11 நவம்பர், 2009

வேளாண்மை கற்றால் வேலை நிச்சயம்!


திருச்சி மாநகரிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளடங்கி இருக்கிறது போதாவூர். மலைப்பாம்பின் உடல்போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை. வழியெல்லாம் கண்ணுக்கு தெரியும் எல்லை வரை அடர்பச்சையில் வாழைத்தோப்புகள். பிராதான சாலையிலேயே பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இந்தியாவிலேயே வாழை ஆராய்ச்சிக்காக இயங்கும் ஒரே தேசியமையம் இதுமட்டுமே.

வேளாண்மைத் துறையில் இந்தியாவின் சிறந்த பெண் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கே வேலை பார்க்கிறார் என்பது அங்கே வசிப்பவர்களுக்கு கூட தெரியவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆச்சரியப் படுகிறார்கள்.

மெட்ரிக்குலேஷன் பள்ளி டீச்சர் மாதிரி சிம்பிளாக பாப் கட்டிங், காட்டன் சேலையோடு இருக்கிறார் எஸ்.உமா. 46 வயது. ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கியை இந்த மையத்தில் உருவாக்கியிருக்கிறார். இதன் பொருட்டே இவரை ஊக்குவிக்கும் விதமாக ‘பஞ்சாபரோ தேஷ்முக் வேளாண்மைக்கான பெண் விஞ்ஞானி விருது’ கடந்த 2008ஆம் ஆண்டுக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்விருது இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட பயோவெர்ஸிடி, பிரான்ஸ் மற்றும் பனானா ஏசிய பசிஃபிக் நெட்வொர்க், பிலிப்பைன்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கும் ‘பிசாங் ராஜா’ சர்வதேச விருதினை வென்றெடுத்திருக்கிறார்.

மலைவாசஸ்தலங்களான வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, பலவித ஆபத்துக்களை எதிர்கொண்டு வாழையின மரபுகளை தேடித்தேடி கண்டறிந்திருக்கிறார்கள் உமா தலைமையிலான குழுவினர். ஆயிரத்து அறுநூறுக்கும் மேலான வாழையினங்களை கண்டறிந்து, முன்னூற்றி அறுபது வகைகளை தொகுத்து மரபணு வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் புதியதாக கண்டறிந்த ‘உதயம்’ என்ற பெயரிலான கற்பூரவள்ளி வகை வாழைப்பழம் இன்று நாடு முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பிராண்ட்.

போதாவூரில் இருக்கும் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். விருதுகளுக்கும், பாராட்டு மழைகளுக்கும் இடையே, திணறி நனைந்துக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து ‘மினி பேட்டி’ எடுத்தோம்.

“மரபணு மாற்ற வேளாண்பொருட்களால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்களே?”

“விஷயம் தெரியாதவர்கள் இதுபோல பேசுகிறார்கள். மரபணு மாற்றங்கள் மூலமாக புதிய, நல்ல விஷயங்கள் நிறைய கண்டுபிடிக்கலாம். மாற்றம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுவதுதான் முறை. இதுபோல மரபணுக்களை மாற்றி உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பலவித சோதனை நிலைகளை தாண்டியே மக்களின் பயன்பாட்டுக்கு எந்தவொரு பொருளும் வருகிறது. மக்களுக்கு கெடுதல் தரும் விஷயமென்றால் அரசு அனுமதித்து விடுமா என்ன?

“கடைகளில் விற்கப்படும் பச்சை வாழைப்பழம் இப்போதெல்லாம் மஞ்சளாகத் தெரிகிறதே? இதுவும் கூட மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் மாற்றமா?”

“ஒருசில வகைகளைத் தவிர்த்து, வாழைப்பழத்தின் அசல் நிறமே மஞ்சள்தான். நம் நாட்டு தட்பவெட்ப சூழலின் காரணமாக முழுமையாக மஞ்சள் நிறத்தை அடைவதற்குள் பழுத்து விடுகிறது. தோல் பச்சையாக இல்லை, மஞ்சளாக இருக்கிறது என்பதற்கெல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” (சிரிக்கிறார்)

பழம் தவிர்த்து, வாழையின் பயன்கள் என்ன?

வாழை மரத்தை கல்பதரு என்று சொல்லுவதே பொருத்தம். பழம், பூ, இலை, தண்டு, நார், வேர் என்று எல்லாமே பணம் தரக்கூடிய விஷயங்கள். உங்களுக்கே தெரியும். நம்மூரில் வாழை இலை மிகப்பெரிய வருவாயைத் தரக்கூடிய தொழில். பழமும் இப்படியே. மற்றப்பழங்கள் விற்கப்படாத பெட்டிக்கடைகளில் கூட வாழைப்பழங்கள் விற்கப்படுகின்றன.

வாழைப்பூவும், தண்டும் சமையலுக்கு பயன்படுகிறது. வாழைப்பழத் தண்டு சிறுநீரகக் கற்களை அகற்றக்கூடிய மருந்து என்பது மருத்துவமுறையில் நிரூபணமான ஒன்று. வாழைத்தண்டை ஜூஸ் வடிவிலும் குடிக்கலாம்.

வாழைநாரில் இருந்து ஃபைபரை பிரித்தெடுத்து கயிறு செய்யலாம். கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிறு இவ்வகையானது. இந்தக் கயிறுக்கு மட்டும்தான் கடல்நீரின் உப்பால் அரிக்கப்படாத தன்மை இருக்கிறது. அதுபோலவே நாரில் பிரித்தெடுத்து உருவாக்கப்படும் கார்க் எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது. கப்பல்களில் எண்ணெய் கசிந்தால் இந்த கார்க் வைத்தே அடைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? நீங்களே பார்த்திருப்பீர்கள். எண்ணெய்க் கடைகளில் டின்னில் இருந்து எண்ணெய் வாய்வழியாக கசியாமல் இருக்க வாழைத்தாரின் ஒரு துண்டினை வைத்துதான் அடைத்திருப்பார்கள். அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் வாழைத் தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்கள். உங்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் விளங்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தரக்கூடியது வாழைசாகுபடி. இதை எப்படியெல்லாம் பணமாக்கலாம் என்பதையே அவர்களுக்கு சொல்லித்தந்து வருகிறோம்.

வேளாண்மைக்கு இங்கே என்ன எதிர்காலம் இருக்கிறது? மாணவர்கள் மேற்படிப்புக்கு வேளாண்மையைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறதே?

இதற்கு மாணவர்களை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பள்ளிக் கல்விப்பாடத் திட்டத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று இருக்கிறது. வேளாண்மை இல்லையே? அவர்கள் பண்ணிரண்டு வகுப்பு வரை எது படிக்கிறார்களோ, அதையே மேற்படிப்பில் படிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வேளாண்மை அடிப்படை நாடான இந்தியாவில், பள்ளியிலேயே வேளாண்மை தனிப்பாடமாக அமையவேண்டியது அவசியம்.

வேளாண்மைத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வேளாண்மை படித்தவருக்கு வேலை இல்லை என்ற நிலையே இங்கு இல்லை. ஆதியிலிருந்தே உலகில் ‘டல்’ அடிக்காத ஒரே துறை உணவுத்துறை மட்டுமே. மற்ற எந்தத் துறை வேண்டுமானாலும் எழலாம், வீழலாம். காற்று, நீர், உணவு இன்றி வாழமுடியுமா என்ன? உள்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், பல தனியார் நிறுவனங்களிலும் வேளாண்மை படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வெளிநாடுகளிலும் கூட இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. படித்து முடித்தால் வேலை நிச்சயம் என்ற உத்தரவாதம் இருக்கும்போது இதைவிட சிறந்த கேரியர் ஒரு மாணவனுக்கு வேறு எந்தப் படிப்பில் கிடைக்கும்?


ஆராய்ச்சிக்காக செலவழித்துக் கொண்டிருக்கும் அவரது பொன்னான நேரத்தை நமக்காக ஒதுக்கி, பேசியதற்காக நன்றி தெரிவித்து கிளம்பினோம். வாழைமரங்கள் வரிசையாக தலையசைத்து நமக்கு ‘டாட்டா’ காட்டுகிறது.

6 கருத்துகள்:

  1. ithuvum "Puthiya Thalaimuraiyil" vanthathaa...? nallayirukkirathu

    பதிலளிநீக்கு
  2. நம் தோட்டத்தில் சாதரணமாகக் காணப்படும் வாழையில் இவ்வளவு விஷயங்களா? வாழை நாரினால் கயிறு திரிக்கலாம் என்பதும்,அது கப்பல்களில் பயன்படுகிறது என்பதும் உண்மையிலேயே ஆச்சர்யப் பட வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. மரபணு மாற்றப்பட்ட உணவின் மீதான விஞ்ஞானியின் கருத்து ஏற்க முடியாது.விஷயம் தெரியாதவர்களின் புலம்பல் அல்ல இது.புஷ்ப பார்கவா,சுவாமினாதன்,செரலினி போன்ற இன்னும் எத்தனயோ பெரும் அறிவியல் அறிஞர்கள் அவசரப் படவே கூடாது என்று நிறுத்தி வைத்த விஷயம்.அறிவியலை எதிர்ப்பது நோக்கமல்ல.அவசரமான முடிவுகள், அறிவியலை துணைக்கொண்டு எடுத்து விடக் கூடாது என்ற அக்கரையில் தான்.

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டத்துக்கு நன்றி டாக்டர்.

    என்னை நினைவிருக்கிறதா? ஒரு பத்திரிகை பேட்டி தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பாக உங்களை தொடர்பு கொண்டிருந்தேன். பி.டி. கத்தரிக்காய் விவாதம் தொடர்பாக.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம்.இப்போது நினைவிற்கு வருகிறது.புதிய தலைமுறை பத்திரிக்கை தானே! நலமா? என் அபுதாபி நண்பர் இன்று காலையில் எனக்கு உங்கள் வலைய தொடர்பை அனுப்பி படிக்க சொன்னார்.நல்ல பதிவுகள்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு