17 டிசம்பர், 2010

ஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்!


ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல். பம்ப்செட். கால்நடைகள். பண்ணையார். ஆலமரம். நாட்டாமை. பஞ்சாயத்து. சொம்பு. அய்யனார் கோயில். பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல.

இங்கு வசிக்கும் அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி கையிருப்பாக இருக்கிறது.

மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால் இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில் இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்' என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின் திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் ஹூவாக்ஸி எப்ப்டி இருந்தது என்று.

சில வருடங்களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுரகிலோ மீட்டர்தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை. அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில். சம்பாதிக்கும் சொற்பப்பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப் போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார். எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் ஹூ ரென்பாவ். அந்த கிராம கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.

ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்தார். முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர் காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராமவாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும் கடுமையான உழைப்பினைத்தர முன்வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பதுதான் ஹூவின் திட்டம். இதுதான் உண்மையான 'சோஸலிஸம்' என்று அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டுமொத்தமாக பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

ஹூவாக்ஸி வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். ஜியாங்சூ மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான் இருக்கின்றன.

இன்று ஹூவாக்ஸி கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான மூலப்பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும் பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில் இருக்கும் தொழில்கள்.

ஹூ ரென்பா, பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில் எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக் குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு – இவைதான் ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூ ரென்பா.

ஹூ ரென்பா உருவாக்கியிருக்கு ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்தான் என்கிறபோதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர். இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில் வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக் கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும் மறுத்துவிட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை  ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம். வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள். அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப் படும். அடிப்படை சம்பளத்தில் இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒருமுறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதிகளையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகிவிட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சிக்கலானதாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொருவரும் 82 வயதான ஹூ ரென்பா மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஹூவாக்ஸி வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரின் நடைபாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

(நன்றி : புதிய தலைமுறை)

12 கருத்துகள்:

  1. ஏக்கமாக இருக்கிறது அந்த கிராமத்தை நினைக்கையில்...
    புதிய தலைமுறைக்கான உங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  2. சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
    (இப்படித்தான் மனச தேத்திக்க வேண்டியதாயிருக்கிறது)

    பதிலளிநீக்கு
  3. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்).

    இங்கே ஓய்வு பெற்றால் சண்டை தான் வரும் பதவி வராது

    இன்னும் பத்து ஆண்டுகளில் சந்திர மண்டலத்தில் தான் இதெல்லாம் நடக்கும்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை. புதிய தலைமுறைக்கு நன்றி. இதுபோன்ற தகவல்களைத் தேடித் தருவதில் பு.த.-வுக்கு நிகர் பு.த.-வேதான்.

    //அங்கேயும் வாரிசு அரசியல்தான்// -Punch Superb!

    *உண்மையான உழைப்புக்கு நிகரில்லை! என்று அவர்கள் நிரூபித்து விட்டார்கள். தந்தை வழியிலேயே மகனும் நன்றாக செயல்பட்டால் சரிதானுங்கோ!


    உங்கள் அன்புள்ள,
    ஞெலிநரி வெய்யோன்

    http://goo.gl/RoMyo

    பதிலளிநீக்கு
  5. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி.
    இப்படி ஒரு வளர்ச்சி அவசியமா?

    பதிலளிநீக்கு
  6. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி//

    ஒலிம்பிக்ஸில் சீனா அதிக பதக்கங்களை வெல்வதும் இதே டெக்னிக்கை பயன்படுத்தி தான்

    பதிலளிநீக்கு
  7. நன்றி -பல்லவி ஐயர் , சீனா - விலகும் திரை புத்தக்த்திலிருந்து.

    பதிலளிநீக்கு
  8. உங்களால் எப்படிதான் இப்படி செய்தி திரட்டமுடிகின்றதோ !
    You are a freelance writer with excellent writing skills.

    பதிலளிநீக்கு