1 ஆகஸ்ட், 2011

ஒரு கோடி ரூபாய்! ஒரு குழந்தையை வளர்க்க...

இன்றையச் சூழலில் ஒரு குழந்தையை வளர்க்க உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டியிருக்கலாம்

ஒரு முழுமையான மனிதனை சமூகத்துக்கு உருவாக்கிக் கொடுக்க இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு செலவு ஆகிறது?”

அதாவது பிறந்தது முதல் 21 வயதுவரை  இன்றைய விலைவாசியில் பெற்றோருக்கு என்ன செல்வாகும்? இந்தக் கேள்விக்கு விடை காண முயன்ற போது எங்களுக்கு அதிர்ச்சிகளும் ஆறுதல்களும் காத்திருந்தன. அதிர்ச்சி: அதற்கான தொகையைப் பார்த்தபோது . ஆறுதல் இன்றைய நவீன பெற்றோர்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கிற மாற்றம்.

குழந்தைப் பருவம் தொடங்கி குமரப் பருவம் வரை,  ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு அவசியம் செலவிடப்பட வேண்டிய விஷயங்கள் குறைந்தபட்சம் ஐந்து.

1)    உடல்நலம்
2) கல்வி
3) உணவு
4) உடை , வாகனங்கள் முதலியன
5) பொழுதுபோக்கு

குழந்தை பிறந்த நொடியில் இருந்து நம் செலவுக்கணக்கை எடுத்துக் கொள்வோமா? அதற்கு முந்தைய பத்துமாத மருத்துவ சோதனைச் செலவுகளை விட்டுவிடலாம்.

பிரசவத்தின் போது சுகப்பிரசவம் என்றால் சராசரியாக 20,000 ரூபாய்வரை செலவாகிறது. சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் 30,000 ஆகும்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அந்தக் குழந்தைக்குப் போடப்பட வேண்டிய தடுப்பூசிகளின்  மதிப்பு மட்டுமே 20,000 ரூபாய்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குழந்தைகளின் முதல் ஐந்தாண்டுகள் மிக முக்கியமானவை. சாதாரணமாகத் தோன்றும் காய்ச்சலைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது. அலட்சியப்படுத்த முடியாது. குழந்தை சரியாக விளையாடாமல் முடங்கிக் கிடப்பதை காண எந்தத் தாய்க்கும், தகப்பனுக்கும் மனம் வருவதில்லை. எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு ஒரு முறைக்கு குறைந்தது (டாக்டர் ஃபீஸ், மருந்துச்செலவு) இவற்றுக்கு ரூ.300/-ஆவது செலவழித்தாக வேண்டும். பெரிய நோய்கள் ஏதுமில்லாமல் வளரும் ஒரு குழந்தைக்கு வருடத்துக்கு சராசரியாக ரூபாய் 5,000/- மருத்துவத்துக்கு மட்டுமே செலவாகிறது.

உடல்நலத்தை விட கல்வி முக்கியம் என்று இன்றைய பெரும்பாலான பெற்றோர் கருதி வருகிறார்கள். இது சரியா தவறா என்பது தனி வாதம். ஆனால் குழந்தைகளின் கல்விக்கே பெற்றோர் முதன்மை முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். தங்களது குழந்தைக்கு கல்வியை கொடுத்துவிட்டால், அவர்கள் எதை வேண்டுமானாலும் பெற்று விடுவார்கள் என்கிற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எம்புள்ளை உயிரைக் காப்பாத்திடுங்க டாக்டர்என்று இனிமேல் சினிமாவில் வசனம் வைத்தால், அது பொருந்தாது. “எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. எம்புள்ளையை இன்ஜினியர் ஆக்கிப்புடணும். இல்லேன்னா டாக்டரு ஆக்கிப்புடணும்என்கிற டயலாக்தான் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தும்

கல்விக்கு எவ்வளவு செலவு ஆகும்?

வெவ்வேறு கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு இடங்களில் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சராசரியான ஒரு தொகையை தருகிறோம். இது இடத்துக்கு இடம், நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடலாம். ஆனால் இது ஒரு சராசரித் தொகை. இந்தத் தொகை உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விச்செலவுக்கு செய்யப்பட வேண்டிய செலவு குறித்த ஒருஐடியாவினை உங்களுக்கு தரும்.

வகுப்பு
செலவு ரூ. (வருடத்துக்கு)
பள்ளிக்கு முந்தைய வகுப்பு
(Pre KG)
5 ஆயிரம் முதல் 30ஆயிரம்
மழலையர் வகுப்பு
10 ஆயிரம் முதல் 40ஆயிரம்
ஆரம்ப/ உயர்/மேல்நிலைப் பள்ளி
(1
முதல் 12 வகுப்புகளுக்கு)
15 ஆயிரம் முதல் 50 ஆயிரம்
கல்லூரி (கலை அறிவியல் கல்லூரிகள்)
கல்லூரி (பொறியியல், மருத்துவக் கல்லூரிகள்)
30 ஆயிரம் முதல் 60 ஆயிரம்

50ஆயிரம் முதல் 1 லட்சம்
மேற்படிப்பு
ஒரு லட்சம் முதல் 5 லட்சம்

கல்விக் கட்டணம், தங்குமிடம், சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், வாகனச்செலவு மற்றும் பாடம் பயில தேவையான இதர உபகரணங்கள் வாங்கும் செலவு என்று பல செலவுகளையும் இச்செலவுக் கணக்குக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ட்யூஷன் போன்ற நம்முடைய தனி விருப்பத் தெரிவுகளுக்கு தனிச்செலவு.

இன்று நகர்ப்புறத்தில் வளரும் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்குப் பெற்றோர் பள்ளிக் கல்வியோடு வேறு ஏதேனும் ஒரு துறையில் பயிற்சி அளிக்கவும் விரும்புகிறார்கள். அது இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளாக இருக்கலாம். அல்லது கிரிக்கெட், டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டு சார்ந்தவையாக இருக்கலாம். அல்லது கணினி, நீச்சல், குறும்படம் போன்ற திறன் சார்ந்தவையாக இருக்கலாம். அல்லது மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளவோ, வேலைகளுக்கான போட்டித் தேர்வை எதிர்கொள்ளவோ, அல்லது அயல்நாடுகளில் சென்று படிக்க டோஃபல், ஜிஆர்இ போன்ற பயிற்சிக்களுக்காகவோ நடக்கும் சிறப்பு வகுப்புகளாக இருக்கலாம்.  இவை முழுக்க முழுக்கத் தனி விருப்பத்தின்  பேரில் செய்யப்படும் செலவு என்றாலும் அவையும் தவிர்க்க முடியாத செலவாகி விட்டது.

இவை தவிர பல நகர்ப்புற வீடுகளில் மேஜை, நாற்காலி, டிவியைப் போல கணினி தவிர்க்கமுடியாத அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.  20 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் வரை கணினிகள் கிடைக்கின்றனஇது ஒரே ஒரு தரம் செய்யும் செலவுஇதைப் போல, ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ, பள்ளி நாட்களில் சைகிளும் பள்ளி இறுதி ஆண்டு அல்லது கல்லூரிப் பருவத்தில் பெட்ரோலால் இயங்கும் இரண்டு சக்கர வாகனமும் வாங்க வேண்டியதாகிறதுசைக்கிளுக்கு 3000 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ஆயிரம் ரூபாயும் செலவிட வேண்டியிருக்கும். வாகனத்திற்கான பெட்ரோல் (ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் என்ற அடிப்படையில் ) வாகனப் பராமரிப்பு இவற்றுக்கு மாதம் 5000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

இன்று செல்போன் இல்லாத குழந்தை ஏது? அதற்கு  ஒரு நேரச் செல்வாக ஒரு 2000 ரூபாயும், மாதச் செலவாக 500 ரூபாயும் எடுத்து வைத்து விடுங்கள்.
  
சாப்பாடு விஷயத்தில் கணக்கு வழக்கு பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். செண்டிமெண்ட்படி பார்த்தால் அது சரிதான். ஆனால் பட்ஜெட் போடுவதற்கு ஏதாவது ஒரு கணக்குப் பார்த்துதானே ஆக வேண்டும்?. ஏனெனில் இதற்கும் பணம் செலவழிக்கத்தானே  வேண்டியிருக்கிறது?

இன்றைய விலைவாசி நிலவரத்தில் மூன்றுவேளை உணவுக்கு ஒரு நாளைக்கு ஒருவருக்கு  குறைந்தது ரூ. 25/- செலவாகிறது. அதிகபட்சத்துக்கு கணக்கே இல்லை. சத்தான உணவுகள், பழவகைகள், மாமிசம் என்று வெட்டு வெட்டென வெட்டும் குடும்பங்களில் நபருக்கு/நாளைக்கு ரூ.100/- கூட செலவு ஆவதுண்டு.

சராசரியாக வருடத்துக்கு பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை, ஒரு நபரின் உணவுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும்.
டைக்கான செலவை கணக்கிடுவது மிகச் சிரமம். ஐம்பது ரூபாய்க்கும் உடை கிடைக்கிறது, ஐயாயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. இடைபட்ட நமக்கு சராசரியாக ஒரு தொகையைக்  கணக்குக்கு எடுத்துக் கொள்வோம்.

பெரியவர்கள் ஆனாலும் சரி, குழந்தைகள் ஆனாலும் சரி ஆண்களுக்கு எப்போதுமே உடை விஷயத்தில் அதிக சாய்ஸ் இல்லை. ஆனால் பெண் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். வண்ணமயமாகப் பல ஆடைகள் பலதரப்பட்ட வகைகளில் கிடைக்கின்றன. சுடிதார், கவுன், மிடி, குர்தா, ஸ்கர்ட் என்று ஏகப்பட்ட வகையறாக்கள். விலையும் கொஞ்சம் கூடுதல். எனவே பெண்ணைப் பெற்றவர்கள் உடைக்காக கொஞ்சம் கூடுதல் தொகையை தங்களது பட்ஜெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் .

தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், இன்னும் ஏதோ ஒரு நாள் என்று வருடத்துக்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது உடை எடுக்க வேண்டி வருகிறது (சீருடையை கல்விச் செலவில் சேர்த்து விட்டோம்). ஒரு செட் உடை தோராயமாக 500 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால், வருடத்துக்கு ரூ.2000/-மாவது ஒரு குழந்தைக்கு செலவழிக்கப்பட வேண்டும். எனவே இருபது ஆண்டுகளில் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் உடைகளுக்கு மட்டுமே குறைந்தபட்சம் செலவழியும்.

பொழுதுபோக்கு விஷயத்தில் முந்தைய தலைமுறை குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். விளையாடுவதற்கு மைதானம் இருந்தது. விளையாடத் தோழர்கள் நிறைய பேர் கிடைத்தார்கள்.

இந்தக்கால குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பொழுதுபோக்குக்கு (அதுவும் பெற்றோர் அனுமதித்தால்) பெரும்பாலும் தொலைக்காட்சியையும், கணினியையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

பரந்த மைதானத்தில் விளையாட வேண்டிய கிரிக்கெட்டையும், ஃபுட்பாலையும் பேட், பால் இன்றி கணினியில் மவுசையும், கீபோர்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிப்பாடம் தவிர்த்த குழந்தை இலக்கியப் புத்தகங்கள், காமிக்ஸ் வாசிக்கும் பழக்கமும் குறைந்துக் கொண்டே போகிறது. வீடியோ கேம்ஸ், புத்தகங்களின் இடத்தை வேகமாக பிடித்து வருகிறது.

இந்த விஷயத்தில் பெருசா செலவே இருக்காது போலிருக்கேஎன்று அவசரப்பட்டு மகிழ்ச்சியடைந்து விடாதீர்கள். உங்கள் பர்ஸின் கனத்தை குறைக்க இருக்கவே இருக்கிறது மெகா மால்களும், தீம் பார்க்குகளும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் மெகாமாலுக்கு சென்று ஒரு சினிமா பார்த்துவிட்டு , சினிமா, நொறுக்குத் தீனி, போக்குவரத்து என்று  குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டியிருக்கிறது. (இது சென்னை நிலவரம். மற்ற ஊர்களில் ஒரு இருநூறு முன்னூறு வித்தியாசம் இருக்கலாம்) தீம் பார்க்குகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு குழந்தை பிறந்தது முதல் 21 வயதை எட்டிப் பிடிக்கிற வரைக்கும் பெற்றோர் அவர்களுக்குச் செலவிட நேரும் தொகை சுமார் 40 லட்சம். இது இன்றைய விலைவாசியில். ஆனால் விலைவாசி அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் இருபது வருடங்களில் இது இரண்டரை முதல் மூன்று மடங்காக அதிகரிக்கும். அதாவது ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் செலவிடும் தொகை சுமார் ஒரு கோடியைத் தாண்டும்!

அம்மாடி என மிரண்டு விட வேண்டாம். இதை சமாளிக்க சில டிப்ஸ்:

  • குடும்பம் மொத்தத்திற்கும்  மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொண்டால் பெரிய மருத்துவச் செலவுகளை சமாளிக்கலாம்.சின்னச் சின்ன மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைச் சிறிய வயதிலேயே ஆரம்பித்து விடுவது நல்லது. உதாரணம்: யோகா.
  • அதே போல உணவு விஷயங்களில் கவனம் செலுத்துவது.ஃபாஸ்ட் புட் எனச் சொல்லப்படும் ஜங்க் ஃபுட் பெரும்பாலும் கொழுப்புச் சத்துக் கொண்டவை. அவற்றைத் தவிர்த்து ஆண்டி ஆக்சிடெண்ட் கொண்ட பழங்கள், நார்ச் சத்து கொண்ட பச்சைக் காய்கறிகள் இவற்றைக் கொடுத்துப் பழக்குங்கள். மலிவான கீரையிலும் முட்டையிலும் உள்ள சத்துக்கள் விலை உயர்ந்த சாக்லேட்களிலும் ஐஸ்கீரீம்களிலும் கிடையாது.

  • உடையைப் பொறுத்தவரை ஆடித் தள்ளுபடி, தீபாவளி போன்ற டிஸ்கவுண்ட் கிடைக்கும் நேரத்தில் ஆண்டுக்கான தேவைகளை வாங்கிவிடுங்கள். பிராண்டட் துணிகள் வாங்குகிறவர் என்றால் பாக்டரி அவுட்லெட்களில் வாங்குங்கள்  அங்கே கொஞ்சம் விலை குறைவாக இருக்கும். சாலையோர நடைபாதைக் கடைகளில் விலை குறைவு. ஆனால் நீடித்து உழைக்குமா என்பது சந்தேகம்தான்.

  • கல்வியைப் பொறுத்தவரை தரம்தான் முக்கியம். தரத்திற்கும் பணத்திற்கும் சம்பந்தம் கிடையாது. கற்பித்தலில் தரம் என்பது ஆசிரியர்களைப் பொறுத்தது. நல்ல ஆசிரியர்கள் அமைந்தால் அது உங்கள் குழந்தையின் அதிர்ஷ்டம்.

  • மனித மனத்திற்கு, குறிப்பாக இளம் பருவத்தில், தானாகக் கற்றுக் கொள்கிற ஆற்றல் அதிகம். அந்தக் காலகட்டத்தில் அடிப்படையான அறிவைப் புகட்டுங்கள். பின்னர் அதன் மீது அவர்களே மாளிகை  கட்டிக் கொள்வார்கள். அதற்கு ஆரம்ப நாள்களில் நீங்கள்தான் அவர்களோடு கொஞ்சம்  நேரம் செலவழிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் குழந்தைகளைப் பற்றி மூன்றாவது மனிதரான ஆசிரியரைவிட உங்களுக்குத்தான் அதிகம் தெரியும். பல நேரங்களில் உங்கள் குழந்தை உங்களைப் போலவே (பல நேரங்களில் உங்களை விடவும் கெட்டிக்காரராக) இருக்க மரபணு ரீதியாக வாய்ப்புண்டு. அதனாலும், வீட்டுச் சூழல், கலாசாரம், உறவு ரீதியான நெருக்கம் ஆகியவற்றாலும் நீங்கள் அவருக்கு ஒன்றைப் புரிய வைப்பது எளிது.

  • குழந்தைகளை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காக, அல்லது உங்களது ’பிரஸ்டீஜ்’க்காக ஆடம்பாத்தை ஊக்குவிக்காதீர்கள் . குடும்பத்தின் யதார்த்த சூழலை அவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்லி வளர்த்தால் பின்னால் அவர்கள் பொதுவாக பதின்ம வயதில் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

  • அரசுப் பள்ளிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் பொதுவாக செலவு குறைவு. அங்கு பல விஷயங்கள் இலவசம். ஆனால் அங்கு தரம் பேணப்படுவதில்லை. குடிமக்களாகிய நாம்தான் அங்கு தரத்தை மேம்படுத்தவும் அதைப் பேணவுமான நடவடிக்கைகளை எடுக்க அரசையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும்  நிர்பந்திக்க வேண்டும். அது என் வேலையல்ல எனச் சமூகப் பொறுபின்றி ஒதுங்கிப் போனால் நீங்கள்தான் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்
செலவுகள் எவ்வளவு என்பது ஒருபுறம் இருக்கட்டும். தான் வளர்த்த குழந்தையை சான்றோன் என கேட்கும் நொடிஒவ்வொரு தாய்க்கு மட்டுமல்லதந்தைக்கும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் நொடிதான்எதிர்காலச் செலவுகளை முன்னமே திட்டமிட்டுஅதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை சுருக்கி வாழ ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு பெற்றோருக்கும் அது ஆனந்த அனுபவம்தான்



1 முதல் 21 வயது வரை
ஒரு குழந்தைக்கு உத்தேசமாக என்ன செலவு ஆகலாம்?

சராசரியாக
(ரூபாயில்)
உடல்நலம்
5,00,000
கல்வி
20 00,000
உணவு
700 000
உடை, வாகனம்
6,00,000
பொழுதுபோக்கு
2,00,000
மொத்தம்
40,00,000

இன்றைய விலைவாசி அடிப்படையில் இது  கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 21 வருடங்களில் செலவிடப்படும் தொகை, வருடாவருடம் உயரும் விலைவாசியேற்றத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் மூன்று மடங்காவது அதிகமாகும்.

அதாவது இன்று பிறந்த உங்கள் குழந்தைக்கு 2032ஆம் ஆண்டில் நீங்கள் சுமார் ஒரு கோடிக்கு மேல் செலவழித்திருப்பீர்கள் .

(நன்றி : புதிய தலைமுறை)

29 ஜூலை, 2011

புரட்சியும், பூர்ஷ்வாவும்!

ரு டீ சாப்புடலாமா தோழர்?” தோழர் கேகே கேட்டால் மறுக்க முடியுமா?

வாங்க தோழர் போகலாம்வாசித்துக் கொண்டிருந்த ஏழு தலைமுறைகள்நூலை டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினேன்.

அக்கம் பக்கம் சில தோழர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளை பிரித்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். புரட்சி வருவது குறித்த செய்தி ஏதாவது தேறுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். தோழர்கள் பெரும்பாலும் இரண்டு வார தாடி வைத்திருப்பார்கள். ஜிப்பா அணிவார்கள். தோளில் ஜோல்னா பை. பையில் ஓரிரண்டு ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் நிரந்தரமாக இருக்கும். புதுத்தோழர் ஒருவர் பேராசானின் பொதுவுடைமை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தது ஏனென்று தெரியவில்லை. இரவு முழுவதும் வாசித்திருக்கலாம். அவரையும் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும் பணி கேகே தோழர் தலையில் தான் விடியும்.

முப்பதுக்கு இருபது அளவில் ஒரே அறையாக இருந்த கட்சியின் கிளை அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நூலகம். தோழர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இங்கு வந்து தேவையான நூல்களையோ, செய்தித்தாள்களையோ இலவசமாகவே வாசிக்கலாம். ஆனால் தினத்தந்தி வைப்பதில்லை என்று இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தவிர்த்து வேறு யாரும் இந்தப் பக்கம் வருவதில்லை. கட்சிப் பத்திரிகைகளையும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு நூல்களையும் வெகுஜனங்கள் வாசிக்கும் நிலையை ஏற்படுத்துவதே புரட்சிக்கு இடும் வித்து என்பதாக தோழர் கேகே சிந்தித்து சிலாகித்துச் சொன்னார். ஆனால் வித்து இடும் பணி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வெகுஜனங்கள் ஒத்துவர வேண்டுமே?

நீளவாக்கில் இருந்த பெஞ்சில் மத்திய அரசை கண்டித்து அச்சிடப்பட்ட சூடான சுவரொட்டிகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று இரவு தான் தோழர்களோடு போய் ஒட்டவேண்டும். எல்லா சுவரொட்டிகளுமே மத்திய அரசே! மத்திய அரசே!என்றுதான் ஆரம்பிக்கும். கண்டிக்கிறோம்என்றோ விடுதலை செய்!என்றோ முடியும். இடையில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அவ்வப்போதான பிரச்சினைகளின் அடிப்படையில் இயக்கத்தின் பொலிட்பீரோ முடிவெடுத்துச் சொல்லும்.

சமீபத்தில் தான் இந்த இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். தீவிரப் புரட்சிச் செயல்பாடுகளின் மீதிருந்த அதீத ஆர்வத்தால் நான் இங்கு இணைந்ததாக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இங்கு வருவதற்கு முன்பாக இப்போதிருக்கும் ஆளுங்கட்சியில் தீவிர செயல்பாடுகளை கொண்டிருந்தேன். அந்தக் கட்சியின் 153வது வட்டச் செயலாளருக்கும் எனக்கும் தகராறு. கக்கூஸ் காண்ட்ராக்டில் அவர் பல லட்சம் ஊழல் செய்திருந்ததாக கண்டுபிடித்தேன்.

ஒண்ணுக்கு போறவனும் ரெண்டுக்கு போறவனும் கொடுக்குற ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் காசுலே என்னத்தய்யா லட்சக்கணக்குலே ஊழல் பண்ணமுடியும்?” செயல்வீரர் கூட்டத்தில் திருப்பிக் கேட்டார் வட்டம்.

அவர் கேட்ட கேள்வி நியாயம் தான். ஆனால் எந்த வேலை வெட்டியோ, பூர்வீக சொத்தோ இல்லாத அவர் எப்படி புதிய டாடா சஃபாரி வாங்கியிருக்க முடியும்? அவருக்கு கட்சி கொடுத்தது கக்கூஸ் காண்ட்ராக்ட் மட்டுமே. எனவே அதை வைத்து மட்டுமே விஞ்ஞானப்பூர்வமாக பெரிய ஊழல் செய்து சம்பாதித்திருப்பார் என்று நம்பினேன்.

கட்சியில் என் குற்றச்சாட்டை யாரும் ஆமோதிக்கவோ, ஒரு பிரச்சினையாகவோ பார்க்கும் மனநிலையிலோ இல்லை. இந்த கட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்பதை உணர்ந்தேன். கால் சென்டரில் (Call Centre என்று தெளிவாக வாசிக்கவும்) செக்யூரிட்டியாக காலத்தை தள்ளும் எனக்கு கக்கூஸ் காண்ட்ராக்ட் கூட வேண்டாம் அய்யா. குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஊராட்சி மன்றத்தில் குப்பை அள்ளும் காண்ட்ராக்ட்டையாவது கொடுத்திருக்க வேண்டாமா? எல்லாவற்றையும் வட்டச் செயலாளர், கொட்டச் செயலாளர் வகையறாக்களே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தால் நாங்களெல்லாம் அரசியலில் இருந்து மக்களுக்கு என்ன பிரயோசனம்?

சிந்திக்க சிந்திக்க கட்சித்தலைமை உண்மைத் தொண்டர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் செய்துவரும் அளப்பரிய துரோகங்கள் புலப்பட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தேன். ஈழத்தமிழர் பிரச்சினையை கட்சி கையாளும் முறை சரியில்லை என்று கூறி கட்சியை விட்டு வெளியேறினேன்.

கடந்த தேர்தலில் தோழர் கேகே இருந்த இயக்கத்தோடு உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தோம். எனவே தோழர் கேகே எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். இப்போது அவரது இயக்கத்தின் பொலிட்பீரோ எதிர்க்கட்சியோடு உடன்பாடு கண்டிருந்ததால் ஆளுங்கட்சி மீது தார்மீகக் கோபம் கொண்டிருந்தார் தோழர். மாறி மாறி வைத்துக் கொள்ளும் இந்த தேர்தல் உடன்பாடுகளின் மீது தோழர் கேகேவுக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் புரட்சி வரும் வரை புரட்சிக்கான ஆயத்தங்களை தயார் செய்யவும், கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுக்கவும், மற்ற செலவினங்களுக்காகவும் இதுபோன்ற சமரசங்களுக்கு பொலிட்பீரோ உடன்படுகிறது என்று அவர் எனக்கு விளக்கினார்.


ட்டச்செயலாளரின் கக்கூஸ் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் தோழர்!கட்சியை விட்டு வெளியேறிய எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டப்போது சொன்னார் தோழர் கேகே. பாராட்டுக் கூட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டார்கள்.

எப்படி அம்பலப்படுத்துவது?” அம்பலப்படுத்துவது, அம்மணப்படுத்துவது மாதிரியான சொற்கள் எனக்கு அப்போது புதியதாக இருந்தது.

துண்டுப் பிரசுரம் கொடுப்போம் தோழர். அந்த வட்டச் செயலாளர் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கக்கூசுக்கு வரும் ஒவ்வொரு பாட்டாளித் தோழருக்கும் தலா ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம். அவர் வீட்டுக்கு அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்வோம். அவரது ஊழலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் சொல்வோம். துண்டுப் பிரசுரம் மூலமாக கலகம் புரிவோம். கலகம் சிறுபொறி. சிறுபொறி நெருப்பாகும். புரட்சி நெருப்பு!ஆவேசமாக குரலை ஏற்றி, இறக்கி தோழர் சொன்னபோது எனக்கு புல்லரித்தது. மயிர்க்கால்கள் கூச்செறிந்தது.

என்னுடைய செலவில் பிட்நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வட்டச்செயலாளர் அம்பலப்படுத்தப் பட்டார். ஆனால் அம்பலப் படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு ஆளுங்கட்சி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது ஏனென்றே தெரியவில்லை. நான் தோழர்களின் இயக்கத்துக்கு வந்த வரலாற்றுப் பின்னணி இதுதான்.

இந்த இயக்கத்துக்கு வருவதற்கு முன்பாக புரட்சி என்றாலே எனக்கு புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் தான் தெரியும். புரட்சி எப்படியிருக்கும் என்று எனக்கு சொல்லித் தந்தவர் தோழர் கேகே. புதியதாக கட்சிக்கு வருபவர்களுக்கு கட்சியின் கொள்கை மற்றும் செயல்விளக்க செயல்பாடுகளைப் பற்றியும் பொதுவுடைமை சித்தாந்தங்கள் குறித்தும், புரட்சியின் அவசியம் குறித்தும் விருப்பத்தோடு பாடமெடுப்பார்.

ஆரம்பத்தில் தோழர் சொன்ன புரட்சி எந்த வடிவத்தில் எந்த நிறத்தில் அமைந்திருக்கும் என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை. தோழர் சொன்னதை வைத்துப் பார்த்தால் ஜூராசிக் பார்க் டைனோசர் வடிவில் புரட்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் அது எப்போது வரும்? எப்படி வரும்? என்பதைப் பற்றி தோழருக்கே தெளிவில்லாத நிலை இருந்ததால் என் மனதில் அமீபா வடிவில் புரட்சி பதிந்துப் போனது.

தோழர் கேகே மவுண்ட் ரோட்டில் ஒரு ஏசி கம்பெனியில் வேலை பார்க்கிறார். இயக்கத்தின் தொழிற்சங்கப் பொறுப்பில் அவர் இருப்பதால் அவர் வேலை செய்யாமலேயே அவருக்கு கம்பெனி சம்பளம் தந்து கொண்டிருந்தது. அவரை வேலை செய்யச் சொன்னால் எங்கே ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் அறிவித்து விடுவாரோ என்று கம்பெனி நிர்வாகத்துக்குப் பயம். அடிக்கடி தோழர் கேகே டெல்லிக்கெல்லாம் போய்விட்டு வருவார். ஒருமுறை மக்கள் சீனத்துக்கு கூட நேரில் சென்று தொழிற்சங்க புரட்சிகரச் செயல்பாடுகளை கற்றறிந்து வந்தவர் அவர். இயக்கத்தின் முழுநேர ஊழியராக அவர் இருந்ததால் அவருக்கு பிரயாணச் செலவுகளையெல்லாம் இயக்கமே பார்த்துக் கொள்ளும். ஆங்காங்கே பிரயாணித்து புரட்சிக்கான விதைகளை ஊன்றிவருவதை தவம் போல செய்துவந்தார் தோழர் கேகே.


தோழர் ஒரு சிங்கிள் டீயும், நுரை தட்டாம ஒரு முழு கப் டீயும் போடுங்க!சினேகபாவத்தோடு நாயரிடம் சொன்னார் தோழர் கேகே. தோழருக்கு டீ க்ளாஸ் தளும்ப தளும்ப கப் டீ சூடாக இருக்க வேண்டும். அப்படியே சாப்பிடுவார்.

யான் தோளர் இல்லா. நாயர்டீக்கடைக்காரர் தோழர் என்பதை ஒரு சாதியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

பார்த்தீங்களா தோழர்? புரட்சி சீக்கிரமா வராததால வர்க்கம் சாதியாவும், குழுக்களாவும் பிரிஞ்சு பேயாட்டம் ஆடிக்கிட்டிருக்கு!தோழர் கேகே பேசும் ஒவ்வொரு சொல்லையுமே இடைவிடாது ஒரு டயரியில் குறித்துக் கொண்டே வந்தால் ஆண்டு முடிவில் பொதுவுடைமை சைஸுக்கு ஒரு புத்தகத் தொகுதி போட்டு விடலாம்.

தம்மு அடிக்கிறீங்களா தோழர்?” கேகே தம் அடித்து நான் பார்த்ததில்லை. எனக்கு அப்போதைக்கு ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது.

தோழர் கேகே கொஞ்சம் சிந்தித்தார். அவர் சிந்திக்கும் போது புருவங்கள் இரண்டையும் நெறிப்பார். நெற்றியின் மத்தியில் சின்னதாக முட்டை போல சதைக்கோளம் தோன்றும். இதுபோன்று அவர் சிந்திக்கும் நேரங்களில் ஏதோ பொதுவுடமை முத்து அவரது வாயிலிருந்து சிந்தப் போகிறது என்பதை உணரலாம்.

சட்டென்று சொன்னார். நீங்க இன்னமும் கூட பூர்ஷ்வாவா தானிருக்கீங்களா தோழர்?”

தலைமீது இடி விழுந்தாற்போல இருந்தது. சமூகத்தில் வேசிமகன் என்று ஒருவனைப் பார்த்து சொல்லப்படுவது எவ்வளவு இழிவானதாக கருதப்படுகிறதோ, அதற்கு இணையான இழிவு பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக செயல்படும் ஒரு தோழரைப் பார்த்து பூர்ஷ்வாஎன்று சொல்லப்படுவதும்.

சினிமா பார்ப்பது பூஷ்வாத்தனம், உழைக்கும் தோழர்களை, ஒடுக்கப்பட்ட தோழர்களை சினிமா சுரண்டுகிறதுஎன்று ஒருமுறை தோழர் சொன்னதால் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஆனால் 1917க்கும் 1990க்கும் இடையில் வந்த ரஷ்யத் திரைப்படங்களை பார்ப்பது பூர்ஷ்வாத்தனமில்லை என்று இயக்கம் விலக்கு அளித்திருந்தது. ரஷ்யமொழியை கற்றுக் கொண்டு அந்தப் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாயிருந்து விட்டேன்.

அப்படிப்பட்ட என்னைப் பார்த்து தோழர் பூர்ஷ்வாஎன்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. என்ன தோழர் சொல்றீங்க? சிகரெட்டு பிடிக்கிறது பூர்ஷ்வா மனப்பான்மையா?”

ஆமாங்க தோழர். சிகரெட்டு கம்பெனி முதலாளிகள் கோடி கோடியா மக்களை சுரண்டறதுக்கு நீங்க மறைமுகமா துணை போறீங்க! புகை புரட்சிக்கு நிச்சயமா பகை!!

என்ன தோழர் இப்படி சொல்றீங்க? தோழர் காஸ்ட்ரோ கூட புகைப்பழக்கம் கொண்டவர் தானே

என்ன தோழர். என்னிடம் விவாதமா? பொதுவுடைமையை நாலு முறை கரைச்சிக் குடிச்சவன் நான். இருந்தாலும் இதுபோன்ற விவாதங்கள் புரட்சி தொடர்பான விவாதங்களுக்கு தொடக்கப்புள்ளியா அமையுறதாலே கண்டிப்பா தொடரணும்னு பொலிட்பீரோ அறிவுறுத்தியிருக்கு. க்யூபாவில் புரட்சி வந்துடிச்சி. தோழர் காஸ்ட்ரோ புகை பிடிக்கிறார். இந்தியாவில் புரட்சி வருவதற்கான ஏற்பாடுகளை தானே நாம செஞ்சுக்கிட்டிருக்கோம். புரட்சி வரட்டும். நாடெங்கும் செங்கொடி பறக்கட்டும். நாமும் புகைப்பிடிப்போம் தோழர்!பரவசமாக சொன்னார் தோழர் கேகே. புரட்சி வரும் வரை திருமணம் செய்வதையே கூட தள்ளிப் போட்டிருந்த அவருக்கு புரட்சியின் மீதிருந்த நம்பகத்தன்மையை சந்தேகம் கொள்ள இயலாது. நான் சொன்ன காஸ்ட்ரோ லாஜிக்கை சந்தேகமேயில்லாமல் தவிடுபொடியாக்கி இருந்தார் தோழர்.

நீங்க இன்னும் மாவோவை உணரலை. அதால தான் இதுமாதிரி அரைகுறையா விவாதிக்கிறீங்க!தீவிரமாகவும், திடமாகவும் சொன்னார் தோழர்.

இல்லீங்க தோழர். மாவாவை நான் உணர்ந்திருக்கேன். முன்னாடியெல்லாம் அந்தப் பழக்கமிருந்தது. வாயி வெந்து உள்ளே ஓட்டை ஆயிட்டதாலே இப்போ தம்மு மட்டும் தான்என் நாக்கில் சனி. ஏடாகூடமாக உளற ஆரம்பித்தேன்.

நீங்க பூர்ஷ்வா என்பதற்கு இது தக்க உதாரணம் தோழர். புரட்சியாளன் மாவோவை மறந்து மாவா என்ற போதைப்பொருள் பின்னாடி விவாதத்தில் போறீங்க பாருங்க. இதுமாதிரியான தனிமனித ஆசாபாசங்கள் புரட்சியை தாமதப்படுத்தும்

தோழர் கேகேயிடம் தர்க்கம் செய்து வெல்ல முடியாது என்று புரிந்துப் போயிற்று. சட்டென்று ஒரு ஐடியா வந்தது. போனமாசம் அமெரிக்க முதலாளித்துவ அடக்குமுறை எதிர்ப்பு பேரணிக்கு கேரளாவுலேருந்து வந்திருந்த தோழர்கள் கூட புகை பிடிச்சாங்களே தோழர்!

நல்லா கவனிச்சுப் பார்க்கணும் தோழர். அவங்க பிடிச்சது பீடி. பீடி சுற்றும் இலட்சக்கணக்கான பாட்டாளிகளை அவங்க வாழ வைக்கிறாங்க!

இதற்குள்ளாக நாயர் டீ போட்டு டேபிளில் சூடாக வைத்தார். யோசித்துப் பார்த்ததில் தோழர் கேகே சொல்வதில் இருந்த புரட்சிவாதமும், அறமும் புரிந்தது. ஆனாலும் அப்படி பார்க்கப் போனால் டீ குடிப்பது கூட பூர்ஷ்வாத்தனம் என்பதாக ஆழமாக பொதுவுடைமை மனதோடு சிந்தித்தேன். ஒரு கப் டீக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று என் பார்வை உலகளவில் விரியத் தொடங்கியது. இதையெல்லாம் தோழரிடம் விவாதித்தால் அதற்கும் தயாராக எதிர்விவாதத்தை ஏடாகூடமாக வைத்திருப்பார். எனவே புரட்சி வரும் வரை தோழர்களுக்கு தெரியாமல் தம்மடித்து ரகசிய பூர்ஷ்வாவாக வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். அமைதியாக, எதிர்த்துப் பேசாமல் ஏதோ சிந்தனைபாவத்தில் இருந்த என் முகத்தைப் பார்த்த தோழருக்கு நான் புரட்சிக்கு லாயக்கானவன் தான், என்னை தேத்திவிடலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.

கவலைப்படாதீங்க தோழர். உங்களுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற பூர்ஷ்வாவை விரட்டியடிச்சி உங்களை புரட்சியாளனா மாத்துறதுக்கு நானாச்சி. என்னை நம்புங்க!

புரட்சி நாளை வருமென்று தோழர் நம்புகிறார். தோழரை நான் நம்புகிறேன்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஜூலை, 2011

டால்ஃபின்களை காப்பாற்றிய சிட்டுக்குருவிகள்!

கேம்பல் ரிவர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நகரம். இங்கிருக்கும் நதியில் அடிக்கடி கடல் உட்புகுந்து, கரைமட்டம் அதிகரிக்கும். அப்படியொரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் பாப் சோல்க் தன் வீட்டின் முகப்பில் இருந்த புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

யதேச்சையாக நதிக்கரையோரம் பார்த்தவருக்கு ஆச்சரிய அதிர்ச்சி. சுமார் பத்து அடி நீளமுள்ள நான்கு அபூர்வ வகை டால்பின் மீன்கள், கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கடல்நீர் உட்புகுந்தபோது இவற்றையும் அடித்துவந்து கரையோரத்தில் தள்ளிவிட்டு, மீண்டும் உள்வாங்கியிருக்கிறது.

நான்கு உயிர்களையும் காக்க வேண்டுமே? என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியவில்லை. யாரை தொடர்பு கொண்டு என்ன கேட்க வேண்டும்?

உடனடியாக உள்ளூர் மீன்வளத்துறைக்கும், கடல் தொடர்பான துறை அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முயற்சித்தார். அதிகாலையில் எந்த அலுவலகம்தான் இயங்கிக் கொண்டிருக்கும்?
டால்ஃபின்களை உயிரோடு காக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இச்செய்தியை பகிர்ந்தார். “நதியோரத்தில், என் வீட்டு வாசலில் நான்கு டால்ஃபின்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன”

பாப் செய்தது இவ்வளவுதான். இவருடைய செய்தியை இணையத்தில் அறிந்த உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன் அலற ஆரம்பித்தது. செய்தி கேட்ட தன்னார்வலர்கள் பலரும் பக்கெட்டோடு பாப் வீட்டுக்கருகே படையெடுக்க ஆரம்பித்தார்கள். சுமார் எண்பது பேர் காலை ஏழு மணிக்கே அவர் வீட்டு வாசலில் குழுமினார்கள். டால்ஃபின் மீட்புக்குழு தயார்.

பக்கெட்டில் நீரெடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டால்ஃபின்கள் மீது ஊற்றினார்கள், உடல் ஈரம் வற்றிவிடக் கூடாது என. அவை இருந்த இடத்தில் இருந்து நதிக்குள் செல்ல சிறு கால்வாய் வெட்டினார்கள். கால்வாயில் போதிய நீர் வருமாறு செய்தார்கள். டால்ஃபின்கள் அதுவாகவே மெதுவாக நகர்ந்து, ஆற்றுக்குள் நீந்தி, கடலுக்கு சென்றது.

சடுதியில் நடந்து முடிந்த விஷயங்கள் இவை. “இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. இணையத்தின் மூலமாக இப்படியெல்லாம் கூட நல்லது செய்யமுடியும் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்று இம்முறை ஆனந்த அதிர்ச்சியோடு சொல்கிறார் பாப் சோல்க்.

இணையம் இருமுனை கத்தி. அரட்டையடிக்கப் பயன்படும் சமூக வலைத்தளங்களை, சமூகப் பணிகளுக்கும் கூட பாப் பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

27 ஜூலை, 2011

தெய்வத்திருமகள்!

மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!

23 ஜூலை, 2011

காஞ்சனா

பெரிய ஹீரோ. பெரிய டைரக்டர். பெரிய மியூசிக் டைரக்டர். என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்த்து முதல் நாள் முதல் காட்சியே தியேட்டருக்குப் போய் உட்கார்ந்து பல்பு வாங்கியதும் உண்டு.

என்னவோ ஒரு படம். மூன்று மணிநேரத்தை போக்கியாக வேண்டும் என்கிற கட்டாயத்தால் தியேட்டருக்குப் போய் இன்ப அதிர்ச்சியும் அடைந்தது உண்டு.

காஞ்சனா இரண்டாவது அனுபவத்தை தருகிறாள்.

சரண் தயாரிப்பில், லாரன்ஸின் இயக்கத்தில் முனி பார்த்திருக்கிறேன். முதல் தடவை பார்க்கும்போது மொக்கையாகவும், பின்னர் யதேச்சையாக டிவியில் அடிக்கடி காண நேரும்போது ‘அட சுவாரஸ்யமா இருக்கே’ என்று உட்கார்ந்தது உண்டு.

அதே கதை. அதே ஹீரோ. அதே இயக்குனர். கதாபாத்திரங்களை மட்டும் கொஞ்சம் ஷேப் அடித்து, டிங்கரிங் செய்து குலுக்கிப் போட்டால் முனி பார்ட் டூ ரெடி. முதல் பார்ட்டில் எங்கெல்லாம் ‘லாக்’ ஆகியது என்பதை கவனமாக பரிசீலித்து, காஞ்சனாவில் அதையெல்லாம் ‘ரிலீஸ்’ செய்திருப்பதில்தான் லாரன்ஸின் வெற்றியே இருக்கிறது. எந்திரன் ரிலீஸின் போதே ஜிலோவென்றிருந்த உட்லண்ட்ஸில் காஞ்சனாவுக்கு திருவிழாக் கூட்டமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழில் நிச்சயமாக ஹிட். தெலுங்கில் அதிநிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு பேய்ப்படத்தை பார்த்து தியேட்டரே வயிறு வலிக்க சிரித்துத் தீர்ப்பது அனேகமாக தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஒரு அட்டகாச காமெடி. அடுத்தக் காட்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் திகில். இப்படியே மாற்றி, மாற்றி அழகான சரமாக திரைக்கதையை தொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என்று எல்லாருமே இந்த உத்தி புரிந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவைசரளா. மனோரமாவின் உயரத்தை தாண்டுமளவுக்கு அபாரமான டைமிங் சென்ஸ் இவருக்கு.

லஷ்மிராய் மட்டும் தேவையில்லாமல் வருகிறார். ஃபேஸ் கொஞ்சம் சப்பை என்றாலும், பீஸ் நல்ல சாண்டல் வுட். அதிலும் இடுப்பு முட்டை பாலிஷ் போட்ட மொசைக் தரை மாதிரி பகட்டாக பளபளக்கிறது.

காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் ‘ரியல் மாஸ்’ என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.

முதல் பாதியின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும், இரண்டாம் பாதியில் தன் முதுகில் சுமக்கிறார் சரத்குமார், எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம். நீண்டகால திரையுலக அனுபவம் வாய்ந்த சரத் ‘அண்டர்ப்ளே’ செய்து அசத்தியிருக்கிறார். நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், கடைசி பகுதி ரத்த வெறியாட்டம் அச்சமூட்டுகிறது. படம் பார்த்த குழந்தைகளுக்கு நீண்டகால கொடுங்கனவுகளை வழங்கவல்லது. குறிப்பாக ரத்தச்சிவப்பான க்ளைமேக்ஸ் பாடல். இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தோடு ஒரு பாடலை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, பிரச்சார நெடியின்றி இயல்பாக ஒரு கமர்சியல் படத்தில் செருகியிருப்பதற்காகவே காஞ்சனாவை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்கலாம்.

காஞ்சனா – கட்டாயமா பார்க்கணும்ணா...