18 ஜூன், 2010

அரயத்தி மகன் - டி.அருள் எழிலன்

தற்போது குங்குமத்தில் பணிபுரியும் அண்ணன் அருள் எழிலனின் ஆரம்பகால விகடன் கட்டுரைகள் பரவலாக வாசகர்களிடையே பேசப்பட்டவை. பெரும்பாலும் ஹ்யூமன் ஸ்டோரிகள். ஆனாலும் ஒவ்வொரு வார்த்தையும் துப்பாக்கி ரவைகள் மாதிரி படிப்பவனின் நெஞ்சை துளைக்கும். இவர் ஒரு முன்னாள் மாவோயிஸ்ட்டோ என்றுகூட நான் பலமுறை எண்ணியதுண்டு. கதைகளை வாசிப்பதில் சுவாரஸ்யம் குறைந்த காலக்கட்டத்தில் அருள் எழிலன் போன்ற பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் எனது வாசிப்பார்வம் குறையாமல் பார்த்துக் கொண்டன.


அவர் என்னை ஏமாற்றிய கதையையும் சொல்லியே ஆகவேண்டும். சிலரது எழுத்துகளை வாசிக்கும்போது அவர்களுக்கு ஒரு இமேஜை என் நெஞ்சில் ஏற்றி வைத்துக் கொள்வேன். அருள் எழிலனை தாடிவைத்து, உயரமாக, குண்டாக, கண்கள் சிகப்பாக, தலையில் சேகுவேரா தொப்பியோடு, மொத்தத்தில் ஒரு புரட்சியாளராக இமேஜ் செய்து வைத்திருந்தேன்.


முதன்முதலாக ஜி.என்.செட்டி சாலையில் ஒரு டீக்கடை வாசலில் சந்தித்தபோது கடுமையான ஏமாற்றத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். இம்சை அரசனின் தம்பி மாதிரி டொங்கலாக இருந்தார். அதற்கென்ன செய்வது? சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள் ஓங்குதாங்காக மேக்கப்போடு இருக்கிறார்கள். நிஜவாழ்வு ஹீரோக்களும் நம்மைப்போல சாமானியர்கள் என்பதுதான் யதார்த்தம்.


இனி ‘பத்திரிகையாளன் ஆனது எப்படி?’ என்று அண்ணன் எழிலன் அவரது வழக்கமான ’ரொமாண்டிசைஸ்’ பாணியில் பேசுகிறார். அவர் எழுதியிருக்கும் இக்கட்டுரை எழுதவிரும்பும் எவருக்கும் முக்கியமானது என்ற அடிப்படையில் இங்கே பதிந்து வைக்கிறேன்.




ஒரு பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. எழுதியும் பேசியுமே தான் பள்ளிக்காலம் கழிந்தது. பள்ளி இறுதிக் கல்வியைக் கூட தாண்டியவனில்லை நான். எட்டாவது படிக்கும் போது இப்படி ஒரு ஜோக் எழுதியிருந்தேன்.

வாத்தியார்- "சுத்தம் சோறு போடும்"

மாணவன் - "அப்போ எதுசார் குழம்பு ஊற்றும்?

என்று ஒரு கடி ஜோக் எழுதியதாக நினைவு........... எட்டாவது வகுப்பிலும் இரண்டு வருடம்..... ஒவ்வொரு வகுப்பையும் இரண்டு இரண்டு வருடமாக நீள அகலமாக உழுதவன் நான், என்பதை மட்டுமே எனது கல்விப் பெருமையின் எல்லையாகச் சொல்லி விட முடியாது. ஏனென்றால் நான் பத்தாவது பாஸாக மூன்று சான்றிதழ் வைத்திருக்கிறேன். அப்படிக் கழிந்த பின்னர்தான் நான் சென்னை வந்தேன். எம்.எல்.ஏ ஹாஸ்டல், கோடம்பாக்கம், ஜோன்ஸ் சாலை, மேற்கு சைதாப்பேட்டை, வண்ணாரப்பாதை என கழிந்தது ஆரம்பகால சென்னை வாழ்வு............நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.


பத்திரிகை, ஊடகம் எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் சந்திரபாபு குறித்து ஒரு ஆவணத்தை தயாரிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். அவரின் உறவினர்கள், பழகியவர்கள், ஏராளமான பழைய நாளிதழ்கள், எனப் பலவற்றையும், பலரையும் பார்த்த போதும் எனக்கு சந்திரபாபுவின் குணம் குறித்த ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் சந்திரபாபுவின் ரத்த உறவுகள் தாம்பரத்தில் இருக்கிறார்கள்.நீண்ட தேடலுக்குப் பின்னர் அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடமிருந்து அபூர்வமான சந்திரபாபுவின் திருமண அழைப்பிதழ் ஒன்று கிடைக்க இன்று வரை அதை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அப்போது நான் எழுதியதுதான் "பாதியில் முடிந்த பயணம்" சந்திரபாபு பற்றி என் முதல் கட்டுரையான அதுதான் அநேகமாக நான் எழுதிய முதல் அதிகாரபூர்வக் கட்டுரையாக இருக்கும் என நினைக்கிறேன். 

சிறுபத்திரிகைகளில் நாம் எழுதியதை எல்லாம் வெளியிடுவார்களா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என் அண்ணனைப் பார்க்க அவனது அலுவலகம் சென்றேன். (செலவுக்குப் பணம் வாங்கத்தான்) அங்கே ஒருவர் இருந்தார் என்னோட அண்ணன் எனக்கு அவரை அறிமுகப்படுத்த வில்லை. ஆனால் வந்திருந்தவரிடம் சொன்னார் ""கண்ணா இது என் தம்பி........" " ஓ அப்படியா? " என்று தன் அக்மார்க் சிரிப்போடு என்னைப் பற்றி விசாரித்தார் அந்த நபர். அவர்தான் ஆனந்தவிகடனின் கண்ணன் என்பது தெரிந்ததும். என் பாக்கெட்டுலியே இருந்த சந்திரபாவுவை வெளியில் எடுத்து படிக்கக் கொடுத்தேன். என் அண்ணன் எப்போதுமே நான் எழுதுவேன் என்றோ, குறும்படம் இயக்குவேன் என்றோ நினைத்ததும் இல்லை நம்பியதும் இல்லை. ஒவ்வொரு முறையும் நான் எனது சில விருப்பங்களை, ஆசைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம் அவன் என்னை திட்டித்தான் அனுப்பினான். பல நேரங்களில் நான் அவனிடம் என்னை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கியதும் உண்டு. நான் கொடுத்த கட்டுரையைப் படித்த கண்ணன் "ஆபீஸ் வந்து பாருங்க " என்றார்.


நான் 757, அண்ணா சாலை விகடன் அலுவலகம் சென்றேன். பதட்டமாகத்தான் இருந்தது. " நீங்க எழுதியிருந்தது நல்லா இருந்தது பாஸ், எழுதணும்ணு ஆசைப்படுறீங்களா? விகடனுக்காக ஸ்டோரி பண்ணிக் கொடுங்க நல்லா இருந்தா இங்கே உங்களை சேர்த்து விடுகிறேன். என்றார். நான் சில ஸ்டோரிகளை உடனே சொன்னேன். அந்த வகையில் நான் முதன் முதலாகச் சொன்ன ஸ்டோரி ஏதுசாமி? ஏதுசாமி ஒரு டெய்லர். அவர் தன்னுடைய மகளுக்கு மூதேவி, சாத்தான் என்று பெயர் வைத்திருந்தார். ( உண்மையில் அவரது குழந்தைகளுக்கு அவர் அப்படி பெயர் வைத்தது எனக்குப் பிடிக்கவில்லை ஏனென்றால் பகுத்தறிவு பேசி அதிகாரம் பெற்றுக் கொண்ட பெருந்தலைகள் எல்லாம் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் வைத்துக் கொள்ளும் போது அவர்களையும் அந்தக் கொள்கையையும் பின் பற்றும் இம்மாதிரி அப்பாவிகள் புரட்சி செய்கிறோம் பேர் வழி என்று இப்படி பெயர் வைக்கிறார்கள். இவர் விருப்பத்துக்கு குழந்தைக்கு இப்படி பெயர் வைக்கிற அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது நாளை அந்தக் குழந்தை வருந்தினால் என்ன செய்வார் என்றெல்லாம் கேள்விகள்.)


பெயர் விஷயத்தில் அவரைப் பிடிக்காவிட்டாலும் எனக்கு ஏதுசாமியை பிடித்துப் போவதற்கான வேறு சில காரணங்கள் இருந்தது. அவர் பழைய துணிகளை, கிழிந்த மட்டுமே தைத்துக் கொடுப்பார். அல்லது கந்தல் துணிகளை தைத்துக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுப்பார். இங்கே கிழிந்த துணிகள் தைக்கப்படும் என்று போர்ட் வைத்திருப்பார் அதுதான் எனக்குப் பிடித்தது. தவிறவும் ஏதுசாமி ஏழைகளிடம் பணம் வாங்க மாட்டார். கொஞ்சம் வசதியானவர்களிடம் கொஞ்சம் அதிகமாக வாங்குவார் என நினைக்கிறேன்.


இது போக அவரிடம் ஒரு தனி நபர் போராட்ட மரபொன்றும் இருந்தது. இதுதான் என்னோட முதல் ஸ்டோரி.. கருப்பு வெள்ளையில் நான்கு பக்கங்கள் மட்டுமே விகடனில் வந்தது. அதுதான் நான் விகடனில் எழுதிய முதல் கட்டுரை. கட்டுரைக்குக் கீழே முதன் முதலாக டி.அருள் எழிலன். என்று இருந்தது. இந்தப் பெயரும் லட்சக்கணக்கான வாசகர்களிடம் சென்று விட்டது. முதல் கட்டுரைக்கு ஏகப்பட்ட வரவேற்புக் கிடைத்தது. அலுவலகத்திற்குள்ளும் வெளியிலும் யாரிடமும் பேசாமல் புதிதாக சேர்ந்த ஒருவர் எப்படி ஒதுங்கியே இருப்பாரோ அப்படி இருந்த என்னிடம் தனாக வந்து பலரும் பேசினார்கள். சூப்பர் பாஸ்...... ஆனா போதாது தொடர்ந்து எழுதணும்.. என்றார் கண்ணன். 

ஹ்யூமன் ஸ்டோரிகளுக்கு எப்போதுமே ஒரு தனித்த இடம் உண்டு ஊடகத்தில் ஸ்டோரியோடு கூடவே புகைப்படமும் கூடி வந்தால் அதன் அழகே தனி. விகடனில் போட்டோகிராஃபர்களுக்குள் இம்மாதிரி மேட்டர் செய்ய ஆர்வம் இருக்கும். அப்படியான புகைப்படக்காரர்கள் வித்தியாச ஸ்டோரி செய்கிறவர்களோடு வர ப்ரியப்படுவார்கள்... இரண்டாவது பேட்டியாக நான் எடுத்தது அப்போது எனக்குப் ப்ரியமான இயக்குநராக இருந்த மலையாள இயக்குநர் இயக்குநர் சிபி மலயிலை. சிபியின் படங்களைப் பார்த்து நான் துங்காமல் அலைந்த காலங்கள் உண்டு... இன்னமும் தூரே தூரே ஒரு கூடு (Doore Doore Oru Koodu Koottam) கூட்டாம் தனியார்த்தனம், பரதம், சதயம், என தொண்ணூறுகளுக்குப் பிற்பாதி வரை சிபி தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர். அவரை எப்போதேனும் சந்திக்கும் ஆசை இருந்தது.


ஆனால் அவருக்கு சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு வீடு இருக்கும் உண்மை தெரிந்தது. நானும் போட்டோகிராபர் விவேக்கும் போய் சந்தித்தோம் நல்ல பேட்டியாக வந்தது. மூன்றாவது ஸ்டோரி மெலுஞ்சி எனது சொந்த மீனவ கிராமத்தில் மணியடித்து வாழும் மைனாரிட்டியிலும் மைனாரிட்டி அவர்.... எனக்கு அவரைப் பார்க்கும் போதெல்லாம் அமரம் படத்தில் வரும் அநாதை மம்முட்டி ஞாபகம்தான் வரும்........ அந்த உண்ர்வுதான் விகடனில் எட்டு பக்கமாக வெளிவந்தது. இன்று வரை மெலுஞ்சிக்குள் ஒரு நல்ல சினிமா இருக்கிறது.

நான், ராஜுமுருகன், சிவக்குமார் மூன்று பேரும் ஒரே நாளில் விகடனில் இணைந்தோம். ரா. கண்ணன்தான் மூவரையும் இணைத்து விட்டார். அவர்கள் இருவரும் மாத ஊதியத்திற்குச் சேர்ந்தார்கள் நான் ப்ரீலான்ஸ் அல்லது சிறப்பு நிருபராக சேர்த்துக் கொள்ளப்பட்டேன். எம்.டி சீனிவாசன் கேட்ட போது எனக்கு சினிமாதான் ஆசை என்றேன். ஊடும் பாவுமாக பத்தாண்டுகள் கழிந்து விட்டது. சினிமாவுக்குச் சென்று மீண்டும் பத்திரிகைக்கே திரும்பி விட்டேன். இப்போது நானும் ஒரு மாத ஊதியக்காரனாகி விட்டேன். ராஜுமுருகன் சினிமா இயக்கிக் கொண்டிருக்கிறான். சிவக்குமார் சென்னைக்கு அவ்வப்போது வந்து செல்பவராக இருக்கிறார். துவக்கத்தில் ராஜுமுருகனை விட நான் சிறந்த கட்டுரைகளை எழுதினேன். அதிகமாக எழுதினேன். துவக்கத்தில் ராஜுமுருகன் நிறைய டோஸ் வாங்குவான். பின்னர் ராஜுமுருகன் உச்சக்கட்டத்திற்கு வந்தான். எனக்கும் ராஜுவிற்குமான உறவு....... அப்பழுக்கில்லாத நீண்ட கால உறவென நினைக்கிறேன். எங்கள் இருவருக்கிடையிலான பலங்களையும் பலவீனங்களையும் இருவருமே அறிவோம். என் சென்னை வாழ்வில் கடந்து சென்ற எல்லா நிகவுகளுக்கும் அவனும் ஒரு சாட்சி.


எங்கள் இருவரின் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்த இன்னொருவர் உண்டு அது ரா. கண்ணன். காதல், பசி, காமம், போராட்டம் என மனித வாழ்வின் எல்லா முக்கியமான போராட்டங்களிலும் அவர் எங்களுடன் இருந்திருக்கிறார். சில விஷயங்களை எழுத முடியாது. ஒரு நாள் ஒரு பெண் என்னை அடித்து விட்டார். நானும் அடிக்க கட்டிப்புரண்டு சண்டை...... பிரச்சனை கொஞ்ச நேரத்தில் கண்ணனின் காதுக்குச் சென்று விட்டது. அழைத்தார் வாங்கு வாங்கென்று வாங்கினார். நான் நினைக்கிறேன் என்னால் அந்தப் பெண்ணை மறக்கவே முடியாதென்று.....இனி எனக்கு வாழ்வே இல்லை இனி அவளில்லாமல் வாழவே முடியாதென்று.......லஸ் சர்ச்சில் போய் அப்பாடா என்று படுத்திருந்தேன்..........இப்போ நானில்லாமல் அவளும் அவளில்லாமல் நானும் சந்தோசமாகவே கழிகிறது வாழ்க்கை. நினைத்துப் பார்த்தால் அசிங்கமாகவும், அவமானமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. இதெல்லாம் கடந்துதான் எல்லா மனிதர்களின் வாழ்வும் வருகிறதோ............ இந்த இம்சைகளோடுதான் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்து வைக்க முடிந்தது. இது எனக்கும் பொறுந்தும் ராஜுமுருகனுக்கும் பொறுந்தும் .

ஆனால் அது சிறந்த பயணமாக இருந்தது. கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முறை சி.கே.ஜானு கைது செய்யப்பட்ட போது முத்தங்காவுக்குச் சென்றேன். அவர் ஜாமீனில் விடுதலையானதும் முத்தாங்காவில் அவரை காட்டில் சந்தித்தேன். வயநாட்டில் நபீஸா, ஷெல்லி, என விருப்பமான பல கட்டுரைகளை எழுத முடிந்தது. மூவாற்றுப்புழாவில் பவானியம்மா மறக்கவே முடியாது 52 வயதில் குழந்தை பெற்றுக் கொண்டார். நான் எழுதி விகடன் அட்டையில் அது வந்தது. ஆனால் 15 நாள் கழித்து அந்தக் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து இறந்து போனது. அவர்கள் அப்போது போன் பண்ணி குழந்தையின் போட்டோ கேட்டார்கள்.


நான் கொடுத்த புகைப்படங்களை அஞ்சலிப் படங்களாக வெளியிட்டிருந்தார்கள்........ என்னால் அதை இப்போதுவரை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எழுதும் ஒவ்வொரு ஸ்டோரியும் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்து விடுகிறது. ஆனால் அது எழுதுவதிலோ, கட்டுரையைக் கொண்டு வந்து சேர்ப்பதிலோ அல்ல நமது கட்டுரைக்காக வழங்கப்படுகிற இடத்தில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது ஆமாம் அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை அதுதான் உண்மை. காட்சி ஊடகத்தை அன்றாட நிகழ்வுகள் தீர்மானிக்கிறது வார அச்சு ஊடகம் அப்படியல்ல? அது அந்த பத்திரிகையின் சாரதியின் கைகளில்தான் இருக்கிறது.எங்களுக்குச் சாரதியாக இருந்தவர் ரா.கண்ணன். 

அபி என்றொரு குழந்தையைப் பற்றி கேரளாவுக்குப் போய் எடுத்து வந்து விடிய விடிய அமர்ந்து எழுதினேன். ( அபி பற்றி தனியாக எழுதுகிறேன்) இந்த வாரத்தில் என் கட்டுரைதான் சிறப்பாகப் பேசப் படப் போகிறது என நினைத்தேன். ஆனால் நண்பர்களே! கருணாநிதி எல்லா தொலைக்காட்சிகளிலும் அலறிய அந்த இரவில் என் கட்டுரைக்கு இரண்டே இரண்டு பக்கம்தான் ஒதுக்கப்பட்டது. மெலுஞ்சியை விட சிறப்பாக சில பக்கங்கள் அதிகமாக என எதிர்ப்பார்த்த என் ஆசையில் நெருப்பை அள்ளிக் கொட்டியவர் கருணாநிதி என்றாலும் அதுதான் சரி. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கருணாநிதியை தமிழக போலீசார் நடத்திய விதம் பற்றிய பேச்சாகவே இருந்தது. நீதிபதி அசோக்குமார் வீட்டில் அப்போ போலீசிடம் அடி வாங்கி பேஜரை நான் தொலைத்திருந்தாலும் என் கவலை முழுக்க அபியிடமே இருந்தது.

ஊடக உலகம் போட்டி நிறைந்தது. காட்சி ஊடகத்திலாவது சன் தொலைக்காட்சிக்கு போட்டியே இல்லை.ஆனால் அச்சு ஊடகத்தில் போட்டிகள் உண்டு. ஆனந்த விகடனுக்கென்று தீர்மானிக்கப்பட்ட வாசகர்கள் இருந்தாலும் இடைவிடாது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதில்தான் அதன் இருத்தல் இருக்கிறது.ரா.கண்ணன் விகடனுக்கு பொறுப்பாசிரியராக வந்த போது நான் அங்கே நிருபராக இருந்தேன். நானும் ராஜுமுருகனும் விகடனின் வார்ப்புகள். இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் ரா.கண்ணனின் வார்ப்புகள். இப்போ இந்த வார்த்தையை எழுதுவது எளிதாக இருக்கிறது. ஆனால் வார்ப்பில் போட்டு வறுத்தெடுப்பார். அப்போது அது பெருந்துன்பமாக இருக்கும்.ஆனால் அந்தக் கட்டுரை வெளி வந்த பின்னர் அக்கட்டுரைக்குக் கிடைக்கும் வரவேற்பில் வறுத்தெடுத்த காயங்கள் ஆறிப் போகும்.

துவக்கத்தில் எனக்கு எழுதத் தெரியுமே தவிற எழுத்துப் பிழையில்லாமல் எழுதத் தெரியாது. றா, ர, ற்,ழ,ள போன்ற எழுத்துக்கள் உள்ளிட்ட சந்திப்பிழைகள் குறித்த இலக்கண அறிவு சுத்தமாக எனக்கு இல்லை. அந்த வார எடிட்டோயிரியல் கூட்டத்தில் தவறைச் சுட்டிக் காட்டி ஒரு மணி நேரம் இதை எப்படி சரி செய்யலாம் என்று விளக்குவார். விகடனில் மட்டுமல்ல இதே எழுத்துப் பிழைகளைத் தொடர்ந்தால் நீங்கள் வேறு எங்கும் போய் வேலை செய்ய முடியாது. என்பார். எழுத்தில் அவர் முக்கியமாக எனக்குச் சொன்ன இன்னொரு விஷயம். சொற்களைக் கையாள்வது.

ஒரு தீபாவளி ஸ்பெஷலுக்கு நடிகர் விஜய்யின் ஸ்பெஷல் பேட்டி.... விஜய் மோட்டு வளையைப் பார்த்த படி மே வாய் தடவி அமர்ந்திப்பார்..... அய்யோ அவர் பேசிக் கொண்டிருப்பார். அவர் என்ன பேசுகிறார்..... என்பதை எந்த பத்திரிகைக்காரனும் புரிந்து கொள்ளவும் முடியாது.. அதை எழுதி விடவும் முடியாது. அவங்க அப்பா விஜய்க்காக பேசுவார் ஆனால் அது போன்ற கொடுமையான தண்டனை எனக்கு வாய்த்ததில்லை. ஆக விஜய் பேசி எதையுமே நாம் எழுத முடியாது... ஆனால் நான் அலுவலகத்திற்கு வந்து "இருண்ம வெளிகளில் மூழ்கித் திளைத்த நட்சத்திரம்" என்று விஜய் பேட்டியை எழுதத் துவங்குவேன். ( இப்போ நினைச்சா அபத்தமா? இருக்கு) எழுதி முடித்து பெருமையாக கொண்டு போய் கண்ணன் சாரிடம் கொடுத்தால். மூஞ்சிலேயே விட்டெறியாத குறையாக பாய்ந்து குத்திக் குதறுவார் " இருண்ம வெளிகளில் என்று விஜய் உங்கிட்டே பேசினாரா? சொல்லு? என்பார் இல்லண்ணே பின்ன எதுக்குடா இப்படி எழுதினே? அவர் பேசினது என்னவோ அதை எழுது? இன்னும் அரை மணி நேரத்தில் மேட்டர் வேண்டும் என்பார்.


மண்டைகாய்ஞ்சுடும்.... நாமோ ஷங்கரை பேட்டி எடுத்தாலும், ராமநாராயணை பேட்டி எடுத்தாலும் சிபியை பேட்டி எடுத்தாலும் இப்படி மயக்கமான ஒரு மொழி நடையில் எழுதி பேட்டி எடுத்தவர்களுக்கும் அதை எழுதுகிற நமக்கும் பெருமை தேடலாம் என நினைத்துக் கொள்வேன். அவரோ மொழிக்கும் உரையாடல் வழக்கிற்குமிடையிலான துல்லியமான வேறு பாட்டைக் கணக்கிலெடுத்தே பேட்டி எழுதப்பட வேண்டும் என்பார். நானும் விஜய் பேசிய மாதிரிய எழுதிக் கொடுத்தேன். கண்ணன் சார் கொஞ்சம் ரீ ரைட் பண்ணினார். அட்டகாசமாக அது விகடனில் அட்டைப் படமாக வந்தது.


ஆனால் குமுதத்திலும் இதுதான் அட்டை. அங்கே நா.கதிர்வேலன் செய்திருந்தார். நான் விகடனில் செய்திருந்தேன். இப்போ கதிர் விகடனில்தான் இருக்கிறார். பேட்டிக்கு ஏற்பாடு செய்தவன் எனக்குத் தெரியாமல் குமுதத்திற்கும் குமுதத்திற்குத் தெரியாமல் எனக்கும் மேட்டரை விற்று விட்டார். இப்படியான எக்ளூசிவ் ஸ்டோரிகளில் ஏற்படும் சங்கடங்களை எதிர்கொள்ளக் கூட சில துணிச்சலான முடிவுகளை எடுத்தவர் கண்ணன். கட்டுரை என்றால் பிரச்சனை இல்லை. அது எழுதுகிறவர்களின் விருப்பம் சார்ந்தது. ஆக பேசுகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி நடை இருக்கிறது. அதைத்தான் எழுத வேண்டும் என்பார். தவிறவும் கூடுமானவரை பேட்டி கொடுப்பவரை நீங்கள் பேச வைத்து அவர்கள் பேசுவதை மட்டுமே எழுதிப் பழகுங்கள் என்பார். ஏனென்றால் அப்போது விகடனில் இருந்த எல்லோருமே இந்த மயக்கநடைக் கோஷ்டிகள்தான். விரைவில் சலித்த்து விடும் இவ்வகை எழுத்துக்களை பின்னர் நானும் நண்பர்களும் கைவிட்டோம்.

அப்போது மை.பா.நாராயணன், த.செ.ஞானவேல், ராஜுமுருகன், நான், கலீல்ராஜா( முத்த பத்திரிகையாளர்), செல்லப்பிள்ளை திலகவதி- என ஒரு டீம் இருந்தோம். விகடன் பல அசாத்தியங்களை சாத்தியங்களாக்கியது இந்தக் காலத்தில்தான். 300 பக்க விகடன் புக்கெல்லாம் போட்டது அப்போது எங்களுக்குள் போட்டி இருக்கும் சினிமா, அரசியல், சமூகம், எளிய ம்னிதர்களின் கதைகள் என ஆளுக்கொரு ஏரியா? ஆனாலும் நான் அப்போது அரசியல் தலைவர்களை பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தேன். முழுமையான மாற்றங்கள் வேகங்கள் என சூடு பிடித்து ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை என விகடன் சாதனை புரிந்தது. பெரிய பார்ட்டி எல்லாம் கொடுத்தாங்க. ஆனால் அது முழுக்க முழுக்க கண்ணனின் அசாத்தியமான ஊடக அறிவினால் சாத்தியமானது என்பதுதான் உண்மை.


ஒரு நல்ல டீம்......அதை வேலை வாங்குகிற விதம் என ஆளுக்கொரு திசையில் சென்று போட்டி போட்டு மேட்டர்களைக் கொண்டு வந்து ஆரோக்கியமாக மோதி ஒருவர் மற்றவரை மீறிச் சென்ற காலமது. ஆனால் அதுதான் மிகச் சிறந்த காலமாக இருந்தது. எங்களை மேய்த்தது மட்டுமல்ல முகமற்ற பல மனிதர்களை கை தூக்கி விட்டதில் ரா.கண்ணனுக்கு பங்குண்டு. இன்று அவர்கள் மிகப் பெரிய பிரபலங்களாகவும் இருக்கிறார்கள். கனவுகளுக்கும் வாழ்வுக்குமிடையே பெரும் ஊசலாட்டமாய் கழிந்த வாழ்வில் நான் நிற்கிற இடம் மிகப் பெரியது ஆமாம் நண்பர்களே என் கடந்த காலம் குறித்து நீங்கள் அறிவீர்கள் என்றால் இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். பத்திரிகை பணி தொடர்பான இந்த சின்ன உயரத்தை உருவாக்கி அந்த ரத்தினக் கம்பளத்தை எனக்கு பரிசளித்தது கண்ணன்தான். அந்தக் கம்பளத்தைத்தான் நான் இன்று வரை போர்த்தியிருக்கிறேன். நிறைவேறாமல் போன கனவுகள் இன்னமும் எனது அறையில் சிதறிக் கிடக்கிறது. இடைவிடாமல் நான் இப்போதும் வாழ்வோடு மோதிக் கொண்டிருக்கிறேன்.

அம்மா இறந்த போது அவருக்கு சில கவலைகள் இருந்தது. எனக்குத் திருமணமானதோ, பொன்னிலா பிறந்ததோ, எதுவுமே அம்மாவுக்குத் தெரியாது. (நீலாவின் நிலையும் அப்படித்தான்) ராஜுமுருகனோடு கடந்த பதினைந்து வருடமாக நெருங்கிப் பழகுகிறேன். நீலா, பொன்னிலா, என சந்தோசமாக கழிகிறது வாழ்க்கை, 

தமிழைத் தவிற வேறு மொழி தெரியாத நான் பிற மொழி பேசுகிறவர்களையும் பேட்டி எடுத்திருக்கிறேன் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன்.காத்திரமாக புதிய நண்பர்கள் எழுதவும் பேசவும் வந்திருக்கிறார்கள். இந்த சமூகத்துடன் தொடர்பாடவும் இடைவிடாது மனிதர்களுடன் தொடபு கொள்வதும் சாத்தியாமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் மாறிக் கொண்டிருக்கிறது. எழுத்து எப்போதும் மாறுவதில்லை. பொன்மலர், ஆதிரை, இளவரசி, என குட்டி தேவதைகள் நண்பர்களுக்குப் பிறந்திருக்கிறார்கள். பெருந்துன்பமாய் ஈழப் போராட்டத்தின் தோல்வி முழுவதுமாக நம்மை சிதைத்துப் போட்டிருக்கிறது. ஆனால் மீண்டெழும் சாத்தியங்களோடு நண்பர்களும் நானும் எழுதுகிறோம். அரசியல் ரீதியாக நான் மாறிக் கொண்டிருக்கிறேன். காயங்களை அதிகமாகச் சுமந்தலைந்தாலும் காயங்கள் சோர்ந்து போக வைத்து விட வில்லை. அம்மா நான் மனிதனாக உருமாற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை உனக்குச் சொல்கிறேன். 

19 கருத்துகள்:

  1. //சிலரது எழுத்துகளை வாசிக்கும்போது அவர்களுக்கு ஒரு இமேஜை என் நெஞ்சில் ஏற்றி வைத்துக் கொள்வேன். அருள் எழிலனை தாடிவைத்து, உயரமாக, குண்டாக, கண்கள் சிகப்பாக, தலையில் சேகுவேரா தொப்பியோடு, மொத்தத்தில் ஒரு புரட்சியாளராக இமேஜ் செய்து வைத்திருந்தேன்.//


    அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் !

    ஆஸ்திரேலிய வானொலியில் ஒரு முறை ஈழம் தொடர்பான தொலைபேசி வழி பேட்டியில் கேட்ட குரலினை உருவகப்படுத்தி...!

    தான் கடந்து வந்த பாதையினை,நண்பர்களை ஊக்கம் அளித்தி உயர்த்திய பெரியோர்களை பற்றிய அருள் எழிலனின் பேட்டி சிறப்பாகவே இருக்கிறது நிறைவேறட்டும் மிஞ்சி இருக்கும் கனவுகளும்...!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1:52 PM, ஜூன் 18, 2010

    //
    முதன்முதலாக ஜி.என்.செட்டி சாலையில் ஒரு டீக்கடை வாசலில் சந்தித்தபோது கடுமையான ஏமாற்றத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். இம்சை அரசனின் தம்பி மாதிரி டொங்கலாக இருந்தார்.
    //

    ரொம்ப‌ முக்கிய‌ம்... உங்க‌ள‌ முத‌ல்முத‌ல்ல‌ பாத்த‌ப்ப‌ நானும் இதே அதிர்ச்சிக்குதான் ஆளானேன்.. நான் என்ன‌ வெளிய‌ சொல்லிட்டா இருக்கேன்.. அப்ப‌ எல்லாம் நீங்க‌ ஃபோட்டோவும் போட‌ மாட்டீங்க‌. கார்டூன் ல‌க்கிலுக் கேர‌க்ட‌ரோட‌ ஃபோட்டோ ம‌ட்டும்தான். எழுத்தை எல்லாம் வெச்சி எப்ப‌டி உருவ‌க‌ப்ப‌டுத்திட்டு நேர்ல‌ பாத்த‌ப்ப‌.. :))))

    ~ வெண்பூ

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நன்றி சார் இந்த இடுகைக்காக

    பதிலளிநீக்கு
  4. ஒரு பத்திரிகையாளனின் வாழ்வு சுருக்கமாக ஆனால் ஆழமாக பதியப்பட்டிருக்கிறது. நன்றி யுவகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  5. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை...தன்னம்பிக்கை தரும் பதிவு...

    பதிலளிநீக்கு
  6. விகடனில் டி.அருள் எழிலன் எழுத்துக்களை படிக்கும் போது மனதை அழுத்தும்... கடைசி வரியில் நம்மை அறியாமல் கண்ணீர் வரும்... இப்பவும் அப்படியே...

    //அம்மா நான் மனிதனாக உருமாற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை உனக்குச் சொல்கிறேன்//

    ரா.கண்ணன் அவர்களின் 'இவன் தான் பாலா' தொகுப்பு மிக அற்புதமானது.

    //ராஜுமுருகன் சினிமா இயக்கிக் கொண்டிருக்கிறான்//

    வாழ்த்துகள் ராஜுமுருகன். படம் பேரு என்னங்க?

    இக்கட்டுரையை பதிவிட்டதற்கு நன்றி, லக்கி. :-))

    பதிலளிநீக்கு
  7. விகடனில் அருள் எழிலன் கட்டுரைகள் தனியாக தெரியும். வெகுசாதாரண மனிதர்களின் முகங்கள் அவனது வழிதான் விகடனில் நான் பரிச்சயம் கொண்டேன். . அவனது எழுத்தின் வழி தென்னை மரம் ஏறும் பெண், சத்யேந்திரா எனும் தாடிக்கார எவரும் பொருட்படுத்தாத நடிக உயிரி,
    ஜென்ஸி எனும் மறக்கமுடியாத பாடகி, சந்திரபாபு வின் திருமணம்,என பல செய்திகள் இன்னமும் அழுத்த்மாய் என் நினைவில் இருக்கின்றன,. நண்பர் என்பதை கடந்து சமூகத்தின் மீது தீவிர பிடிப்பு கொண்ட இளைஞனாக அவரை நான் எப்போதும் வியக்கிறேன். விகடனில் இருந்து அவர் வெளியேறிய போது அது பெரும் இழப்பு என்பதை நண்பர்களிடம் புலம்பினேன். இனி சாதாரண மனிதர்களின் முகங்கள் இந்த பத்திரிக்கையில் இடம்பெறாதே எனும் அச்சமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் .அவனது மனநிலை பிறழ்ந்த சிறுமி குறித்த் ஆவணப்படம் ஒன்று இன்னமும் நினைவுக்குள் இருக்கிறது .இப்படி
    எத்த்னையோ எளியவர்களின் கண்ணீரை எழுத்தாக மாற்றியவன் .
    அவனது இந்த வாழ்க்கையும் அவனது செய்திகளையே நினைவுறுத்துகிறது
    எழிலன் சாதரணமனிதர்களின் சகா என்பதால் எனக்குள் எப்போதும் இறங்க முடியாத உயரத்தில் இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.
    நன்றி யுவா .. ஒரு சரியான் காரியம் காலத்தில் செய்து ...
    ............அஜயன்பாலா

    பதிலளிநீக்கு
  8. அசர வைக்கும் நம்பிக்கை, அசுர வேக உழைப்பு. படிப்புல நிதானமா பெயில் ஆகி முன்னுக்கு வந்தவங்கள பார்த்தால் ஒரு நெருக்கம் தானா வருது! (நானும் பெயில் ஆனதினாலோ என்னவோ!). என் கூட சேர்ந்து பெயிலான நண்பன் சுமார் இருபது வருடங்களுக்கு முன் கூறியது, "மாப்ள, பெயில் ஆனவன் எல்லாம் பெரிய ஆள் ஆகுறதில்ல ஆனால் பெரிய ஆளுக நெம்ப பேரு பெயில் ஆனவங்கடா!" என்று. அவர் இன்று ஒரு தொழில் அதிபர். தேர்வில் பெயில் ஆனவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குபவர். கேட்டால் சொல்வார் "உனக்கு தெரியாதாடா, நமக்கு அப்போ என்ன பயர் இருந்துச்சோ, அதே பயர்-டா!."

    பதிலளிநீக்கு
  9. தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களில் தற்பொழுது நேர்மையாகவும், மக்களுக்காகவும் சிந்தித்து செயல்படுபவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருள் எழிலன். அவரது உரையை வெளியிட்டமைக்கு நன்றி. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நன்றி சார் இந்த இடுகைக்காக

    பதிலளிநீக்கு
  11. அருள் எழிலனின் பல கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி அறிய தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வலையுலகின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதாக
    அமைந்த ஆழமான அழகான பதிவுக்கு
    மிக்க நன்றி கிருஷ்ணா.
    என்னைபோன்ற புதிய பதிவர்களுக்கு
    மிகவும் பயனுள்ள பதிவு இது.
    அருள் எழிலனுக்கு
    வணக்கங்களை தெரிவிக்கவும்.
    -கபிலன்.

    பதிலளிநீக்கு
  13. தன்னம்பிக்கை தரும் பதிவு.

    நன்றி கிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா3:34 PM, ஜூன் 29, 2010

    Very Good article.. very moving too.. Has Mr.Ezhilan has any website or blog..?

    Mahesh.

    பதிலளிநீக்கு
  15. இதோ இன்னைக்கு தேதி 15.03.2015. இந்த கட்டுரை எழுதப்பட்டதோ ஜுன் 18 2010. இன்றைக்கு அருள் அண்ணன் சுற்றிய அதே சென்னையில தான் நானும் இருக்கிறேன், அதே படைப்பு ஆசையோடு. சினிமா, எழுத்து என ஏதாவது ஒரு துறையில போய் சேரனும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. விகடன் வாசிப்பு ரொம்ப காலமாக இருப்பதால் ராஜுமுருகன், கலீல்ராஜா, அருள் எழிலன் என சிலர் எனக்கு எழுத்தாக அறிமுகம். அவர்களை போல் என்றாவது ஒரு நாள் மனிததுக்காக வாழ்ந்து விட வேண்டும் என்பது என் விருப்பம். பணம், புகழ், அந்தஸ்து என எதற்க்கும் அடிமை ஆகாத வாழ்வை வாழ வேண்டும். குக்கூ மூலம் சினிமா ஆசையை தூண்டிவிடார் ராஜு அண்ணன். கலகம் கலை இலைக்கிய தமிழ் தேசியத்தடம் என்னும் அமைப்பில் இருப்பதால் ராஜு அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவையில் நடந்த பாராட்டு விழாவிற்க்கு வந்த போது அவரிடம் ஆனந்த விகடனில் குக்கூ விமர்சனம் வந்த பக்கத்தில் கையெழுத்து வாங்கி கொண்டேன். அந்த கணம் என்னுள் என்றும் இருக்கும். அறம், எளிய மனிதர்களை கொண்ட சமூகம், சுரண்டப்படும் மக்கள் என பலரை நான் இவர்கள் மூலம் தான் கண்டேன். குறிப்பாக வட்டியும் முதலும் வாயிலாக. ஏதோவொரு தினத்தில், ஏதோவொரு கணத்தில் அந்த் வாழ்வை வாழ்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்துக்கொண்டே இருக்கிறது. அருள் எழிலன் அண்ணனையும், ராஜுமுருகன் அண்ணனையும் என்றாவது சந்தித்து அவர்களின் அன்பை பெற வேண்டும், நட்பை பெற வேண்டும், ஆலோசனை பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா1:00 AM, ஆகஸ்ட் 11, 2018

    Wonderful post! We will be linking to this particularly great post on our site.
    Keep up the good writing.

    பதிலளிநீக்கு