முன்பு டீக்கடைகளில் மோதிக்கொண்டார்கள். பின்பு மேடைகளில், தெருக்களில், தேர்தல் பூத்துக்களில், பத்திரிகைகளில், டி.வி.க்களில், கிடைத்த இடங்களிலெல்லாம். தகவல் தொழில்நுட்ப யுகம் என்பதால், இப்போது இணையத்துக்கும் வந்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூக்கள் என்று சமூக வலைத்தளங்களில் ‘அரசியல் அனல்’ பறக்க ஆரம்பித்திருக்கிறது.
உலகளவில் ஒபாமா, ஹ்யூகோ சாவேஸ் என்று தலைவர்கள் கலக்க, நம்மூர் தேசிய அரசியலிலும் அத்வானி, சுஷ்மா ஸ்வரராஜ், நரேந்திரமோடி, சசிதரூர், கார்த்திக் சிதம்பரம், உமர் அப்துல்லா என்று அரசியல் நட்சத்திரங்கள் களமிறங்கி விட்டார்கள்.
இணையம் ஒன்றுதான் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிப் பிழைத்த களம். அதையும் ஏன் இப்போது அவர்கள் விட்டுவைப்பதில்லை?
ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் ஒரு சின்ன கணக்கீடு : ‘இந்தியாவில் தோராயமாக பத்துகோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம். இவர்களில் சுமார் ஆறரை கோடி பேருக்கு சமூக வலைத்தளங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் மொபைல் போன்களிலும் இணையத்தை பாவிக்கிறார்கள்’
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கி, பெருகிக்கொண்டே போகிறது. மேடை போடாமல், ஊர் ஊராக அலையும் அலைச்சல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான் இல்லையா?
உதாரணத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கருத்தை பேட்டியிலோ, அறிக்கையிலோ தெரிவித்து அது டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து... அதை எத்தனை பேர் வாசித்து...? இந்தத் தொல்லையெல்லாம் இணையத்தில் இல்லை. நரேந்திரமோடியை ட்விட்டர் என்கிற இணையத்தளத்தில் தற்போது தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். ’நறுக்’கென்று தன்னுடைய கருத்தை மோடி வைத்தால், அதை சுமார் நாலு லட்சம் பேர் உடனுக்குடன் அறிந்துக் கொள்கிறார்கள். அவர்கள் அக்கருத்தை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பகிர பகிர லட்சக்கணக்கானோர், கோடிக்கணக்கானோருக்கு அக்கருத்து காட்டுத்தீ மாதிரி வேகவேகமாக பரவிவிடுகிறது. அவரை பின் தொடர்பவர்களுக்கு மோடியே தங்களோடு நேரடியாகப் பேசுவதைப் போன்ற உணர்வும் ஏற்படுகிறது. இதுதான் இணையத்தின் வசதி. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டிய யாருக்குமே இணையம் ஒரு வரப்பிரசாதம்தான்.
உலகளவிலும், தேசிய அளவிலும் இணையத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருக்கிறது. நம்மூரில் எப்படி?
சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நீக்கப்பட்டபோது, அதிகம் அதிர்ந்தது ஃபேஸ்புக் இணையத்தளம்தான். ஏனெனில் வேல்முருகனின் ஃபேஸ்புக் நண்பர்கள் மட்டுமே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கட்சியை விட்டு நீக்கப்பட்டதற்காக வேல்முருகனுக்கு ஆறுதலாகவும், பா.ம.க. தலைமைக்கு எதிராகவும் இணையத்தில் இவர்களில் பெரும்பாலானோர் பொங்கியெழத் தொடங்கினார்கள்.
“தமிழக அரசியல்வாதிகளில் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய முன்னோடிகளில் நான் ஒருவன். எனக்கு உலகநாடுகள் முழுக்க நண்பர்கள் உண்டு. அவர்களோடு தொலைபேசியில் உறவாடி வந்தேன். கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபடும்போது, இதுபோன்ற அழைப்புகளை ஏற்று பேசமுடியாது. எனவேதான் இணையத்தளத்தை பயன்படுத்தத் தொடங்கினேன். நிறைய தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர், இணையத்துக்கு வந்து தங்களோடு நெருக்கமாக உறவாடுவது ஊக்கமாக இருந்தது. அரசியல், தமிழர் பிரச்சினைகளை என்னிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். இப்போது கிராமப்புறங்களுக்கும் கம்ப்யூட்டரும், இணையமும் வந்துவிட்டது. மக்களுடன் தொடர்புகொள்ள எந்தெந்த நவீன வசதிகள் வந்துக் கொண்டிருக்கிறதோ, அத்தனையையும் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எனக்கென்று பிரத்யேகமாக ஒரு இணையத்தளத்தை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் வேல்முருகன்.
இவரைப் போலவே இளையதலைமுறை அரசியல்வாதிகள் சமீபக்காலமாக ஆர்வமாக இவ்விஷயத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். கடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலின் போது சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் சைதை துரைசாமி, திமுகவின் மா.சுப்பிரமணியம் இருவருமே ஆளுக்கொரு ஃபேஸ்புக் கணக்கினைத் தொடங்கி சரமாரியாக பிரச்சாரம் செய்தார்கள். தேர்தலில் வென்ற சைதை துரைசாமி, தற்போது அப்பக்கத்தில் சென்னை மாநகர மக்கள் தங்கள் குறைகளை பதிவுசெய்ய அனுமதித்திருக்கிறார்.
“அந்தப் பக்கத்தில் பதியப்படும் அனைத்து புகார்களும், ஆலோசனைகளும் தொகுக்கப்பட்டு அவைகளின் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதிகூறுகிறார் சென்னை மேயர் சைதை துரைசாமி. மேயரே நேரடியாக இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்ப்பார் என்பதால் பலரும் இங்கே தங்கள் குறைகளை பதிவுசெய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே பதியப்பட்டிருக்கும் குறைகளில் பெரும்பாலானவை சமீபத்திய மழையில் அடித்துச் சென்ற சாலைகளைப் பற்றிதான். மேயர் சார், சீக்கிரம் ரோடு போடுங்க...
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான கரூர் ஜோதிமணி, வேறுவிதமாக இணையத்தை அணுகுகிறார்.
“டிவியிலும், செய்தித்தாள்களிலும், வானொலியிலும் செய்திகளை அறிந்துகொள்வதை விட, இணையம் மூலமாக மக்கள் நேரடியாக தரும் உள்ளூர் செய்திகளை அறிய விரும்புகிறேன். அரசியல் பணி நிமித்தமாக, டெல்லியில் இருக்கும் எனக்கு நம் தமிழ் மக்களின் நாடித்துடிப்பை அறிய ஃபேஸ்புக் பயன்படுகிறது. இணையம் ஒரு அற்புதமான தகவல் தொடர்பு ஊடகம். ஆரோக்கியமான விவாதக் களமாக இதைப் பயன்படுத்தலாம். டெல்லி அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். நம்மூர் ஆட்களும் இங்கு வந்துசேரவேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது” என்கிறார்.
சமீபத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக களமிறங்கியிருக்கும் குஷ்பூவின் ட்விட்டர் செயல்பாடுகள் ஜனரஞ்சகமானவை. அரசியல்வாதியாக மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாயாக, திரைக்கலைஞராக, ரசிகராக, சமூக ஆர்வலராக என்று தன்னுடைய பன்முகங்களை காட்டுகிறார் குஷ்பூ. அவ்வப்போது அவர் அள்ளித்தெளிக்கும் அரசியல் தத்துவங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. உதாரணத்துக்கு ஒன்று : “நீங்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், உங்கள் சுய அடையாளத்தை இழந்துவிட்டதாக அர்த்தமில்லை. சுயம் சுயமாகவே இருக்கும்!”
இவர்கள் மட்டுமன்றி சி.பி.எம். எம்.எல்.ஏ., பாலபாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ரவிக்குமார் என்று ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் திறம்பட செயலாற்றுகிறார்கள். மக்களோடு மட்டுமின்றி, தங்கள் ஆதரவாளர்களோடும் உரையாட இது அவர்களுக்கு வாகாக இருக்கிறது. தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமாருக்கும் கூட ஒரு ஃபேஸ்புக் கணக்கு உண்டு.
மதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிறையபேரை அடிக்கடி ஃபேஸ்புக்கில் காணமுடிகிறது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இணையத்தளத்தில் செயல்படும் மதிமுகவினருக்கு என்று பிரத்யேகமான கூட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நடத்தினார். இதன் அடிப்படையில்தான் ஒரு மேடையில் “இணையத்தளத்தில் இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சி மதிமுக” என்று அவர் பெருமிதமும் பட்டார்.
தமிழகத்தின் எந்தக் கட்சியை விடவும் திமுக இணையத்தள பயன்பாட்டில் கூடுதல் ஆர்வம் செலுத்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் செல்வாக்கைப் பெற (குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களின்) திமுக தவறிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதாலோ என்னவோ, திமுக தனது படையை இணையத்தில் களமிறக்கியிருக்கிறது.
அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஏற்கனவே வலைப்பூவில் எழுதிவருகிறார். திமுகவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., இளைஞர் அணி துணைப் பொதுச்செயலர் ஹசன் முகம்மது ஜின்னா, அரியலூர் மாவட்டச் செயலர் சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு என்று ஏராளமானோர் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் இணைய செயல்பாடுகள், எழுதப்படும் கட்டுரைகள் ஆகியவற்றை ‘பிரிண்ட் அவுட்’ எடுத்து, அக்கட்சியின் தலைவர் கலைஞரும் வாசிக்கிறார். சமீபத்தில் ‘இணைய உடன்பிறப்புகள் ஒன்றுகூடல்’ என்கிற பெயரில் திமுகவின் இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் ஒரு கூட்டமும் கூட்டப்பட்டது. இணையத்தில் செயல்படும் அக்கட்சியினர் மாநிலம் முழுக்க இருந்து இக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் இக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ‘திராவிடப் பாடம்’ நடத்தினார்.
திமுகவின் இந்த அசுரப் பாய்ச்சலை அதிமுகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளும் அதிகளவில் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று களமிறங்கலாம். அதிசமீபத்திய தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கும் நம் முதல்வரே இறங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவரது பெயரில் போலியாக யாரோ ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கியபோது, உடனடியாக அது தனதல்ல என்று மறுப்பு தெரிவித்து, அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னோட்டமாக சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில், ‘இணைய அதிமுகவினர் சந்திப்பு’ என்று ஒரு சந்திப்பும் நடந்தேறியிருக்கிறது. அரசின் திட்டங்களை இணையத் தளங்களில் எடுத்துச் சொல்வது, எதிர்க்கட்சிகளின் புகார்களை எதிர்கொள்வது என்று பலவிஷயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.
எல்லா கட்சிகளும் இணையத்தில் தொடை தட்டி இறங்கிவிட, அதிரடி அரசியலுக்குப் பெயர்போன தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிக மட்டும் இன்னும் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை. தேமுதிக தலைவர்கள் யாரையும் சமூக வலைத்தளங்களில் காண இயலுவதில்லை. தொண்டர்களும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சீக்கிரமா நீங்களும் துண்டு போட்டு சீட்டு புடிங்க கேப்டன்!
(நன்றி : புதிய தலைமுறை)