16 நவம்பர், 2011

துள்ளுவதோ இளமை!

வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கும் ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்துக்கள் (வெங்காயம்!) வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர் மட்டுமே. சுவற்றுக்கு கீழே நான்கைந்து செங்கல்களை போட்டு உயரம் கூட்டி பக்கத்து கிரவுண்டில் விளையாடும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பது எங்கள் பொழுதுபோக்கு. நீலநிறத் தாவணி, வெள்ளை ஜாக்கெட், இரட்டைப் பின்னல் என்று Auspicious ஆக அந்த காலத்தில் இருந்த மாதிரியான பிகர்களை இப்போதெல்லாம் காணமுடியவில்லை.

நான் ஒன்பதாம் வகுப்பு அனுவை சைட்டு அடித்துக் கொண்டிருந்தாலும் (அது என் மாமா பொண்ணாக்கும்), அவ்வப்போது +1 படிக்கும் தேன்மொழியையும் ஜூட் விட்டுக் கொண்டிருந்தேன். காரணம் தேனு வெங்கடேசின் ஆளு. அவனை வெறுப்பேற்றவே பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் தேனுவை வேண்டுமென்றே சைக்கிளில் ஃபாலோ செய்வேன். அனுவைப் பொறுத்தவரை என்னுடைய மாமா பெண் என்பதால் மட்டுமே எனக்கு ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவளுக்கு என் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கும் ஒரு பிகர் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவே “அனு என்னோட ஆளு” என்று பசங்களிடம் சொல்லி வைத்திருந்தேன்.

அது ஒரு சுபயோகத் திருநாளாக இருந்திருக்கக் கூடும். வழக்கம்போல செங்கல் போட்டு பக்கத்து கிரவுண்டில் ஸ்கிப்பிங் விளையாடும் பிகர்களின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் “என்ன பெட்டு?” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்ட வெங்கடேசுக்கு தான் அந்த யோசனை வந்தது.

“தில்லு இருக்கிற எவனாவது ஸ்கூல் டைம்லே பக்கத்து கிரவுண்டை ஒரு சுத்து சுத்தி வரணும். எவனாவது அதை சாதிச்சி காட்டினா, அவனை நான் பீராலேயே குளிப்பாட்டுறண்டா. பெட்டு ஓகேவா?”

அவன் கீரி என்றால், நான் பாம்பு. மசால் வடையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் எலி மாட்டும் என்றும் அவனுக்கு தெரியும். அவன் பெட் கட்டினால் சும்மாவாச்சுக்கும் அவனை வெறுப்பேற்றவாவது நான் சிலிர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை அவன் வைத்திருப்பது அக்னிப் பரிட்சை. கரணம் தப்பினாலும் கருகிவிடுவோம். இருந்தாலும் சவால் விட்டிருப்பது என் பிரியத்துக்குரிய எதிரி ஆயிற்றே? ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். கவுரவப் பிரச்சினை.

லேடிஸ் ஸ்கூல் ஹெட்மாஸ்டரை நினைத்தால் தான் கொஞ்சம் பீதியாக இருந்தது. காதலன் படத்தில் வரும் பெண் போலிஸ் அதிகாரி மாதிரி தோற்றம். எங்கள் ஹெட் மாஸ்டரிடம் போட்டுக் கொடுத்து விட்டால் முதுகுத்தோல் உறிந்துவிடும். எங்கள் ஹெச்.எம்.முக்கும், அந்த ஹெச்.எம்.முக்கும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகியிருந்ததாக கிசுகிசு.

சிவா உசுப்பி விட்டான். “கிச்சா இருக்கறப்பவே பெட்டு கட்டறியா வெங்கடேசு? திருப்பதிக்கே லட்டா, சிவகாசிக்கே பட்டாசா, ரஜினிக்கே ஸ்டைலா?”

“டேய்.. டேய்.. நிறுத்துரா. தில்லு இருக்கறவன், ஆம்பளைன்னு சொல்லிக்குறவன் எவனா இருந்தாலும் என் பந்தயத்தை ஒத்துக்கலாம். முடியலன்னா சொல்லிடுங்க. எனக்கொண்ணும் நஷ்டம் இல்லே. நீங்க ஓடினாலும் சரி, ஓடாம பாதியிலே திரும்பிட்டாலும் சரி. எனக்கெதுவும் கொடுக்க வேண்டியதில்ல. ஜெயிச்சுட்டா மட்டும் ஜெயிச்சவனுக்கு மட்டுமில்லே, நம்ம செட்டு மொத்தத்துக்கும் பீரோட பிரியாணி!” லேடிஸ் ஸ்கூல் க்ரவுண்டை சுற்றி வருவது ஏதோ உலகத்தை சுற்றி வருவது மாதிரியான பில்டப் கொடுத்து வெங்கடேஷ் பேசினான்.

எனக்கு சுர்ரென்று ஏறியது. “நாளைக்கு ஈவ்னிங் மூணரை மணிக்கு நான் சுத்தறேண்டா. ஈவ்னிங் ஏழு மணிக்கு ரம்பா ஒயின்ஸ்லே பீரு, எட்டரை மணிக்கு பாய் கடையிலே பிரியாணி. ஓக்கேவா மச்சி?”

எலி கரெக்டாக மசால் வடைக்கு மாட்டியதை நினைத்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷ், “ஆல் த பெஸ்ட் மச்சான்!” என்று சொல்லிவிட்டு சபையை கலைத்தான்.

சிவாவோடு சேர்ந்து ப்ளான் போட்டேன். மூணரை மணிக்கு எங்களுக்கு பீ.டி. பீரியட். கிரிக்கெட் விளையாடுவது போல பாவ்லா காட்டி பந்தை பக்கத்து கிரவுண்டில் எறிந்துவிட்டு, பந்தெடுக்கப் போவது போல, கிரவுண்டை ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பந்தெடுக்க வந்தேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

மூன்றரை மணி என்பதால் ரெண்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர்களும் சாப்பிட்டு விட்டு லைட்டாக கிறக்கத்தில் இருப்பார்கள். சரியான நேரம். ஹெட்மாஸ்டர் ரூமுக்கு அருகில் ஒரு உளவாளியை, கேடயமாக நிறுத்தி மாஸ்டர் ரவுண்ட்ஸுக்கு வருகிறாரா என்று கண்காணிப்பதாக ஏற்பாடு. செந்தில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

மூன்று மணிக்கெல்லாம் எங்கள் குழு மைதானத்தை முற்றுகையிட ஆரம்பித்தது. ஸ்டெம்பு நட்டு பவுலிங் செய்து கொண்டிருந்தேன். சிவா பேட்டிங். வெங்கடேஷை காணவில்லை. பெட்டு கட்டிவிட்டு இந்த நாய் எங்கே போய்த் தொலைந்தது?

அவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாட்சிகளின் முன்னிலையில் இன்று சாதித்தே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன். பெட்டுக்காக மட்டுமில்லாமல் எல்லோரது கவனத்தையும் கவரும் அட்வெஞ்சர் ஆகவும் அது இருக்கும் என்று என் மனதுக்கு பட்டது. மைதானத்தைச் சுற்றி வருகையில் ஒருவேளை தேன்மொழியோ, அனுவோ என்னை கவனிக்கக்கூடும். “ஹீரோ” அந்தஸ்தை மிக சுலபமாக பெறும் குறுக்கு வழியாகவும் இத்திட்டம் அமையும்.

மற்ற பயல்கள் கொஞ்சம் சுரத்து குறைந்துபோயே இருந்தார்கள். எப்போதும் காட்டான் போல ஆடும் சிவா கூட டொக்கு வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மாட்டினால் மொத்த டீமுக்கும் ஆப்பு என்று அவர்கள் அஞ்சினார்கள்.

”அப்படியே மாட்டிக்கிட்டாலும் ஒரு பய பேரை கூட சொல்லமாட்டேன். நீங்க என் கூட விளையாடினதா கூட சொல்லமாட்டேன். போதுமா?” தைரியப் படுத்தினேன்.

மூன்றரை மணியாக இன்னமும் ஐந்து நிமிஷங்கள் என்று மணியின் வாட்சில் நேரம் பார்த்தோம். அப்போது மணி மட்டும் தான் கைக்கடிகாரம் அணிவான். எங்கேயோ இருந்து வெங்கடேஷும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டான். பந்தை கையில் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மாஸ்டர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஹெட்மாஸ்டர் நாலு மணிக்கு மேல் தான் ரவுண்ட்ஸுக்கு வருவார். அவர் அப்படியே சீக்கிரம் கிளம்பிவிட்டால் கூட நம்ம கண்காணி செந்தில் ஓடிவந்து சொல்லிவிடுவான்.

ஹய்ட் த்ரோவாக இல்லாமல் ஸ்லோப்பாக லேடீஸ் க்ரவுண்ட் நோக்கி முழுபலத்தையும் திரட்டி பந்தை வீசினேன். அப்போது தான் பந்து மைதானத்தின் அந்த முனைக்கு போய் சேரும். ஒரு ரவுண்ட் அடிக்க வாகாக நேரம் கிடைக்கும். பந்தை எறிந்தவுடன் எந்த திசையில் போய் விழுந்தது என்று கூட பார்க்கவில்லை. சுவரை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடிவந்த வேகத்தை பயன்படுத்தி கையை சுவர் மீது அழுத்தி ஒரே லாங்க் ஜம்ப்...

பின்னால் பயல்கள் வேடிக்கைப் பார்க்க ஓடிவரும் சத்தம் கேட்டது. நான் நினைத்ததற்கு மாறாக மறுபுறம் மைதானம் மேடாக இல்லாமல் கொஞ்சம் பள்ளமாக இருந்ததால் பேலன்ஸ் செய்யமுடியாமல் குப்புற விழுந்தேன். கை முட்டி இரண்டிலும் சிராய்ப்பு. இரத்தம் எட்டிப் பார்த்தது. கால் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதைப் போல வலி. நிமிர்ந்து மைதானத்தைப் பார்த்தேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட நீலநிற பட்டாம்பூச்சிகள் ஸ்கிப்பிங், கோகோ, ரிங்க் என்று விதவிதமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த மைதானத்தை சுற்றி ஓடிவர குறைந்தது மூன்று நிமிடங்கள் ஆகும். அதற்குள்ளாக ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது. முதல்முறையாக பயம்...

காக்கி பேண்டும், வெள்ளைச் சட்டையுமாக திடீரென்று ஒருவன் தங்கள் மத்தியில் ஓடுவதை கண்டதுமே சில பெண்கள் அவசரமாக ஒதுங்கினார்கள். சில பேர் கூச்சலிட்டார்கள். மைதானத்தின் இடதுப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். திரும்பிப் பார்த்தேன், கண்களில் உற்சாகமும், ஆச்சரியமுமாக என் நண்பர்கள்.. சத்தமாக கத்தி என்னை உற்சாகப்படுத்துவதாக நினைத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்கள். வெங்கடேஷின் முகத்தில் மட்டும் குரோதம்!

ஓடு.. ஓடு.. ஓடிக்கொண்டேயிரு என்று உள்மனசு சொல்ல மாராத்தான் வீரனின் மன உறுதியோடு பாதி மைதானத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். பந்து எங்கே போய் விழுந்தது என்று தெரியவில்லை. பந்தை விட்டு விட்டு ஓடவேண்டியது தான். தேடிக்கொண்டிருந்தால் மாட்டிக் கொள்வோம். இன்னும் கொஞ்ச தூரத்தில் பள்ளிக் கட்டடம் வந்துவிடும். உள்ளே வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மனசுக்குள் வேண்டியபடி ஓட...

அய்யகோ! ஆண்டி க்ளைமேக்ஸ்…

பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் வந்தபோது ரெண்டு பள்ளியின் ஹெட்மாஸ்டர்களும் என் வருகையை எதிர்பார்த்து நிற்பது போல நின்று கொண்டிருந்தார்கள். ”இந்த ஆளு எப்படி இங்கே வந்தான்? இந்த ஆளு வெளியே வந்திருந்தாலே செந்தில் ஓடிவந்து சொல்லியிருப்பானே? அவனுக்கு என்ன ஆச்சி?”

“சார் பந்து விழுந்திடிச்சி.. எடுக்க வந்தேன்!”

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று மொக்கை ஆங்கிலத்தில் அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என் காதில் கிசுகிசுத்துவிட்டு ஹெட்மாஸ்டரிடம் சென்று ஏதோ சொன்னாள்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.

ஹெட்மாஸ்டர் ரூமுக்கு வெளியே செந்தில் வேறு முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று முட்டி போடுமாறு சொன்ன ஹெச்.எம். ரூமுக்குள் போய்விட்டார். இன்னமும் ஒரு மணி நேரத்துக்கு முட்டி போட்ட பின்னர், அவர் “சிறப்பு பூஜை” வேறு செய்வார். நினைக்கும் போதே முட்டியும், முதுகும் வலித்தது.

“மச்சான்! வெங்கடேஷ் துரோகம் பண்ணிட்டாண்டா!” - செந்தில்

“என்னடா ஆச்சி?”

“மேத்ஸ் மாஸ்டர் கிட்டே மேட்டரை சொல்லி ஹெச்.எம். வரைக்கும் பிரச்சினையை எடுத்து வந்துட்டான். நாயி என்னை வேற போட்டுக் கொடுத்துட்டான்”

மேத்ஸ் மாஸ்டருக்கும், எனக்கும் ஆகவே ஆகாது. அந்த ஆளு நடத்தும் ட்யூஷனில் வீராப்பாக நான் சேராமல் இருந்தேன். ”சந்தர்ப்பம் பார்த்து போட்டு கொடுத்துட்டானே அந்தாளு?” உறுமினேன்.

“செந்திலு நாம ரெண்டு பேரும் அடிபடப்போறது உறுதி. அதே நேரத்துலே நம்ம அக்ரிமெண்டை மீறுன வெங்கடேஷையும் போட்டுடணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து நேராக ஹெச்.எம். ரூமுக்குள் நுழைந்தேன். நடந்ததெல்லாம் தப்பு என்று சொல்லி, வெங்கடேஷ் தான் என்னை அதுபோல லேடிஸ் க்ரவுண்டில் ஓடச் சொல்லி பெட் கட்டினான் என்று உண்மையை ஒப்புக் கொண்டேன். பியூனை விட்டு வெங்கடேஷை பிடித்து வரச் சொன்னார் ஹெச்.எம்.

சிறிது நேரத்திலேயே காட்சி மாறியது.

நானும், செந்திலும் மாட்டிக் கொண்டதை பார்த்து கொக்கரித்து சிரித்துக் கொண்டிருந்த வெங்கடேசும் இப்போது எங்களோடு சேர்ந்து முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.

“வெங்கடேசு! ஆனாலும் உன்னை லைஃப்லே மறக்க மாட்டேண்டா!”

“எதுக்குடா?” வெறுப்போடு கேட்டான்.

“உன்னால தாண்டா அனு எனக்கு கிடைச்சா!”

”!!!!???????”

“எப்படின்னு கேளேன் மச்சி. அடக்கேளு மச்சி. நான் மாட்டிக்கிட்டதுமே நேரா என் காதுலே வந்து ‘இவ்ளோ தைரியசாலியா நீ இருப்பேன்னு நினைக்கலை. ஐ லவ் யூ!'ன்னு சொல்லிட்டுப் போயிட்டா மச்சான். நீ மட்டும் ஹெச்.எம். கிட்டே போட்டு கொடுக்கலைன்னு வெச்சிக்கோ, இது நடந்திருக்குமா?”

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்ற வெங்கடேஷின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. நான் சொன்னதை கேட்டதுமே செந்திலுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“எப்படியோ வெங்கடேஷ் புண்ணியத்துலே கிச்சா செட்டில் ஆகிட்டான். ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடிச்சி. நடக்குறதெல்லாம் நல்லதுக்கு தாண்டா!”

“டேய் பந்தயத்துலே ஜெயிச்சிருந்தா தானேடா வெங்கடேஷ் பீர் வாங்கி கொடுத்திருப்பான். இதோ இப்போ தோத்தவன் சொல்றேன். இன்னைக்கு எல்லாருக்கும் பார்ட்டிடா! நான் பந்தயத்துலே தோத்திருந்தாலும் லைஃப்லே ஜெயிச்சுடேண்டா! ஐ யாம் வெரி ஹாப்பியஸ்ட் மேன் இன் த வோர்ல்ட்”

(சுபம்)

கதையை அப்படியே சுபம் போட்டு முடித்துவிட ஆசை தான். ஆனாலும் உண்மையில் நடந்தது என்னவென்று படித்துக் கொண்டிருந்தவர்களுக்காவது சொல்லுவதுதானே தர்மம்?

ஒரு சின்ன ப்ளாஷ்பேக். பொருத்தமான இடத்தில் இதை பொருத்தி, மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று மொக்கை ஆங்கிலத்தில் அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என்னிடம் மெதுவாக,

“பொறுக்கி, நல்லா மாட்டிக்கிட்டியா? ஸ்கூல் விட்டு போறப்போ சைக்கிள்லே வந்து கட் அடிச்சி தொல்லை கொடுக்குறே இல்லே, உங்க ஹெச்.எம். கிட்டே நல்லா போட்டு விடறேன்”

ஹெட்மாஸ்டரிடம் சென்று, “சார் இந்த பொறுக்கி அடிக்கடி எங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்றான் சார். ஸ்கூல் விட்டு போறப்போ ரோட்ல வந்து லவ் லெட்டர் கொடுக்கிறான் சார்!”

“அவனை தோலை உரிச்சி தான் இன்னிக்கு வீட்டுக்கு அனுப்பப் போறேன். நீங்க பயப்படாதீங்கம்மா. இனிமேல உங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணமாட்டான்” ஹெச்.எம்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.

12 நவம்பர், 2011

அங்காடித் தெருவுக்கு ஆபத்து!

வணிக சாம்ராஜ்யங்கள் சந்திக்கும் நெருக்கடிக்கு சாட்சி சொல்கின்றன வெறிச்சோடிக் கிடக்கும் தி.நகர் தெருக்கள். எதன் ஆரம்பம் இது?

அருளானந்தம் மெஸ் சென்னை தியாகராயநகர் உஸ்மான் ரோட்டில், ரங்கநாதன் தெருவுக்கு முன்பாக இருக்கும் இந்த உணவகத்தில் எப்போதுமே சாப்பிட ஏகப்பட்ட போட்டி. டேபிள்கள் நிறைந்து, அடுத்து சாப்பிட வருபவர்கள் ஓட்டலுக்கு வெளியே கூட்டமாக நிற்பார்கள். காலையில் வேலை செய்ய ஆரம்பிக்கும் ஓட்டல் பணியாளர்கள் இரவுவரை, ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த நவம்பர் இரண்டாம் தேதி நாம் போனபோது, அங்கே ஆட்களே இல்லை. டேபிள்கள் காலியாக கிடக்க, பணியாளர்கள் ஓய்வாக நின்றிருந்தார்கள். அருளானந்தம் மெஸ் இருளானந்தம் மெஸ் ஆகியிருந்தது.

இது ஒரு உதாரணம்தான். உஸ்மான் ரோடு முழுக்கவே இதுதான் நிலை. தீபாவளி வாரத்தில் யாருமே சுலபமாக உள்ளே நுழைய முடியாத (நுழைந்தால் வெளியே வரமுடியாத) ரங்கநாதன் தெரு இப்போது வெறிச்சோடிப் போயிருக்கிறது. நடைபாதை வியாபாரிகள், வியாபாரமின்றி சோர்வாக அமர்ந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் புழங்கிக் கொண்டிருந்த இடம் சூனியம் வைத்ததைப் போலச் சோம்பிச் சுருண்டு கிடக்கிறது.ஆனால் இது சொந்தச் செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.

என்ன காரணம்?

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அதிகாலை. அந்த நாளின் பரபரப்பிற்குத் தயாராகச் சோம்பல் முறித்து எழுந்து கொண்டிருந்தது ரங்கநாதன் தெரு. ஆனால்- தி.நகரில் வந்திறங்கிய சி.எம்.டி.ஏ (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இருபத்தைந்து கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். தங்களுடைய நாளைத் துவக்காமலேயே இக்கட்டிடங்களில் இயங்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான வணிக ஸ்தாபனங்கள் முடங்கிப் போயின. இங்கு தினம், தினம் ஆயிரம் ஆயிரமாக கூடி ‘ஷாப்பிங்’ செய்யும் மக்கள் வராமல் வெறிச்சோடிப் போனது ரங்கநாதன் தெரு. பக்கவிளைவாக ரங்கநாதன் தெரு கூட்டத்தை நம்பி வியாபாரம் செய்துவந்த உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், நடைபாதை வியாபாரங்கள் என்று அனைத்துமே இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.

வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் வணிகர்கள் கவலையோடும் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத கோபத்தோடும் பேசுகிறார்கள்.

”நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நூறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள். கட்டிடங்களை கட்டும்போதே, இவற்றை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனபிறகு நடவடிக்கை எடுப்பது நியாயம் அல்ல”. என்கிறார் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர்சங்கப் பேரவை

கடைகளுக்கு ஏன் சீல் ?

அவர் சொல்வது போல் இது நியாயமற்ற நடவடிக்கையா?

அந்தக் கேள்விக்கு விடைகாண கடைகளுக்கு ஏன் சீல் வைக்கப்பட்டன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் படி, சென்னை மாநகரப் பகுதியில் எந்த வளர்ச்சியை மேற்கொள்வதாக இருந்தாலும், அதற்கான திட்ட அனுமதியை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் முன்கூட்டியே பெறவேண்டும்.

நில உபயோகம் மற்றும் விதிகளின் படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். நிலத்தின் தன்மை மற்றும் அளவு, அதில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தின் உயரம் மற்றும் பரப்பளவு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பலவித தன்மைகளையும் அலசி, உத்தேசித்தே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின்அதிகாரிகள் மனையை பார்வையிட்டு, அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாததாலேயே தி.நகரில் இப்போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.தி.நகரில் பொறுத்தவரை தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், நில அளவுக்குப் பொருந்தாத வகையில் ஐந்து முதல் பத்து மடங்கு பகுதிகளைக் கட்டுமானத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடைபாதைக்கு விடவேண்டிய இடங்களையும் விட்டுவைக்கவில்லை. ரங்கநாதன் தெருவில் இருக்கும் எந்த வணிக வளாகத்திலும் ‘கார் பார்க்கிங்’ வசதி இல்லை. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் கூட இடமில்லை என்பதுதான் உண்மை. இடர் காலங்களில் தீயணைப்புத்துறையினர் செயல்படும் அளவுக்குக் கூட இடங்களை விட்டுவைக்கவில்லை.

”இக்கட்டிடங்களில் போதுமான பக்க இடைவெளி இல்லை. அனுமதிக்குப் புறம்பான வாகன நிறுத்துமிடம், இரண்டு மூன்று மற்றும் நான்கு ஐந்து தளங்களை அனுமதியின்றி கட்டியது என்று பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன” என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்
”விதிமுறையை மீறிய கடை உரிமையாளர்களுக்கு முப்பது நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கியிருந்தோம். இதற்கு உரிமையாளர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் சீல் வைத்திருக்கிறோம்.” என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்

2006ஆம் ஆண்டு சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, இதுகுறித்த வழக்கு ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். அவ்வழக்கில் விதிமுறை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து போதிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு கண்காணிப்பு கமிட்டியையும் இதற்காக உருவாக்க வேண்டுமென நீதிமன்றம் யோசனை சொன்னது.

2007ஆம் ஆண்டு இந்தக் கண்காணிப்பு கமிட்டி, விதிமுறை மீறிய கட்டிடங்களை முடக்கி, சீல் வைக்க நோட்டீஸ் விடச்சொல்லி சென்னை மாநகராட்சியையும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தையும் கேட்டுக் கொண்டது.

நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக முந்தைய அரசு சட்டமன்றத்தில் ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி இந்நடவடிக்கையை முடக்கியது. இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பதின் மூலமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று அந்த சட்டவரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், இவ்வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நிறுத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதையடுத்து ‘சீல்’ நடவடிக்கை முடக்கப்பட்டது.

தற்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு எதிராக கிடைத்திருக்கிறது.
எனவே, கடந்த ஜூலை மாதம் இக்கட்டிடங்களுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நோட்டீஸ் வழங்கியது. இருப்பினும் நோட்டீஸ் வழங்கியதோடு, மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செய்வதாக மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.
சி.எம்.டி.ஏக்கும், மாநகராட்சிக்கும் இந்த அளவிற்கு நிர்பந்தமும் நெருக்கடிகளும் உருவானபிறகே வேறுவழியின்றி, இப்போது ‘சீல் வைக்கும் வைபவம்’ நடந்தேறியிருக்கிறது.

ஏன் தாமதம்?

நீதிமன்றம் கட்டளையிட்டபிறகும் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது ஏன்? விடை எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

லஞ்சம், ஊழல்!

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியவர்கள், அதை கண்டுகொள்ளாமல் இருந்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம், மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏராளம்.

இப்போது அவர்களில் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மேலும் இவ்வழக்கில் அவர்கள் எதிர்மனுதாரராகவும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தற்போதைய நிலவரப்படி இவர்கள் ‘கைது’ ஆனாலும் ஆச்சரியமடைய ஏதுமில்லை.

இந்த நடவடிக்கைகள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் பொங்கினார்.
“என்னவோ அரசு அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் என்பதுபோல காட்சி சித்தரிக்கப்படுவ்து அவலமானதும், உண்மைக்குப் பொருந்தாததும் ஆகும்.இந்த விதிமுறை மீறல்களை கண்டுக்கொள்ளாமல் இருந்ததற்கு அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் அழுத்தம் முக்கியமான காரணம். நீட்டிய இடத்தில் கையெழுத்து போடாவிட்டால், பணிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டுமென நேரடியாகவே மிரட்டல்களை சந்திக்கிறோம்.
அரசியல் அதிகாரம், அரசு நிர்வாகத்தை அச்சுறுத்தும் போக்கு முற்றிலுமாக நிற்காதவரை இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டே தானிருக்கும். ஆனால் கடைசியாக பலிகடா ஆக்கப்படுவது என்னவோ அதிகாரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. நீதிமன்றத்தால் முறையான விசாரணை நடைபெற வேண்டுமானால், தற்போது நடவடிக்கை எடுக்கப்படப் போகும் அதிகாரிகளை அச்சுறுத்திய அரசியல்வாதிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்”

இந்தக் கடைகள் மூடப்படுவதால் ஏராளமானவர்கள் வேலை இழப்பார்கள் என்று வணிகர்கள் பிரச்சினையை திசைதிருப்ப முயல்கிறார்கள். ஆனால் இந்த ’அங்காடித் தெரு’ செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பணிபுரிபவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அங்கு பணிபுரிபவர்களுக்குப் கழிப்பறை வசதிகள் கூடப் போதுமான அளவு செய்து தரப்படவில்லை. ஆனால் இன்று ஆடு நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன.

அரசியல் வாதிகளைக் கொண்டு எதையும் ‘சமாளித்து விடலாம்” என்ற மனப்போக்கு, அரசு அதிகாரிகளின் சுயநலம், அலட்சியம் மற்றும் வணிக முதலாளிகளின் பணவெறி.. இவற்றால்தான் தி.நகரின் வணிக சாம்ராஜ்யம் இன்று சரிவைச் சந்திக்கிறது.

தி.நகருக்கு இணையாக தற்போது வளர்ச்சி பெற்றுவரும் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் முன்பே வளர்ச்சி அடைந்திருக்கும் பாரிமுனை ஆகிய பகுதிகளிலும் இதே நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்று தெரிகிறது. இன்றைக்குச் சென்னை நாளை, நாளை மறுநாள் என்று அடுத்தடுத்து தமிழக நகரங்களிலும் இதே இடி நிச்சயம் இறங்கும்.

இது முடிவல்ல, ஆரம்பம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

நம் கடமை என்ன?

எந்த ஒரு நேர்மையான நடவடிக்கையும் தனிமனித செயல்பாடுகளில் இருந்தே துவக்கப்பட வேண்டும். நம்முடைய வீடு, கடை என்று எந்த கட்டிடமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி என்று உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான அனுமதி பெறவேண்டும். விதிமுறைகளை மீறாதபட்சத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாகவும், அது தொடர்பான விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நேரடியாகவே சென்று தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு கட்டுமான திட்டமிடலுக்கும் முன்னதாக, உங்கள் உள்ளாட்சி அமைப்பிடம் ஒரு நடை போய் விசாரித்துவிட்டுதான் வந்துவிடுங்களேன். இல்லையேல் எதிர்காலத்தில் இதுபோன்ற சீல்வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

10 நவம்பர், 2011

சாருவும், மாமல்லனும்!

சமகாலத்தில் ஒரு மாதிரியான அவநம்பிக்கைச் சூழலை பல இலக்கிய ஆர்வலர்கள் உணருவதை காண நேர்கிறது. தமிழ் இலக்கியவாதிகள் இலக்கியம் படைப்பதை விட்டு விட்டு ஒருவரையொருவர் இருபத்து நான்கு மணி நேரமும் வசைபாடிக் கொண்டிருப்பதையே தொழிலாக்கிக் கொண்டார்களோ என்றுகூட சில நேரங்களில் எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக ‘இணையம்’ வந்தபிறகு இலக்கியத்துக்கான வடிவமென்பது வெறும் வசைபாடுதலாக, மன வக்கிரங்களுங்கான வடிகாலாக சுருங்கிவிட்டது என்றுகூட சிலர் புலம்ப கேட்டிருக்கிறோம்.

துரோகம், விரோதம், பொறாமை என்று இத்துறை புதர்மண்டிப்போன நிலையில் அவ்வப்போது சில நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் பளிச்சிடுவதுண்டு. விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் இப்பதிவு, அவ்வாறான ஒளியேற்றி இருள் நீக்குகிறது : தவறியும் போகாதவை!

அவ்வப்போது ஜடாமுனி வளர்த்து, மோனநிலைக்குப் போய் இலக்கியத்துறவு மேற்கொள்ளும் மாமல்லன், பதினைந்து ஆண்டுகள் கழிந்து கடந்த ஆண்டு மீண்டும் இலக்கியத்துக்குள் கிரகப்பிரவேசம் நிகழ்த்தினார். முப்பதாண்டுகளுக்கு முன்பாக சில சிறப்பான சிறுகதைகளை எழுதி பெயர் பெற்றவர் என்பதால், மீண்டும் சிறுகதைகளாக எழுதிக் குவிப்பார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. மாறாக ஆரம்பத்தில் எஸ்.ரா., பிறகு சாரு, கடைசியாக ஜெயமோகன் என்று சமகால இலக்கியவாதிகளை அம்பலப்படுத்துவதாக கூறி வசைகட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்தார். நம்மைப் போன்ற இலக்கிய வம்பு ஆர்வலர்களுக்கு நல்ல தீனியும் போட்டுவந்தார். அவ்வப்போது ஏதாவது பழைய எழுபதுகள், எண்பதுகளின் புனைவுகள், மொழிப்பெயர்ப்புகளை ஒளிவருடி பதிவிலேற்றுவார். இப்போது எழுதிவருபவர்களில் யாரையும் அவர் மனந்திறந்து பாராட்டியிருந்தால், அது ஓர் அரிதான நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். மாமல்லனோடு நேரிடைப் பழக்கம் நமக்குண்டு. எப்போதும் தன்னை ஓர் இலக்கியப் பேராசானாகவே வரித்துக்கொண்டு, கையில் பிரம்பு வைத்துக்கொண்டு அடுத்த தலைமுறை வாசகர்களை மிரட்டி, இலக்கியப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவே அவர்குறித்த மனச்சித்திரம் நமக்குள் பதிந்திருக்கிறது.

அப்படிப்பட்டவர் எழுதியிருக்கும் ‘தவறியும் போகாதவை’யில் தான் எவ்வளவு பெருந்தன்மையும், சக எழுத்தாளனை உயர்த்திப் பிடிக்கும் மனோபாவமும், நினைத்ததை தேடிப்பிடித்தே ஆகவேண்டும் என்கிற குழந்தைத்தன்மையும் வெளிப்படுகிறது?

எண்பதுகளின் தொடக்கத்தில் வந்த சிற்றிதழ்களில் ஒன்று ’படிகள்’. அவ்விதழினில் சார்த்தரின் ‘சுவர்’ சிறுகதையை படித்திருந்ததாக மாமல்லனுக்கு நினைவு. அக்கதையை தூசுதட்டி ஒளிவருடி தனது வலைத்தளத்தில் ஏற்ற ஆசைப்படுகிறார். அது படிகளில்தான் வந்ததா என்பதும் துல்லியமாக அவருக்கு நினைவில்லை.

தனக்குத் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் , வாசகர்களிடமும் இதுகுறித்து விசாரிக்கிறார். நிறைய ஆட்கள், நீண்ட தேடல். அதுகுறித்த அனுபவத்தை எளிய வார்த்தைகளில், பகட்டின்றி இப்பதிவில் பகிர்கிறார்.

குறிப்பாக சாருநிவேதிதாவிடம் விசாரிக்கும் கட்டம் சுவாரஸ்யமானது. “எனக்கு பெரிய நினைவாற்றல் கிடையாது. ஆனால், ‘சுவர்’ சிறுகதை நிச்சயம் படிகளில் வரவே இல்லை” என்கிறார் சாரு. இந்த கதைத்தேடல் கட்டத்தின் போது, நம்மை மாதிரி அசமஞ்சங்களிடமும் மாமல்லன் விசாரணையை நடத்தினார். “சார்த்தரோட அந்த கதையை தமிழில் யாரும் மொழிபெயர்க்கலேன்னு கூட சாரு சொல்றாம்பா... ஆனா எனக்கு நல்லா படிச்ச நினைவிருக்கு. அதுவும் ‘படிகள்’லே படிச்ச மாதிரிதான் நினைவு” என்றார்.

ஒருவழியாக செயின் மார்க்கெட்டிங் மாதிரி யார், யாரையோ பிடித்து ஆர்.சிவக்குமாரை பிடிக்கிறார். நல்லவேளையாக அவரிடம் ‘படிகள்’ இதழ்கள் சேகரிப்பில் இருக்கிறது. ‘சுவர்’ சிறுகதை படிகளின் பதிமூன்றாவது இதழில் வந்ததையும் மாமல்லனால் உறுதி செய்துக்கொள்ள முடிகிறது. ‘ஜனனி’ என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த மொத்த பிராசஸிங்கிலேயே சுவாரஸ்யமான விஷயம் ‘ஜனனி’ தான். யார் இந்த ஜனனி என்றுப் பார்த்தோமானால், முன்பு அக்கதை படிகளில் வரவில்லை, தமிழில் வந்தது மாதிரியும் நினைவில்லை என்று மறுத்த சாருநிவேதிதாதான் ஜனனி. ஒரு சுவாரஸ்யமான குறுநாவலுக்கான இந்தக் கருவை, ஒரு சாதாரண வலைப்பதிவாக கருக்கலைப்பு செய்துவிட்டார் மாமல்லன்.

தற்பெருமை மிக்கவர், தன்னுடைய சாதாரண படைப்புகளுக்கு கூட டால் க்ளெய்ம் செய்துக் கொள்பவர் என்றெல்லாம் பலவாறாக விமர்சிக்கப்படும் சாரு, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பெயரை கூட மறந்திருக்கிறார் அல்லது மறுத்திருக்கிறார். விக்கிப்பீடியாவைக் கூட விட்டுவைக்காமல் தமிழின் பெரிய சிந்தனைவாதியாகவும், இலக்கிய அத்தாரிட்டியாகவும் தன்னைத்தானே எழுதிக் கொள்ளும் விளம்பரமோக எழுத்தாளர்கள் மத்தியில் சாருவுக்குள் இருக்கும் இந்த அரிய பண்பு பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.

மாமல்லன் நினைத்திருந்தால் இந்த விஷயத்தை கமுக்கமாக அமுக்கியிருக்கலாம். ஆனாலும் தன் சக எழுத்தாளனுக்கான கிரெடிட்டை கொடுத்தாக வேண்டும் என்கிற நேர்மை அவரிடம் இருக்கிறது. தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக எழுதி அதை சிறப்பாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

7 நவம்பர், 2011

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.

• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.

• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.

• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).

• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.

• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)

• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.

• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.

• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.

• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.

• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.

• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.

• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.

• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.

• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"

• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.

• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.

• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.

• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.

• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

3 நவம்பர், 2011

நாம் இளிச்சவாயர்

‘இலை மலர்ந்தால், ஈழம் மலரும்’ என்றார். இலை மலர்ந்து ஆறு மாதமாகிறது. இப்போது என்ன மலர்ந்திருக்கிறது?


ஆகவே தாய்மாரே!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சமையல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, கண்ணாமூச்சி, அய்ஸ் பாய்ஸ், கில்லி, கோலி என்று எல்லாப் போட்டிகளையும் நடத்தி தமிழின விடியலுக்கு ‘நாம் இளிச்சவாயர்’ இயக்கம் பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.