29 ஜனவரி, 2010

'தீ ' வளர்த்தவன்!


வாழ்வில் மறக்க முடியாத தினங்கள் என்று சில தினங்கள் எல்லோருக்கும் உண்டு. பிறந்தநாள், திருமணநாள், குழந்தை பிறந்தநாள், நெருங்கியவர்களின் மறைவுநாள் என்று முக்கிய தினங்களின் தேதிப்பட்டியல் ஒவ்வொருவருக்கும் வெகுநீளம். சனவரி 29 எனக்கு மறக்கமுடியாத ஒரு தினமாகிப் போனது, உலகத் தமிழர்களை உலுக்கிய அந்த மாபெரும் தியாகத்தால், சோகத்தால். எனக்கு மட்டுமல்ல, பலரும் மறக்க இயலாத தினம் அது. உலகிலேயே மொழிக்காக, இனத்துக்காக உயிராயுதம் ஏந்துபவன் தமிழன் என்பதை மீண்டும் நிரூபித்த நாள்.

2009இ சனவரி 29 எனக்கு சோம்பலானதாய் விடிந்தது. உடல்நலம் சற்று குன்றியிருந்தேன். பணிக்குச் செல்ல சோம்பலாக இருந்தது. பத்தரை அல்லது பதினோரு மணியிருக்கலாம். என் கைப்பேசி கிணுகிணுத்தது. ஒரு தமிழ் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய அண்ணன் பாலபாரதி அழைத்திருந்தார்.

பதட்டமான குரலில் “டேய் தம்பிஇ ‘பெண்ணே நீ’யிலே வேலை பார்க்குற முத்து செத்துட்டாண்டா!”

“எந்த முத்துண்ணே?” அதிர்ச்சியோடு கேட்டேன். அப் பத்திரிகையில் எனக்கு இரண்டு முத்து தெரியும். ஒருவர் உதவியாசிரியர் முத்துசூர்யா. அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. இன்னொருவர் லே-அவுட்டில் பணிபுரிந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்பாகதான் ஒரு தினப்பத்திரிகையிலிருந்து விலகி வந்து, இங்கே பணியில் இணைந்திருந்தார்.

பாலபாரதி எனக்கு பேசியதற்கு காரணமிருந்தது. அப்போது நான் ‘பெண்ணே நீ’யில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தேன். வாரம் ஒருமுறையாவது அங்கே பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருக்கும்.

“எந்த முத்துன்னு எனக்கெப்படி தெரியும். சாஸ்திரி பவன் வாசல்லே ஈழத்தமிழருக்காக தீக்குளிச்சிட்டான். என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு திரும்ப பேசு” என்றார்.

கவுதம் சாருக்கு பேசினேன். அவர் திண்டுக்கல்லில் இருந்தார். பெண்ணே நீ பத்திரிகையின் ஆலோசகர். “ஆமாண்டா. லே-அவுட்டுலே வேலை பார்த்தானே, அவனேதான்! ஒரு ஹெல்ப் பண்ணு. உடனே பெண்ணே நீ ஆபிஸுக்கு போய் ரெக்கார்ட்ஸ்லே அவனோட பயோ-டேட்டா இருக்கும். அதுலே அவனோட போட்டோவும் இருக்கும். அதை எடுத்துட்டுப் போய் மக்கள்டிவியிலே சேர்த்துடு. பிரஸ்காரங்க போட்டோ கேட்டு தொல்லை பண்ணுவாங்க. எல்லாருக்கும் கொடுக்கணும். அதுக்கு முன்னாடி மேடம் கிட்டே பேசிடு!” என்றார். மேடம், பத்திரிகையின் ஆசிரியர்.

மேடமுக்கு பேசுவதற்கு முன்பாக பாலபாரதிக்கு பேசினேன். ‘எந்த முத்து’ என்று உறுதி செய்தேன். எனக்குத் தெரிந்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டேன். மேடமிடம் பேசியபோது மறுமுனையில் விசும்பிக் கொண்டிருந்தார். “இந்தப் பையன் இப்படிப் பண்ணிட்டானே? நெனைச்சுக் கூடப்பார்க்கலையே” என்று திரும்ப திரும்ப அழுதவாறே சொல்லிக் கொண்டிருந்தார். கோபாலபுரம் ‘பெண்ணே நீ’ அலுவலகத்துக்கு செல்ல பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

முத்துக்குமார் ‘பெண்ணே நீ’ பத்திரிகைக்கு விண்ணப்பித்தபோது, அவரிடம் நேர்காணல் நடத்தியவர் கவுதம் சார். பயோ-டேட்டாவில் தன்னைப் பற்றி விசாரிக்க ‘நிழல்’ திருநாவுக்கரசு முகவரியை கொடுத்திருந்தார். ‘நிழல்’ அமைப்பு மூலமாக சிறுபடங்களையும், ஆவணப்படங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பணியை செய்துகொண்டிருப்பவர் திருநாவுக்கரசு. ‘நல்ல பையன். சினிமாவிலே இயக்குனர் ஆகணும்ங்கிற கனவோட இருக்கான்’ என்று திருநாவுக்கரசு முத்துக்குமாருக்கு சான்று கொடுத்ததன் அடிப்படையில் பத்திரிகைக்கு முத்து சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

2008 நவம்பரில் பணிக்கு சேர்ந்தார் என்பதாக நினைவு. அவரது குடும்பப் பின்னணி அப்போதைக்கு யாருக்கும் பெரியதாக தெரியாது. ‘அவரது அப்பாவோடு ஏதோ பிரச்சினை’ என்ற அளவுக்கு மட்டுமே தெரியும். கொளத்தூரில் இருந்து தினமும் பேருந்தில் பணிக்கு வருவார்.

பத்திரிகை அலுவலகங்கள் பொதுவாக சோம்பலோடு பத்து, பத்தரை மணிக்குதான் விழிக்கும் என்றாலும், காலை 9.30க்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவார். வருகைப் பதிவேடில் ‘கு.மு’ என்று தமிழில் கையெழுத்திடுவார். வேலை தொடங்குவதற்கு முன்பே சீக்கிரம் வர அவருக்கு ஒரு காரணம் இருந்தது. இணையத்தில் செய்தித்தாள்களை வாசிப்பார்.

கூகிளில் வித்தியாசமான விஷயங்களை தேடுவார். ‘நீருக்கு அடியில் சுவாசிக்க என்னென்ன உபகரணங்கள் இருக்கிறது?’ என்பதுபோல வித்தியாசமான தேடுதல்கள். எதையாவது தேடிக்கொண்டேயிருந்த தேடல்மிக்க இளைஞர். மாநிறம், சராசரித் தோற்றம். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட பேசமாட்டார். முதன்முறை பார்ப்பவர்கள் அவரை ஒரு உம்மணாம்மூஞ்சியாகவே கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முழுமையாக வாசிக்க, இங்கே சுட்டவும்....

28 ஜனவரி, 2010

பேரு பெத்த பேரு!!

சினிமாவில் பெயர் வாங்குவது என்பது பெரிய விஷயம். இப்பதிவு அந்த பெயர் பற்றியல்ல, ஒவ்வொருவரையும் அழைக்கும் பெயர் பற்றியது. 'பக்கோடா' காதர், 'ஓமக்குச்சி' நரசிம்மன், 'படாபட்' ஜெயலஷ்மி என்று தமிழ் சினிமா கலைஞர்களின் பெயர்கள் அமைந்த விதம் நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அதுபோன்ற சில காரணப்பெயர்களின் காரணங்களை பார்ப்போமா?

'மவுனம்' ரவி - மவுனம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவர். அதனால் இவரோடு மவுனம் ஒட்டிக் கொண்டது.

'வெண்ணிற ஆடை' மூர்த்தி - இவர் நடித்த முதல் திரைப்படம் என்பதால் வெண்ணிற ஆடை இவர் பெயரின் மீது போர்த்தப்பட்டு விட்டது.

'மேஜர்' சுந்தரராஜன் - மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்ததால் ராணுவத்தில் பணிபுரியாமலேயே மேஜர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது இந்திய இராணுவத்துக்கு தெரியுமா என்று தெரியாது.

'குமரி' முத்து - சொந்தப் பெயர் முத்து. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் குமரி முத்து.

'மலேசியா' வாசுதேவன் - மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆனதால்.

'பக்கோடா' காதர் - மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் எப்போதும் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

'என்னத்த' கன்னையா - ‘நான்’ படத்தில் எப்போதும் "என்னத்தைச் செஞ்சி" என்று எப்போதும் சலித்துக் கொள்ளுவார். இன்றளவும் அவர் இந்த "என்னத்தை" விடவில்லை.

'சூப்பர்' சுப்பராயன் - ஒரு கெத்துக்காக தான் சூப்பரை சேர்த்துக் கொண்டாராம்.

'கனல்' கண்ணன் - இதுவும் ஒரு கெத்துக்கு தான்.

'விக்ரம்' தர்மா - முதலில் பணிபுரிந்த படம்.

'ராம்போ' ராஜ்குமார் - அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்ற ஆங்கில திரைப்பட வரிசையான "ராம்போ" இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ராம்போவாகி விட்டார்.

'காத்தாடி' ராமமூர்த்தி - இவரது உருவத்துக்காக அந்தப் பட்ட பெயர் வழங்கப்படவில்லை. இவர் நடித்த நாடகம் ஒன்றில் பிரபலமான இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அது.

'நிழல்கள்' ரவி - முதல் படத்தின் பெயர்

'தக்காளி' சீனிவாசன் - கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால் இவரது கல்லூரி நண்பர்கள் 'தக்காளி' என்று கிண்டல் செய்வார்களாம். 'இவர்கள் வருங்காலத் தூண்கள்' என்ற திரைப்படத்தில் இவரது கேரக்டரின் பெயரும் 'தக்காளி'.

'ஏ.வி.எம்.' ராஜன் - ஏ.வி.எம். என்பது இவரது இனிஷியல் அல்ல. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'நானும் ஒரு பெண்' படத்தில் அறிமுகமானதால் நன்றி விசுவாசத்துக்காக ஏ.வி.எம்.மை இணைத்துக் கொண்டார்.

'குண்டு' கல்யாணம் - காரணம் வேணுமா?

'ஓமக்குச்சி' நரசிம்மன் - காரணம் வேணுமா?

'மீசை முருகேஷ்' - காரணம் வேணுமா?

'ஆரூர் தாஸ்' - யேசுதாஸ் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மாவட்ட பாசம் காரணமாக 'ஆரூர் தாஸ்' ஆனார்.

'டெல்லி கணேஷ்' - டெல்லியில் இராணுவத்தில் வேலை பார்த்தவர். பேசாம இவருக்கு 'மேஜர்' பட்டம் கொடுத்திருக்கலாம்.

'யார்' கண்ணன் - சக்தி கண்ணன் 'யார்' படத்தை இயக்கியதால் 'சக்தி' போய் 'யார்' ஆனார்.

'ஒருவிரல்' கிருஷ்ணாராவ் - இவருக்கு பத்து விரல்களும் உண்டு. இவர் நடித்த முதல் படத்தின் பெயர் தான் 'ஒரு விரல்'

'கருப்பு' சுப்பையா - ஏற்கனவே திரையுலகில் ஒரு சுப்பையா கொஞ்சம் வெள்ளையாக இருந்ததால் இவர் 'கருப்பு' சுப்பையாவாகி விட்டார்.

'பயில்வான்' ரங்கநாதன்
- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இவரை இப்படித்தான் அழைப்பாராம். ஆளும் பயில்வான் தான்.

'பூர்ணம்' விஸ்வநாதன் - அவரோட இயற்பெயரே இது தாங்க.

கடைசியாக எல்லோருக்கும் தெரிந்தது தான். 'சிவாஜி' கணேசன். 'சத்ரபதி' என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்தார். அந்நாடகத்தையும், அதில் நடித்தவரையும் கண்டு வியந்த தந்தை பெரியார் வி.சி.கணேசனை 'சிவாஜி' கணேசனாக்கினார்.

உங்களுக்கு தெரிந்த பட்டப்பெயர்களையும், காரணங்களையும் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

RSS FEED!

நம் புண்ணியபூமியாம் பாரதத்தில் தோன்றியிருக்கும் இந்து மதத்தின் பெருமைகளை உலகுக்கு பறைஸாற்ற தேஸ விடுதலைக்குப் போராடிய தேஸபக்தர்களால் அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வகுப்புவாத அமைப்பு என்று சில திம்மிக்கள் அவதூறு பரப்பிய நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீமான் மருத்துவர் விண்ஸெண்டு என்பவர் ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்புவாத இயக்கம் அல்ல என்று கூறி விஷச்செடிகளின் வேருக்கு வெந்நீரை ஊற்றியிருக்கிறார். அவர் ஆய்வில் விடுபட்ட சில விஷயங்களை ஆய்வு செய்து நாமும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

- காந்திஜியை கொன்றவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாற்று மதத்தவர். காந்திஜியை அவ்வளவு காலமாக உயிர்போல காத்துவந்த அவரது மெய்க்காவலரான ஸ்ரீமான் கோட்சே அவர்கள் மீது அநியாயமாக திம்மிக்கள் பழியைப் போட்டு தூக்கு மேடைக்கு அனுப்பி விட்டார்கள்.

- 1992ஆம் ஆண்டு திம்மிக்களே பாபர் மஸூதியை இடித்து விட்டு தேஸபக்தி மற்றும் மதநல்லிணக்கத்தைப் பேணும் இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மீது பழிபோட்டு விட்டார்கள்.

- பாபர் மஸூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 3,500 மக்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். வன்முறை, மதக்கலவரம் எதுவும் நம் நாட்டில் நடக்காமல் பதட்டமான அந்தச் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகிம்ஸை தொண்டர்கள் அமைதி காத்தார்கள்.

- ஒரிஸ்ஸாவில் பாதிரியார் ஒருவர் சென்ற ஜீப் தீவிபத்தில் பற்றி எரிந்தபோது அந்த தீயை அணைக்கத் தான் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அருகே சென்றார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டர்கள் முயற்சி செய்தும் தீ அணையாமல் பாதிரியாரும், அவரது குழந்தைகளும் அநியாயமாக பலியானார்கள்.

- குஜராத்தில் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்படுத்திய போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசாபிமானி ஸ்ரீமான் நரேந்திர மோடி தலைமையில் அவர்களை ஸமாதானம் செய்து அமைதியாக வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

- தமிழகத்தில் கோயம்பத்தூரில் இஸ்லாமிய ஸகோதரர்கள் ஏதோ கோழித்தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டபோது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அமைதிப் படையினர் தலையிட்டு கோவையைக் காத்தார்கள்.

- பிள்ளையார் ஸதுர்த்தி போன்ற விழா நாட்களில் அமைதியான முறையில் தேச நன்மைக்காக, மதநல்லிணக்கத்துக்காக அமைதி பாதயாத்திரை நடத்தி தியாகம் செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.

- இவ்வாறாக மும்பை, கோவை, ஒரிஸ்ஸா, அயோத்தி, டெல்லி, குஜராத் என்று பாரத தேஸமெங்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அமைதிப்பூங்காவாக விளங்குகிறது.

27 ஜனவரி, 2010

பெயர் வரலாறு!


வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார்.

முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெறியில் இருந்திருக்கிறார். எனவே ”குமரன்” என்ற பெயரை சூட்டியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் நின்றிருக்கிறார். பெரியப்பா அப்போது மடிப்பாக்கத்தில் கிருஷ்ணனுக்கு ஒரு பஜனைக்கோயில் கட்டியிருந்தார். எனவே கிருஷ்ணன் பெயரை தான் தன் தம்பி மகனுக்கு சூட்டவேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார்.

மூன்றுத் தரப்பும் பெயர் சூட்டும் விழா அன்று முட்டிக்கொள்ள, யாரோ ஒரு நாட்டாமை பஞ்சாயத்து செய்து, கூப்பிட்டால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவில் “மோகன கிருஷ்ண குமார்” என்று நாமகரணம் செய்துவிட்டிருக்கிறார். பட்டுத்துணி போர்த்தி என்னை அலங்கரிக்கப்பட்ட கூடையில் கிடத்தி 'காஞ்சிபுரம் சிறுணை மோகனகிருஷ்ணகுமார்' என்று பெற்றோர் மூன்று முறை அழைக்க வேண்டும். தான் வலியுறுத்திய பெயரோடு இன்னும் இரண்டும் பெயர் எக்ஸ்ட்ராவாக சேர்ந்துக் கொண்ட கோபத்தில் இருந்த அப்பா “குமரா, குமரா, குமரா” என்று தான் சூட்ட விரும்பிய பெயரை மட்டும் சுருக்கமாக அழைத்திருக்கிறார். பாவம் அம்மா தான் வினோதமான என் பெயரை மூன்று முறை கஷ்டப்பட்டு சொல்லி அழைத்தாராம்.

* - * - * - * - * - * - * - *

எல்.கே.ஜி. சேர்க்கும்போது எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. பள்ளியில் சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அட்டெண்டனன்ஸில் பெயர் எழுதும்போது தான் முழுப்பெயரையும் எழுதமுடியாமல் மிஸ் அவதிப்பட்டார்.

”உன் பெயரை சுருக்கமா சொல்லு!”

சுருக்கம் என்ற வார்த்தைக்கு அப்போது பொருள் தெரியாத நான், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!” என்றேன்.

“அது புல் நேம். சுருக்கமா சொல்லு!”

மறுபடியும், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!”

எரிச்சலாகி, “சரி நானே சுருக்கிடறேன். இனிமே உன் பெயர் எல்.கிருஷ்ணகுமார்”

இந்த பெயர் எனக்கு கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.

* - * - * - * - * - * - * - *

கிருஷ்ணகுமார் என்று பள்ளியில் அறியப்பட்டாலும் கூட வீட்டிலும், தெருவிலும் அவரவர் வாய்க்கு வந்த பெயரை சொல்லி தான் அழைத்தார்கள். பள்ளியில் கூட ஆசிரியர்கள் தவிர்த்து கூட படிக்கும் மாணவ, மாணவிகள் ‘கிருஷ்ணா' என்று சொல்லியே அழைத்தார்கள். எனக்கு ‘கிருஷ்ணர்' அப்போது இஷ்டதெய்வம் என்பதால் ‘கிருஷ்ணா' பிடித்திருந்தது.

அப்பா மட்டும் கடைசி வரை ‘குமரா' என்றே அழைத்து வந்தார். அம்மாவும் சில நேரங்களில் ‘குமரா' என்றும் பல நேரங்களில் 'நைனீ' என்றும் அழைப்பார். ‘நைனீ' என்பதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை :-(

* - * - * - * - * - * - * - *

ரஜினி - கமல் உச்சத்தில் இருந்த நேரம் அது. தீவிர கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரசிகர்களோடு வாய்ச்சண்டையோடு, மல்யுத்தமும் போட்டிருக்கிறேன். சில நேரங்களில் முரட்டுத்தனமாக அடித்துக் கொண்டு சில்மூக்கு உடைந்து ரத்தமும் வந்ததுண்டு. துரதிருஷ்டவசமாக கூட படித்தவர்களில், தெருப்பசங்களில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்.

ரஜினி நன்றாக சண்டை போடுவதால் ரஜினியை அவர்களுக்கு பிடித்திருந்தது. கமல் அட்டகாசமாக காதலித்ததால் கமலை எனக்கு பிடித்திருந்தது. ”கமல் கெட்டவன். பொம்பளைங்களை எல்லாம் கட்டிப் புடிக்கிறான். ரஜினி நல்லவன். அதனாலே தான் கெட்டவங்க கிட்டே சண்டையெல்லாம் போடுறான்” என்று பக்கத்து வீட்டு கோவாலு விளக்கம் அளித்தான். ”சண்டை போட்டதுக்கப்புறமா ரஜினி கூட பூர்ணிமாவை கட்டி புடிச்சிருக்காரே?” என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது.

ரஜினி ஆண்மையின் அடையாளமாகவும், கமல்ஹாசன் பொம்பளைப் பொறுக்கியாகவும் என் சக பசங்களுக்கு தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டுமே கமலை ஹீரோவாக பார்க்கமுடிந்தது ஏனென்று தெரியவில்லை. கமல் ரசிகன் என்பதால் என்னை ரஜினி வெறியர்கள் “கமலா” என்று கூப்பிட்டு வெறுப்பேற்றத் தொடங்கினார்கள். “கமல்” என்று கூப்பிட்டிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும் “லா” சேர்த்து பெண்பாலில் கூப்பிட்டதால் கடுப்பாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு எனக்கு இந்த பட்டப்பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கோடைவிடுமுறையில் அம்மம்மா வீட்டுக்கு போய் வந்ததற்கு பிறகு பசங்களுக்கு இந்த பட்டப்பெயர் மறந்து தொலைத்ததால் தப்பித்தேன்.

* - * - * - * - * - * - * - *

கிருஷ்ணகுமார் என்ற பெயரில் கடைசியில் இருக்கும் ‘குமார்' என்ற பெயரை விளித்து கூட நிறையப் பேர் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் ஓக்கே என்றிருந்தாலும் ‘குமார்' குமாரு ஆகி காலச்சக்கரம் சுழன்று ”கொமாரு” ஆகியபோது வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

* - * - * - * - * - * - * - *

கல்யாணராமன் தான் என்னை “கிச்சா” என்று முதலில் அழைத்ததாக நினைவிருக்கிறது. அவன் அண்ணன் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் ஆத்தில் கிருஷ்ணமூர்த்தியை சுருக்கி “கிச்சா” என்று தான் அழைப்பார்களாம். அதனாலேயே கிருஷ்ணகுமாரையும் “கிச்சா” ஆக்கிவிட்டான் கல்யாணம்.

கல்யாணத்தை தொடர்ந்து நிறைய பேர் ”கிச்சா”வென்று அழைக்க ஒரு மாதிரியாக உணர்ந்தேன். இன்றுவரை பலரும் என்னை ”கிச்சா” என்றுதான் அழைக்கிறார்கள். கிரேஸி மோகன் ஆனந்தவிகடனில் “கிச்சா” என்றொரு கோமாளி கேரக்டரை வைத்து சில காமெடிக்கதைகள் எழுத அந்தப் பெயர் ஏனோ சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. நான் பணிபுரியும் நிறுவனங்களில் மேலதிகாரிகள் கூட ”கிச்சா” என்று கூப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பிடித்த ”கிருஷ்ணா” என்ற பெயரை புதியதாக அறிமுகமாகுபவர்கள் தான் அழைக்கிறார்கள். சில சந்திப்புகளுக்கு பின்னர் அவர்களும் “கிச்சா” என்று கூப்பிட தொடங்கிவிடுகிறார்கள்.

* - * - * - * - * - * - * - *

எட்டாவது வகுப்பு வரை எல்.கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்பட்ட எனக்கு ஒன்பதாவது வகுப்பில் தமிழய்யா ரூபத்தில் சோதனை வந்தது. தனித்தமிழில் பெருத்த ஆர்வம் கொண்ட தமிழய்யா தான் வகுப்பாசிரியர். அட்டெண்டன்ஸ் அவரது பொறுப்பில் வந்தபோது வடமொழி சொற்களை நீக்கி தூயத்தமிழில் எல்லோரது பெயரையும் எழுதினார். அஷோக் “அசோகன்” ஆனான். சுரேஷ்குமார் “சுரேசுகுமார்” ஆனான். எல். கிருஷ்ணகுமாராகிய நான் “இல.கிருட்டிணகுமார்” ஆகி தொலைத்தேன்.

“இல.கிருட்டிணகுமார்” என்று ஆசிரியர் அழைக்கும்போது வேறு யாரையோ அழைக்கிறார் என்று பல நேரங்களில் சும்மா இருந்து கொட்டு வாங்கியது உண்டு. என் அட்டெண்டன்ஸ் பெயரை லேடீஸ் செக்‌ஷனிலும் (லேடிஸ் எல்லாம் ”பி” செக்‌ஷன், நாங்கள் “ஏ” செக்‌ஷன்) சரவணனோ யாரோ பரப்பிவிட, என்னை காதலிக்க திட்டமிட்டிருந்த குமுதா என் தமிழ்ப்பெயரை கேள்விப்பட்டு என்னை வெறுக்கத் தொடங்கினாள்.

* - * - * - * - * - * - * - *

ஒன்பதாவது படிக்கும்போது சந்தானகிருட்டிணன் தான் என்னை ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அவர்களது ஊர் பக்கத்தில் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சொல்லி ”சீன்னா”, ”கான்னா” என்றெல்லாம் அழைப்பார்களாம். அதுபோலவே கிருஷ்ணகுமார் என்று அழைக்க சோம்பேறித்தனப்பட்டு ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அடுத்த இரு ஆண்டுகளுக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் ஆசிரியர்களும் ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். காமோசோமாவாக இருந்ததால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத பெயர் அது.

* - * - * - * - * - * - * - *

பத்தாவது படித்தபோது பாடப்புத்தகங்களை சுமந்ததை விட காமிக்ஸ்களை சுமந்தது அதிகம். ஆர்.டி.முருகன், சுந்தரவேலு, சேதுராமன், ஏ.சுரேஷ்குமார் (கிளாஸில் மொத்தம் 4 சுரேசு) என்று என்னோடு நிறைய காமிக்ஸ் ஆர்வலர்கள் இருந்தார்கள். எக்சேஞ்ச் செய்துகொள்வது, யாரிடமாவது இருக்கும் காமிக்ஸை நான் வாங்கி ஜெராக்ஸ் செய்துகொள்வது என்று காமிக்ஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நிறைய லஞ்ச் நேரத்தில் நடக்கும். புத்தகப் பையில் எப்போதும் பத்து காமிக்ஸ்களாவது இருந்த காலக்கட்டம் அது.

கொஞ்சம் ஒல்லியாக இருந்ததால் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு அப்போது இருந்தது. இந்த ‘ஒல்லி' குறைப்பாடை சரிசெய்ய எதையுமே கொஞ்சம் வேகமாகவும், ஸ்டைலாகவும் வேண்டுமென்றே செய்ய ஆரம்பித்தேன். படிக்கட்டு ஏறும்போது ரெண்டு படிக்கட்டு தாண்டி, தாண்டி குரங்கு மாதிரி வேகமாக ஓடுவேன். நண்பர்களோடு சேர்ந்து நடக்கவே மாட்டேன், ஓட்டம் தான். எல்லாருக்கும் முன்பு ஓடிப்போய் நின்றுகொண்டு அவர்கள் வரும்வரை காத்திருப்பேன். சைக்கிளை வேகமாக கட்டு கொடுத்து, கட்டு கொடுத்து ஓட்டுவேன்.

கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்ததாலோ என்னவோ என் காமிக்ஸ் நண்பர்கள் என்னை “லக்கிலுக்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். “லக்கிலுக்” என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் ஹீரோ. தன் நிழல் செயல்படும் வேகத்தை விட வேகமாக செயல்படும் வீரன். கோமாளி ஹீரோ என்றாலும் ஒல்லியாக, கொஞ்சம் நீளமுகவாட்டில் பார்க்க என்னைப் போல இருந்ததால் அந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். லக்கிலுக் என்பது சில நாட்களில் சுருங்கி “லக்கி” ஆகிவிட்டது.

* - * - * - * - * - * - * - *

மறக்கப்பட்ட இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. பல பெயர்களில் அழைக்கப்பட்டு விட்டதால் இந்தப் பெயர்களில் ஏதேனும் ஒன்று பொது இடங்களில் உச்சரிக்கப்படும் போதெல்லாம் என்னை தான் அழைக்கிறார்களோ என்று ஒருகணம் திரும்பி ஏமாந்து விடுவேன். பலமுறை ஏமாந்தப் பின்னர் இப்போதெல்லாம் என்னையே யாராவது கூப்பிட்டால் கூட “வேற யாரையோ கூப்பிடறாங்க” என்று நினைத்து விடுகிறேன். அக்கப்போர் செய்து பெருசுகள் எனக்கு வைத்த நீளமான பெயரால் எந்த பிரயோசனமும் இல்லை. அந்தப் பெயரை வைத்து யாரும் அழைத்ததுமில்லை. உண்மையில் அந்தப் பெயரால் அஞ்சு காசுக்கும் பிரயோசனமில்லை என்பதே நிதர்சனம்.

”பேர் எடுக்கணும், பேர் எடுக்கணும்” என்பார்கள். எவ்வளவோ பேர் எடுத்துவிட்டேன். இன்னமும் எவ்வளவு பேர் தான் எடுப்பேனோ தெரியவில்லை. இத்தனை பேர் இருப்பதால் உனக்கு என்ன தொல்லை என்று கேட்கிறீர்களா? சில நேரங்களில் யாராவது ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்கும்போது சட்டென்று விடை சொல்லத் தெரியாமல் முழிக்கும்போது நான் படும் அவமானம் உங்களுக்கெல்லாம் பட்டால் தான் தெரியும்!

25 ஜனவரி, 2010

கொள்ளையடிப்பது ஒரு கலை!


மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “மந்திரிகுமாரி”, மெகா ஹிட் திரைப்படமாகும். இதில் தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கலைஞர் எப்படி பட உலகுக்கு வந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.

திருவாரூரில் இருந்து 15 மைல் தூரத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜுன் 3_ந்தேதி பிறந்த கலைஞர், இளமையிலேயே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார். அவருடைய நாடகங்களில் ஒன்றைப் பார்த்தபெரியார், அவரைப் பாராட்டியதோடு, ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.

1949_ம் ஆண்டு தி.மு.கழகத்தை பேறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதில் முக்கியப் பங்கெடுத்துக்கொண்ட கலைஞர், பின்னர் தி.மு.க. தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

இந்த சமயத்தில், கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இந்தப்படத்தை டைரக்டர் செய்தவர் ஏ.எஸ்.ஏ.சாமி. அக்காலத்தில் இவர் புகழ் பெற்ற டைரக்டராகவும், வசன கர்த்தா வாகவும் விளங்கினார். ராஜகுமாரியின் வசனங்களின் பெரும் பகுதியை எழுதியவர் கலைஞர்தான் என்றாலும் “வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி” என்றும், “உதவி மு.கருணாநிதி” என்றும் படத்தில் “டைட்டில்” கார்டு போட்டார்கள்.

கலைஞருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. மனைவியுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். கருத்தாழம் மிக்க வசனங்கள் எழுதியும், படத்தில் வசன கர்த்தாவாக அவர் பெயர் இடம் பெறவில்லை.

இந்த சமயத்தில், கலைஞரின் எழுத்துத்திறமை பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் கவிஞர் கா.மு.ஷெரீப் கூறினார். அதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை_வசன இலாகாவில் சேர்ந்து பணிபுரியுமாறு கலைஞருக்கு தந்தி அடித்தார், டி.ஆர்.சுந்தரம். அந்த அழைப்பை ஏற்று, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கலைஞர் சேர்ந்தார்.

அப்போது, மாடர்ன் தியேட்டர்சார் “சண்டமாருதம்” என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்கள். அதன் பொறுப்பாசிரியராக கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே கலைஞரின் எழுத்துத் திறமையை அறிந்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர கலைஞர் வந்தபோது, அவரை கண்ணதாசன் அன்புடன் வரவேற்றார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த சமயத்தில், “பொன்முடி” படம் முடிவடையும் நிலையில் இருந்தது. அப்படத்தின் பின்பகுதிக்கான கதையை அமைத்துத் தருமாறு கலைஞரை சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதன்படி, பொன்முடி படத்தின் இறுதிப் பகுதியை (கபாலிகர் கூட்டம் வருவது) கலைஞர் அமைத்துத் தந்தார்.

ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கலைஞர் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கலைஞர் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கலைஞர் பலமாக சிபாரிசு செய்தார்.

“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கலைஞர் எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்‌ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கலைஞரின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”

“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”

“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.

“கொள்ளை அடிப்பதை கலை என்று கலைஞர் கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கலைஞர் கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”

எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)

“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது

(நன்றி : மாலைமலர்)