
சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து சாந்தோமுக்கு செல்ல புகைப்படக் கலைஞரோடு நின்றிருந்தோம். அவசரத்துக்கு பஸ் கிடைக்கவில்லை. வந்த நான்கைந்து ஆட்டோக்களும் சாந்தோம் செல்லத் தயாராக இல்லை. “சாந்தோமா? நூறு ரூபாய் கொடு!” என்று ஒரு ஆட்டோக்காரர் கேட்க, மூன்று கிலோ மீட்டர்தானே, நடந்தே போய்விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
‘CALL AUTO 9941468215’ என்று எழுதப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று, நாம் கைகாட்டாமல் தாமாகவே அருகில் வந்து நின்றது.
“வணக்கம். நான் ஸ்ரீராமர். ஆட்டோவுக்காக காத்திருக்கீங்களா? எங்கே போகணும்?” என்று அந்த டிரைவர் கேட்டதுமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.
“சாந்தோம்” என்றதுமே, “உட்காருங்க. போகலாம்” என்றார்.
உட்கார்ந்தவுடனேயே மின்விசிறியின் ஸ்விட்சைத் தட்டினார். “அக்டோபர் மாச வெயில்லு ஏப்ரலையே மிஞ்சிடும் போலிருக்கே?” என்று கமெண்டும் அடித்தார். காசு பற்றி பேசவேயில்லை. சாதாரண ஆட்டோவே நூறு ரூபாய் கேட்கும்போதும், மின்விசிறி வசதியெல்லாம் கொடுக்கும் ஆட்டோவில் சொத்தையே எழுதிவாங்கி விடுவார்களே என்று பயந்தபோது, மீட்டரை சொடுக்கினார்.
“பயப்படாதீங்க சார். மீட்டர் என்ன காட்டுதோ, அந்தப் பணத்தை மட்டும்தான் வாங்குவேன். இருபது ரூபாய்க்குள்ளே தான் ஆகும்!” என்றார் ஆட்டோ நண்பர்.
சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஸ்ரீராமரும் ஒருவர். “சைட்லே படிக்க பத்திரிகைங்க வெச்சிருக்கேன். தேவைப்பட்டா எடுத்துங்க சார்!” என்றவாறே வண்டியை கிளப்பினார். சில நாளிதழ்களும், வார இதழ்களும், கூடவே நம்ம புதியதலைமுறையும். நிமிர்ந்துப் பார்த்தால் ஒரு டைம்பீஸ். “எல்லாருமே வாட்ச் கட்டுறதில்லை. எவ்வளவு நேரத்துலே போகவேண்டிய இடத்துக்கு போகிறோம்னு பயணிகள் தெரிஞ்சுக்கணுமில்லே?”
சென்னையின் வரைபடம் ஒன்றும் செருகப்பட்டிருக்கிறது. “சென்னை ரொம்ப பெரிய ஊருங்க. புதுசா இங்கே வர்றவங்க குழம்பிடறாங்க. அவங்க வசதிக்காகதான் இந்த மேப்!”
அடுத்தடுத்து சதிஷ்குமார் என்கிற ஸ்ரீராமர் இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டே போக, அவரைப் பற்றி மெல்ல விசாரித்தோம்.
“முப்பத்தி மூணு வயசாகுது. எட்டாவது வரைக்கும்தாங்க படிச்சிருக்கேன். என்னோட அக்காவெல்லாம் ரெண்டு, மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோவில் போகுறதுக்கே அநியாயமா காசு கொடுப்பதைப் பார்த்து மனம் வெதும்புவேன். ஆட்டோக்காரங்க கிட்டேருந்து பயணிகளை காப்பாத்தணும், நாமளும் ஏதாவது வேலை பார்க்கணும்னு ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். சுயநலத்திலும் ஒரு பொதுநலம்னு வெச்சிக்குங்களேன்.
மீட்டருக்கு மேலே அஞ்சு பைசா வாங்குறதில்லே. பயணிகளை மரியாதையா நடத்துறேன். என்னோட விருந்தோம்பலில் திருப்தியானவங்க சில பேர், அவங்க நண்பர்களுக்கு என்னைப் பத்திச் சொல்லுவாங்க. அதனாலே நிறைய பேர் என் ஆட்டோவைத் தேடி வந்து பயணிக்கிறாங்க. அவங்க வசதிக்காக இந்த ஆட்டோவை ‘கால் ஆட்டோ’வா மாத்தியிருக்கேன். என் செல் நம்பருக்கு போன் பண்ணா, வீட்டுக்கு வந்து பிக்கப் பண்ணிக்குவேன். பொதுவா மேற்கு மாம்பலம், தி.நகர், மயிலாப்பூர் ஏரியாக்கள் தான் நாம வேலை பார்க்குற இடம். என்னைப் பத்தி கமிஷனர் ஆபிஸ்லே கேள்விப்பட்டு கூப்பிட்டு பாராட்டியிருக்காங்க. ரோட்டரி சங்கத்தில் ‘சென்னையின் சிறந்த ஆட்டோ டிரைவர்’னு விருதுகூட கொடுத்திருக்காங்க!” சிக்னல்களை கவனமாக கவனித்தவாறே நம்மிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“எல்லா ஆட்டோக்காரங்களும் உங்களை மாதிரி இல்லாம ஏன் இப்படி அநியாயமா காசு வாங்குறாங்க?”
“ஒரு பயணியா நீங்க இப்படித்தான் நினைப்பீங்க. பத்துவருஷமா மினிமம் 7 ரூபாய், கிலோ மீட்டருக்கு ரூ.3.50 என்பதுதான் அரசு ஆட்டோக்காரங்களுக்கு நிர்ணயிச்ச கட்டணம். இப்போதான் மினிமம் ரூ.14.00, கிலோ மீட்டருக்கும் ரூ.6.00ன்னு உயர்த்தி இருக்காங்க. பெட்ரோல் விக்கிற விலையிலே இது ரொம்ப ரொம்ப குறைவான நிர்ணயம்.
ஆட்டோ சங்கங்கள் கேட்கிறமாதிரி குறைந்தக் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 10 ரூபாய்னு நிர்ணயிச்சா, பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க. அப்போதான் கட்டுப்படியும் ஆகும். எப்படி இருந்தாலும் ‘லாபமோ, நஷ்டமோ’ என்னைப் பொறுத்தவரைக்கும் மீட்டர் போட்டுதான் ஓட்டணும்னு உறுதியா இருக்கேன்!” என்கிறார்.
நாம் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது. மீட்டர் காட்டிய இருபது ரூபாயை கொடுத்துவிட்டு விடைபெறும்போது, “இன்னமும் வாடகை ஆட்டோதான் சார் ஓட்டுறேன். பகல் வாடகை 150 ரூபாய், முழுநேரம் ஓட்டுனா 300 ரூபாய். அப்படியிருந்தும் எனக்கு சராசரியா தினமும் 150, 200 ரூபாய் வருமானம் கிடைக்குது. சீக்கிரமா சொந்த ஆட்டோ வாங்கணும். ஆட்டோ வாங்கிட்டா ஈஸியா பர்மிட் கொடுக்கறோம்னு துணை கமிஷனர் சொல்லியிருக்கார். வர்றது வாய்க்கும், வயித்துக்குமே சரியா போகுதே. எங்கிருந்து வாங்குறது?” என்று அங்கலாய்த்தார் ஸ்ரீராமர்.
விரைவில் சொந்த ஆட்டோ வாங்கி சிறப்பான சேவைபுரிய வேண்டுமென வாழ்த்தி விடைபெற்றோம்.
எக்ஸ்ட்ரா மேட்டர் : சென்னையில் மட்டுமே அறுபதாயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டுனர்களாக பணிபுரிகிறார்கள். இவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இத்தொழில் புரையோடிப் போயிருப்பதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமே காரணமல்ல. யாரெல்லாம் சொந்த ஆட்டோ வாங்கி வைத்து, ஓட்டுனர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள் என்றொரு புலனாய்வு மேற்கொண்டால் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவரும். சென்னைக்கு வரும் பயணிகளும், வெளிநாட்டவர்களும் சென்னைவாசிகளை தங்கள் ஆட்டோ அனுபவங்களை வைத்தே மட்டமாக எடைபோடுகிறார்கள். போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு, சீர்த்திருத்த வேண்டிய உடனடி பிரச்சினை இது.
அக்டோபர் 29, 2009 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான செய்தி இது.
இரண்டு மாதங்கள் கழித்து ஒருநாள் ராமர், புதிய தலைமுறை அலுவலகத்துக்கு நேரில் வந்திருந்தார். ஆசிரியரை சந்தித்து, தன்னுடைய புதிய சொந்த ஆட்டோவை காட்டவேண்டுமென்பது அவரது வருகையின் நோக்கம். இப்போது ராமர் வங்கியில் கடன் பெற்று வாங்கிய சொந்த ஆட்டோ அது. கட்டுரையை வாசித்த பெங்களூர் வாசகர் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை ராமருக்கு செய்துத்தந்தார். வங்கியில் கட்டவேண்டிய முன்பணத்தையும் அவரே கட்டியிருக்கிறார்.
எழுதுவதால் மட்டுமே எப்போதாவது இதுபோன்ற மனதுக்கு திருப்தி தரும் ஓரிரு நல்ல விஷயங்களாவது நடைபெறுகிறது.