8 ஜூன், 2010

பெண் சிங்கம்!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த வயது அது. குடும்பத்தோடு கலைஞரின் ‘தென்றல் சுடும்’ போயிருந்தோம். நங்கநல்லூர் ரங்கா, இன்றைய வெற்றிவேல் ஏ/சி, டி.டி.எஸ். நல்ல கூட்டம். “டோரி டோரி டொமக்க டோரி” என்ற செம்மொழிப்பாடல் இடம்பெற்றிருந்த படமது. ஆர்வத்தோடு படம் பார்க்க வந்தவர்கள், படத்தின் மொக்கையான போக்கைக் கண்டு நெளிந்து கொண்டிருந்தார்கள். க்ளைமேக்ஸில் மனோகரா கண்ணாம்பா ஸ்டைலில் நீளமான வசனத்தை ராதிகா ஏற்ற இறக்கத்தோடு பேசி நடிக்க, அப்பா உள்ளிட்ட ஓரிருவர் மட்டும் சவுண்டாக கைத்தட்டினார்கள்.

அந்த வயதில் முடிவெடுத்தேன். இனி கலைஞர் எழுதும் எந்தப் படத்தையும் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக என்னுடைய இரு தசாப்த சபதம் நேற்று ஒரு சங்கடமான தருணத்தில், மறுக்கவே இயலாத சூழலில் கைவிடப்பட வேண்டியதாயிற்று.

ஒரு ஊர்லே ஒரு ஃபாரஸ்ட் ஆபிஸர். இவர்தான் ஹீரோவென்றால் வில்லன் காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கடத்தல்காரன் என்பதை யூகித்து விட்டிருப்பீர்கள். ஹீரோயின் ஹீரோவின் ஆபிஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். ஐ.பி.எஸ். படிக்கிறார். வில்லனின் சூழ்ச்சியில் கொலைக்கைதியாக ஹீரோ மாற, ஐ.பி.எஸ். ஹீரோயின் அந்த வழக்கை கையில் எடுத்து உண்மையான குற்றவாளி யாரென்று கண்டறிந்து நிரூபிக்கிறார்.

அனேகமாக கலைஞர் கடந்த முப்பதாண்டுகளில் வந்த தமிழ் சினிமா எதையும் பார்த்திருக்க மாட்டாரென்றுதான் இந்த படத்தை கண்டதும் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவென்ன, சமகால மெகாசீரியல்கள் கூட இதைவிட உள்ளடக்கத் தரத்தில் உயர்ந்தவை.

படா திராபையான கதை, திரைக்கதை, வசனத்தை கொண்டு பாவம் இயக்குனர் படாத பாடு பட்டிருக்கிறார். ’ட்ரெண்ட் கேப்’ தெரியக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு இருந்திருக்கும். எனவே பாடல் காட்சிகளை ஃபாரினில் படமாக்கியிருக்கிறார். ஆங்கிலம் கலக்காத தூயத்தமிழ் பாடல்களை ஃபாரின் லொக்கேஷன்களில் பார்க்கவே சகிக்கவில்லை. படத்தின் முதல் பாதியில் மட்டும் நான்கு பாடல்கள். படம் பார்க்கும் ரசிகன் கிழிந்த நாராகிறான்.

படத்துக்கு நடுவில் ‘நாடகம்’ காட்டும் பாணி எல்லாம் 70களிலேயே காலாவதியாகி விட்டது. கலைஞரின் வேலுநாச்சியார் நாடகம். பின்னணிக்குரல் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன். வேலுநாச்சியாராக மீராஜாஸ்மினை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஹீரோ அவரைவிட பாவம். தெலுங்குக்காரரான அவரை அழைத்து வந்து அடுக்கடுக்காக செந்தமிழ் வசனங்கள் பேசவைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் “பொண்ணு பொறந்ததுன்னு கலங்கலாமா?” என்று ஆரம்பித்து, வரலாற்று கீர்த்தி மிக்க பெண்களின் பட்டியலை வாசித்து, கடைசியாக “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பொண்ணுதானே?” என்று முடிக்கும்போது ஆலந்தூர் நகர எட்டாவது வார்டு அன்னை சோனியா மன்ற செயலாளர் மட்டும் தியேட்டரில் கைத்தட்டுகிறார்.

கலைஞரின் வசனம் எப்படியிருக்கிறது?

ஒரு காட்சி. வன அலுவலகத்தைச் சேர்ந்த ஓட்டுனரான விவேக் ஜீப்போடு டீக்கடையில் நிற்கிறார்.

அப்போது அங்கே வரும் ஒருவர், “அண்ணே கட்டையை தூக்கிட்டுப் போகணும். வண்டியிலே ஏத்திக்கிட்டு வர்றீங்களா?”

“டேய் இது ஜீப்புடா. கட்டைய எல்லாம் லாரிலேதான் கொண்டு போகணும். சைஸ் சின்னதா இருந்தா ஏத்திக்கலாம். கட்டைய கண்ணுலே காட்டு!”

அந்த நபர் ஒரு நாட்டுக்கட்டையை அழைத்து வருகிறார்.

“டேய். இதுவாடா கட்டை?”

“ஆமாண்ணே. வைரம் பாய்ஞ்ச நாட்டுக்கட்டை. எம்பேருதான் வைரம்!”

இப்படியாக இளைஞர்களுக்காக டபுள்மீனிங் சமகால டயலாக்குகளை எழுத கலைஞர் முயற்சித்திருக்கிறார். நல்ல வசனம். நன்றி பத்ரி. “மாடசாமி. உனக்கு கால் எடுத்துட்டா நீ மடசாமி ஆயிடுவே!” மாதிரியான ‘நர்சிம் டச்’ வசனங்களும் உண்டு.

ஜே.கே.ரித்தீஷ், எம்.பி., ரம்பா, லாரன்ஸ் ராகவேந்திரா, லட்சுமிராய் என்று கவுரவ நட்சத்திரப் பட்டாளம் ஏராளம். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்?

ஐ.பி.எஸ். ஆபிஸரான பெண்சிங்கம் சண்டை போடுவார், இரண்டாம் பாதியை தலையில் தூக்கி சுமப்பார் என்று நினைத்தால்.. ம்ஹூம்.. ஒரு டூயட் பாடுகிறார். போலிஸ் யூனிபார்ம் போட்ட சோளக்கொல்லை பொம்மை மாதிரி அங்கும் இங்கும் நடக்கிறார். க்ளைமேக்ஸில் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாய் எல்லாம் முடிந்தபிறகு வந்து வில்லனை சுடுகிறார். டைட்டிலுக்கு இருக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட கேரக்டருக்கு இல்லையே? திமுக தொண்டனுக்கு அந்த காலத்து கலைஞரின் ‘பூ ஒன்று புயலானது’ எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் கசிகிறது.

படம் முழுக்க தேவையில்லாமல் அள்ளித் தெளிக்கப்பட்ட கவர்ச்சி. சமகாலத்து சண்டை போடும் ஹீரோயிஸம் என்று பல கூறுகள் இது பெண்ணுரிமைக்கான படமல்ல என்று கட்டியம் கூறுகிறது. எந்த காட்சியிலுமே பெண்ணினத்தின் தனித்துவம் எடுத்து காட்டப்படவில்லை. சும்மா வெட்கப்படாமல் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்.

பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!

26 கருத்துகள்:

  1. //‘நர்சிம் டச்’ வசனங்களும் உண்டு//
    'இந்த விஷயத்துல உங்க டோட்டல் ரியாக்ஷனே இவ்வளவுதானா சார்?!' :-)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  2. பென்சிங்கம் போட்டோ சூப்பர்(உங்க ப்லொக்ல இருக்குற பென் சிங்கத்தை சொன்னேன்

    பதிலளிநீக்கு
  3. ந‌ல்ல‌ க‌ருத்து, ந‌ன்றி அதிஷா... :))))

    பதிலளிநீக்கு
  4. //இப்படியாக இளைஞர்களுக்காக டபுள்மீனிங் சமகால டயலாக்குகளை எழுத கலைஞர் முயற்சித்திருக்கிறார். //

    80,90-களின் சில கருணாநிதி வசனப் படங்களில் எஸ்.எஸ். சந்திரன் போன்ற நபர்கள் இதை விட ஆபாசமாக பேசுவதை காணும் போது 'இதையெல்லாமா கருணாநிதி எழுதியிருப்பார்'? என்று தோன்றும்.

    ஆனால் ஒரு திரைப்படத்தில் வெளிப்படும் எல்லா வசனத்தையும் வசனகர்த்தாதான் எழுதியிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, கடைநிலை உதவி இயக்குநர் முதற்கொண்டு சம்பந்தமில்லாதவர்கள் எவர் வேண்டுமானாலும் 'ஸ்பாட்டில்' டெவலப் செய்வதே வசனம் என தெரியவந்தது. இதுவும் அவ்வகைதான் என யூகிக்கிறேன். இதை விவேக்கே கூட எழுதியிருக்கலாம்.

    (பிகு) இது இத்தனை அரதப் பழசான மொக்கை ஜோக்காக இருப்பதால் கருணாநிதியே கூட எழுதியிருக்க வாயப்பு உண்டு. :)

    பதிலளிநீக்கு
  5. கலைஞரோட பழைய திராவிட கதைகள் எல்லாம் ரொம்ப 'ஏ'க ஜோரா இருக்குமுனு கண்ணதாசன் கூட சொல்லியிருக்காரே ....

    //பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!//

    Total Damage...

    பதிலளிநீக்கு
  6. //டோரி டோரி டொமக்க டோரி” என்ற செம்மொழிப்பாடல்//

    :-))))))))))))))))))))))))

    இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்...

    பதிலளிநீக்கு
  7. ஒக்கால செமையா எழுதியிருக்க.

    அதுவும் அந்த நர்சிம் பத்ரி பேரா சூப்பர்.

    நேற்று தான் அந்த வைரம் பாஞ்ச கட்ட ஜோக்க பாத்தேன். அது இந்த படத்துல தானா? அந்த காட்சி மூலம் கலைஞர் தான் 87 அல்ல 27 என்று நிரூபித்திருக்கிறார்.

    கலைஞரோட கலை தாகத்துக்கு அளவே இல்லாம போயிடிச்சு. நிச்சயமா இந்த வருடம் மாநில விருதுகள் இரண்டை கவ்விக்கொண்டு வரும் பெண் சிங்கம்.

    பதிலளிநீக்கு
  8. யுவகிருஷ்ணா எப்படித்தான் இப்படிப்பட்ட படங்களுக்கெல்லாம் போய் விமர்சனம் வேற எழுதுறீங்க. பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!

    பதிலளிநீக்கு
  9. வீரன் யுவகிருஷ்ணா.. நன்றி பதிவர்கள்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா3:56 PM, ஜூன் 08, 2010

    //பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!//

    நக்கிநுக். இதில் ஏதும் உள்குத்து வெச்சிருக்கயா.

    பதிலளிநீக்கு
  11. சிங்கத்துக்கும், பெண் சிங்கத்துக்கும் சண்டை வந்தால் , யார் ஜெயிப்பார்கள்?

    பதிலளிநீக்கு
  12. இதென்ன கேள்வி மணிஜீ!

    ஆண் சிங்கம் 5 முறை ஜெயிச்சிருக்கு. பெண் சிங்கம் 2 முறை ஜெயிச்சிருக்கு. இதுதானே வரலாறு?

    பதிலளிநீக்கு
  13. கலைஞருக்கே...வயசாயிடுச்சா? யாரு
    சொன்ணா..?என்னிக்கும் இளைஞர்தான்.
    அதென்ன நர்சிம் டச்..?

    பதிலளிநீக்கு
  14. தமிழ் நாட்டுல இந்த படத்த பாத்த ஒரே நடுநிலையாளர் நீங்கள்தான்

    பதிலளிநீக்கு
  15. நீங்க நல்லவர்னு தெரியும்..
    இவ்வ்வவ்ளோ நல்லவர்னு இப்பதான் தெரியுது... :)

    இடைவேளை வரை பார்க்குறவங்களுக்கு அம்பதாயிரமும்,
    முழுசா பார்க்குறவங்களுக்கு ஒரு லட்சமும்,
    முதலமைச்சரின் ஆபத்து கால நிவாரண நிதியிலிருந்து தரதா சொல்லுறாங்களே. நிஜமா ?

    பதிலளிநீக்கு
  16. வேற வழியே இல்ல நாடோடிகள் டயலாக் தான்..

    லக்கி உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    பதிலளிநீக்கு
  17. லக்கி...நான் கேட்டது வேறு...பெண் சிங்கம்னு நீங்க யாரை சொல்றீங்கன்னு புரியலை..க.க..கா..கீ.க்..கி.கூக்கூ..க.க்.காஆ..கூக்கு.க்.கு.கே..கே.கே(இதில் ரானா..பானா..வெல்லாம் இல்லை)

    பதிலளிநீக்கு
  18. அசோக் மூர்த்தி8:34 AM, ஜூன் 09, 2010

    என்ன லக்கி ! கண்ணம்மா , பாசக்கிளிகள் வரிசைல ஒரு உன்னதமான காவியமா வந்திருக்கு பெண் சிங்கம் .. நீங்க இப்டி சொல்றீங்க ! உடன்பிறப்பே இப்படி சொல்வதை என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை !

    பதிலளிநீக்கு
  19. பொண்ணு பொறந்ததுன்னு கலங்கலாமா? - கருணாநிதி

    ஜெயலலிதா கூட பொண்ணுதானே

    பதிலளிநீக்கு
  20. யுவக்ருஷ்ணா. நான் உங்கள் பதிவுகளை நீண்டகாலமாக அமைதியாக ரசித்து வருபவன். ஞாயிறு மாலை சென்னை பி.வி.ஆர் திரையரங்கில் இப்படம் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என் குழப்பத்தைத் தீர்த்ததற்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  21. இந்த படத்துக்கு வசனம் எழுத ஐம்பது லட்சம் சம்பளம் வந்ததை ஏதோ ஒரு நற்பணிக்கு நன்கொடையளித்ததாக கலைஞர் சமீபத்தில் சொல்லியிருந்தார். எனக்குத் தெரிந்து அதிகபட்ச சம்பளம் வாங்கும் தமிழ் வசனகர்த்தா இவர்தான்.

    பதிலளிநீக்கு
  22. naalvelai naan innum padam parkkalai...!! kappathittinka..

    பதிலளிநீக்கு
  23. ஹிந்து நாளிதழில் இப்படத்தின் விமர்சனத்தில் family fare, dialogues are the strength என்று எழுதியிருந்தார்கள். கலைஞர் குடும்பத்தோடு ஹிந்து குடும்பத்துக்கு உறவுமுறை இருப்பதால் கலைஞர் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட படங்களுக்கு மொக்கை படமாக இருந்தாலும் நல்ல படம் என்று விமர்சனம் எழுதுவதையே ஹிந்து வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா12:44 AM, ஆகஸ்ட் 17, 2010

    ஆலந்தூர் நகர எட்டாவது வார்டு அன்னை சோனியா மன்ற செயலாளர் மட்டும் தியேட்டரில் கைத்தட்டுகிறார்.

    epadinga ipadi ellam mudiuthu

    பதிலளிநீக்கு