21 ஏப்ரல், 2010

ஆடிட்டர் ஆக ஆசையா?

ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.

ஆடிட்டர் ஆக சி.ஏ., (Chartered Accountant) தேர்வு எழுதியிருக்க வேண்டும். நம் நாட்டில் இத்தேர்வினை நடத்தும் அமைப்பு ஐசிஏஐ என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா. சார்ட்டர்ட் அக்கவுண்ட் சட்டம் 1949ன் படி இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. தேர்வுகள் நடத்தவும், ஆடிட்டர் லைசென்ஸ்கள் வழங்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுமட்டுமே. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்முறை கணக்குப் பணியாளர்களை வைத்திருக்கும் அமைப்புகளில் இதற்கு இரண்டாவது இடம்.

கம்பெனி சட்டம் 1956 மற்றும் வருமானவரிச் சட்டம் 1961ன் படி நிறுவனங்களின் கணக்கு வழக்கு ஆடிட்டர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடிட்டர் சான்றிதழ் இல்லாத தணிக்கை அறிக்கைகள் அரசால் அங்கீகரிக்கப்படாது. எனவே ‘ஆடிட்டர்’ என்பவரின் பணி இந்தியாவின் இன்றியமையாத பணிகளில் ஒன்று. இவ்வளவு முக்கியமான பணி அது என்பதால்தான் சி.ஏ., தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

சரி. ஒருவர் ஆடிட்டர் ஆக என்ன தகுதி? என்னென்ன தேர்வுகள் எழுதவேண்டும்? தோராயமாக எவ்வளவு செலவாகும்?

சென்னை மயிலாப்பூரில் முப்பது வருடங்களாக இத்தேர்வுக்கு பயிற்சி வழங்கிவரும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஆர்.நாகராஜன் விளக்கமளிக்கிறார். இவர் ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல தலைவராகவும் இருந்தவர்.

நீங்கள் ஆடிட்டர் ஆக முடிவெடுத்துவிட்டால் மூன்று கட்டங்களை கடந்தாக வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே ஒருவர் ஐசிஏஐ அமைப்பில் தனது பெயரை தேர்வுகளுக்காக பதிந்துவிடலாம். ஆனாலும் முதல்கட்டத் தேர்வினை எழுத பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது விதி. பத்தாம் வகுப்பு முடித்த மாணவன் தனது மேல்நிலைக் கல்வியை தொடர்ந்துகொண்டே முதல்கட்டத் தேர்வுக்கும் தன்னை தயார் செய்துக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக நடத்தப்படும் தேர்வு பொதுவானது. மாணவர்கள் இத்தேர்வினை எதிர்கொள்ள போதுமான அறிவோடு இருக்கிறார்களா என்று அறிவதற்காக நடத்தப்படுவது. சி.பி.டி. என்று அழைக்கப்படும் Common Proficiency Test இது. ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் இது நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகள். சரியான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவரே அடுத்தக்கட்டத்துக்கு நகர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

அடுத்தகட்டமாக நடைபெறும் தேர்வு ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் Integrated professional competence course. முதல்கட்டத் தேர்வு ஒரு வாசல் என்று எடுத்துக் கொண்டோமானால், இந்த இரண்டாம் கட்டம்தான் உண்மையில் ஒரு ஆடிட்டரை உருவாக்கக்கூடிய காலக்கட்ட்த்தினை கொண்டிருக்கிறது. சி.பி.டி. முடிந்து ஒன்பதுமாத காலம் இத்தேர்வுக்காக தயார் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நூறு மணி நேரம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும், முப்பத்தைந்து மணிநேர முனைப்புப் பயிற்சியும் (Orientation programme) ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தால் வழங்கப்படும்.

ஐ.பி.சி.சி. தேர்வில் மொத்தம் ஏழு பாடங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ச்சியடைந்தவர்களாக மதிப்பிடப் படுவார்கள். ஏழு பாடங்களும், இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 40 மதிப்பெண் எடுத்திருந்தாலும் கூட, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் இலக்கை எடுத்திருக்க வேண்டும்.

இத்தேர்வில் தேறிவிட்டதுமே, நேரடி களப்பயிற்சிக்கு யாராவது ஆடிட்டர்களிடம் பணிக்கு சேரவேண்டும். அல்லது நிறுவனங்களிலும் கணக்கியல் தொடர்பான பணிகளில் சேரலாம். இந்த பயிற்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அந்நிறுவனங்கள் எவ்வளவு வழங்கவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோல்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்டத்தேர்வு மற்றும் மூன்று வருட நேரடிப் பணிப்பயிற்சி முடிந்தவர்களே இறுதித் தேர்வு எழுதலாம். பணிப் பயிற்சியில் இருக்கும் கடைசி ஆறு மாதங்களிலேயே இறுதித் தேர்வினை எழுதமுடியும். இறுதித் தேர்வின் ஒரு கட்டமாக பொது நிர்வாகம் மற்றும் திறன் வெளிப்படுத்தும் பயிற்சி ஒன்றையும் முடித்தாக வேண்டும்.

அதன் பின்னரே சி.ஏ. என்று அழைக்கப்படும் Chartered Accountant தேர்வு. இதுவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். ஒரு பிரிவுக்கு நான்கு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு பாடங்கள். 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றாலே தனிப்பாடத்தில் தேர்ச்சி என்றாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.

ஓக்கே. இப்போது நீங்களும் ஆடிட்டர்தான்.

மிகச்சுலபமாக ‘ஆடிட்டர்’ என்று சொல்லிவிட்டாலும், இந்த நான்கு வருடக் காலம் என்பது ஒவ்வொரு சி.ஏ. மாணவனுக்கும் மிகக்கடுமையானது. இன்றியமையாத ஒரு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படப் போகும் மாணவன் என்பதால் பாடத்திட்டம் மிக நுணுக்கமானதாகவும், சிரமமானதாகவும் இருக்கும். கவனச்சிதறல் இன்றி கற்பவர்கள் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். ஆடிட்டர் ஆகிவிட்டால் அதன்பிறகு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு, வருமானம் இவற்றைப் பற்றியெல்லாம் நாம் சொல்லவே வேண்டியதில்லை. ஏற்கனவே எல்லோருக்குமே தெரியும்.

சி.ஏ. வரை போகமுடியாது. கணக்காளனாக வேலை பார்க்க ஏதாவது படிப்பு ஐ.சி.ஏ.ஐ.யில் இருக்கிறதா என்று கேட்டீர்களேயானால், அதற்கும் ஒரு படிப்பு இருக்கிறது. முதல்கட்டத் தேர்வினை முடித்தவர்கள், இரண்டாம் கட்டத்தில் ஐ.பி.சி.சி. தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அக்கவுண்டிங் டெக்னிஷியன் கோர்ஸ் (ஏடிசி) என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

+2வுக்குப் பிறகு, கல்லூரியில் வேறு ஏதாவது படித்துக்கொண்டே சி.ஏ., தேர்வு எழுதலாம் என்று சிலர் நினைக்கலாம். அதுபோல எழுதமுடியாது. இரண்டாம் கட்டத்தில் மூன்றுவருட நேரிடைப் பயிற்சி இருக்கிறது இல்லையா? அந்த மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்கும் அலுவலக நேரம் முழுவதிலும், சம்பந்தப்பட்ட மாணவர் பணியாற்ற வேண்டும் என்பது ஐ.சி.ஏ.ஐ.யின் விதி.

எனவே ஏதேனும் பட்டம் படித்துக் கொண்டே சி.ஏ., தேர்வினையும் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள், தபால் வழியில் பட்டம் பெறுவதே சரியான முறையாக இருக்கும். இல்லையெனில் பட்டம் முடித்தபிறகு சி.ஏ., தேர்வுக்கு படிக்கலாம். +2 முடித்த ஒருவர் வழக்கமான வழியில் தேர்வுகளையும், பயிற்சிகளையும் முடித்தால் 21 வயதில் ஐ.சி.ஏ.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்ட ஆடிட்டர் ஆகிவிடலாம்.

சரி, செலவு எவ்வளவு ஆகும்?

மொத்தமாக இந்த நான்கு வருட காலத்தில் தேர்வுக்கட்டணம், பயிற்சிக் கட்டணம் எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் நாற்பத்தைந்து ஆயிரம் வரை செலவாகும். இதையும் கூட நேரடிப் பயிற்சிக் காலத்தில் பெறும் ஊக்கத்தொகை மூலமாக சரிகட்டி விடலாம். தனியாக கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிப்பவர்கள் கூடுதலாக எழுபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்திய ஆடிட்டர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உண்டு. இங்கே சி.ஏ., படித்தவர்கள் வளைகுடா நாடுகளில் பெரிய நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இக்கல்வி பற்றிய மேலதிகத் தகவல்களை http://www.icai.org என்கிற ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நீங்களும் ஆடிட்டராக வாழ்த்துகள்!

(நன்றி : புதிய தலைமுறை)

20 ஏப்ரல், 2010

பசுவை தாண்டி வருவாயா?

17 ஏப்ரல், 2010

தமிழ்நாடு!

80 வயது கிழவி இங்கே வந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் என்று இந்திய குடியுரிமை அதிகாரிகள் கருதுவார்களேயானால், மாவோயிஸ்ட்டுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்துவிடக் கூடிய அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக இருக்கிறது என்று பொருள். சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு.

கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அண்ணா 1967ல் மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்மாற்றமே செய்திருக்க மாட்டார்.

இந்தியாவுக்கு தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை.

16 ஏப்ரல், 2010

வினவுத் தோழர்கள்!

வினவுத் தோழர்கள் சிலரை அவர்களது நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன். ஆயினும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில்லை. நேற்றைய இந்து மக்கள் கட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ம.க.இ.க. செயல்வீரர்களையும், புரட்சிகரப் பெண்கள் முன்னணியினரையும் போர்க்கோலத்தில் காண நேர்ந்தது. எண்பதுகளில் இயங்கிய திமுக இளைஞரணியினரை செயல்வேகத்தில் நினைவுபடுத்தினார்கள்.

லீனாவின் கவிதை குறித்து எனக்கு பெரிய கருத்து எதுவும் கிடையாது. கவிதைகளை வெறுப்பவன் என்ற முறையில் எந்த கவிதை குறித்தும் எனக்கு கருத்து எதுவும் இருந்துவிட முடியாது. கவிதைகளை புரிந்துகொள்வதில் எனக்கு இருக்கும் அறிவு மற்றும் ரசனை குறைப்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே யோனி மாதிரியான சொற்களை பயன்படுத்தி எழுதப்படும் கவிதைகள் வெறும் கிளர்ச்சியுணர்வை தவிர வேறெதையும் எனக்கு தந்துவிட முடியாது. ஆயினும் அச்சொற்களை பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். நவீனக் கவிதைகள் எழுதும்போது இவ்வார்த்தைகள் தவிர்க்க இயலாதவை என்று சொல்கிறார்கள். ஆமாமா என்று நவீனக் கவிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

நேற்றைய நிகழ்வில் மீனா எனும் தோழர், “லீனாவின் கவிதைகளை வாசிக்கும்போது என்னுடல் குறித்த அசூயை எனக்கு நீங்குகிறது” என்பதுமாதிரி சொன்னார். துரதிருஷ்டவசமாக ஆணாக பிறந்துவிட்டதால் இத்தகைய ஒரு உணர்வு எனக்கு வரவில்லையோ என்னவோ? ஆனால் லீனாவின் சர்ச்சைக்குரிய அக்கவிதையை சில தோழிகளுக்கு அனுப்பிவைத்தபோது, அவர்களுக்கு இத்தகைய உணர்வு எதுவும் வரவில்லை என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்த நொடிவரை என் பார்வையில் அது 'அஜால் குஜால்' வார்த்தைகள் நிரம்பிய சொற்குவியல் மட்டுமே.

வினவு தோழர்கள் இக்கவிதையை கடுமையாக எதிர்ப்பதில் இருக்கும் நியாயம், இயக்கங்களில் இயங்குபவர்களுக்கு புரியும். மார்க்சிய சிந்தனை மரபில் (பட்டர்ஃப்ளை எஃபெக்ட் மாதிரி ஜெமோ எஃபெக்ட்) வந்தவர்கள் கோபம் கொள்ளக்கூடிய வகையிலான கவிதையே அது என்பதை வாசித்துப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த காண்டெக்ஸ்டில் லீனா எழுதியிருக்கிறார் என்பதை அவரே விளக்கிச் சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எனவே இக்கவிதையோடு ஒரு அருஞ்சொற்பொருள் பின்னுரையை அவர் தந்திருக்கலாம். பொதுவான வாசிப்பில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய தலைவர்களை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதாகவே நம்மைப் போன்ற சாதாரண வாசகர்கள் எடுத்துக் கொள்ள முடியும்.

கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள். நானும் கலாட்டா செய்த கூட்டத்தில் இருந்திருப்பேன். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அறிஞர் அண்ணாவை மிக லேசாக சீண்டிய டி.என்.சேஷனுக்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை இந்த சமயத்தில் நினைவுகூர வேண்டும். சென்ற இடமெல்லாம் திராவிட இயக்கத்தாரின் கருப்புக்கொடி, விமான நிலையத்தில் ஏழுமணி நேர சிறைவைப்பு என்றெல்லாம் சேஷன் நொந்துபோய், தனது சொற்பிரயோகத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. திமுக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததாக கூட நினைவு.

எனவே லீனா கவிதைக்கான வினவுத் தோழர்களின் எதிர்ப்பு மிக மிக நியாயமானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மற்ற கம்யூனிஸ்டு அமைப்பினருக்கும் இதே கோபமும், எதிர்ப்புணர்வும் இருந்திருக்க வேண்டும் என்ற அவர்களது எதிர்ப்பார்ப்பும் நியாயமானதே.

அதே நேரத்தில் நேற்றைய கூட்டத்தில் பேசக் கிடைத்த வாய்ப்பை வினவுத்தோழர்கள் உணர்ச்சி வசப்படாமல் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அ.மார்க்ஸ் மிக நியாயமாக, ஜனநாயகப் பூர்வமாகவே நடந்துகொண்டார். தோழர்களின் கேள்வி வீச்சு ஒரு கட்டத்தில் லீனா மீதான தனிமனித அவதூறாக தோற்றம் தர முஷ்டியை உயர்த்திக் கொண்டு லீனாவும், அவரது கணவர் ஜெரால்டும் களமிறங்க, வினவுத் தோழர்கள் வெளியேற்றப் பட்டார்கள். கலாட்டா செய்ததாக கூறி வில்லனாக்கப் பட்டார்கள். மார்ச் 25, 1989 அன்று நடந்த ஒரு சம்பவத்தை இது நினைவுப்படுத்துகிறது.

வேறு சில தோழர்கள் ம.க.இ.க.வினரைப் பற்றி சமீபமாக எழுதியும், பேசியும் வரும் விஷயம் பகீர வைக்கிறது. குறிப்பாக யோனிக்கவிதைகள் எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு ம.க.இ.க. தோழர்களின் அம்பலப்படுத்தும் பணி கடும் மன உளைச்சலை தந்துவருவதாக தெரிகிறது. சங்கர ராமசுப்பிரமணியன் சமீபத்தில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரையில் பின்னூட்டமாக எழுதியிருந்த அனுபவம் மோசமானது. யோனிக்கவிதைகள் எழுதுவதின் அபத்தத்தையும், ஆபத்தையும் வினவு கட்டுரை வாயிலாகவும், மேடை கண்டனங்களின் மூலமாகவும் தெரியப்படுத்துவது நியாயமானது. சம்பந்தமில்லாமல் கவிஞர்களின், படைப்பாளியின் குடும்பத்தாரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை. இதுதான் அம்பலப்படுத்துவதற்கு ம.க.இ.க. தோழர்களுக்கு தெரிந்த ஒரே வழிமுறையா என்ற கேள்வி எழுகிறது.

ஆயினும் இதுபோன்ற விஷயங்களை மற்றவர்கள் மூலமாகதான் கேள்விப்படுகிறோம். குமுதம் ரிப்போர்ட்டரில் சைபர் க்ரைம் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது வினவுத் தோழர்கள் என்னோடு மிக நாகரிகமாகவும், ஆரோக்கியமாகவுமே நடந்து கொண்டார்கள் என்பதையும் இங்கே நேர்மையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். அச்சமயத்தில் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்ட தோழரோடு நடத்திய ஒருமணி நேர உரையாடல் போதிய விளக்கங்களை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ள ஏதுவாக தோழமை மனோபாவத்தோடே நடந்தது என்பதையும் இங்கே நினைவுகூர்கிறேன்.

15 ஏப்ரல், 2010

மாமிமெஸ் - பேல்பூரி - கோலி சோடா!


கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலநாட்களுக்கு முன்பு மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. மயிலைவாசி நண்பர் மாமி மெஸ்ஸுக்கு தான் அழைத்துச் செல்வதாக என்னையும், என் நண்பரையும் அழைத்துச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்றதால் மாமி மெஸ் மூடப்பட்டிருந்தது. வேறு வழியின்றி கற்பகாம்பாளுக்கு போனோம்.

மயிலாப்பூர் மாமி மெஸ் தான் ஒரிஜினல். இதே பெயரில் ஏராளமான டூப்ளிகேட் மெஸ்கள் சுற்றுவட்டாரங்களில் இயங்குவதாக கேள்விப்படுகிறோம். மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் கிழக்கு மாடவீதியில் பாரதிய வித்யா பவன் வரும். அதையொட்டி வலதுபுறமாக செல்லும் சந்தில் சென்றால் ஐந்தாவது அல்லது ஆறாவது வீடு மாமி மெஸ். விநாயகா கேட்டரிங் என்று போர்டு மாட்டியிருக்கும். மெஸ் என்றதுமே கற்பகாம்பாள் மாதிரி நாற்காலி, டேபிள் எல்லாம் போடப்பட்டு வசதியாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். லிட்டரலாக சொல்லப்போனால் மாமி மெஸ் ஒரு கையேந்தி பவன். சாப்பாடு கிடைக்காது. டிஃபன் மட்டும் தான். ஞாயிறு விடுமுறை.

ம்ஹூம். கற்பகாம்பாள் இப்போது ஆஹா ஓஹோவென்று புகழும்படியான சுவையில் இருப்பதாக தெரியவில்லை. பொடி தோசை பயங்கர காரமாக இருந்தது. சரக்கடித்தால் மட்டுமே அதை சந்தோஷமாக சாப்பிடமுடியும். நெய் ரோஸ்ட் திகட்டியது. அடை அவியல் சாப்பிட்ட நண்பர் மட்டும் திருப்தியாக இருந்தார். அடுத்து அவரும் ஒரு பொடிதோசை சாப்பிட்டு நொந்துப்போனார். கடைசியாக சாப்பிட்ட டிகிரி ஃபில்டர் காபி சொர்க்கம். எனக்கு காபி கொஞ்சம் கசப்பாகவே இருக்கவேண்டும். ரொம்ப சூடாக சாப்பிடமாட்டேன். நன்கு ஆற்றி மிதமான சூட்டில் சாந்து மாதிரி கொழகொழவென்று இருக்கும் காப்பியை காலையில் குடிக்க எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். பெட் காஃபி இல்லாவிட்டால் நான் எழுந்திருக்கவே மாட்டேன்.

அடுத்து ஓரிரு நாள் கழித்து மாமி மெஸ்ஸுக்கும் போனோம். சாலையோரத்தில் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திவிட்டு மாமாக்களும், மாமிகளும் பேட்ச் பேட்சாக கையில் தட்டேந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்கம் பக்கம் முழுக்க அக்ரஹாரத்து ஸ்டைல் வீடுகளும், அபார்ட்மெண்ட்களும். சாப்பிடுபவர்கள் யாரும் இலைகளையும், தட்டுக்களையும் ஆங்காங்கே போட்டுவிடுவதில்லை.

பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாக ஜோதி தியேட்டருக்கு ஒரு காலந்த்தில் வந்தது மாதிரி வத்துக்கொண்டே இருக்கிறார்கள். மெஸ் நடப்பதற்கான அறிகுறி இல்லாமல் சாலை சுத்தமாக இருக்கிறது. இங்கே சாப்பிடுபவர்களை காட்டிலும், பார்சல் வாங்கி வீட்டில் சாப்பிடுபவர்கள் தான் அதிகமாம். மெஸ்காரர்கள் ஒரு நொடி கூட ஓய்வின்றி பார்சலித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மாமிக்கள் நிறைய பேர் வந்து சாப்பிடுவதால் தான் இதற்கு ‘மாமி மெஸ்' என்று பெயர் வந்ததா என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன். மெஸ்ஸின் உள்ளே படமாகிவிட்ட ஒரு மாமியை காட்டினார். அவர் நடத்திய மெஸ்ஸாம் அது. தீர்க்க சுமங்கலியாக பழுத்த வயதில் சமீபத்தில் தான் சிவனடி போய் சேர்ந்தாராம். ஆனாலும் அந்த மாமியின் கைமணம் இன்னமும் சமையலில் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள்.

தோசை, இட்லி, போண்டா, சாம்பார், சட்னி, வடக்கறி இத்யாதி.. இத்யாதியெல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருக்கிறது. தோசை, இட்லி சமாச்சாரங்களை மட்டும் அவர்களே தட்டில் போடுகிறார்கள். சட்னி, சாம்பார் நமக்கு வேண்டிய அளவுக்கு நாமே ஊற்றிக் கொள்ளலாம். இங்கே சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் சாம்பாராக தானிருக்கிறார்கள்.

நானும் கூடவந்த நண்பரும் ஆளுக்கொரு பொடிதோசை சாப்பிட்டோம். ஆஹா.. என்ன சுவை! என்ன சுவை! பொடின்னா மாமி மெஸ் பொடிதான்! கற்பகாம்பாளிலும் சாப்பிட்டோமே பொடிதோசை என்ற பெயரில் ஏதோ ஒரு வஸ்துவை. அடுத்து நண்பர் இரண்டும், நான் ஒன்றுமாக கல்தோசை சாப்பிட்டோம். இங்கே தோசை என்றாலே அது கல்தோசை தான். வேறு எதுவும் சாப்பிடும் ஸ்பெஷல் மூடில் இல்லை. பில்லுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு கணக்கீடு போட்டு இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்.

கற்பகாம்பாள் ரேட்டை மனதில் கொண்டு நூற்றி இருபது ரூபாய் வரை பழுத்திருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஒரு நூறு ரூபாய் நோட்டையும், மூன்று இருபது ரூபாய் நோட்டுக்களையும், ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் பில் போடுபவர் திருப்பித் தந்தார். மொத்தமாகவே முப்பத்தி ஐந்து ரூபாய் தான் ஆனது. சரவணபவன் தரத்தில், அதைவிட சுவையில் சரக்கு இருந்தாலும் ரேட்டு என்னவோ கையேந்திபவன் ரேட்டு தான். தோசை ஐந்து ரூபாய். பொடி தோசை பத்து ரூபாய். இட்லி, போண்டா வகையறாக்கள் ரேட்டு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது விசாரிக்க வேண்டும்.

மாலை வேளைகளில் ரெப்ரெஷ் ஆக செம மெஸ் இந்த மாமி மெஸ். மாமி மெஸ் சமையலை ருசிப்பதற்காகவே அய்யராக கன்வெர்ட் ஆகி பலபேர் மயிலாப்பூர்வாசியாகி விட்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - *

சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சிங்கிளாக கூட போவதென்பது பர்ஸை பழுக்க வைக்கும் வேலை. மேற்கூரையே இல்லாத டூவீலர் பார்க்கிங்குக்கு முதன்முதலாக பத்து ரூபாய் வாங்கி புண்ணியம் கட்டிக்கொண்டவர்கள் அவர்கள். குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு நடுத்தரக் குடும்பம் சென்றால் ஒரு மாத சம்பளத்தை டிக்கெட் + ஸ்னாக்ஸ்க்காக தண்டம் அழுதுவிட்டு வரவேண்டும். நானும், நண்பர் ஒருவரும் அங்கே படம் பார்க்கச் சென்றால் ஸ்னாக்ஸ் வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுவது வாடிக்கை.

சமீபத்தில் ஒரு ’யூ சர்ட்டிபிகேட்’ ஆங்கிலப்படம் பார்க்கப் போயிருந்தோம். சத்யமுக்கு எதிரிலிருந்த ஒரு பேல்பூரி கடையில் பேல்பூரி வாங்கி சாப்பிட்டோம். கடைக்காரர் சேடு கிடையாது. இருந்தாலும் ஒரு மசலா எஃபெக்ட்டுக்காக சேடு மாதிரி மாறுவேடம் போட்டிருந்தார். மசாலாவை கொஞ்சம் தூக்கலாக போடும்படி என்னுடன் வந்த நண்பர் கடைக்காரரை தீவிரவாத அணுகுமுறையோடு வற்புறுத்தினார். தூக்கலான மசலாவோடு வந்த பேல்பூரி தீக்கங்கு மாதிரி இருந்தது. கடைக்காரர் ஊற்றியது மசலாவா? சில்லி சாஸ்ஸா என்று தெரியவில்லை. வாயில் வைத்ததுமே நாக்கு மட்டுமன்றி, உடலின் சகலபாகங்களும் எரிந்தது. எவ்வளவு நீர் குடித்தும் எரிச்சல் அடங்கவில்லை.

“என்னங்க இவ்ளோ காரம்?” என்று கடைக்காரரிடம் கேட்டதுக்கு, “அதுக்கு தான் பக்கத்துலே ஜிலேபியும் விற்கிறோம். ரெண்டு ஜிலேபி வாங்கி வாயிலே போட்டுக்கோங்க. எல்லாம் சரியாயிடும்” என்றார் கூலாக. வியாபாரத் தந்திரம்!

* - * - * - * - * - * - *

இன்னமும் கோலி சோடாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் கோலி சோடாவை பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது. பன்னீர் சோடாவை விட சாதா சோடா தான் எனக்கு பிடிக்கும். சோடாவை உடைத்து லெமன், சால்ட் சேர்த்து அடிக்கும் லெமன் சால்ட் சோடா தரும் கிக்குக்கு இணையேயில்லை. லெமன் கொஞ்சம் புளித்திருந்தால் ஒத்தமரக் கள் சுவை. இதே கோலி பாட்டிலில் அடைத்து இருமல் மருந்து ஸ்மெல்லில் வரும் 'கலரு' இப்போது சுத்தமாக கிடைப்பதில்லை. ஆனால் கோலி சோடா இன்னமும் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கூல்பார் ஒன்றில் கிடைக்கிறது. காட்டாக கேஸ் அடைக்கப்பட்ட அதே சுவைக்கு இன்றும் உத்தரவாதம் உண்டு. சென்னையில் வேறெங்காவது கோலி சோடா கிடைக்கிறதா? சைதாப்பேட்டையில் கிடைப்பதாக முன்பு கிருபாஷங்கர் ஒருமுறை சொன்னதாக நினைவு.