15 ஜூன், 2010

கொடநாடு - திம்மிகள் பரப்பும் வதந்தீ!

திராவிட திம்மிகள் பல நூற்றாண்டுகளாக உலகின் ஒரே உத்தம அம்மாவை கொச்சைப்படுத்தியே பேசிவருவதும், எழுதிவருவதையும் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு, உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிய உவமைகளை கொண்டு நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அம்மா எங்கு போனாலும், எதை செய்தாலும் அதை தீவிரவாத கொலைவெறியோடு திம்மிகள் திரிக்கிறார்கள்.

சமீபத்தில் தங்கத்தாரகை விருதுபெற்ற நம் அம்மா காளஹஸ்தி கோயிலுக்கு சென்று, லோக ஷேமத்துக்காக யாகம் செய்தார். அடுத்தவாரமே நடந்தது என்ன? திம்மிகள் ஏதோ சதிவேலை செய்திருக்கிறார்கள். இண்டியன் ஆயில் டேங்கை போல கட்டப்பட்டிருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தை அழிக்க ஆண்டவனாக பார்த்து லைலா புயலை அனுப்பினான். அண்டோமேனியா அரசு அதிகாரிகளின் துணையோடு அந்த புயலை காளஹஸ்திக்கு அனுப்பி கோபுரத்தை தரைமட்டமாக்கியிருக்கிறார் மூத்த திம்மி. அம்மா போய்வந்த ஒரே பாவத்துக்காக அந்த கோயில் தரைமட்டமாக்கப்பட்டது எவ்வகையில் நியாயம்? இதை புண்ணிய பாரதத்தின் ஹிந்து பெருமக்கள் தட்டி கேட்க வேண்டும்.

’காளஹஸ்திக்கு போனால்தானே கோபுரத்தை இடிக்கிறார்கள். நான் கொடநாட்டுக்கு போகிறேன். எதை இடிக்கப் போகிறார்கள். பார்க்கலாம்!’ என்ற புரட்சி மனப்பான்மையோடு புரட்சித் தலைவி இப்போது கொடநாட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே இடிக்க கோபுரம் எதுவும் இல்லாததால் திம்மி அரசு குழம்பிப்போய் கிடக்கிறது. எனவே கொடநாட்டுக்கு அம்மா ஓய்வெடுக்க செல்வதாக பொய்ச்செய்தி பரப்புகிறார்கள்.

இது முழுக்க முழுக்க திம்மிகளின் திருகுவேலை என்பதை அம்மா தெளிவாகவே அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அம்மா கொடநாடு சென்றாலே ஓய்வெடுக்க செல்வதாக பத்திரிகைகள் புழுதி வாரி தூற்றுகின்றன. அவ்வாறு தூற்ற திம்மி அரசாங்கம் பின்னணியில் செயல்படும் என்பதை அம்மா சொல்லாமலேயே நாம் அறிந்துகொள்ள வேண்டும். ”கொடநாடு அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசம். இங்கே இருப்பவர்கள் சதா சர்வகாலமும் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா?” என்று லாஜிக்கான கேள்வியை கேட்டு திம்மிக்களை திக்குமுக்காட செய்திருக்கிறார் நமது புரட்சி அம்மா. அம்மாவின் இந்த அறிக்கையை கண்டு நீலகிரி மாவட்டத்து மக்கள் ஆனந்தக்கூத்து ஆடுகிறார்கள். அம்மா அங்கிருக்கும் ஒவ்வொரு நாளையும் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

மேலும் அந்த அறிக்கையில் அம்மா பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நம் புண்ணிய கட்சியாம் அம்மா திமுகவுக்கு 17.5 லட்சம் தொண்டர்கள்தான் இருந்தார்களாம். அம்மாவின் ஏகோபித்த பணிகளையடுத்து இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் இப்போது இருக்கிறார்களாம். தமிழ்நாட்டின் ஆறரை கோடி பேரில் ஒன்றரை கோடி பேர் சார்ந்திருக்கும் ஒரே கழகம் நமது கழகம்தான். எனவே இதற்காக மூத்த திம்மிக்கு அடிக்கடி நடத்தப்படும் பாராட்டுவிழாவை போல பிரம்மாண்டமான பாராட்டுவிழா ஒன்றினை கொடநாட்டில் கோலாகலமாக நடத்திட வைகோ, நெடுமாறன் போன்றோர் முன்வந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

“மக்கள் பணி ஆற்றிடத்தான் கொடநாட்டுக்கு வந்திருக்கிறேன்” என்று அம்மா அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ‘ஈழத்துக்கு ராணுவம் அனுப்புவேன்’ என்று ஈழத்தாய் சொல்லியிருந்தார். ஆனால் அண்டோமேனியா அரசாங்கம் ஏற்கனவே அங்கே இரகசியமாக ராணுவத்தை அனுப்பியிருந்தது அம்மாவுக்கு தெரியாது. அந்த ராணுவத்தால்தான் தமிழர்களுக்கு தொல்லை என்பதை அம்மாவுக்கு யாரோ இப்போது ரொம்பவும் தாமதமாக தெரிவித்திருக்கிறார்கள். எனவேதான் அதை திரும்பப் பெறுவது தொடர்பான ஆலோசனைகளை நடத்த புரட்சித்தாய் கொடநாடு சென்றிருப்பார் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

14 ஜூன், 2010

வெட்டுப்புலி!


இந்நாவல் மாதிரியாக என்னை அலைக்கழித்த, சுவாரஸ்யப்படுத்திய, சோகப்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய, கடுப்பூட்டிய, களிக்கவைத்த எழுத்தை இதுவரை நான் வாசித்ததே இல்லை என்று உறுதியாக கூறலாம். மொத்தத்தில் பன்முகத்தன்மையோடு கூடிய உணர்வுகளால் படுத்தி எடுத்து விட்டது. என்னோடு சேர்த்து என் அப்பா, பெரியப்பா, மாமா, அண்ணாவென்று பரம்பரையே கண்ணாடி முன்நின்று தனக்குத்தானே கதை சொல்லிக் கொண்டதை போன்ற உணர்வினைத் தந்தது. இந்நாவலின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் என் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமாக இன்னமும் உயிர்வாழ்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
So called திராவிடப் பாரம்பரிய குடும்பங்களின் வயது மிகச்சரியாக முக்கால் நூற்றாண்டு. திராவிட அரசியல் மற்றும் தமிழ் சினிமாவின் வயதும்கூட இதேதான். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இருக்கும் நம்மை, கடந்த நூற்றாண்டின் முப்பதுகளுக்கும், நாற்பதுகளுக்கும் அனாயசமாக ஆட்டோவின் பின்சீட்டில் நம்மை உட்காரவைத்து சவாரி செய்கிறார் தமிழ்மகன். காலயந்திரம் இன்னமும் விஞ்ஞானத்தால் கண்டறிப்படவில்லை. பரவாயில்லை. நம் எழுத்தாளர்களிடம் பேனா இருக்கிறது.
சிறுத்தையை வெட்டிய தாத்தாவின் கதையை தேடிச்செல்வது என்பது நொண்டிச்சாக்கு. முக்கால் நூற்றாண்டு வரலாற்றை முன்னூற்றி ஐம்பது பக்க கேப்ஸ்யூலாக தருவதுதான் நாவலின் முக்கிய நோக்கம். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அழகிரி – மொத்தமே இவ்வளவுதான். வேண்டுமானால் இடையிடையே ராஜாஜி, ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்று பெயர்களை போட்டுக் கொள்ளலாம். உங்களிடம் இப்போது 75 ஆண்டுக்கால வரலாறு ரெடி. வெட்டுப்புலி செய்திருப்பது இதைத்தான். ஆந்திராவை ஒட்டிய தமிழகத்தின் வடமாவட்ட அரசியல்போக்கு இவ்வளவு நுணுக்கமாக ஒரு புனைவில் பதிவு செய்யப்பட்டிருப்பது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கக்கூடும்.
முப்பதில் தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டு நிகழ்வுகளையும் பாத்திரங்களின் போக்கில் கொண்டுசெல்கிறார். முப்பதுகள் மிக நீண்டது. நாற்பதுகள் நீண்டது. ஐம்பதுகள் இயல்பான நீளம். அறுபதுகள் கொஞ்சம் குறைவு. எழுபதுகள் குறைவு. எண்பதுகள் வேகம். தொண்ணூறுகள் வேகமோ வேகம். புத்தாயிரம் மின்னல் வேகம். நாவல் இந்த உத்தியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்த காலக்கட்டங்கள் இயல்பாகவே இப்படித்தான் இயங்கியிருக்கிறது என்பதை குறியீடாக உணர்த்துகிறார். நாம்கூட சிறுவயதில் ஓராண்டு கடந்த வேகத்தையும், இப்போதைய அதிவேகத்தையும் உணரும்போது இந்த உத்தியின் லாவகத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
தசரத ரெட்டியில் தொடங்கி லட்சுமண ரெட்டி, நடராஜன், தமிழ்செல்வன் என்றொரு குடும்ப பாரம்பரியம். ஆறுமுக முதலி, அவரது மகன் சிவகுரு, சகோதரர் கணேசன், கணேசனின் மகன்கள் நடேசன், தியாகராசன், நடேசனின் மகன் ரவி என்று இன்னொரு குடும்பம். இரண்டு குடும்பங்களின் பார்வையில் விரிகிறது திராவிட இயக்க வரலாறு. பெரியாரின் சிந்தனைகள் சமூகத்தில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்கள் பலவற்றையும், அவற்றை தவறாக உள்வாங்கிக் கொண்டு நாசமாகப் போன சிலரையும் எந்த சமரசமுமின்றி நடுநிலையாக பதிவு செய்கிறது வெட்டுப்புலி.
லட்சுமண ரெட்டி அனுபவப்பூர்வமான நிகழ்வுகளால் திராவிட இயக்கத்தின் சார்புள்ளவராக மாறுகிறார். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு சமரசங்களுக்கும் உடன்பட்டு வாழ்வதில் அவருக்கு பெரியதாக பிரச்சினை எதுவுமில்லை. மாறாக கணேசன், தியாகராசன், நடராஜன் போன்றோர் மூர்க்கத்தனமாக, முரட்டுத்தனமாக சித்தாந்தங்களை குடும்பங்களிலும் நிறுவமுயன்று தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்கிறார்கள்.
இன்றும் கூட திராவிட இயக்கத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்ட ஒருவன் அவ்வளவு எளிதாக சாதிமறுப்புத் திருமணம் செய்துவிட முடியாது. அவனுக்கு மனைவியாக வரக்கூடியவள் வெள்ளிக்கிழமைகளில் சிகப்புப்புடவை அணிந்துகொண்டு அம்மன் கோயிலுக்கு போவாள். விரதம் இருப்பாள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு இருக்கும். இதெல்லாம் அவனுடைய வாழ்வியல் சிக்கல்கள். சித்தாந்தங்களும், யதார்த்தமும் இருவேறு முனைகளில் நிற்கும் கந்தாயங்கள். நாம் விரும்புகிறோமே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு புள்ளியில் சந்தித்துவிடாது. இரண்டுக்கும் இடையே இயந்திரமாக மனவுளைச்சலோடு வாழ்ந்து தீர்த்துத்தான் தொலைக்க வேண்டும். இதுதான் இயல்பானது. இல்லை சித்தாந்தங்கள் காட்டிய வழியில்தான் வாழ்வேன். எச்சூழலிலும் கைவிடமாட்டேன் என்பவர்கள், முதலில் குடும்பம் என்ற ஒருமுறையிலிருந்து வெளிவந்து, சமூகத்தை புறந்தள்ளி தனிமனிதனாக வாழ திராணி உள்ளவனாக இருக்க வேண்டும்.
வெட்டுப்புலி போதிப்பது இதைத்தான். தியாகராசனின் மனைவி ஹேமலதா தாலி அணிந்துக் கொள்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு போகிறாள். எம்.ஜி.ஆர் படம் பார்க்கிறாள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுகிறாள். இதெல்லாம் ஒரு பிராசஸாக / தியாகராசனுக்கு எதிர்வினையாக அமையும் சூழல். இடைப்பட்ட காலத்தில் இயந்திரத்தன வறட்டு சித்தாந்த உணர்வால் அவனுக்கு வேலை போகிறது. குடிகாரனாகிறான். குடும்பம் பிளவுபடுகிறது. ஒருகட்டத்தில் வாழ்வின் எல்லைக்கே இருவரும் ஓடி களைப்படைந்து மீண்டும் இணைகிறார்கள். இப்போது தியாகராசனுக்கு அரசியல் முக்கியமல்ல. கொள்கைகள் முக்கியமல்ல. புதுவை அரவிந்தர் ஆசிரம அன்னையின் தீவிர பக்தனாகிறான். வேலைக்கு ஒழுங்காக போகிறான். வாழ்வு அவன் போக்குக்கு வருகிறது. தியாகராசனது வாழ்க்கை ஒரு சோறு பதம்.
தமிழகத்தில் சினிமாவின் ஆளுமை குறித்து விஸ்தாரமான அலசல் கிடைக்கிறது. ஆறுமுக முதலி சினிமா எடுக்க திட்டமிட்டு சென்னைக்கு வந்து ஸ்டுடியோக்களை நோட்டமிடுகிறார். பிற்பாடு ஒரு டெண்டு கொட்டாய் கட்டியதோடு திருப்தியடைந்து விடுகிறார். மாறாக அவரது மகன் சிவகுரு சினிமா மோகத்தில் சொத்தினை அழித்து, பிச்சைக்காரனாகி மடிகிறான்.
பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை குறித்த காரசார விவாதம் ஆங்காங்கே முன்வைக்கப் படுகிறது. நடராஜனுக்கும், அவன் காதலிக்க விரும்பும் பார்ப்பனப் பெண் ப்ரியாவுக்கும் இடையில் கன்னிமாரா வாசலில் நடைபெறும் விவாதம் முக்கியமானது. பார்ப்பனர்களுக்கும் வர்க்கப்பேதம் உண்டு என்பதை ப்ரியா அழுத்தமாக முன்வைக்கிறாள். முதலாளி வர்க்க பார்ப்பனன், ஒட்டுமொத்த சமூகத்தையும் காலில் போட்டு நசுக்குகிறான் என்று நடராஜன் எதிர்வாதம் வைக்கிறான்.
வர்க்க அடிப்படையில் பின் தங்கியிருக்கும் பார்ப்பனர்களுக்கான நியாயம் ஒன்றும் இருக்கத்தானே செய்யும்? ‘சோபோன்ற பிரபல பார்ப்பனர்கள் இன்றைய நிலையில் அதை பேசுவதில்லை என்றாலும், எஸ்.வி.சேகர் மாதிரியான ஆட்கள் ‘பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடுஎன்று பேசுகிறார்கள். மிகச்சிறுபான்மை வாதமான அது பெரியளவில் பேசப்படாததற்கு, வர்க்கத்தில் மேல்மட்டத்தில் இருக்கும் பார்ப்பனர்களே காரணமாக இருக்கக்கூடும்.
பார்ப்பன மேலாதிக்க விவாதங்களுக்கு இன்றுவரை திட்டவட்டமான விடை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாவலின் கடைசி அத்தியாயங்களில் நியூயார்க்வாழ் பார்ப்பனரான பிரபாஸின் அப்பா சொல்கிறார் “சட்டசபை எங்க கையில இல்ல, நீதித்துறை எங்க கையில இல்ல, நிர்வாகமும் எங்க கையில இல்ல.. பாப்பான் ஒக்காந்திருக்கிருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையில.. ராஜாஜி இல்ல, வக்கீல் வரதாச்சாரி இல்ல, கலெக்டர் காமேஷ்வரன் இல்ல.. ஆமாவா இல்லையா?
எங்களைத்தான் நாட்டைவுட்டே வெரட்டி அடிச்சிட்டாங்களே இந்த கோட்டா, அந்த கோட்டா, ரிஸர்வேஷன்னு.. செரி அதவுடு.. ஷேம்மாத்தான் இருக்கோம். இல்லாட்டி போனா அங்கே கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு இருக்கணும்..
வைதீக பார்ப்பனராகிய அவரது மகன் சொல்கிறான். “ஐ லைக் பெரியார் யூ நோ.. புரோகிரஸிவ் மேன். என்ன கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டாரு.. அவர் இறந்து இத்தனை வருஷம் ஆகியும் அவரை நம்மால பீட் பண்ணமுடியலையே? எங்களைத் திட்டுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு.. இப்ப இருந்திருந்தாருனா.. எங்களைத் திட்டியிருக்க மாட்டாரு.. உங்களைத்தான் திட்டியிருப்பாரு.. ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிறாங்க.. என் ஜாதிதான் பெருசு.. உன் ஜாதிதான் பெருசுன்னு.
முன்பாகவே ஒரு கதாபாத்திரம் சுட்டிக் காட்டுகிறது. பெரியார் சொன்ன பெண்களுக்கான சீர்த்திருத்தத்தை முதலில் ஏற்றுக் கொண்டது பார்ப்பனர்கள்தான். தமிழக சமூக சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் தான் முதன்முதலாக பணியாற்ற படிதாண்டு வருகிறார்கள். அக்காலக் கட்டத்தில் பெரியாரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது குறித்தே தயக்கத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதோரைவிட எப்போதும் பத்து/இருபது ஆண்டுகள் எல்லாவற்றிலும் முன்பாகதானிருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு.
தமிழ்மகனின் நடை மிக முக்கியமானது. அந்தந்த காலக்கட்டத்தை கண்முண் கொண்டுவந்து நிறுத்துவதில் அவரது உழைப்பு அலாதியானது. பீரியட் நாவல் என்பதுகுறித்த வறட்சித்தன்மை ஏதுமில்லாத மசாலா விவரிப்பு. புனைவு என்றாலும் நடந்த சம்பவங்கள் நறுக்குத் தெறித்தாற்போல ஆங்காங்கே சுவைக்காக தூவப்பட்டிருக்கிறது.
அண்ணாசாலை கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர் மரணமடைந்த அன்று ஒரு இளைஞனால் கடப்பாரை கொண்டு இடிக்கப்படுகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அது படச்செய்தியாக வந்திருந்ததாக நினைவு. கலைஞர் அந்தப் படத்தை எடுத்து முரசொலியில் போட்டு படக்குறிப்பு எழுதியிருந்தார். ஏவியோர் எள்ளி நகையாட அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை. நெஞ்சிலேதான் குத்தினான். வாழ்க.. வாழ்க! இச்சம்பவம் நாவலின் போக்கிலே கொண்டுவரப் படுகையில் என் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை வடிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை.
1991 ராஜீவ்காந்தி கொலை, 1998 திமுக – பாஜக உறவு, 2001 கலைஞர் கைது போன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் விரிவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது எனக்கு நாவலில் படும் சிறு குறை. ஏனெனில் மேற்கண்ட சம்பவங்கள் என் குடும்பத்தில் ஏற்படுத்திய பாதிப்பை நேரிடையாக கண்டிருக்கிறேன். திமுக – பாஜக உறவு மலர்ந்தபோது என்னுடைய பெரியப்பாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. கலைஞர் கைதின்போது சன் டிவியில் கண்களில் நீர்கசிய பராசக்தி பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு உடல்நலிவுக்கு ஆளானார். பிழைப்புக்காக சினிமா பத்திரிகையாளராகி விட்ட நடேசனின் மகன் ரவி கதாபாத்திரம் என்னை எனக்கே நினைவுபடுத்துகிறது.
கலைஞருக்கு கலைஞர் பட்டம் கொடுத்த எலெக்ட்ரீஷியன் பாஸ்கர், முரசொலி அலுவகத்தை கண்டு ஆச்சரியப்படுகிறார். “இது கருணாநிதிக்குச் சொந்தக் கட்டடமா?
பதினைந்து ஆண்டுக்காலமாக கிட்டத்த கோமா நிலையிலிருந்த நடராஜன் வெட்டுப்பட்ட முகமொன்றை டிவி சானலில் கண்டு, ஞாபக வெடிப்புகளில் மீள்கிறான். கால்களில் நடுக்கத்தோடு, கண்களில் நீர்வழிந்து கட்டிலில் விழுகிறான். அழகிரி மத்திய மந்திரி ஆகிறார். வைகோ பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்என்ற ஆதங்கத்தோடு நாவல் முடிகிறது.
வெட்டுப்புலி – சமகால தமிழ் சமூகத்தின் கண்ணாடி!



நூல் : வெட்டுப்புலி

ஆசிரியர் : தமிழ்மகன்

விலை : ரூ.220/-

பக்கங்கள் : 376

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,
சென்னை - 600 018. போன் : 24993448
மின்னஞ்சல் uyirmmai@gmail.com

இணையத்தில் நூலினை வாங்க : http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262

11 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?

முதலில் தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து?

‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக்கோட்பாடு.

இவ்விதிகள் அனைத்தும் பொருந்தி வருவதாலேயே தமிழ் செம்மொழி எனும் தகுதிநிலையை அடைகிறது.

திராவிட மொழி குடும்பத்தில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 22. இதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை மட்டுமே இலக்கியத் திறன் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி உள்ளிட்ட மொழிகள் இலக்கியத்திறனற்று பேச்சு பயன்பாட்டில் இருக்கும் இதர மொழிகளாகும்.

இம்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை ஏற்கனவே இத்தகுதியைப் பெற்றவை. இன்று வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழுக்கு போட்டியாக கருதப்படும் உயர்ந்த மொழிகளான பிரெஞ்சு (600 ஆண்டுகள்), மராத்தி (800 ஆண்டுகள்), வங்காள மொழி (1000 ஆண்டுகள்) ஆகியவற்றை ஒப்பிடும்போது, இவற்றைவிட 2000 ஆண்டுகள் கூடுதல் தொன்மை கொண்டதாக தமிழ் விளங்குகிறது.

தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக்காட்ட நம் வசமிருப்பது சங்க இலக்கியங்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இவ்விலக்கியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன.

ஆனால் சங்க இலக்கியங்கள் எவை எவை என்ற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்கிறதா என்பது ஐயமே. ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட ஆகியவையே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவை மட்டும்தான் சங்க இலக்கியங்கள் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது. சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவைகளில் இவை மட்டும்தான் நம்மிடம் இன்று எஞ்சி இருக்கிறது. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் :

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்.

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.

பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இலக்கியங்கள் இந்தளவுக்கு வேறேதேனும் மொழியில் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி பல்லாண்டுகளாக பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஓர் இயக்கமாகவே தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்கள். பரிதிமாற்கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை கலைஞரால் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ‘செம்மொழி’ என்றொரு தனி சிறப்புப் பிரிவை தோற்றுவித்து தமிழை செம்மொழி என்று அறிவித்தது.

இதையடுத்து விருதுகள், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழ்த் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழிலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள் மற்றும் நாணங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.

2007 ஆகஸ்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இதற்காக ரூ.76.32 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறது?

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவை தொடர்புடைய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள் ஆகியவற்றை திரட்டுதல் ஆகிய பெரிய பணிகள் முழுமூச்சோடு நடந்துவருகிறது. தொல்காப்பியம், இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்து, நூல்கள் வெளியிடப்பட்டு விடும்.

மணிப்பூரி, நேபாளி ஆகிய இருமொழிகளிலும் திருக்குறள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நற்றிணை, முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது ஆகியவற்றின் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முடிக்கப் பட்டிருக்கிறது.

பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள், நாணயங்கள் தொடர்பான 18 காட்சிப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் தொகுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகராதிகளில் இதுவரை இடம்பெறாத எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் (அளவைகள், ஆடு மாடுகள், நெல் வகைகள், மீன்பிடிப்புத் தொழில், நெசவுத்தொழில், மண்பாண்ட்த் தொழில், வேளாண்மை தொடர்பானவை) தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட பதினோராயிரம் நூல்களும், பல்வேறு ஓலைச்சுவடிகளின் மின்பதிப்புடன் கூடிய குறுந்தகடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களின் வசதிக்காக நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஐம்பது கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு பல்துறை சார்ந்த அறிஞர்களின் சுமார் 1500 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுகளும் 37 வட்டெழுத்து கல்வெட்டுகளும் HD Video & High Resolution Still Image முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் உதவியோடு பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் எனும் ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு அரிய சங்க காலத் தொல்லியல் சான்றுகள் (காசுகள், சூது பவள மணிகள், பளிங்கு மணிகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள், மண் பாண்டங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை) எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி செம்மொழி விருதுகள், ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதியுதவி என்று ஏராளமான விஷயங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்று செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் சிறுபான்மை கும்பலுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

இம்மாநாடு செம்மொழி தகுதி கிடைத்த மறுவருடமே நியாயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நடத்தப்படுவது என்பதே மிகவும் தாமதமானது. 1995ல் தஞ்சையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகான சர்வதேச மாநாடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படவேயில்லை. உலகத் தமிழ் ஆய்வுக் கழகமும் இதற்கான முன்னெடுப்பு எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.

கலைஞர் இம்மாநாட்டை அறிவித்தபோது, அது உலகத் தமிழ் ஆய்வுக் கழகம் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்றொரு சர்ச்சை எழுந்தது. முன்னதாக நடத்தப்பட்ட எட்டாம் உலகத் தமிழ் மாநாடு கூட தமிழக அரசால் – அதாவது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் - அறிவிக்கப்பட்டது என்பதை இங்கே நினைவுகூற வேண்டும். இம்மாநாட்டை உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா எதிர்ப்பதாக பரப்பப்படும் தகவலும் உண்மையல்ல. அவர் 2011ல் நடத்தவேண்டும் என்றே கேட்டுக் கொண்டார். இந்நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கும் 9 பேரில் 6 பேர் இம்மாநாட்டுக்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமானது.

2011ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அந்நேரத்தில் நடத்தப்படுவது உசிதமாக இருக்காது என்ற காரணத்தாலேயே 2010, சனவரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு ஜூன் மாதம் ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அனேகமாக இந்த தலைப்பில் நடத்தப்படும் ஒரே மாநாடாக இதுதானிருக்கும் என்று தெரிகிறது. அடுத்து நடத்தப்பட்டால் அது 9வது உலகத் தமிழ் மாநாடாக இருக்கும். எனவே இப்போது நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. ‘எங்கள் மொழியும் செம்மொழிதான்!’ என்று அழகுத்தமிழ் அரசாட்சி உலகுக்கு உரத்து தெரிவிக்கப் போகும் மாநாடு இது.

சங்க காலத்திலேயே உலகோடு பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாக விளங்கிய பகுதி கொங்குப் பகுதி என்பதால், அது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

நாளைய வரலாறு தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்ததையும், அதற்காக ஒரு மாநாடு பிரம்மாண்டமாக கோவையில் நடந்ததையும்தான் பதிவு செய்யப் போகிறதே தவிர, சில்லறை எதிர்ப்புகளை அல்ல. வரலாற்றில் இடம்பெற போகும் மாநாட்டை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இதனாலேயே இருக்கிறது.

அண்மைக்கால தொல்லியல், வரலாறு, மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளையொட்டி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தமிழிலக்கிய பண்பாடு தொடர்பான புதிய ஆய்வாளர்களை இனம் கண்டு ஒருங்கிணைப்பதற்கும் இம்மாநாடு அவசியமாகிறது. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்திருக்கும் கணினி தொழில்நுட்பம், அதில் தமிழ் இடம்பெற வேண்டியதின் அவசியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டவும் தமிழ் கணினி தொடர்பான அரங்கு தனியாக நடைபெறுகிறது. தமிழைப் பொறுத்தவரை முக்கியமாக கருதப்படும் அறிஞர்கள் 95 சதவிகிதம் பேர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க இசைவு தந்திருக்கிறார்கள்.

இம்மாநாட்டை எதிர்க்கும் ஓரிருவரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால் அரசியல் மட்டுமே காரணமாகிறது. இது கலைஞரால் நடத்தப்படும் மாநாடு என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எதிர்க்கிறார்கள். இல்லையென்று அவர்கள் மறுத்தாலும் அடிநாதமான காரணம் இது மட்டுமே. கடந்த காலங்களில் இவர்கள் இணையங்களில் செய்துவரும் பரப்புரைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருவோர் இதை உணரலாம்.

“கடந்த ஆண்டு ஈழத்தில் பல்லாயிரம் பேர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ள துயரச்சூழலில் இந்த கொண்டாட்டம் தேவையா?” என்பதைப் போன்ற செண்டிமெண்டலான கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை முன்வைப்பவர்கள் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக தமிழ்விழா கொண்டாடுவார்களாம். இவர்கள் மொழியிலேயே சொன்னால் இழவு வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடுவார்களாம்.

அதுவும் எப்படி?

பிரியாமணி, லட்சுமிராய் போன்ற தமிழறிஞர்களை வைத்து எங்கள் விழாவுக்கு வாருங்கள் என்று இணையம் முழுக்க வீடியோ ஏற்றி பரப்புரை செய்வார்களாம். செம்மொழி மாநாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா என்று கிண்டல் அடிப்பவர்கள் தங்கள் விழாவுக்கு ஹாரிஸ் ஜெயராஜையும், சாதனாசார்க்கத்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்களாம். விக்ரம், திரிஷாவென்று இன்னும் கூடுதல் கவர்ச்சியும் உண்டு.

அதாவது பொருளாதார மேன்மையை எட்டிவிட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஈழப்படுகொலைத் துயரத்தை மறக்க(?) சினிமா நட்சத்திரங்களோடு கொண்டாட்டம் போடலாமாம். போராடி பெற்ற செம்மொழித் தகுதியை கொண்டாட நினைக்கும் தமிழகத்தில் இருக்கும் சாமானியத் தமிழன் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமாம்.

நல்லா இருக்கய்யா இவங்க நாயகம்!

புறக்கணிக்கப்பட வேண்டியது மாநாடல்ல. தமிழ் மீது பற்று கொண்டவர்களாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டு, அரசியல் காழ்ப்புணர்வோடு போலியாக செயல்படும் இதுபோன்ற கபடவேடதாரிகள்தாம்!

10 ஜூன், 2010

தமிழில் குழந்தைகளுக்கான சினிமா?

கடந்த பத்தாண்டுகளில் தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்று நீங்கள் நினைக்கும் படங்களை நினைவுபடுத்தி விரல்விட்டு எண்ணிக் கொண்டே வாருங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆர்ர்றூஊ, ஏழ்... முடியலை இல்லையா? விடுங்கள். இதே காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான ஆங்கிலப்படங்கள் என்னென்ன என்று நீங்கள் நினைவுப்படுத்தி எண்ண ஆரம்பித்தால் உங்கள் தெருவிலிருக்கும் மொத்தப்பேரின் கைவிரல்களும் போதாது.
இப்போது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் வெளிவந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் வெளியான படங்களின் எண்ணிக்கை வெறும் நூறுகளில்தான் இருக்கிறது.
சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இந்த நிலைமை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு ஒரு சுற்று, குளிர் விடுமுறைக்கு மற்றொரு சுற்று என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
குழந்தைகளுக்கான படம் எது என்பதை உணர்வதிலேயே நமக்கு கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. திரை ஆய்வாளரான விஸ்வாமித்ரன் இதை எளிமையாக வரையறுக்கிறார். “ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது.
ஹாலிவுட்டில் இந்த பேருண்மையை படைப்பாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக கடந்த ஆண்டு வெளியான அப் (Up) திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் குழந்தைகளை விட பெரியவர்களை அதிகமாக கவர்ந்தது. பெற்றோரும் தங்களை குழந்தைகளாக உணரும் இதுமாதிரியான தருணங்கள் எவ்வளவு அற்புதமானவை. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற கடைசி ஐந்து படங்களில் ‘அப்பும் இடம்பெற்றது. உலகின் தலைசிறந்த இயக்குனராக இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். “என்னுடைய படங்கள் குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்படுகின்றன
ஏன் குழந்தைகளுக்காக சினிமா எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சினிமா நம் எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாக்கியே வருகிறது. சினிமா ஒரு வணிகம் என்பதை தாண்டிப் பார்த்தோமானால் இசை, இலக்கியம், ஓவியம் என்று கலையின் எல்லா பரிமாணங்களையும் ஒருபுள்ளியில் நிறுத்தி பார்வையாளனுக்கு சாத்தியப்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருக்கிறது. இதனால்தான் ரஷ்யப் புரட்சியாளர் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, “எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலைஎன்பதாக குறிப்பிட்டார்.
இன்று ஒரு நாட்டின் சமூகம், பண்பாடு, கலை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி அந்நாடுகளில் இருந்து வெளிவரும் சினிமாக்கள் மூலமாக அயல்நாட்டவர்களால் அளவிடப்படுகிறது. நம் நாட்டு குழந்தைகளின் ரசனைத்தன்மையின் வெளிப்பாடாக குழந்தைகள் திரைப்படம் நிச்சயமாக அமையும்.
சினிமா என்றில்லை. குழந்தைகளுக்கான பத்திரிகைகள் கூட இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தளவில் இப்போது இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பாலரத்னா, பூந்தளிர் மற்றும் எண்ணற்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இப்போது பெட்டிக்கடைகளில் தொங்குவதில்லை. பெரியவர்களுக்கான பத்திரிகைகளாக பார்த்து குழந்தைகளுக்கு என்று சில பக்கங்களை இடஒதுக்கீடு செய்தாலே பெரியவிஷயம்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கோடைவிடுமுறை குழந்தைகளை குறிவைத்து தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. ரெட்டச்சுழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், குட்டிப்பிசாசு. இன்னும் சில படங்கள் தயாரிப்பிலும் இருக்கின்றன. தமிழ் சினிமா தனக்கான நுகர்வோராய் குழந்தைகளை அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறது என்பதாக இருந்தால் இம்மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம் இல்லையா?
நெடிய தமிழ் சினிமா வரலாற்றில் குழந்தை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரியவர்களையும் கவரும் படங்கள் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. வெறுமனே குழந்தைகளை மட்டும் குறிவைத்து எடுக்கப்படும் பல படங்கள் ஆவணப்படங்கள் மாதிரியான வறட்சித்தன்மையோடு வெகுஜன வரவேற்பை பெறத் தவறியிருக்கின்றன.
ஐம்பதை கடந்தவர்களிடம் கேட்டால் சட்டென்று பாமா விஜயம், ‘குழந்தையும் தெய்வமும், சாந்தி நிலையம், எங்க மாமாஎன்று ஒரு பெரிய பட்டியலை தரக்கூடும். இவையெல்லாம் முழுமையான குழந்தைகள் படமல்ல. ஆனால் குழந்தைகளை கவர்ந்த படங்கள்.
எழுபதுகளில் கவுபாய்கள் குதிரைகளில் வந்து துப்பாக்கியால் சுட்டு சுட்டீஸ்களை கவர்ந்தார்கள். அது ஆக்சன் யுகம். புரூஸ்லீ போன்ற அதிரடி நாயகர்களின் படங்கள் இங்கே சக்கைப்போடு போட்ட பாதிப்பில் ஆக்சன் படங்கள் நிறைய சிவப்பெறும்புகளாய் வரிசைகட்டி படமெடுத்தன. குழந்தைகளுக்கு ஆக்சன் பிடிக்கும் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தார்கள்.
எண்பதுகளின் தொடக்கத்தில் குழந்தைகள் சினிமா முயற்சி கொஞ்சம் சீரியஸாகவே சிந்திக்கப்பட்டது. 1984ல் வெளிவந்த இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் ஒரு மைல்கல் எனலாம். நவோதயா ஸ்டுடியோ அப்பச்சன் தயாரித்த இப்படத்தை அவரது மகன் ஜிஜோ இயக்கினார். இயக்குனரின் வயது அப்போது 21 மட்டுமே. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் பட்ஜெட் 22 கோடி என்று பரபரப்பாக பேசப்பட்டது. வசூலிலும் குறைவைக்கவில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. 3டி தந்த விசித்திர அனுபவத்தால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். 1997ல் இதே படம் டி.டி.எஸ். ஒலி சேர்க்கப்பட்டு வெளியாகி செகண்ட் இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்தது.
ஒரு திரைப்படம் வணிகரீதியான வெற்றியை அடைய குழந்தைகளையும் கவர்ந்தாகவேண்டும் என்ற சூழல் உருவானது. ரஜினிகாந்த் (ராஜா சின்ன ரோஜா), கமல்ஹாசன் (அபூர்வசகோதரர்கள்) போன்ற உச்சநடிகர்கள் கூட தங்களது இமேஜை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரியாக கட்டமைக்கத் தொடங்கினார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனராக இன்றளவும் போற்றப்படும் மணிரத்னம் அஞ்சலி (1990) திரைப்படம் எடுத்தார். பிறப்பிலேயே மனநிலை பிறழ்ந்த ஒன்றரை வயது குழந்தையை பற்றிய உருக்கமான கதை. அக்குழந்தை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்ற வாண்டுகளின் கலாட்டாவென்று மணிரத்னத்துக்கு உரிய கமர்சியல் டச்சும் இருந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து அவர்களது உளவியலை மணி அலசி ஆராய்ந்திருந்தார். படத்தில் நடித்த ஷாம்லிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
ம்.. இதெல்லாம் பழங்கதை!
தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் சினிமாவில் ‘பேண்டஸிரத்தம் பாய்ச்சப்பட்டது. குழந்தைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இளைஞர்களை கவரும் விதமாக கதை பண்ண ஆரம்பித்தார்கள். வசூலும் ஐப்பசிமாத அடைமழை மாதிரி கொட்டத் தொடங்கியது. சினிமா கலைவடிவமாக இன்னமும் முழு பரிமாணத்தை எட்டாத வகையில் வணிகமே பிரதானமானதாக இருக்கிறது. இதனால்தான் எங்குமே இல்லாத வகையில் சினிமாவை வணிகப்படம், கலைப்படம் என்று தரம்பிரித்து வைத்திருக்கிறார்கள்.
பெற்றோரும் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துவருவது குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். ‘படம் பார்த்து கெட்டுப்போய்விடக் கூடாதுஎன்பது அவர்கள் எண்ணம். குழந்தைகளுக்கு படமெடுத்துவிட்டு குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை என்றால் நாங்கள் எப்படி படமெடுக்க முடியும்? என்பது சினிமாக்காரர்களின் ஆதங்கம். ‘படம் பார்த்தால் கெட்டுப்போகும் வகையில் சினிமா வந்தால் எப்படி குழந்தைகளோடு பார்க்கமுடியும்?என்று பெற்றோர்கள் பதிலுக்கு எகிற.. கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா மாதிரியான விவாதம்தான் நடக்கிறது.
படத்தில் வரும் குழந்தைகள் குழந்தைகளாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது சினிமா மீது வைக்கப்படும் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு. அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையை நிஜத்தில் நான் கண்டதேயில்லை. வயதுக்கு மீறிய பேச்சும், நடத்தையும் எரிச்சலை தருகிறது.
லாபம் வருமென்றால் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க தமிழ் சினிமாக்காரர்களுக்கு அவர்களுக்கு மனத்தடை ஏதுமில்லை. வணிகத்துக்கு முதலிடம், மற்ற விஷயங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த இடம் என்பது சினிமாக்காரர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் குழந்தைகள் பட டிரெண்ட் தொடரவேண்டுமானால் பெற்றோர்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரவேண்டும். படம் குழந்தைகளை திருப்தி படுத்தும் முன்னர் அவர்களது பெற்றோர்களை திருப்தி படுத்த வேண்டும்.
இந்தியில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘தாரே ஜமீன் பர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் ஒரு குழந்தை முக்கிய பாத்திரத்தில் நடித்த படத்தில் தனது இமேஜை விட்டுக்கொடுத்து நடித்து இயக்கினார். இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. இதைப்போன்ற முயற்சிகள் தமிழில் செய்யப்பட்டால் மட்டுமே குழந்தைகள் படத்துக்கான தனியிடம் தமிழில் உருவாகும்.
முயற்சிப்பார்களா நம் படைப்பாளிகள்?

8 ஜூன், 2010

ஈழம் - ஆன்மாவின் மரணம்!

இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.

ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.

'ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது.

பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 11 -6-10 அன்று, மாலை 6 மணிக்கு, இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!

(எழுத்து : பாரதிதம்பி)

பாலாவின் முந்தைய நூலான நாட்டு நடப்பு குறித்த சிறு அறிமுகம்!

’ஈழம் - ஆன்மாவின் மரணம்’ நூலில் இருந்து சில தூரிகைத் துளிகள் :