2 ஜனவரி, 2010

எவரெஸ்ட், எட்டி விடும் உயரம்தான்!


காட்சி 1 :

அப்பா, அம்மா இல்லாத திவ்யா தாத்தாவின் பொறுப்பில் வளர்ந்தார். செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமம். தாத்தாவுக்கு பென்ஷன் மட்டுமே வருமானம். உணவுக்கு கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவவேண்டிய நிலை. வாடகை வீடு. வீட்டு உரிமையாளர் மிக நல்லவர். இவர்களது நிலையறிந்து, குறைந்த வாடகை வாங்கினார்.

சூழல்தான் இப்படியே தவிர, திவ்யா படுப்பில் படுசுட்டி. அவர் படித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகம், திவ்யாவுக்கு ஒரு சலுகை தர முன்வந்தது. மெட்ரிக்குலேஷனில் ஏதாவது ஒரு பாடத்தில் ’செண்டம்’ எடுத்தாலும் போதும். +1, +2 படிப்பை இலவசமாகவே வழங்குகிறோம் என்றது. திவ்யா மூன்று பாடத்தில் ‘செண்டம்’ எடுத்தார்.

+2வில் 1200க்கு 1142 மதிப்பெண். என்ஜினியரிங் படிக்க ஆசை. இவரது மதிப்பெண்ணுக்கு முன்னணிக் கல்லூரிகள் கூப்பிட்டு சீட்டு தர தயாராகவே இருந்தார்கள். ஆனால் திவ்யாவுக்கோ வயதான தாத்தாவை விட்டு, விட்டு தூரமாகச் சென்று படிக்க முடியாது. அவர் வசித்த பகுதிக்கு அருகிலேயே ஒரு தனியார் கல்லூரி இருந்தது. ஆனால் செலவு அதிகம். கையைப் பிசைந்துகொண்டு கலங்கினார் திவ்யா.

காட்சி 2 :

போடிநாயக்கனூர் கார்த்திக் கடுமையான ஏழ்மையிலும் செம்மையாக படித்தார். அவரது அப்பா சமோசா வியாபாரி. தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று சமோசா விற்பார். அப்பாவுக்கு உதவியாக கார்த்திக்கும் விடுமுறை நாட்களில் சமோசா விற்கச் செல்வதுண்டு.

+2வில் கார்த்திக்கின் மார்க் 1200க்கு 1080. இவருக்கும் என்ஜினியரிங் படிக்கவே ஆசை. சமோசா விற்று கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாகப் போகிறது. எங்கிருந்து மகனை என்ஜினியரிங் படிக்கவைப்பது என்று யோசித்தார் அவரது அப்பா. பேசாமல் ஒரு வண்டி வாங்கி, நாமும் சமோசா வியாபாரத்தில் இறங்கி விடலாமா என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தார் கார்த்திக்.

மேற்கண்ட இரு காட்சிகளிலும் சொல்லப்பட்டதைப் போல நம் நாடெங்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திவ்யாக்களும், கார்த்திக்குகளும் இருக்கிறார்கள். காசில்லை என்பதற்காக கல்வியை கைவிடுவது எவ்வளவு கொடுமையானது?

நல்ல வேளையாக திவ்யாவுக்கும், கார்த்திக்குக்கும் கைகொடுக்க ‘எவரெஸ்ட்’ முன்வந்தது. திவ்யா இப்போது அவர் இருக்கும் பகுதியிலேயே தான் ஆசைப்பட்ட கல்லூரியில் என்ஜினியரிங் படிக்கிறார். கார்த்திக் திருச்சியில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி எவரெஸ்ட்!

எவரெஸ்ட் என்பது உலகின் உயர்ந்த சிகரம். மலையேறும் வீரன் சிகரத்தைத் தொட்ட மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சி, ஏதேனும் சிறு உதவியை மற்றவர்களுக்கு செய்துப் பார்த்தாலும் கிடைக்கும். எனவேதான் உயர்ந்த உள்ளங்களின் சங்கமமான இந்த அமைப்புக்கும் ‘எவரெஸ்ட்’ என்று பெயர்.

சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் இவ்வமைப்பில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு சமூகத்துக்கு, தங்களால் ஆன பங்களிப்பினை செய்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

எவரெஸ்ட்டுக்கு என்று அலுவலகம் கூட கிடையாது. ஒருவரை ஒருவர் இவர்கள் பெரும்பாலும் சந்தித்தது கூட இல்லை. இண்டர்நெட்தான் இவர்களை ஒருங்கிணைக்கிறது. யாருக்காவது உதவி தேவை என்பதை அறிந்தால், உடனடியாக இண்டர்நெட்டில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அச்சமயத்தில் இயன்றவர்கள் உடனடியாக பங்களிக்கிறார்கள். அவ்வப்போது இவர்களில் சிலர் ஒன்றுகூடி களச்சேவையும் செய்வதுண்டு.

எங்கே, எப்படி தொடங்கப்பட்டது எவரெஸ்ட்?

அது ஒரு தனி கதை. ஆரணியைச் சேர்ந்த கார்த்தீபனின் அப்பா ஒரு வீடியோகிராபர். அம்மா ஒரு பள்ளியில் தலைமையாசிரியை. அருகிலிருந்த பத்தியாவரம் பள்ளியில் படித்தார் கார்த்தீபன். வயலுக்கு நடுவே பள்ளி. ரம்மியமான சூழல். ஆனால் அப்பள்ளியில் படித்த பல மாணவர்களும் குழந்தைத் தொழிலாளர்கள். படிப்பு என்பதை பகுதிநேரப் பணியாக வைத்திருந்தார்கள். பள்ளி முடிந்ததுமே தனது பக்கத்து சீட் மாணவன் பஞ்சர் ஒட்டும் வேலைக்கு அவசரமாக ஓடுவதை கண்டார் கார்த்தீபன். அரசுப்பள்ளியில் கட்டணம் என்பதே மிகச்சொற்பமானது. அதை கட்டக்கூட இயலாத வகையில் அம்மாணவர்களுக்கு வறுமை. பசுமரத்தாணியாய் பத்தியாவரம் கார்த்தீபனின் மனதில் பதிந்தது. இந்த மாணவர்களுக்கு யாராவது உதவ வேண்டுமே? யார் உதவுவார்கள்.

சேலத்தில் என்ஜினியரிங் படித்தபோது, சில சேவை அமைப்புகளோடு சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார். நான்காம் ஆண்டு படித்தபோது, தன்னோடு ஒத்தக் கருத்து கொண்ட சில நண்பர்களோடு பேசினார். காசுக்காக கல்வி யாருக்கும் மறுக்கப்பட்டு விடக்கூடாது. என்ன செய்யலாம்? சமூகம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பங்களிக்கிறது. சமூகத்துக்கு தனிமனிதனின் பங்களிப்பு என்ன?

எவரெஸ்ட் ரெடி.

ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததும், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை தனியாக தரும்படி அம்மாவை கேட்டார் கார்த்தீபன்.

“எதுக்குப்பா?”

“எங்கிட்டே இப்போ நிறைய காசிருக்கு. இல்லாதவங்களுக்கு இதில் கொஞ்சமாவது கொடுக்கணும் இல்லையா?”

கார்த்தீபனின் நண்பர்களும் கைகொடுத்தார்கள். நான்காயிரம் ரூபாய் தயார். திருவண்ணாமலைக்கு அருகில் சிறுமூர் என்றொரு கிராமம். அங்கிருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள். காலையில் பூப்பறிக்கும் வேலை. முடிந்ததும் பள்ளிக்கு வருவார்கள். மாலையில் மீண்டும் பூ விற்பனை. இந்த மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகங்கள் என்று வாங்கித் தந்து தங்கள் அமைப்பின் சேவைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார்கள்.

சேவை ஒரு போதை. மீண்டும் மீண்டும் சேவை செய்யத் தூண்டும். அடுத்தடுத்து தாங்கள் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதியை சேவைக்கு ஒதுக்கத் துவங்கினார்கள். கல்விக்கான சேவைதான் முதல் இலக்கு. ஏனெனில் கல்வி எல்லாவற்றையும் பெற்றுத் தரும். பிரதீப் என்ற நண்பர் தொடர்ச்சியாக தனது சம்பளத்தில் இருந்து ஐநூறு ரூபாய் கொடுத்துவந்தார். அவருக்கு சம்பள உயர்வு தரப்பட்டபோது, ஐநூறை எழுநூற்றி ஐம்பது ஆக்கினார்.

சேவை ஒரு தொற்றுநோய். நீங்கள் சேவை செய்பவராக இருந்தால், உங்கள் நண்பர்களும் செய்ய விரும்புவார்கள். கார்த்தீபன், பிரதீப் போன்றவர்களின் ஆர்வம் அவர்களது நண்பர்களுக்கு தொற்றிக் கொண்டது. பத்து பேராக இருந்தவர்கள் நூறு பேரானார்கள். நூறு பேர் ஆயிரமாக, இப்போது ஆயிரம் மூவாயிரத்து ஐநூறாக பெருகி நிற்கிறது.

இதெல்லாம் வெறும் நான்கு ஆண்டுகளிலேயே நடந்த வெற்றிக்கதை. இப்போது எவரெஸ்ட் அமைப்பின் உதவிக்கரம் நீண்டுவிட்டது. ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு கை கொடுக்கிறது. இவர்களின் உதவிகளைப் பெற்றவர்களும், மற்றவர்களும் உதவ வேண்டுமென்ற மனப்பான்மையோடு இவர்களது அமைப்பில் சேருகிறார்கள். முதல் பத்தியில் வந்த கல்லூரி மாணவியான திவ்யா இப்போது ஆறு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கிறார்.

“நான் என் பெற்றோரின் கண்ணாடி. மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் என் பெற்றோரே!” – சமூகச்சேவைக்கு நேரமும், பணமும் செலவழிப்பதால் வீட்டில் பிரச்சினை இல்லையே என்று கேட்டதற்கு இப்படி பதில் சொல்லுகிறார் கார்த்தீபன்.

“நீங்கள் சொல்லுவதைப் போல பிரச்சினை வரவும் வாய்ப்புண்டு. எப்படி என்றால் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும், ஊருக்கு வாரியிறைத்துவிட்டு வீட்டை பட்டினிப்போட்டால் நிச்சயம் பிரச்சினை வரும். எனவே சமூகசேவை செய்ய வரும் இளைஞர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினால் போதுமானது. வெறும் பணத்தை பங்களிப்பது மட்டுமே சேவையல்ல.

சினிமாவுக்கும், பீச்சுக்கும், பார்க்குக்கும் பொழுதுபோக்க போகிறோமில்லையா? அதுபோல சமூகசேவைக்கும் மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கலாம். அந்த நாளை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கோ, பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு தருவதற்கோ பயன்படுத்தலாம். இன்று பணத்தை விட, நேரடிப் பங்களிப்பே நம் சமூகத்துக்கு அதிகமாக தேவைப்படுகிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் கார்த்தீபனுக்கு வயது 24. அவரது நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பிருந்தும், நாசூக்காக மறுத்திருக்கிறார்.

“வெளிநாட்டுக்கு போனால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். எனக்கு இங்கே கிடைக்கும் இருபதாயிரமே போதும். என் சமூகத்தோடு, என் மக்களோடு, என் நாட்டில் வாழ்வதே எனக்கு திருப்தி. பணம் சம்பாதிப்பது நிம்மதிக்குதானே? அது இங்கு கிடைக்காமல் வேறு எங்கு கிடைக்கும்?” – ஆன்சைட் வேலை கிடைக்காதா என்று பலரும் அலையும் நேரத்தில் வித்தியாசமாக சிந்திக்கிறார். டாக்டர் கலாமும், மகாத்மா காந்தியும் தான் கார்த்தீபனுக்கு இன்ஸ்பிரேஷனாம். எவரெஸ்ட் குழு, டாக்டர் கலாமுக்கு எப்போதுமே செல்லமான குழு. அவ்வப்போது அழைத்துப் பாராட்டி ஆலோசனைகளும் வழங்குகிறார்.

எவரெஸ்ட் அமைப்பினர் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் மாணவர்களுக்கு அறிவுப்போட்டிகள் நடத்தி வருகிறது. கடந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்களை தங்கள் போட்டிகளில் கலந்துகொள்ள இலக்கு நிர்ணயித்தார்கள். கூடுதலாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள். வெற்றி பெறுபவனை மட்டுமே போற்றுவது என்பது நெருடலான விஷயமில்லையா? பங்கெடுப்பவர்கள் அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள் இல்லையா? அதனால்தான் எவரெஸ்ட் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும், பரிசுகளும் வழங்குகிறது.

“எங்கள் அமைப்பினர் எப்போதும் உதவ தயாராக இருக்கிறோம். யாருக்கு உதவி தேவை என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்கிறார்கள் எவரெஸ்ட் அமைப்பினர்.

இவர்களைப் போல இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ முன்வந்தால், இந்தியாவில் இல்லாமை என்ற சொல்லே எதிர்காலத்தில் இருக்காது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

எவரெஸ்ட் அமைப்பின் சார்பில் ‘இளம் இந்தியா’ என்றொரு நீதிநூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலில் உலகத் தலைவர்களின் 100 வெற்றிக்கதைகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பினைச் சேர்ந்த 23 பேர் சேர்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார்கள்.

காலையில் பள்ளி பிரார்த்தனைக் கூட்டத்தில் இந்நூலில் உள்ள தலைவர்களின் கதைகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டி, ஒவ்வொரு பள்ளிக்கும், மாவட்ட கல்வித்துறை மூலமாக இந்நூலை இலவசமாக வழங்குகிறார்கள்.
ரூ.25/- செலுத்தி, யார் வேண்டுமானாலும் ‘இளம் இந்தியா’ நூலை வாங்கி, தங்கள் பகுதி குழந்தைகளுக்கு கதை சொல்லலாம்.

எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

எவரெஸ்ட் அமைப்பினரை குறுஞ்செய்தி (SMS) மூலமாக தொடர்பு கொள்ள : +919976953287. மின்னஞ்சல் : teameverest@yahoo.co.in இணையத்தளம் : http://teameverest.wordpress.com

11 கருத்துகள்:

  1. சேவையை ஒரு போதை என்றும் தொற்று நோய் என்றும் குறிப்பிடுவதென்பது, சேவையைச்செய்து நிறைவை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே கைகூடும் வரிகளாகும். வாழ்த்துகள் திரு.யுவகிருஷ்ணா. நம்பிக்கையூட்டும் பதிவு!

    பதிலளிநீக்கு
  2. சேவை ஒரு தொற்று நோய்..

    க்ளாஸ்ங்க...

    கார்த்தீபன் என் நெஞ்சில் எங்கோ உயர்ந்து நிற்கிறார்..

    மனுசன்னா இப்படி இருக்கணும்.. நல்ல அறிமுகம்.. :-)

    பதிலளிநீக்கு
  3. அசத்தலான மேட்டர்களை எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ... ஆச்சரியமாக இருக்கிறது! அருமையான கட்டுரை! ‘கற்பவன்’ சொன்ன பின்னூட்ட வரிகளை நானும் ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. யுகி

    வழக்கம் போல் நம்பிக்கை தொடர். பாராட்டுகள் பல.
    எவரெஸ்ட்க்கு இணைய தளம் உள்ளதா?

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  5. நல்ல செய்தி தலைவரே ............ நன்றி

    பதிலளிநீக்கு
  6. //இந்தியாவில் இல்லாமை என்ற சொல்லே எதிர்காலத்தில் இருக்காது// 100%

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. Lucky,

    Thanks for highlighting Everest's grt work here.

    I am proud that kartheeban is my colleague..He is an active Cognizant employee who is doing lots of activity via his corporate n other frds.

    பதிலளிநீக்கு
  8. My Salute to Karthiban and Everest team. My best wishes to yuvakrishna for this fabulous introduction.

    பதிலளிநீக்கு
  9. ////“வெளிநாட்டுக்கு போனால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். எனக்கு இங்கே கிடைக்கும் இருபதாயிரமே போதும். என் சமூகத்தோடு, என் மக்களோடு, என் நாட்டில் வாழ்வதே எனக்கு திருப்தி. பணம் சம்பாதிப்பது நிம்மதிக்குதானே? அது இங்கு கிடைக்காமல் வேறு எங்கு கிடைக்கும்?” ////

    உண்மைதான்.எல்லாருக்குமே இப்படி தோன்றுவதில்லை. இப்படி தோணும் சிலரில் அடியேனும் ஒருவன். ஆனா, return2india எப்ப நிறைவேறும்னுதான் தெரியல்லை.
    ஹ்ம் :)

    பதிலளிநீக்கு
  10. மென்பொருள் மக்களின் பாசிட்டிவ் பக்கத்தையும் எழுதிட்டீங்க அண்ணா. மிக்க மகிழ்ச்சி. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
  11. Nalla Katturai. Katturaiyin moto will be achieved.

    பதிலளிநீக்கு