7 ஜூன், 2010

சைக்கிள் மிதிக்க ரெடியா?

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினை இது. ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் ஒரு பகுதிக்கு செல்ல வேண்டும். இன்றைய போக்குவரத்து நடந்து செல்வதற்கு கூட வாகாக இல்லாத நிலை. ஆட்டோ ரிக்‌ஷாவைதான் நாடவேண்டும். அதற்கும் அநியாயக் கட்டணம்.

சைக்கிள் மட்டும் இருந்தால்.. ஒரு மிதி மிதித்து விடலாமே?என்று யோசிக்கத் தோன்றுமில்லையா?
மோட்டர் சைக்கிள், கார், பஸ், ஆட்டோ ரிக்‌ஷாவென்று போக்குவரத்துக்கு நிறைய வசதிகள் வந்துவிட்ட காலத்தில் சைக்கிளா.. ச்சே!என்றுகூட நினைப்பீர்கள். ஆம். சைக்கிள்தான் குறைந்ததூரப் போக்குவரத்துக்கு உகந்த சரியான வாகனமென்று ஐரோப்பாவிலும், சீனாவிலும் முடிவுகட்டி விட்டார்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிதிமிதியென்று சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்த நாம்தான் அதை ஒட்டுமொத்தமாக ஏறக்கட்டி வைத்துவிட்டோம்.
புவிவெப்பப் பிரச்சினை அதிகபட்ச சூட்டினை கிளப்பியிருக்கிறது. சுற்றுப்புறச்சூழல் தாறுமாறாக கெட்டு கிடக்கிறது. பெட்ரோல் விலை விண்ணைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. எனவே கொஞ்சதூரம் சைக்கிளை மிதிப்பதால் என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது? சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் நல்ல பயிற்சிதானே?
இன்றைய நிலையில் குறுகிய தூரப் பயணங்களில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?
வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமே அருகிலிருக்கும் ரயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்வதற்கு குறைந்தபட்சம் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாவது நாம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இந்த தூரத்தை கடக்க நாம் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுப்புறச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.
பஸ்சுக்காகவும், ஆட்டோவுக்காகவும் காத்திருக்கும் நேரமும் வீண். காத்திருக்கும் நேரம் மட்டுமன்றி சிக்னல்களிலும், போக்குவரத்து சிக்கல்களிலும் கூடுதல் நேரத்தை செலவழித்து அலுவலகத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கோ சரியான நேரத்தில் போய்ச்சேர முடியாத நிலை.
இத்தகைய சிக்கல்களுக்கு மாற்றாக மும்பையின் புறநகரான தானேவில் களமிறங்கியிருக்கும் நிறுவனம் ஃப்ரீ-மோ (Fre-mo – Freedom to move). ஒரு நாளைக்கு சுமார் ஏழு லட்சம் பேர் தானே ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இங்குவர அவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களால் நகரத்தின் போக்குவரத்து சிக்கல் இடியாப்பச் சிக்கலாகி விட்டது. பணமும், அதைவிட பொன் போன்ற நேரமும் தண்ணீராய் செலவழிகிறது. எனவேதான் சைக்கிளை இந்தப் பிரச்சினைக்கு மாற்றாக முன்வைக்கிறது ஃப்ரீ-மோ. இந்தியாவிலேயே முதன்முறையாக தானே நகருக்கு சமீபத்தில் வந்திருக்கும் திட்டம் இது.
ஃப்ரீ-மோ திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்கள் மேற்சொன்ன பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். சுற்றுப்புறச்சூழலை காப்பதாகவும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். இதற்காக சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டியதில்லை. எனவே அதை பராமரிக்கும் சிக்கலும் இல்லை. இதை ஃப்ரீ-மோ பார்த்துக் கொள்ளும்.
மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை சைக்கிள் ஓட்டுவதால் பயணத்தோடு சேர்ந்து உடற்பயிற்சியும் இலவசமாக கிடைக்கிறது. ஜிம்முக்கும், பயணத்துக்கும் மாதாமாதம் ஆயிரங்களை கொட்டி அழத் தேவையில்லை.
அலுவலகங்களுக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்ச தூரத்துக்கு பயணிப்பவர்கள் என்று பலருக்கும் இதனால் விளையும் பயன்கள் ஏராளம்.
சரி. இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
நகரின் முக்கியமான பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஃப்ரீ-மோ நிறுவனத்தின் சைக்கிள் நிலையங்கள் இருக்கும். ஓர் உறுப்பினர் தன்னுடைய வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நிலையத்திலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கோ, பஸ் நிறுத்தத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கு அருகிலிருக்கும் நிலையத்தில் சைக்கிளை விட்டு விட்டு ஹாயாக சென்றுகொண்டே இருக்கலாம். சைக்கிளை இரவு முழுக்க வைத்திருக்கவோ அல்லது தேவையில்லாமல் வீட்டிலோ, தியேட்டரிலோ, வேறு இடத்திலோ நிறுத்தி வைத்திருப்பதற்கு அனுமதியில்லை. பயணத்துக்கு மட்டுமே உறுப்பினர்கள் சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்துகொள்ள நிறுவனம் சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை விதித்திருக்கிறது. செல்ஃபோனுக்கு சிம்கார்ட் வாங்குவதைப் போல சுலபமான வழிமுறைகள்தான். நிறுவனம் கேட்கும் தகவல்கள், ஆவணங்கள் மற்றும் உறுப்பினர் கட்டணத்தை செலுத்திவிட்டால் உறுப்பினர் ஆகிவிடலாம்.
உறுப்பினருக்கு கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மாதிரி ஒரு அட்டை கொடுக்கிறார்கள். இந்த அட்டையை பயன்படுத்திதான் சைக்கிளை எடுக்க முடியும். ஐந்து லட்ச ரூபாய்க்கு பர்சனல் ஆக்சிடெண்ட் இன்சூரன்ஸ் பாலிசியும் உண்டு. ஆண்கள் – பெண்கள் இருவருமே ஓட்டக்கூடிய ‘யூனிசெக்ஸ் வகை சைக்கிள்களே இங்கு கிடைக்கிறது. ஹெல்மெட் கொடுக்கிறார்கள். மழைக்காலத்தில் ரெயின்கோட் கூட பயனாளிகளுக்கு உண்டு. வசதிகள் இவ்வளவு இருப்பதால் உறுப்பினர் கட்டணம் அதிகமாக இருக்குமே என்று நினைப்பீர்கள்.
அதிகமில்லை ஜெண்டில்மேன்! ஆண்டுக்கு ரூபாய் இருநூறு மட்டுமே. ஆயுள் பதிவுக்கட்டணம் ஐநூறு. திரும்பப் பெறத்தக்க டெபாசிட் ரூபாய் இரண்டாயிரம். இவ்வளவு மட்டுமே!


ஃப்ரீ-மோவை தொடங்கியிருப்பவர் 48 வயதான வி.ரமேஷ். ஒரு பைனான்ஸ் கம்பெனியில் தலைமை செயல் அலுவலராக பணியாற்றியவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது பணியை எழுதிகொடுத்து விட்டு இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
“2008ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியபோது பெட்ரோல் விலை உயர்வை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பெட்ரோல் பயன்படுத்துவதை குறைப்பது தொடர்பாக நிறைய பேர் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிப்படையிலேயே எனக்கு சைக்கிளை போக்குவரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவது குறித்த யோசனை வந்தது.
சைக்கிளா? என்று ஆரம்பத்தில் கார், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சுகம் கண்டவர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆனால் ஒருமுறை எங்களிடம் உறுப்பினராக சேர்ந்துவிட்டவர்கள் சைக்கிள் கொடுக்கும் பரம சுதந்திரத்தை விரும்ப ஆரம்பித்து விடுகிறார்கள்!என்று தான் ஃப்ரீ-மோ தொடங்கிய கதையை சொல்கிறார் ரமேஷ்.
ஒரு பைனான்ஸ் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர் சைக்கிள் கடை வைக்க போகலாமா என்று முதுகிற்குப் பின்னால் நிறைய பேர் ஆரம்பத்தில் கேலி பேசியிருக்கிறார்கள். நிறுவனத்தை தொடங்க இரண்டு கோடி ரூபாய் பணத்துக்காக பேயாய் அலைந்திருக்கிறார். தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வமிருப்பவர்கள் கூட ஒரு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான திட்டத்தால் லாபம் என்ன இருக்கப் போகிறது என்று முதலீடு செய்ய மறுத்துவிட்டார்களாம். கடைசியாக பேங்க் ஆஃப் பரோடா கைகொடுக்க ஃப்ரீ-மோ ரெடி.
இத்திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக மாற்றங்களை முன்வைத்து பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோருகிறார் ரமேஷ். என்னென்ன மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று ஒரு பெரிய கனவுப் பட்டியலையும் போடுகிறார்.
  1. நகரப் போக்குவரத்துச் சிக்கலை குறைக்கலாம். பெரும்பாலானவர்கள் சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் சிக்கல் ஏது? காற்று மற்றும் ஒலியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துவிடுமில்லையா?
  2. சுற்றுச்சூழல் சீரடைவதால் அனைவரும் சுத்தமான காற்றை சைக்கிள் மிதிக்கும்போது சுவாசிப்பார்கள். சைக்கிள் மிதிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
  3. சிறுதூரப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மக்கள் இந்த பணத்தை வேறு வகையில் உபயோகமாக செலவழித்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
  4. இன்று நகரங்களில் இருக்கும் பெரிய பிரச்சினை ‘பார்க்கிங் இத்திட்டத்தால் பார்க்கிங் பிரச்சினையை முற்றாக களையமுடியும். இது நகரக் கட்டமைப்புக்கும் வசதியானது.
  5. கார், பஸ் போன்ற வாகனங்களால் சாலை சீக்கிரம் பாதிப்படைகிறது. சைக்கிள்கள் அதிகம் செல்லும் சாலை நீண்டகாலத்துக்கு பாதிப்படையாமல் இருக்கும்.
  6. இதனால் சேமிக்கப்படும் நேரத்தை மக்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க முடியும். கூடுதலாக வருவாய் ஈட்டவோ அல்லது குடும்பத்தோடோ மகிழ்ச்சியாக இருக்கவோ நேரம் நிறைய கிடைக்கும்.
  7. கடைசியாக எந்திரம் போல இயங்கும் நம் வாழ்க்கையை சைக்கிள் பயணம் மாற்றும்.
எல்லாம் சரி. இதுவெல்லாம் ‘தானேவுக்குதானே? நம்ம ஊருக்கு எப்போ வரும் என்று நீங்கள் ஏக்கத்தோடு நினைப்பது புரிகிறது.
மிகவிரைவில் புதுடெல்லி, புனே, பெங்களூர், சென்னைக்கு ஃப்ரீ-மோ திட்டத்தை விரைவுபடுத்த இருக்கிறார் ரமேஷ். இதையடுத்து இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் சைக்கிள்மயமாக்குவதுதான் அவரது லட்சியம்.
சைக்கிள் மிதித்துக்கொண்டு தோழனோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே என்று நாம் பாடிச்செல்லும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும்.

15 கருத்துகள்:

  1. [நிஜமாகவே] நல்ல பதிவு நன்றி பத்ரி

    பதிலளிநீக்கு
  2. நல்லாயிருக்கு! விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு!!!


    இன்னும் மிதிவண்டிக்கு நடுத்தர மக்கள் மத்தியில், வரவேற்பு இருப்பதாகவே அறிகிறேன்!

    சென்னை புறநகர் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருக்கும், மிதிவண்டி பாதுகாப்பு நிலையங்களே சாட்சி! நான் பார்த்த வரையில், பரங்கி மலை ரயில் நிலையத்துக்கு அருகில் அதிகமான‌ ஸ்டாண்டுகள் இருக்கின்றன.

    மக்கள் மிதிவண்டியிலிருந்து மாறுவதற்க்குக் காரணம், கொஞ்சம் வசதி வந்ததும், மோட்டார் வாகனம் என்பது ஸ்டேடஸ் என்ற நிலைக்கு தள்ளப் படுவது.

    மற்றொன்று, இன்றைக்கு, நகரங்களில் சைக்கிள்கள் செல்வதற்க்கு சாலைகள் இல்லாமை. வெளி நாடுகளில், மிதிவண்டிகள் செல்ல தனி பகுதி ஒதுக்கப் பட்டிருக்கும்!



    இந்தியா இப்போதுதான் வளர்கிறது. வளர்ந்து கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வார்கள்!!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1:16 PM, ஜூன் 07, 2010

    //சைக்கிள் மிதித்துக்கொண்டு தோழனோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று நாம் பாடிச்செல்லும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும்.//

    இதுக்கு பேருதான் "லைப் சைக்கிள்" -நு சொல்லுறாங்களா ....எங்க ஆரம்பிச்சமோ அங்கேயே வந்து நிக்கறோம் ...மன்னிக்கவும்...ஓட்டுறோம் .....

    பதிலளிநீக்கு
  4. Goinchami Group Dubai Branch1:22 PM, ஜூன் 07, 2010

    [நிஜமாகவே] நல்ல பதிவு நன்றி பத்ரி

    Repeattu

    பதிலளிநீக்கு
  5. :) அருமையான திட்டம்.

    சும்மா lighter sense-ல: யாராவது சீட்டை திருடி விட்டால் என்ன செய்யறதுங்க?

    பதிலளிநீக்கு
  6. wow!
    really i like this matter yuva., basically still i love walking and cycling, so i love this

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1:51 PM, ஜூன் 07, 2010

    Excellent effort by him.The govt and city authorities should help by putting separate lanes for bikes.

    Now,do we have platforms for pedastrinas atleast?

    But i think once large volume of people start cycling,we can put pressure on govts and corporations.

    பதிலளிநீக்கு
  8. நல்ல திட்டம் தாங்க..எனக்கு தெரிஞ்சு Infosys Bangalore campus ல ஒரு கட்டிடத்துல இருந்து இன்னொன்னுக்கு போக பணியாளர்களும், பார்வையாளர்களும் சைக்கிள் பயன்படுத்தறாங்க.. இதுக்காக ஆயிரம் சைக்கிள் வெச்சிருக்காங்க..கொஞ்ச வருஷம் முன்னாடி இருந்தே இந்த நல்ல விஷயம் இருக்குங்க.

    ஆனா இந்த கார், பஸ் வசதி எல்லாம் சின்ன தூரத்துக்கு கூட உபயோகப்படுத்தறதுக்கு முக்கியமான காரணம் என்னன்னு பாத்தா, அலுங்காம, வியர்வை வடியாம,மழை வெய்யிலுக்கு தப்பிச்சு போகணுமேன்னு தாங்க. நிறைய பேரு இதை ஆமோதிப்பாங்கன்னு நினைக்கிறேங்க. அதுவும் சூரியனார் குத்தகைக்கு எடுத்து சுட்டுகிட்டு இருக்கற சென்னை மாதிரி எடத்துல கொஞ்ச தூரத்துக்கே நாக்கு தள்ளிரும்ங்க. :-)

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர், கோயிஞ்சாமி க்ரூப் துபாய் பிரிவு என்றொரு பின்னூட்டம் கண்டோம். எமது கோயிஞ்சாமி க்ளப்புக்கு சென்னை தவிர வேறெங்கும் கிளைகளில்லை என்பதை சங்கத்தலைவர் உம்மிடம் தெரியப்படுத்தச் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  10. அசோக் மூர்த்தி3:23 PM, ஜூன் 07, 2010

    ஏன் சுத்தி வளைக்கறீங்க பிரதீபா..நீங்க சொல்றது நூறு % உண்மை ! (என்னை மாதிரி ) சோம்பேறிகளுக்கு கண்டிப்பாக இந்த திட்டம் பொருந்தாது !

    இதுல இன்னொரு சிரமம் என்னன்னா காலைலயே வியர்த்து விறுவிறுத்து நம்ம freshness எல்லாம் போய்டும் ! softwareல இருக்கறவங்க அப்படியே meetingல போய் நின்னா நல்லவா இருக்கும் ! நான் இத எனக்காக சொல்லல ... நம்ம மக்களுக்காகவும் சேர்த்துதான் சொல்றேன் !

    பதிலளிநீக்கு
  11. நல்ல முயற்சி... பாப்போம்.... நானும் வேலை சேர்ந்த புதிதில் மிதிவண்டி வாங்க நினைத்ததுண்டு.. ஆனால் வாயிலுக்கு பயந்துஊ ....


    //சென்னை மாதிரி எடத்துல கொஞ்ச தூரத்துக்கே நாக்கு தள்ளிரும்ங்க. :-)

    இப்பலாம் குடலே தள்ளிடுதுங்க....

    பதிலளிநீக்கு
  12. கிருஷ்ணா ....

    நான் ஏற்கனவே இந்த திட்டத்தின் படி தான் வாழ்ந்து வருகிறேன் ...என்னிடம் சொந்தமாக ஒரு சைக்கிள் இருக்கு. சுமார் ஒரு 6 அல்லது 7 கிலோ மீட்டர் உள் போயிட்டு வர வேண்டுமானால் சைக்கிள் தான் use பண்ணுவேன் .. பெரும்பாலும் பஸ் தான் use பண்ணுவேன் ....பைக் யை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் பயன் படுத்துவேன்...


    "இதுல இன்னொரு சிரமம் என்னன்னா காலைலயே வியர்த்து விறுவிறுத்து நம்ம freshness எல்லாம் போய்டும் ! softwareல இருக்கறவங்க அப்படியே meetingல போய் நின்னா நல்லவா இருக்கும் ! நான் இத எனக்காக சொல்லல ... நம்ம மக்களுக்காகவும் சேர்த்துதான் சொல்றேன் !"

    ஐயா ....

    ஆபீஸ் க்கு போன உடனே முகம் கழுவி கொண்டால் போச்சு ..... கூடவே பைல ஒரு சின்ன towel கொண்டு போங்க .....நீங்க சொல்லுறதெல்லாம் சும்மா சப்பைக்கட்டு ....

    பதிலளிநீக்கு
  13. I had been to Kongu Engineering College for a conferrence on global warming as a guest speaker. I also gave a radio interview in the community FM radio run by the college. They asked me to give a suggestion to reduce global warming at their level. I suggested that the College can provide cycles at the entrance of the college and prohibit all motorised vehicles plying inside the college campus. Now some one is doing the same thing somewhere in India is really pleasing. Big university campuses, especially private university campuses should immediately try to implement this.

    K V B
    Asst. Meteorologist
    kvbmanian@yahoo.com

    பதிலளிநீக்கு