29 ஜூன், 2010

மே 18

இருதினங்களுக்கு முன்பு தமிழ்தேசிய நண்பரொருவர் என்னுடைய தமிழுணர்வு குறைபாடு குறித்து தொலைபேசியில் காரசாரமாக நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தார். செம்மொழி மாநாட்டுக்கு நான் சென்றிருந்தது குறித்து அவருக்கு வருத்தம். தொழில்நிமித்தமாக போகவேண்டியிருந்தது என்று நான் சப்பைக்கட்டு கட்டினாலும், புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் ஏசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக, நான் தமிழுணர்வற்றவன் என்று நிரூபிக்க “இந்த மே 18 அன்றைக்கு என்னடா செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றினையும் கேட்டார். கடந்த 2009ல் அதே தினத்தில் ஈழத்தில் கொத்து கொத்தாய் மனிதப் படுகொலை நிகழ்ந்ததையும், வெட்டப்பட்ட முகம் ஒன்று பிரபாகரன் என்று காட்டப்பட்டதையும் நினைவுறுத்தி, அந்நாளை நான் நினைவில் கொண்டிருந்தேனா என்று அறிவது அவரது நோக்கம். ”நினைவில்லை, பிறகு சொல்கிறேன்” என்று அப்போதைக்கு சமாளித்துவிட்டு லைனை ‘கட்’ செய்தேன்.

இந்த ஆண்டு மே 18 அன்று நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன்? யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. பின்னர் டயரியைப் புரட்டிப் பார்த்தபோது நிஜமாகவே கொஞ்சம் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. அன்று வெளியாகியிருந்த புதுப்படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஈவ்னிங் ஷோ பார்த்திருக்கிறேன். இரண்டரை மணி நேரம் வயிறுகுலுங்கச் சிரித்திருக்கிறேன். நண்பரின் பார்வையில் நான் தமிழுணர்வற்றவன் என்று பார்க்கப்பட நிஜமாகவே நியாயமான காரணம் இருக்கிறது என்றுதான் உணர்கிறேன்.

இப்போது என்னுடைய முறை. வேறு சில நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு, “கடந்த மே 18 அன்று என்ன செய்துக் கொண்டிருந்தாய்?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழுணர்வு நிறைந்த தமிழர்கள் குறித்த ஒரு சின்ன கணிப்புக்காக. என்ன கொடுமை? பலரும் அதே நாளில் அதே படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். இதில் ஓரிரு ஈழத்தமிழர்களும், புலி ஆதரவாளர்களும் கூட அடக்கம். படம் பார்க்காத ஒரு சிலரும் வேறு ஏதோ கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் மூழ்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

எனக்கு இது வரை ஒரே ஒரு ‘ஒரிஜினல் உணர்வாளன்’ கூட கிடைக்கவில்லை. எப்படியாவது ஒரு தமிழுணர்வாளராவது மாட்ட மாட்டாரா? அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். ப்ளீஸ் நீங்களாவது கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன். “கடந்த மே 18 அன்று நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்?”

26 கருத்துகள்:

  1. அண்ணா உண்மையிலேயே உங்கள் பதிவு இதயத்தைத் தொட்டது! என்னால் பேச முடியவில்லை! நான் மே 18 அன்று என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதைக் கூட மறந்துவிட்டேன்! என்னால் இதைத் தட்டச்சிடக் கூட இயலவில்லை! உளம் நோகிறது! வெட்கப்படுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. மனைவியின், தாயின், தந்தையின், பிறந்த மற்றும் இறந்த நாளை மறந்திருப்பவர் அனைவரும் அவர்கள் மேல் பாசமற்றவர் இல்லை. அதுபோல may18 மறந்திருந்தால் தவறில்லை. மறந்ததற்கு வருந்தும் மனம் ஞாபகம் வைத்திருந்ததற்கு சமம்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா6:37 PM, ஜூன் 29, 2010

    லக்கி, அன்று தமிழுணர்வாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கறுப்பு உடையுடன் அன்றைய தினத்தை ஒரு துக்க தினமாகவே கடைபிடித்தேன். அனாதையாக கொல்லப்பட்ட தமிழர்களை எண்ணி வருந்தினேன்.

    பதிலளிநீக்கு
  4. அம்மாக்கள் தினத்தில்தான் தாயின் மீது பாசம் காட்ட வேண்டுமா என்ன?

    தமிழுணர்வை வெளிப் படுத்த, மே ‍ 18‍யை நினைவில் வைத்துக் கொண்டு, அந்த நாளில் தமிழுணர்வை வெளிப் படுத்திவிட்டு, மற்ற 364 நாட்களும், இனிப்பு உண்டு, டாஸ்மார்க் போய், திரைப்படத்தில் பார்த்தால் தமிழுணர்வாளர் என்ற பட்டம் கிடைத்துவிடுமா?

    என்னய்யா சொல்கிறீர் நீர்?

    பதிலளிநீக்கு
  5. ஈழத்தமிழன்6:58 PM, ஜூன் 29, 2010

    இறந்து போன எம் இன மக்கள் ஒரு லட்சம் பேரையும் என்னால் திரும்ப பிறப்பிக்க முடியாவிடினும் மே -18 - 2009 முதல் இன்று வரை இனவிருத்தி செய்யும் தீவிர முயற்சியில் இருக்கின்றேன். அன்றைக்கு அவிழ்த்த கோவணம் இது வரை கட்டவேயில்லை. இடையிடையே கருணாநிதியை திட்டி பதிவு போடுகிறேன். முடிந்த அளவு தமிழக தமிழனை உசுப்பி விடுகின்றேன். ஏனனில் அவனுங்க தான் உணர்ச்சிக்கு அடிமையானவனுங்க...வக்காலிங்க..

    இப்படிக்கு மெத்தையில் இருந்து

    ரொரன்றோ ஈழதமிழன்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் தமிழ் உணர்வு...கண்ணில் நீரை வர வைக்கிறது...நீங்கள் உணர்த்த விரும்புவது மறந்து விடுங்கள் என்பது தானா... உங்கள் பல பதிவுகளை விரும்பி படித்தவன் என்பதால் தொடர்ந்து வந்து காயப்படுகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. என்ன யுவகிருஷ்ணா,
    உங்களுக்கும் கூடவா இது பிடிபடலை? "இரும்புக்கோட்டை" படம் ஒரு தமிழ் உணர்வாளனின் கனவு குறித்த படம்.

    "புலி" இப்படத்தில் சிங்கமாகியுள்ளது. வஞ்சகமாக பழி தீர்க்கப் பட்ட சிங்கம் உயிர்த்தெழுந்து "சிங்காரமாக" உருவெடுத்து, ஒடுக்கப் பட்டவர்களை நசுக்க எண்ணும் அதிகார வர்க்கத்தினரை வெல்வதாக அல்லவா கதை உள்ளது?

    மேலும் படத்தில் பலப்பல இன்டெர் லிங்குகள் உள்ளன. கவனிக்கவில்லையா என்ன நீங்கள்?

    அன்று சரியான செயலையல்லாவா செய்துள்ளீர்கள் நீங்கள்?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9:41 PM, ஜூன் 29, 2010

    //அன்று வெளியாகியிருந்த புதுப்படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஈவ்னிங் ஷோ பார்த்திருக்கிறேன். இரண்டரை மணி நேரம் வயிறுகுலுங்கச் சிரித்திருக்கிறேன்.//

    Ha ha

    பதிலளிநீக்கு
  9. நான் தண்ணி அடித்து கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  10. கடைசி சில தினங்கள் நான் கணினியை விட்டு அகலவில்லை. மேலும் எனது இலங்கை நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் இல்லை என்ற போதும் தமிழன் என்ற வகையில் ஏனோ மனது மிக மிக வலித்துக்கொண்டிருந்தது. சாப்பிட முடியவில்லை, தூக்கம் இல்லை. மக்கள் கொல்லப்பட்ட செய்தியைக்கேட்டு, கொஞ்சம் கருணாநிதியின் மீது,ம் நிறைய சோனியா மீதும் கோபம் வந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரபாகரன் என் இப்படி செய்தார் என்று விளங்கிக்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்(இப்போதும் அதே நிலைதான்).

    பதிலளிநீக்கு
  11. ”இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்” படத்தின் காட்சி/வசனம் ”பொங்கு தமிழனுக்கு துன்பம் என்றால் என்ன செய்வான்“ 3 சாய்ஸ் தருவார்கள், கிரிகட் பார்பான், கட் அவுட்க்கு பாலபிஷேகம் செய்வான் அல்லது டீ கடையில் வெட்டி நியாயம் பேசுவான் என்று.- தல சரியான படம் தான் பாத்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  12. செம்மொழிய மேட்டர் இல்லையா ?
    :)

    பதிலளிநீக்கு
  13. நம் நாட்டை பற்றி கவலைபடுங்கள்.

    எவ்வளவு பேர் பிச்சைக்காரர்களாக, ப்லேட்பார்மில் வாழ்கிறார்கள்... உங்கள் சென்னையில் சுற்றி பாருங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்.

    புதிய தலைமுறையில் - படித்திருந்தும் காசில்லாமல் காலேஜ் போக முடியாதவர்கள் பற்றி எழுதலாம். இயன்ற உதவி செய்வோம்.

    இயற்கை எங்களை ஏன் இப்படி படைத்தது.

    பதிலளிநீக்கு
  14. மே பதினெட்டாம் அன்று கண்றாவி கவிதைகள் எழுதினேன்.

    ஆனால் குடும்பத்தில் அனைத்து சுபகாரியங்களும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

    நாட்டில் எதுவும் நல்லது நடப்பது தான் எனக்கு பிடிக்காது.எனென்றால் கருணாநிதி பெயரை தட்டி கொண்டு செல்வது எனக்கு கஸ்ஸ்டமாக இருக்கிறது.

    சிவத்தம்பி கோவை வந்தால் என்ன? அவரையும் துரோகி லிஸ்ட்டில் போட்டால் போகிறது.

    பதிலளிநீக்கு
  15. நிர்க்கதியாக அடைபட்டுக் கிடக்கும் தமிழர்களை மனிதாபிமானமே இன்றி எல்லாத் தரப்பும் கைவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது.

    நாம், இடையிடையே மின்சாரம் தடைபடுவதே சகிக்க முடியாத துயரமாக கருதுகிறோம். அவர்களின் துயரம் சொல்லில் வடிக்க முடியாதது.

    தமிழர்கள் தத்தம் பகுதிகளில் தம் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க இறைவன் அருள் புரியட்டும்

    பதிலளிநீக்கு
  16. சாந்தப்பன் சார்!

    மேட்டரை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள இயலா அளவுக்கு நான் பதிவிட்டதுக்கு மன்னிக்கவும்.

    மே 18 - நடந்த மிகச்சரியான ஓராண்டில் கூட அதை நினைக்க முடியாத தமிழன் மீதி 364 நாட்களில் என்னத்தைக் கிழிப்பான் என்ற ஆதங்கமே இப்பதிவு.

    பதிலளிநீக்கு
  17. நினைத்துப் பார்த்தால் வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  18. தமிழகத்தில் உள்ள 6 கோடி தமிழர்களில் சில நூறு பேர் மட்டுமே தமிழர்களாக சித்தரிக்கும் அவலப் போக்கு என்று மாறுமோ அன்றுதான் உண்மையான தமிழுணர்வு வெளிப்படுத்தியதாகக் கொள்ள இயலுமேயொழிய இன்றைய வெளிப்பாடுகள் எல்லாம் வெறும் வேடமே.

    பதிலளிநீக்கு
  19. ரொரன்றோ ஈழதமிழன்//

    ரொறன்ரோ ஈழதமிழன் என வரவேண்டும். :)

    Better luck next time

    பதிலளிநீக்கு
  20. எல்லாம் சரி, அது என்ன வகை- கதை?

    பதிலளிநீக்கு
  21. கண்டுபிடிச்சிட்டீங்களே இளங்கோவன்! :-)

    பின்னூட்டங்களில் நிறைய கதை வரும் என்று எதிர்பார்த்து அந்த லேபிளை வைத்தேன். என் எதிர்பார்ப்பு இங்கும், ஃபேஸ்புக்கிலும் சரியாக நிறைவேறி விட்டது.

    பதிலளிநீக்கு
  22. //சாந்தப்பன் சார்!

    மேட்டரை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள இயலா அளவுக்கு நான் பதிவிட்டதுக்கு மன்னிக்கவும்.

    மே 18 - நடந்த மிகச்சரியான ஓராண்டில் கூட அதை நினைக்க முடியாத தமிழன் மீதி 364 நாட்களில் என்னத்தைக் கிழிப்பான் என்ற ஆதங்கமே இப்பதிவு.//

    லக்கி உடன்படுகிறேன். அவமானமாய் உணர்கிறேன். சிறந்த பதிவு!!.

    பதிலளிநீக்கு
  23. //அன்று வெளியாகியிருந்த புதுப்படமான ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஈவ்னிங் ஷோ பார்த்திருக்கிறேன். இரண்டரை மணி நேரம் வயிறுகுலுங்கச் சிரித்திருக்கிறேன்

    அந்நாளில் இதைவிட ஒரு மரண அவஸ்தையை பெற முடியுமா?

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா3:32 PM, ஜூலை 01, 2010

    உண்ணாவிரதம் இருந்தேன்....

    பதிலளிநீக்கு