29 மே, 2010

ஸ்டைலு.. மயிலு..

ஸ்டைலு ஸ்டைலுதான்
இது சூப்பர் ஸ்டைலுதான்
இந்த ஸ்டைலுக்கேத்த
மயிலு நானுதான்!

28 மே, 2010

கே.எஃப்.சி. சிக்கன்!

“ப்ரெட் பீஸ் மாதிரி சாஃப்ட். செம டேஸ்ட்” என்று இந்திய நகர்ப்புற மேல்தட்டு இளசுகளின் நாக்குக்கு மோகம் கூட்டுவது கே.எஃப்.சி. சிக்கன். நவீன வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டுகள், பரிமாற சுறுசுறுப்பான இளைஞர்கள், உச்சஸ்தாயியில் ஒலிக்கப்படும் மேற்கத்திய இசை, டேபிள் முழுக்க இளசுகளின் ஆக்கிரமிப்பு என்று ஒவ்வொரு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுமே பார்ட்டி மூடில் பரவசமாக இருக்கின்றன. சாப்பிட வருபவர்களை சத்தம் போட்டு அதிரவைத்து வரவேற்பதிலேயே கே.எஃப்.சி.யின் கஸ்டமர் கேர் தொடங்கிவிடுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?

“அது மட்டும் சீக்ரட்!” என்று சிரிக்கிறார்கள் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள். கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள். இந்த சேர்மான விகித பார்முலா வேறு யாருக்குமே தெரியாதாம். கே.எஃப்.சி.யின் சீக்ரட் எக்ஸ்க்யூடிவ்களுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, சிக்கன் சமைக்கும் அந்த பார்முலாதான் கே.எஃப்.சி.யின் ஸ்பெஷல்.

“இதெல்லாம் சும்மா. பொதுவாக சிக்கனை பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும், கே.எஃப்.சி.யில் பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும் சற்று வேறுபாடு உண்டு. அதுவுமில்லாமல் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்ப அளவில் ஒரு நிமிடம் பொறிக்க வைத்து, பிறகு 120 டிகிரி செல்ஸியசுக்கு வெப்பநிலையை குறைப்பார்கள். சர்க்கரை, மாவு, மிளகு, உப்பு – இதுதான் இவங்க சொல்ற சீக்ரட் பார்முலா” என்று வில்லியம் பவுண்ட்ஸ்டோன் என்பவர் பிக் சீக்ரட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

1930ல் சாண்டர்ஸ் என்பவரால் அமெரிக்காவில் சிறியளவில் துவக்கப்பட்டது இந்த தொழில். மடமடவென்று வளர்ந்து முப்பது வருடங்களில் அமெரிக்காவிலும், கனடாவிலும் 600 கிளைகளாக பெருகியது கே.எஃப்.சி. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளோடு ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. உலகின் பெரிய உணவு நிறுவனங்களில் கே.எஃப்.சி.க்கு தனியிடம் உண்டு. ஓராண்டுக்கு சராசரியாக நூறு கோடி கோழிகள் கே.எஃப்.சி. கடைகளில் உயிரிழப்பதாக சொல்கிறார்கள்.

கே.எஃப்.சி.யில் பிரதானம் வறுத்த சிக்கன் தானென்றாலும், கிளைகள் அமைந்திருக்கும் நாடுகளுக்கேற்ப அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் உணவுகளையும், தங்களது டிரேட் மார்க் சுவையில் தருகிறார்கள். சாண்டர்ஸ் ஆரம்பித்த காலத்தில் வறுத்த கறியும், உருளை ப்ரெஞ்ச் சிப்ஸும் மட்டும்தான் ஸ்பெஷல்.

இந்தியாவிலும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பிஸ்ஸாஹட் ரெஸ்டாரண்டுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதற்கு எதிரில் அமையுமாறு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுக்கு இடம் பார்க்கிறார்கள். இதென்ன லாஜிக் என்றே புரியவில்லை.

27 மே, 2010

தமிழ்மொழி!

தமிழை தமிழர்கள் தாய் என்பார்கள். நான் மட்டும் இறுமாப்போடு சொல்லிக் கொள்ளலாம். அவள் எனக்கு மகள். பாரதரத்னாவை விட மிகப்பெரிய இந்த அந்தஸ்து கிடைத்து இன்றோடு மிகச்சரியாக ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு மழலை மகிழ்ச்சியை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

26 மே, 2010

என் முதல் பயணம் – நந்தினி ஜே.எஸ்

சினிமாவில் துரதிருஷ்டவசமாக பெண் இயக்குனர்கள் ரொம்ப குறைவு. தமிழ் சினிமாவில் என்றில்லை. உலகளவிலேயே பெண் இயக்குனர்கள் மிக மிகக்குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழில் எத்தனை பெண்கள் படமியக்கி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் விரல் விட்டு எண்ணிப் பார்த்தோமானால் ஐந்து விரல்களுக்கு மேல் எண்ணுவது கொஞ்சம் சிரமம்.

சினிமா அதிநிச்சயமாக ஒரு ஆணாதிக்க உலகம்.

ஒரு பெண் படம் இயக்க வரும்போது என்னமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.

'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி சொல்கிறார்.

“பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி… ‘ஒரு பெண்ணாக இயக்குனர் பணியில் வேலை செய்வது கஷ்டமாக இல்லையா?’ என்பதுதான். நான் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது என் gender’ரைப் பற்றி யோசிப்பதில்லை. ஒரு பெண்ணாக, பெண்ணின் பார்வையில் மட்டும் படங்களை இயக்குவதில்லை. ஒரு படத்தின் எல்லா கடினமான வேலைகளையும் மற்ற இயக்குனர்கள் செய்வது போல் நானும் இயல்பாக செய்கிறேன். ஒரு படப்பிப்பில் ஒரு இயக்குனர் எந்த அளவு தைரியத்துடன், நிதானத்துடன், ஆளுமையுடன் மற்றவர்களிடம் வேலை வாங்க வேண்டுமோ, நானும் அவ்வாறே செய்கிறேன். அதானால் மற்றவர்கள் எனக்கு எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்லை. ஆரம்பத்தில் அஜ்மலுக்கோ மற்ற ஆண் பாத்திரங்களுக்கோ நான் ‘ஆண்’ போல் நடித்துக் காட்டும் போது, சுற்றியிருந்த எல்லோரும் வித்தியாசமாக வேடிக்கை பார்த்தார்கள். பின்பு அவர்களுக்கே பழகிப்போய் எல்லாம் சகஜமாகி விட்டது. முதலில் சந்தேகப்பட்டவர்களுக்குக் கூட என்னோட உழைப்பையும், உறுதியையும், திறமையையும் பார்த்த பிறகு நம்பிக்கை வந்து விட்டது.”

இதை வாசிக்கும்போது, அனேகமாக அவர் சந்தித்த பிரச்சினைகளை மிகவும் எளிமைப்படுத்தி சொல்வதாக எனக்குப் படுகிறது. ஒரு இயக்குனராக உருவெடுக்க பெண் சந்திக்கும் மன உளைச்சல்கள் கட்டுக்கடங்காததாக இருக்குமென்று நினைக்கிறேன். ஜே.எஸ்.நந்தினி இயக்கிய முதல் படம் எனக்கு பிடித்திருந்தது. விளம்பரத்துறை குறித்த சுமாரான அறிமுகத்தை வசந்த் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!' படத்தில் கொஞ்சம் நெகடிவ்வாகவே கொடுத்திருந்தார். கிரியேட்டிவ் பிரிவில் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் பிரச்சினைகளை நகைச்சுவையாகவும், கொஞ்சம் விஸ்தாரமாகவும் நந்தினி வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில் வாசித்த மிக நல்ல கட்டுரையை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த பில்டப். தோழர் ஒருவர் தொடங்கியிருக்கும் புதிய பல்சுவை இணையத்தளமான நறுமுகையில் ஜே.எஸ்.நந்தினியின் சுவாரஸ்யமான ஒரு பிரத்யேகக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. சினிமா ஆர்வலர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாசிக்கலாம்.

25 மே, 2010

தேசிய வேளாண் நிறுவனம்!


இலீயிடு கிராமத்தைச் சேர்ந்த சத்யா நன்றாக சமைப்பார். சமைப்பதற்கென்றே பிறவி எடுத்தவர் என்று சொல்லலாம். யார் வீட்டிலாவது விசேஷம் என்றால் சத்யாவை சமைக்க அழைப்பார்கள். அக்கம்பக்கத்தவர்களும், உறவினர்களும் அவரது சமையலை பாராட்டுவதுண்டு.

அருமையான சமையல் திறன் கொண்டவருக்கு வெறும் பாராட்டுகளோடு திருப்தி அடைந்துவிட முடியுமா என்ன? அவருடைய திறமை அவருக்கு போதுமான வருமானத்தை தரவேண்டாமா? தேசியவேளாண் நிறுவனம் மூலமாக உருவாக்கப்பட்ட சுய உதவிக்குழு அவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாயை சிறுகடனாக வழங்கியது.

வீட்டிலேயே சுடச்சுட சத்யா பிரியாணி சமைக்கத் தொடங்கினார். தினமும் 12 மணியிலிருந்து 2 மணி வரை சூடான இலீயீடு பிரியாணி, கிராமத்தின் பிரியாணி பிரியர்களுக்கு நியாயமான விலையில் தினமும் பிரியாணி கிடைக்கத் தொடங்கியது. சத்யாவோடு உழைப்பை பகிர்ந்துகொள்ள அவரது கணவர் தயாராக இருந்தார். அருகிலிருக்கும் அரசு அலுவலக ஊழியர்களுக்கும் இப்போது பிரியாணி சப்ளை செய்யப்படுகிறது. சத்யாவுக்கு தினமும் ரூபாய் நூறு முதல் நூற்றி ஐம்பது வரை வருமானமும் கிடைக்கிறது.

இன்று அந்த கிராமப் பெண்களுக்கு இன்று சத்யா ஒரு ரோல்மாடல்!

சூனாம்பேடு மார்க்கெட்டில் சரோஜா காய்கறி சில்லறை வியாபாரம் செய்துவந்தார். வியாபாரம் என்னவோ நன்றாகதான் நடந்த்து. ஆனாலும் சரோஜாவிடம் சேமிப்பாக கொஞ்சம் கூட பணமில்லை. வயதுவந்த மகள் சித்ராவுக்கு திருமணம் வேறு செய்யவேண்டும். காய்கறிகளை வாங்கி, விற்க சிறிய முதலீடு செய்யவேண்டும். அம்முதலீட்டுக்கு வகையில்லாததால், உள்ளூர் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவார். வியாபாரத்தில் வந்த லாபத்தின் பெரும்பகுதி வட்டிக்கே சரியாகப் போனது.

அப்பகுதியில் தேசியவேளாண் நிறுவனம் சுய உதவிக்குழுக்களை நிறுவிக்கொண்டிருந்த வேளை இது. சரோஜாவுக்கு நிறுவனம் கைகொடுத்தது. குழுவிடம் சிறுகடன் பெற்று, அப்பணத்தை முதலீடாக வியாபாரத்தில் போட்டார். வட்டித்தொல்லை தீர்ந்தது. வியாபாரமும் அமோகம். இப்போது தினமும் நூறு ரூபாய்க்கு மேல் லாபம் பார்க்க முடிகிறது. ஒரு சில வருடங்களிலேயே பணம் சேர்த்து மகளுக்கு திருமணமும் செய்துவைத்துவிட்டார்.

வாழ்வின் அடித்தட்டில் போராடிக் கொண்டிருந்த சரோஜா, இன்று தன்னம்பிக்கையால் முன்னேறி சூனாம்பேடு மார்க்கெட்டில் மரியாதைக்குரிய வியாபாரியாக தலைநிமிர்ந்து வியாபாரம் செய்கிறார்.

சத்யாவும், சரோஜாவும் உதாரணங்கள். இவர்களைப் போல நூற்றுக்கணக்கான கிராம மகளிர் இன்று விழிப்புணர்வு பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போதுமான வழிகாட்டுதல் இல்லாததால் மட்டுமே தங்கள் திறமையை வீணடித்துக் கொண்டிருந்தார்கள். தேசிய வேளாண் நிறுவனம் இவர்களுக்கு சரியான பாதையை மட்டுமே காட்டியது.

இடையே, ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...

1960களின் முற்பாதியில் நம் நாட்டில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயிகள் கடுமையாக உழைத்தும் போதுமான விளைச்சல் இல்லை. அரிசிப்பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

அந்நிலையைப் போக்க அரசு முற்பட்டது. உழைப்பும், முதலீடும் இருந்தும் ஏன் விவசாயிகளால் அமோக விளைச்சலை அடைய முடியவில்லை என்று ஆராயப்பட்டது. பிரச்சினை விவசாயிகள் விதைக்கும் விதைகளில் என்று கண்டறியப்பட்டது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் விதைகளில் தேவையான மரபணு மாற்றங்களை செய்து விதைக்கத் தொடங்க, விளைச்சல் பன்மடங்கானது. உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது. அறுபதுகளின் பிற்பகுதியில் நிகழ்ந்த இந்த நிகழ்வே நம் வரலாற்றில் பசுமைப் புரட்சி என்று வழங்கப்படுகிறது. இப்புரட்சியின் குறிக்கோள் ‘விதையிலிருந்து விளைச்சல்’ என்பதாக இருந்தது. இது நிகழ முக்கியக் காரணமாக இருந்தவர், அன்று மத்திய அமைச்சராக இருந்த சி.எஸ். என்று வழங்கப்படும் ‘பாரதரத்னா’ சி.சுப்பிரமணியம்.

உணவுப் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தது. ஆனால் பசுமைப் புரட்சியினால் பலனடைந்தவர்கள் யார்? இதை சி.எஸ். 90களில் ஆராயத் தொடங்கினார். அதிர்ச்சி தரும் விஷயங்கள் அவருக்கு தெரியவந்தன.

பசுமைப் புரட்சியின் விளைவாக பெரிய பணக்கார விவசாயிகள் நல்ல பலன் பெற்றார்கள். ஆனால் எல்லாத் தரப்புக்கும் இதன் பலன்கள் முழுமையாக போய் சேரவில்லை. பசுமைப்புரட்சியின் பலன்கள் சிறுவிவசாயிகளுக்கு கிட்டவில்லை. நம் நாட்டில் சிறுவிவசாயிகளே விவசாயத்தொழில் செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள்.

ஏன் சிறு விவசாயிகளால் தன்னிறைவை அடைய முடியவில்லை என்று சி.எஸ். ஆராய்ந்தபோது அவருக்கு சில விஷயங்கள் பிடிபட்டது. அவர்களது நிலங்களில் விவசாயத்துக்கு அடிப்படையான மண்வளம் இல்லை என்பதை கண்டறிந்தார். மண் வளமாக இருந்தால்தான் விவசாயத் தொழிலை நடத்த முடியும். விவசாயத்துக்கு தோதான பருவநிலை மாற்றங்கள் குறித்த போதுமான அறிவும் அவர்களிடம் காணப்படவில்லை. உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த தகவல்கள் அவர்களிடம் இல்லை.

மண்வளம், பருவநிலை, தொழில்நுட்பங்கள் என்று எல்லா விஷயங்களையும் ஒருங்கிணைத்து புத்திசாலித்தனமாக விவசாயம் செய்யும் நிலை இந்திய விளைநிலங்களில் இல்லை என்பதை சி.எஸ். உணர்ந்தார்.

நாட்டுக்கு இரண்டாம் பசுமைப்புரட்சி ஏற்பட வேண்டியதின் அவசியம் சி.எஸ்.சுக்கு புரிந்தது. அவருக்கோ கிட்டத்தட்ட தொண்ணூறு வயது. அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். முதலாம் பசுமைப் புரட்சியின் போது அவரிடம் அதிகாரம் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன்னால் நாடு முழுக்க இருக்கும் எல்லா கிராமங்களையும் ஒரேயடியாக மாற்றிவிடமுடியாது என்பது அவருக்குத் தெரியும்.

எல்லா மாநிலங்களும் பின்பற்றக்கூடிய மாதிரி கிராமங்களை தமிழ்நாட்டில் உருவாக்குவது சாத்தியமானதுதானே? இதையே தனது லட்சியமாக கொண்டார். விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக ஊரக மேம்பாட்டினை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார். ‘மண்ணிலிருந்து சந்தைக்கு’ என்ற குறிக்கோளை, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு நிர்ணயித்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டில் சி.எஸ். அவர்களை நிறுவனத் தலைவராக கொண்டு தேசிய வேளாண் நிறுவனம் (NAF) இந்த உன்னத லட்சியங்களுக்காக தொடங்கப் பட்டது. இந்நிறுவனத்தின் ஆக்கப் பணிகளுக்குத் தேவையான மண் மற்றும் உணவுப் பரிசோதனைக்கான அதிநவீன லேட்டஸ்ட் உபகரணங்கள் மற்றும் கருவிகளை டாக்டர் கலாம் பெற்றுத் தந்தார். இதன் மூலமாக விரிவான விளைமண் பரிசோதனை மூலமாக தொழில்நுட்பம் சார்ந்த விவசாய மேம்பாட்டுப் பணிகளை தொடங்க முடிந்தது.

* கிராமப்புற மக்களின் ஏழ்மைநிலையை மாற்றி அவர்கள் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல். குடும்பத்தின் வருட வருமானத்தை குறைந்தபட்சம் ரூபாய் ஐம்பதாயிரமாக உயர்த்துதல்.

* நாட்டின் எல்லா இடங்களிலும் செயல்படுத்தக் கூடிய ‘முன்மாதிரி செயல் திட்டத்தை’ உருவாக்குதல்.

இதுவே நிறுவனத்தின் ஆரம்பக்கால குறிக்கோளாக இருந்தது. விவசாய மேம்பாடு, கால்நடை மேம்பாடு, சமூக மேம்பாடு – இந்த மூன்று வழித்திட்டத்தை குறிக்கோளை அடைவதற்கான பாதையாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தில் அமைந்துள்ள சுமார் பதினெட்டாயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய அறுபது முன்மாதிரி கிராமங்களை உருவாக்க முன்வந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாற்பது கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருபது கிராமங்களும் இதற்காக நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ப்ளாஷ்பேக் ஓவர்.

கிராமப்புற முன்னேற்றத்தை செயல்படுத்த, அப்பகுதியிலேயே ஒரு மையம் இருந்தால் மட்டுமே சாத்தியம். தமக்குள் ஒருவராக மாறுபவர்களை மட்டுமே கிராமத்தவர்கள் அங்கீகரிக்கிறார்கள். கிராம வளர்ச்சிக்கான தேசியவேளாண் நிறுவனத்தின் மையம், காஞ்சிபுரம் மாவட்டம் இலீயீடு கிராமத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது.

விசாலமான பயிற்சி அறைகள், நவீன விவசாய இயந்திரங்களுக்கான பிரத்யேக அறைகள், அலுவலகப் பயன்பாட்டுக்கான அறைகள், திறந்தவெளி திரையரங்கம், சமையலறை என்று அடிப்படை கட்டுமானங்களோடு அமைந்திருக்கிறது.

விவசாய தொழில்நுட்பம் மற்றும் கால்நடை மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள், சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள், வருமானத்துக்கு வகை செய்யும் திட்டங்கள் என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி தினமும் மையத்தில் நடந்துகொண்டேயிருக்கிறது. நாம் சென்றிருந்தபோது விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. மகாராஷ்டிராவின் விதர்பா விவசாயிகள் கூட இங்கே வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு சென்றதாக சொல்கிறார்கள்.

பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு வசதியாக எல்.சி.டி. புரொஜெக்டர், டிஜிட்டல் கேமிரா, கலர் டிவி, சிடி பிளேயர், கம்ப்யூட்டர் என்று லேட்டஸ்ட் வசதிகள் அத்தனையும் இங்கே உண்டு. விவசாயிகள் களப்பயிற்சி வழங்குவதற்கு வாகாக மையத்தின் பின்புறத்தில் விசாலமான இடம் இருக்கிறது.

இதுவரை சுமார் நானூறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஒன்பதாயிரம் பேர் வரை கலந்துகொண்டு பயன்பெற்றதாகவும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரிகேடியர் ரகுநாதன் சொல்கிறார்.

மனிதவள மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி இம்மையத்தில் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டு நடக்கிறது. முதல் கட்டமாக தோட்டக்கலையில் சான்றிதழ் படிப்பு துவக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பினை ஏற்படுத்தக்கூடிய பண்ணை இயந்திரவியல் கணினிப் பயிற்சி, உணவுப் பாதுகாப்பு, செல்போன் பழுதுபார்ப்பு போன்றவற்றிலும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் வெகுவிரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

மையத்தில் மழலையர் பள்ளி ஒன்றும் நடக்கிறது. அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து குழந்தைகள் இங்கே வந்து படிக்கிறார்கள். பெருநகரங்களில் தனியாரால், அதிக கட்டணம் வாங்கி நடத்தப்படும் மழலையர் பள்ளிகளை விட மிகச்சிறப்பாக இப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.


விவசாய வளர்ச்சி

அறிவியல்பூர்வமான முறைகளில் விளைச்சலை அதிகப்படுத்தி, விவசாயிகளுக்கு வருமானத்தை பெருகச்செய்வதே நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

விவசாயிகளுக்கு விளைநிலங்களிலேயே பயிற்சி கொடுப்பது, மண்வளப் பரிசோதனை, மண்ணுக்கான ஊட்டச்சத்து போன்றவைகளை விளக்கி சொல்வது, நீராதார மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, மையத்திலேயே நேரடி களப்பயிற்சி போன்றவற்றின் மூலமாக குறிக்கோளை அடையும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இங்கே பயிற்சியும், ஆலோசனைகளும் பெற்ற ராஜன் என்பவரின் விளைநிலத்தை பார்வையிட்டோம். தன் நிலத்துக்கு அருகிலிருக்கும் நிலங்களை விட தன்னால் இப்போது அதிக விளைச்சலை பெற முடிவதாக மகிழ்ச்சியோடு நம்மிடம் சொல்கிறார். மற்ற விவசாயிகளுக்கும் இந்த நவீனமுறைகளைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டுமென்று, அவரிடம் கேட்டுக்கொண்டார் தேசிய வேளாண் நிறுவனத்தின் துணை இயக்குனராக பணிபுரியும் ராமசுப்பிரமணியன்.

நிறுவனம் தந்த பயிற்சியின் மூலமாக இதுவரை ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்ட நெல், சோளம், கரும்பு, நிலக்கடலை, மிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், மல்லி, ரோஜா போன்ற பூவகைகள் ஆகியவை நவீன தொழில்நுட்பத்தில் அமோக விளைச்சலைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வழக்கமான முறையில் பயிரிடப்பட்டதை காட்டிலும் சோளம் 150%, தர்ப்பூசணி 116%, நிலக்கடலை 113%, நெல் 55%, கரும்பு 40% கூடுதலான விளைச்சலை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

ஏழாயிரத்து நூறுக்கும் மேற்பட்ட மண்பரிசோதனைகள் மிகக்குறைவான கட்டணத்தில் விவசாயிகளுக்கு செய்துதரப்பட்டிருக்கிறது. நீர்வள மேலாண்மைக்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


கால்நடை மேம்பாடு

விவசாயத்தோடு தொடர்புடைய கால்நடை மேம்பாட்டிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அதிகளவில் பால் கறக்கக் கூடிய கலப்பின மாடுகளை உருவாக்குவதின் மூலமாக அபரிதமான பால் உற்பத்தியை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு கால்நடை மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலமாக கிராமப்புற குடும்பங்களுக்கு நிலையான மாத வருமானத்தை ஏற்படுத்த முடியும்.

செயற்கைமுறை கருவூட்டல், கால்நடைகளுக்கான மருத்துவம், ஊட்டச்சத்து வழங்குதல், பால் உற்பத்தி தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி ஆகியவை தொடர்ச்சியாக நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்களால் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுவரையிலான செயல்பாடுகள் நல்ல பலனை அளித்துள்ளன. இதுவரை ஒன்று முதல் இரண்டு லிட்டர் வரை கறந்துகொண்டிருந்த மாடுகள் இப்போது 6 முதல் 9 லிட்டர் வரை கறக்கின்றன. புதியதாக பால் சேகரிப்பு நிலையங்களை உருவாக்கி, சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடிகிறது. கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானம் வருவதால், ஆர்வமுள்ளவர்களுக்கு கால்நடை வாங்க வங்கியில் கடன் வாங்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது. பசுமைப் புரட்சியோடு இணைந்த வெண்மைப் புரட்சியும் தேசிய வேளான் நிறுவனம் கவனம் செலுத்தும் கிராமங்களில் சத்தமில்லாமல் நடந்தேறி வருகிறது.


சமூக முன்னேற்றம்

விவசாயிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எழுத்தறிவு, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பயிற்சிகள் மற்றும் குழந்தை வளர்ப்பு சுகாதாரம் தொடர்பான பயிற்சிகள் மூலமாக கிராமப்புற சமூக முன்னேற்றத்தை உருவாக்குவது தேசிய வேளான் நிறுவனத்தின் இலக்கு.

எழுத்தறிவுப் பாடம், சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், மேலதிக வருமானம் உருவாக்குவதற்கான திட்டங்கள், சுகாதார விழிப்புணர்வு, குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத நாலாயிரத்து இருநூறு பேருக்கு இன்று எழுத்தறிவு ஏற்படுத்த முடிந்திருக்கிறது. ஏழாயிரத்து நூறு பேரை உறுப்பினர்களாக கொண்டு 470 சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். சுமார் 50 மருத்துவ முகாம்கள் நட்த்தப்பட்டு ஏழாயிரத்து இருநூறு பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

புத்திரன் கோட்டை என்ற கிராம மக்களை முழுச்சுகாதார திட்டத்தை அமுல்படுத்துவதில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக பிரத்யேகமாக அம்மக்களுக்கு கூட்டங்கள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மூலமாக பொதுச்சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, உடல்நலன், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை இருக்க வேண்டிய அவசியம், அவற்றை பராமரிப்பது குறித்த விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டு வந்தது. இன்று இக்கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருக்கிறது. இந்திய அரசின் முழுச்சுகாதார திட்டத்தை முழுமையாக பின்பற்றியதால் ‘சுத்தமான கிராமம்’ (நிர்மல் கிராம புரஸ்கார்) என்ற குடியரசுத் தலைவரின் விருது புத்திரன் கோட்டைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு நிறுவனம் பதினெட்டாயிரம் குடும்பங்களை உள்ளடக்கிய 60 முன்மாதிரி கிராமங்களை தமிழகத்தில் உருவாக்கி இந்தியாவுக்கு வழிகாட்டியிருக்கிறது. காந்தி கனவு கண்ட நிஜமான கிராம ராஜ்யம் இங்கே அறிவியல் துணைகொண்டு, திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிராமங்களின் மாட்டுத் தொழுவங்களிலும், விவசாய விளைநிலங்களிலும், ஏரி, குளங்களிலும் கடுமையாக வேலை பார்த்து மட்டுமே இம்மாபெரும் சாதனைகள் சாத்தியமாகி விடவில்லை. சென்னை நகரின் மத்தியில், நவீன ஆய்வகங்களிலும் கூட இதற்கான பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

இப்போது சென்னை தரமணியில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு நேரடியாக சென்று பார்ப்போம். ஒன்பதாயிரம் சதுர அடி பரப்பளவில் ஆய்வகங்கள் அமைந்துள்ளன.

இந்நிறுவனத்தின் துணை இயக்குனர் ராமசுப்பிரமணியன் அங்கே கட்டமைக்கப்பட்டுள்ள வசதிகளை சுற்றிக்காட்டிக் கொண்டே விளக்குகிறார்.

மண்வள ஆய்வு, உணவு பாதுகாப்பு ஆய்வு, பாசனநீர் ஆய்வு, தாவர திசு வளர்ச்சி தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை இங்கே அமைந்திருக்கிறது. வெகுவிரைவில் தானிய விதைகள் ஆய்வு மற்றும் தாவர சிசு ஆய்வு ஆகியவை தொடங்கப்பட உள்ளது. இவற்றுக்கான உபகரணங்கள் பலவும் அதிசமீபத்தியவை. அயல்நாடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவில் தருவிக்கப்பட்டவை.

மண்வளத்தை ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? காலம் காலமாக நாம் பயிரிடும் மண் இதுதானே என்று விவசாயிகள் எண்ணக்கூடும். மண்ணின் வளம் என்னவென்று அறிந்தால், அதற்கேற்ப பயிர்களை பயிரிடலாம். நெல் நன்றாக விளைச்சல் தரக்கூடிய மண்ணில், அம்மண்ணோடு சேர இயலாத வேறு பயிர்களை பயிரிட்டு இழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது இல்லையா? அதுவுமில்லாமல் மண்வளப் பரிசோதனை மூலமாக இடவேண்டிய உரத்தை, தேவையான அளவு மட்டும் அளித்து தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம். சமச்சீர் சத்துக்கள் அளிப்பதின் மூலமாக பயிர் வீரியமாக வளரும். பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செழிப்பான பயிர் வளர்க்க முடிவதால் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும். உற்பத்திச் செலவு குறைந்து விவசாயி அதிக லாபம் ஈட்டமுடியும்.

தேசிய வேளாண் நிறுவனத்தின் ஆய்வகம் கணினிமயமாக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலமாக துல்லியமான முடிவுகளை கணிக்க முடிகிறது. அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற ஆய்வகம் ஒன்றில் இந்நிறுவனத்தின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இத்துல்லியம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை ஏழாயிரத்துக்கும் மேலான மண்மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. சிறு விவசாயிகளின் நலன் கருதி மிகக்குறைந்த செலவுக்கு மண்வள ஆய்வு செய்துத்தருகிறார்கள். வேறு நிறுவனங்களில் இதே ஆய்வுக்கு இவர்கள் வாங்கும் தொகையை விட மூன்று, நான்கு மடங்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

மண்மாதிரியை பரிசோதித்து ‘ரிப்போர்ட்’ தருவதோடு இந்நிறுவனம் நின்று விடுவதில்லை. தங்கள் நிபுணர்கள் மூலமாக ஊட்டச்சத்து உரப்பரிந்துரைகளையும் தருகிறார்கள். விளைமண் ஆய்வுக்கு மண்மாதிரி எடுக்கும் வழிமுறைகளையும் இவர்களே சொல்லித் தருகிறார்கள். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும் கூட விவசாயிகள் மண்வளப் பரிசோதனைக்கு இங்கே மாதிரி எடுத்து அனுப்புகிறார்கள். ஆய்வுக்கு மட்டுமே கட்டணம். மற்றதெல்லாம் முற்றிலும் இலவசம்.

அடுத்ததாக உணவு பாதுகாப்பு ஆய்வகத்துக்குள் நுழைகிறோம். இங்கே உணவு தானியங்கள், காய்கறிகள், பழவகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து கழிவுகளை துல்லியமாக கண்டறியும் வசதி உள்ளது.

உணவுப்பொருட்கள் அதற்குரிய தரத்தில் தயாரிக்கப்படுகிறதா? கலப்படம் ஏதேனும் இருக்கிறதா? அனுமதிக்கப்பட்ட உணவு வண்ணங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறதா? சேர்க்கப்பட்ட வண்ணங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு இங்கே விடை கிடைக்கும்.

உணவுப் பொருட்களின் தரம் பற்றிய பகுப்பாய்வு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உணவு கலப்பட தடை சட்டப்படி உணவின் தரம் மற்றும் லேபிள் செய்வது குறித்த ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் இங்கே வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினர் தயாரித்து விற்கும் உணவுப்பொருட்களையும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் ஏற்றுமதிக்கான தர அளவுக்கோல்களை அடைய இந்த ஆய்வு முக்கியமானதாகும்.

உணவு நுண்ணுயிர் பகுப்பாய்வு வசதிகளும் இங்கே செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பான உணவிற்கு நுண்ணுயிர் பகுப்பாய்வு இன்றியமையாதது. ஹோட்டல்களில் சுகாதாரம் மற்றும் உணவை கையாள்வோரின் சுத்தம் குறித்த கண்காணிப்பு மற்றும் ஆய்வக பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிர் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகமாகவும் இது செயல்பட்டு வருகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த நுண்ணுயிர் பகுப்பாய்வு வசதிகளுக்கு உதவியிருக்கிறது.

“”யாரையும் எளிதில் இங்கே அனுமதிக்கமாட்டோம்”“ என்று சொல்லியபடியே அடுத்ததாக நம்மை ஒரு ஆய்வகத்துக்குள் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் அளவுள்ள ஒரு குடுவையை நம்மிடம் காட்டுகிறார்கள். உள்ளே சிறிய அளவில் நூற்றுக்கணக்கில் ஏதோ ஒரு செடி வளர்ந்திருக்கிறது.

“இது என்ன செடி?“” என்று கேட்டால், “செடி இல்லைங்க, மரம். கிட்டத்தட்ட ஐநூறு வாழைமரம்!””” என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள். ‘ஒரு பாட்டிலுக்குள் ஒரு வாழைத்தோப்பா?’ என்று வாயைப் பிளக்கிறோம். இதுதான் தாவர திசு வளர்ச்சி ஆய்வுக்கூடம். தாவர திசு வளர்ச்சி மூலமாக தாவரங்களை வளர்த்து விவசாயிகளுக்கு பயிர் செய்ய கொடுக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு 2,00,000 செடிகள் இங்கே சிறிய ஆய்வறைகளுக்குள் உருவாக்கப்படுகிறது.

2020ல் நம் நாட்டில் விவசாய நிலப்பிரப்பு குறைந்துவிடும். விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். ஆனால் மக்கள்தொகை அதிகமாக இருக்கும். எனவே தற்போதைய உணவு உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். இதற்கு ஒரே வழி தொழில்நுட்பம்தான்.

தொடர்ந்து ஒரே பயிராகப் பயிர் செய்யாமல் சுழற்சி முறையில் பயிர்களை மாற்றி, மாற்றி பயிர் செய்யவேண்டும். ஒருமுறை நெல் பயிரிட்டால் மறுமுறை சோளம், கம்பு. இடையில் காய்கறிகள் என்று பயிரிட வேண்டும். அப்போது அதிக உற்பத்தி கிடைப்பதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கும்.

இன்றைய நிலையில் விவசாயிகள் அதிக வட்டி வாங்கும் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். கடனை திருப்பி கட்ட முடியாமல் கடனாளி ஆகின்றனர். இது சரியல்ல. பல வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தருகின்றன. விவசாயிகள் தங்களுக்கென்று சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு வங்கிகளின் முலம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து பயன்பெற வேண்டும்.

ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தின் மண்வளத்தை பாதுகாக்க வேண்டும். இதற்காக அவ்வப்போது மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கிராமங்களில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. இந்த ஊருணிகளுக்கு உயிர் கொடுத்தால், அவை விவசாயிகளுக்கு உயிர் கொடுக்கும். எனவே நீர்நிலைகளை விவசாயிகள் பராமரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு தரமான விதை என்பது அவசியம். கலப்படம் செய்யப்பட்ட விதைகளை பயிரிடுவதால் பலன் குறையும். தரமான விதைகளை கண்டறிய தேசிய வேளாண் நிறுவனத்தின் உதவியை நாடலாம். அவர்கள் நிச்சயமாக இதற்கான ஆலோசனைகளை கூறுவார்கள்

நம் நாட்டில் சளைக்காமல் உழைக்கக்கூடிய விவசாயிகள் இருக்கிறார்கள். ஏராளமான விளைநிலம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கும், உலகளவில் லேட்டஸ்டாக வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏராளமான இடைவெளி இருக்கிறது. தேசிய வேளாண் நிறுவனத்தின் முயற்சிகள் அந்த இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வருகிறது.

விவசாயிகள் குறைந்த செலவில் விளைமண் பரிசோதனை செய்ய, உணவுப்பொருள் தர ஆராய்ச்சிக்கும் மற்றும் ஏனைய இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

தேசிய வேளாண் நிறுவனம்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்
அண்ணா பல்கலைக்கழக தரமணி வளாகம்,
தரமணி, சென்னை – 600 113.
தொலைபேசி : 044-22542598, 22542803
மின்னஞ்சல் : nationalagro@gmail.com
இணையத்தளம் : www.nationalagro.org