அது ஆச்சி ஒரு பதிமூன்று, பதினான்கு வருஷம். அப்போது எல்டாம்ஸ் சாலையில் ஒரு கிராபிக்ஸ் சென்டரில் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆறு மணி ஆனாலே எஸ்.ஐ.ஈ.டி பேருந்து நிலையத்துக்கு வந்துவிடுவேன், ஃபிகர் வெட்டுவதற்காக. கையில் ஒரு இந்தியாடுடேவையோ, விகடனையோ, குமுதத்தையோ சும்மா ஸ்டைலுக்கு சுருட்டி வைத்திருப்பேன். அன்று கையில் எதுவும் புத்தகமில்லை. அப்போதெல்லாம் எஸ்.ஐ.ஈ.டி பஸ் ஸ்டேண்டில் வரிசையாக நான்கைந்து பெட்டிக்கடைகள் இருக்கும். பத்திரிகைகளும் விற்பார்கள். நான் சைட்டிக் கொண்டிருந்த அனகாபுத்தூர் விஜயலஷ்மி வர கொஞ்சம் தாமதமானதால், ஏதாவது பத்திரிகை வாங்கிப் படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். லயன் காமிக்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. டைட்டில் : ஹாலிவுட்டில் ஜாலி.
புத்தகத்தை வாங்கி, சென்டர் பின்னை வாயால் கடித்து திறந்தேன். நான்கைந்து பக்கங்களை சும்மா புரட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான். அந்த மாயச்சுழலுக்குள் ஒட்டுமொத்தமாய் வசம் இழந்தேன். அனகாபுத்தூர் விஜயலட்சுமி வந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்ததும் (ஒரு நம்பிக்கைதான்) தெரியாது. நான் ஏறவேண்டிய 6.50 பஸ்ஸான F51 கடந்துச் சென்றதும் தெரியாது. பொது இடமென்றும் பாராமல், பைத்தியக்காரன் மாதிரி எனக்கு நானே அவ்வப்போது சத்தமாக வாய்விட்டு சிரித்து, குட்டிச்சுவரில் உட்கார்ந்து வாசித்து முடித்தேன் ஹாலிவுட்டில் ஜாலியை.
கதை மிகவும் சிம்பிள். செவ்விந்திய கிராமம் ஒன்றின் சீஃப் தம் இனத்தின் சீரிய கலாச்சாரத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில், ஒரு சினிமாப்படம் எடுக்க ஹாலிவுட்டுக்கு வருகிறார். அப்போதெல்லாம் ஹாலிவுட் படங்களில் செவ்விந்தியர்களை கொடூரமான வில்லன்களாக காட்டி வந்தார்கள். நம் சீஃப் எடுக்கும் படத்தில் செவ்விந்தியர்கள்தான் ஹீரோக்கள். அவர்கள் வில்லையும், அம்பையும் வைத்து, துப்பாக்கி சுமந்த வெள்ளையர்களை சின்னாபின்னம் ஆக்குகிறார்கள். போர்க்களத்துக்கு நடுவே மலரும் பூவாய் ஒரு காதல். படா சீரியஸான கதையை எடுக்க நினைக்கிறார் சீஃப். இதற்காக இவர் ஒரு தயாரிப்பாளரை தேடுவது, இயக்குனரை நியமிப்பது, ஹீரோ – ஹீரோயின்களை கண்டறிவது என்று காமெடியாக கதை நகரும். இறுதிக்காட்சி மட்டும் சென்னை-600028 மாதிரி ஆண்டி-க்ளைமேக்ஸ்.
'ஹாலிவுட்டில் ஜாலி'யை கிட்டத்தட்ட ஒன்றரை decade கடந்துவிட்ட நிலையிலும் அவ்வப்போது நினைத்து சிரித்துக் கொள்வேன். எத்தனை முறை இந்தப் புத்தகத்தை திரும்ப திரும்ப வாசித்திருக்கிறேன் என்பதற்கு கணக்கு வழக்கே இல்லை. ஒவ்வொரு முறை புரட்டும்போதும், முந்தைய வாசிப்பில் 'மிஸ்' செய்துவிட்ட புதிய வஸ்து ஒன்றினை மூழ்கி, கண்டெத்து மகிழ்ந்திட முடியும்.
- * - * - * - * - * - * - * - * - * - * -
பண்ணிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கோபால்வர்மா நேரடியாக ஒரு தெலுங்குப் படத்தை இயக்கி, கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறார். 'கதா, ஸ்க்ரீன்ப்ளே, தர்சாகத்வம் – அப்பளராஜூ' (கதை, திரைக்கதை, இயக்கம் – அப்பளராஜூ). சுருக்கமாக கே.எஸ்.டி. அப்பளராஜூ.
இப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு அறிமுகமே தேவையில்லை. வடஇந்தியாவில் மதிக்கப்படும் தென்னிந்திய ஆளுமைகளில் மணிரத்னத்துக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அடுத்த இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகரான சுனில்தான் இந்தப் படத்தின் ஹீரோ. அவர் நாயகனாக நடித்த முந்தையப் படம் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா சூப்பர்ஹிட். 1973ல் பிறந்த சுனிலுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். வழக்கமான கதைதான். விதவைத்தாய் பத்துப் பாத்திரம் தேய்த்து, தன் ஒரே மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார். மகன் டாக்டராகவோ, என்ஜினியராகவோ உருவெடுக்க வேண்டும் என்பது அவரது கனவு.
மகனுக்கோ சினிமாதான் உயிர். பள்ளிப் பருவத்திலேயே கிளாஸ் கட் அடித்துவிட்டு சிரஞ்சீவி படங்களை பார்க்க கிளம்பி விடுவார். சிரஞ்சீவிக்கு பிரபுதேவா அமைத்த நடன அசைவுகள் அனைத்தும் மனப்பாடம். சிரஞ்சீவி மாதிரியே ஆடி பயிற்சி செய்வார். இதனால் சுனில் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ. கலையுணர்ச்சி மிகுந்த சுனிலுக்கு படிப்பு கொஞ்சம் சுமார்தான். நன்றாக ஓவியம் வரைவார். பள்ளி முடிந்தவுடன் BFA படிக்குமாறு அவரது ஆசிரியர் ஒருவர் வழிகாட்டினார். ஆர்ட் டைரக்டராக சினிமாவுக்குள் நுழைந்துவிட முடியுமென்பதால் சுனில் சந்தோஷமாக கலைக்கல்லூரிக்குச் சென்றார்.
கல்லூரி முடிந்ததும் ஹைதராபாத்துக்கு படையெடுத்தார். ஜூனியர் டேன்ஸராக சில படங்களில் ஆடினார். முறையாக நடனம் பயில நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்தார். டோலிவுட்டின் கொடூரமான வில்லனாக மாறவேண்டும் என்பது அவரது கனவு. சிரஞ்சீவி அவரது துரோணர். எனவே அவரைப்போலவே வில்லன் டூ ஹீரோ ரூட்டை தேர்ந்தெடுத்தார். குருவைப்போலவே நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டார். ஆனால் துரதிருஷ்டமாக (அ) அதிர்ஷ்டவசமாக அவர் காமெடி நடிகர் ஆனார். சிரஞ்சீவியை மிமிக் செய்து (சில நேரங்களில் அவரைவிட சிறப்பாகவும்) சில படங்களில் ஹீரோவோடு, நடனம் ஆடினார். படிப்படியாக முன்னேறி 2006ல் 'அந்தால ராமுடு' படத்தில் ஹீரோ. போன வருடம் 'மரியாதை ராமண்ணா'. இந்த வருடம் 'கே.எஸ்.டி அப்பளராஜூ'.
வாசிக்கும்போது மிக சுலபமாக கடந்து விடலாம் சுனிலின் கதையை. ஆனால் இந்த பதினைந்து ஆண்டிலும், ஒவ்வொரு நொடியாக போராடி, போராடி, வீழ்ந்து, எழுந்து, எப்படியோ இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சுனில். ராம்கோபால் வர்மாவின் கதையும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான். சுனிலுக்கு சிரஞ்சீவி. ஆர்.ஜி.வீ.க்கு மணிரத்னம். இவர்களது கதையையே கொஞ்சம் பட்டி பார்த்து, மசாலா சேர்த்து ஒரு சூப்பர் ஹிட்லு சினிமாவாக்கி விட்டால் என்ன?
'கே.எஸ்.டி. அப்பளராஜூ' ஸ்க்ரிப்ட் ரெடி.
அமலாபுரம் அப்பளராஜூ ரம்பா தியேட்டரில் ஒரு தெலுங்குப் படத்தை விடுவதில்லை. அது எவ்வளவு த்ராபை படமாக இருந்தாலும் சரி. எப்படியாவது டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்பது அவன் கனவு. தேவதாஸ், சங்கராபரணம், கீதாஞ்சலி ரேஞ்சுக்கு ஒரு காவியத்தைப் படைத்துவிட வேண்டும் என்பது லட்சியம். 'நாயகி' என்கிற ஹீரோ ஓரியண்டட் சப்ஜெக்ட்டைத் தயார் செய்கிறான். அமலாபுரத்துக்கு ஜூட் விட்டுவிட்டு, ஹைதராபாத்துக்கு கிளம்புகிறான். ஓர் உப்புமா தயாரிப்பாளர் மாட்டுகிறார். ஏதேதோ கோல்-மால் செய்து, படைப்பு அடிப்படையில் ஆயிரம் சமரசங்களோடும், போராட்டங்களோடும் இறுதியாக 'நாயகி' வண்ணத் திரைக்கு வருகிறாள். ஆந்திராவின் அதிகபட்ச விருதான குர்ரம் விருது (குதிரை விருது – நந்தி விருதுக்கு மாற்றாக) அப்பளராஜூக்கு கிடைக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும், அவன் மட்டும் மனதுக்குள் அழுது வெளியே சிரிப்பதாக படம் முடிகிறது. ஏனெனில் காவியம் படைக்க நினைத்தவன், காமெடிப்பட இயக்குனர் ஆகிவிடுகிறான்.
தமிழில் வெளிவந்த 'வெள்ளித்திரை' பாணியில் படம் முழுக்க சினிமாவுக்குள்ளிருந்தே சினிமாவை கிண்டலடிக்கிறார் வர்மா. டோலிவுட்டின் ஒரு ஹீரோ பாக்கியில்லை. கவனமாக என்.டி.ஆரை மட்டும் தவிர்த்திருக்கிறார். ஹீரோக்கள் மட்டுமல்ல. ஹீரோயின், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், இசை அமைப்பாளர், பாடலாசிரியரில் தொடங்கி விநியோகஸ்தர்கள், கார்ப்பரேட் சினிமா நிறுவனங்கள், விமர்சன ஊடகங்கள் வரை ஓட்டு ஓட்டுவென செம ஓட்டு ஓட்டுகிறார். ஒவ்வொருவனும் அவனவனுக்கு ஹீரோ. உலகம் கோமாளியாக அவனைப் பார்த்தாலும் கூட. இந்த உளவியலை படத்தின் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்துகிறார். காமெடியனை ஹீரோவாகப் போட்டு, காமெடி காட்சிகளை நிறைத்திருந்தாலும் (பாடல் காட்சிகளும் கூட காமெடிதான்), 'கே.எஸ்.டி. அப்பளராஜூ' ஒரு சீரியஸ் சினிமா. தான் சார்ந்த துறையை, தன்னுடைய சொந்த அனுபவங்களின் வாயிலாக, இத்தனை ஆண்டுகள் கழித்து கேலியாகப் பார்க்கிறார் ராம்கோபால் வர்மா.
கேங்ஸ்டர் படங்களுக்குப் பெயர் போன இயக்குனர் காமெடிப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பதால் எதிர்ப்பார்ப்பு, டோலிவுட்டில் அதிரிபுதிரியாக இருந்தது. படத்தில் வர்மாவால் காயடிக்கப்பட்ட சினிமா விமர்சகர்கள், நிஜத்திலும் கொதித்துப் போயிருக்கிறார்கள். கே.எஸ்.டி.யை டார்டாராக கிழித்தெறிந்து விட்டார்கள்.
வெளியான முதல் நாளிலேயே கே.எஸ்.டி.க்கு அநியாயத்துக்கு கெட்ட பேர். இரண்டேமுக்கால் மணி நேரம் படம் ஓடுவதை ஒரு பெரிய குறையாக விமர்சகர்கள் முன்வைத்தார்கள். நல்ல ஓபனிங் கிடைத்தும், அடுத்து பிக்கப் ஆக படம் திணறிக் கொண்டிருந்தது. எனவே படத்தின் நீளத்தில் 32 நிமிடங்களை குறைத்து, இப்போது திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர். எப்படியாவது படம் ஸ்லோ பிக்கப் ஆகிவிடும் என்பது லேட்டஸ்ட் செய்தி.
- * - * - * - * - * - * - * - * - * - * -
பி.கு : இந்தக் கட்டுரையை, தினகரன் வெள்ளிமலரில் WOODடாலங்கடி எழுதிவரும் கே.என்.சிவராமனுக்கு tribute செய்கிறேன்.