24 செப்டம்பர், 2011

புதுசுக்காக பழசை அழிக்கலாமா?

ஒரு பக்கம் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுவதில்லை என்று புகார். மறுபுறம் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், மைதானங்களையும், பூங்காங்களையும், நூற்றாண்டு மரங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்க வேண்டுமா என்று கேள்வி. அரசுக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலைதான்.

எங்கே?

தலைநகர் சென்னையில். சுமார் எழுபது லட்சம் மக்கள் வசிக்கும் ‘கசகச’ நெரிசலான தமிழகத்தின் தலைநகர், தன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. நகர் மக்களின் மிக முக்கியப் பிரச்சினையாக அன்றாட போக்குவரத்து சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்தடுத்து இதற்கான தீர்வுகளும், திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்து, ரயில், ஆட்டோ தனியார் வாகனங்கள் என்று லட்சக்கணக்கில் பெருகிப்போய்விட்ட வாகனங்கள் நெரிசலால் முடங்கிப்போய், சென்னைவாசிகள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை சாலைகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் இரு மார்க்கத்தில் இது திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வடசென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கி பிராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு 23.1 கி.மீ நீளத்தில் ஒரு மார்க்கம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை 22 கி.மீ நீளத்துக்கு மற்றொரு மார்க்கம். இத்திட்டத்துக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 41 சதவிகிதத் தொகையை மத்திய, மாநில அரசுகளும் மீதியை ஜப்பானிடம் கடன் வாங்கி திட்டத்தை முடிப்பதாகவும் ஏற்பாடு.

வண்ணாரப்பேட்டையிலிருந்து நந்தனம் சேமியர்ஸ் சாலை வரை பூமிக்கு கீழாகவும், அங்கிருந்து தூண்கள் மீதும் ரயில் பயணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதே போலவே சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை கீழே, அதன் பிறகு பரங்கிமலைவரை தூண்களில் ரயில் செல்லும்.

அயல்நாடுகளில் இருப்பதைப் போன்ற சுரங்க ரயில் நிலையங்கள் நம்மூரிலும் அமையப்போகிறது என்கிற மகிழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தாலும், திட்டத்துக்கான பணிகள் தொடங்க ஆரம்பித்தப் பிறகு ஆங்காங்கே பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. தங்கள் இடம் அரசுத் திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதெல்லாம் தனியார் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கைதான். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுத்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் முக்கியமானது.

மீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு அருகில் தூண்கள் அமைக்கப்பட விமான நிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. விமான ஓடுபாதைக்கு அருகே ரயில் செல்வதால், விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும் என்று இவர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பும் அமர்ந்துப் பேசி இருவருக்கும் பொதுவான திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார்கள்.

இதுபோலவே கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் அருகே பாதை மற்றும் பணிமனை அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் இடம் கோரியது மெட்ரோ ரயில். இதையடுத்து மார்க்கெட் பகுதியில் ஜவுளி மற்றும் மளிகை அங்காடிகள் கட்ட திட்டமிடப்பட்டிருந்த 35 ஏக்கர் நிலத்தை மெட்ரோ ரயிலுக்கு வளர்ச்சிக் குழுமம் தந்தது. இது கோயம்பேடு மார்க்கெட் வணிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கித்தந்து, வணிக விரிவாக்கத்துக்காக திட்டம் தீட்டி வைத்திருந்த இடத்தை, புதியதாக வந்த ஒரு திட்டத்துக்கு தாரை வார்ப்பது சரியல்ல என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

“கட்டுமானப் பணிகளுக்காக மெட்ரோ ரயில் நிலம் எடுத்துக் கொள்வதின் மூலமாக ஏற்கனவே பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் வாங்கப்பட்ட 25 கடைகள் அழிக்கப்படும். காய்கறி எடுத்துவரும் டிரக்குகளின் பார்க்கிங் இடம் பறிக்கப்பட்டால், கோயம்பேடு மார்க்கெட்டின் வழக்கமான பணிகளும் பாதிக்கப்படும்” என்கிறார் வி.ஆர்.சவுந்தரராஜன். இவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் லைசன்ஸ் ஹோல்டர்ஸ் அசோசியேஷனின் செயலாளர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஊடாக மெட்ரோ ரயில் ஊடுருவ திட்டமிடப்பட்டிருப்பதால் வெளியூர் பஸ்கள் வந்து செல்லும் பாதை, மாநகர பஸ்கள் நிற்கும் பகுதி ஆகியவற்றில் பெரும்பகுதி மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்டது. வெளியூர் பஸ்கள் வந்துச் செல்லும் பாதை இத்திட்டத்துக்கு வந்துவிட்டதால், அருகிலிருந்த குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேசி, அங்கிருந்து நிலம் பெறப்பட்டு புதுப்பாதை போடப்பட்டது. பெருகி விட்ட பஸ்களின் எண்ணிக்கை, நடைபெற்றுவரும் மெட்ரோ பணிகள் ஆகியவற்றால் வரலாற்றில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத போக்குவரத்து நெரிசலை இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் சந்தித்து வருகிறது. இதனால் பஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக புலம்பி வருகிறார்கள். இவர்களது புலம்பல் என்று கோபமாக மாறி வெடிக்குமோ என்கிற வெப்பச்சூழல் நிலவுகிறது.

எனவே இந்த நெரிசலைத் தவிர்க்க, பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக வளாகத்தின் பின்னாலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஐந்து ஏக்கர் நிலம் கோரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெளியூர் பேருந்துகள் பாதைக்காக நிலம் தானம் செய்திருக்கும் குடிநீர் வடிகால் வாரியம், மேலும் மேலும் நிலம் கேட்பதால் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. இச்சிக்கல் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சென்னையில் பதினாறு இடங்களில் பாரம்பரிய கட்டிடங்கள் இருக்கின்றன. பிராட்வே வெஸ்லி தமிழ் ஆலயம், சென்னை சட்டக்கல்லூரி, ரிப்பன் கட்டிடம், விக்டோரியா பொது அரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், இராமசாமி முதலியார் கட்டிடம், சிம்சன், அண்ணா சாலை பாரத ஸ்டேட் வங்கி, பாரத் காப்பீட்டுக் கழகம், ஹிக்கின் பாதம்ஸ் கட்டிடம், மே நாள் நினைவுப்பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் பாரம்பரியக் கட்டிடங்கள் ஆகும். இந்த பாரம்பரியக் கட்டிடங்களுக்கு அருகில் எந்த புதிய கட்டுமானப் பணியும் நடக்கக்கூடாது என்பது விதி. ஏனெனில் அந்தப் பணிகளால் இவற்றின் கட்டுமான உறுதி பாதிக்கப்படலாம்.

துரதிருஷ்டவசமாக மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வரும் வழியில் இந்த பாரம்பரியக் கட்டிடங்கள் பெரும்பாலானவை அமைந்து விட்டன. குறிப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கட்டிடம், ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடை ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது. எனவே பாரம்பரிய ஆர்வலர்கள் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம், மாநகர பாரம்பரிய கட்டிடங்களுக்கான பாதுகாப்புக் குழு புகார் கூறியிருக்கிறது. தங்கள் வசமிருக்கும் இடங்களையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முணுமுணுப்போடு தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சிக் குழுமத்துக்கு இதுபோல எட்டுத்திக்கிலுமிருந்து எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் பெரும் தலைவலியை தந்துக் கொண்டிருக்கிறது.

முதலில் பூந்தமல்லி சாலையில் அமையவிருந்த மெட்ரோ ரயில் பணிகள் இடதுபுறமாகவே திட்டமிடப்பட்டது. அப்பக்கம் முழுக்க முழுக்க தனியார் இடம் என்பதால், அவற்றைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை கணக்கில் கொண்டு வலப்புறமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, நெய்வேலி இல்லம், பச்சையப்பன் கல்லூரி என்று அரசு தொடர்பான இடங்கள் என்பதால் இடம் கேட்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நினைத்தார்கள். ஆனால் தங்கள் கல்லூரியில் இருந்து பிடி மண்ணை கூட தரமுடியாது என பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். “எங்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 300 மரங்கள், இத்திட்டத்தால் வெட்டுப்படும் வாய்ப்பிருக்கிறது. அவற்றை காக்கும் வரை போராடுவோம்” என்கிறார் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவரான நரேஷ்குமார்.

மாணவர்களை சமாதானப்படுத்தும் படி பேராசிரியர்களை கேட்டால், அவர்களும் மாணவர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மாதிரியான போராட்டங்களில் கலந்துகொள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாகி விட்டது.

இக்கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மரங்கள் எங்கள் சகோதரர்கள் என்று அறிவிக்கும் பொருட்டு, மரங்களுக்கு ‘ராக்கி’ கட்டும் போராட்டம் ஒன்றினையும் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் இக்கல்லூரிக்கு எதிரிலிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களோடு கைகோர்த்தார்கள்.

எக்ஸ்னோரா அமைப்பின் தலைவரான எம்.பி.நிர்மல், இத்திட்டத்தால் மரங்கள் வெட்டப்படுவதை கடுமையாக எதிர்க்கிறார். “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்கள் பலவற்றையும் வெட்டிவிட்டால், என்ன விலை கொடுத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. ஏற்கனவே மரங்கள் நிறைந்த சோலைகளாக இருந்த கீழ்ப்பாக்கம், ஷெனாய்நகர் ஆகிய பகுதிகள் மரங்களை இழந்து சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போயிருக்கிறது. நன்கு வளர்ந்த 300 மரங்களை வெட்டிவிட்டு, 3000 விதைகளை விதைக்கிறோம் என்று சொன்னால் கூட அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்கிறார்.

இப்பகுதியில் மட்டுமல்ல. நகரில் பல இடங்களில் வெட்டப்படும் மரங்களைப் பார்த்து, இயற்கை ஆர்வலர்கள் கடுப்பு ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் நகர் போன்ற இடங்களில் பெரிய நூற்றாண்டு மரங்கள் வெட்டப்படுவதை பதைபதைப்போடு செய்வதறியாமல் பார்த்து நிற்கிறார்கள். இதற்காக இவர்கள் என்று நீதிமன்றப்படி ஏறப்போகிறார்களோ என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் டென்ஷன்.

இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்து வெளிப்படையாக நடந்து வரும் பிரச்சினைகள். இதுபோல தினமும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு இடையேதான் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை தொழிற்கல்வி நிலையம் அடிபடும் என்று தெரிகிறது. சைதாப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவ ஆய்வு நிலையம் மற்றும் கட்டிடங்கள், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, பனகல் மாளிகைக்கு எதிரில் அமைந்திருக்கும் பேருந்து நிலையம் ஆகியவையும் கபளீகரம் ஆகும்.

பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் அழித்து ஒரு வளர்ச்சிப் பணி இவ்வளவு முணுமுணுப்புகளையும், சாபங்களையும் பெற்றுக்கொண்டு நடைபெறுவது வருத்தத்துக்குரியது. சென்னை போன்ற திட்டமிடப்படாமல் உருவான நகரங்களில், ஏற்கனவே வளர்ந்துவிட்ட பகுதிகளில், புதியதாக ஒரு பெரிய வளர்ச்சிப்பணியை முன்னெடுக்கும் போது இம்மாதிரிப் பிரச்சினைகள் தவிர்க்க இயலாதது.

எனவேதான் நகரங்களில் மட்டுமே அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொண்டிருக்காமல், துணை நகரங்கள் அமைத்து வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலகாலமாக கோரிவருகிறார்கள்.

சென்னைக்கு அருகே திருமழிசை அருகில் 2,160 கோடி ரூபாய் செலவில் துணை நகரம் அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

வளர்ச்சியை ஒரே இடத்தில் குவித்தால் அது இப்படித்தான் வீங்க ஆரம்பிக்கும். பரவலாக்குவதின் மூலமாக மட்டுமே இம்மாதிரியான பிரச்சினைகளை களைய முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

23 செப்டம்பர், 2011

எட்டுத் திக்கும்...

22 செப்டம்பர், 2011

மறதி

அந்த நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது டீனேஜில் இருந்தேன். குட்டிப்பையன் என்பதால் அங்கே என் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அக்காக்கள் என்னை ஒரு ஆண்மகனாகவே கருத மாட்டார்கள். அந்த டிபார்ட்மெண்டின் டே ஷிப்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முழுக்க முழுக்க அல்லி ராஜ்ஜியம்தான். குழந்தையாக நினைத்து என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள் அக்காக்கள். வேலை பார்த்துக் கொண்டே, அவரவர் அந்தரங்க விஷயங்களை அசால்ட்டாக பேசிக் கொண்டிருப்பார்கள் (பொதுவாக நேற்றிரவு தூங்க ஏன் லேட்டானது மாதிரி ‘பலான’ விஷயங்கள்). வளர்சிதை மாற்றக் கிளர்ச்சிகள் கொண்ட வயது என்பதால் எனக்கு வெக்கம், வெக்கமாக வரும்.

இந்த குழந்தைப்பையன் இமேஜ் எனக்கு இம்மாதிரியான தொந்தரவுகளை கொடுத்தாலும், வேறு சில அனுகூலங்களையும் கொடுத்தது. லே-அவுட், கேமிரா, எடிட்டோரியல் என்று எல்லா இடங்களுக்கும், யாரையும் கேட்காமல் சுதந்திரமாக சுற்றி வரும் சுதந்திரம் கிடைத்தது. இந்த சுதந்திரமும் ஒரு வகையில் தொந்தரவுதான். கேமிரா ரூமுக்குள் போனால், “டேய் அந்த எட்டாவது பக்கம் நெகடிவ்லே ஒழுங்கா ‘ஒபேக்’ வைடா” என்று கேமிரா அண்ணன் வேலை வாங்குவார். லே-அவுட் பக்கமாகப் போகும்போது, “நாலாம் பக்கம் ஏழாவது காலத்திலே பாட்டமுலே இந்த மேட்டரை ஒட்டுறா. நல்லா ஸ்ட்ரெயிட்டா ஸ்கேல் வெச்சிப் பார்த்து ஒட்டணும்” என்று ஃபோர்மேன் விரட்டுவார். ஏதாவது கோணைமாணையாக அமைந்துவிட்டால் தலையில் ‘குட்டு’ கூட விழும்.

எடிட்டோரியலுக்குப் போய், சப் எடிட்டர்களால் எழுதப்பட்ட மேட்டர்களை கம்போசிங்குக்காக வாங்கிவர வேண்டியது எங்கள் ஃபோர்மேனின் வேலை. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ‘மேட்டர்’ ஏதேனும் இருக்கிறதா என்று போய் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஃபோர்மேன் கொஞ்சம் சோம்பேறி. கால்நீட்டி வசதியாக உட்கார்ந்துக் கொண்டு என்னை அந்த வேலையை செய்ய துரத்தியடிப்பார்.

அப்படி எடிட்டோரியலுக்கு போகும்போதுதான் அந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தேன். ஒருவர் உயரமாக, சிகப்பாக இருப்பார். அவர் பெயர் ரமணன். மற்றொருவர் கொஞ்சம் மாநிறமாக, ஒல்லியாக கொஞ்சம் கூன் போட்டமாதிரியிருப்பார். இவர் பெயர் சரஜ். டெலிபிரிண்டரில் வரும் பி.டி.ஐ., யூ.என்.ஐ., செய்திகளை வாசித்துக் கொண்டே நியூஸ் பிரிண்டில் வேகமாக மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருப்பார்கள். லோக்கல் ரிப்போர்ட்டர்களிடமிருந்து மொன்னையாக எழுதப்பட்டு வந்த ரிப்போர்ட்டுகளையும், ஒரு லேங்குவேஜுக்கு கொண்டுவந்து மாற்றி எழுதுவார்கள். இரவு பத்தரை மணிவாக்கில் வேலூர் எடிஷன் பிரிண்டிங்குக்கு போகிறவரை இவர்கள் மாங்குமாங்குவென்று எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.

அதன்பிறகு சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்பிரஸ் பில்டிங்குக்கு அருகிலிருக்கும் செந்தில் டீக்கடைக்கு போய் ‘தம்மு, கிம்மு’ அடித்துவிட்டு ரிலாக்ஸாக வருவார்கள். லே-அவுட், கம்போஸிங், கேமிரா என்று ரோந்து சுற்றுவார்கள். ‘ஸ்டாப் பிரஸ்’ மேட்டர்கள் ஆடிக்கு ஒருமுறையோ, அமாவசைக்கு ஒருமுறையோதான் வருமென்பதால் பத்தரை டூ ரெண்டு இவர்களுக்கு அவ்வளவு வேலையிருக்காது.

அப்போதெல்லாம் ‘சிறுகதை கதிர்’ என்கிற ஒரு பத்திரிகையை கையில் வைத்திருப்பேன். அதில் பெ.கருணாகரன் எழுதும் ‘காதல் தோல்விக் கதைகள்’ என்றொரு தொடர் வந்துக் கொண்டிருந்தது. ஏதாவது கட்டையான, சிகப்பான ஃபிகரை பார்த்தால் உடனே காதலிக்கத் தொடங்கி, அது நம்மை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் ‘காதல் தோல்வி’ என்று தட்டையாக புரிந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்த வயது. எனவே காதல் தோல்விக் கதைகள் இயல்பாகவே என்னை ஈர்த்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் என்னிடம் இருந்த சிறுகதைக் கதிர் இதழ் ஒன்றினை வாங்கிப் புரட்டினார் சரஜ். பெரிய அரசியல் தலைவர் ஒருவருடைய மனைவி கொடுத்திருந்த பேட்டி கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதற்குத் தலைப்பு இப்படி வைத்திருந்தார்கள். ‘நான் ஒரு சுமைதாங்கி‘. இந்த தலைப்பைப் பார்த்துவிட்டு சரஜ் சொன்னார். “தலைப்பு ரொம்ப ஆபாசமா வெச்சு இருக்காங்களே?”. என்ன ஆபாசம் என்று எனக்கு அப்போது புரியவில்லை. ரமணன் வெளிப்படையாக விஷயத்தை சொல்லி என்னை வெட்கப்பட வைத்தார்.

சரஜூம், ரமணனும் என்னை அந்த வயதில் வெகுவாக ஈர்த்த பர்சனாலிட்டிகள். செய்திகளுக்கு இவர்கள் வைக்கும் தலைப்பு அபாரமான ஹூயூமர் சென்ஸோடு இருக்கும். அப்போதெல்லாம் பத்திரிகைக் காரர்கள் பெரும்பாலும் பஜாஜ் எம்-80 வைத்திருப்பார்கள். வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ஓட்டும் வண்டி என்றுதான் விளம்பரம்கூட வரும். ஒருநாள் இவர்களைப் போலவே பெரியவனாகி(!) வீரமுள்ள நிருபனாக பஜாஜ் எம்-80ல் வலம் வர வேண்டும் என்று மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன்.

தோழர்களே! ஏதோ ‘பீமா’ படத்தின் திரைக்கதை போல இருப்பதாக ஃபீல் செய்கிறீர்கள் இல்லையா? இப்படித்தான் சினிமாக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகள் நம்ப முடியாததாகவும், திருப்பங்கள் நிறைந்ததாகவும் சில சமயங்களில் அமைந்துவிடும். ஓக்கே, நிகழ்காலத்துக்கு வந்துவிடுவோம்.

ஓரிரு வருடத்துக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாக்களில் ஒரு இலக்கியப் பெரியவரை கண்டேன். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தொப்பை, காதோர நரை, சதைப்பிடிப்பான முகமென்று இருக்கும் இவரை எங்கேயோ பார்த்த ஞாபகமாகவே இருந்தது. யார் என்னவென்று விசாரித்துப் பார்த்தால் ‘எழுத்தாளர் சரஜ்’ என்றார்கள். இவரு அவராதான் இருப்பாரோ என்று சந்தேகம். நேரடியாக கேட்கவும் ஏதோ தயக்கம். நான்கைந்து முறை அவர் முன்பாக அப்படியும், இப்படியுமாக நடந்தேன். ஒருவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டு அவராகவே பேச வாய்ப்பிருக்கிறது இல்லையா? இதற்கிடையில் என் உருவத்திலும் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மீசை வளர்ந்திருக்கிறது. ஹேர்ஸ்டைல் மாறியிருக்கிறது.

ம்ஹூம். அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் இது அவர் அல்ல. அவர் ஒல்லியாக இருப்பார். லைட்டாக கூன் போட்டிருப்பார். பிரபுதேவா மாதிரி பேக்கீஸ் பேண்ட் எல்லாம் போட்டிருப்பார். இவர் வேறு மாதிரியாக சினிமா டாக்டர் மாதிரி இருக்கிறாரே?

அடுத்தடுத்து சில இடங்களில் பார்த்துக் கொண்டு, புன்னகைத்து ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது.. அடக்கடவுளே! அவரேதான் இவர்...

இப்போது அவர் நெம்பர் ஒன் நாளிதழின் செய்தி ஆசிரியர். நான் வீரமுள்ள நிருபர் வீரபத்திரன் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், என்னிடம் பஜாஜ் எம்-80யும் கூட இல்லையென்றாலும், ஒரு வாரப்பத்திரிகையில் சீனியர் ரிப்போர்ட்டர்.

ஆனாலும் அவருக்கு என்னை மட்டும் அடையாளமே தெரியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அந்தக் காலத்தில் அவரோடு இருந்ததை சொல்லிப் பார்த்தேன். கூட இருந்த நண்பர்களின் பெயரையெல்லாம் சொல்லிப் பார்த்தேன். வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிக்கரணம் அடிக்காதது ஒன்றுதான் பாக்கி. என்ன சொல்லி நான்தான் அது என்று அவருக்கு தெரியப்படுத்துவது? கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தினேன்.

“அண்ணே நான் மானு அக்கா டீமுலே இருந்தேனே?”

அவருக்கு சட்டென்று முகம் மலர்ந்தது. நாணத்தால் கன்னம் சிவந்தது மாதிரியும் தெரிந்தது. எப்படியோ நினைவு வந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

ம்ஹூம்.

சரஜுக்கு மானு அக்காதான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறாளே தவிர, என்னை சுத்தமாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இரண்டு வருடங்களாக இதேதான் நிலைமை. அவரைப் பொறுத்தவரை நான் புது மனிதன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானவன்.

ரமணன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவருடைய நினைவிலும் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் அவரும் அக்காக்களை மட்டும் மறந்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

பையன்களை மட்டும் கச்சிதமாக மறந்துவிடக் கூடிய இந்த நோய்க்கு என்ன பெயர் என்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதிதான் கேட்கவேண்டும்.

20 செப்டம்பர், 2011

ஈரான் – மர்ஜானே சத்ரபி

‘ஈரான்’ – உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?

1. மத அடிப்படைவாதம்
2. பல லட்சம் பேரை பலிகொண்ட நீண்டகால ஈரான் – ஈராக் கொடூர யுத்தம்
3. கோமேனி
4. சல்மான் ருஷ்டிக்கு தூக்குத்தண்டனை
5. சில உன்னத உலகத் திரைப்படங்கள்

சரியா?

இன்னும் யோசித்தால் மேலும் ஐந்து விஷயங்களை அதிகபட்சமாக உடனடியாக சேர்க்க முடியும் என்று தோன்றுகிறது. நமக்கும் இவற்றைத் தவிர வேறொன்றும் புதியதாக இதுவரை நினைவுக்கு வந்ததில்லை. ஈரான் பற்றியும், ஈரானியர்கள் பற்றியும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு மதிப்பீட்டை மீளாய்வு செய்யவைக்கிறது இரு புத்தகங்கள். பெர்சேபோலிஸ் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டவை தமிழில் ‘விடியல்’ வெளியீடாக விடிந்திருக்கிறது.

1969ல் பிறந்த மர்ஜானே சத்ரபி என்ற பெண் குழந்தைப் பருவத்தில் தான் கண்ட ஈரானை எழுத்தாகவும், சித்திரமாகவும் சிரத்தையுடன் வடித்திருக்கிறார். ‘சித்திரமா?’ என்று ஆச்சரியப் படுவீர்களே? ஆம். ஓவியரான மர்ஜி (இப்படி சொல்லுறது ஈஸியா இருக்கில்லே?) காமிக்ஸ் வடிவில் தன் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். வெகுசீரியஸான காமிக்ஸ். குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளும் படிக்கலாம். தப்பில்லை. ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் நூலை பிரித்ததுமே பல ஆச்சரியங்கள் புதையலாய் புதைந்திருக்கிறது. கண்டுகளித்து, வாசித்து உணருங்கள். தீவிரவாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

மர்ஜி டெஹ்ரானில் பிரெஞ்சுப் பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கியவர். பொதுவுடைமை சித்தாந்தங்களில் நன்கு பரிச்சயம் கொண்ட பாரம்பரியத்தில் பிறந்தவர். இஸ்லாம் புரட்சி ஈரானில் ஏற்பட்டபோது மர்ஜிக்கு பத்து வயது இருக்கலாம். திடீர் திடீர் கட்டுப்பாடுகள். பெரும்பாலானவை பெண்ணடிமைத் தனத்தின் உச்சம். சட்டம் அபத்தக் களஞ்சியம்.

ஈரான் கொடுங்கோல் மன்னராட்சி, ஏகாதிபத்திய அடக்குமுறை, சர்வாதிகார அட்டூழியங்கள் என்று மாறி மாறி ஆட்சிமாற்றங்கள கண்ட நாடு. துரதிருஷ்டவசமாக ஒரு ஆட்சியில் கூட மக்கள் நிம்மதியாய், சுதந்திரமாய் உணர்ந்ததில்லை. இப்படியிருந்த நிலையில் தொடங்கிய ஈரான் – ஈராக் யுத்தம் பல பேரின் வாழ்க்கை வரைபடத்தை புரட்டிப் போட்டது. எண்ணற்றவர்கள் அகதிகளாயினர். திக்கற்றவர்கள் தியாகிகளாயினர். அதாவது உயிரை இழந்தனர். இறைவனின் கருணை கொஞ்சூண்டு மிச்சமிருந்தது போலிருக்கிறது. இன்றும் ஈரான் மிஞ்சியிருக்கிறது.

இந்தப் போருக்குப் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் குறுக்குசால் விளையாட்டு இருந்தது. இருநாடுகளும் பலத்த அழிவுக்குப் பின்னரே இதை உணர்ந்தன. ஈராக் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய பிரச்சினையில் அச்சுறுத்தலாக இருந்தது. ஈரான் மத்திய கிழக்கு ஆசியாவிலேயே இராணுவபலம் மிகுந்த நாடாக வலிமைபெற்று திகழ்ந்தது. எட்டாண்டு கால தொடர்போரின் விளைவால் இருநாடுகளிலும் பெருமளவு இராணுவ மற்றும் பொருளாதார‌ வலிமை குன்றியது. குழம்பிய எண்ணெய்க் குட்டையில் மீன் பிடித்தது அமெரிக்காவும், பிரிட்டனும்.

இரு நூல் முழுவதுமே சொல்லப்பட்டிருப்பது மர்ஜியின் வாழ்க்கை என்றாலும், இதன் மூலமாக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால ஈரானையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஈரானியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள். ஆனால் திறமையானவர்கள். மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் பலமாக எள்ளல் செய்யப்படுபவர்கள். இந்தியர்களைப் போலவே ஆதிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடு, குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மையோடே பிறக்கிறார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் மக்குகளாக இருக்கிறார்கள். மாய்க்கன்களாக இருக்கிறார்கள். கூமூட்டைகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக மனிதாபிமானம் கிஞ்சித்துமற்ற காட்டுமிராண்டிகள் ஈரானின் ஆட்சிக்கட்டிலை தொடர்ந்து அலங்கரிக்கிறார்கள். மக்களையும், நாட்டின் வளர்ச்சியையும் அலங்கோலப் படுத்துகிறார்கள்.

அகதியாய் வாழ்வது எவ்வளவு அவலம் என்பதற்கு மர்ஜியின் வாழ்க்கையே சாட்சி. விமானங்கள் வீசும் வெடிகுண்டுகளுக்கிடையே ஏது பள்ளியும் கல்வியும்? கல்வி கற்க ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு பயணிக்கிறாள். ஈழத்தமிழர்களின் அவலம் இக்கட்டங்களை வாசிக்கும்போது இயல்பாகவே நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

ஐரோப்பியர்களால் தன் மண் கேவலப்படுத்தப்படும் போது மனதுக்குள் குமுறுகிறாள். அடக்கமுடியாத நேரங்களில் அடங்க மறுத்து பொங்கியெழுகிறாள். கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கியிருந்தபோது ஒரு நாள்.

மதர் சுப்பீரியர் : ஈரானியர்களைப் பற்றிச் சொல்லப்படுவது சரியாக இருக்கிறது. அவர்களுக்கு நாகரிகமே தெரியாது.

மர்ஜி : உங்களைப் பற்றி சொல்லப்படுவதும் உண்மைதான். கன்னியாஸ்தீரிகளாக ஆவதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் வேசியாக இருந்தீர்கள்.

இப்படி வாதிடும்போது மர்ஜிக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். இவ்வளவு வாயாடியான பெண் ஒரு இடத்தில் நீடிக்க முடியுமா? வீடு வீடாக மாறி எப்படியோ பள்ளிக் கல்வியை முடிக்கிறாள்.

ஈரானிய கலாச்சாரத்தை ஒட்டியும் வாழ முடியவில்லை. ஈர்க்கும் ஐரோப்பிய கலாச்சாரத்தின் பால் முழுவதுமாக விழவும் முடியவில்லை. தடுமாறுகிறாள் மர்ஜி. காதல் வசப்படுகிறாள். நிராகரிக்கப் படுகிறாள். காதலிக்கப் படுகிறாள். போதை வசமாகிறாள். தெருத்தெருவாய் அலைகிறாள். வெறுத்துப் போய் ஈரானுக்கு திரும்புகிறாள்.

இப்படி போகிறது அவளது வாழ்க்கை. ஈரானுக்கு திரும்பியவள் உருக்குலைந்த நாட்டையும், மக்களையும் கண்டு மனம் வெதும்புகிறாள். சோர்ந்து சுருண்டு விடுகிறாள். மீண்டும் பல்கலையில் சேர்ந்து பட்டம் பயில்கிறாள். காதலிக்கிறாள். திருமணம் செய்துகொள்கிறாள். விவாகரத்து செய்கிறாள். பிரான்சுக்கு பறக்கிறாள்.

ஒரே நேர்க்கோட்டில் அமையாதது தான் மர்ஜியின் வாழ்க்கை. அவளது வாழ்க்கையை ஒட்டியே நாட்டின் நடப்பையும் வழிகாட்டி போல சொல்லிக்கொண்டே வருவது நல்ல யுத்தி. சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு இருநூல்களிலும் பஞ்சமேயில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம். வாசிக்க வாசிக்க பேரின்பம். சித்திரங்களை திரும்ப திரும்ப காண கண் கோடி வேண்டும்.

மர்ஜானே சத்ரபியின் ஓவியங்கள் தத்ரூபமாக இருப்பதோடு சூழலின் உணர்வை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. தமிழில் அற்புதமாக எஸ்.பாலச்சந்திரன் மொழிமாற்றம் செய்திருக்கிறார். ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த இரு தொடர்நூல்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.

நூல்கள் :

1. ஈரான் – ஒரு குழந்தைப் பருவத்தின் கதை (154 பக்கம்)
2. ஈரான் – திரும்பும் காலம் (188 பக்கம்)

நூலாசிரியர் : மர்ஜானே சத்ரபி

தமிழில் : எஸ்.பாலச்சந்திரன்

விலை : நூலொன்றுக்கு தலா ரூ. 100/-

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர் – 641 015. தொலைபேசி : 0422-2576772

19 செப்டம்பர், 2011

எங்கேயும் எப்போதும்

முதல் காட்சியே க்ளைமேக்ஸாக வைக்க இயக்குனருக்கு பயங்கர தில் இருக்க வேண்டும். அங்காடித்தெரு இயக்குனருக்கு பிறகு இந்த தில் எம்.சரவணனுக்கு வாய்த்திருக்கிறது. இதுமாதிரியான நான்லீனியர் படங்களுக்கு திரைக்கதை சுவாரஸ்யமாக அமையாவிட்டால் மொத்தமும் போச்சு. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் பேருந்து கிளம்புகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசுப்பேருந்து கிளம்புகிறது. நான்கு மணிநேரத்தில் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது... ஒன்லைனர் இவ்வளவுதான்.

இடையிடையே பேருந்துகளின் பயணத்தை ஒரு த்ரில்லர் படத்துக்கான எஃபெக்ட்டோடு காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குனரோடு கேமிராமேன், இசையமைப்பாளர், எடிட்டர், சிஜி கலைஞர் என்று அனைவரும் கைகோர்த்து அசத்தியிருக்கிறார்கள்.

இரண்டு காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமென்றாலும் கிளைக்கதைகளாக விரியும் ஒருவரி குட்டிக்கதைகள் சுவாரஸ்யம். மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது துபாய்க்கு போன கணவன், செம ஃபிகரை பிராக்கெட் போடும் இளைஞன், புதுமனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே வரும் மாப்பிள்ளை என்று படம் முழுக்க சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் பல.

இயக்குனர் இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பாக பல பஸ் ஸ்டேண்டுகளிலேயே தேவுடு காத்திருப்பார் போல. பூ, பழம் விற்பவரில் தொடங்கி, கண்டக்டர், டிரைவர் வரை பல பாத்திரங்களை உண்மைக்கு வெகு அருகாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. குறிப்பாக திருச்சி அரசுப்பேருந்து கண்டக்டர் சொல்லும் வசனம். “தம்பி. நாலு சீட்டு தள்ளி வுட்டு உட்கார்ந்துக்கப்பா”.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் பெண்ணின் காதல் இயல்பாக பூ மலர்வது மாதிரி மலர்கிறது என்றால்.. திருச்சியில் அரசூர் பையன் மீதான நர்ஸின் காதல் அடாவடி ரகம். கிட்டத்தட்ட மவுனராகம் கார்த்திக்கின் கேரக்டர் அஞ்சலிக்கு. ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஹீரோவாக ஃபார்ம் ஆகிவிட்ட ஜெய்யின் அண்டர்ப்ளே ஆச்சரியம்.

15-பி பஸ்ஸில் ஏற்றிவிட மட்டுமே ‘அசைன்’ செய்யப்படும் ஷ்ரவன் கடைசியில் ஆபிஸ் லீவு போட்டுவிட்டு நாள் முழுக்க பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் அனன்யாவோடு சுற்றுவது கொஞ்சம் லாஜிக் மீறலாகத் தெரிந்தாலும் இண்டரெஸ்டிங்காக இருப்பதால் மன்னித்து விடலாம்.

தொண்ணூறு சதவிகிதம் ‘ஃபீல்குட்’ மூவியாக பயணப்படும் ‘எங்கேயும் எப்போதும்’ கடைசி இருபது நிமிடங்களில் கலங்க வைக்கிறது. குறிப்பாக ‘அப்பா போன் எடுங்கப்பா’ ரிங்டோன் ஒலிக்கும்போது, இடிஅமீன் படம் பார்த்தால் கூட கண்ணைக் கசக்கிக் கொள்வார். படத்தின் இறுதியில் ரசிகனுக்கு கிடைப்பது நெஞ்சு முழுக்க தாங்க முடியாத சோகம்தான்.

படம் பார்த்தவர்கள் ’வீச்சு’ தாங்கமுடியாமல் நேராக டாஸ்மாக்குக்கு ஓடுவதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

சாந்தி தியேட்டர் அருகேயிருந்த டாஸ்மாக்கில் கிரவுடு தாங்காமல், எக்ஸ்பிரஸ் மாலுக்கு எதிரே மூத்திரச்சந்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்குக்கு ஓடி (நேரம் இரவு 9.50 – டாஸ்மாக் மூடும் நேரம் சரியாக 10.00) அங்கும் குடிமகன்களின் பயங்கரவாத குடிவெறி கூட்டம் காரணமாக சரக்கு வாங்க முடியாமல், மை பாருக்குச் சென்று.. கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் உள்ளிட்ட ரெகுலர் பிராண்டுகளில் சூப்பர் ஸ்ட்ராங்க் பீர் கிடைக்காமல், டென் தவுசண்ட் சூப்பர் ஸ்ட்ராங்க் என்கிற ஏடாகூட சாராயநெடியோடு கூடிய பாடாவதி சரக்கினை உள்தள்ளி, தலையெழுத்தேவென்று எண்பது ரூபாய் பீருக்கு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து, டபுள் போதையாகி, செயினாக நாலைந்து தம்மடித்து, மாணிக்சந்தை வாயில் கொட்டி குதப்பியவாறே ஃபீல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, தோழர் நரேன் சொன்னார், “தலைவா. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”.