28 ஜூலை, 2011

டால்ஃபின்களை காப்பாற்றிய சிட்டுக்குருவிகள்!

கேம்பல் ரிவர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நகரம். இங்கிருக்கும் நதியில் அடிக்கடி கடல் உட்புகுந்து, கரைமட்டம் அதிகரிக்கும். அப்படியொரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் பாப் சோல்க் தன் வீட்டின் முகப்பில் இருந்த புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

யதேச்சையாக நதிக்கரையோரம் பார்த்தவருக்கு ஆச்சரிய அதிர்ச்சி. சுமார் பத்து அடி நீளமுள்ள நான்கு அபூர்வ வகை டால்பின் மீன்கள், கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கடல்நீர் உட்புகுந்தபோது இவற்றையும் அடித்துவந்து கரையோரத்தில் தள்ளிவிட்டு, மீண்டும் உள்வாங்கியிருக்கிறது.

நான்கு உயிர்களையும் காக்க வேண்டுமே? என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியவில்லை. யாரை தொடர்பு கொண்டு என்ன கேட்க வேண்டும்?

உடனடியாக உள்ளூர் மீன்வளத்துறைக்கும், கடல் தொடர்பான துறை அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முயற்சித்தார். அதிகாலையில் எந்த அலுவலகம்தான் இயங்கிக் கொண்டிருக்கும்?
டால்ஃபின்களை உயிரோடு காக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இச்செய்தியை பகிர்ந்தார். “நதியோரத்தில், என் வீட்டு வாசலில் நான்கு டால்ஃபின்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன”

பாப் செய்தது இவ்வளவுதான். இவருடைய செய்தியை இணையத்தில் அறிந்த உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன் அலற ஆரம்பித்தது. செய்தி கேட்ட தன்னார்வலர்கள் பலரும் பக்கெட்டோடு பாப் வீட்டுக்கருகே படையெடுக்க ஆரம்பித்தார்கள். சுமார் எண்பது பேர் காலை ஏழு மணிக்கே அவர் வீட்டு வாசலில் குழுமினார்கள். டால்ஃபின் மீட்புக்குழு தயார்.

பக்கெட்டில் நீரெடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டால்ஃபின்கள் மீது ஊற்றினார்கள், உடல் ஈரம் வற்றிவிடக் கூடாது என. அவை இருந்த இடத்தில் இருந்து நதிக்குள் செல்ல சிறு கால்வாய் வெட்டினார்கள். கால்வாயில் போதிய நீர் வருமாறு செய்தார்கள். டால்ஃபின்கள் அதுவாகவே மெதுவாக நகர்ந்து, ஆற்றுக்குள் நீந்தி, கடலுக்கு சென்றது.

சடுதியில் நடந்து முடிந்த விஷயங்கள் இவை. “இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. இணையத்தின் மூலமாக இப்படியெல்லாம் கூட நல்லது செய்யமுடியும் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்று இம்முறை ஆனந்த அதிர்ச்சியோடு சொல்கிறார் பாப் சோல்க்.

இணையம் இருமுனை கத்தி. அரட்டையடிக்கப் பயன்படும் சமூக வலைத்தளங்களை, சமூகப் பணிகளுக்கும் கூட பாப் பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

7 கருத்துகள்:

  1. \\இணையம் இருமுனை கத்தி. அரட்டையடிக்கப் பயன்படும் சமூக வலைத்தளங்களை, சமூகப் பணிகளுக்கும் கூட பாப் பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தலாம்.\\
    உண்மைதான் சகோ,
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் யுவா. சமுக வலைதளங்களின் வளர்ச்சி அளப்பரியது. இருப்பினும் நல்ல சேவைக்கு பயன்படுத்துவதை
    மட்டுமே வரவேற்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3:14 PM, ஜூலை 28, 2011

    இரு முனை கத்தி என்பதால் தான், உங்களை இன்னும் பொறுப்போடு இருக்கக் சொல்கிறோம்.

    Ramachandran BK
    Abu Dhabhi

    பதிலளிநீக்கு
  4. நல்ல வேளை கீச்சுகள், மூஞ்சி பொஸ்தகம்னு தமிழ்”படுத்தா”ம விட்டுட்டீங்களே..

    பதிலளிநீக்கு
  5. ரஜினி கடல் நோக்கி தனது இணக்கத்தை காட்டுகிறது மற்றும் எப்படி கரைக்கு அருகில் நின்று அவரை மனதில் ஒரு நிம்மதி அளிக்கிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை... மிக நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  7. நல்ல வேலை செய்தார்.....பாராட்டப்பட வேண்டிய விஷயம்

    பதிலளிநீக்கு