
'வெற்றி! வெற்றி' என்ற செண்டிமெண்டலான வசனத்தோடு தொடங்குகிறது படம். மணிமாறன் என்ற சாமானிய வைத்தியர், பெரிய புரட்சிக்காரனாக உருவாவதை 'திடுக்' திருப்பங்களோடு, இனிய பாடல்களோடு படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் தாக்கம் ஐம்பதாண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களான கிளாடியேட்டர், பைரேட்ஸ் ஆஃப்ட த கரீபியன் ஆகியவற்றில் கூட இருப்பது ஆச்சரியமான ஒன்று.
சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது. பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.
கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.
கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.
படத்தைப் பற்றி நாம் பேசுவதைவிட, படத்தில் கதாநாயகியாக நடித்த புரட்சித்தலைவியே பேசுவது மேலானது அல்லவா? தலைவரோடு, தலைவி நெருக்கமாக நடித்த காதல் காட்சியைப் பற்றி பேசுகிறார்.

சினிமா உலகை பொறுத்தவரையில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. வெண்ணிற ஆடையில் நடிக்கும் முன் சில கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுக்க பந்துலு திட்டமிட்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர் அவர்கள்தான் கதாநாயகன். பந்துலு அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நானே ஆயிரத்தில் ஒருவனிலும் நடிக்க வேண்டும் என்பது பந்துலுவின் விருப்பம். என்னைப் பற்றி மெதுவாக எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்லி விட்டார் பந்துலு. நான் நடித்த கன்னடப் படத்தை, தான் (எம்.ஜி.ஆர்) பார்க்க விரும்புவதாக சொன்னாராம். அவர் பார்த்து சம்மதம் தெரிவித்த பிறகுதான் என்னை நடிக்க வைப்பதுப் பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டார்கள்.
அவர்களோடு உட்கார்ந்து நானும் கன்னட படம் பார்த்தேன். படம் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள் எழுந்து பந்துலு பக்கம் திரும்பி சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு போனார். என் வாழ்நாளிலேயே அன்றுதான் பெரும் சந்தோஷம் அடைந்தேன்.
அவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குறையவே குறையாது. யாரிடமும் சமமாக பழகுவார். தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார்.படசெட்டில் தன்னோடு நடிக்கும் அத்தனை பேரையும் கவனித்து சொல்லிக் கொடுப்பார். கலகலவென்று பேசுவார் தலைவர். அதில் நகைச்சுவை கலந்திருக்கும். பதிலுக்கு நானும் லொட லொடவென்று பேசி வைப்பேன். இதற்காக எம்.ஜி.ஆர். எனக்கு சூட்டிய பெயர் வாயாடி.
முதல் காதல் காட்சியில் நடிக்கும்போது எனக்கு வெட்கமாக இருந்தது! என் முதல் படத்தில் காதல் காட்சிகளில் (வெண்ணிற ஆடை) நடிக்காமல் இருந்த எனக்கு அப்படியே எல்லாப் படங்களிலும் வரமுடியுமா? கூடாதல்லவா?
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நாயகி ஓர் இளவரசி. அவளை வில்லன் வழக்கம்போல மணக்க விரும்புகிறான். தற்செயலாக அவளை கதாநாயகன் சந்திக்கிறான். வில்லனிடமிருந்து அவளை அவன் காப்பாற்றியாக வேண்டும்.
திருமணமான ஒரு பெண்ணை அந்த நாட்டின் ராஜாவான வில்லன் ஏறெடுத்து பார்க்க கூடாது. இப்படி ஒரு சட்டம் அந்த நாட்டில் உண்டு. சட்டத்தை மீற முடியுமா? மீறலாமா? தப்பு, தப்பு. எனவே, திருமணப் பத்திரிகை அச்சடிக்கபடாமலேயே இதில் வரும் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணம் நடந்தேறி விடுகிறது. வெளி உலகின் கண்களுக்கு இப்போது கணவன்-மனைவி.ஆனால் கதாநாயகன்- இளவரசியின் கரத்தை பிடித்தவன் மனநிலை என்ன? வில்லனிடமிருந்து தப்பிச் செல்லவே இதை செய்தோம். இது திருமணமல்ல, தந்திரம். எனவே, இளவரசியின் கணவன் என்ற உரிமையை கொண்டாடக் கூடாது என்று கதாநாயகன் நினைக்கிறான். இளவரசியின் காதலை ஏற்க சாதாரண குடிமகனான காதலன் அஞ்சுகிறான். நியாயத்தின் அடிப்படையில். இந்நிலையில் ஒருநாள் இரவு இளவரசி உள்ளே படுத்திருக்க, கதாநாயகன் வெளியே வந்து படுக்கிறான். வானம் சும்மா இல்லை, இருளாகிறது. மேகத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டு கர்ஜிக்கிறது. மின்னலைத் தூதனுப்பி மழையையும் கொட்டு கொட்டென்று கொட்ட செய்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடன டைரக்டராகப் பணியாற்றியவர் தங்கப்பன். அவரது குழுவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணும், வாலிபரும் நாணமோ என்ற பாட்டுக்குரிய பாவனைகளை ஆடிக் காட்டினார்கள். ஆணும் பெண்ணுமாக அவர்கள் நெருக்கமாக நடித்துக் காட்டியபோது எனக்கு அது புதுமையாக இருந்தது. அவர்கள் செய்தபடி இப்போது நானும் எம்.ஜி.ஆரும் நடிக்க வேண்டும். ஏதோ இனம் தெரியாத உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. காட்சி படமாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காமிரா முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன். டைரக்டர் ஸ்டார்ட் என்று சொல்லி படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. காதல் மயக்கத்தில் போதையோடு கதாநாயகனை நான் எனது விழிகளால் அளக்க வேண்டும். அதாவது அன்பு தோயப் பார்க்க வேண்டும். உடனே, கதாநாயகன் என்னை அப்படியே பதிலுக்குப் பார்த்தபடி நெருங்கி வந்து என்னை அணைத்துக் கொள்வார். இதுதான் படமாக்கப்படவிருந்த காட்சி. கேமிரா இயங்க ஆரம்பித்திருந்தது. கதாநாயகனான எம்.ஜி.ஆர் என்னை நெருங்கி வருகிறார். ஒன்றுமே ஓடவில்லை. திணறி போய்விட்டேன். எனது தவிப்பை தயாரிப்பாளரும் டைரக்டருமான பந்துலு சார் கண்டுக் கொண்டார் போலும்.என்னை கூப்பிட்டு, என்னம்மா குழந்தை நீ எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டாம். காமிராவைப் பார்த்தே நடிக்கலாம் என்று சொன்னதும் எனக்கு தைரியம் வந்துவிட்டது.
அந்த யோசனை எனக்கு கைக் கொடுத்தது. மீண்டும் எம்.ஜி.ஆருடன் அந்த காதல் கட்டத்தில் நடித்தபோது டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடி அன்றைய என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்தேன். இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக அடுத்த காட்சியை படமாக்க செட்டில் ஆட்கள் பம்பரமாக சுழன்றனர். எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே மலர் மஞ்சத்தில் நெருங்கி உட்கார்ந்து என்னருகில் நகர்ந்து நகர்ந்த வர, படுக்கையில் நான் மெல்ல சாய வேண்டும். இந்தக் காட்சியை படமாக்கும்போது எனக்கு குளிர் ஜுரமே வந்துவிட்டது போல் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அதை கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆர். ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சோர்வாகவும் காணப்படறீங்க? என்று என்னை பார்த்து கேட்டார். ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று ஏதோ சொல்லி சமாளித்தேன். வாய் பேசியதே தவிர என் உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. கட்டிலில் சாயும்போது உடல் நடுக்கத்தை சமாளிக்க வலது கையால் யாரும் கவனிக்காதபடி தலையணைக்குள் என் கையை விட்டு கட்டிலின் காலை கெட்டியாக பற்றிக் கொண்டேன். என் நடுக்கம் இதனால் நின்றது.
அன்றைய அந்த காதல் காட்சி சரியாக அமைய, முழு ஒத்துழைப்பும் கொடுத்து, எனக்கு எவ்வித பயமும் ஏற்படாத வகையில் தைரியமான வார்த்தைகளை சொல்லி என்னை சரிவர நடிக்க வைத்த எம்.ஜி.ஆருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
திரைப்பட உலகில் ஆயிரக்கணக்கான நடிகைகள் நடித்த காதல் காட்சிகளில் ஒன்றுதான் அன்று நான் நடித்ததும், இருந்தாலும் நான் காதல் காட்சியில் அன்றுதானே முதன்முதலாக நடித்தேன். என் முதல் காதல் காட்சியில் நடித்து முடித்ததும் என் மனநிலை எப்படி இருந்தது தெரியுமா? எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற பிரமைதான் என் நினைவைக் கவ்வி கொண்டிருந்தது. அந்த படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் தன் காதலனை ரகசியமாக சந்தித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்கே பிறர் தன்னை கண்டுபிடித்துவிட்டு போட்டோகாசம் செய்வார்களோ என பயந்த நிலையுடன் வருவாளோ, அதுமாதிரிதான் நானும் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால், படப்பிடிப்பு குழுவினரும் ஸ்டுடியோ தொழிலாளர்களும்தான் இருந்தார்கள்.
அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. என் நடிப்பை அவர்கள் அப்படி அதிசயமாக பார்த்திருக்க மாட்டார்கள். தினம் தினம் இப்படி பல காட்சிகளை கண்டவர்களாயிற்றே. எம்.ஜி.ஆருடன் நான் நடித்த முதல் காதல் காட்சியை காண தியேட்டரில் அமர்ந்திருந்தேன். வெள்ளித்திரையில் நான் நடித்த முதல் காட்சியைப் பார்த்தபோது ஏதோ அனுபவபட்ட நடிகை நடித்தது மாதிரிதான் எனக்கு பட்டது. நான் பயந்ததும். நடுங்கியதும் எனக்கே தெரியவில்லை.காதல் காட்சியில் நடித்த அன்று சில நடிகைகள் இரவு தூங்கவில்லை அந்தப் படப்பிடிப்பை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்த சலனமும் என் உறக்கத்தை பாதிக்கவில்லை. அன்றிரவு அருமையான தூக்கம் என்னைத் தழுவிக் கொண்டது.
(புரட்சித்தலைவி பேட்டிக்கு நன்றி : தமிழ்சினிமா.காம்)
