15 டிசம்பர், 2010

திமுகவில் சாரு?


கனிமொழி, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், குஷ்பூ என்று திமுக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். போதாதற்கு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அழகுப்புயலும் (?) கருப்பு சிவப்பு உடை அணிந்திருந்தார். இதெல்லாம் போதாதா, சாரு திமுகவில் சேரப்போகிறார் என்பது உறுதி. விஜய் அதிமுகவில் சேரும்போது, சாரு திமுகவில் சேரக்கூடாதா என்ன?

ஒருவழியாக இலக்கிய உலகம் எதிர்ப்பார்த்திருந்த சூறாவளிப்புயல் காமராஜர் அரங்கத்தில் கரையைக் கடந்தது.

கிட்டத்தட்ட ஆயிரத்து எட்டுநூறு இருக்கைகள் கொண்ட காமராஜர் அரங்கில் பாதிக்கு மேல் இருக்கைகள் நிரம்பி வழிந்தது. மனுஷ்யபுத்திரன் காலியாக இருக்கும் இருக்கைகளை காட்டி தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தை நொந்துகொண்டார். சாருவின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசிலடிக்கப்பட, நாணத்தால் சாரு நாணி கோணி அமர்ந்திருந்தார். எஸ்.ரா மேடைக்கு வரும்போதும் செம விசில். வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது அவருக்கு. ஃபுல்மேக்கப்பில் தமிழச்சி தங்கபாண்டியன். 'பந்தா' இல்லாத கனிமொழி கருணாநிதி. சாதாரண கிராமத்தான் தோற்றத்தில் ச.ம.உ. ரவிக்குமார். கருப்பு ஷர்ட்டில் ஸ்மார்ட்டாக மதன். கூலிங்கிளாஸ் போட்ட நந்தலாலா மிஷ்கின். தில்லானா மோகனாம்பாள் மைனர் கெட்டப்பில் நல்லி செட்டியார். கூடவே இலவச இணைப்பாக ஏ.நடராசன். செட்டியாரும், நடராசனும் அதிஷா-லக்கிலுக் மாதிரி என்று தோன்றுகிறது. எங்கும் சேர்ந்தே வருகிறார்கள். சேர்ந்தே போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புக்பாயிண்ட் அரங்கில் சாருவின் புத்தகம் வெளியிடப்பட்டபோது 125 பேர் வந்திருப்பார்கள். கடந்த ஆண்டு ஃபிலிம் சேம்பரில் 250 முதல் 300 பேர் இருந்தார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1000 பேர் வந்திருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் சாரு சூப்பர்ஸ்டார்தான். வந்திருந்தவர்களில் ஊன்னா தான்னா போன்ற ஓரிரண்டு பெருசுகளை கழித்து கட்டிவிட்டால் மீதி எல்லோருமே இளைஞர்களாகவும், இளைஞிகளாகவும் இருந்தார்கள். சாருவின் போட்டி எழுத்தாளரான
 உ.த. எழுத்தாளரின் கடந்தாண்டு புத்தக நிகழ்வில் தென்பட்ட தலைகள் முழுக்க நரைதலைகளாக இருந்தன என்பது ஏனோ இப்போது சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது.

செட்டியாரின் பேச்சு யதார்த்தமானது. அவரை ஒரு இலக்கியவாதியாகவே (!) நினைக்க முடியவில்லை. அந்த காலத்துலே மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டிலே அரைகிலோ கருவாடு ஐம்பது காசுக்கு வாங்கினேன் என்கிற ரேஞ்சில் இயல்பாக, படுத்தாமல் பேசினார். ஏ.நடராசன் பேச மைக் அருகில் வந்ததுமே பலர் 'தம்' அடிக்க வெளியே போனது ஏனென்று தெரியவில்லை. நானும் வெளியே போய்விட்டதால் உள்ளே என்ன பேசினார் என்பது தெரியவில்லை. ரவிக்குமார் குட்டி குட்டியாக உள்குத்து வைத்து பேசினார். சென்னையில் இருந்த சாருவை ஈ.சி.ஆரில் காரில் பார்த்ததாக ஜோக் அடித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியனின் 'சாத்தர்' புராணம் துரதிருஷ்டவசமாக இந்த வருடமும் தொடர்கிறது. சாத்தர் பாவம். கனிமொழி பேச்சு சம்பிரதாயமானது. எஸ்.ரா வழக்கம்போல 'சமகால' விஷயங்களை சமரசமின்றி அசைபோட்டார். மதனின் பேச்சு அவரது கார்ட்டூனை போலவே கலக்கலானது.

இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருப்பது மிஷ்கினின் பேச்சு. அவரது பேச்சில் என்ன குற்றமென்று எனக்குத் தெரியவில்லை. நண்பர் சரவண கார்த்திகேயனின் புத்தக வெளியீட்டு விழாவில் சாரு எப்படி பேசினாரோ, அதைபோலவேதான் இன்று மிஷ்கினும் பேசியிருக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். 'சரோஜா தேவி புக்' என்று சொன்னதால் சாரு கவலைப்படுகிறாரோ, விமர்சனங்கள் குறித்து இதுவரை கவலைப்பட்டவர் அல்லவே அவர்? "ஆமாண்டா. அப்படித்தாண்டா!" என்று சொல்லும் சிங்கமாகதான் சாருவை இதுவரை பார்த்திருக்கிறோம். உ.த.எ.வும், சாருவும் வித்தியாசப்படும் முக்கியமான புள்ளி இது. மிஷ்கின் மீது கோபம் வேண்டாம் சாரு. அவரும் உங்களைப்போல வெள்ளந்தி. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்.

'தேகம்' வாங்கினோம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஒரு 'பிட்' நிச்சயம். இன்னும் முழுமையாக படிக்கவில்லை. முதல் அத்தியாயத்தை மேய்ந்ததில் ஃபேன்ஸி பனியன் நினைவுக்கு வருகிறது. இதுமாதிரி பிட்டுகளால்தான் விடலைகள் விட்டில் பூச்சிகளாய் சாருவிடம் மாட்டுகிறார்கள். பிற்பாடு அவர்கள் விஷயம் தெரிந்துகொள்வதும் சாருவிடம்தான்.

இறுதியாகப் பேசவந்த சாரு வழக்கம்போல ஜோவியலாகப் பேசினார். 'கட்சிக்கலர்' குறித்து விளக்கம் தெரிவித்தார். பல்வேறு கட்சிகளிலும் தனக்கு நண்பர்களும், வாசகர்களும் இருக்கிறார்கள். அதுபோல திமுகவிலும் இருக்கிறார்கள் என்றார். எனவே இப்போதைக்கு சாரு திமுகவில் சேரமாட்டார் என்று தெரிகிறது.

எது எப்படியோ? சாருதான் இன்றைய இலக்கிய சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த புத்தக விழாவின் மூலமாக நிரூபித்திருக்கிறார். இரவு பத்தரை மணி வரையிலும் மகுடியை கண்ட நாகமாய் கூட்டம் திரண்டிருந்ததே இதற்கு சாட்சி.

13 டிசம்பர், 2010

பெரியார் திரை - குறும்படப்போட்டி


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும் 
பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு
நுழைவுக் கட்டணம் இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள்: 
*     குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
*     ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பின் நலம்.
* DVD அல்லது CD வடிவில் தரமானதாக இருக்க வேண்டும். குறும்படத்தின் 2 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
* போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
* போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும் படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வில் திரையிடப்படும்.
* குறும்படங்கள் 2008-2010 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
* ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
* தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விதிமுறைகளை
ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.
அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230

11 டிசம்பர், 2010

தமிழ் சமூகத்தின் அசலான கொண்டாட்டம் - அனைவரும் வருக!



சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு


நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி

இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை

வெளியிடப்படும் நூல்கள் :

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் :
  • கனிமொழி எம்.பி.
  • மிஷ்கின்
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • நல்லி குப்புசாமி செட்டியார்
  • ஏ. நடராஜன்
  • ரவிக்குமார் எம்.எல்.ஏ.
  • குஷ்பு
  • மனுஷ்யபுத்திரன்
  • தமிழச்சி தங்கபாண்டியன்
  • மதன் (கார்டூனிஸ்ட்)

விருதகிரி

"அரசியலில் எனக்குப் புடிச்சது வெறும் கலைஞர்
சினிமாவில் எனக்கு ரொம்ப புடிச்சது புரட்சிக் கலைஞர்"

விருதகிரி பற்றி எழுதும்போது 'பஞ்ச்' இல்லாமல் ஆரம்பிக்கவே படாது. பெரிய பாவம். படம் பார்த்த பத்திரிகையாள நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். "படத்துலே பஞ்ச் பார்த்திருக்கேன். படமே பஞ்சா இருக்கிறதை இப்போதான் பார்க்குறேன்"

உண்மைதான். படத்தின் ஹீரோ-கம் டைரக்டரான டாக்டர் கேப்டன் மட்டுமல்ல. வில்லன், அடியாள்,  அப்பா, அம்மா, சைட் கேரக்டர், சப்பை கேரக்டர், அட்மாஸ்பியருக்கு சும்மா போகிறவர்கள் வருகிறவர்கள் என்று ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்குகளாக அள்ளித்தெளிக்க, விசில் கும்மாளம் கொண்டாட்டத்தோடு பொழுதைப் போக்க, அருமையான அக்மார்க் கேப்டன் படம்.

எந்திரனின் 'சிட்டி'யாவது ரோபோ. கேப்டனின் விருதகிரி ரத்தமும், சதையுமான மனிதன். ஆனால் ரோபோவை விட சிறந்த 'பைட்டிங்' ஆற்றலோடு, பவர்ஃபுல்லாக விருதகிரி பாத்திரத்தை வடிவமைத்த கேப்டனின் சிந்தனையை தலைகீழாக நின்று தண்ணி அடித்து பாராட்டினாலும் தகும்.

ஸ்காட்லாண்டுயார்டு போலிசார் செம்மொழியில் பேசுகிறார்கள் என்று ஆரம்பக் காட்சியை கண்டதுமே இனம்புரியாத திகில் ஏற்படுகிறது. பதிலுக்கு அவர்களிடம் கேப்டன் இங்கிலீஷில் விளாசும்போது திகிலின் மடங்கு எக்குத்தப்பாக எகிறுகிறது. படம் கொஞ்சநேரம் ஓடியபிறகே புரிகிறது. சப்-டைட்டில் போடாமல், வாய்ஸாகவே மொழியாக்கம் செய்யும் புதுமையான தொழில்நுட்ப முறையை உலக சினிமாவுக்கு டைரக்டர் கேப்டன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

டிரைனிங்குக்காக ஸ்காட்லாண்டு யார்டுக்கு செல்லும் கேப்டன், அங்கே அவர்கள் நாட்டு பிரதமரின் உயிரைக் காப்பாற்றுகிறார். திக்கைத்தனமாக ஸ்காட்லாண்டு யார்டு போலிஸார் தீவிரவாதிகளை கோட்டைவிடும் நிலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தீவிரவாதிகளை தாயகம், உளவுத்துறை, நரசிம்மா போன்ற படங்களில் சமாளித்த அனுபவம் நம் கேப்டனுக்கு இருக்கிறது. அந்த அனுபவ ஆற்றலை கொண்டே ஸ்காட்லாண்டு தீவிரவாதிகளை நோண்டி நுங்கெடுக்கிறார். அடுத்த காட்சியே கேப்டன் டிவி செய்திகள். "ஸ்காட்லாண்டு யார்டு பிரதமரை காப்பாற்றி தமிழக ஏ.டி.ஜி.பி. விருதகிரி உலகசாதனை".

நாடு திரும்பி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். "வாழ்க்கை ஐஸ்க்ரீம் மாதிரி. உருகறதுக்குள்ளே சாப்பிட்டுடணும்"

அடுத்த கேமிராவைப் பார்த்து குளோஸப்பில் 'பாராட்டு விழா' குறித்து பஞ்ச்-பை-பஞ்சாக கலைஞருக்கு அட்வைஸ்.

இப்படியாகத் தான் இருக்கிறது விருதகிரி.

இண்டர்வெல் வரை எப்படி படத்தை நகர்த்துவது என்று இயக்குனருக்கு தெரியவில்லை. மன்சூர் அலிகான், சண்முகராஜ் என்று லோக்கல் லுச்சா வில்லன்களை துவம்சம் செய்கிறார். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சொல்லி, மன்சூர் அலிகான் வசனங்கள் மூலமாக அவர்களை கேவலப்படுத்தி இருக்கிறார் கேப்டன். உடல் உறுப்புகளை வெட்டி விற்கும் க்ரூப் ஏதோ கசாப்புக்கடை மெட்டீரியல்களை வைத்து இந்த வேலை செய்வது மாதிரி காட்டியிருப்பது கொடுமை. அதைவிட கொடுமை அந்த உடல்களை கருவாடு மாதிரி உப்புக்கண்டம் போட்டு அலமாரியில் வில்லன் அடுக்கி வைப்பது. கதைக்கு சம்பந்தமேயில்லாமல் வரும் இந்தக் காட்சிகளை கிளைமேக்ஸில் புத்திசாலித்தனமாக(?) இண்டர்நேஷனல் வில்லனுடன் 'கனெக்ட்' செய்வதில்தான் கேப்டனின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

இண்டர்வெல்லுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கேப்டன் கிளம்புகிறார். தெரிந்தோ, தெரியாமலோ என்ன கருமமோ. அல்பேனிய அகதிகளை அசிங்கப்படுத்தி கதையில் சில காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். இந்தியா உலகின் நெ.1 நாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டுபிடிக்கிறார். ஒட்டுமொத்தமாக அழிக்கிறார். உலகமே விருதகிரியைப் பார்த்து வியந்து நிற்கிறது. சுபம்.

இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளிலும் தமிழக போலிஸின் ஏ.டி.ஜி.பி.யான விருதகிரியை படத்தில் எல்லாருக்குமே தெரிகிறது. நம்மூரு இண்டலிஜெண்ஸ் ஐ.ஜி. ஜாபர்சேட்டை மடிப்பாக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியமாட்டேன் என்கிறது ஏனென்று தெரியவில்லை. படத்தில் கேப்டன் சோலோவாகவே வருகிறார். அவருக்கு ஜோடி இருந்திருந்தால் டான்ஸ், ரொமான்ஸ் என்று ஆட்டம் அருமையாக களைகட்டியிருக்கும். இந்த வாய்ப்பினை ஏனோ கேப்டன் புறந்தள்ளியிருக்கிறார். குடும்ப அரசியலை வசனங்களில் கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே விளாசுகிறார்கள். டைட்டிலில் கேப்டன், கேப்டனின் மனைவி, கேப்டனின் மச்சான், கேப்டனின் மகன்கள் என்று எல்லோரது போட்டோக்களும் காட்டப்படுகிறது.

உங்களுக்கு கேப்டனை பிடித்தால், விருதகிரியையும் பிடிக்கும்.

கலைஞருக்கு பெண்சிங்கம். கேப்டனுக்கு விருதகிரி.

கேப்டன் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு, அவசர அவசரமாக ஹாலிவுட்டில் இதே கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தப் படம் குறித்த தகவல்கள் இங்கே.

விருதகிரி திரைக்கதை பாணியிலேயே கேப்டனின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக ஒரு மொக்கைச்சாமியால் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன டெர்ரர் சாம்பிள் இங்கே.

9 டிசம்பர், 2010

ராஜா மாதிரி வாழணும் தம்பி..


மதுரை. புதுநத்தம் ரோடு. பாண்டி ஓட்டல் பின்புறம். பெருமழைக்கு முன்பான சுரீர் வெயில். நாக்கு வறண்டுப்போய் இருசக்கர வாகனத்தை நாம் ஓரங்கட்டியது ஒரு இளநீர் கடை முன்பு. கூரை வேய்ந்திருந்த கடையில் விற்பனை 'தூள்' பறந்து கொண்டிருந்தது.

"செவ்விளநியா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்"

"எளநி நிறைஞ்சிருக்குறா மாதிரி ஒரு வழுக்கையைப் போடுங்கண்ணேய்"

"பாதி எளநி, பாதி தேங்காய் இருக்குறதா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்" – வயசு வித்தியாசமில்லாமல் 'மதுர'யில் எல்லாருமே அண்ணேய்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

ஒரு இளநீரை உறிஞ்சிக்கொண்டே வியாபாரியை நோட்டமிட்டோம். ஏதோ ஒரு வித்தியாசம். குடித்து முடித்து நூறு ரூபாய் நோட்டை நீட்டினோம்.

தடவிப் பார்த்து வாங்கியவர், "நூறு ரூவாய்ங்களா தம்பி?" என்று கேட்டு, பணப்பெட்டியில் இருந்து மீதி எண்பத்து ஐந்து ரூபாயை கச்சிதமாக எடுத்துக் கொடுத்தார்.

ஆம். இளநீர் வியாபாரம் செய்யும் ராஜா பார்வை சவால் கொண்டவர். முற்றிலுமாக பார்வை தெரியாது. நன்றாக பார்க்க கூடியவர்களுக்கே இளநீர் வெட்டித் தருவது சவால் தரும் வேலை. வாடிக்கையாளர் கேட்கும் வகையில் நல்ல இளநீரை 'பார்த்து' எடுக்க வேண்டும். 'பார்த்து' வெட்டித் தர வேண்டும். கூர்மையான கத்தி. கொஞ்சம் தடுமாறினாலும் விரல்கள் எகிறிவிடும்.

ராஜா எப்படி சமாளிக்கிறார்?

"1974ல் இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சேனுங்க. இப்போ 54 வயசு ஆவுது. அப்போவெல்லாம் நல்லாதான் பார்வை தெரிஞ்சுது. கொஞ்ச வருஷத்துலே சாயங்காலத்துலே மட்டும் கண்ணு மங்கும். சரியா கவனிக்காமே விட்டுட்டேன்.

திடீர்னு பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா மங்கி சுத்தமா பார்வை தெரியாம போயிடிச்சி. பார்வை இல்லாதவங்க குறிப்பிட்ட சில வேலைகளைதான் செய்வாங்க. எனக்கு அந்த வேலை எதுவும் தெரியாது. தெரிஞ்ச வேலையை அப்படியே இத்தனை வருஷமா தொடர்ந்துட்டேன். 'கண்ணு பார்க்குது, கை செய்யுது' ஒரு பழமொழி சொல்வாய்ங்க. நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன், இப்பவும் செய்யுறேன். எங்கிட்டே இளநி வாங்கி குடிக்கிறவங்களுக்கு மத்த கடைக்கும் இந்த கடைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே?" என்கிறார்.

இளநீர் வெட்டித் தருவது மட்டுமல்ல. வண்டியை வாடகைக்கு பிடித்து தோப்புகளுக்குச் சென்று சரக்கு கொள்முதல் செய்வது வரை இவரே செய்கிறார். வியாபாரத்தில் உதவிக்கு அவ்வப்போது இவருடைய மனைவியும், அண்ணன் மகனும் வருவதுண்டு.

ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள். உறவினர் வீட்டில் படிக்கிறார்கள். வீரபாண்டி ரோடு, ஊமச்சிக்குளத்தில் குடிசை வீடு. "எங்க அக்கம் பக்கத்து வீடுங்களுக்கு எல்லாம் இலவசப் பட்டா கொடுக்க எழுதிக்கிட்டுப் போயிருக்காங்க. நாங்க வியாபாரத்துக்குப் போயிட்டதாலே எங்க பேரு லிஸ்ட்டுலே சேர்க்க முடியலை" என்று இருப்பிடப் பிரச்சினையை சொல்கிறார் ராஜாவின் மனைவி.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் இளநீர் வியாபாரம் நன்கு சூடு பிடிக்கும். மற்ற மாதங்களில் கொஞ்சம் 'டல்'தான். மழைக்காலங்களில் சுத்தம். கோடையில் சேமித்து, மழையில் உண்ணும் எறும்பு பாணி வாழ்க்கை. குடும்பப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜாவின் மனைவி வீட்டுவேலை செய்கிறார்.

ராஜாவுக்கு பார்வை இல்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு வேண்டிய வகையை கையால் தடவிப் பார்த்தே, உணர்ந்து எடுத்துத் தரும் அனுபவ ஆற்றல் ராஜாவுக்கு வாய்த்திருக்கிறது. இளநீர் குடிக்க ராஜா கடையை தேடி வரும் ரெகுலர் கஸ்டமர்களும் உண்டு.

இந்த வியாபாரத்தில் அவருக்கு ஒன்றே ஒன்றுதான் பிரச்சினை. அதிகாரப் பதவியில் இருக்கும் சிலர். அவ்வப்போது கடைக்கு வந்து ஓசியில் இளநீர் குடித்துவிட்டு போவார்கள். இருபத்தைந்து ரூபாய்க்கு இளநீர் குடித்துவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டுவார்கள். "சாரு யாருன்னு தெரியுமில்லே.. ரவுண்ட்ஸ் வர்றப்போ கடை இருக்காது!" என்று மிரட்டுவார்கள். சில நேரங்களில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்து கடையை பிய்த்துப் போட்டுவிட்டு போவார்கள்.

"எந்த வியாபாரத்துலேதான் தம்பி பிரச்சினை இல்லை? பிரச்சினைக்குப் பயந்தா வாழ முடியுமா? பார்வைதானே போச்சி. கைகால் நல்லாதானே இருக்கு. ராஜான்னு எனக்கு பேரு வெச்சிருக்காங்க. ராஜா மாதிரி வாழ்ந்து காட்டணுமில்லை?"

ராஜா கடையில் இளநீரை காசுக்கும், தன்னம்பிக்கையை இலவசமாகவும் வாங்கிக் கொண்டு வண்டியை எடுத்தோம். வெயிலின் வாட்டம் குறைந்திருந்தது.

(நன்றி : புதியதலைமுறை)