25 நவம்பர், 2011

தளபதி.. எங்கள் தளபதி!

1996 அல்லது 97 ஆம் வருடங்களாக இருக்கலாம். ஒரு ஓட்டை சில்வர் ஃப்ளஸ்தான் என் வாகனம். தினமும் காலை ஒன்பது மணியளவில் வேளச்சேரி செக்போஸ்டை கடந்து கன்னிகாபுரம் வழியாக அண்ணாசாலைக்குள் நுழைவேன்.

ஒரு நாள் அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் மரண இசை முழங்கிக் கொண்டிருந்ததை தூரத்தில் கேட்டேன். அருகே வந்துக் கொண்டிருந்தபோது, என்னை வேகமாக தாண்டி வந்த சைரன் வைத்த கார் ஒன்று அந்த வீட்டின் முன்பாக க்ரீச்சிட்டு நின்றது.

உள்ளே இருந்து இறங்கி வந்தவர் சென்னை மாநகரின் மேயராக இருந்த ஸ்டாலின். உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வேகமாகச் சென்று, ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இறந்தவரின் உறவினர் (பையனாக இருக்கலாம்) ஒருவர் அருகில் சோகமாக நின்றிருந்தார். அவரிடம் இறந்தவர் பற்றிய விவரங்களை விசாரித்து, செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து கிளம்பினார்.

இத்தனைக்கும் காலமானவர் திமுகவை சேர்ந்தவரும் கிடையாது. தினம் அந்த வழியாக மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு செல்லும் ஸ்டாலின், தான் செல்லும் வழியில் யாரோ மரணித்துவிட்டதைப் பார்த்து, உடனே மரியாதை செலுத்த இறங்கியிருக்கிறார். “பார்க்குறதுக்கு ரொம்ப ஏழ்மையான குடும்பமா தெரிஞ்சது. அதுதான் செலவுக்கு பணம் இருக்குமோ, இருக்காதோன்னு தெரிஞ்சுக்கறதுக்கு இறங்கி வந்தேன்” என்று காரில் ஏறும்போது சொன்னார்.

‘அரசியலில் எளிமை’ குறித்து ஏடுகளில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு அந்நிகழ்வு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. 96-2001 காலக்கட்டத்தில் சென்னையில் வசித்தவர்கள் பலரும் ஸ்டாலினின் எளிமையை உணர்ந்திருப்பார்கள். முதல்வரின் மகன், மாநகரின் மேயர், எம்.எல்.ஏ., போன்ற எந்த பந்தாவும் ஸ்டாலினுக்கு இருந்ததில்லை. அக்காலக் கட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது திடீர் அதிரடி விசிட்டுகள் நகர்வாசிகளை ஆச்சரியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.

பதினைந்து ஆண்டுகள் ஆகியும் இந்த எளிமை அவரை விட்டு இன்றுவரை மறையவில்லை. சில காலம் முன்பு நாம் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம். தவறான சிகிச்சையால் கண்பார்வை பறிபோன சுரேகா என்கிற மாணவிக்கு ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் உதவி, ஐதராபாத்தில் உயர்சிகிச்சை அளிக்க வைத்தார். ஸ்டாலினோடு நிழல் போல இருக்கும், திமுகவின் மாநில இளைஞரணி துணைச் செயலர் ஹசன் முகம்மது ஜின்னா பலமுறை இந்நிகழ்வைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். “தளபதி திடீர்னு வண்ணாரப்பேட்டைக்கு வண்டியை விடுன்னு சொன்னாரு. என்ன, ஏதுன்னு தெரியாம காரில் உட்கார்ந்தோம். அங்கே ஒரு இடத்துலே காரை நிப்பாட்டிட்டு, ஒரு சந்துக்குள்ளே இறங்கி நடக்க ஆரம்பிச்சாரு. அப்போ அங்க இருந்தவங்க சிலபேரு பேசிக்கிட்டாங்க. ‘ஏய் அங்கே பாருப்பா ஒருத்தரு ஸ்டாலின்மாதிரியே போறாரு’ ன்னு”. இந்நிகழ்வு நடந்தபோது ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண மனிதராக, பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் நடந்துச் செல்வதை மக்களால் நம்பவே முடியவில்லை.

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றும் இம்மாதிரியானதுதான். மனதை நெகிழ வைத்த நிகழ்வு அது.

திருத்தணியைச் சேர்ந்தவர் ஜோதி. மாற்றுத்திறனாளியான அவர் தீவிரமான திமுககாரர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டிய கையோடு, மணமாலையை கழட்டிவிட்டு நேராக அண்ணா அறிவாலயத்துக்கு வந்துவிட்டார். ஸ்டாலினை சந்தித்து தனக்கு திருமணமாகியிருப்பதால், ஆசி வாங்க வந்ததாக சொன்னார். “ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்று கடிந்துக் கொண்ட ஸ்டாலின், ஜோதி குறித்த மற்ற விவரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டிருக்கிறார்.

அன்று மாலை திருத்தணியில் ஜோதிக்கு திருமண வரவேற்பு. யாருமே எதிர்பாராத வண்ணம் மண்டபத்துக்குள் தன் வழக்கமான அதிரடி ஸ்டைலில் நுழைந்தார் ஸ்டாலின். ஜோதிக்கு இன்ப அதிர்ச்சி. “கல்யாணம் ஆனவுடனேயே, இரண்டரை மணி நேரம் பயணம் பண்ணி என்னை வந்து பார்த்தியேப்பா, பதிலுக்கு நான் வந்து உன்னை பார்க்க வேணாமா?” என்று தன் அறிவிக்கப்படாத திடீர் வருகைக்கு காரணமும் சொன்னாராம்.

அரசியல் தலைவர்களிடம் எளிமை இல்லை. கட்சித் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் திட்டமிட்டு, அன்னா ஹசாரே பாணியில் மொக்கைப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் இதே காலத்தில்தான், திமுகவின் பொருளாளரும், அடுத்த முதல்வருமான ஸ்டாலின் விடிவெள்ளியாக தெரிகிறார்.

அவரது தலைவர் கலைஞருக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், ஒரு நபரையாவது பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு தெரியும். ரொம்பவும் அடி வாங்கிய பழைய பழமொழிதான். இருந்தாலும் இந்த இடத்தில் பொருத்தமாக இருப்பதால் சொல்லி வைக்கிறோம். ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’

23 நவம்பர், 2011

சென்னையில் சாக்ரடிஸ்!

ஏதோ ஒரு புத்தகக் காட்சி சீசனின் போது சாரு எழுதியிருந்ததாக நினைவு. ‘எஸ்.ராமகிருஷ்ணனை சுற்றி பத்து இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் எஸ்.ரா பேசுவதையும், அதை உன்னிப்பாக இளைஞர்கள் கவனிப்பதையும் காணும்போது, இப்படித்தானே ஏதென்ஸில் சாக்ரடிஸ் பேசுவதை அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட இளைஞர்கள் கேட்டிருப்பார்கள் என்று நினைத்தேன்’.

சாரு சித்தரித்த அந்தக் காட்சியை நாம் கண்டதில்லை. ஆனால் நேற்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தை கண்டபோது, இது சென்னையா அல்லது பண்டைய ஏதென்ஸா என்கிற சந்தேகம் வந்தது. மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் சாக்ரடிஸ்தானோ என்கிற மனக்குழப்பமும் ஏற்பட்டது. நல்லவேளையாக அது எஸ்.ரா.தான். அவரது ட்ரேட் மார்க் முன்வழுக்கை மற்றும் முகத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட வால்ட் டிஸ்னி கார்ட்டூன் பாணி புன்னகையை கண்டு உறுதி செய்துக் கொண்டோம்.

இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளுக்கு சென்னையில் அரங்கம் நிறைவது அரிதிலும் அரிதான விஷயம். சாரு, ஜெயமோகன் மாதிரி சூப்பர் ஸ்டார் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடுகள் தவிர்த்து, இலக்கியப் பேருரைகளுக்கெல்லாம் கூட்டம் சேர்வது என்பது நினைத்தேப் பார்க்க முடியாத விஷயம். எஸ்.ரா.வின் ஏழு நாள் உலக இலக்கிய தொடர்பேருரைகளுக்கு கூடும் கூட்டம் ஒரு உலக அதிசயம். நீண்டகாலம் கழித்து தரையில் அமர்ந்து ஒரு பேச்சை கேட்பது இப்போதுதான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இலக்கிய அணி கூட்டங்களில் இவ்வாறான சுவாரஸ்ய உரையை கேட்டிருக்கிறோம். முதல் நாள் உரையில் டால்ஸ்டாயின் அன்னாகரீனா நாவல் பற்றி அமோகமாகப் பேசியதாக, ஷாஜியோடு போனில் பேசும்போது சொன்னார். அன்று போகும் வாய்ப்பு இல்லை என்பதால் இரண்டாம் நாள்தான் செல்ல முடிந்தது. தஸ்தாவேஸ்கியின் ’க்ரைம் & ஃபணிஷ்மெண்ட்’ பற்றி பேசினார் எஸ்.ரா.

இதை வெறும் பேச்சு என்று சொல்வதா, சொற்பொழிவு என்று சொல்வதா, சொல்லருவி என்று சொல்லுவதா என்று மகாக்குழப்பம். மூன்று மணி நேரம் எதிரில் அமர்ந்திருக்கும் கூட்டத்தை மாயக்கயிறு கொண்டு கட்டிப் போட்டார் என்பதே உண்மை. முதல் வரிசையில் அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரன் கொஞ்சமும் அசையாமல் சிலையாக சமைந்திருந்தார். மொத்தக் கூட்டமும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மோனநிலைக்குதான் போயிருந்தது.

நேரடியாக நாவலை மட்டும் பேசாமல், நாவலாசிரியன் அந்நாவலை எழுதுவதற்கான சூழல், பின்னணி, அவசியமென்று எளிய வார்த்தைகளில், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொஞ்சமும் சுணங்காமல் கொட்டித் தீர்த்துவிட்டார். தஸ்தாவேஸ்கியோடு நாமே வாழ்ந்த அனுபவத்தை எஸ்.ரா தந்தார்.

எஸ்.ரா.வின் பேச்சை வேறு சந்தர்ப்பங்களிலும் நிறைய முறை கேட்டிருக்கிறோம். குறிப்பாக ‘குழந்தைகள்’ பற்றி பேசும்போது அவரும் குழந்தையாக மாறி, கண்கள் மின்ன ஆர்வமாகப் பேசுவார். அந்நிலையில் பார்க்கும்போது உலகின் ஒரே அழகிய ஆணாகவும் அவர் தெரிவார். நேற்றும் அந்த அழகு நான்கைந்து சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.

வரும் ஞாயிறு வரை, எஸ்.ரா அருவியாகக் கொட்டப் போகிறார். சென்னையில் வசிப்பவர்கள் / ஆர்வமிருப்பவர்கள் ரஷ்ய கலாச்சார மையத்துக்கு வந்து நனையலாம். ரஷ்ய கலாச்சார மையத்தோடு, புஷ்கின் இலக்கியப் பேரவை மற்றும் உயிர்மை இணைந்து இந்நிகழ்வை நடத்துகிறது.

21 நவம்பர், 2011

அம்மான்னா சும்மாவா?

பஸ் கட்டணம் உயர்வு என்றதுமே முதலில் மகிழ்ந்தது எங்கள் ரூட்டில் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கும் கண்டக்டரும், டிரைவரும்தான். இருவருமே புரட்சித்தலைவி கண்ட சின்னமான ரெட்டை எலையை கையில் பச்சையாகக் குத்தியவர்கள்.

“ஆயிரம் ரூபாய்க்கு 23.50தான் பேட்டாவா கொடுக்குறாங்க. இப்போ கட்டணத்தை உயர்த்தியது மூலமா எங்களுக்கெல்லாம் தாயுள்ளம் கொண்ட அம்மா 30 ரூவாயா பேட்டாவை உயர்த்துவாங்க” என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தார் எங்க ரூட்டு கண்டக்டர்.

ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த ‘பேட்டா உயர்வையும்’ அம்மா அறிவித்திருக்கிறார். இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்‌ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.

அடுத்து நம் மடியிலும் தங்கத்தாரகை அம்மா கைவைத்து விடுவாரோ என்று அஞ்சிப்போய், அவசர அவசரமாக மாடு மடியை தஞ்சமடைந்திருக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.

* * * * * * * * * *

செந்தமிழன் சீமான் என்றொரு சிங்கத்தின் கர்ஜனையில் மே மாதம் வரை நாடு அதிர்ந்துக் கொண்டிருந்தது. மே பதினைந்தாம் தேதி காலையில் இருந்து அவருக்கு தொண்டையில் ‘கிச் கிச்’. இப்போதெல்லாம் கர்ஜிக்க முயற்சித்தாலும் ‘மியாவ் மியாவ்’ என்றுதான் சவுண்டு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் ‘மியாவ் மியாவ்’ மூவர் தூக்குத்தண்டனை தொடர்பானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் உயிரையும் காப்பார் என்று ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தி, கண்கள் சிவசிவக்க வீர உரையாற்றியிருக்கிறார் ‘தள்ளு தள்ளு’ தலைவர்.

அம்மா, இவரை இப்படியே விட்டுவிட்டால் ’ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி ராஜபக்‌ஷேவை கைது செய்வார் புரட்சித்தலைவி’ என்கிற ரேஞ்சுக்கு அள்ளிவிட ஆரம்பித்துவிடுவார்.

இந்த ஆனந்தத் தொல்லையை சமாளிக்க அம்மாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஒரு நடிகையை கற்பழித்ததாக இவர் மீது பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வது மட்டுமே ஒரே வழி.

அப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா?

* * * * * * * * * *

கங்கை, யமுனை, சரஸ்வதி மாதிரி தமிழகத்துக்கு வற்றாத ஜீவநதி ஒன்று இல்லையே என்று புரட்சித்தலைவி அம்மா 91-96 காலத்திலேயே சிந்தித்திருக்கிறார். இடையில் தீயசக்தி ஆட்சி வந்ததையடுத்து ஜீவநதியை உருவாக்கும் திட்டம் தள்ளிப்போய் 2001 ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது. டாஸ்மாக் எனும் அந்த ஜீவநதி மட்டும் இல்லையேல் 2006 தீயசக்தி ஆட்சியே நடந்திருக்காது. திவால் ஆகியிருக்கும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் அம்மா, அந்த ஜீவநதியை மேலும் புனிதமாக்கும் முயற்சிகளின் முனைப்பாக இருக்கிறார். தமிழகத்தில் உயர்த்தர குடிமக்களை உருவாக்கும் பொருட்டு ‘எலைட் ஷாப்’புகளை ஏற்படுத்தப் போகிறாராம். குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.

* * * * * * * * * *

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை மட்டுமே ஒரே லட்சியமாக இதுவரை கொண்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப்பார்வை மகாராஷ்டிரம் மீதும் திரும்பியிருக்கிறது. இனி மகாராஷ்டிரமும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆகும்.

கடந்த மாதம் சோ.அய்யர் அவர்களது டைரக்‌ஷனில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டு வெளியான உள்ளாட்சித் தேர்தல் திரைப்படத்தின் மராத்திய ரீமேக், அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் வெளியாகிறதாம்.

எனவே அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டம், ஜிந்தூர் நகராட்சியில் இருக்கும் இருபத்தோரு வார்டுகளையும் கைப்பற்ற அம்மா ஓ.பி.எஸ். வகையறாக்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்.

ரபாட்பேகம் காதிர், முன்னிஷா பெரோஜ்கான், பிட்டு அப்பாசமி, முனாப், சைதை எஸ்.டயாப், காட்டூன் ஷாகிப்கான், யாசின் கரீம், விக்ரம் தேஷ்முக் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் களம் காணப்போகும் சிறுத்தைகள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் போனமாசம் வரைக்கும் சேட்டுக்கடை வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று ரத்தத்தின் ரத்தம் ஒருவர் நம் காதில் கிசுகிசுக்கிறார்.

இரட்டை இலை அங்கே வென்றதும் பால், பஸ் கட்டணம், மின்சாரம் ஆகியவை மகாராஷ்டிராவிலும் உயர்த்தப்பட்டு விடுமோ என அங்கிருக்கும் மக்கள் பேதியடைந்திருக்கிறார்கள்.

* * * * * * * * * *

எத்தனை முறை எட்டி உதைத்தாலும், போயஸ் கார்டனுக்கு சென்று பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்சித்தலைவின் பொற்பாதங்களை கழுவிவிட்டு வரும் தமிழக இடதுசாரிகள் தற்போது கடுமையான குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, அம்மா அவருடைய வழக்கமான பாணியில் உதைத்துத் தள்ளிவிட, கடைசியாக கேடுகெட்டுப்போய் கோயம்பேடு டாஸ்மாக்குக்கு போய் கூட்டணி பேசி மார்க்ஸ், லெனின், மாவோவின் பெயரையும் கெடுத்தாயிற்று. உள்ளாட்சியில் ‘பல்பு’ வாங்கியதற்குப் பிறகு டாஸ்மாக் தலைவரும் கூட மதிப்பதில்லை.

வேறு போக்கிடமின்றி தவிக்கும் இடதுசாரிகள் மீண்டும் தா.பா. தலைமையில் செந்தமிழன் தள்ளு தள்ளு, இனமான நெடுமாறன் பாணியில் அம்மாவுக்கே தீச்சட்டி தூக்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

தமிழக இடதுசாரிகளின் அவலநிலைக்கு சற்றும் சளைத்ததல்ல தமிழக ஊடகங்களின் நிலையும்.

பின்னே, அம்மான்னா சும்மாவா?

17 நவம்பர், 2011

தமிழும், திராவிடமும்!

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் எப்போதும் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.

தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.

தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.

கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.

திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.

வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.

இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.

புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.

தமிழர்களின் வாழ்வியல் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.

விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்

கர்ணபூஷனம் – காதணிவிழா

ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா

கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா

உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு

நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.

அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது

அக்ரசானர் – அவைத்தலைவர்

காரியதரிசி – செயலாளர்

அபேட்சகர் – வேட்பாளர்

இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.

வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.

“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.

இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.

தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.

இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு. மாநில அளவிலும், தேசிய அளவிலும் தற்போது இந்துத்துவாவுக்கும், பார்ப்பனீயத்துக்கும் கிடைத்திருக்கும் தற்காலிக வெற்றிகளைக் கண்டு ஓநாய்கள் ஓங்காரமாக ஓலமிட ஆரம்பித்திருக்கின்றன.

நரித்தந்திரம் மிக்க தமிழ் ரட்சகர் ஒருவர் இருக்கிறார். தமிழுக்கு திராவிடம் என்ன செய்தது? என்ற கேள்வியோடு கிளம்பியிருக்கிறார். இம்மாதிரி ஆட்களின் பிரச்சினையே சாமான்ய மனிதனின் நிலையிலிருந்து பிரச்சினைகளை அணுகுவதை தவிர்த்து, அறிவுஜீவி பாவனைகளோடு யதார்த்தங்களை புரட்டுகிறார்கள். நல்லவேளையாக தமிழகத்தின் கடந்த அரைநூற்றாண்டு இவர்களை தயவுதாட்சணியம் ஏதுமின்றி நிராகரித்தே வருகிறது.

இந்தக் கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.