18 ஜனவரி, 2010

ஆலத்தூர் காந்தி!


96ஆம் ஆண்டு காலவாக்கில் நடந்த விஷயங்கள் அவை.

திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? வழிநெடுக நிறைய செங்கல்சூளைகளை கண்டிருக்கலாம். அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இந்த சூளைகளில் வேலை பார்ப்பார்கள். அவற்றில் பாதி பேர் குழந்தைத் தொழிலாளர்கள். அருகிலிருந்த சேவாலயா போன்ற அமைப்புகள் இக்குழந்தைத் தொழிலாளர்களை மீண்டும் கல்வி கற்கச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

பிரச்சினை இப்படியிருக்க, செங்கல் சூளைகளால் அடுத்து ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அது சுற்றுச்சூழல்.

சூளைகளை எரியவைக்க அதுவரை விறகுகளை பயன்படுத்தி வந்த முதலாளிகள், தயாரிப்புச் செலவை குறைக்க க்ரூட் ஆயில் எனப்படும் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் அப்பகுதியின் நிலத்தடி நீர் கெட துவங்கியது. கரும்புகை சூழ்ந்து காற்றில் கலப்படம் ஏற்பட்டது. கிராமத்தவர்கள் பலரும் உடல்நலம் குன்றத் தொடங்கினார்கள்.

தங்கள் கிராமங்கள் மாசுபடுவதை அப்பகுதி இளைஞர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இளைஞர் மன்றம், சிறுவர் மன்றம் என்று அமைப்புகளை உருவாக்கி ஒருங்கிணைந்து போராட முடிவெடுத்தார்கள். சேவாலயா, எக்ஸ்னோரா போன்ற தன்னார்வு அமைப்புகள் இளைஞர்களின் போராட்டங்களுக்கு ஆதரவுதர, செங்கல் சூளைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிரான போராட்டம் களைகட்டத் தொடங்கியது.

தொடர்ச்சியான போராட்டங்களின் தீவிரம், செங்கல் சூளை முதலாளிகளை பின்வாங்க வைத்தது. சூளை நட்த்துவதற்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியவர்கள், கச்சா எண்ணெய் மூலம் எரிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இளைஞர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியது.

அடுத்ததாக, ஏரியில் மண் அள்ளும் பிரச்சினை. மூன்று அடி ஆழம் வரையே மண் அள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தும், ஏழு அடிக்கும் மேலாக தோண்டி மண்வளம் சுரண்டப்பட்டது. இதனால் விவசாயத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இம்முறை இளைஞர்கள் தங்கள் போராட்ட அணுகுமுறையை மாற்றிக் கொண்டார்கள். ஊரை காலி செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.

இவ்வாறாக ஒவ்வொரு பிரச்சினைக்கும் விதவிதமான போராட்டங்கள். சில வெற்றியடைந்தால், பல நசுக்கப்பட்டது. வெற்றிகளின்போது மகிழ்ச்சி அடைந்தவர்கள், தோல்வி அடையும்போது விரக்தி அடைவதும் இயல்புதானே?

“எவ்வளவு காலத்துக்குதான் போராடிக் கொண்டே இருப்பது? எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய கிராமம் தன்னிறைவு அடைவது எப்போது?” என்றொரு சிந்தனை இளைஞர்களிடையே எழுந்தது. இந்த இளைஞர்களில் ஒருவரான சாரதி, அப்போது தொண்டு நிறுவனமான சேவாலயாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த மனமாற்றத்துக்கு அவர் படித்த எம்.ஏ., (காந்திய சிந்தனைகள்) கல்வியும் ஒரு காரணம். போராட்டங்கள் போதும் என்று முடிவெடுத்தார்கள் ஆலத்தூர் இளைஞர்கள். போராட்டங்களை நிறுத்தியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை செயல்பாடுகள் மூலமாக சரிசெய்ய முன்வந்தார்கள்.

2004ஆம் ஆண்டு ‘உதவும் நண்பர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவித்தார்கள். பதிவு பெற்ற அமைப்பான உதவும் நண்பர்கள் கிராமப்பகுதி கல்வி, பொருளாதார முன்னேற்றம், சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, விளையாட்டு, விவசாயம் உள்ளிட்ட கிராம மேம்பாட்டு திட்டங்களை, கிராம மக்களின் பங்களிப்போடு இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

சாரதிக்கு இப்போது வயது 40. நிர்வாக அறங்காவலராக இவ்வமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றுகிறார். கோதண்டன், மனோகரன், மதுரை, பிரகாசம், சிவக்குமார், செல்வகுமார், செந்தில்குமார், ராகவேந்திரன் என்று எட்டு இளைஞர்கள் அறங்காவலர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எட்டு பேருமே 96 போராட்டங்களின் போது சிறுவர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்கள்.

‘கனவு இந்தியா’ என்ற அமைப்பினைச் சார்ந்த நடராஜன் என்ற நண்பர் மூலமாக சாரதி நமக்கு அறிமுகமானார். சுளீர் வெயில் அடித்த ஒரு நாளில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் சாரதியை சந்தித்தோம். வெள்ளை கதர் ஜிப்பா, கதர் வேட்டியென்று அச்சு அசலாக ஒரு காந்தியவாதியின் தோற்றம். மீசைவைத்த சிறுவயது காந்தியைப் போலவே இருக்கிறார்.

கிராம முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர், சேவை தடைபட்டுவிடக் கூடாது என்று திருமணம் செய்துக் கொள்வதை தவிர்த்து விட்டார். விவசாயத் தொழில் புரிந்துவரும் சாரதி, உதவும் நண்பர்களின் முழுநேரப் பணியாளர். இவருக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. சகோதரனின் சேவையார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணமாக பதினைந்து செண்ட் இடத்தோடு கூடிய தங்களது பரம்பரை இல்லத்தை ‘உதவும் நண்பர்கள்’ அமைப்புக்கு எழுதி வைத்து விட்டார்கள்.

சாரதியும், அவரது அமைப்பும் இந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? ஆலத்தூருக்குப் போய் பார்ப்போமா?

* யாருக்காவது அவசரத்துக்கு இரத்தம் தேவைப்பட்டால் உடனே ஆலத்தூருக்கு போன் போடலாம். ஊரே இரத்த தானத்துக்கு இரத்தப் பிரிவு வாரியாக தங்களை தானம் செய்து வருகிறது. இதுவரை ஐந்துபேர் கண்தானமும் செய்திருக்கிறார்கள்.

* ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்று உருவாக்கி நடத்தி வருகிறார்கள். பெற்றோர் இல்லாத ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை இலவசம். சுமார் இருபது குழந்தைகள் இப்போது இல்லத்தில் பரமாரிக்கப் படுகிறார்கள்.

* காமராஜர் பெயரில் மாலைநேரக் கல்விமையம் ஒன்று செயல்படுகிறது. ஆலத்தூர், மேட்டுத்தும்பூர், எடப்பாளையம், பள்ளத்தும்பூர் என்று நான்கு இடங்களில் மாணவர்களுக்கு மாலையில் கல்வி போதிக்கப்படுகிறது. இந்த நான்கு ஊர்களிலும் ஒட்டுமொத்தமாக 320 குழந்தைகள் பயனடைகிறார்கள். இவர்களுக்கு கல்வி மட்டுமன்றி பேச்சு ஆங்கிலம், கம்ப்யூட்டர், தியானம், யோகா என்று பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தன்னார்வ அமைப்புகள் மூலமாக இக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், சீருடைகளும் இலவசமாகவே பெற்றுத் தரப்படுகிறது.

* விவேகானந்தர் பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் 30 பேர் கம்ப்யூட்டர் கற்கலாம். அலுவலகப் பயன்பாட்டுக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை சொல்லித் தருகிறார்கள். இதுவரை நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பாரதியார் பெயரில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டும் உண்டு.

* காலையிலும், மாலையிலும் சமைப்பதுதான் வேலைக்கு செல்லாத கிராமத்து மகளிரின் வேலை. மீதி நேரம்? ஏதாவது வேலை பார்த்து சம்பாதிக்கலாம் இல்லையா? அதற்குதான் அன்னை தெரசா தையற்பயிற்சி மையம் நடக்கிறது. இங்கே பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இவர்களே ஏற்படுத்தித் தருகிறார்கள். எம்பிராய்டரிங் பயிற்சியும் உண்டு.

* இந்தியா சுடர், தி செவன் ஹெல்ப்பர்ஸ் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு, உதவும் நண்பர்களுக்கு நல்ல நெருக்கம் உண்டு. இதுபோன்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று உயர்கல்வி படிப்பதற்கான கல்லூரிக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

* உடல் ஊனமுற்றோருக்கு அறுவைசிகிச்சை, செயற்கை உறுப்புகள் பொறுத்துதல் போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்களை அணுகி செய்துத் தருகிறார்கள். அரசின் உதவி யாருக்காவது தேவைப்படின், அதையும் செய்து கொடுக்கிறார்கள்.

* கால்நடை, விவசாயம், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறுதொழில் பயிற்சி மற்றும் இளைஞர்களுக்கு ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி என்று ஏராளமான பயிற்சிப் பட்டறைகள் அடிக்கடி நடத்தப்படுகிறது.

* இப்போது ஐந்தரை லட்சம் ரூபாய் செலவில் தங்களுக்கென ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார்கள். இங்கே தாங்களே மருத்துவர்களை பணிக்கு அமர்த்தி குறைந்த செலவில் தங்கள் மருத்துவ தேவைகளை ஈடுசெய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இன்னமும் தேவையான பணம் கிடைக்காததால் இப்பணி பாதியில் நிற்கிறது. ஐந்தரை கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை தங்கள் பகுதியில் நிறுவி, மாவட்டத்துக்கே இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது இக்கிராம மக்களின் இலட்சியம்.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கண்ட சேவைகள் அனைத்துமே இலவசம்.

“நமக்கு நாமே என்பது மாதிரி எங்களுக்கு தேவையான விஷயங்களை நாங்களே செய்துக்கொள்கிறோம். இதற்கான திட்டங்களை தீட்டவும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும் கிராம வளர்ச்சி மன்றம் ஒன்றை தோற்றுவித்திருக்கிறோம். எங்கள் கிராமம் தன்னிறைவு அடைய மக்களின் பங்கேற்போடு, தன்னார்வலர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறோம். சுயராஜ்ய கிராமம் என்பதே எங்கள் இலட்சியம்” என்கிறார் சாரதி.
மகாத்மா காந்தியின் கனவு தன்னிறைவு பெற்ற கிராமங்கள். ஆலத்தூர் போன்ற கிராமங்களும், சாரதி போன்ற இளைஞர்களும் காந்தியின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை பலப்படுகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

லோக்கல் அரசியல்வாதிகளின் ஆதரவு இவர்களுக்கு நிறைய இருக்கிறது. ஊராட்சிமன்றத் தலைவரான ஏழுமலை ஒருமுறை தன்னுடைய வக்கீல் நண்பரை பார்க்கச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு தம்பதிகள் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கள் சொத்தினை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துக்கு எழுதித்தர வந்திருந்தார்கள்.

அவர்களிடம் தங்கள் கிராம அமைப்பான உதவும் நண்பர்களை பற்றி பேசியிருக்கிறார் ஏழுமலை. இவர்களது செயல்பாடுகளால் கவரப்பட்ட அத்தம்பதிகள் தங்கள் சொத்தினை உதவும் நண்பர்கள் பெயரில் எழுதிவைத்து விட்டார்கள்.

கொடுமை என்னவென்றால், உயில் எழுதி வைத்த மறுநாளே பிரகாஷ் – கோமளவள்ளி தம்பதிகள் ஏதோ பிரச்சினையில் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலைக்கு முன்பாக ஒரு நல்ல காரியம் செய்யவே தங்கள் சொத்தினை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு போய்விட்டார்கள் என்று சோகமாக சொல்லுகிறார்கள் ஆலத்தூர் கிராமவாசிகள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

உதவும் நண்பர்களை தொடர்புகொள்ள :
1/30, பஜனைக் கோவில் தெரு,”
ஆலத்தூர் கிராமம், பாலவேடு அஞ்சல்,
சென்னை – 55.
போன் : 9444511057

(நன்றி : புதிய தலைமுறை)

7 கருத்துகள்:

  1. நல்ல அறிமுகம். மனிதநேய எண்ணத்தை ஊக்குவிக்கும்படி உள்ளது. மனமும் பணமும் இருப்பவர்கள், இப்பதிவுகண்டு, உதவிட முன்வருவார்கள்!

    பதிலளிநீக்கு
  2. Where you got all the news Boss?

    You are also equal to Mr. sarathi, in my Opinion.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9:39 AM, ஜனவரி 19, 2010

    செல்வாவின் “ஆயிரத்தில் ஒருவன்” விமர்சனம் இன்னும் எழுதாமல் இருப்பதற்கு ஏதனும் நுண்ணரசியல் காரணம் உண்டா?

    பதிலளிநீக்கு
  4. நுண்ணரசியல் எதுவும் இல்லை அனானி. மர்மக்காய்ச்சலின் விளைவால் உடம்பில் தெம்பில்லை. திரும்ப திரும்ப அடி வாங்கணும் இல்லையா? அதுக்கு தெம்பு அவசியமில்லையா?

    பதிலளிநீக்கு
  5. குறிப்பிட்ட இப்பதிவுக்கு தொடர்பில்லாத விவாதங்களை, இந்தப்பகுதியில் ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது.
    பொது கருத்துகளுக்கெனவும், பிற கலந்துரையாடல்களுக்கும் என்று ஒரு தனிப்பகுதியை இத்தளத்திலேயே நிறுவி, அவற்றை அங்கு நிகழ்த்தலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.
    காந்தியின் வழியில் பணியாற்றிவருபவரைப்பற்றி எத்தகைய பின்னூட்டங்கள் வந்துள்ளன என்ற ஆவலில் இங்கே வந்தால், ஆயிரத்தில் ஒருவன் பற்றி பேசி சலிப்பூட்டுகின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கற்பவன்.

    இதுபோன்ற பின்னூட்டங்களை பொதுவாக வெளியிடாததால் எனக்கு கெட்ட பதிவன் என்ற இமேஜ் இருக்கிறது. அதனாலேயே வெளியிட்டு தொலைத்துவிட்டேன். இனிமேல் வெளியிடுவதில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நல்லொண்ணம் படைத்தவர், இறைவன் உற்று பார்த்துகொண்டு இருப்பர்..

    பதிலளிநீக்கு