
சில நாட்களாக தியாகங்கள், தியாகிகள் மீதான பற்றோ, பிரமிப்போ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பயமேற்பட்டு இப்போது வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். ‘தன்னலமில்லாத பொதுநலம் பயனில்லாதது’ என்று கவுதம்சார் அடிக்கடி சொல்லுவார். அந்த கூற்றின் மீது ஆரம்பத்தில் எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. இப்போது இதுதான் யதார்த்தம் என்பதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.
2007ஆம் ஆண்டு தமிழ்செல்வன் மறைந்தபோது, ”இனத்துக்காக உயிரிழந்தாரே? வாழ்ந்தால் இவரைப்போல வாழவேண்டும்!” என்று உருகியதுண்டு. 2009ன் தொடக்கத்தில் முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, தியாகங்களை கண்டு அஞ்சத் தொடங்கினேன். வரலாறு நெடுகிலும் தியாகிகளும், தியாகங்களும் போற்றப்படுகிறார்கள். ஆயினும் பெரும்பாலும் தியாகத்துக்குப் பிறகான அவர்களது குடும்பங்கள் என்ன ஆயின என்பது குறித்த குறிப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஓரிரு குறிப்புகளும் கூட வேதனையானவையே.
உச்சபட்சமாக மே 19. அடுத்தடுத்து தமிழீழத் தேசியத் தலைவரின் குடும்பத்தார் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள், அவரை தீவிரமாக எதிர்த்து வந்தவர்களுக்கும் கூட கலக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
’போராட்டமே தவறு!’ என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நான் அவசரமாக வந்துவிடவில்லை. நம்பியிருந்த இனத்துக்கான, வர்க்கத்துக்கான, மனிதகுலத்துக்கான தியாகங்கள் அனைத்துமே போற்றத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.
பொதுநலவாதிகள் ஊருக்கு நல்லவர்களாக இருந்தாலும், குடும்பத்துக்கு வில்லன்களாகவே அறியப்படுகிறார்கள். நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர் யாரையாவது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரது மகனிடமோ, மகளிடமோ, மனைவியிடமோ பேசிப்பாருங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். மாணவப் பருவத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு நேர்மையான செயல்வீரராக வாழ்ந்த என் அப்பாவும் கூட குடும்பத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பெயர் எடுத்ததில்லை. நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.
லேட்டஸ்ட் அதிர்ச்சி தோழர் உ.ரா.வரதராசன்.
1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரம் நினைவுக்கு வருகிறது. எனக்குத் தெரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உச்சபட்ச செல்வாக்கோடு இருந்த காலம் அது. தோழர் வரதராசன் வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளர். அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர். மார்க்சிஸ்ட் செயல்வீரர்கள் வில்லிவாக்கம் மட்டுமன்றி சென்னை முழுவதுமே சிகப்புக்கொடியோடு சைக்கிள் பேரணிகளை நடத்துவார்கள்.
அக்கட்சியில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவர் என்னையும் சைக்கிளில் அமரவைத்து அழைத்துப் போயிருக்கிறார். முடிவில் பிரச்சார பொதுக்கூட்டம். சேத்துப்பட்டுக்கு அந்தப் பக்கம் என்பதாக நினைவு. வரதராசனை அப்போது பார்த்திருக்கிறேன். அப்பாவோடு சென்ற கூட்டங்களில் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களையே அதுவரை பார்த்திருந்ததால், ஒரு கம்யூனிஸ்டு வேட்பாளர் எனக்கு வேறுமாதிரியாக தெரிந்தார். ‘வெற்றி வேட்பாளர்’ போன்ற அடைமொழிகளின்றி தோழர் என்றே அவரை பேசியவர்கள் அனைவரும் விளித்தனர். அந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிஜமான வெற்றி வேட்பாளர்.
கடந்த 18ஆம் தேதி மாலை நாளிதழ்களின் ’மார்க்சிஸ்ட் தலைவர் மாயம்’ என்ற போஸ்டரை கண்டபோது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படவில்லை. மாயமானவர் வரதராசன் என்று அறிந்தபோதுதான் இதயத்தைப் பிசைந்தது. குடும்ப வாழ்க்கையின் நெருக்குதல் காரணமாக தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார் என்று வாசித்தபோது, இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தியாகங்களின் மீதான வெறுப்பு எனக்கு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஊன், உறக்கமின்றி, நேர்மையாக ஒரு கட்சிக்கு உழைத்திருக்கிறார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் தலைவர்களைப் போலவே ஊழலுக்கு ஒவ்வாதவர். அவரது நேர்மையை ஊரே போற்றுகிறது. என்ன பிரயோசனம்?
இன்று தினகரன் நாளிதழின் தலையங்கத்தை வாசித்தேன். இம்மாத துவக்கத்தில் தோழரின் மனைவி மாநிலக்குழுக்கு அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் வரதராசன் மீது விசாரணை நடந்திருக்கிறது. பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் கட்சியின் மத்தியக்குழு சீரியஸாகவே விசாரித்திருக்கிறது. எல்லா குற்றச்சாட்டுகளையும் வரதராசன் மறுத்திருக்கிறார். ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தி, ஒட்டுமொத்தமாக பொறுப்புகளில் இருந்து விடுத்தி, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தலையங்கம் குறிப்பிடுகிறது.
மனைவியின் சந்தேகத்தால் கூட மன உறுதி குறையாத வரதராசன், விபரீத முடிவை எடுக்க கட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது. இத்தனை ஆண்டு உழைப்புக்கும், தியாகத்துக்கும் இதுதான் பரிசு. பாவத்தின் சம்பளமாக அல்ல, தியாகத்தின் சம்பளமாக அவருக்கு மரணம் வாய்த்திருக்கிறது. அவரை கட்சி கைவிட்டு விட்ட சூழலிலும் கூட கட்சியை விட்டுக்கொடுக்காத அவரது உயர்ந்த மனம், அவர் எழுதிய கடைசிக் கடிதங்களில் வெளிப்படுகிறது.
நீங்களே சொல்லுங்கள். தியாகத்தை வெறுக்காமல் போற்றவா முடியும்?