20 நவம்பர், 2009

நக்சல்பாரிகள் - இன்றைய நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!
ஒன்பதாவது பாகம் :நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!


எமர்ஜென்ஸி யாரை பாதித்ததோ இல்லையோ, நக்சல்பாரிகளையும், அவர்கள் இயக்க வளர்ச்சிகளையும் மிகக்கடுமையாக மட்டுப்படுத்தியது. எமர்ஜென்ஸிக்கு பிறகான ஜனதா கட்சியின் கூட்டு அரசாங்கம் விசாரணையின்றி நாடெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நக்சல்பாரிகளை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்குப் பின்னணியில் பல்வேறு மனித உரிமை குழுக்களின் குரல் இருந்தது.

கடந்த கால கசப்பான அனுபவங்கள் நக்சல்பாரிகளை புடம் போட்டிருந்தது. பல்வேறு இயக்கங்களும், இயக்கத் தலைவர்களும் ஒன்று கூடி தாங்கள் ஏற்கனவே சென்று கொண்டிருந்த பாதையை மறுபரிசீலனை செய்தனர். ஒரு சில கட்சிகள் தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த அழித்தொழிப்பு முதலான நடவடிக்கைகளிலிருந்து தடம்மாறி பாராளுமன்றத்தில் மக்கள் ஆதரவோடு பிரதிநிதித்துவம் செய்ய முடிவெடுத்தார்கள். பீகாரில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) போன்றவர்கள் இவர்கள்.

இன்னொரு தரப்போ தங்களது வழக்கமான கொரில்லா போர்முறையை தொடர முடிவெடுத்தது. ஆந்திராவில் பிரபலமான மக்கள் போர்க்குழு, பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய குழுக்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நக்சல்பாரிகள் இருவேறு பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்புமே அவ்வப்போது அமையும் அரசுகளை எதிர்த்தே அரசியல் செய்து வந்தாலும், வழிமுறைகள் வேறு வேறு. இரு தரப்பும் கூட பல பிரச்சினைகளில் மூர்க்கமாக மோதிக்கொள்வதுண்டு.

ஆனாலும், கடந்த கால் நூற்றாண்டில் பார்க்கப் போனால் ஆயுதம் தாங்கிய நக்சல்பாரி குழுக்களே பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பது தான் யதார்த்தம். இந்த குழுக்கள் தான் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் தலைவலியை தந்து வருகிறார்கள். எழுபதுகளில் மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம் என்று சில மாநிலங்களில் மட்டுமே பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர்கள் இன்று ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும் அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக சுலபமாக நக்சல்பாரிகளால் காலூன்ற முடிகிறது. புதிய தொழில் திட்டங்களால் தங்கள் விளைநிலங்களை இழக்கும் விவசாயிகள், காடுகளை இழக்கும் பழங்குடியினரும் அடைக்கலமாகும் குழுக்கள் நக்சல்பாரி குழுக்களாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் நக்சல்பாரி குழுக்களின் தாய்வீடான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதில்லை. ஆனால் மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தயார் படுத்தும் விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவின் மக்கள் போர்க்குழு மற்றும் பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய நக்சல்பாரி குழுக்கள் தான் வலுவான ஆயுதவழிப் போராட்ட குழுக்களாக வளர்ந்திருக்கின்றன.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு பீகாரிலும், ஜார்க்கண்டிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே மக்கள் போர்க்குழு ஒரிஸ்ஸாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல பல மாநிலங்களிலும் பல நக்சல் குழுக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தடையை உடைத்தெறிய இக்குழுக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாநில அரசுகளின் தடையே கொரில்லா போர்க்குழுக்களை ஒன்றிணைய வைத்து விட்டது.

கட்சியாக உருவெடுத்தப் பின் முன்பை விட மூர்க்கமாக நக்சல் குழுக்கள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முழு பலத்தோடு இப்போது இருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காலூன்றும் பணிகளையும் சமீபகாலமாக செய்துவருகிறார்கள்.

நக்சல் குழுக்கள் அடிக்கடி தங்களது கட்சி பெயர்களை மாற்றியோ அல்லது குழுக்களை ஒன்றோடு ஒன்றாகவோ இணைத்துக் கொள்வது காவல்துறையையும், ஆட்சியாளர்களையும் குழப்பி வருகிறது. புதிய பெயர்களில், புதிய குழுக்களில் நக்சல் குழுக்களுக்கு போராளிகளை சேர்த்து மொத்தமாகப் போய் மீண்டும் பழைய குழுவில் இணைந்துகொள்வது அவர்கள் வழக்கம். நக்சல்குழுக்களுக்கு போராளிகளும், செய்தித் தொடர்பாளர்களும் மாதச்சம்பளம் வாங்கி பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு போராளிக்கு இப்போது ஆறாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை நக்சல் குழுவில் பணியாற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் எட்டாயிரம் முதல் ரூபாய் பதினாறாயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இணையான அல்லது உயர்ந்த சம்பளத்தையே நக்சல்பாரிகள் தங்கள் போராளிகளுக்கு வழங்குகிறார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கூட செய்தி சேகரிக்க இன்•பார்மர்களாக பணிக்கு அமர்த்துகிறார்கள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

நாடுகளுக்கிடையே இருக்கும் தீவிரவாதக் குழுக்களை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை நக்சல்பாரிகளின் வளர்ச்சி குறித்து கவலை தெரிவிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நிறைய பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்பதை அவ்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. இக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடமுடியவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம் 31,000 பேர் இருக்கலாம் என்று அவ்வறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை 2006ஆம் ஆண்டு வந்தது. அதன் பின்னர் இருமடங்காகவும் ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆயுதம் தாங்கிய நக்சல் குழுக்கள் ஒருங்கிணைந்து 2004ல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்த பிறகு, ஒரு அரசியல் கட்சிக்கேயுரிய கட்டமைப்போடு பிராந்திய கமிட்டிகளை உருவாக்கினார்கள். ஆந்திரா - ஒரிஸ்ஸா எல்லை சிறப்புக் கமிட்டி, ஜார்கண்ட் - பீகார் - ஒரிஸ்ஸா சிறப்புக் கமிட்டி, டாண்டகரன்யா சிறப்புக் கமிட்டி என்று தேசிய கட்சிகளுக்கு மாநில கமிட்டிகள் இருப்பது போல நக்சல்கள் செயல்படும் மாநிலங்களுக்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கமிட்டிகள் செயல்பட நிர்வாகிகளை நியமித்தார்கள். குழுக்களின் நிர்வாகம் சீர்பட்டது.

கட்சியின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதால் திட்டமிட்ட தாக்குதல்களை இப்போது மிகத்துல்லியமாக நிகழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த டிரெயின் ஹைஜாக்கிங்கையும் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது இந்தியாவின் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நக்சல்பாரி குழுக்கள் காலூன்றியிருக்கின்றன. இவைகளில் 62 மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்காடு இருக்கின்றனர். வெளிப்படையாகவே காவல்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் சவால் விடும் அளவுக்கு நக்சல்பாரிகளின் வளர்ச்சி இருக்கிறது.

(முற்றும்)


பின்குறிப்பு :

1. நக்சல்கள் குறித்து வாசிக்க நினைத்தபோது தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் கூட மிகக்குறைவான தரவுகளே வாசிக்க கிடைத்தது. அச்சுபாணி பிரச்சாரம் நக்சல்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தோன்றுகிறது.

2. இத்தொடரில் சிறுசிறு தகவல் பிழைகள் நிறைய இருக்கலாம். எனக்கு வாசிக்க கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். எப்பிழையும் என்னால் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்காது என்று நிச்சயமாக கூறமுடியும்.

3. நக்சல்கள் குறித்த விரிவான வாசிப்புக்கு போதுமான புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொடர் எழுதிய தினத்திலிருந்து இன்று வரை குறைந்தது பத்து தொலைபேசி அழைப்புகளாவது தொடர் குறித்து பேசும் நோக்கத்தோடே எனக்கு வந்துகொண்டே இருக்கிறது.

4. இந்த நிமிடம் வரை நான் நக்சல்களின் ஆதரவாளனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. வேண்டுமானால் அனுதாபி என்று சொல்லிக் கொள்ளலாம். இத்தொடர் என் பார்வையில் எழுதப்பட்டது என்பதால் அரைவேக்காடாகவும் சிலருக்கு தோன்றலாம்.

5. இறுதியாக, என் புரிதலில் பணக்காரர்களால் ஆனது தேசம் என்று அரசும், தேசமென்பது ஏழைகளுக்கானது என்று நக்சல்பாரிகளும் புரிந்துகொண்டதாலேயே இப்பிரச்சினைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக்கும் இடைப்பட்ட சிந்தனைகளோடு கூடிய ஒரு அமைப்பே இந்தியாவின் இன்றைய தேவை என்றும் கருதுகிறேன்.

8 கருத்துகள்:

  1. super thambi! will circulate this among my friends! Cheers!

    பதிலளிநீக்கு
  2. அன்பின் யுவகிருஷ்ணா,

    எடுத்த பணியை உங்கள் அளவில் நேர்மையாகவே முடித்திருக்கிறீர்கள். தகவல் பிழைகள் இருப்பது உண்மைதான். என்றாலும் பதிவுலகில் ஓரளவுக்கு தொடராக எழுதியிருப்பது நீங்கள் மட்டுமே என நினைக்கிறேன். ஒருவேளை இதுவும் தகவல் பிழையாக இருக்கலாம். என்றாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஓசை அண்ணே!

    நன்றி பைத்தியக்காரன் அண்ணே!

    பதிலளிநீக்கு
  4. நெத்தியடி முஹம்மத்7:26 PM, நவம்பர் 20, 2009

    ////இறுதியாக, என் புரிதலில் பணக்காரர்களால் ஆனது தேசம் என்று அரசும், தேசமென்பது ஏழைகளுக்கானது என்று நக்சல்பாரிகளும் புரிந்துகொண்டதாலேயே இப்பிரச்சினைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக்கும் இடைப்பட்ட சிந்தனைகளோடு கூடிய ஒரு அமைப்பே இந்தியாவின் இன்றைய தேவை என்றும் கருதுகிறேன்.//// முதல் 2 அல்லது 3 பகுதிகள் வாசித்தபின் இதைத்தான் விளங்கினேன் நான். நாடு என்பது அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை இரு சாராரும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மொத்தமாக இன்று அனைத்தையும் படித்தேன். நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள்.(எனக்கும் அதிகம் தெரியாது )

    பதிலளிநீக்கு
  6. இந்தியா போன்ற ஒரு தேசத்தில் நூறு சதவித மக்களுக்கும் அரசாங்கத்தால் வேண்டியதை தர முடியாது. ஆனால் குறைந்த பட்சம் நேர்மையான மனசோடு கொடுப்பதற்கு முயற்சிக்கவாவது செய்ய வேண்டும். நம் அரசு அதையும் செய்யவில்லை. மேலும் இந்தியாவில் பரம்பரை தொழில் உண்டு. உதாரணமாக ஒரு காய்கறி வியாபாரி அல்லது ஒரு தையல் கடைக்காரர் இருக்கிறார். அவரை அரசை எதற்கும் எதிர்பார்க்காமல் வாழ்கிறார். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய மெகா கம்பெனிகள்- ஒவ்வொரு சாமானியனின் வயிற்றிலும் அடித்து தன் நிறுவனத்தை வளர்கிறது. இயல்பாகவே வெறுப்புணர்வு தீவிரவாதமாக மாறும். இது சாதாரண பிரச்சனை அல்ல. உடனடியாக கௌரவம் பார்க்காமல் அரசு இறங்கி வரவேண்டும். இல்லையேல் மிகப் பெரிய வெட்கக்கேட்டை சந்திக்க நேரும்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா3:26 PM, நவம்பர் 23, 2009

    அடிப்படையில் சில புரிதல் குறைபாடு உள்ளது..

    வளர்ச்சிப் பணிகளை அரசு செய்யாதது புரட்சியாளர்கள் தோன்ற காரணம்” என்று நீங்கள் எழுதியது போல வாசித்ததாக நினைவு. அது சரியல்ல.. புரட்சியாளன் ஒரு சமூகம் அதன் அடுத்த கட்டத்திற்கு நகர ஒரு கேட்டலிஸ்ட்டாகவும், உதவியாகவும் இருக்கிறான்.. அதன் முன்னோக்கிய வளர்ச்சிக்கு தடை எனும் போது அதைக் களைய முயல்கிறான் - அது (தடை) வன்முறையாய் இருக்கும் போது வன்முறையாய்ச் செய்கிறான் (புரட்சி)..

    சென்னையில் தானே இருக்கிறீர்கள்? எங்கள் தோழர்களை வினவு போன் நெம்பரில் தொடர்பு கொண்டு இயங்கியல் ரீதியிலான பொதுவான சமூக வரலாறு.. இந்திய / தமிழக வரலாறு போன்ற அடிப்படைகளை அறிந்து கொள்ளுங்கள்

    மற்றபடி உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது..

    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா1:56 AM, நவம்பர் 10, 2010

    I read all your 10 parts and it is awesome, very good analysis. I understand and support these guys.

    பதிலளிநீக்கு