29 ஜனவரி, 2010

'தீ ' வளர்த்தவன்!


வாழ்வில் மறக்க முடியாத தினங்கள் என்று சில தினங்கள் எல்லோருக்கும் உண்டு. பிறந்தநாள், திருமணநாள், குழந்தை பிறந்தநாள், நெருங்கியவர்களின் மறைவுநாள் என்று முக்கிய தினங்களின் தேதிப்பட்டியல் ஒவ்வொருவருக்கும் வெகுநீளம். சனவரி 29 எனக்கு மறக்கமுடியாத ஒரு தினமாகிப் போனது, உலகத் தமிழர்களை உலுக்கிய அந்த மாபெரும் தியாகத்தால், சோகத்தால். எனக்கு மட்டுமல்ல, பலரும் மறக்க இயலாத தினம் அது. உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள்.

2009இ சனவரி 29 எனக்கு சோம்பலானதாய் விடிந்தது. உடல்நலம் சற்று குன்றியிருந்தேன். பணிக்குச் செல்ல சோம்பலாக இருந்தது. பத்தரை அல்லது பதினோரு மணியிருக்கலாம். என் கைப்பேசி கிணுகிணுத்தது. ஒரு தமிழ் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய அண்ணன் பாலபாரதி அழைத்திருந்தார்.

பதட்டமான குரலில் “டேய் தம்பிஇ ‘பெண்ணே நீ’யிலே வேலை பார்க்குற முத்து செத்துட்டாண்டா!”

“எந்த முத்துண்ணே?” அதிர்ச்சியோடு கேட்டேன். அப் பத்திரிகையில் எனக்கு இரண்டு முத்து தெரியும். ஒருவர் உதவியாசிரியர் முத்துசூர்யா. அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. இன்னொருவர் லே-அவுட்டில் பணிபுரிந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்பாகதான் ஒரு தினப்பத்திரிகையிலிருந்து விலகி வந்து, இங்கே பணியில் இணைந்திருந்தார்.

பாலபாரதி எனக்கு பேசியதற்கு காரணமிருந்தது. அப்போது நான் ‘பெண்ணே நீ’யில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தேன். வாரம் ஒருமுறையாவது அங்கே பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும்.

“எந்த முத்துன்னு எனக்கெப்படி தெரியும். சாஸ்திரி பவன் வாசல்லே ஈழத்தமிழருக்காக தீக்குளிச்சிட்டான். என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு திரும்ப பேசு” என்றார்.

கவுதம் சாருக்கு பேசினேன். அவர் திண்டுக்கல்லில் இருந்தார். பெண்ணே நீ பத்திரிகையின் ஆலோசகர். “ஆமாண்டா. லே-அவுட்டுலே வேலை பார்த்தானே, அவனேதான்! ஒரு ஹெல்ப் பண்ணு. உடனே பெண்ணே நீ ஆபிஸுக்கு போய் ரெக்கார்ட்ஸ்லே அவனோட பயோ-டேட்டா இருக்கும். அதுலே அவனோட போட்டோவும் இருக்கும். அதை எடுத்துட்டுப் போய் மக்கள்டிவியிலே சேர்த்துடு. பிரஸ்காரங்க போட்டோ கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எல்லாருக்கும் கொடுக்கணும். அதுக்கு முன்னாடி மேடம் கிட்டே பேசிடு!” என்றார். மேடம், பத்திரிகையின் ஆசிரியர்.

மேடமுக்கு பேசுவதற்கு முன்பாக பாலபாரதிக்கு பேசினேன். ‘எந்த முத்து’ என்று உறுதி செய்தேன். எனக்குத் தெரிந்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டேன். மேடமிடம் பேசியபோது மறுமுனையில் விசும்பிக் கொண்டிருந்தார். “இந்தப் பையன் இப்படிப் பண்ணிட்டானே? நெனைச்சுக் கூடப்பார்க்கலையே” என்று திரும்ப திரும்ப அழுதவாறே சொல்லிக் கொண்டிருந்தார். கோபாலபுரம் ‘பெண்ணே நீ’ அலுவலகத்துக்கு செல்ல பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

முத்துக்குமார் ‘பெண்ணே நீ’ பத்திரிகைக்கு விண்ணப்பித்தபோது, அவரிடம் நேர்காணல் நடத்தியவர் கவுதம் சார். பயோ-டேட்டாவில் தன்னைப் பற்றி விசாரிக்க ‘நிழல்’ திருநாவுக்கரசு முகவரியை கொடுத்திருந்தார். ‘நிழல்’ அமைப்பு மூலமாக சிறுபடங்களையும், ஆவணப்படங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பணியை செய்துகொண்டிருப்பவர் திருநாவுக்கரசு. ‘நல்ல பையன். சினிமாவிலே இயக்குனர் ஆகணும்ங்கிற கனவோட இருக்கான்’ என்று திருநாவுக்கரசு முத்துக்குமாருக்கு சான்று கொடுத்ததன் அடிப்படையில் பத்திரிகைக்கு முத்து சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2008 நவம்பரில் பணிக்கு சேர்ந்தார் என்பதாக நினைவு. அவரது குடும்பப் பின்னணி அப்போதைக்கு யாருக்கும் பெரியதாக தெரியாது. ‘அவரது அப்பாவோடு ஏதோ பிரச்சினை’ என்ற அளவுக்கு மட்டுமே தெரியும். கொளத்தூரில் இருந்து தினமும் பேருந்தில் பணிக்கு வருவார்.

பத்திரிகை அலுவலகங்கள் பொதுவாக சோம்பலோடு பத்து, பத்தரை மணிக்குதான் விழிக்கும் என்றாலும், காலை 9.30க்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவார். வருகைப் பதிவேடில் ‘கு.மு’ என்று தமிழில் கையெழுத்திடுவார். வேலை தொடங்குவதற்கு முன்பே சீக்கிரம் வர அவருக்கு ஒரு காரணம் இருந்தது. இணையத்தில் செய்தித்தாள்களை வாசிப்பார்.

கூகிளில் வித்தியாசமான விஷயங்களை தேடுவார். ‘நீருக்கு அடியில் சுவாசிக்க என்னென்ன உபகரணங்கள் இருக்கிறது?’ என்பதுபோல வித்தியாசமான தேடுதல்கள். எதையாவது தேடிக்கொண்டேயிருந்த தேடல்மிக்க இளைஞர். மாநிறம், சராசரித் தோற்றம். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட பேசமாட்டார். முதன்முறை பார்ப்பவர்கள் அவரை ஒரு உம்மணாம்மூஞ்சியாகவே கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முழுமையாக வாசிக்க, இங்கே சுட்டவும்....

8 கருத்துகள்:

  1. படிக்கும் போதே கண்ணு கலங்குது.

    இதயப்பூர்வமான அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் அந்த தியாக உள்ளத்திற்கு..!
    :-(((

    பதிலளிநீக்கு
  2. இன்று காலை, சுமார் 10 மணியளவில், கத்திப்பாரா மேம்பாலத்தின்மீது, முதலாமாண்டு நினைவு ஊர்வல ஊர்திகளிலிருந்து எழுந்த "மாவீரன் முத்துக்குமார்" என்ற தொடர்முழக்கம், அப்பகுதியில் பெரும் கவனஈர்ப்புக்குள்ளானது. அவரின் தியாகம் பொருள்படும் நாள் அங்கு புலர்ந்தே தீரும்!

    பதிலளிநீக்கு
  3. வீர வணக்ககம், வீர வணக்ககம்...

    பதிலளிநீக்கு
  4. //....உலகத் தமிழர்களை உலுக்கிய அந்த மாபெரும் தியாகத்தால்...//

    -----தற்கொலை செய்து கொள்வது தியாகமா?

    அல்லது....

    இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்தோருக்கும் எதிராய் எவ்வகையிலேனும் புஜம் காட்டி போராடுதல் வீரம் அல்லவா? அதில் தன் உடமை, சொந்தம், இன்னுயிர் துறந்தால் அதுவன்றோ தியாகம்.?
    &
    அது முடியவில்லை எனில், உயிருடன் இருந்து ஆக்கப்பூர்வமாக தன் இலட்சியம் மெய்ப்படவேண்டி அல்லும் பகலும் அயராது தன் சொல்லால்-எழுத்தால் பாடுபடுதல் விவேகம் அல்லவா? அதில் தன் உடமை, சொந்தம், இன்னுயிர் துறந்தால் அதுவன்றோ தியாகம்.?

    இவற்றை புரட்சி என்று அனைவருக்கும் பின்பற்ற எடுத்துரைக்கலாம். அணிதிரட்டி புரட்சி செய்யலாம்.

    ஆனால்....

    முந்தையதை(தற்கொலை) செய்ய அறைகூவலிட முடியுமா? அவ்வளவு ஏன்? அச்செயலை வீரமாகவும் விவேகமாகவும் சிலாகிக்கும் வாய்ச்சொல்வீரர்கள் தாங்களும் அதே போன்ற 'வீர-விவேக தியாகத்தை' செய்ய முன்வருவார்களா?

    //உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள். //

    ---முட்டாள்த்தனமாய் தன் இன்னுயிர் எனும் உயிராயுதத்தை இழந்து அநீதி தலைதூக்க விட உதவி செய்யும் தமிழனை ஆக்கப்பூர்வமாக செயல் பட சிந்திக்க வைத்த பொன் நாள்தான் அது...!

    பதிலளிநீக்கு
  5. //-----தற்கொலை செய்து கொள்வது தியாகமா?//

    @UFO: இதை தற்கொலை என்று சொல்லும் போதே அதை பற்றிய குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாதவர் நீங்கள் என்பதை உணர முடிகிறது.

    முத்து குமார், உயிருக்கு பயந்து, அநீதிக்கு அஞ்சி, உணர்ச்சி வேகத்தில் உயிர் விட்டவர் அல்லர். அப்படி செய்திருந்தால் அது தான் தற்கொலை.

    மிக நிதானமாக யோசித்து, அணைத்து தரப்பு மக்களுக்கும் மிக சரியான யோசனைகளை எழுதி வைத்து விட்டு, தன்னுடைய அறிக்கையை அணைத்து மக்களிடத்தும் கொண்டு செல்லும் ஒரு கருவியாக தான் உயிரை அவர் பயன்படுத்தினார்.

    அவர் ஒரு துண்டு சீட்டில் இவற்றை அச்சச்சடித்து, தமிழகம் முழுவதும் சென்று விநியோகித்தாலும் எந்த பயனும் ஏற்பட்டிருக்காது. அதை தான் யுவ கிருஷ்ணா மிக சரியாக, "உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள்" என்று சொல்லியுள்ளார்.


    அவர் சொன்னது போன்று அவர் உடலை ஆயுதமாய் ஏந்தி போராடி இருந்தால் நிச்சயம் ஈழ போராட்டம் வேறு பாதையில் பயணித்திருக்கும்.

    சந்தர்ப்பவாதிகளிடம் நாம் தோற்று விட்டோம் :(

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:50 PM, ஜனவரி 30, 2010

    http://www.tamilnet.tv/index.php/tamil-nadu-man-sets-fire-on-himself?blog=1
    http://www.tamilnet.tv/index.php/indian-law-students-arrested?blog=1
    http://www.tamilnet.tv/index.php/toilet-nadu-elections?blog=1
    http://www.tamilnet.tv/index.php/tamil-dinosaur?blog=1

    பதிலளிநீக்கு
  7. @ திரு. அழகு செல்வன்...

    //அதை தான் யுவ கிருஷ்ணா மிக சரியாக, "உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள்" என்று சொல்லியுள்ளார்.//
    ---இது சரி என்பதற்கு செல்லும் முன்பு...

    1-மொழி:
    ஹிந்தித்திணிப்பை எதிர்த்து திருக்குவளை மு.கருணாநிதி என்ற இளைஞர் ஐம்பதுகளிலேயே நான்கு பக்கம் கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்து இறந்திருந்தால்...

    அவர் கலைஞர் ஆகி சாதித்தது நடந்திருக்குமா?

    2-இனம்:
    ஒடுக்கப்பட்ட சாதியினரின் மீது ஆதிக்க சாதி வெறியினரின் அத்துமீறல்களுக்கு எதிராய் ஈ.வே.ராமசாமி என்ற இளைஞர் இருபதுகளிலேயே நான்கு பக்கம் கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்து இறந்திருந்தால்...

    அவர் பெரியாராகி சாதித்தது நடந்திருக்குமா?

    சிந்திக்கவும்....

    //சந்தர்ப்பவாதிகளிடம் நாம் தோற்று விட்டோம் :(//

    அல்ல....!
    உண்மையில் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றது...
    பின்னாளில் எப்படியோ வந்து சாதித்திருக்க வேண்டிய முத்துகுமார் என்ற இளைஞர்தான்...!

    பதிலளிநீக்கு
  8. தலைவனுக்காக தீக்குளிக்கும் திராவிட கட்சிகளின் தொண்டர்களை பார்க்கும் அதே கண்ணோட்டத்தோடு முத்துக்குமாரையும் பார்ப்பவர்களிடம் வாதிடுவதில் அர்த்தமில்லை.முத்துக்குமாரின் மரணத்தால் தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்த உணர்வலைகளை அடக்க கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தது தமிழக அரசு.எது எப்படியோ நம் குடும்பம்,நம் வேலை என்னுடைய நல்வாழவு என்ற சுயநல சிந்தனைகளை தவிர சக மனிதனின் துயரத்தை துடைக்க ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத நம்மை போன்றவர்கள் முத்துக்குமார் இருந்து போராடி இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை அள்ளி வழங்குவது கேலிக்கூத்து.முத்துக்குமார் தனது மரணத்தின் மூலம் எதையும் சாதிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் இந்த உலகத்தில் சக மனிதனின் துன்பம் கண்டு பொறுக்காமல் உயிரை விடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.தன் வீட்டில் அடுத்த வேளை உணவிற்கு வழி இல்லாத நிலையில் கூட ஃபிஜி தீவின் கரும்பு தோட்டங்களில் அல்லல்பட்ட தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய பாரதியின் வழியில் வந்தவர் முத்துக்குமார்.

    பதிலளிநீக்கு