18 டிசம்பர், 2010

சாரு நிவேதிதாவின் தேகம்!


சினிமாவில் எந்திரனுக்கு என்ன 'ஹைப்' இருந்ததோ, அதே அளவில் சாருவின் 'தேகம்' நாவலுக்கும் இலக்கிய வட்டத்தில் 'ஹைப்' நிச்சயமாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் சாரு எழுதிய முதல் நாவல் இதுவென்று தோன்றுகிறது. முப்பது வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் சாரு இதுவரை நான்கு நாவல்கள்தான் எழுதியிருந்தார். தேகம் ஐந்தாவது. ஒரு மாதத்துக்குள் எழுதப்பட்ட நாவல். இந்த அவசரம் கதையின் போக்கில் நன்றாகவே வெளிப்படுகிறது.

நிச்சயமாக இது முழுக்க 'வதை'யைப் பற்றிய நாவல்தான். நாவலின் தொடக்கம் உடல் வதை குறித்ததாக இருக்கிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலமாக 'மனவதை' குறித்த சித்தரிப்புகளுக்கு மாறிவிடுகிறது. வதையும், அதன் விளைவான வாதையும் நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் முன்னுக்குப் பின்னாக நான்லீனியராக சொல்லப்படுகிறது. வழக்கமான சாருவின் 'கொண்டாட்டம்' இதிலும் உண்டு. ஒரு விஷயத்தை ஒருவன் கொண்டாடும்போது, அதே விஷயம் இன்னொருவனை வதைப்படுத்துகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி அல்லது பட்டர்ஃப்ளை விளைவு அல்லது ஏதோ ஒரு கருமம்.

புரொபஷனல் கில்லர் மாதிரி, நாயகன் தர்மா புரொபஷனல் டார்ச்சர். 'நாய்' பாஸ்கருக்காக வேலை பார்க்கிறான். இந்த வேலையை தர்மா ஏன் விரும்பி ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் உன்னிப்போடு முழுவீச்சில் செய்கிறான்? பிளாஷ்பேக். சமூகத்தால் 'டார்ச்சர்' செய்யப்பட்டவன் தர்மா. டிரான்ஸ்ஜெண்டராக, ஜிகிலோவாக, ஜேப்படித்திருடனாக, அடியாளாக, எழுத்தாளனாக.. எப்படி எப்படியோ வதைப்பட்டிருக்கிறான். மற்றவர்களை வதைத்திருக்கிறான். எக்சிஸ்டென்ஷியலிஸமும், ஃபேன்ஸி பனியனும் சூர்யாதான் தேகத்தின் தர்மா. பாத்திரம் மட்டுமல்ல. பல சித்தரிப்புகளும் கூட (குறிப்பாக மலம் அள்ளும் பிளாஷ்பேக்) ஏற்கனவே சாருவின் படைப்புகளில் பலமுறை வாசித்ததுதான். எனவே ஒரு புதிய நாவலை வாசிக்கும் அனுபவம் கைகூடவில்லை.

சாரு சித்தரித்திருக்கும் பிரான்ஸ் செலின் பாத்திரம் ஓர் அற்புதம். செலின் - தர்மா தொடர்புடைய அத்தியாயங்களில் என்ன வதை இருக்கமுடியும், கவிதையான ரொமான்ஸ்தானே பிரதானமாக இருக்கிறது என்று முதல் வாசிப்பில் தோன்றியது. குறிப்பிட்ட அந்த சில அத்தியாயங்களை மீள்வாசித்ததில் செலின், தர்மாவை செய்யும் ரிமோட் டார்ச்சர் பளிச்சிடுகிறது. தன்னை ஆண் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பெரிய வதையாக என்ன இருக்க முடியும்? பாலியல்ரீதியாக ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியாததுதான். செலின் அந்த வதையை தர்மாவுக்கு செய்கிறாள். அவளது உடல் தர்மாவுக்கு 'எழுச்சி'யை ஏற்படுத்துவதில்லை. வேறு வகை பாலியல் உத்திகளால் அவளை திருப்திபடுத்த நினைக்கிறான் தர்மா. அதற்கு செலின் ஒப்புக்கொள்வதில்லை. குற்றவுணர்ச்சியால் குன்றிப்போகும் தர்மாவின் வாழ்வில் இருந்து திடீரென்று காணாமல் போகிறாள் செலின்.

முதல் நூறு பக்கங்கள் நிச்சயமாக சுவாரஸ்யம். அடுத்த 80 பக்கங்கள்தான் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போகிறது. நண்பர்கள், நண்பிகள். நண்பிகளின் நண்பர்கள். மது, மாது, மங்கை, மயக்கம், இத்யாதி, இத்யாதி.

செலினால் தனக்கு கிடைத்த வதைகளை நேஹாவுக்கு தருகிறான் தர்மா. நேஹா தர்மாவுக்கு எழுதும் காம-காதல் ரசம் சொட்டும் ஈ-மெயில்கள் அச்சு அசல் காமரூபக் கதைகள். தர்மாவின் 'புறக்கணிப்பு' என்ற வதையால், மனம் பிறழ்கிறாள் நேஹா. அந்த அத்தியாயம்தான் நாவலின் ஹைலைட். கத்தியின்றி, ரத்தமின்றி உச்சபட்ச வாதையை தரும் வதை. சீரோ டிகிரியின் முதல் அத்தியாயத்துக்கு இணையான கிளாசிக் ரைட்டிங். அவ்ளோதான். அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை.

காமரூபக் கதைகள் தவிர்த்து, சாருவின் வேறு எந்த நாவலையும் விட சிறப்பாக 'தேகம்' வந்துவிடவில்லை. அதே நேரத்தில் ராஸலீலாவுக்குப் பிறகு கொஞ்சம் சவசவ என்று (சில சிறுகதைகள் தவிர்த்து) புனைவு எழுதிக்கொண்டிருந்த சாரு மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வர 'தேகம்' உதவியிருக்கிறது. இந்த ஃபார்ம் அடுத்து அவர் எழுதவிருக்கும் நாவல்களை மாஸ்டர்பீஸ்களாக மாற்ற உதவும். அவரது பழைய சாதனைகளை அவரே மீண்டும் முறியடிக்க வேண்டும் என்பதுதான், அவரது வாசகர்களின் விருப்பம்.

ஏழு புத்தகங்கள் வெளியிடப்பட்ட முதல் நாளே அரங்கில் 65,000/- ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக கேள்விப்பட்டேன். நிச்சயமாக சாரு தமிழ் இலக்கியத்தின் பெஸ்ட் செல்லராக மாறிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் 'தேகம்' நிச்சயமாக அவரது மற்ற நூல்களை விட அதிகம் விற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மற்ற நூல்களை விட எந்த விதத்திலும் 'தேகம்' சிறந்ததில்லை.

நூல் : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை

14 கருத்துகள்:

  1. //இந்த அவசரம் கதையின் போக்கில் நன்றாகவே வெளிப்படுகிறது.//
    // ஒரு விஷயத்தை ஒருவன் கொண்டாடும்போது, அதே விஷயம் இன்னொருவனை வதைப்படுத்துகிறது. //
    //சீரோ டிகிரியின் முதல் அத்தியாயத்துக்கு இணையான கிளாசிக் ரைட்டிங். அவ்ளோதான். அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை.//

    //நிச்சயமாக சாரு தமிழ் இலக்கியத்தின் பெஸ்ட் செல்லராக மாறிக் கொண்டிருக்கிறார். //

    தெளிவான விமர்சன வரிகள்.
    நன்றி யுவகிருஷ்ணா..

    பதிலளிநீக்கு
  2. "அவசர அவசரமாக நாவல் முடிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை"

    read again... u will understand...

    உண்மையில் இது ஒரு சிறந்த நாவல்... இலக்கிய கோட்பாடுகள்,சாருவின் பழைய எழுத்துக்கள் என எல்லாவற்றையும் மறந்து விட்டு , இன்னொரு முறை படித்து பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  3. இந்த கருமத்துக்கு என்னய்யா ஆள் ஆளுக்கு பப்ளிசிட்டி கொடுக்குறிங்க ,பிரான்ஸ் நாவல் ஆசிரியர்...மர்க்கி தே சேட் டின் மலிவான காபி தான் சாரு,,,,வதை பற்றி இவர் எழுதிருப்பது எல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டது.மர்க்கி ஆபாசமாக எழுதுவதாக கூறி சிறையில் போட்டது.பிரான்சு அரசாங்கம்.சாரு ஒரு நகல்.அது போக அவருடைய பழைய நாவல்களில் எல்லாம் எடுத்து ரீமிக்ஸ் செய்து வேறு இருக்கிறார்.சரக்கு காலி என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  4. பார்வையாளன்!

    உங்கள் விமர்சனம் படித்தேன். நன்றாக இருக்கிறது.


    அன்புள்ள அனானி!

    எனக்கு பிரெஞ்சு தெரியாது. மர்க்கி தே சேட்டை வாசிக்கும் திட்டமும் இல்லை. சாருவையே கொண்டாடிவிட்டு போகிறேன்.

    பொத்தாம் பொதுவாக இதுபோன்ற பின்னூட்டத்தை இடுவதைவிட மர்க்கியின் ஒரு படைப்பை முன்வைத்து, சாரு எதையெல்லாம் காப்பி அடித்தார் என்று எழுதினீர்கள் என்றால் உங்கள் குற்றச்சாட்டுக்கு ஒரு கெத்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. நூறு சதம் ஒத்துப்போகிறேன். :)
    எனது விமர்சனம் இங்கே : http://wp.me/pjgWz-4y

    பதிலளிநீக்கு
  6. அது போக அவருடைய பழைய நாவல்களில் எல்லாம் எடுத்து ரீமிக்ஸ் செய்து வேறு இருக்கிறார்."

    ஒரே சம்பவம் காந்தி படத்திலும் வரும்.. அம்பேத்கர் படத்திலும் வரும்..
    ஜின்னா படத்திலும் வரும்..

    ஆனால் அர்த்தம் வேறு வேறு..
    அதே போலத்தான் இதிலும்... இந்த நாவலின் அடி நாதம் வேறு..

    அந்த அடிப்படையில் சம்பவங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    சம்பவம் முக்கியம் அல்ல என்று நாவலை ஆழமாக படித்தால் புரியும்...

    ஒரு மணி நேரம் யோசித்தால், ஒரு சம்பவத்தை இன்னொன்றாக மாற்றி கற்பனை செய்து எழுத முடியாதா?

    இது அவ்வகையான ஃபிக்‌ஷன் இல்லை...

    *********************
    தமிழ் சினிமா மாதிரி ஹேப்பி எண்டிங் கொடுக்க வேண்டியதான அவசியம் என்னவென்று புரியவில்லை

    யுவா,,

    இதைப்பற்றி விரிவாக பேச வேண்டும்... பிறகு எழுதுகிறேன்..

    இது சாதாரண ஹேப்பி எண்டிங் அல்ல என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. உங்களை போன்ற மேலோட்டமான வாசகர்கள் தான் சாருவை தூக்கி பிடிக்கிறீங்க ,காபியை விடுங்க...அவர் புதியதாய் நாவலில் என்ன சொல்கிறார்.ராசா லீலா பெருமாள் பான்சி பனியன் சூர்யா தேகம் தர்மா எல்லோரும் ஒரே ஆள்தான்...பணக்காரர் களிடம் எச்ச்சகுடி குடிச்சதைதனே நாவலில் புலம்பி தீர்க்கிறார்.பெண்கள் இவர் வலையில் மட்டும் துள்ளி குதிக்கிறர்களா ...கொண்டடுகிறேர்களா நீங்கள் பெரிய பாசிசிட் போல தெரியுதே...

    பதிலளிநீக்கு
  8. அரசு வேலையில் இருந்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்ததை வெளிப்படையாக எழுதியத போது அதை கேலி செய்ய முடியும், ஆனால் ஃப்ரெஞ் தெரியாது என்று ஜால்சாப்பு சொல்லி ஒடிவிட முயல்கிறீர்.

    ஐயன்மீர், சாருவை நேருக்கு நேரே இதை நான் கேட்டதும் உண்டு. நீர் அறீவிரோ!

    சாரு மிகும் இடங்கள் தமிழுக்கு தெரியும் உமக்கு ?

    பதிலளிநீக்கு
  9. லக்கி,

    //எனக்கு பிரெஞ்சு தெரியாது. மர்க்கி தே சேட்டை வாசிக்கும் திட்டமும் இல்லை. சாருவையே கொண்டாடிவிட்டு போகிறேன்.//
    மர்க்கி தே சேட்டை வசிக்க பிரெஞ்சு தெரிய வேண்டியதில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு நெட்டில் கிடைக்கிறது. அவரின் 120 days of sodom படித்துப்பாருங்கள். 100 சாரு சேர்ந்தாலும் வதைபற்றி அப்படி எழுதமுடியாது. Sadism என்ற சொல்லே அவருடைய பேரிலிருந்து வந்ததுதான்.

    ஈஸ்வரன்

    பதிலளிநீக்கு
  10. ஒரு நல்ல நாவலை தவற விட்டுவிடாதீர்கள் என ஒரு நண்பனாக கேட்டு கொள்கிறேன் . விரிவான விளக்கத்தை பிறகு எழுதுவேன்

    பதிலளிநீக்கு
  11. அப்படி போடுங்க ஈஸ்வரன்....எதையும் தெரிந்து கொள்ள தேவை இல்லை என்றெல்லாம் இந்தகாலத்தில் தப்பிக்க முடியாது லக்கி .சாரு எத்தனை பேரை ஒட்டி இருப்பார்...அவர் செய்தால் மட்டும் நியாயமா?

    பதிலளிநீக்கு
  12. தனது அனுபவத்தை மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்பதுதான் லக்கி போன்றவர்களின் குற்றசாட்டு .அதற்கு விரிவான பதில் அளிக்க இருக்கிறேன் . காப்பி என சொல்வதெல்லாம் நாவலை படிக்காமல் பேசுவது. வதை பற்றிய நாவல் என கேள்விபட்டுவிட்டு , சாடிஸ்ட் பற்றிய நாவல் என முடிவு செய்துவிட்டீர்கள் . இதற்கு வாதம் எதுவும் செய்யமுடியாது . புத்தகம் படியுங்கள் என்பதே என் பதில் . சிறிய புத்தகம் . ஈஸியா படிக்கலாம்

    பதிலளிநீக்கு
  13. இங்கே புத்தகங்கள் படிப்பவர்கள் குறைவு என்பதால் சாரு போன்றவர்கள் காப்பி அடித்தாலும் தெறிவதில்லை, அதுவே ஒரு திரைப்படம் என்றம் உடனே எழுதிவிடுவார்கள், குறை கூறியே தன்னை பெரிய அறிவாளி என்று பீத்திக்கொள்ளும் நமது உலக சினிமா அறிவாளிகள் சாரு உள்பட. படத்தின் சாரத்தையே புரிந்து கொள்ளாமல் ஆயித எழுத்து திரைப்படத்தை ஆமிரோஸ் பெரோஸ் படத்தின் காப்பி என்று உளறியவர்தான் சாரு.எந்திரன் திரைப்படத்தை நீங்கள் கலைப்படைப்பு என்று சொல்லுவீர்கள் என்றால் தேகம் நாவலையும், சாருவையும் தூக்கி வைத்து கொண்டாடலாம்.

    பதிலளிநீக்கு