
ஒரு மாரத்தான் ஓட்டக்காரருக்கு என்ன தேவை? புரோட்டின், சமவிகிதத்தில் கார்போ-ஹைட்ரேட், விட்டமின் இவையெல்லாம் அதிகளவில் இருக்கும் உணவுப்பொருட்கள், உடல் ஊட்டத்துக்கு தேவையான மருந்துகள் இதெல்லாம் அவசியம் என்பீர்கள். ஐம்பத்து மூன்று வயதான ராஜம் கோபிக்கு துரதிருஷ்டவசமாக இதெல்லாம் கிடைக்கவில்லை.
“இட்லி, சாப்பாடு, ரொட்டி, ஆம்லெட், அப்பளம் - இவைதான் என் ஓட்டத்துக்கு ஊட்டம். என்னிடம் இருக்கும் பணத்துக்கு அதிகபட்சமாக இவற்றைதான் என்னால் வாங்கமுடியும்” என்கிறார்.
சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் ராஜமுக்கு ஆர்வம் அதிகம். ஒன்பதாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டி விட்டார். துப்புரவுப் பணியாளராக கொச்சியில் பணிபுரிந்திருக்கிறார். இடையில் திருமணமும் ஆனது. கணவர் கோபி, அரசுப் பேருந்து நிலையம் ஒன்றில் சுமை தூக்குபவர். பொருளாதாரக் காரணங்களுக்காக அவ்வப்போது இடம்பெயர நேரிட்டது. மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள்.
திடீரென ஒரு நாள் ராஜமுக்கு மீண்டும் தடகளப் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக இந்தியக் கணவர்கள் தங்கள் இல்லத்தரசிகளின் இல்லம் தாண்டிய ஆர்வங்களை ஊக்குவிப்பதில்லை. கோபி ஒரு விதிவிலக்கு. கோட்டயத்தில் நடைபெற்ற மூத்தோருக்கான ஒரு போட்டியில் பங்குகொண்டு ராஜம் குறிப்பிடத்தக்க அளவில் சாதித்தார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளிலும், நடைப்போட்டியிலும் தங்கம் வென்றார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயானபிறகும் ராஜம் விளையாட்டுத் துறையில் மீண்டும் நுழைந்து வெற்றி கண்டதற்குப் பின்னால் அவரது கணவர் மட்டுமே இல்லை. இன்னொருவரும் உண்டு. ராஜமுக்கு பயிற்சியளித்த கோச் ஏ.ராமச்சந்திரன். இவர் திரிச்சூர் போலிஸ் அகாடமியில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர்.
இதெல்லாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம். அதன்பின் நடந்தது வரலாறு. ராஜம்கோபியின் ஓட்டத்தை காலத்தால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது கிட்டத்தட்ட 80 பதக்கங்கள் அவரது வசம். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் வென்ற 40 பதக்கங்களும் அவற்றுள் அடக்கம்.
கடந்த 2008ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த மூத்தவர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை இவர். கடந்த ஆண்டு நடந்த 22வது மலேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் நான்கு தங்கம். கடந்த 2000ஆம் ஆண்டின்போது பெங்களூரில் உலக மூத்தோர் தடகளப்போட்டி நடந்தபோது, 5 கி.மீ நடைப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, மூத்தோர் தடகளப்போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியராய் தன் பெயரை பதிவு செய்துகொண்டார்.
2007ஆம் ஆண்டு இத்தாலியில் மூத்தோர் உலக தடகளப்போட்டி நடந்தபோது, இவர் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், துரதிருஷ்டவசமாக விசா பிரச்சினைகளால் இவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. இதுபோலவே 2005ல் இங்கிலாந்திலும், 2006ல் ஆஸ்திரேலியாவிலும் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டிகளில் பொருளாதாரம் காரணமாக இவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
போதுமான ஊட்டச்சத்துகளோடு கூடிய உணவு கிடைக்காவிட்டாலும், இன்றும் பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் மீட்டர் ஓட்டம், பத்தாயிரம் மீட்டர் நடை, நானூறு மீட்டர் தடைதாண்டிய ஓட்டம் மற்றும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள தேவையான உடல் தகுதிகளோடு இருக்கிறார்.
பொதுவாக தடகள வீராங்கனைகள் ஐம்பது வயதிற்குள்ளாக ஓய்வு பெற்று தங்கள் வாழ்க்கையை வாழதான் விரும்புவார்கள். பேரன், பேத்தியோடு நேரத்தை செலவிடுவார்கள். ராஜம் கோபியோ தன்னுடைய வாழ்க்கையே இப்போதுதான் தொடங்கியிருப்பதாக பெருமிதப்படுகிறார். “என் ஒரு நாள் உணவை உட்கொள்ள நான் மறந்தாலும் மறப்பேனே தவிர, ஓட்டப்பயிற்சியை ஒருநாளும் மறந்ததில்லை” என்று சிரிக்கிறார். மலையாளம் சரளமாகப் பேசும் இவருக்கு இந்தியும், ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சம் வருகிறது.
என்னதான் பதக்கங்களும், பெருமையுமாக குவிந்தாலும் ராஜம்கோபியின் பொருளாதார நிலைமை ஒன்றும் பெரியதாக மேம்பட்டு விடவில்லை. அவரது கணவர் இப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார். மகன் ஆட்டோ ஓட்டுகிறார். மகளை ஒரு கார்பெண்டருக்கு கட்டி கொடுத்திருக்கிறார். தற்போது கொச்சியின் தல்வால்க்கர் மைதானத்தில் ராஜமும் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார். வருமானம் போதாமல் லேப் ஒன்றிலும் துப்புரவுப் பணிகளுக்குப் போகிறார். “நான் சம்பாதிக்கும் பணம் என் குடும்பத்துக்கு போதவில்லை என்பது நிஜம்தான்!” என்று வருத்தப்படுகிறார்.
துப்புரவு பணியாளர் பணிக்கு கேரள அரசின் முதல்வரிடமும், விளையாட்டுத் துறை அமைச்சரிடமும் விண்ணப்பித்திருக்கிறார். பல்வேறு விண்ணப்பங்களை அளித்தும் பலன் ஒன்றுமில்லையாம். இத்தனைக்கும் ‘2008ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை’ விருதினை கேரள மூத்தோர் விளையாட்டு அமைப்பிடம் இருந்து பெற்றவர் ராஜம்கோபி.
ஐம்பத்தி இரண்டு வயதானாலும் பயிற்சியில் இவர் எந்தக் குறையும் வைப்பதில்லை. தினமும் ஒருமணி நேர ஓட்டப் பயிற்சி. இதுமட்டுமன்றி வாரம் ஒருமுறை தொடர்ச்சியாக பதினைந்து கிலோ மீட்டர் ஓட்டம். “ஓடிக்கொண்டிருக்கும் போதே என் மூச்சு நின்றுவிட வேண்டும்!” என்பதுதான் ராஜம்கோபியின் இறுதிவிருப்பமாம்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :
ராஜம் கோபியின் டயட் ரகசியம்!
காலை 6.30 - 8.30 :
ஓட்டப் பயிற்சியின் போது தண்ணீர் மட்டும்
காலை 8.45 :
ஒரு கப் தேனீர்
காலை 10.45 :
பால் மற்றும் இரண்டு கப் ஓட்ஸ்
இரண்டு இட்லி அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு முட்டை
பிற்பகல் 12.30 :
சாம்பார் சாதம், ஏதாவது ஒரு காய்கறியுடன்.
மாலை 4.00 :
டிக்காஷன் காஃபி, நான்கு மேரி பிஸ்கட்டுகளுடன்
அல்லது இரண்டு சிறிய தோசை
மாலை 6.00 :
ஒரு கப் பூஸ்ட் (சுடுதண்ணீர் கலந்தது)
இரவு 8.30 :
சாம்பார் சாதம், ஒரு ஆம்லெட்
இரவு 11.30 :
ஒரு ஆப்பிள் மற்றும் கைநிறைய திராட்சைப்பழம்
(நன்றி : புதிய தலைமுறை)