திரையில் ஒரு ரஜினி தெரிந்தாலே வான வேடிக்கைதான். திரை முழுக்க நூற்றுக்கணக்கான ரஜினிகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால்? வேறென்ன.. அதகளம்தான். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத பிரம்மாண்டம். துல்லியமான தொழில்நுட்பம். சன்பிக்சர்ஸின் முதல் தயாரிப்பே சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்!
எந்திரன் ஷங்கர் படமா, கலாநிதிமாறன் படமா? என்றெல்லாம் கேள்வியே எழவில்லை. இது முழுக்க முழுக்க ரஜினி படம். அண்ணாமலை, பாட்ஷாவுக்கு பிறகு முதுகில் சுமந்த இமேஜ் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கேஷூவலாக நடித்துத் தள்ளியிருக்கிறார். ரஜினிதான் இருக்கிறாரே? கதைக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டாமென்று ஷங்கர் முடிவெடுத்திருக்கலாம். ரஜினியின் கரிஷ்மா மீது பாரத்தைப் போட்டுவிட்டு, சீன்களை செதுக்கியிருக்கிறார். ஒவ்வொரு பிரேமுக்கும் விசிலும், கைத்தட்டலும்.. சந்திரனுக்கே கேட்குமளவுக்கு கரகோஷம்.
குறிப்பாக வில்லன் ரோபோ. பாடி லேங்குவேஜூக்காக ரஜினி ரொம்ப மெனக்கெடவில்லை. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை அச்சுஅசலாக பிரசண்ட் செய்கிறார். வசீகரன் கேரக்டருக்கு சந்திரமுகி ரஜினி. 'ரொமான்ஸ்' ரோபோவுக்கு மட்டும் அந்நியன் ரெமோவை கடன் வாங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் அந்நியன் நெடி அதிகம்.
முதல் பாதி டைட்டாக பேக்கப் செய்யப்பட்ட காமெடி மசாலா. இரண்டாம் பாதி ஆக்ஷன் பேக்கேஜ் என்றாலும் ஆங்காங்கே லைட்டாக தொய்வு. ஷங்கருக்கு ஓவர் கிராபிக்ஸ் ஆர்வம். அசத்தலான படத்துக்கு திருஷ்டிபொட்டாக க்ளைமேக்ஸ். இராம.நாராயணன் கொஞ்சம் ஹைடெக்காக, தாராளாமாக செலவழித்து எடுத்தால் இதைவிட பர்ஃபெக்டான க்ளைமேக்ஸை எடுத்துவிடுவார். ரஜினி இருக்க காமெடிக்கு தனியாக மூளையைக் கசக்க வேண்டுமாவென்று ஷங்கர் அசட்டையாக இருந்திருக்கிறார். சந்தானமும், கருணாஸும் கிச்சுகிச்சு கூட மூட்டவில்லை. "என் கிட்டே இல்லாதது அவனுங்க கிட்டே என்ன இருக்கு?" என்று தன்னுடைய பாஸை, ரோபோ கலாய்க்கும் சீன் சூப்பர். இந்த காமெடியை க்ளைமேக்ஸில் நெகிழ்ச்சிக்காக கண்டினியூ செய்திருப்பதிலும் ஷங்கரின் அனுபவம் பளீர்.
ஹாலிவுட்காரர்கள் கூட படம்பிடிக்க முடியாத பெரு நாட்டில் பாடல்காட்சி படப்பிடிப்பு, அயல்நாட்டுத் தரத்தில் இசைக்கோர்ப்பு, உலக அழகி ஹீரோயின் என்றெல்லாம் தினம் தினம் சன்பிக்சர்ஸ் டுமீல் விட்டுக் கொண்டிருந்தாலும், படம் பார்க்கும்போது ரஜினி இருக்க, அதெல்லாம் எதுக்கு என்று தோன்றுகிறது. ஐஸ்வர்யாராயை பேஸ்மெண்டாக வைத்துதான் திரைக்கதை என்றாலும்கூட சதாவை ஹீரோயினாக போட்டிருந்தாலும் இதே எஃபெக்ட் கிடைத்திருக்கும்.
எந்திரப்படையை அடக்க நகர் முழுக்க மின்சாரவாரியத்தின் துணைகொண்டு மின்சாரத்தை நிறுத்திவிடுகிறார் வசீகரன். பேட்டரி சார்ஜ் செய்யமுடியாமல் எந்திரர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்பது அவர் திட்டம். ஆனால் புத்திசாலி எந்திரன், சார்ஜூக்கு மாற்றுவழியை கண்டுபிடித்து, மீண்டும் எந்திரப்படையை சண்டைக்கு முன்னெடுப்பது எதிர்பாரா திருப்பம். முதல் பாதியில் வரும் டிரெயின் ஃபைட் ஆவ்ஸம். ரஜினியின் சுறுசுறுப்பைக் காண கண் ரெண்டும் போதாது.
கமலஹாசனோ, ஷாருக்கானோ நடித்திருந்தால் இவ்வளவு கலர்ஃபுல்லாக, கொண்டாட்டமாக எந்திரன் உருவாகியிருக்குமா என்பது சந்தேகமே. இடையில் அஜித்தை வைத்து ஷங்கர் ரோபோவை தயாரிப்பதாக கூட செய்தி வந்தது. ரோபோவாக அஜித் நடித்திருந்தால் இந்த உலகம் தாங்கியிருக்காது.
"அறுபது வயதுக் கிழவன் ஆக்ஷன் படத்தில் உலக அழகியோடு காதல் களியாட்டங்களில் ஈடுபடுகிறான்" என்று படம் வருவதற்கு முன்பாக எஸ்.எம்.எஸ்.களிலும், மின்னஞ்சல்களிலும் பெரிதும் கேலி பேசப்பட்டது. ஒரே ஒரு சீனில் கூட ரஜினியின் வயது தெரியாத அளவுக்கு ஒப்பனை, உடை அலங்காரங்கள் அபாரமாக இருக்கிறது. ஐஸ்வர்யாராயோடு ரொமான்ஸ் ரோபோ போடும் ஆட்டம், சான்ஸே இல்லை. விஜய்க்கு அஜித்தோ, சூர்யாவோ போட்டியல்ல. இளம் நாயகர்களுக்கு இன்னமும் டஃப் ஃபைட் கொடுப்பது தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினி.
எந்திரன் - சினிமா ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளி!