கப்படுவதும் தொடர்கதையானது.

தங்கள் அதிகாரத்தை, ஆதிக்கத்தை நிலைநாட்ட பண்ணை உரிமையாளர்கள் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு எதிர்சங்கம் உருவாக்கினார்கள். செங்கொடிக்கு மாற்றாக இவர்கள் மஞ்சள் கொடியை உயர்த்திப் பிடித்தார்கள். இந்த சங்கத்தின் பெயரால் விவசாயக் கூலிகள் கிராமந்தோறும் மிரட்டப்பட்டார்கள், உயிரெடுக்கப்பட்டார்கள். அப்போதிருந்த ஒரு அதிமுக்கிய அரசியல் தலைவர் கூட “தஞ்சை மாவட்ட விவசாயிகளை பேய் பிடித்திருக்கிறது, கம்யூனிஸ்ட்டு என்ற பேய் பிடித்திருக்கிறது” என்று காட்டமாக சொன்னார். ஆளும் வர்க்கமென்றால் அரசும், அரசாள நினைக்கும் அரசியல்வாதிகளும் கூட உள்ளடக்கம் தானே?

ஆங்காங்கே விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும், நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் கூலி உயர்வு விவகாரத்தில் முட்டல் மோதல் நடந்து கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. கூலியை உயர்த்திக் கொடு, சேற்றில் கால் வைக்கிறோம் என்றார்கள் விவசாயக் கூலிகள்.

இந்நிலையில் தான் விடிந்தால் கிறிஸ்துமஸ் என்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கீழ்வெண்மணி கிராமத்துக்குள் கையில் நாட்டுத் துப்பாக்கி ஏந்திய அடியாள்கள் டிராக்டரில் நுழைந்தார்கள். கண்ணில் கண்டவர்களை குருவியை சுடுவது போல சுட்டார்கள். குண்டடி பட்டவர்கள் சுருண்டு விழ எஞ்சியவர்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். அங்கே இருந்ததிலேயே பெரிய வீடு ராமையா என்பவரின் குடிசை வீடு. குழந்தைகளும், பெண்களும், வயோதிகர்களும் அந்த குடிசையில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது ஜீப்பில் வந்த நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணநாயுடு “ஒருத்தனையும் விடாதீங்கடா. தீ வெச்சு எரிச்சுக் கொல்லுங்கடா!” என்று வெறியோடு கத்துகிறார். குடிசை அடியாட்களால் இழுத்து பூட்டப்படுகிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்படுகிறது. தீயின் நாக்குகள் மேனியை சுட ஒட்டுமொத்த பரிதாபக்குரல் அந்தப் பகுதியை அலற வைத்தது. தீவைத்த கொடியவர்களுக்கு நெஞ்சு இரும்பால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயில் இருந்து தப்பி வந்த நான்கு பேரை மீண்டும் தீக்குள்ளேயே தள்ளிவிட்டார்கள். தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்கட்டும் என்று தீயில் இருந்து தன் குழந்தையை ஒரு தாய் தூக்கி வெளியே எறிந்தாள். அந்த குழந்தையை கூட ஒரு கொடூரமனதுக்காரன் மீண்டும் தீக்குள் தூக்கியெறிந்தான்.

மக்களுக்கு ஏதாவது கொடுமை நடக்கிறதென்றால் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கடவுள் வந்து காப்பார். சினிமாக்களில் கதாநாயகர்கள் வந்து வில்லன்களை புரட்டியெடுப்பார். கீழ்வெண்மணி விவசாயக் கூலிகள் தீயில் கருகும் நிலையில் எந்த கடவுளோ, கதாநாயகனோ அவர்களை காக்க வரவில்லை. காவல்துறை வந்தது, தீயில் நாற்பத்தி நான்கு பேர் கருகி முடித்தப்பிறகு. இருபத்தி ஐந்து குடிசைகள் எரிக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையாவது வெள்ளையர் ஆட்சியில் நடந்தது. கீழ்வெண்மணி படுகொலைகள் சுதந்திரம் வாங்கி இருபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘தேசத்தின் அவமானம்’ என்று தலைப்பிட்டு இந்தியத் தலைநகரிலேயே பத்திரிகைகள் அரசை தாக்கின. அவசர அவசரமாக நூற்றி ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையோ இது மக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சம்பவம் என்றது. அந்தப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள் கோர்ட்டில் சாட்சியம் சொன்னார்கள். ஏழைச்சொல் எந்த காலத்தில் அம்பலம் ஏறியிருக்கிறது?

1973ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. “அதிக நிலத்தை சொத்தாக வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட சம்பவத்தை செய்திருக்க முடியாது. அவர்கள் குற்றவாளிகள் அல்ல” அதிகார வர்க்கத்திடமிருந்து அரசோ, சட்டமோ தங்களை காக்கும் என்ற நம்பிக்கையை அம்மக்கள் முற்றிலுமாக இழக்கும் வண்ணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியும் அவர்களில் தவிர்க்கவே முடியாத பத்து பேருக்கு மட்டும் பெயருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. கீழ்வெண்மணி சம்பவத்தின் வில்லனாகிய கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவர்களில் ஒருவர்.

சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோபாலகிருஷ்ண நாயுடு பழைய செல்வாக்கோடு கீழத்தஞ்சையில் வலம் வருகிறார். பழைய அதிகாரத்தை கையில் எடுக்கிறார். முன்பை விட முனைப்பாக உழைப்பாளிகளை ஒடுக்கிறார். நீதித்துறையும் கூட பணத்துக்கும், அதிகாரத்துக்கும் வாலாட்டும் நிலையில் தங்களை காக்க, அயோக்கியர்களை ஒழிக்க யாராவது வரமாட்டார்களா என்று ஏழைக்கூலிகள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அணக்குடி என்ற பகுதியில் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டி சாய்க்கப்படுகிறார். கீழ்வெண்மணி சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் முகமாக செய்யப்பட்ட இக்கொலையை செய்தவர்கள் நக்சல்பாரிகள். நந்தன் என்பவரது தலைமையில் ஒரு குழு செயல்பட்டு கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது.

(தொடர்ந்து வெடிக்கும்)

8 கருத்துகள்:

  1. இது தொடர்பாக ”செந்நெல்” என்ற நாவலும், பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய குறும்படம் ஒன்றும் வெளி வந்திருக்கின்றதை நினைவு படுத்த விரும்புகின்றேன் லக்கி.
    மிகச்சிறந்த ஆவணப்படம் அது.தொடர்புடைய முக்கியப்புள்ளிகளின் பேட்டியையும் உள்ளடக்கியது.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் தருமபுரி காட்டில் ஆயுத பயிற்சி எடுப்பதாக கேள்வி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7:27 PM, நவம்பர் 10, 2009

    வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தியவர் அப்பொது நெல் உற்பத்தியளர் சங்கத் தலைவராக இருந்த G.K. மூப்பனார் என கேள்விப் பட்டேன். உண்மையா ?

    PKS
    Saidapet

    பதிலளிநீக்கு
  4. சரியா தெரியலை பி.கே.எஸ். ஆனா வாய்ப்பு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. Are you justifying the murder of Gopal Krishna Naidu?

    Sathiyabal
    Bangalore

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:01 PM, ஏப்ரல் 06, 2012

    வணக்கம் யுவகிருஷ்ணா,
    கீழ்வெண்மணி கொலைக்கு பிறகு கோபாலகிருஷ்ண நாயுடுவை பத்து ஆண்டுகளுக்கு பிறகு நக்சல் பாரிகள் கொன்றார்கள் என்று எழுதியிருக்கீறீர்கள் .ஆனால் அது உண்மையில்லை . கோபாலகிருஷ்ண நாயுடுவை பத்து ஆண்டுகளுக்கு பிறகு கொன்றது திராவிடர் கழகத் தோழர்கள் தான் ( 11 பேர்) , அந்த கொலைக்கு தலைமை ஏற்றதும் அந்த ஊர் / பகுதி திராவிடர் கழக தலைவர்தான் (நந்தன்). கோபாலகிருஷ்ண நாயுடுவை கொன்ற 11 பேரில் ஒருவர் மட்டும் மார்க்சிஸ்ட் . மீதி 10 பேரும் திராவிடர் கழகத் தோழரே ஆனால் அதை அப்போது திராவிடர் கழகம் வெளிப்படையாக ஏற்க்கவில்லை குறிப்பாக கி.வீரமணி அந்த செயலுக்கு மிகவும் பயந்தார். ஆனால் அந்த 11 பேரையும் சிறையில் அவர்களுக்கான முழு உதவியையும் செய்து அவர்களின் வழக்கை நடத்தியவர் அன்றைய திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன்(இன்றைய பெரியார் தி க வின் பொதுசெயலாளர் ) ஆவர். இறுதியில் அவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி விடுதலையும் கு.ராமகிருஷ்ணன் வாங்கிக்கொடுத்தார். ஆனால் இதை எல்லாம் கி.வீரமணி அவர்களின் நெருக்கடி காரணமாக வெளியில் அவர்கள் சொல்லிக்கொள்ளவில்லை..இப்பொது கீழ்வெண்மணி பற்றி உணர்ச்சியாக பேசும் மார்ச்சிஸ்ட் கட்சி அப்போது கோபாலகிருஷ்ண நாயுடு கொலையில் கைதான 11 பேரில் ஒருவரான தனது கட்சிகாரரை சிறையில் அவர்கள் சார்பாக யாரும் வந்து பார்க்கவே இல்லை..அந்த தோழர்கள் விடுதலையிலும் மார்ச்சிஸ்ட் கட்சி எதுவும் செய்யவில்லை...( தகவல் தோழர் கொளத்தூர் மணி சென்னையில் நிகழ்த்திய உரையில் இருந்து)

    --தமிழ்ச்செல்வன்

    பதிலளிநீக்கு
  7. தகவலுக்கு நன்றி தமிழ். இது குறித்த மேலதிகமான தகவல்களை விசாரித்து வெளிப்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் தாமதமாக இந்த கட்டுரையை வாசித்து இருக்கிறேன் .1980 இல் கோபால கிருஷன நாயுடுவின் கொலை நடந்தது [எனக்கு தெரிந்த வரையில்].அந்த கொலையில் குற்றம் சாட்ட பட்ட வர்களில் ஒருவர் எனது சித்தப்பா .நக்சல் அமைப்பில் இருந்தவர் ,ஆனால் என்னுடைய தாத்தா வேண்ட பட்ட முக்கியஸ்தர்களை பிடித்து அவரை விடுதலை செய்து விட்டார் .அதில் கோபம் அடைந்த என் சித்தப்பா வீட்டை விட்டே போய் விட்டார் .என்னுடைய பாட்டியை[அவர்க்கு பெரியம்மா ]பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவார் .மாலையில் வந்து விடிவதற்கு முன் போய் விடுவார் .[போலிஸ் அவரை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததன் காரணமாக ],இடுப்பில் பெல்டில் துப்பாக்கியும் ,கத்தியும் வைத்திருப்பார் .நன்றாக படித்தவர் .எனக்கு மார்க்சையும் ,மாவோவையும் சொல்லி கொடுத்தவர் அவர்தான் .திருச்சிக்கு அருகில் நடந்த வங்கி கொள்ளையில் 5 நக்சல் அமைப்பினர் பொது மக்களால் அடித்து கொளப்பட்டவுடன் நக்சல் அமைப்பு தமிழ் நாட்டில் முழுவதும் கலைக்க பட்டது அதில் இருந்து வெளியேறிய என் சித்தப்பா அட்டவணை படுத்திய வகுப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுபெண்ணாடத்தில் வாழ்ந்து வந்தார் சமிபத்தில் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் .உயர் சாதி இந்து குடும்பத்தில் பிறந்தும் அடித்தள மக்களுக்கு பாடுபட்டவரின் அண்ணன் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன் பேரை வெளியிட விருப்பம் இல்லை மன்னிக்கவும் .

    பதிலளிநீக்கு