10 மார்ச், 2010

ராமர் பாலம்!

இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுதிய பதிவிது. சேதுசமுத்திரத் திட்டம் அப்போதெல்லாம் ஊடகங்களில் பற்றியெறிந்துக் கொண்டிருந்தது. இப்போது அதைப் பற்றி பேச்சு மூச்சே காணோம். ஒருவேளை நிஜமாகவே அங்கு ராமர்பாலம் இருந்ததை மத்திய அரசு கண்டுபிடித்து விட்டதா என்று தெரியவில்லை! :-(

என்ன கொடுமை சார் இது?

இந்தச் செய்தியை படித்ததிலிருந்தே மனசு சரியில்லை. முல்லாக்களும், அண்டோமேனியா தலைமையிலான கிறிஸ்தவ மிஷனரிகளும் நம் புண்ணிய பூமியை சுடுகாடாக்கி விடுவார்களோ என்ற கவலை மேலிடுகிறது.

அம்மாவின் புண்ணியத்தால் ஹைகோர்ட்டில் நம் மகளிர் அணியினரின் சிறப்புத்தரிசனம் பெற்றவர் சுப்பிரமணியசாமி. அதன் மூலமாக அவருக்கு ஞானம் கிடைத்தது. ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சுப்பிரமணியசாமி மூலமாக தீர்த்து வைப்பது அம்மாவின் வாடிக்கை. அம்மாவின் நம்பிக்கைக்குரிய சாணக்கியர் சோ ராமசாமிக்கு ரொம்பவும் நெருங்கியவர் இந்த சுப்பிரமணியசாமி. ராமபிரான் பாலம் குறித்து அவர் தொடுத்த வழக்கு ஒன்றினை கொத்துபரோட்டா போட்டிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

முன்பெல்லாம் நமக்கு சோதனை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு தான் ஓடி நல்ல தீர்ப்பு பெறுவோம். திம்மிக்கள் வயிறு பொறுமுவார்கள். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தை கூட நம்பமுடியவில்லை. இராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரமெல்லாம் கேட்கிறார்கள். ஆதாரமாக தான் ஹிந்துக்கள் போற்றும் இராமாயணம் இருக்கிறதே? சன் டிவியில் ஞாயிறு தோறும் இராமாயணம் போடுகிறார்களே? இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இவற்றுக்கெல்லாம் மேலாக இராமர் பாலம் இருந்தது உண்மை என்று அம்மாவே சொல்லியிருக்கிறாரே? துக்ளக்கில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதே?

இராமேஸ்வரம் போனால் கடலில் பிரம்மாண்டமாக இராமர் பாலம் தெரியும். அதன் வழியாக நாம் இலங்கைக்கு கூட போகலாம் என்பது தமிழ்நாட்டின் சிறுபிள்ளைக்கும் தெரியும். திம்மிக்கள் சூழ்ச்சி செய்து டி.ஆர்.பாலு மூலமாக அந்த பாலத்தை கடலில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ரவுடி திம்மி கூட்டம் அந்த பாலத்தை சேதப்படுத்த முயற்சித்தால் அவர்களை 295வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிசாமி கோர்ட்டில் கேட்டிருக்கிறார். அது வழிபாட்டுத்தலமா? அங்கே யாராவது வழிபடுகிறார்களா? அப்படி ஒரு பாலம் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்கிறார்களாம். ராமர் பாலத்தை நம்பும் எண்பது கோடி ஹிந்துக்களை முட்டாள் என்று நினைக்கிறதா உச்சநீதிமன்றம்?

இனியும் ராமர்பாலம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேட்டால், அந்த பாலத்தை கட்டிய அணிலை சாட்சிக்கூண்டில் நிறுத்தி சாட்சி சொல்லவைக்க எண்பது கோடி ஹிந்துக்களும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருப்போம்.

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

5 மார்ச், 2010

Univercell Chennai Blogger meet!


www.indiblogger.in பற்றி தமிழ்பதிவர்களுக்கு பெரிய அறிமுகம் கிடையாது. இந்திய மொழிகளில் எழுதிவரும் வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணையத்தளம்.

இத்தளத்தின் மூலமாக அவ்வப்போது வலைப்பதிவர் தொடர்பான சந்திப்புகளும், நிகழ்ச்சிகளும் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வரும் 20ஆம் தேதி ஒரு சந்திப்பு ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்படிருக்கிறது. தமிழ் வலைப்பதிவர்களும் பங்கேற்கலாம். ஏற்கனவே சில பிரபல(!) வலைப்பதிவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்க தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதை சம்பந்தப்பட்ட பக்கத்தில் அறியமுடிகிறது.

என்று & எங்கே?

சனிக்கிழமை, மார்ச் 20, 2010 பிற்பகல் 2.30 மணி. நிகழ்ச்சி முடியும் நேரம் மாலை 6 மணி.

இடம் : ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டர்
120, சர். தியாகராயா சாலை,
தி. நகர், சென்னை - 600 017.
(ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ்க்கு அடுத்து)

மேலதிக விவரங்களுக்கு : 45018949 என்ற தொலைபேசி எண்ணில் indiblogger அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சந்திப்புக்கு வர விரும்புபவர்கள் இந்தப் பக்கத்தில் சென்று உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்யவும். அதிகபட்சம் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய நிகழ்ச்சி என்பதால் முதலில் பதிபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால், நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவர்கள் முண்டியடிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியை வழங்குபவர்கள் : யுனிவர்செல், சென்னை.

எந்திரன்!












இந்தப் படத்தோட ஹீரோவுக்கு அறுவது வயசுன்னா சொன்னா ஹாலிவுட்லே கூட நம்பமாட்டாங்க இல்லை?

3 மார்ச், 2010

ஒரு அறிவிப்பு!

நித்தியானந்தரை சாருவுக்கு முன்பு பிடிக்கும். எனக்கு சாருவை இப்போதும் பிடிக்கும். இதைத்தவிர்த்து நித்தியானந்தருக்கும், எனக்கும் எந்தவித நேரடித் தொடர்புமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனவே ‘ர’ நடிகை தொடர்பான நித்தியானந்தரின் அஜால் குஜால் வேலை தொடர்பாக எனக்கு யாரும் தொலைபேசவோ, மின்னஞ்சலவோ வேண்டாமென்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நானும் எதையும் விளக்குப் பிடித்து பார்த்ததில்லை. சன் நியூஸில்தான் பார்த்தேன். ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவில் சிணுங்கிக் கொண்டேயிருக்கும் போனை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாமா என்று வெறுப்பு வருகிறது.

நித்தியானந்தர் குறித்த யுவகிருஷ்ணாவின் கட்டுரை நாளை வெளிவரும் அல்லது நாளை மறுநாள் வெளிவரும் அல்லது அடுத்த வருடம் வெளிவரும் அல்லது வெளிவராமலேயே கூடப்போகும்.

ஒரு நண்பரின் கடிதம் :

அன்புள்ள யுவகிருஷ்ணா,

பாராவின் பயிலரங்கம் முடிந்து சிவராம், சுரேஷ் கண்ணன், நீங்கள் மற்றும் நான் பேசிக்கொண்டிருந்தோம் ஞாபகம் இருக்கிறதா?

"கொஞ்ச நாளில் பாருங்க நித்யானந்தா எதிலாவது மாட்டுவார்... சாரு அப்படியே பல்டி அடிப்பாரென்று சொல்லியிருந்தீர்கள்." அப்படியே நடந்துவிட்டது.

மனுஷா...! நீங்க மந்திரக்கோலை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். நடக்க இருப்பது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிகிறதே...! அடுத்த பரமஹம்சர் நீங்கள் தான்....

Just for kidding :-)))))

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

2 மார்ச், 2010

வானம் வசப்படும்!

வாழ்வின்
நெடும் பயணத்தில்
பயண வழியெங்கும்
சாதனைச் சுவடுகளையும்
சந்தோஷ ரோஜாக்களையும்
பதியனிட,
விடாமுயற்சி
எனும் அஸ்திரத்தை
அழகாய் எய்யப் பழகு
அதன்பின் வானும் வசப்படும்!

குடியரசுத் தலைவராக டாக்டர் கலாம் இருந்தபோது, ஒரு பின்னிரவில் இந்த கவிதையை வாசிக்கிறார். அலுவல் சுமைகளை அவர் இறக்கி வைப்பது இதுபோன்ற பின்னிரவு வாசிப்புகளின் போதுதான். கவிதை கவர்ந்துவிட, உடனே எழுதிய கவிஞருக்கு ஒரு பாராட்டுக் கடிதத்தையும் தன் கைப்பட எழுதி அனுப்புகிறார்.

அந்த கவிஞர் ஏகலைவன். கவிதைத் தொகுப்பு ‘பயணவழிப் பூக்கள்!’

சேலத்தை சேர்ந்த ஏகலைவனுக்கு வயது 35. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூகநல ஆர்வலர் என்று பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிகிறார். சிற்றிதழ்களிலும், வெகுஜன இதழ்களிலும் கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்.

உடல் அவயங்களை பிறப்பிலோ, விபத்திலோ இழந்துவிடுபவர்களை ஊனமுற்றவர்கள் என்கிறார்கள். சமீபகாலமாக இவர்களை மாற்றுத் திறனாளர்கள் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். மாற்றுத் திறனாளர்களில் சாதனைகள் புரிபவர்களை நேரில் கண்டு, பேட்டியெடுத்து புத்தகங்களாக பதிப்பித்து வரும் அரியப்பணியை தொடர்ச்சியாக செய்துவருகிறார் ஏகலைவன்.

“தமிழ்நாட்டில் சுமார் பதினெட்டு லட்சம் உடற்குறையாளர்கள் இருக்கிறார்கள். தங்கள் குறையை நினைத்து நத்தையாய் ஓட்டுக்குள் சுருங்கிவிடாமல், சமூகத்தடைகளை தாண்டி தங்களை சாதனையாளர்களாக வெளிப்படுத்திக் கொள்பவர்கள் இவர்களில் மிகச்சிலரே.
அப்படிப் பட்டவர்களைப் பற்றி ஊடகங்களில் எப்போதாவது அத்திப் பூத்தாற்போல தான் செய்திகள் வெளிவருகிறது. அவையும் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது என்ற நிலை இருக்கிறது. எனவே மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை வரலாற்றில் விட்டுச் செல்லும் நோக்கத்தோடே, தமிழகமெங்கும் தேடித்தேடி அவர்களை சந்தித்தேன். அவர்களது சாதனைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் புத்தகங்களாக தொகுத்து வெளியிட்டு வருகிறேன்” என்கிறார் ஏகலைவன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சாதனையாளர்களை தன்னுடைய நூல் மூலமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். நமக்கு தெரிந்தவரை, இந்திய மொழிகளில் மாற்றுச் சாதனையாளர்களை யாரும் இதுபோல நூல்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருவதில்லை.

இவரது இந்தப் பணிகளைப் பாராட்டி பல்வேறு சமூக அமைப்புகளும் விருதுகள் வழங்கியிருக்கின்றன. அன்னை தெரசா விருது, அசெண்டஸ் எக்ஸலன்ஸ் விருது ஆகியவற்றை நம்மிடம் காட்டுகிறார். தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு, டாக்டர் கலாம் எழுதி அனுப்பிய பாராட்டுக் கடிதத்தை பிரேம் செய்து வீட்டில் மாட்டியிருக்கிறார்.
மாற்றுத்திறன் சாதனையாளர்களை தேடும் பணி மிகச்சிரமமானது. ஊடகச் செய்திகள் மற்றும் நண்பர்களின் தகவல்கள் அடிப்படையில் நபர்களை தேர்வுசெய்து, அவர்களை தொடர்புகொண்டு நேரில் சந்தித்து பேசி கட்டுரைகள் எழுதுகிறார். இதற்காக இவருக்கு ஏற்படும் பொருட்செலவும், நேரச்செலவும் அளவிட முடியாதவை.

சொல்ல மறந்துவிட்டோமே?

சமூகத்துக்கு மிக அவசியமான இந்த சீரியப்பணியைச் செய்துவரும் ஏகலைவனும் ஒரு மாற்றுத்திறன் சாதனையாளரே.

ஏகலைவனுக்கு அன்று பதிமூன்றாவது பிறந்தநாள். சென்னை தாம்பரம் பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நண்பர்கள் குழாமோடு பிறந்தநாள் அமளிதுமளிப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சில நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
ரயில்பாதையில் நடந்து கொண்டிருந்தபோது, அந்த ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததை இவரது நண்பர் ஒருவர் கவனிக்கவில்லை. ஏகலைவன் சத்தம் போட, கடைசி நொடியில் அந்த நண்பன் விலகி ஓடித் தப்பினார். ஆனால் இடப்பக்கமாக வந்து கொண்டிருந்த ரயிலை இவர் கவனிக்கவில்லை. ரயில் ஹாரன் அடிக்க, நண்பர்கள் சத்தம் எழுப்ப ஒன்றும் புரியாமல் பாதையிலேயே திகைத்து நிற்கிறார்.

ரயில் இன்ஜின் அடித்து உடல் தூக்கியெறியப்பட, கால்சட்டை ஏதோ ஒரு கம்பியில் மாட்டி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. உயிர் பிழைத்ததே அதிசயம். சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே இடதுபக்க முழங்கால் வரை அகற்றப்பட்டது. பிறந்தநாள் அன்றே தனது ஒரு காலை இழந்தார் ஏகலைவன்.

உடலின் இடதுபாகம் விபத்தில் கடுமையான காயத்தை சந்தித்ததால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து ஏழு அறுவைச் சிகிச்சைகள். ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தவர் பள்ளிக்கு முழுக்கு போட்டார். இரண்டு ஆண்டுகள் கழிந்து மீண்டும் ஏழாவது வகுப்பிலேயே சேர்ந்தார்.

ஏகலைவனின் தந்தை நடைபாதை கடை ஒன்றினை வைத்திருந்தார். மகனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் நிலைகுலைந்துப் போயிருந்தார். சிகிச்சைக்காக அடிக்கடி அலைந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. விளைவு, குடும்பத்தில் வறுமை. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ஏகலைவன் ஒரு தையற்கடையில் பகுதிநேரமாக வேலை பார்க்கத் தொடங்கினார்.

பண்ணிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்து பயிலும் வசதி வாய்ப்பு அவருக்கு இல்லை. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தையற்காரராக பணியாற்றத் தொடங்கினார். தபாலில் எம்.ஏ (தமிழ்) மற்றும் பி.லிட் (தமிழ்) படித்தார்.

இந்நிலையில் மீண்டும் சொந்த ஊரான சேலத்துக்கே ஏகலைவனின் குடும்பம் இடம் பெயர்ந்தது. சேலத்தில் தான் இவருக்கு இலக்கிய தொடர்புகள் ஏற்பட்டது. முதல் கவிதைத் தொகுப்பான ‘பயணவழிப் பூக்கள்’, சேலம் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது. ‘சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள்’, ‘ஊனமுற்றவர்களின் உயரிய சாதனைகள்’, ‘மாற்றுத்திறன் சாதனைச் சித்திரங்கள்’ என்று அடுத்தடுத்து மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை கட்டுரைத் தொகுப்புகளாக வெளியிட்டார். மாற்றுத்திறன் படைப்பாளின் கவிதைகளை தொகுத்து ‘கவிச்சிதறல்’ என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றும் இவரது முயற்சியில் வெளிவந்திருக்கிறது.

கல்வியின் அவசியத்தை சாமானியர்களுக்கும் கொண்டுச் செல்லும் பொருட்டு ‘கல்விச் செல்வம்’ என்ற சிறுநூலையும் வெளியிட்டிருக்கிறார். தனது நூல்களை வெளியிட வாசகன் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் தொடங்கியிருக்கிறார்.

இடையில் திருமணமும் ஆகிவிட, இவரது நல்ல இல்லறத்துக்கு சான்றாக இரண்டரை வயது மகன். இப்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் தற்காலிக இளநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். ஒரு நாளைக்கு ரூ.175/- சம்பளம். நிரந்தர வருவாய் இல்லாவிட்டாலும் பதிப்பகப் பணிகளை நண்பர்களின் உதவிகளோடு, தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார்.

“தையற்கலைஞனாக வாழ்ந்த நாட்களில் எனது வாழ்க்கை ஊசியும், கத்தரிக்கோலுமாய் கழிந்தது. அவற்றைத் தாண்டிய மனம் மலந்த சுகானுபவத்தை பாரதியாரின் கவிதைகள் மூலமாக உணர்ந்தேன். பாரதியின் கவிதைகள் சிறு விதைகளாய் என் இதயத்தில் விழுந்து, விருட்சமாய் வளர்ந்து, வேடிக்கை மனிதனாய் வீழ்ந்து விடக்கூடாது என்ற உத்வேகத்தை அளித்தது!” என்கிறார். பாரதியின் கவிதைகள் இத்தகைய உத்வேகத்தை வாசிப்பவருக்கு அளிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

பிரான்ஸ் தமிழ்ச்சங்கம் 2007ஆம் ஆண்டு பாரதி 125 என்ற தலைப்பில், பாரதியாரின் படைப்புகளின் அடிப்படையில் அமைந்த கதை, கவிதை, கட்டுரைப் போட்டி ஒன்றினை நட்த்தியது. தன்னுடைய வாழ்க்கையையும், பாரதி தனக்கு ஏற்படுத்திய தாக்கத்தையும் கட்டுரையாக வடித்த ஏகலைவனுக்கு அப்போது பரிசும் கிடைத்தது.

ஊக்கமுடையோருக்கு உயர்வு நிச்சயம் என்பதற்கு ஏகலைவனின் வாழ்க்கையே ஒரு சாட்சிதான் இல்லையா?

(நன்றி : புதிய தலைமுறை)