ரவுண்ட் டயல் டெலிபோன்!

”ஹல்லோ 459872ங்களா”
“இல்லீங்க மேடம். 459871”
“சார்ரீ மேடம்”
“மேடம் இல்லைங்க சார்!”
“மறுபடியும் சார்ரீங்க. உங்க வாய்ஸ் லேடி வாய்ஸ் மாதிரியே இருக்கு”
“நான் சின்னப்பையன் தாங்க மேடம். பதினேழு வயசுதான் ஆவுது”
”யோவ் நானும் சின்னப்பையன்தான். எனக்கும் 20 வயசுதான் ஆவுது. மேடம் மேடமுன்னு கூப்புடாமே ஒழுங்கா சார்னு கூப்பிடு!”
டொக்.
வீடியோ கேசட்!

ஒரு நாள் மூர்த்திக்கு திடீரென்று ஏனோ ஒரு Aக்கம் ஏற்பட்டது. "மச்சான், கேசட் வாங்கி சாமிப்படம் பார்க்கணும்டா" என்றான். சண்முகத்துக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும் போல. பலமாக ஆமோதித்தான். எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாக உதற ஆரம்பித்தது. எங்கள் ஏரியாவில் இதுமாதிரி சாமிப்படங்களுக்கு புகழ்பெற்ற தியேட்டர் ஆர்.கே. (ராமகிருஷ்ணா என்பதின் சுருக்கம், அந்த தியேட்டர் இப்போது ராஜாவாகியிருக்கிறது). அந்த தியேட்டருக்கு போகும் சில பசங்களை (சரவணா, மோகன்) கெட்ட பசங்க என்று ஒதுக்கி வைத்திருந்தோம். "இப்போ நாமளே அந்தக் காரியத்தை பண்ணுறது என்னடா நியாயம்?" என்று கேட்டேன். "மச்சான் யாருக்கும் தெரியாம நாம மட்டும் பாத்துடலாம், வெளியே மேட்டர் லீக் ஆவாது" என்று சண்முகம் சொன்னான். அப்போதெல்லாம் சிடி, டிவிடி கிடையாது. வீடியோ கேசட் தான்.
கடைசியாக சண்முகம் வீட்டில் கேசட் போட்டுப் பார்ப்பதாக முடிவு செய்தோம். காரணம் சண்முகத்தின் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஒர்க்கிங். 6 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள். மூர்த்தி வீட்டிலும், என் வீட்டிலும் எப்போதும் யாராவது இருந்து தொலைப்பார்கள் என்பதால் சண்முகத்தின் வீடு இந்த மேட்டருக்கு வசதியாக இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் நங்கநல்லூரில் ஒரு கேசட் கடையில் நானும், மூர்த்தியும் பக்கபலமாக இருக்க சண்முகம் தில்லாக (அவனுக்கு தான் அப்போது மீசை இருந்தது) "சாமிப்படம் இருக்கா" என்று கேட்டான். கடைக்காரர் எங்களை கலாய்ப்பதற்காக "சரஸ்வதி சபதம், திருவிளையாடல், ஆடிவெள்ளி இருக்கு. எது வேணும்?" என்று கேட்டார்.
நான் மெதுவாக மூர்த்தியிடம் "வேணாம் மச்சான். ஏதாவது பிரச்சினை ஆயிடப் போவுது" என்றேன். சண்முகமோ முன்பை விட செம தில்லாக "அண்ணே. நான் கேக்குற சாமிப்படம் வேற" என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். கடைக்காரரும் கடையின் பின்பக்கமாக போய் ஏதோ ஒரு கேசட்டை பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்தார். மூர்த்தி கடைக்காரரிடம், "அண்ணே இது இங்கிலிஷா, தமிழா இல்லை மலையாளமா" என்று கேட்டான். கடைக்காரர் ஏற்கனவே சண்முகத்துக்கு அறிமுகமானவர் போல. "தம்பி! இதுக்கெல்லாம் லேங்குவேஜே கிடையாதுப்பா. இருந்தாலும் சொல்லுறேன் இது இங்கிலிஷ்" என்று சொல்லிவிட்டு கேணைத்தனமாக சிரித்தார்.
கேசட் கிடைத்ததுமே சுமார் 3 மணியளவில் சண்முகம் வீட்டுக்கு ஓடினோம். இந்த மேட்டர் யாருக்கும் லீக் ஆகிவிடக்கூடாது என்று பிராமிஸ் செய்துக் கொண்டோம். மூர்த்தி தான் ஒருவித கலைத்தாகத்துடன் மூர்க்கமாக இருந்தான். கேசட்டை வி.சி.ஆரில் செருகிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தோம். ஏதோ ஆங்கிலப்பட டைட்டில் ஓடியது. "மச்சான் பேரை பார்வர்டு பண்ணுடா" என்று மூர்த்தி அவசரப்பட்டான். அந்த வி.சி.ஆரில் ரிமோட் வசதி இல்லாததால் ப்ளேயரிலேயே சண்முகம் பார்வர்டு செய்துக் கொண்டிருந்தான். திடீரென டி.வி. இருளடைந்தது. வி.சி.ஆரும் ஆப் ஆகிவிட்டது. போச்சு கரெண்ட் கட். அந்த கந்தாயத்து வி.சி.ஆரில் கரெண்ட் கட் ஆனவுடன் கேசட்டை வெளியே எடுக்கும் வசதி இல்லை.
கொஞ்ச நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என்று வெயிட் செய்தோம். வரவில்லை... நேரம் 4.... 4.30 என வேகமாக பயணிக்கத் தொடங்கியது. 5.30ஐ முள் நெருங்கும் வேளையில் கூட கரெண்ட் வருவதாகத் தெரியவில்லை. சரியாக 6 மணிக்கு சண்முகத்தின் அப்பா வேறு வந்து விடுவார். அவர் வந்துவிட்டால் போச்சு. சண்முகம் மாட்டிக் கொள்வான் (உடன் நாங்களும் தான்) மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. நானும் மெதுவாக "சண்முகம். ட்யூஷனுக்கு போனம்டா. டைம் ஆவுது" என்றேன். முகம் வெளிறிப் போயிருந்த சண்முகமோ, "டேய் ப்ளீஸ்டா... கொஞ்ச நேரம் இருடா" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா வரும்போது நானும் அருகில் இருப்பது Safe என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.
5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். சண்முகத்தின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் முருகனை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "முருகா கரெண்ட் வரணும்" "முருகா கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.
5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது. சண்முகம் ஒளிவேகத்தில் இயங்கி கேசட்டை எடுத்து என் பனியனுக்குள் திணித்தான். "மச்சான்! ஓடிப்போயி கேசட்டை கடையிலே கொடுத்துடு, அப்பா வர்றப்போ நான் இங்கே இல்லேன்னா அடி பின்னிடுவார்" என்றான். கேசட்டை செருகிக் கொண்டு என் சைக்கிளை எடுத்தேன். கேட் திறந்துக் கொண்டு சண்முகத்தின் அப்பா உள்ளே வந்தார். "குட்மார்னிங் அங்கிள்" என்று சொல்லிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தினேன். "குட்மார்னிங் இல்லேடா... குட் ஈவ்னிங்டா Fool" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் நல்ல பையன் மாதிரி சண்முகம் ஏதோ எகனாமிக்ஸ் டெபினிஷியனை சத்தம் போட்டு படிக்கும் சத்தம் வெளியே கேட்டது. தப்பித்த நிம்மதியில் மெதுவாக சைக்கிளை வீடியோ கடைக்கு மிதிக்க ஆரம்பித்தேன்.