கடந்த பத்தாண்டுகளில் தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்று நீங்கள் நினைக்கும் படங்களை நினைவுபடுத்தி விரல்விட்டு எண்ணிக் கொண்டே வாருங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆர்ர்றூஊ, ஏழ்... முடியலை இல்லையா? விடுங்கள். இதே காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான ஆங்கிலப்படங்கள் என்னென்ன என்று நீங்கள் நினைவுப்படுத்தி எண்ண ஆரம்பித்தால் உங்கள் தெருவிலிருக்கும் மொத்தப்பேரின் கைவிரல்களும் போதாது.
இப்போது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் வெளிவந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் வெளியான படங்களின் எண்ணிக்கை வெறும் நூறுகளில்தான் இருக்கிறது.
சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இந்த நிலைமை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு ஒரு சுற்று, குளிர் விடுமுறைக்கு மற்றொரு சுற்று என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
குழந்தைகளுக்கான படம் எது என்பதை உணர்வதிலேயே நமக்கு கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. திரை ஆய்வாளரான விஸ்வாமித்ரன் இதை எளிமையாக வரையறுக்கிறார். “ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது.”
ஹாலிவுட்டில் இந்த பேருண்மையை படைப்பாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக கடந்த ஆண்டு வெளியான அப் (Up) திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் குழந்தைகளை விட பெரியவர்களை அதிகமாக கவர்ந்தது. பெற்றோரும் தங்களை குழந்தைகளாக உணரும் இதுமாதிரியான தருணங்கள் எவ்வளவு அற்புதமானவை. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற கடைசி ஐந்து படங்களில் ‘அப்’பும் இடம்பெற்றது. உலகின் தலைசிறந்த இயக்குனராக இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். “என்னுடைய படங்கள் குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்படுகின்றன”
ஏன் குழந்தைகளுக்காக சினிமா எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சினிமா நம் எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாக்கியே வருகிறது. சினிமா ஒரு வணிகம் என்பதை தாண்டிப் பார்த்தோமானால் இசை, இலக்கியம், ஓவியம் என்று கலையின் எல்லா பரிமாணங்களையும் ஒருபுள்ளியில் நிறுத்தி பார்வையாளனுக்கு சாத்தியப்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருக்கிறது. இதனால்தான் ரஷ்யப் புரட்சியாளர் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, “எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலை” என்பதாக குறிப்பிட்டார்.
இன்று ஒரு நாட்டின் சமூகம், பண்பாடு, கலை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி அந்நாடுகளில் இருந்து வெளிவரும் சினிமாக்கள் மூலமாக அயல்நாட்டவர்களால் அளவிடப்படுகிறது. நம் நாட்டு குழந்தைகளின் ரசனைத்தன்மையின் வெளிப்பாடாக குழந்தைகள் திரைப்படம் நிச்சயமாக அமையும்.
சினிமா என்றில்லை. குழந்தைகளுக்கான பத்திரிகைகள் கூட இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தளவில் இப்போது இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பாலரத்னா, பூந்தளிர் மற்றும் எண்ணற்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இப்போது பெட்டிக்கடைகளில் தொங்குவதில்லை. பெரியவர்களுக்கான பத்திரிகைகளாக பார்த்து குழந்தைகளுக்கு என்று சில பக்கங்களை இடஒதுக்கீடு செய்தாலே பெரியவிஷயம்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கோடைவிடுமுறை குழந்தைகளை குறிவைத்து தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. ரெட்டச்சுழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், குட்டிப்பிசாசு. இன்னும் சில படங்கள் தயாரிப்பிலும் இருக்கின்றன. தமிழ் சினிமா தனக்கான நுகர்வோராய் குழந்தைகளை அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறது என்பதாக இருந்தால் இம்மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம் இல்லையா?
நெடிய தமிழ் சினிமா வரலாற்றில் குழந்தை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரியவர்களையும் கவரும் படங்கள் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. வெறுமனே குழந்தைகளை மட்டும் குறிவைத்து எடுக்கப்படும் பல படங்கள் ஆவணப்படங்கள் மாதிரியான வறட்சித்தன்மையோடு வெகுஜன வரவேற்பை பெறத் தவறியிருக்கின்றன.
ஐம்பதை கடந்தவர்களிடம் கேட்டால் சட்டென்று ‘பாமா விஜயம்’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘சாந்தி நிலையம்’, ‘எங்க மாமா’என்று ஒரு பெரிய பட்டியலை தரக்கூடும். இவையெல்லாம் முழுமையான குழந்தைகள் படமல்ல. ஆனால் குழந்தைகளை கவர்ந்த படங்கள்.
எழுபதுகளில் கவுபாய்கள் குதிரைகளில் வந்து துப்பாக்கியால் சுட்டு சுட்டீஸ்களை கவர்ந்தார்கள். அது ஆக்சன் யுகம். புரூஸ்லீ போன்ற அதிரடி நாயகர்களின் படங்கள் இங்கே சக்கைப்போடு போட்ட பாதிப்பில் ஆக்சன் படங்கள் நிறைய சிவப்பெறும்புகளாய் வரிசைகட்டி படமெடுத்தன. குழந்தைகளுக்கு ஆக்சன் பிடிக்கும் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தார்கள்.
எண்பதுகளின் தொடக்கத்தில் குழந்தைகள் சினிமா முயற்சி கொஞ்சம் சீரியஸாகவே சிந்திக்கப்பட்டது. 1984ல் வெளிவந்த இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ ஒரு மைல்கல் எனலாம். நவோதயா ஸ்டுடியோ அப்பச்சன் தயாரித்த இப்படத்தை அவரது மகன் ஜிஜோ இயக்கினார். இயக்குனரின் வயது அப்போது 21 மட்டுமே. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் பட்ஜெட் 22 கோடி என்று பரபரப்பாக பேசப்பட்டது. வசூலிலும் குறைவைக்கவில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. 3டி தந்த விசித்திர அனுபவத்தால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். 1997ல் இதே படம் டி.டி.எஸ். ஒலி சேர்க்கப்பட்டு வெளியாகி செகண்ட் இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்தது.
ஒரு திரைப்படம் வணிகரீதியான வெற்றியை அடைய குழந்தைகளையும் கவர்ந்தாகவேண்டும் என்ற சூழல் உருவானது. ரஜினிகாந்த் (ராஜா சின்ன ரோஜா), கமல்ஹாசன் (அபூர்வசகோதரர்கள்) போன்ற உச்சநடிகர்கள் கூட தங்களது இமேஜை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரியாக கட்டமைக்கத் தொடங்கினார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனராக இன்றளவும் போற்றப்படும் மணிரத்னம் அஞ்சலி (1990) திரைப்படம் எடுத்தார். பிறப்பிலேயே மனநிலை பிறழ்ந்த ஒன்றரை வயது குழந்தையை பற்றிய உருக்கமான கதை. அக்குழந்தை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்ற வாண்டுகளின் கலாட்டாவென்று மணிரத்னத்துக்கு உரிய கமர்சியல் டச்சும் இருந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து அவர்களது உளவியலை மணி அலசி ஆராய்ந்திருந்தார். படத்தில் நடித்த ஷாம்லிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
ம்.. இதெல்லாம் பழங்கதை!
தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் சினிமாவில் ‘பேண்டஸி’ரத்தம் பாய்ச்சப்பட்டது. குழந்தைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இளைஞர்களை கவரும் விதமாக கதை பண்ண ஆரம்பித்தார்கள். வசூலும் ஐப்பசிமாத அடைமழை மாதிரி கொட்டத் தொடங்கியது. சினிமா கலைவடிவமாக இன்னமும் முழு பரிமாணத்தை எட்டாத வகையில் வணிகமே பிரதானமானதாக இருக்கிறது. இதனால்தான் எங்குமே இல்லாத வகையில் சினிமாவை வணிகப்படம், கலைப்படம் என்று தரம்பிரித்து வைத்திருக்கிறார்கள்.
பெற்றோரும் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துவருவது குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். ‘படம் பார்த்து கெட்டுப்போய்விடக் கூடாது’என்பது அவர்கள் எண்ணம். ‘குழந்தைகளுக்கு படமெடுத்துவிட்டு குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை என்றால் நாங்கள் எப்படி படமெடுக்க முடியும்?’ என்பது சினிமாக்காரர்களின் ஆதங்கம். ‘படம் பார்த்தால் கெட்டுப்போகும் வகையில் சினிமா வந்தால் எப்படி குழந்தைகளோடு பார்க்கமுடியும்?’என்று பெற்றோர்கள் பதிலுக்கு எகிற.. கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா மாதிரியான விவாதம்தான் நடக்கிறது.
படத்தில் வரும் குழந்தைகள் குழந்தைகளாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது சினிமா மீது வைக்கப்படும் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு. அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையை நிஜத்தில் நான் கண்டதேயில்லை. வயதுக்கு மீறிய பேச்சும், நடத்தையும் எரிச்சலை தருகிறது.
லாபம் வருமென்றால் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க தமிழ் சினிமாக்காரர்களுக்கு அவர்களுக்கு மனத்தடை ஏதுமில்லை. வணிகத்துக்கு முதலிடம், மற்ற விஷயங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த இடம் என்பது சினிமாக்காரர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் குழந்தைகள் பட டிரெண்ட் தொடரவேண்டுமானால் பெற்றோர்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரவேண்டும். படம் குழந்தைகளை திருப்தி படுத்தும் முன்னர் அவர்களது பெற்றோர்களை திருப்தி படுத்த வேண்டும்.
இந்தியில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘தாரே ஜமீன் பர்’. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் ஒரு குழந்தை முக்கிய பாத்திரத்தில் நடித்த படத்தில் தனது இமேஜை விட்டுக்கொடுத்து நடித்து இயக்கினார். இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. இதைப்போன்ற முயற்சிகள் தமிழில் செய்யப்பட்டால் மட்டுமே குழந்தைகள் படத்துக்கான தனியிடம் தமிழில் உருவாகும்.
முயற்சிப்பார்களா நம் படைப்பாளிகள்?