'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை வாசித்த வாசகர் ஒருவர் ‘டிவி விளம்பரங்கள் தயாரிப்பது எப்படி?' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவரது தொலைபேசி எண்ணும் மடலில் இருந்ததால், தொலைபேசினேன். சினிமா போலவே இதற்கும் ஸ்க்ரிப்ட் எழுத வேண்டும் என்று சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.
ஒவ்வொரு ஏஜென்ஸியிலும் ஒவ்வொரு முறையில் ஸ்க்ரிப்ட் எழுதுவார்கள். இதற்காக காப்பிரைட்டர்கள் பணிக்கு அமர்த்தப் பட்டிருப்பார்கள். சினிமாவில் க்தை, திரைக்கதை, வசனம் எழுத ஒருவர் இருப்பார் இல்லையா? கிட்டத்தட்ட அதே பணியை காப்பிரைட்டர்கள் விளம்பரத்துக்கு செய்தாக வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்துக்கும் நான்கு, ஐந்து தீம்கள் எல்லாக் கோணத்திலும் அலசி பொதுவாக உருவாக்கப்படும்.
விளம்பரத்துக்கு எழுதுவதெல்லாம் பிரம்ம சூத்திரமல்ல. ஆனாலும் ஏனோ சிதம்பர ரகசியம் மாதிரி பொத்தி பொத்தியே மற்றவர்களுக்கு பெரிய பிரமிப்பினை ஏற்படுத்துகிறார்கள். நான் ஃப்ரீலான்சராக பணியாற்றியபோது ஒரு ஏஜென்ஸிக்கு கொடுத்த ஸ்க்ரிப்ட்டை கீழே தருகிறேன். இவ்வளவு சப்பை மேட்டரா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இது மட்டுமே விளம்பரத்தினை உருவாக்கும் முறையல்ல. ஆனால் இதுவும் ஒருமுறை. ஓரளவுக்கு கிரியேட்டிவாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் தரமான ஒரு விளம்பரத்தை உருவாக்கிவிட முடியும்.
ராஜ வைத்தியம்
Duration : 15 - 20 Seconds
Target Audience : 30 - 60 Age group (Particularly Megaserial audience)
Backdrop : அரசவை.
மந்திரிகள் புடைசூழ அரசர் அமர்ந்திருக்கிறார். நான்கு பேர் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட
சிம்மாசனங்களில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது உடை சாதாரண குடிமக்களின் உடை. முகத்தில் சோகம்.
மன்னர் பேசுகிறார் : குடிமக்களே உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை?
நால்வரும் தனித்தனியாக : “மன்னரே எனக்கு முடக்குவாதம், நடக்கவே இயலவில்லை.”
“மன்னா எனக்கு தீர்க்கமுடியாத தோல்வியாதி”
“அரசே எனக்கு ரகசிய நோய்”
“ராஜா எனக்கு மஞ்சக்காமாலை”
அரசர் எழுந்து : “தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்கத்தானே (நடந்தவாறே) உங்கள் ராஜா இருக்கிறேன்!” (கம்பீரமான குரலில்)
(நால்வருக்கும் அருகில் வரும் மன்னர் அவர்களை தொட்டு சிகிச்சை அளிக்கிறார்)
கருப்புத்திரையில் : நிஜமாகவே ராஜ வைத்தியம்! (வெள்ளையில் பெரிய எழுத்துக்கள்
வாய்ஸ் ஓவருடன்)
அடுத்த ப்ரேமிலும் வாய்ஸ் ஓவரோடு எழுத்துக்கள் தொடர்கிறது : வாதம், தோல் வியாதிகள், மஞ்சக்காமாலை, தீராத பாலியல் நோய்களுக்கு ராஜவைத்தியம்
நாங்கள் செய்கிறோம்.
மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்
பராமரிப்பு!
Duration : 20 - 30 Seconds
Target Audience : 25 - 65 Age group
Scene 1 : நடுரோட்டில் நடுத்தர வயதுடைய ஒருவர் ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கிறார். ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை. நெற்றி வியர்வையை துடைத்து மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
Backdrop voice : “என்னாச்சி?”
மனிதர் திரையை நோக்கி : “போனமாசம் மெக்கானிக் கிட்டே சர்வீசுக்கு விடலை. ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணுது”
மீண்டும் உதைத்து ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கிறார்...
Scene 2 : தொட்டியில் வைக்கப்பட்ட ரோஜா செடி பட்டுப்போன நிலையில் இருக்கிறது. பின்னணியில் சோகமுகத்தோடு ஒரு இளம்பெண்.
Backdrop voice : “என்னாச்சி?”
பெண் திரையை நோக்கி : ஒரு வாரமா தண்ணி விடலை. செடி காஞ்சிடிச்சி..
மீண்டும் சோகமாக செடியை பார்க்கிறாள்.
Scene Fade out திரையில் எழுத்துக்கள் வாய்ஸ் ஓவரோடு : பராமரிப்பு இல்லாத எதிலுமே பழுது ஏற்படத்தான் செய்யும்
அடுத்த பிரேம் எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : நாங்கள் உடல்களை பராமரிப்பதோடு பழுதும் பார்க்கிறோம், உயிர்களை காக்கிறோம்
அடுத்த பிரேம் எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : வாதம், தோல் வியாதிகள், மஞ்சக்காமாலை மற்றும் தீராத பாலியல் நோய்களுக்கு நிச்சயத் தீர்வும் அளிக்கிறோம். பக்க விளைவுகளில்லாத சித்தமருத்துவ சிகிச்சை!
Scene 3 : வண்டியை ஸ்டார்ட் செய்து நடுத்தர வயது மனிதர் மகிழ்ச்சியோடு ஓட்டிச் செல்கிறார்.
Scene 4 : தொட்டியில் வைக்கப்பட்ட ரோஜா செடியில் இருமலர்கள் பூத்து குலுங்குகிறது. பின்னணியில் இளம்பெண்ணின் மலர்ச்சியான முகம்.
மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Duration : 20 - 30 Seconds
Target Audience : All
Opening : கருப்பு வெள்ளை ஃபிலிம் ஸ்ட்ரிப்பில் அந்த காலத்து பாணியில் டைட்டில்- “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” - Montage Effect உடன் இசையும் பழைய திரைப்படங்களை நினைவுறுத்த வேண்டும்.
Scene 1 (Black & White) : ஹீரோ சிவாஜி போல உடை மற்றும் சிகை அலங்காரத்தோடு. ஹீரோவின் அம்மா (பண்டரிபாய் ஜாடையில்) தண்ணீர் குடம் சுமந்து செல்லும்போது சுமக்க முடியாமல் கீழே விழுகிறார். ஹீரோ கண்ணீர் விட்டு கதறி ஓவர் ரியாக்ட்டு செய்கிறார்.
Background Voice : அம்மாவுக்கு வாதம்...
Scene 2 (Black & White) : தாவணி அணிந்த ஹீரோவின் தங்கை கழுத்தையும், முதுகையும் தொடர்ந்து சொறிந்து கொள்கிறாள். அதைப் பார்த்த ஹீரோ வாயைப் பொத்திக் கொண்டு கதறுகிறார்.
Background Voice : தங்கைக்கு தோல்நோய்
Scene 3 (Black & White) : ஹீரோவின் அப்பா கயிற்று கட்டிலில் சோர்வாக படுத்திருக்கிறார். கண்களில் கண்ணீரோடு ஹீரோவை பார்க்கிறார். ஹீரோ தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்.
Background Voice : அப்பாவுக்கு மஞ்சள் காமாலை
Scene 4 (Black & White) : ஹீரோவின் தம்பி தூக்குக் கயிறை மாட்டிக் கொள்ளப் போகிறான். ஹீரோ ஓடிவந்து தடுக்கிறார். தரையில் புரண்டு புரண்டு அழுகிறார்.
Background Voice : ஏடாகூடமான தம்பிக்கு பால்வினை நோய்
(எல்லா காட்சிகளுக்குமே பின்னணியில் பயங்கர சோக இசை)
Background Voice (கருப்பு திரையில் வெள்ளை எழுத்து) : அய்யோ பாவம். குடும்பமே நோயில் மூழ்கிக் கிடக்க ஹீரோ என்னதான் செய்வார்?
Next Frame : எங்கள் மருத்துவமனைக்கு வருவார்.
Background Voice பக்கவிளைவில்லாத பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை உற்சாகமாக எல்லா நோய்களுக்கும் நிச்சய தீர்வு!
மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்
அடுத்த ப்ரேமில் வண்ணத்தில் ஹீரோவின் குடும்ப போட்டோ. எல்லோரும் மகிழ்ச்சியாக நோய்தீர்ந்து காணப்படுகிறார்கள்.
சஞ்சீவினி
Duration : 20 - 30 Seconds
Target Audience : All
Opening : ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வந்து ஒரு மருத்துவரிடம் தருகிறார். மருத்துவர் அந்த மலையில் முளைத்திருக்கும் மூலிகைச் செடியிலிருந்து சில இலைகளை பறித்து, அரைக்கிறார்.
Background Voice : மூலிகை என்பது வெறும் செடியல்ல. நம் உயிர்காக்கும் மாமருந்து.
Blank Screen எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : பாரதத்தின் பாரம்பரியத்தை நாங்கள் மறக்கவில்லை. பக்கவிளைவில்லாத பாரம்பரிய சிகிச்சை முறைகளையே அளிக்கிறோம்.
அடுத்த பிரேம் எழுத்துக்களோடு வாய்ஸ் ஓவர் : வாதம், தோல் வியாதிகள், மஞ்சக்காமாலை மற்றும் தீராத பாலியல் நோய்களுக்கு நிச்சயத் தீர்வும் அளிக்கிறோம்.
மெல்லிய பின்னணி இசையோடு சிக்னேச்சர் : ராஜா சித்த மருத்துவமனை, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் இணையதளம்
இதுதான் விளம்பரம் உருவாக்குவதற்கான ஸ்க்ரிப்ட். இதில் ஒன்றோ, இரண்டோ க்ளையண்டால் அப்ரூவ் செய்யப்படும் பட்சத்தில் ‘ஸ்டோரி போர்டு' என்ற அடுத்தக் கட்டத்துக்கு நகரும். இதெல்லாம் தேவைப்படாமலேயே உப்புமா விளம்பரங்களையும் உருவாக்க முடியும். எல்லாமே துட்டின் அடிப்படையில்.
நீங்களும் ஏதாவது கற்பனை பிராடக்டுக்கு இதுபோல ஸ்க்ரிப்ட் எழுதிப் பழகலாம். மேலும் டெக்னிக்குகளை தெரிந்துகொள்ள, ஹி.. ஹி.. மேலே உள்ள புத்தகத்தை வாங்கவும்!
நன்று!
பதிலளிநீக்குபுத்தக விளம்பரமா கிருஷ்ணகுமார்? ஆகட்டும்!
பதிலளிநீக்கு""ஹீரோ சிவாஜி போல உடை மற்றும் சிகை அலங்காரத்தோடு""-ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதுவார்களோ?
thanks yuva
பதிலளிநீக்கு