"செவ்விளநியா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்"
"எளநி நிறைஞ்சிருக்குறா மாதிரி ஒரு வழுக்கையைப் போடுங்கண்ணேய்"
"பாதி எளநி, பாதி தேங்காய் இருக்குறதா பார்த்து ஒண்ணு வெட்டிக் கொடுங்கண்ணேய்" – வயசு வித்தியாசமில்லாமல் 'மதுர'யில் எல்லாருமே அண்ணேய்தான்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.
ஒரு இளநீரை உறிஞ்சிக்கொண்டே வியாபாரியை நோட்டமிட்டோம். ஏதோ ஒரு வித்தியாசம். குடித்து முடித்து நூறு ரூபாய் நோட்டை நீட்டினோம்.
தடவிப் பார்த்து வாங்கியவர், "நூறு ரூவாய்ங்களா தம்பி?" என்று கேட்டு, பணப்பெட்டியில் இருந்து மீதி எண்பத்து ஐந்து ரூபாயை கச்சிதமாக எடுத்துக் கொடுத்தார்.
ஆம். இளநீர் வியாபாரம் செய்யும் ராஜா பார்வை சவால் கொண்டவர். முற்றிலுமாக பார்வை தெரியாது. நன்றாக பார்க்க கூடியவர்களுக்கே இளநீர் வெட்டித் தருவது சவால் தரும் வேலை. வாடிக்கையாளர் கேட்கும் வகையில் நல்ல இளநீரை 'பார்த்து' எடுக்க வேண்டும். 'பார்த்து' வெட்டித் தர வேண்டும். கூர்மையான கத்தி. கொஞ்சம் தடுமாறினாலும் விரல்கள் எகிறிவிடும்.
ராஜா எப்படி சமாளிக்கிறார்?
"1974ல் இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சேனுங்க. இப்போ 54 வயசு ஆவுது. அப்போவெல்லாம் நல்லாதான் பார்வை தெரிஞ்சுது. கொஞ்ச வருஷத்துலே சாயங்காலத்துலே மட்டும் கண்ணு மங்கும். சரியா கவனிக்காமே விட்டுட்டேன்.
திடீர்னு பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா மங்கி சுத்தமா பார்வை தெரியாம போயிடிச்சி. பார்வை இல்லாதவங்க குறிப்பிட்ட சில வேலைகளைதான் செய்வாங்க. எனக்கு அந்த வேலை எதுவும் தெரியாது. தெரிஞ்ச வேலையை அப்படியே இத்தனை வருஷமா தொடர்ந்துட்டேன். 'கண்ணு பார்க்குது, கை செய்யுது' ஒரு பழமொழி சொல்வாய்ங்க. நான் முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன், இப்பவும் செய்யுறேன். எங்கிட்டே இளநி வாங்கி குடிக்கிறவங்களுக்கு மத்த கடைக்கும் இந்த கடைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே?" என்கிறார்.
இளநீர் வெட்டித் தருவது மட்டுமல்ல. வண்டியை வாடகைக்கு பிடித்து தோப்புகளுக்குச் சென்று சரக்கு கொள்முதல் செய்வது வரை இவரே செய்கிறார். வியாபாரத்தில் உதவிக்கு அவ்வப்போது இவருடைய மனைவியும், அண்ணன் மகனும் வருவதுண்டு.
ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள். உறவினர் வீட்டில் படிக்கிறார்கள். வீரபாண்டி ரோடு, ஊமச்சிக்குளத்தில் குடிசை வீடு. "எங்க அக்கம் பக்கத்து வீடுங்களுக்கு எல்லாம் இலவசப் பட்டா கொடுக்க எழுதிக்கிட்டுப் போயிருக்காங்க. நாங்க வியாபாரத்துக்குப் போயிட்டதாலே எங்க பேரு லிஸ்ட்டுலே சேர்க்க முடியலை" என்று இருப்பிடப் பிரச்சினையை சொல்கிறார் ராஜாவின் மனைவி.
பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் இளநீர் வியாபாரம் நன்கு சூடு பிடிக்கும். மற்ற மாதங்களில் கொஞ்சம் 'டல்'தான். மழைக்காலங்களில் சுத்தம். கோடையில் சேமித்து, மழையில் உண்ணும் எறும்பு பாணி வாழ்க்கை. குடும்பப் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜாவின் மனைவி வீட்டுவேலை செய்கிறார்.
ராஜாவுக்கு பார்வை இல்லை என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு வேண்டிய வகையை கையால் தடவிப் பார்த்தே, உணர்ந்து எடுத்துத் தரும் அனுபவ ஆற்றல் ராஜாவுக்கு வாய்த்திருக்கிறது. இளநீர் குடிக்க ராஜா கடையை தேடி வரும் ரெகுலர் கஸ்டமர்களும் உண்டு.
இந்த வியாபாரத்தில் அவருக்கு ஒன்றே ஒன்றுதான் பிரச்சினை. அதிகாரப் பதவியில் இருக்கும் சிலர். அவ்வப்போது கடைக்கு வந்து ஓசியில் இளநீர் குடித்துவிட்டு போவார்கள். இருபத்தைந்து ரூபாய்க்கு இளநீர் குடித்துவிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டுவார்கள். "சாரு யாருன்னு தெரியுமில்லே.. ரவுண்ட்ஸ் வர்றப்போ கடை இருக்காது!" என்று மிரட்டுவார்கள். சில நேரங்களில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்து கடையை பிய்த்துப் போட்டுவிட்டு போவார்கள்.
"எந்த வியாபாரத்துலேதான் தம்பி பிரச்சினை இல்லை? பிரச்சினைக்குப் பயந்தா வாழ முடியுமா? பார்வைதானே போச்சி. கைகால் நல்லாதானே இருக்கு. ராஜான்னு எனக்கு பேரு வெச்சிருக்காங்க. ராஜா மாதிரி வாழ்ந்து காட்டணுமில்லை?"
ராஜா கடையில் இளநீரை காசுக்கும், தன்னம்பிக்கையை இலவசமாகவும் வாங்கிக் கொண்டு வண்டியை எடுத்தோம். வெயிலின் வாட்டம் குறைந்திருந்தது.
(நன்றி : புதியதலைமுறை)
நல்லாருக்கு பாஸ்! தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு!
பதிலளிநீக்குநான்கூட தலைப்பை பாத்துட்டு பயந்துட்டேன், அந்த 'ராசா' வைத்தான் புகழ்ந்து எழுதியிருக்கீங்களோன்னு! :-))
// ராஜா மாதிரி வாழ்ந்து காட்டணுமில்லை?//
பதிலளிநீக்குநிச்சயமாக ராஜாதான்.
இப்படியும் ஒரு ராஜா!!
பதிலளிநீக்குபார்வை தெரியாத உங்களுக்கு அரசாங்க அதிகாரியின் பவருமா தெரியாமல் போய்விட்டது. வெட்டி கொடுங்க அண்ணே ஓ.சி இளநீ!!! உங்க மூத்திரத்த கலந்து கொடுத்தாலும் அவங்களுக்கு புத்தி வராது.
பதிலளிநீக்குவாழ்க அரசாங்க ஊழியன்.
உங்கள் தொண்டுக்கு தலை வணங்குகிறோம்.
அருமையான கட்டுரை லக்கி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
//பார்வை சவால்//
பதிலளிநீக்குபார்வைக்குறைவு என்ற சொல் பொருத்தமாகவே உள்ளது
ஆங்கிலத்தில் BLIND என்பதற்கு பதில் Visually Challenged என்று கூறுகிறார்கள்
நாமும் குருடு என்பதற்கு பதில் பார்வைக்குறைவு என்றே சொல்லலாம்
--
பிற உடல் குறைபாடுகளுக்கும்
கேட்கும் திறன் குறைவு
பக்கவாதம்
காலிரண்டும் செயலிழந்த நிலை
இளம்பிள்ளை வாதம் என்று பல பொருத்தமான சொற்கள் உள்ளன
--
உடல் ஊனமுற்றவர் Handicapped என்ற சொல் மாறி Physcially Challenged என்று வந்தது
அதை மெய்ப்புலம் அறைகூவலர் என்று சிலர் மொழி பெயர்த்தனர்
தற்பொழுது அதற்கு பதில் differently abled மாற்றுத்திறனாளி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது
தமிழக அரசில் கூட Physically handicapped welfare / உடல் ஊனமுற்றோர் நலத்துறை என்பதை முதலில் Welfare of the
Disabled என்று மாற்றி தற்பொழுது 19.03.2010 முதல் welfare of differently abled மாற்றுத்திறனாளி நலத்துறை என்று மாற்றி விட்டார்கள்.
அந்த துறையில் தற்போதைய அமைச்சர் யார் என்று தெரியும் தானே
தெரியவில்லை என்றால் இங்கு பார்க்கவும்
Spectrum Rajavai intha post padikka sollunga
பதிலளிநீக்குநான் நம்ம ராஜாவோனு நினைத்தேன்
பதிலளிநீக்குஅந்த ராஜா படித்தால் அப்ரூவர் ஆகிவிடுவார் . . .
பதிலளிநீக்குநல்ல பதிவு . . . நன்றி . . .
Perula onnum illa but engairuthalum manethan maravillai!
பதிலளிநீக்குஅற்புதமான கட்டுரை. அந்த மனிதர் சொன்ன வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தங்கள். அருமை நண்பரே..
பதிலளிநீக்குஇவருக்கு சமிபகாலத்தில் தான் கண்பார்வை போனதாக சொல்லியிருக்கிறார். இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன... அதனை பற்றி முழுமையாக தெரிந்த நபர் யாராவது இவருக்கு உதவி செய்யலாம்... நானும் கண்டிப்பாக இதற்க்கு முயற்சி செய்கிறேன்.
பதிலளிநீக்குஉழைப்புக்கு உதாரணம் இந்த ராசா...