9 ஜனவரி, 2010

ஜேம்ஸ் கேமரூன் : அரசன் அல்ல கடவுள்!


பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான டைட்டானிக் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஒருமுறை சொன்னார். “நான் இந்த உலகுக்கு அரசன்”. ,‘அவதார்’ திரைப்படத்தின் முதல் காட்சியை இங்கே கண்டுகளித்த இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா சொல்கிறார். “கேமரூன் அரசன் அல்ல. கடவுள்!”.

வர்மா சொல்வதை வெறும் புகழ்மாலையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் டிசம்பர் 18 அன்று, ‘அவதார்’ வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் 6.75 கோடி ரூபாய், உலகளவில் 127 கோடி ரூபாய் என்று வசூலை அள்ளிக் கொட்டியிருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே ஒரு மாதத்தில் ரூ.2860 கோடி ரூபாயை வசூல் எட்டிவிடும் என்கிறார்கள். படத்தின் செலவு ரூ.1200 கோடி மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சினிமா ஆயிரம், ஆயிரம் கோடிகளாக அள்ளிக் கொட்டுவது சாத்தியமா என்றால், இன்றைய நிலையில் ஜேம்ஸ் கேமரூனுக்கு எளிமையான சாத்தியமே.

உலகமே அவதாரை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாட, ஜேம்ஸ் கேமரூன் மட்டும் கொஞ்சூண்டு வருத்தத்தில் இருக்கிறார். அவரது முந்தையப் படமான டைட்டானிக் முதல் நாளிலேயே 134 கோடி வசூலித்ததாம். இந்தப் படத்துக்கு 7 கோடி ரூபாய் குறைந்துவிட்டதாம். அடிச்சி ஆடுங்க கேமரூன். உங்க கடலிலே இப்போ சுனாமி!

டைட்டானிக்குக்கும், அவதாருக்கும் ஏன் பண்ணிரெண்டு ஆண்டு இடைவெளி? உண்மையில் பார்க்கப் போனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அவதார் படத்தின் 114 பக்க ஸ்க்ரிப்டை கேமரூன் தயார் செய்துவிட்டார். ஆனாலும் அன்று இருந்த தொழில்நுட்பத்தில் இப்படம் சாத்தியமாகாது என்று நினைத்தார்.
முழுமையாக ஒரு படைப்பை தருவதற்கு தேவையான தொழில்நுட்பம் வரும் வரை ஒரு கலைஞன் காத்திருப்பது எத்தகைய அர்ப்பணிப்பு? டைட்டானிக் வெளியானதற்குப் பிறகு படம் இயக்க கேமரூனை அழைத்து கோடி, கோடியாக சம்பளம் தர எவ்வளவோ தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்க, அவரோ அடம்பிடித்து அவதாருக்காக காத்திருந்தார்.

அப்படி என்ன ஸ்பெஷல் அவதாரில்?

இதுவரை அயல்கிரக வாசிகளை பற்றிய படம் என்றால் ஹாலிவுட்டில் ஒரு வெற்றி பார்முலா வைத்திருந்தார்கள். அயல்கிரக வாசிகள் பூமிக்கு படையெடுப்பார்கள். மனித குலத்தை அழித்து பூமியை தமதாக்கிக் கொள்ள போர் தொடுப்பார்கள். அமெரிக்காவின் அதிபர் நேரடியாக களமிறங்கி அவர்களை துரத்தியடித்து மனிதகுலத்தை காப்பார். ஏற்கனவே அயல்கிரக வாசிகளை வில்லன்களாக்கி, மனிதநேயத்தை கச்சாப்பொருளாக்கி வந்த நூற்றுக்கணக்கில் படங்கள் நல்ல காசு பார்த்துள்ளன.

இங்கேதான் மாறுபடுகிறது அவதார். இப்படத்தில் மனிதர்கள் வில்லன்கள். நவிக்கள் எனப்படும் அயல்கிரகவாசிகள் தங்கள் கிரகத்தை பாதுகாக்க மனிதர்களோடு போராடுகிறார்கள். நல்ல மனம் படைத்த சில மனிதர்களின் துணையோடு வெற்றியும் காண்கிறார்கள். ஹாலிவுட்டின் அயல்கிரக மோகத்தின் அடிப்படையையே மாற்றி யோசித்ததுதான் அவதாரின் வெற்றி.

படத்தின் கதை என்ன?

பூமியிலிருந்து 4.4 ஒளியாண்டுகள் தூரத்தில் (ஒரு ஒளியாண்டு என்பது ஒளியின் வேகத்தில் ஒரு ஆண்டு முழுக்க பயணிக்கும் தூரம்) இருக்கும் ஆல்பா செண்ட்ரி நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் ஒரு கிரகம் பண்டோரா. யூனோப்டைனாயம் என்று சொல்லக்கூடிய தோரியத்தை விட பன்மடங்கு விலையுயர்ந்த கனிமம் அங்கே ஏராளமாக கிடைக்கிறது. ஒரு சிறிய துண்டு யூனோப்டைனாயம் பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்று படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

பண்டோராவில் ஜீவராசிகள் உண்டு. ‘நவி’க்கள் என்று மனிதர்களை ஒத்த இனமும் உண்டு. கிட்டத்தட்ட மனிதத் தோற்றத்தில் இருக்கும் நவிக்கள் சாதாரணமாக பத்து அடி உயரம் கொண்டவர்கள். அவர்களது நிறம் நீலம். நவிக்களுக்கு தனி கலாச்சாரம் உண்டு. நம் உலகின் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை ஒத்தவர்கள். இயற்கையோடு இசைந்து வாழ்பவர்கள். சில மாந்த்ரீக சக்திகளை தங்களது தெய்வமான அய்வாவிடமிருந்து பெறுகிறார்கள். பண்டோராவில் மனிதர்கள் ஆதிக்கம் செலுத்த இந்த நவிக்களே தடையாக இருக்கிறார்கள்.

எனவே புதியதாக நவிக்களை உருவாக்கி, இங்கிருக்கும் மனிதர்களின் சிந்தனையை, உருவாக்கப்பட்ட நவிக்கள் மீது ஏற்படுத்தி அவர்களது கூட்டத்தோடு கலக்கச்செய்து, பண்டோராவை ஆராய்வதே ‘அவதார்’ திட்டம். இந்த விஷயத்தை புரிந்துகொள்வது சற்று கடினமானது. மிக எளிமையாக சொல்ல வேண்டுமானால் நம் விட்டலாச்சார்யா படங்களில் பார்த்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையை ஒப்பிடலாம். அதாவது ஒரு நவியின் உடலில் ஒரு மனிதன் கூடுபாய்வது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கூடுபாயும் ஊனமுற்ற ஹீரோ, அங்கிருக்கும் நவி கூட்டத் தலைவரின் மகளோடு காதல்வசப்படுகிறான். நடக்க இயலாத அவன் நவி உடலில் பாய்ந்தப் பிறகு தாவுகிறான், ஓடுகிறான். ஒரு கட்டத்தில் தன் மனிதவாழ்க்கையை விட, நவி வாழ்க்கையை விரும்ப ஆரம்பித்து விடுகிறான். தன்னை ஒரு நவியாகவே உணர்கிறான்.

படத்தின் இரண்டாம் பாதியில் நவீன ஆயுதங்களோடு மனிதர்கள், நவிக்கள் மீது போர்தொடுத்து அவர்களது வசிப்பிடங்களை அழிக்க முற்படும்போது, ஹீரோ நவிக்களுக்கு தலைமைதாங்கி மனிதர்களை வெல்கிறான். இதுதான் கதை. இப்படத்தின் கதை அடக்குமுறைக்கு எதிரானது என்று உலக அரசியல் நோக்கர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக உலகில் தற்போது நடந்துவரும் சில வளர்ந்த நாடுகளின் சுயநலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. மனிதர்களின் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டாமல், விலங்குகளை பாத்திரங்களாக அமைத்து கதை சொல்லிய ஈசாப் குட்டிக்கதைகள் பாணி இது.
இந்தக் கதையை படமாக்க அப்படி என்ன பெரிய தொழில்நுட்பம் கேமரூனுக்கு தேவைப்பட்டது.

பத்து அடி உயர நவிக்களை ஆயிரக்கணக்கில் தத்ரூபமாக உருவாக்குவது. யாருமே கற்பனை கூட செய்யமுடியாத ஒரு புதிய கிரகத்தையும், அவர் மனதுக்குள் கற்பனை செய்து வைத்திருக்கும், அக்கிரகத்தின் தாவரங்கள் மற்றும் வினோத ஜீவராசிகளோடு கூடிய வித்தியாச சூழலையும் ஏற்படுத்துவது. 2002ஆம் ஆண்டு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை கண்டவுடன் அவதாரை உருவாக்கிவிடலாம் என்று கேமரூனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

படத்துக்கு கம்ப்யூட்டர் விஷூவல் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது கேமரூன் சொன்னார். “இப்போது நான் செய்து கொண்டிருப்பதுதான் ஒரு முழுமையான படைப்பை உருவாக்குவதற்கான ஒரே வழி. யாருமே கண்டறியாத ஒரு மரத்தையோ, மலையையோ, வானத்தையோ புதியதாக உருவாக்கும்போது, அந்த படைப்பாளிக்கு தான் உருவாக்கும் விஷயங்களின் மீது முழுமையான ஆதிக்கம் தேவை. பண்டோரா கிரகம் முழுக்க முழுக்க இப்போது என்னுடைய ஆதிக்கத்தில் இருக்கிறது”.

தொடர்ச்சியாக உணர்வுபூர்வமான செண்டிமெண்ட் விஷயங்களையே படமாக எடுப்பது கேமரூனின் பாணி. உணர்ச்சிகளை வியாபாரமாக்குகிறார் என்று சில தீவிர சினிமா விமர்சகர்கள் கேமரூனை குற்றம் சாட்டுகிறார்கள். கேமரூன் இந்த விமர்சனத்தை ஒப்புக் கொள்கிறார். “செண்டிமெண்டான காட்சிகள் ரசிகர்களின் உள்ளத்தை தொடுகிறது. தங்கள் உள்ளத்தை தொட்ட விஷயங்களை அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் தான் என் படங்கள் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. என் படங்கள் நன்றாக வியாபாரம் ஆகிறது என்று சொல்லப்பட்டால் அது நல்ல விஷயம்தானே? இதை ஏன் நான் விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார்.

அவதார் வெளியாவதற்கு முன்பே விருதுகளை அள்ளிக்கொட்ட ஆரம்பித்து விட்டது. கேமரூனின் டைட்டானிக் பதினோரு ஆஸ்கர் விருதுகளை வென்றது. அவதாரும் அதுபோலவே அரை டஜன் விருதுகளை பல துறைகளில் அள்ளிக் குவிக்கும் என்று ஹாலிவுட்டில் பரபரப்பு பேச்சு. அமெரிக்காவின் ஹாலிவுட்டையே கலகலக்கச் செய்துகொண்டிருக்கும் கேமரூன் அமெரிக்கர் அல்ல. கனடியர்.

கேமரூன் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றுமே ‘ட்ரெண்ட் செட்டர்’ என்று சொல்லப்படக்கூடிய வகையிலானது. இவர் டெர்மினேட்டர்-ஜட்ஜ்மெண்ட் டே எடுத்தபோது, அப்படத்தைப் போலவே காட்சிகள் அமைத்து, புற்றீசல்போல பல படங்கள் அந்த காலத்தில் வெளிவந்தது. டைட்டானிக் வெளிவந்தபோது காதல், கப்பல் என்று ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க ஏகப்பட்ட திரைமுயற்சிகள்.

இப்போது அவதார். இதுதான் படம். அடுத்த பத்தாண்டுகளுக்கு இது மட்டும்தான் முன்னோடிப்படம். இனி உருவாக்கப்படும் படங்கள் மனிதநேயத்தை கைவிட்டு, ‘அயல்கிரகவாசி நேயத்தை’ கையில் எடுத்துக்கொள்ளும். ஒரு கலைஞனின் தனித்துவமே வழக்கமான மரபை கட்டுடைத்து, புதிய பாணியை உருவாக்குவதுதான். கேமரூன் தனது முப்பதாண்டு திரைவாழ்வில் பலமுறை பல புதிய பாணிகளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

(நன்றி : கறைஆண்கள் - இலக்கிய ஆயுளிதழ்)

14 கருத்துகள்:

  1. 'ராஜீவ்காந்தியும் செத்துட்டாரா?' என்று வாசகர்கள் பின்னூட்டத்தில் கேட்க நினைக்கலாம். ஆமாம் செத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  2. // யுவகிருஷ்ணா said...

    'ராஜீவ்காந்தியும் செத்துட்டாரா?' என்று வாசகர்கள் பின்னூட்டத்தில் கேட்க நினைக்கலாம். ஆமாம் செத்துவிட்டார்.//

    ஆனாலும் இன்றும் ரகோத்தமன் புத்தகம் சூடுபறத்துகிறதே லக்கி...

    எப்போதைய நிகழ்வென்றாலும் அதைத் தருபவர் தருகிற விதத்தில் அது கவர்கிறது. உங்கள் பதிவும் அந்த வகை.

    ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. //கேமரூன் தனது முப்பதாண்டு திரைவாழ்வில் பலமுறை பல புதிய பாணிகளை உருவாக்கித் தந்திருக்கிறார்.//

    its quite acceptable

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு திரைப்பார்வை லக்கி

    பதிலளிநீக்கு
  5. யூனோப்டைனாயம் /

    அனப்டேனியம்.

    பதிலளிநீக்கு
  6. முழுமையான விமர்சனம் படித்த உணர்வு. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. அவதாருக்காக கேமரூன் காத்து இருந்ததை போலவே நானும் உங்கள் விமர்சனத்துக்காகவே காத்திருந்தேன் தோழர்

    பதிலளிநீக்கு
  8. படம் இன்னும் பாக்கலை பாத்துட்டு கருத்து சொல்லுறேன்..

    பதிலளிநீக்கு
  9. டைட்டானிக் எதிர்கொண்ட உலகளாவிய வரவேற்பு நிச்சயம் அவதாருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ஜேம்ஸ் கேமரூன் அவதாரிலும் ஆகப்பெரிய வெற்றிபெற்றுவிட்டார் என்பதாக பறைசாற்றத்தூண்டுவது, உண்மையில், டைட்டானிக் ஏற்படுத்திய வெற்றியின் தாக்கமே அன்றி அவதாரின் படைப்புநேர்த்தி அல்ல, இதுவரை எத்தனை முறை நீங்கள் டைட்டானிக் படத்தைப்பார்த்திருப்பீர்கள் என்று எனக்குத்தெரியாது, ஆனால் நிச்சயம் அத்தனைமுறை உங்களால் அவதாரையும் கண்டுகளிக்கமுடியுமா கிருஷ்ணகுமார்?
    ஜேம்ஸ் கேமரூன் என்று வரும்பொழுது நம் எதிர்பார்ப்பு சாதாரணமானதாக இருந்துவிடமுடியாது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  10. //அமெரிக்காவில் மட்டுமே ஒரு மாதத்தில் ரூ.2860 கோடி ரூபாயை வசூல் எட்டிவிடும்//

    லக்கி. நிறைய பேரிடம் ரொம்ப நாட்களாக கேட்க வேண்டுமெனெ கேட்க நினைத்தது.கொஞ்சம் க்ளியர் செய்ங்க

    அமெரிக்காவில் டிக்கெட் விலை 20 டாலர்தானாம். அபப்டியென்றால் 1000 ரூபாய் என்று சொல்லலாம். அப்பயென்றால் 2.86 கோடி பேரா அமெரிக்காவில் மட்டும் படம் பார்த்திருப்பார்கள்?

    அப்படியே பார்த்தாலும் ஒரு அரங்கில் 5000 பேர்தான் பார்க்க முடியுமாம். ஒரு நாளைக்கு எட்டு ஷோவென வைத்தாலும் 7 லட்சம் அரங்குகளா? அத்தனை பிரிண்டுகளா?

    என் கணக்கு சரியா? ஆச்சரியமா இருக்கு பாஸ்..

    பதிலளிநீக்கு
  11. // “இப்போது நான் செய்து கொண்டிருப்பதுதான் ஒரு முழுமையான படைப்பை உருவாக்குவதற்கான ஒரே வழி. யாருமே கண்டறியாத ஒரு மரத்தையோ, மலையையோ, வானத்தையோ புதியதாக உருவாக்கும்போது, அந்த படைப்பாளிக்கு தான் உருவாக்கும் விஷயங்களின் மீது முழுமையான ஆதிக்கம் தேவை. பண்டோரா கிரகம் முழுக்க முழுக்க இப்போது என்னுடைய ஆதிக்கத்தில் இருக்கிறது”.//

    ஆ... ஹா..

    பதிலளிநீக்கு
  12. நாலு பேர்12:51 AM, ஜனவரி 12, 2010

    கார்க்கி, இதுவரை அமெரிக்காவில் அவதார் வசூல் 426 மில்லியன் டாலர்கள். அதாவது 43 கோடி டாலர் = கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய். 3400 ஸ்க்ரீன்களில் படம் காட்டுகிறார்கள். டிcகெட் விலை சராசரி 8 டாலர்.பெரிய ஊர்களில் IMAX-3D டிக்கெட் 14 டாலர் வரை.அமெரிக்கா/கனடா வசூல் விவரங்கள் வெளிப்படையாக தினமும் இணையத்திலேயே வந்துவிடும் என்பதால் தயாரிப்பாளர்கள் ரொம்ப பூ சுற்ற முடியாது! விரயம் செய்ய நேரமிருந்தால்: BOXOFFICEMOJO.com
    சுவையான விமர்சனம் யுவா.

    பதிலளிநீக்கு
  13. //அடுத்த பத்தாண்டுகளுக்கு இது மட்டும்தான் முன்னோடிப்படம். இனி உருவாக்கப்படும் படங்கள் மனிதநேயத்தை கைவிட்டு, ‘அயல்கிரகவாசி நேயத்தை’ கையில்
    எடுத்துக்கொள்ளும்.//

    District 9-ம் அதே ராகம் தான்.

    பதிலளிநீக்கு