15 ஏப்ரல், 2010

மாமிமெஸ் - பேல்பூரி - கோலி சோடா!


கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலநாட்களுக்கு முன்பு மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. மயிலைவாசி நண்பர் மாமி மெஸ்ஸுக்கு தான் அழைத்துச் செல்வதாக என்னையும், என் நண்பரையும் அழைத்துச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்றதால் மாமி மெஸ் மூடப்பட்டிருந்தது. வேறு வழியின்றி கற்பகாம்பாளுக்கு போனோம்.

மயிலாப்பூர் மாமி மெஸ் தான் ஒரிஜினல். இதே பெயரில் ஏராளமான டூப்ளிகேட் மெஸ்கள் சுற்றுவட்டாரங்களில் இயங்குவதாக கேள்விப்படுகிறோம். மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் கிழக்கு மாடவீதியில் பாரதிய வித்யா பவன் வரும். அதையொட்டி வலதுபுறமாக செல்லும் சந்தில் சென்றால் ஐந்தாவது அல்லது ஆறாவது வீடு மாமி மெஸ். விநாயகா கேட்டரிங் என்று போர்டு மாட்டியிருக்கும். மெஸ் என்றதுமே கற்பகாம்பாள் மாதிரி நாற்காலி, டேபிள் எல்லாம் போடப்பட்டு வசதியாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். லிட்டரலாக சொல்லப்போனால் மாமி மெஸ் ஒரு கையேந்தி பவன். சாப்பாடு கிடைக்காது. டிஃபன் மட்டும் தான். ஞாயிறு விடுமுறை.

ம்ஹூம். கற்பகாம்பாள் இப்போது ஆஹா ஓஹோவென்று புகழும்படியான சுவையில் இருப்பதாக தெரியவில்லை. பொடி தோசை பயங்கர காரமாக இருந்தது. சரக்கடித்தால் மட்டுமே அதை சந்தோஷமாக சாப்பிடமுடியும். நெய் ரோஸ்ட் திகட்டியது. அடை அவியல் சாப்பிட்ட நண்பர் மட்டும் திருப்தியாக இருந்தார். அடுத்து அவரும் ஒரு பொடிதோசை சாப்பிட்டு நொந்துப்போனார். கடைசியாக சாப்பிட்ட டிகிரி ஃபில்டர் காபி சொர்க்கம். எனக்கு காபி கொஞ்சம் கசப்பாகவே இருக்கவேண்டும். ரொம்ப சூடாக சாப்பிடமாட்டேன். நன்கு ஆற்றி மிதமான சூட்டில் சாந்து மாதிரி கொழகொழவென்று இருக்கும் காப்பியை காலையில் குடிக்க எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். பெட் காஃபி இல்லாவிட்டால் நான் எழுந்திருக்கவே மாட்டேன்.

அடுத்து ஓரிரு நாள் கழித்து மாமி மெஸ்ஸுக்கும் போனோம். சாலையோரத்தில் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திவிட்டு மாமாக்களும், மாமிகளும் பேட்ச் பேட்சாக கையில் தட்டேந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்கம் பக்கம் முழுக்க அக்ரஹாரத்து ஸ்டைல் வீடுகளும், அபார்ட்மெண்ட்களும். சாப்பிடுபவர்கள் யாரும் இலைகளையும், தட்டுக்களையும் ஆங்காங்கே போட்டுவிடுவதில்லை.

பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாக ஜோதி தியேட்டருக்கு ஒரு காலந்த்தில் வந்தது மாதிரி வத்துக்கொண்டே இருக்கிறார்கள். மெஸ் நடப்பதற்கான அறிகுறி இல்லாமல் சாலை சுத்தமாக இருக்கிறது. இங்கே சாப்பிடுபவர்களை காட்டிலும், பார்சல் வாங்கி வீட்டில் சாப்பிடுபவர்கள் தான் அதிகமாம். மெஸ்காரர்கள் ஒரு நொடி கூட ஓய்வின்றி பார்சலித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மாமிக்கள் நிறைய பேர் வந்து சாப்பிடுவதால் தான் இதற்கு ‘மாமி மெஸ்' என்று பெயர் வந்ததா என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன். மெஸ்ஸின் உள்ளே படமாகிவிட்ட ஒரு மாமியை காட்டினார். அவர் நடத்திய மெஸ்ஸாம் அது. தீர்க்க சுமங்கலியாக பழுத்த வயதில் சமீபத்தில் தான் சிவனடி போய் சேர்ந்தாராம். ஆனாலும் அந்த மாமியின் கைமணம் இன்னமும் சமையலில் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள்.

தோசை, இட்லி, போண்டா, சாம்பார், சட்னி, வடக்கறி இத்யாதி.. இத்யாதியெல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருக்கிறது. தோசை, இட்லி சமாச்சாரங்களை மட்டும் அவர்களே தட்டில் போடுகிறார்கள். சட்னி, சாம்பார் நமக்கு வேண்டிய அளவுக்கு நாமே ஊற்றிக் கொள்ளலாம். இங்கே சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் சாம்பாராக தானிருக்கிறார்கள்.

நானும் கூடவந்த நண்பரும் ஆளுக்கொரு பொடிதோசை சாப்பிட்டோம். ஆஹா.. என்ன சுவை! என்ன சுவை! பொடின்னா மாமி மெஸ் பொடிதான்! கற்பகாம்பாளிலும் சாப்பிட்டோமே பொடிதோசை என்ற பெயரில் ஏதோ ஒரு வஸ்துவை. அடுத்து நண்பர் இரண்டும், நான் ஒன்றுமாக கல்தோசை சாப்பிட்டோம். இங்கே தோசை என்றாலே அது கல்தோசை தான். வேறு எதுவும் சாப்பிடும் ஸ்பெஷல் மூடில் இல்லை. பில்லுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு கணக்கீடு போட்டு இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்.

கற்பகாம்பாள் ரேட்டை மனதில் கொண்டு நூற்றி இருபது ரூபாய் வரை பழுத்திருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஒரு நூறு ரூபாய் நோட்டையும், மூன்று இருபது ரூபாய் நோட்டுக்களையும், ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் பில் போடுபவர் திருப்பித் தந்தார். மொத்தமாகவே முப்பத்தி ஐந்து ரூபாய் தான் ஆனது. சரவணபவன் தரத்தில், அதைவிட சுவையில் சரக்கு இருந்தாலும் ரேட்டு என்னவோ கையேந்திபவன் ரேட்டு தான். தோசை ஐந்து ரூபாய். பொடி தோசை பத்து ரூபாய். இட்லி, போண்டா வகையறாக்கள் ரேட்டு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது விசாரிக்க வேண்டும்.

மாலை வேளைகளில் ரெப்ரெஷ் ஆக செம மெஸ் இந்த மாமி மெஸ். மாமி மெஸ் சமையலை ருசிப்பதற்காகவே அய்யராக கன்வெர்ட் ஆகி பலபேர் மயிலாப்பூர்வாசியாகி விட்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - *

சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சிங்கிளாக கூட போவதென்பது பர்ஸை பழுக்க வைக்கும் வேலை. மேற்கூரையே இல்லாத டூவீலர் பார்க்கிங்குக்கு முதன்முதலாக பத்து ரூபாய் வாங்கி புண்ணியம் கட்டிக்கொண்டவர்கள் அவர்கள். குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு நடுத்தரக் குடும்பம் சென்றால் ஒரு மாத சம்பளத்தை டிக்கெட் + ஸ்னாக்ஸ்க்காக தண்டம் அழுதுவிட்டு வரவேண்டும். நானும், நண்பர் ஒருவரும் அங்கே படம் பார்க்கச் சென்றால் ஸ்னாக்ஸ் வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுவது வாடிக்கை.

சமீபத்தில் ஒரு ’யூ சர்ட்டிபிகேட்’ ஆங்கிலப்படம் பார்க்கப் போயிருந்தோம். சத்யமுக்கு எதிரிலிருந்த ஒரு பேல்பூரி கடையில் பேல்பூரி வாங்கி சாப்பிட்டோம். கடைக்காரர் சேடு கிடையாது. இருந்தாலும் ஒரு மசலா எஃபெக்ட்டுக்காக சேடு மாதிரி மாறுவேடம் போட்டிருந்தார். மசாலாவை கொஞ்சம் தூக்கலாக போடும்படி என்னுடன் வந்த நண்பர் கடைக்காரரை தீவிரவாத அணுகுமுறையோடு வற்புறுத்தினார். தூக்கலான மசலாவோடு வந்த பேல்பூரி தீக்கங்கு மாதிரி இருந்தது. கடைக்காரர் ஊற்றியது மசலாவா? சில்லி சாஸ்ஸா என்று தெரியவில்லை. வாயில் வைத்ததுமே நாக்கு மட்டுமன்றி, உடலின் சகலபாகங்களும் எரிந்தது. எவ்வளவு நீர் குடித்தும் எரிச்சல் அடங்கவில்லை.

“என்னங்க இவ்ளோ காரம்?” என்று கடைக்காரரிடம் கேட்டதுக்கு, “அதுக்கு தான் பக்கத்துலே ஜிலேபியும் விற்கிறோம். ரெண்டு ஜிலேபி வாங்கி வாயிலே போட்டுக்கோங்க. எல்லாம் சரியாயிடும்” என்றார் கூலாக. வியாபாரத் தந்திரம்!

* - * - * - * - * - * - *

இன்னமும் கோலி சோடாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் கோலி சோடாவை பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது. பன்னீர் சோடாவை விட சாதா சோடா தான் எனக்கு பிடிக்கும். சோடாவை உடைத்து லெமன், சால்ட் சேர்த்து அடிக்கும் லெமன் சால்ட் சோடா தரும் கிக்குக்கு இணையேயில்லை. லெமன் கொஞ்சம் புளித்திருந்தால் ஒத்தமரக் கள் சுவை. இதே கோலி பாட்டிலில் அடைத்து இருமல் மருந்து ஸ்மெல்லில் வரும் 'கலரு' இப்போது சுத்தமாக கிடைப்பதில்லை. ஆனால் கோலி சோடா இன்னமும் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கூல்பார் ஒன்றில் கிடைக்கிறது. காட்டாக கேஸ் அடைக்கப்பட்ட அதே சுவைக்கு இன்றும் உத்தரவாதம் உண்டு. சென்னையில் வேறெங்காவது கோலி சோடா கிடைக்கிறதா? சைதாப்பேட்டையில் கிடைப்பதாக முன்பு கிருபாஷங்கர் ஒருமுறை சொன்னதாக நினைவு.

12 ஏப்ரல், 2010

கீற்று இணையத்தளத்தின் பாசிஸம்!

முன்பு நான் மதிப்பு வைத்திருந்த ஆளுமைகள் மீதும், அமைப்புகள் மீதுமான பிம்பம் எனக்கு உடைந்துகொண்டே வருகிறது. தமிழ், தேசியம், இத்யாதிகள் மீதான பிரேமை இதுபோன்ற ஆளுமைகள் மற்றும் அமைப்புகளின் பால் என்னை ஈர்த்தது. ஆனால் நெருங்கிப் பார்த்தும், தொடர்ச்சியான செயல்பாடுகளை அவதானித்துமே நான் மேலே குறிப்பிட்ட பிம்ப உடைப்பு ஏற்படத் தொடங்கியது.

கடைசியாக ‘கீற்று' இணையத்தளம்.

இணையத்தளத்தை நான் பாவிக்கத் தொடங்கிய ஆரம்பகாலக் கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இத்தளத்தை நம்பினேன். இணையத் தளங்களில் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்திக்கு எதிரானதாகவும், மாற்று அரசியலையும், மாற்று சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் கீற்று விளங்கியது அந்தக் காலம்.

ஆனால் ஒரு கட்டத்தில் மாற்று சிந்தனையாளர்களுக்கு இடையே கூட பிரிவினை ஏற்படுத்தி குளிர்காய கீற்று முயல்கிறதோ என்றுகூட எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக ஆதவன் தீட்சண்யா தொடர்பான பிரச்சினையை சொல்லலாம். வேண்டுமென்றே தீட்சண்யாவின் ஆளுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கீற்று செயல்படுகிறது என்றே அப்போது எண்ணினேன். அதன் தொடர்ச்சியாக ஆதவன் பங்கேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மீதான காழ்ப்பும் கூட கீற்றுக்கு ஏற்பட்டிருப்பது இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

கடந்த வாரம் எனக்கு தோழர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் கீழே :

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கான அறிவிப்பினை கீற்றுத்தளமும் இன்று வெளியிட்டிருக்கிறது. எப்படி என்று கீழே பாருங்கள்! சுட்டி : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 (அனேகமாக இப்பதிவினை கண்டபிறகு கீற்று நிர்வாகம் அந்தப் பக்கத்தை அழித்துவிடலாம். ஆனாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது)

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்

கீற்று செய்திருக்கும் ஆபாசமான / அருவருப்பான வேலையை சிகப்பு எழுத்துகளில் நீங்கள் காணமுடியும். இதுவரை வெகுசன சாதீய ஊடகங்கள் எத்தகையை திருகுவேலையை செய்துவருகிறது என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோமே அதே வேலையைதான் ‘கீற்று' போன்ற மாற்று ஊடகங்களும் செய்துவருகின்றன என்ற கொடுமையை எங்கே போய் சொல்வது? கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இன்னொரு பெரிய கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததாம்.

பால் சக்கரியா மீதான மார்க்சிஸ்டுகளின் தாக்குதலை கீற்று கண்டிப்பதாக இருந்தால் அதை வேறு வழியில் கண்டிக்கலாம். கட்டுரை எழுதலாம். சம்பந்தமேயில்லாமல் ஒரு நிகழ்வின் அழைப்பை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

மேற்கண்ட நிகழ்வில் மார்க்சிஸ்ட் தோழர்களான ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிலையில் கீற்று செய்திருக்கும் திருட்டுச் செயல் வெட்கக்கேடானது. கட்சிக்கும், அத்தோழர்களுக்கும் இடையேயான உறவை கெடுப்பது. கீற்று மீதான நம்பகத்தன்மையை என்னைப் போன்றோர் முற்றிலுமாக இழந்துவிடக் கூடிய அருவருப்பான செயல் இது. அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட.

ஏ.ஆர்.ரஹ்மான் - பிரத்யேகப் பேட்டி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருது வாங்கியபோது கிராமி நாயகன் ஒரு பதிவிட்டிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டிக்காக சந்தித்த அனுபவங்களை அதில் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

பதிவை வாசித்த பலரும் அப்பேட்டியை இணையத்தில் ஏற்றும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சீனியர் கல்யாண்ஜி தன்னுடைய வலைப்பதிவில் இப்போது அப்பேட்டியை பதிவிட்டிடுக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டியை இங்கே வாசிக்கலாம்!

8 ஏப்ரல், 2010

கொடுக்குறதை கொடுத்தாதான்...


ஒரு ஊர்லே ஒரு மருமவ இருந்தாளாம். மாமியாக்காரி எதை சொன்னாலும் புரிஞ்சுக்காம வேற ஏதாவது செய்வாளாம். அது மாதிரி நேரத்துலே மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா நாலு வாங்குவாளாம். தொடப்ப அடி பட்டதுக்கு அப்புறமா தான் மாமியாக்காரி சொன்னதை கரீக்ட்டா செய்வாளாம் மருமவ.

”தெனமும் சாயங்காலம் விளக்கு வெக்குறதுக்கு முன்னாடி போய் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு மாமியாக்காரி சொன்னா மருமவ வெளக்கு வெச்சதுக்கப்புறமா தான் கொடத்தை கையிலே எடுப்பாளாம். அதனால தெனமும் வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடி மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா விளாசி விட்டுருவாளாம். தொடப்பக்கட்ட அடி வாங்குனதுக்கு அப்புறமா தான் தண்ணி புடிக்க மருமவ கொடத்தை எடுக்குறது வழக்கம்.

ஒரு முறை மருமவளோட அம்மா வீட்டுலேர்ந்து ஏதோ சீர் செய்ய வந்திருந்தாங்களாம். அவங்க வந்தது சாயங்கால நேரம். மாமியாக்காரி கிட்டே சீர்வரிசையை கொடுத்து “எம்பொண்ணு நல்லா நடந்துக்கறாளா”ன்னு கேட்டாங்களாம். மருமவளப் பத்தி அவங்க வீட்டுக்கே கம்ப்ளையண்ட் பண்ணக்கூடாதுன்னு “ரொம்ப நல்லா நடந்துக்கறா என் மருமவ”ன்னு மாமியாக்காரி பெருந்தன்மையா சொல்லியிருக்கா. அவங்க வீட்டு மனுஷா முன்னாடி “போம்மா, வாம்மா”ன்னு மருமவளை கவுரதையாவும் மாமியாக்காரி நடத்தியிருக்கா.

விளக்கு வெக்குற நேரம் வந்துருக்கு.

”மருமவளே வெளக்கு வெக்கிற நேரம் வந்தாச்சு. போயி தண்ணி புடிச்சாந்துரும்மா”ன்னு மாமியாக்காரி தன்மையா சொல்லியிருக்கா.

கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடியும், தன் வீட்டுக்காரங்க முன்னாடியும் முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம்.

மருமவளோட அம்மா, “ஏண்டி அத்தை தான் சொல்றாங்க இல்லை. போயி தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு சொல்லியிருக்காங்க.

ஒடனே மருமவ, “அத்தை! நீங்க கொடுக்குறதை கொடுத்தா தான் நான் தண்ணி மொண்டாருவேன்”ன்னு சொன்னாளாம்.

மாமியாக்காரிக்கு தர்மசங்கடமாப் போச்சி. “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா. அம்மா, அப்பாவெல்லாம் வந்துருக்காங்க இல்லே”ன்னு பாசமா சொன்னாளாம்.

மறுபடியும் மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.

உடனே மருமவளோட அம்மா, “ஏன் சம்பந்தி, என் பொண்ணுக்கு ஏதோ பாசமா கொடுப்பீங்களாமே? அதை கொடுங்க, அவ தண்ணி மொண்டாந்துருவா”ன்னு வெவரம் புரியாம வெள்ளந்தியா சொல்லியிருக்காங்க.

நெலைமை கட்டுமீறி போவறதை பார்த்த மாமியாக்காரி வேற வழியில்லாம தொடப்பக்கட்டைய எடுத்து மருமவள நாலு வாங்கு வாங்கினாளாம். அதுக்கப்புறமா தான் மருமவ தண்ணி மொண்டார போனாளாம். மருமவ வீட்டிலேர்ந்து வந்தவங்க வாயடைச்சிப் போனாங்களாம்.

கதை சொல்லும் நீதி : கொடுக்குறதை கொடுத்தா தான் ஆலமரத்துப் பிசாசு அடங்குமாம்.

7 ஏப்ரல், 2010

கஸ்கூட்டா!

அப்போது ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருந்ததாக நினைவு. அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒட்டுண்ணித் தாவரங்களை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒட்டுண்ணித் தாவரங்கள் ஸ்டார்ச் (ஸ்காட்ச் அல்ல) தயாரிக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு மற்றொரு தாவரங்கள் தயாரிக்கும் ஸ்டார்ச்சினை உறிஞ்சி உயிர் வாழும் என்றார்.

எனக்கு அந்த கான்செப்ட் கொஞ்சம் ஆவலை அதிகமாகவே தூண்டியது. எங்கள் ஊர் ஈஸ்வரன் கோயிலில் வேம்பும், ஆலமரமும் பின்னி பிணைந்திருக்கும். அதில் ஒன்று ஒட்டுண்ணித் தாவரமா என்று கேட்டேன். அப்படியில்லை வேம்பும், ஆலும் தனித்தனியாகவே ஸ்டார்ச் தயாரித்துக் கொள்ளும், இடப்பற்றாக்குறையால் பின்னி பிணைந்து வளர்ந்திருக்கும் என்றார். அப்போ ஒட்டுண்ணித் தாவரம்னா எதுவென்று கேட்டபோது "கஸ்கூட்டா" (cuscuta) என்று ஒன்று இருக்கிறது என்றார். பெயரைக் கேட்டதுமே வித்தியாசமாக இருந்ததால் அச்செடியை நான் பார்க்க இயலுமா என்று கேட்டேன். கொண்டுவர முயற்சிக்கிறேன் என்றார் ஆசிரியர்.

நானே கஸ்கூட்டாவைப் பற்றி மறந்துவிட்டேன். சில மாதங்கள் கழித்து எங்கிருந்தோ ஒரு கற்றை கஸ்கூட்டாவை பிடித்து வந்தார் சைன்ஸ் மாஸ்டர். பசுமஞ்சள் நிறத்தில் நரம்பு போல இருந்தது. அதற்கு வேரோ, இலைகளோ கிடையாது. அச்செடியை என்னிடம் கொடுத்தவர் கொஞ்ச நேரம் பார்த்துட்டு அப்படியே வெய்யிலில் போட்டுடு. ஏதாவது செடி கொடி மீது போட்டுடாதே என்று எச்சரித்தார். அப்படிப் ஏதாவது செடி மீதோ, மரம் மீதோ படரவிட்டால் சிலகாலத்தில் அச்சேடியையோ, மரத்தையோ உறிஞ்சி கஸ்கூட்டா மட்டுமே உயிர்வாழும் என்றார்.

கஸ்கூட்டா அப்படி என்னதான் செய்துவிடும் என்று பார்க்கலாம் என்று நினைத்து அந்த கற்றையை எடுத்துச் சென்று எங்கள் தெருவில் இருந்த ஒரு நொச்சிலி மரத்தின் மீது ஏறி போட்டு வைத்தேன். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சென்று கஸ்கூட்டா ஏதாவது மாயம் செய்கிறதா என்று பார்த்தேன். அன்று மாலை 7 மணியளவில் கடைசியாக பார்த்தபோது கொஞ்சம் வாடினாற்போல இருந்தது. மாஸ்டர் சொன்னதெல்லாம் ரீல் என்று நினனத்துக் கொண்டேன். கஸ்கூட்டாவை அப்போதைக்கு மறந்துவிட்டேன்.

ஒருவாரம் கழித்து யதேச்சையாக அந்த நொச்சிலி மரத்தை பார்த்தபோது கொஞ்சம் ஆச்சரியாமாக இருந்தது. நான் போட்ட ஒரு கற்றை கஸ்கூட்டா கொஞ்சம் வேகமாக வளர்ந்து புதர்போல காட்சியளித்தது. அதைப் பார்க்க செடி போல இல்லாமல் இடியாப்பச் சிக்கல்களாய் தன் நரம்புகளை வளர்த்து வித்தியாசமானதாக காட்சி அளித்தது. அதிலிருந்து ஒரு பெரிய நரம்பை இழுத்து குட்டியாக ஐந்து மோதிரங்கள் செய்து விரலில் அணிந்துகொண்டேன். கையில் சில சுற்று சுற்றி திருப்பதி கயிறு போல அணிந்துகொண்டேன். அந்த கோலத்திலேயே பள்ளிக்குச் செல்ல மற்ற மாணவர்கள் அது என்னவென்று வித்தியாசமாக கேட்டார்கள். "கஸ்கூட்டா.. நானே வளர்க்கிறேன்!" என்று பெருமையாக சொன்னேன்.

"எனக்கொண்ணு கொடு! எனக்கொண்ணு கொடு" என்று சில மாணவர்கள் நான் கஸ்கூட்டாவில் செய்த மோதிரத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்கள். செல்வம் மட்டும் நான் வளர்க்கும் கஸ்கூட்டாவை பார்க்க மாலை வருவதாக சொன்னான். அன்று மாலை வந்த செல்வன் நொச்சிலி மரத்தில் வளர்ந்திருந்த கஸ்கூட்டாவை பார்த்து ஆச்சரியப்பட்டான். அவனும் வளர்க்க விரும்புவதாக சொல்லி கொஞ்சம் கஸ்கூட்டாவை பறித்துக் கொண்டு "எப்படி வளர்ப்பது?" என்று என்னிடம் ஆலோசனையும் கேட்டுச் சென்றான்.

ஒருமாத காலத்தில் கஸ்கூட்டாவின் வளர்ச்சி அபாரவளர்ச்சியாக இருந்தது. ஜெயமோகனின் டார்த்தீனியம் போல அந்த கஸ்கூட்டா நொச்சிலி மரத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நொச்சிலி இலைகளே வெளியே தெரியவில்லை அல்லது அம்மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கஸ்கூட்டா சாப்பிட்டுவிட்டிருந்தது. மரம் என்பதற்கு அடையாளமாக ஒரு கட்டையை நட்டுவைத்தது போல அந்த நொச்சிலி மரம் குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தது. எங்கள் தெருவை கடப்பவர்கள் எல்லாம் கஸ்கூட்டாவை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அது என்ன செடியென்று கேட்பார்கள். கஸ்கூட்டா என்று பெருமையாக பதில் சொன்னால் ஒன்றும் புரியாமல் போய்விடுவார்கள். சில பேர் அது குரோட்டன்ஸில் ஒரு வகை என்று நினைத்து சிலவற்றை பறித்துச் சென்று அவர்கள் வீடுகளிலும் வளர்க்க ஆரம்பித்தார்கள்.

என்னிடம் கஸ்கூட்டாவை கடன் வாங்கிப் போன செல்வமும் அவர்கள் வீட்டருகில் இருந்த பீப்பி மரத்தில் (அதை சித்தகத்தி மரம் என்று ஒருவர் கூறுவார்) கஸ்கூட்டா பண்ணையை வளர்க்க ஆரம்பித்திருந்தான். கஸ்கூட்டா வளரவேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் தண்ணியெல்லாம் ஊற்றினானாம். ஒன்றுமேயில்லாமல் அசுரத்தனமாக வளரும் கஸ்கூட்டா செல்வத்தின் பறிவான கவனிப்பில் நன்றாகவே வளர்ந்தது. ஒரு மாதகாலத்திலேயே பீப்பி மரத்திலிருந்த பீப்பி பூக்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிட்டது என்னை சோகத்தில் ஆழ்த்தியது. பீப்பி பூவின் காம்பினை நம் இதழ்களில் வைத்து ஊதினால் நாதஸ்வரம் போன்ற ஓசையை எழுப்பும். அந்த பூவுக்கு நல்ல மணமும் உண்டு.

இவ்வாறாக எங்கள் பகுதியில் பல வீடுகளில், பல மரங்களில் கஸ்கூட்டா தன் அபாயமுகத்தை காட்டாமல் பாசமும், பரிவுமாக வளர்க்கப்பட்டது. நொச்சிலி மரத்தில் வளர்ந்த கஸ்கூட்டா முழுவதுமாக அம்மரத்தை சாகடித்து வளர இடமில்லாமல் பக்கத்திலிருந்த புதர்களையும், புல்வெளிகளையும் கூட தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. வீடுகளில் கஸ்கூட்டா வளர்த்தவர்களெல்லாம் தாங்கள் ஆசையாக வளர்த்த மாங்கன்று, செம்பருத்திச் செடிகளை இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

ஆகாயத் தாமரையின் ஒரு செடியை தெளிவான நீர் இருக்கும் ஒரு நீர்நிலையில் விட்டால் வெகுவிரைவில் அந்த நீர்நிலை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விடும். அதுபோலவே கடற்பாரை (சில பேர் காட்டாமணக்கு என்று இதை சொல்கிறார்கள்) என்று சொல்லக்கூடிய ஒரு செடிவகையும். அதுபோல கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் எங்கள் பகுதி முழுவதையும் கஸ்கூட்டா தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து தன்னாட்சியை நிறுவியது. கொஞ்சம் லேட்டாக முழித்துக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் அதன்பின்னர் கஸ்கூட்டா இருந்த இடங்களையெல்லாம் கண்டறிந்து அவற்றை எரித்து அழித்தது. அதன்மூலமாக எங்கள் பகுதியில் பசுமை காக்கப்பட்டது. கஸ்கூட்டாவை பார்த்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

நீங்கள் யாராவது, எங்கேயாவது கஸ்கூட்டாவை பார்த்திருக்கிறீர்களா? இப்போதும் அது எங்கேயாவது இருக்கிறதா?

கஸ்கூட்டா குறித்த விக்கிப்பீடியா சுட்டியை இங்கே சுட்டிப் பாருங்கள்!