சாரு – எக்ஸைல் : டிட்பிட்ஸ்
- தமிழ் இலக்கியம் சாமானிய மக்களிடம் பரவலாகிறது என்று பரவசப்பட்டுக் கொள்ளலாம். அல்லது தமிழ் இலக்கியம் இவர்களால் வணிகமயமாகி சீரழிகிறது என்று சீற்றமும் கொள்ளலாம். போஸ்டர், ட்ரைலர், கட்டவுட், பிரம்மாண்ட அரங்கில் வெளியீடு என்று டிசம்பர் புத்தகக் கச்சேரியை களை கட்ட வைத்திருக்கும் சாருவின் எக்ஸைலை நீங்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் கபிலன் வைரமுத்துவின் ‘உயிர்சொல்லை’ இந்த விஷயத்தில் எக்ஸைல் அடித்துக் கொள்ளமுடியவில்லை என்பதே நிஜம்.
- கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா வெளியீட்டுக்குப் பிறகு அதிகளவில் கூடிய வாசகர் கூட்டம் எக்ஸைலுக்குதான் என்று சொன்னால் மிகையில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாருவுக்காக மட்டுமே கூடினார்கள் என்பது மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி. ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. சர்வநிச்சயமாக தமிழிலக்கிய சாதனை.
- இணையத் தளங்களில் சாருவை வன்மமாக கிண்டலடிப்பதின் மூலமாக மட்டுமே இலக்கிய அந்தஸ்து கிடைத்து விட்டதாக கருதிக் கொள்பவர்கள் சிலர் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கன்னத்தில் மச்சம் வைத்துக் கொண்டு மாறுவேடத்தில் அங்குமிங்குமாக அலைந்ததை காண முடிந்தது.
- சாருவின் ‘கெட்டப்’ எக்ஸைல் விழாவின் ஹைலைட். முழுக்க வெள்ளை முடி, வெள்ளை குறுந்தாடி. டாலடிக்கும் கோட்டு, சூட்டு. ஏனோ சாருவை இந்த கோலத்தில் பார்க்க ‘பாட்டுக்கு நான் அடிமை’ படத்தில் ‘இண்டர்நேஷனல் மியூசிக் ஃபெஸ்டிவலில் (?)’ ராமராஜன் ‘பொன்னாத்தா’ பாட்டு பாடும் காட்சி நினைவுக்கு வந்தது.
- மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள். ஒன்று கவிஞர் வாலிக்கு. இரண்டு இந்திரா பார்த்தசாரதிக்கு. மூன்று சாருவுக்கு. சாருவின் முந்தைய புத்தக வெளியீடு கூட்டங்களில் மேடை நிறைந்த நட்சத்திரங்களை தரிசித்தவர்களுக்கு இந்த மேடை ‘வாழ்ந்து கெட்ட வீட்டை’ நினைவுப்படுத்தியிருக்கும். ஒருவேளை சாரு தனிமைப்படுத்தப் படுகிறாரோ என்கிற எண்ணம் கூட தோன்றியது.
- சாரு ஒரு மோசமான நிகழ்ச்சித் தொகுப்பாளர். நிகழ்ச்சியைத் தொகுக்க வேறு யாரையாவது (அழகான பெண்ணாகப் பார்த்து) ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் இறுதியில் அவர் ஆற்றிய உரை உருக்கமானதாகவும், வழக்கம்போல சிறப்பானதாகவும் இருந்தது. புத்தகம் கிழிப்பு அல்லது யாரையாவது போட்டுத் தாக்கி டார் டாராக கிழிப்பு இம்முறை மிஸ்ஸிங்.
- கடந்த ஆண்டு மேடையிலிருந்த மதன் இம்முறை பார்வையாளராக வந்திருந்தார். அவரை சாரு மேடைக்கு அழைக்க, எக்ஸைலுக்கு சிறப்பான அணிந்துரை கிடைத்தது. இயக்குனர் வெற்றிமாறனையும் பார்வையாளர் வரிசையில் காணமுடிந்தது.
- வாலியின் வழக்கமான எதுகை மோனை பேச்சாக இல்லாமல் சுமாராகதானிருந்தது. இ.பா. சுத்தம்.
- வாசகர் வட்டத்தினரின் ஏற்பாடுகள் அபாரம். நூலை 50 ஆயிரத்துக்கும், 25 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தவர்கள் தங்கள் முகம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஏலம் கேட்டவ மற்ற 20 பேருக்கு மேடையிலேயே புத்தகம் வழங்கப்பட்டது.
- புத்தக வெளியீட்டாளரான பத்ரியை சாரு மேடைக்கு அழைத்தும் அவர் ஏனோ செல்லவில்லை. மேடைக்கு கீழேயே நின்று மொத்த நிகழ்வையும் வீடியோவில் கவர் செய்வதில் பிஸியாக இருந்தார்.
- சாருவின் பழைய இலக்கிய சகாக்கள் கவிஞர் ராஜசுந்தரராஜன், எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஆகியோர் வந்திருந்தனர். மாமல்லன் கண்ணை கூச வைக்கும் பச்சைநிற ஃப்ளோரசண்ட் டீ-ஷர்ட் அணிந்திருந்தார். அந்த வண்ணத்தை சாரு ஏக்கமாகப் பார்த்ததாக தெரிகிறது. அடுத்த நிகழ்ச்சியில் இதேமாதிரி ஃப்ளோரசண்ட் வண்ணச் சட்டையில் சாருவை காணமுடிந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஷோபாசக்தி ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.
- எத்தியோப்பிய எழுத்தாளரின் புத்தக வெளியீடு விழா என்பதால், எத்தியோப்பிய மன்னரின் வருகையை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். மன்னருக்கு நகர்வலம் இருந்திருக்கலாம். வரவில்லை. அதுபோலவே எஸ்.ரா.வும் வரவில்லை. எஸ்.ரா நிகழ்வுக்கு வந்து, நூலைப்பற்றிப் பேசப்போவதாக சாரு தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால், ஒரு சுவாரஸ்யமான, நீண்டகாலத்துக்கு அசைபோடும் விழாவாக இது அமையவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான்.
- ஆனாலும் ‘யாரை நம்பி நான் பொறந்தேன்’ ரேஞ்சில் தன் வாசகர்களை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து பெரும் கூட்டத்தோடு வெற்றி கண்டிருப்பது சாருவின் அசாத்திய மனத்திடத்தை காட்டுகிறது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகமும் வாங்கினார்கள் என்பதே சாருவுக்கு நிஜமான வெற்றி. இந்நிகழ்வுக்கு வாசகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு போக்கு தொடருமேயானால், அது மற்ற எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும்கூட நல்லதுதான்.
- புத்தகத்தை மேலோட்டமாக மேய்ந்ததில் சாருவின் ‘கடின உழைப்பு’ தெரிகிறது. காமரூபக் கதைகள், தேகம் மாதிரியாக இல்லாமல் பழைய சாரு ஃபார்முக்கு திரும்பியிருப்பதாகவே நினைக்கிறேன். எக்சிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனுக்கும், ராஸலீலாவுக்கும் பிறந்த குழந்தையாகவே ‘எக்ஸைல்’ இருக்குமென தெரிகிறது. ஏதோ ஒரு பக்கத்தில் பிரெஞ்சு கவிதை வாசித்தேன். நமக்கு பிரெஞ்சு தெரியாது என்பதால், இந்தப் பக்கத்தை வாசிப்பதற்காகவே பிரெஞ்சு கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுகிறது. வில்லனுக்கு ‘கொக்கரக்கோ’ என்று பெயரிட்டிருப்பதின் மூலமாக சாருவின் திராவிட அரசியல் எதிர்ப்பு பளிச்சிடுகிறது. இதுவரை சாரு எழுதிய நாவல்களில் சாருவே ஹீரோ, சாருவே வில்லன் என்பதுதான் வழக்கம். எக்ஸைலில் முதன்முறையாக சாருவுக்கு வில்லன் தோன்றியிருக்கிறார். புத்தகத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ இந்திய ஞான தத்துவ மரபு மாதிரி மேட்டர்கள் இருக்கும் போல தெரிகிறது. ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று முல்லைபெரியாறின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு படித்துவிட வேண்டியதுதான்!
நிகழ்வை A to Z அழகாக பதிவு செய்துள்ளதுடன், நிகழ்வு பற்றி நியாயமான கருத்துக்கள் சொல்லியுள்ளீர்கள்!
பதிலளிநீக்கு// ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று முல்லைபெரியாறின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு,//
பதிலளிநீக்குயுவாஸ் பஞ்ச்.. :)
//சாரு ஒரு மோசமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்//
பதிலளிநீக்குநல்லாத்தானே தொகுத்து வழங்கினார்!!!
விழா மேடையில் வாலி மற்றும் இ.பா மட்டுமே இருக்குமாறு செய்தது நாங்கள் விரும்பியே செய்த ஒரு விஷயம்...கடந்த முறை போல் விழாவை யாரும் தங்கள் சொந்த விஷயங்களை விவாதிக்கும் களமாக்க கூடாது என்று தெரிந்தே எடுத்த முடிவு இது...மற்ற நாட்டில் உள்ள இலக்கிய விழாவை போலவே இங்கும் செய்ய எடுக்கப்பட்ட ஒரு முயற்சி இது...மற்ற படி விழாவிற்கு ஞானி, பாஸ்கர் சக்தி, பழனி பாரதி, பிரிட்டிஷ் அம்பாசடர் மைக், ஆங்கில கவிஞர் விவேக் போன்றோரும் வந்திருந்தனர்...உங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி, உங்களின் ஆதரவு தான் எங்களின் எனெர்ஜி டானிக்
பதிலளிநீக்குஅனைத்துமே சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்தான்...உங்களைத்தான் முதலில் பாராட்ட வேண்டும் .அங்கு உட்கார்ந்து கொண்டு அனைவரையும் ஆராய்ச்சி செய்துள்ளதற்கு..
பதிலளிநீக்குகவிஞர் நா முத்துக்குமார் அவர்களும் வந்திருந்தார்...நிகழ்ச்சி முடிந்த பிறகு மேடைக்கு வந்து சாருவிடம் சொல்லிவிட்டே கிளம்பினார்
பதிலளிநீக்கு//கவிஞர் நா முத்துக்குமார் அவர்களும் வந்திருந்தார்...//
பதிலளிநீக்குகவனிக்கவில்லை. சாருவின் ஒரு நூலுக்கு அவர் கொடுத்திருந்த முன்னுரை அபாரம் (எந்த நூல்? சட்டென்று மறந்துவிட்டது)
//சட்டெனறு மறந்துவிட்டது//
பதிலளிநீக்கு"சட்டென்று ஞாபகம் வரவில்லை" என்பது பொருத்தமான வாக்கியமாக அமையும்.
குட் கவரேஜ் .விரைவில் விமர்சனம் வெளியிடுங்கள்
பதிலளிநீக்கு"சாருவை இந்த கோலத்தில் பார்க்க ‘பாட்டுக்கு நான் அடிமை’ படத்தில் ‘இண்டர்நேஷனல் மியூசிக் ஃபெஸ்டிவலில் (?)’ ராமராஜன் ‘பொன்னாத்தா’ பாட்டு பாடும் காட்சி நினைவுக்கு வந்தது. "
பதிலளிநீக்குஅட்டகாசமான நகைச்சுவை
பகிர்வுக்கு நன்றி
//சர்வநிச்சயமாக தமிழிலக்கிய சாதனை.//
பதிலளிநீக்குஅப்படியா! யுவகிருஷ்ணா அவர்களே!
we expect ur book review as soon as possible..
பதிலளிநீக்கு//கண்ணை மூடிக்கொண்டு படித்துவிட வேண்டியதுதான்!//
பதிலளிநீக்கு:)
eyes wide shut!
அருமையான பதிவு.
பதிலளிநீக்குதிருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
சுருக்கமாகவும் , 'சுருக்'-கமாகவும் எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு:)
எக்ஸைல்- என் கைக்கு வரும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்.....