சேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அரசுசாரா நிறுவனங்களை NGO (Non Government Organisation) என்கிறார்கள். இதைப்போலவே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை DPO (Disabled People Organisation) என்பார்கள். தமிழகத்தில் ஏராளமான என்.ஜி.ஓ.க்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், டி.பி.ஓ.க்கள் மட்டுமே முழுக்க முழுக்க அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக திட்டப் பணிகளை முன்னெடுப்பவை.
எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.
இதுபோன்ற தன்னார்வ சேவை நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு கோவையில் இருந்து செயல்பட்டு வருகிறது. டாவோ (DAVO - Disability Alliance of Voluntary Services) என்று அவ்வமைப்புக்கு பெயர். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தன்னார்வு சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள, பயனர்களை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்துவதும் இவ்வமைப்பின் தலையாய பணிகளில் ஒன்று.
டாவோ அமைப்பின் கீழ் இயங்கும் UDIS (You and the Disabled) மன்றம் பல்வேறு செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது.
"மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்" என்கிறார் இம்மன்றத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சூரிய நாகப்பன்.
இந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய - மாநில திட்டங்கள், பல்வேறு அமைப்புகளின் கல்வி மற்றும் இதர சேவைகள் ஆகியவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை எப்படி பல்வேறு தளங்களில் இருந்து பெறுவது என்பதும் சொல்லித்தரப்படுகிறது. மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் என்று எதைப்பற்றி கேட்டாலும் இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும்.
UDIS ஹெல்ஃப் லைன் எண்கள் :
0422 2405551 / 0422 2648006 (அல்லது) 99445 56168
(நன்றி : புதிய தலைமுறை)
நல்ல பதிவு....
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் நன்றி
பதிலளிநீக்கு