28 டிசம்பர், 2011

செங்கடல்

சிங்கள அரசையும், இந்திய அரசையும் ஒரு தட்டில் வைத்து அம்பலப்படுத்துவதால் தணிக்கையில் பிரச்சினை. சென்னை உலகத் திரைப்பட விழாவில் திரையிட புறக்கணிப்பு என்று எப்போது கேள்விப்படும் போதும் ஏதேனும் சர்ச்சை கச்சை கட்டிக் கொள்வதால் ‘செங்கடல்’ இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எங்கே புறக்கணிக்கப்பட்டதோ, அதே படவிழாவில் அரங்கு நிறைந்த கூட்டத்துக்கு இடையே தரையில் அமர்ந்து செங்கடலை கண்டோம்.

லீனாவின் ‘டயரி’தான் ஒருவரி கதை. 2009 மே மாத வாக்கில் ராமேஸ்வரத்தில் இயக்குனர் லீனா, மீனவர் பிரச்சினை குறித்த ஆவணப்படத்துக்காக தங்கியிருக்கிறார். காவல்துறையினர் லீனாவை விசாரிக்கிறார்கள். அவர் எடுத்த வீடியோ காட்சிகளை போட்டுப் பார்க்கிறார்கள். கடைசியாக ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

முதல் காட்சியிலிருந்தே இது ஆவணப்படமா, திரைப்படமா என்கிற குழப்பம் ஏற்படுகிறது. இது இரண்டுமே இல்லை என்று உணரும்போது படம் எந்தவொரு குறிப்பிடத்தக்க உணர்வையும் உருவாக்காமல் முடிந்துவிடுகிறது. லீனா படத்தை இயக்கி மட்டும் இருக்கலாம். பொலிவான தோற்றம், ஆளுமையான குரல் இருந்தாலும் நடிப்பாற்றல் அவருக்கு கொஞ்சம் சுமார்தான். ஒரு சிலரைத் தவிர படத்தின் பாத்திரங்கள் பெரும்பாலும் தொழிற்முறை நடிகர்கள் அல்ல என தெரிகிறது. எனவே பல காட்சிகள் அமெச்சூர்த்தனமாய் அமைந்துவிடுகிறது. இத்தனைக்கும் கேமிரா, எடிட்டிங் உள்ளிட்ட விஷயங்கள் நல்ல தொழிற்நேர்த்தியுடன் அமைந்தும், ஏதோ விஸ்காம் மாணவர்களின் அறிமுக குறும்படத்தை பார்வையிடும் உணர்வுதான் வருகிறது.

எடுத்தாளப்பட்டிருக்கும் உள்ளடக்கமும் ஒன்றும் புதிதல்ல. ஓரளவு ஈழ, தமிழக அரசியல் அறிந்த எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள்தான். பத்திரிகைகளில் வாசித்தது, மேடைகளில் கேட்டது மாதிரியான தகவல்களை காட்சிகளாக்கி இருக்கிறார்கள். ஆனால் வாசித்தபோதும், கேட்டபோதும் ஏற்பட்ட கோபம், காட்சிகளாகப் பார்க்கும்போது இல்லை எனுமளவுக்கு மிக பலகீனமான உருவாக்கம்.

ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையோடு பின்னிப் பிணைந்ததுதான் என்றாலும்.. ஏதேனும் ஒரு தரப்பின் பார்வையில் ஃபோகஸ் செய்திருந்தால் திரைக்கதை குழப்பமில்லாமல் இருந்திருக்கும். பல காட்சிகளில் யார் மீனவர், யார் ஈழத்தமிழர்.. எது அகதிமுகாம், எது மீனவர் குப்பம் என்கிற குழப்பம் பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இடையிடையே வரும் கவிதைகள், ஏதோ ஒரு மணிபல்லவத்தீவு கனவுகாட்சி, சித்தார்த் என்கிற ஆமை என்று ஆடம்பரமாக சொருகப்பட்டிருக்கும் பின்நவீனத்துவக் காட்சிகள் எதுவுமே இந்தம் சாமானிய மரமண்டைக்கு ஏறவில்லை.

ஈர்க்கக்கூடிய ஓரிரு விஷயங்களும் உண்டு. மனநிலை பிறழ்ந்த ஈழத்தமிழர் பாத்திரத்தில் நடித்திருப்பவரின் நடிப்பு அபாரம். அவரது பாத்திரம் மட்டுமே செதுக்கி, செதுக்கி கவனத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது கையில் எப்போதும் இடம்பெறும் ரேடியோவும் கதையில் தவிர்க்க இயலாத ஒரு பாத்திரமாகிறது. இறுதியில் அந்த ரேடியோ கூட செயலிழந்துப் போய்விடுவதாக காட்டுவது படுசோகம். மீனவர் ஒருவர் அவருக்கு வேறு ரேடியோ பரிசளிப்பது எதிர்கால நம்பிக்கை.

எந்தவகையில் செங்கடல் சிங்கள, இந்திய ஏகாதிபத்தியங்களை நடுநடுங்க வைக்கிறது என்பது கடைசிவரை புரியவேயில்லை. இதைவிட காத்திரமான எழுத்துகளும், கூட்டங்களும் கூட எந்த பெரிய ‘சர்ச்சை’யையும் ஏற்படுத்திவிடாத நிலையில், செங்கடலுக்கு ஏனிந்த கொலைவெறி ஆர்ப்பாட்டம் என்பது புரியவேயில்லை. அகதி முகாம்களில் காவல்துறையினரின் அத்துமீறலை எல்லாம் செங்கடலை விட சிறப்பாக, கேப்டன் நடித்த ‘சபரி’ திரைப்படத்திலேயே கண்டுவிட்டோம்.

அதுபோலவே ஈழத்தமிழருக்கான போராட்டங்கள் குறித்த காட்சிகளின்போது, டெல்லியில் கவிஞர்கள்-எழுத்தாளர்கள் நடத்திய போராட்டம்தான் ஐ.எஸ்.ஓ. 9001 விருதுபெற்ற ஒரிஜினல் போராட்டம் என்கிறரீதியில் வரும் காட்சிகள், கவுண்டமணி-செந்திலின் வாழைப்பழ நகைச்சுவைக்கு இணையான நகைச்சுவை உணர்வை தருகிறது. கொஞ்சமும் ஒட்டாத இந்த செல்ஃப் பிரமோஷனை லீனாமணிமேகலை தவிர்த்திருக்கலாம்.

‘இது விடுதலைப்புலிகளை எதிர்க்கும் படம்’ என்று தாங்களாகவே நினைத்துக்கொண்டு புலி ஆதரவாளர்கள் தேவையில்லாமல் செங்கடலை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். புலிகளை மட்டுமல்ல. இந்தியா, இலங்கை அரசுகளையும் கூட ஒன்றும் அவ்வளவு வலிமையாக ‘செங்கடல்’ எதிர்க்கவில்லை. திரைப்பட உருவாக்கத்துக்கான எந்தவொரு திட்டமிடலோ, தேவையான உழைப்போ இன்றி, ‘நம் பங்குக்கும் ஒரு படம்’ என்று கடனுக்கு எடுத்தமாதிரியாகதான் ஏனோதானோவாக எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ போதுமான சமாச்சாரங்கள் எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

25 கருத்துகள்:

  1. சென்னை திரைப் பட விழா வெளியிடலுக்குப் பிறகு
    எவ்விதமான ஆதரவு/எதிர்ப்பு குரல்களும் அந்த அளவு
    வர வில்லை.

    திரை அரங்குகளில் வெளியிடப் பட்டாலும்
    மக்கள் இதுவும் கடந்து போகும் என்று கடந்து தான் போவார்கள் என எண்ணுகிறேன்,
    உங்கள் கருத்து என்ன

    பதிலளிநீக்கு
  2. திரையரங்கில் வெளிவந்தாலும் உச்சிதனை முகர்ந்தால், காற்றுக்கென்ன வேலி ரேஞ்சுக்குதான் ஹிட் ஆகும் :-)

    பதிலளிநீக்கு
  3. சும்மா ஒரு சீனில் வருகிறார். வசனம் : ஷோபாசக்தி-யாம். பரவாயில்லை, not bad.

    பதிலளிநீக்கு
  4. முதலில் உஙகளுக்கு தமிழில் நாம் உண்டாக்கவேண்டிய சுயாதீன (Independent) சினிமா சார்ந்த அக்கறை ஏதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.அப்படி இருந்தால் விஜயகாந்தின் ‘சபரி’போன்ற வெகுஜன சினிமாவை பற்றியெல்லாம் எள்ளலான ஒப்பீடெல்லாம் வைத்திருக்கவே மாட்டீர்கள். இரண்டு தளங்களின் வேறுபாடுகள் என்னவென்று அறிவதற்கு உண்மையில் ஆர்வமில்லை என்றால் இப்படத்தை பற்றிய உஙகளின் இம்மாதிரியான விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்.
    என்னைப் பொறுத்த வரை செங்கடலின் முக்கியத்துவம் இரண்டு தளங்களில் உண்டு. ஒன்று, மைய நீரோட்ட சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஒரு மாற்று வெளியில் சுயாதீன முயற்சியாக அசல் தன்மையுடன் வந்திருக்கும் தமிழின் முழு நீளப்படம். இரண்டாவது, தமிழக மீனவர் பிரச்னையை, அவரகளது அன்றாட வாழ்வை அந்த மக்களை கொண்டே பல பாசிச இடர்ப்பாடுகளை தாண்டி, ஒரு மக்கள் பங்களிப்பு சினிமாவாக உருவாக்கி இருப்பது. செங்கடல் ஒரு முக்கிய அரசியலை துணிச்சலாக முன்னெடுக்கும் படம், அதே சமயம் கலை சார்ந்த சில நுட்பமான சரிவுகளை கொண்ட படம் தான். செங்கடல் தன் இலக்கின் தீவிரத்தை அடைந்துவிட்டது என்றோ அல்லது அது ஒரு சிறந்த படமென்றோ நான் கூர வரவில்லை ஆனால் அதன் முக்கியத்துவத்தை மறுக்க இயலாது என்றே சொல்ல வருகிறேன்.நனறி.

    பதிலளிநீக்கு
  5. கார்த்தி அவர்களே!

    திடீரென சினிமா ஆர்வலராக/விமர்சகராக நீங்கள் பில்டப் ஆகிவிட்டதால் இப்படியெல்லாம் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிரச்சினையில்லை.

    ஒரு விஷயம் மொக்கை என்றால் ஏன் மொக்கை என்று விளக்க வேண்டும். இந்தப் பதிவு விளக்குகிறது.

    அதைப்போலவே ஒரு விஷயம் சிறப்பானது என்றால் ஏன் சிறப்பானது என்று விளக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ‘பெஸ்ட்டு, சூப்பர்’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தால், ஏதாவது பார்ட்டிகளில் யாராவது சரக்கு வாங்கி கொடுப்பார்களே தவிர, உங்கள் அபிப்ராயத்துக்கு பெரிய மரியாதை இருக்காது.

    இண்டிபெண்டட் சினிமா பற்றி எனக்கு எதற்கு சார் அக்கறை இருக்கணும்? நானென்ன சினிமாக்காரனா? நான் வெறும் ரசிகன். எனக்குப் பிடித்ததை உயர்த்திப் பிடிப்பேன். பிடிக்காததை கீழே போட்டு மிதிப்பேன். அவ்வளவுதான்! :-)

    பதிலளிநீக்கு
  6. யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமல் கடந்த எட்டு வருடங்களாக நான் நம்பும் சினிமாவினுள் இயங்கி வருபவன். திடீரென வந்தவனில்லை. யாரும் இவ்விடயத்தில் என்னை கட்டாயப்படுத்தி விடமுடியாது. யாருக்கும் ஜால்ரா போடுவதோ, சரக்கிற்காக நாக்கு தொங்கப்போடுவதோ வேலையாக இருந்திருந்தால் ஒரு வேளை நான் இங்கே உரையாடுவது போன்ற செயல்களை செய்யாமல் யாராவது ஒரு முன்னணி நாயகியின் இடுப்பை படம் பிடித்துக்கொண்டிருப்பேன். உங்களுக்கு அது பிடித்தும் போயிருக்கலாம்.
    நான் கூற வருவது, உங்களுக்கு படம் பிடித்திருக்கிறது.. இல்லை.. என்பதில்லை. ஒரு படத்தை அதன் புரிதலோடு துவைத்து காயப்போடுவதை நான் விரும்புபவன் தான். அதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கார்த்தி!

    நீங்கள் இந்தப் படத்தை என்னவாகப் புரிந்துகொண்டீர்கள் என்று விளக்குங்களேன்.

    இந்தப் படம் சொல்ல வரும் அரசியலை இதுவரை யாருமே சொன்னதில்லையா? அப்படி யாராவது சொல்லியிருந்தால், அதில் இருந்து இது எவ்விதத்தில் சிறந்தது?

    இந்தப் படத்தை எவ்விதமாக புரிந்து கொண்டிருக்கிறேனோ அவ்விதமாக துவைத்திருக்கிறேன். அது எவ்வகையில் தவறு என்பதை முடிந்தால் விளக்குங்கள். அதைவிட்டு சுயாதீன சினிமாவில் அக்கறையில்லை, கிக்கறையில்லை என்று பொத்தாம்பொதுவாக சொல்வீர்களேயானால், நீங்கள் செங்கடலுக்கோ அல்லது அதன் தயாரிப்பாளருக்கோ ஜால்ரா அடிக்கும் நோக்கத்தைத் தவிர, வேறெதையும் கொண்டவரல்ல என்பதாகி விடும்.

    எனக்கு பிடிக்காத படத்தை பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறேன். உங்களுக்கு பிடித்திருப்பின், ஏனெல்லாம் பிடித்திருந்தது என்று விளக்கி எழுதுங்களேன், படிப்போம்.

    பதிலளிநீக்கு
  8. யுவகிருஷ்ணா .. சிக்கலே எனக்கு பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்கிற பொத்தாம் பொதுவான நிலையில் என்னால் குறிப்பாக இந்த படத்தை பார்க்க முடியாது என்பது தான். நான் படத்தின் முக்கியத்துவம் என்னவென்று என் முதல் பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன். படம் எவ்விதமான அரசியலை முன்னெடுக்கிறது? அது மக்களை பற்றி.. அவர்களின் துயரத்தை பற்றி பேசுகிறது. அதிகாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவர்களின் வாழ்வை பற்றி பேசுகிறது. அது ஒரு கதையாடலாக இல்லாமல் ஒரு ஆவணப் பட இயக்குனரின் சிதறுண்ட நினைவுகளாக பிரதிபலிக்கிறது. இங்கே அரசியல் என்பது ஒரு முக்கிய இழையாக இருக்கிறதே அன்றி யார்க்கும் சார்புடையதாக இல்லை. சார்பு என்று சொன்னால்... மக்களின் வலிகளுக்கு சார்புடையதாக இருக்கிறது. அதே சமயம் நான் முன்பே குறிப்பிட்டது போல் கலைத் தன்மை கூடி வராத படைப்பாக இது இருக்கிறது. ஒரு முக்கிய பதிவு என்கிற அளவில் சுயாதீன சினிமாவின் தளத்தில் நிற்கும் படம் என்று சொல்லலாம். அவ்வளவு தான். உங்கள் விமர்சனம் ஒரு சராசரி வெகுஜன பார்வையாளனின் மனோபாவத்தில் இருந்து எழுதப்பட்டதாக தெரிகிறது. உங்களின் இது போன்ற ரசிகர்களை திருப்தி படத்தவே நீங்களும் எழுதுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? விஜயகாந்த் போன்ற எடுத்துக்காட்டுகள் அதனால் தான் வந்து தொலைக்கிறது. வெகுஜன படங்களின் நோக்கமும், இது போன்ற படங்களின் நோக்கமும் முற்றிலும் வேறானது. இரண்டையும் ஒரே பார்வையில் இருந்து எழுதிவிட முடியாது. விமர்சனம் என்று வரும் போது இது மிக அவசியமான பண்பாகிறது. மற்றபடி நீங்கள் படத்தை விரும்பவில்லை என்பதில் எனக்கு எந்த பிரச்சனை ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
  9. கார்த்தி!

    இது மக்களின் சார்பான அரசியலை பேசுகிறது சரி. இப்படி ஒரு படம் தங்கள் சார்பாக பேசப்படுவது அந்த மக்களுக்காவது தெரியுமா அல்லது இப்படி மக்களின் அரசியலை பேசிய படம் ஒன்று வந்திருப்பது வெகுஜன மக்களுக்காவது தெரியுமா?

    யாருக்கு சார் படம் எடுக்குறீங்க? உங்களை மாதிரி ஒரு இருநூறு பேரு பார்த்துட்டு கைதட்டவா? இல்லைன்னா பனோரமாக்களுக்கு அனுப்பி அவார்டு வாங்கவா?

    இதுமாதிரி படங்களின் நோக்கம் என்னதான் என்று கொஞ்சம் புரியவையுங்களேன்.

    இந்தப் படம் எவ்வகையிலும் எதையும் அழுத்தமாக பதியவில்லை. எதிர்கால வரலாறு செங்கடலை சுட்டிக்காட்டி எதையும் பேசுமளவுக்கு இல்லை. மீனவர் பிரச்சினையும், ஈழத்தமிழர் பிரச்சினையும் மிக அழுத்தமாக வேறு விதங்களில் பதியப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு உங்களைப் போன்றோர் தரும் பில்டப்பு ஓவர். இப்படி ஓவர் பில்டப்பு தர உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். பார்க்கும்போது மொக்கையாக இருக்கிறது என்கிற ஒரே காரணம் இதுபோல தூக்கிப் போட்டுவிட்டுபோவதற்கு எனக்கு போதுமானதாக இருக்கிறது.

    விஜயகாந்த் படமுன்னா அவ்வளவு கேவலமா சார் உங்களுக்கு?

    ஒரே ஒரு படம் ‘சபரி’ மாதிரி எடுத்துக் காட்டிடுங்க பார்க்கலாம் :-)

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் கூறும் படத்தின் சில குறைகளை ஒப்புக்கொள்கிறேன். அது நேரடியாக மக்களை சென்றடையும் அழுதத்துடனோ அல்லது கலாப்பூர்வமாகவோ அமையாமல், இரண்டிற்கும் இடையில் சிதறுண்டு கிடக்கிறது. ஒரு வேளை தீவிரமான கலாப்பூர்வ நிலையில் இது இருந்திருந்தால் 'இது நமக்கெலாம் ஒத்துவராது" என்று இந்த படத்தை பற்றி பேசி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் .:)

    செங்கடலின் இன்றைய முக்கியத்துவம் இன்னும் சில வருடங்களில் இருக்குமா என்கிற கேள்வி நியாமானது. அதே சமயம் சுயாதீன சினிமா வேண்டும் என்கிற நம்பிக்கையோடு, இது போன்ற சினிமா எடுப்பதற்கான நடைமுறை சிக்கல்களை நேரடியாக அறிந்தவன் என்கிற நிலையில் இப்படத்திற்கு ஆதரவு அளிப்பது எம் கடமையாகிறது.

    யாருக்காக இது போன்ற படம் எடுக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் கேரளத்திலோ வங்காளத்திலோ நான் எதிர்கொண்டதில்லை. உங்களை தவறு சொல்ல மாட்டேன். நம்முடைய சினிமாவில் அதற்கான பாரம்பரியம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதால்.:)

    பதிலளிநீக்கு
  11. கார்த்தி!

    நிஜமாகவே நீங்கள் யாரென்ற குழப்பம் எனக்கு ஏற்படுகிறது :-(

    //யாருக்காக இது போன்ற படம் எடுக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் கேரளத்திலோ வங்காளத்திலோ நான் எதிர்கொண்டதில்லை. //

    இப்படி பேசுவதாக இருந்தால் நீங்கள் சத்யஜித்ராயாகவோ அல்லது ஜான் ஆபிரகாமாகவோ இருக்க வேண்டும் :-)

    திரும்பத் திரும்ப இந்த சுயாதீனப் புராணம் பாடுவதை விட்டு விட்டு, இந்தப் படம் எவ்வகையில் முக்கியமானது, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, இப்படம் நேர்மையான அரசியலை பேசுகிறதா என்கிற அளவுக்கு விவாதிக்க வாருங்கள். இத்தனை பின்னூட்டம் போட்டும் இன்னமும் நீங்கள் செங்கடலின் உள்ளடக்கத்துக்கு வரவேயில்லை.

    ஒருவேளை செங்கடல் வெற்றியடைந்தால் இதுமாதிரி சுயாதீன சினிமா எதையாவது இயக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனும் நப்பாசையிலேயே இதுபற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தவறாக நான் யூகித்துவிட வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் :-)

    பதிலளிநீக்கு
  12. சுந்தர் ருவாண்டா5:29 PM, டிசம்பர் 28, 2011

    அதெல்லாம் சரி சார். “அழிக்கப்பிறந்தவன்” என்ன ஆனான்? வருமா? வராதா? 6 அத்தியாயம் போட்டுட்டு தொங்கல்ல விட்டுட்டீங்களே...

    பதிலளிநீக்கு
  13. // எனக்குப் பிடித்ததை உயர்த்திப் பிடிப்பேன். பிடிக்காததை கீழே போட்டு மிதிப்பேன். //
    சார்... யுவகிருஷ்ணா சார்... சூப்பர் சார்... ஆனா ஒரே ஒரு சந்தேகம் சார்... ஒரு வேளை ஒரு 'பிட்டு' படம்... அட அதான் சார் 'அந்த' மாதிரி படம் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்... அட சும்மா ஒரு பேச்சுக்குதான் சார்... அந்த படத்தைப்பற்றி சிலாகித்து எழுதுவீர்களா?

    பதிலளிநீக்கு
  14. நீங்களும் ஒரே விடயத்தை தான் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள். படத்திற்கு ஒரு விளக்க உரையை கேட்கிறீர்கள். நான் என்னால் இயன்ற வரை சுருக்கமாக விளக்கி இருக்கிறேன். விரிவாக எழுதினால் உங்களுக்கு முகப்புத்தகத்தின் வழி Tag செய்கிறேன்.

    ஒரு சிறிய திருத்தம்: //கேரளத்திலோ வங்காளத்திலோ நான் எதிர்கொண்டதில்லை. // என்பது "நாம் எதிர்கொள்ள மாட்டோம்" என்று வந்திருக்க வேணும். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கார்த்தி!

    படம் குறித்த எனது பார்வையை பதிவில் எழுதியிருக்கிறேன்.

    நீங்கள் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தால், நானும் திரும்ப திரும்ப அதையே பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

    //என்னைப் பொறுத்த வரை செங்கடலின் முக்கியத்துவம் இரண்டு தளங்களில் உண்டு. ஒன்று, மைய நீரோட்ட சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஒரு மாற்று வெளியில் சுயாதீன முயற்சியாக அசல் தன்மையுடன் வந்திருக்கும் தமிழின் முழு நீளப்படம். இரண்டாவது, தமிழக மீனவர் பிரச்னையை, அவரகளது அன்றாட வாழ்வை அந்த மக்களை கொண்டே பல பாசிச இடர்ப்பாடுகளை தாண்டி, ஒரு மக்கள் பங்களிப்பு சினிமாவாக உருவாக்கி இருப்பது. செங்கடல் ஒரு முக்கிய அரசியலை துணிச்சலாக முன்னெடுக்கும் படம், அதே சமயம் கலை சார்ந்த சில நுட்பமான சரிவுகளை கொண்ட படம் தான். செங்கடல் தன் இலக்கின் தீவிரத்தை அடைந்துவிட்டது என்றோ அல்லது அது ஒரு சிறந்த படமென்றோ நான் கூர வரவில்லை ஆனால் அதன் முக்கியத்துவத்தை மறுக்க இயலாது என்றே சொல்ல வருகிறேன்.நனறி.//

    கிட்டத்தட்ட இதே கருத்தை இதுவரை இருநூறு முறை செங்கடல் குறித்த விவாதம் வரும் வெவ்வேறு ஃபேஸ்புக் விவாதங்களிலும், வலைப்பூக்களிலும் பதிந்திருக்கிறீர்கள். இதை தாண்டி ‘செங்கடல்’ பற்றி சொல்ல உங்களுக்கு ஒன்றுமேயில்லையா?

    பதிலளிநீக்கு
  16. நண்டு சார்!

    ‘அநாகரிகம்’ உள்ளிட்ட பிட்டு படங்களை பிரமாதமாக சிலாகித்து எழுதியிருக்கிறோமே? ஆர்க்கீவ்ஸில் போய் வாசித்துப் பாருங்கள் :-)

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் சொல்வது உண்மை. அதே சமயம் என்னால் இயலும் போது சில படங்களை பற்றி விரிவாக விமர்சனம் எழுதியும் இருக்கிறேன். இன்னும் செங்கடல் பற்றி விரிவாக எழுத மனநிலை உருவாகவில்லை என்பதே உண்மை. இதை விட சிறந்த படங்கள் என்னை ஆட கொண்டுவிடுகிறது என்பதால் இருக்கலாம். அல்லது செங்கடல் எனக்கு நெருக்கமான படமாக இல்லை என்பது ஒரு காரணம் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  18. நான் செங்கடல் திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆனால் கார்த்தியை நன்றாக அறிவேன். சென்னையில் எனது நண்பர்களின் மூலமாக அறிமுகமான நண்பர் கார்த்தி.

    \\திடீரென சினிமா ஆர்வலராக/விமர்சகராக நீங்கள் பில்டப் ஆகிவிட்டதால் இப்படியெல்லாம் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிரச்சினையில்லை.
    ஒரு விஷயம் மொக்கை என்றால் ஏன் மொக்கை என்று விளக்க வேண்டும். இந்தப் பதிவு விளக்குகிறது.

    அதைப்போலவே ஒரு விஷயம் சிறப்பானது என்றால் ஏன் சிறப்பானது என்று விளக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ‘பெஸ்ட்டு, சூப்பர்’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தால், ஏதாவது பார்ட்டிகளில் யாராவது சரக்கு வாங்கி கொடுப்பார்களே தவிர, உங்கள் அபிப்ராயத்துக்கு பெரிய மரியாதை இருக்காது.//

    இது போன்ற சொற்கள் மிகவும் அவமதிக்கக் கூடியவையாக இருக்கிறது. நீங்கள் விவாதத்தின் பொருளை விட்டு விட்டு தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு என்னுடைய கண்டனத்தை முதலில் பதிவு செய்து கொள்கிறேன். நான் அவரை அறிந்த இந்த 12 வருடங்களில் அவர் மிக சிறந்த சினிமா ஆர்வலரும் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனருக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார் என்பதே என் நிலைப்பாடு. கார்த்தி யாரையும் எளிதில் ஆதரிப்பவரும் அல்ல. ஜால்ரா தட்டிக் கொண்டே ஆதாயம் தேடுபவரும் அல்ல.

    உங்கள் விமர்சங்களையும் அவ்வப்போது வாசித்து வந்தவன் என்ற முறையில், உங்கள் இருவரின் நியாயங்கள் ஒரு நேர்கோட்டில் வருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை அறிகிறேன்.

    \\நீங்கள் செங்கடலுக்கோ அல்லது அதன் தயாரிப்பாளருக்கோ ஜால்ரா அடிக்கும் நோக்கத்தைத் தவிர, வேறெதையும் கொண்டவரல்ல என்பதாகி விடும்.\\

    ஆனால் உங்கள் வாதங்களை தொடருவதானால் இது போன்ற திணிப்புகளை தவிர்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. தியேட்டர்களில் வருமா என்ன? கமர்ஷியல் சினிமாவே மூணுநாள் தாங்கமாட்டேங்குதே!

    ஹன்ஸிகா
    Pope-ன் குசும்பு

    பதிலளிநீக்கு
  20. யார் அந்த சார் கார்த்தி? ஒருக்கா டெல்லில இருக்கிறார் எண்டு டெல்லிக்கு போனா, அடுத்தாப்ல கல்கத்தா போயிட்டாரு. அப்புறம் கோச்சில இருக்கிறாரு. Follow பண்ணுறது கஷ்டமா இருக்கில்ல! இப்பவே கண்ணா கட்டுது பாஸ்!

    பதிலளிநீக்கு
  21. லக்கி, கார்த்தி யுடைய பிரச்சனை செங்கடல் பற்றியது அல்ல. சுயாதீன சினிமா பற்றியது. சுயாதீனமாக சினிமா எடுக்கும் போது சுவாரசியக் குறைவு போன்ற விஷயங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது ரோபோ அல்ல செங்கடல் என்று சொல்கிறார், என்றே நான் நினைக்கிறேன்.

    போகட்டும் @நண்டு, லக்கி (அல்லது அதிஷா) பிட்டுப்படம் பார்ப்பது எப்படி என்ற ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியிருக்கிறார். இவர்கள் அதில் Ph.D யாக்கும்.

    பதிலளிநீக்கு
  22. Sir ,
    When “அழிக்கப்பிறந்தவன்” will come?

    பதிலளிநீக்கு
  23. /// செங்கடல் எனக்கு நெருக்கமான படமாக இல்லை என்பது ஒரு காரணம் ///

    இதைத்தானே யுவகிருஷ்ணாவும் சொல்லியிருக்கிறார்?!

    பதிலளிநீக்கு
  24. இரண்டாவது, தமிழக மீனவர் பிரச்னையை, அவரகளது அன்றாட வாழ்வை அந்த மக்களை கொண்டே பல பாசிச இடர்ப்பாடுகளை தாண்டி, ஒரு மக்கள் பங்களிப்பு சினிமாவாக உருவாக்கி இருப்பது.@@@@@ ஹைய்யோ, ஹைய்யோ, இந்த உதவி இயக்குநர்கள் எல்லாம் internet யும் (முழுவதும்), புத்தகங்களையும் (கொஞ்சகாலத்திற்காவாது) மூடிட்டு மக்களை கவனிக்கலாம் என்பதைதானே, மந்தையிலிருந்து பிரிந்த டோழர் மடிப்பாக்கம் மகான் பொட்டுனு சொல்றார்.

    லக்கி-டோழர் த்ரிஷாவிடம், ஏப்பா நான் சரியாத்தானே பேசுறேன் !

    பதிலளிநீக்கு