அவரது உடை அப்போதெல்லாம் ஒயிட் அண்ட் ஒயிட். அருகில் சென்றால் ஜவ்வாது மணக்கும். க்ளீன் ஷேவ். நிறம் கருப்பு. பல் கொஞ்சம் எடுப்பு. வாயில் ஸ்டைலாக புகையும் வில்ஸ் ஃபில்டர். எனக்கு ரொம்பவும் பிடித்த பாலகுமாரன். என்றைக்கு தாடி வைத்தாரோ, என்றைக்கு விசிறியின் விசிறி ஆனாரோ, அன்றே லவுகீகவாதிகளிடமிருந்து விலகிவிட்டார். ஞாநிகளும் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த காலத்து பாலகுமாரனை எப்போதாவது இரவுகளில் நெட்ரு பண்ணுவது சுகமான லாகிரி.
உயிர்ச்சுருள்
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைகிறது. ஆர்.எம்.வீரப்பன் கைப்பற்றிய அணி ஜா. நெடுஞ்செழியன் கைப்பற்றிய அணி ஜெ. சட்டமன்றத்தில் ஒருவருக்கொருவர் டவுசர் கிழித்துக்கொள்ள ஆட்சி கலைகிறது. இப்படிப்பட்ட சூழலில் ராயப்பேட்டை தலைமைக் கழகத்துக்காக இரு அணிகள் அடித்துக் கொள்கின்றன.
இது 1988ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு. இதன் பின்னணியில் இந்தியா டுடே பத்திரிகையில் பாலகுமாரன் எழுதிய தொடர் ‘உயிர்ச்சுருள்’. இக்கதையில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் உண்மையானவை. எங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பாலகுமாரனிடம் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தோம். அவர் அதை இந்தியாடுடேவுக்கு கதையாக்கி காசு பார்த்துவிட்டார் என்று பின்நாளில் ஒருமுறை நக்கீரன் கோபால் அலுத்துக் கொண்டார்.
கிரிதரன் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளன். காலபைரவன் பத்திரிகையில் பணிபுரிகிறான். நிறைய பாலகுமாரன் கதைகளில் வருவது போன்ற மனைவியுடனான அதிகாலைக்காதல், காதலால் முகிழ்ந்த கலவியில் அவனுக்கு நாள் தொடங்குகிறது. கொஞ்சம் சுமாரான காப்பியால் மனைவி வளர்மதியோடு சண்டை. வாய்வார்த்தை தடிக்கிறது. குழந்தையோடு அம்மா வீட்டுக்கு போய்விடுகிறாள்.
சிகப்பு அணியும், வெள்ளை அணியும் கட்சி ஆபிசுக்கு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற ரகசிய தகவல். போட்டோகிராபர் செல்லமுத்து, ஆசிரியர் கார்வண்ணனோடு கட்சி ஆபிஸ் வாசலுக்குப் போகிறான். எக்ஸ்க்ளூசிவ் போட்டோக்களோடு ரிப்போர்ட் அடிக்க வேண்டும். மீனுக்காக காத்து நிற்கும் கொக்குமாதிரி காத்திருக்கிறார்கள்.
எதிர்ப்பார்த்த சண்டையும் நடந்தது. ஒருவர் மண்டையை ஒருவர் உடைத்துக் கொள்கிறார்கள். செல்லமுத்து போட்டோவாக எடுத்துத் தள்ளுகிறான். என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கவனமாக குறிப்பெடுத்துக் கொள்கிறான் கிரிதரன். அய்யகோ. செல்லமுத்துவின் கேமிராவை ஒரு போலிஸ்காரன் பிடுங்கிக்கொள்ள...
அதைத்தொடர்ந்து நடக்கும் பரபரப்பு சம்பவங்கள். போட்டோவோடு காலபைரவனில் ரிப்போர்ட் வந்ததா? கோபித்துக்கொண்டு போன பொண்டாட்டியை கிரிதரன் சமாதானப்படுத்தினானா? என்பதெல்லாம் இறுதி அத்தியாயம். நொடிக்கு நொடி, சொல்லுக்கு சொல் பரபரப்பை ஏற்படுத்திய நாவல் இது. பாலகுமாரனின் ட்ரேட்மார்க் அட்வைஸ்கள் ரொம்ப ரொம்ப குறைவாக அமைந்தது இந்நாவலுக்கான வேகத்தை கூட்டியது எனலாம்.
தண்ணீர்த்துறை
1987ஆம் ஆண்டு நடந்த போராட்டம் அது. நிறைய பேருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. மரம் வெட்டி சாலையில் போட்ட போராட்டம் என்று சொன்னால்தான் தெரியும். இடஒதுக்கீடு கேட்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் அது. அதன் பின்னணியில் பாலகுமாரன் எழுதிய குறுநாவல் தண்ணீர்த்துறை. மிக நியாயமான அந்தப் போராட்டத்தின் மீது லேசான எள்ளலும், கடுமையான கோபமும் பாலகுமாரனுக்கு இருந்திருப்பதை இப்போது நாவலை வாசித்தால் புரிந்துகொள்ள முடிகிறது. என்ன இருந்தாலும் அது அதுதானே? பாலகுமாரனின் உள்நோக்கத்தை விட்டுவிடுவோம். கோழி குருடாக இருந்தாலென்ன? நொண்டியாக இருந்தாலென்ன? பிரியாணி ருசியாகத்தானிருக்கிறது.
திருப்போரூரிலிருந்து மயிலாப்பூர் தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்கு ஒரு கிழவனும், அவனது மருமகளும் கீரைக்கட்டு விற்க அதிகாலையில் கிளம்புகிறார்கள். கிழவனது மகன் சாலைமறியல், பஸ்களை தீவைத்துக் கொளுத்தியது, சட்டத்துக்கு புறம்பாக வன்முறையைத் தூண்டிவிட்டது போன்ற பல பிரிவுகளில் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருப்பவன்.
கிழவனுக்கும், மகனுக்கும் நடக்கும் ஒரு சாம்பாஷணை!
“இனிமே பார்ப்பானுங்க காலம் போயிடிச்சி. இது நம்ம காலம். நம்ம ஆட்சி. நம்ம ஜாதி கோட்டைக்குப் போற வரைக்கும் நாங்க ஓயமாட்டோம். இப்பவே மூணு மந்திரிங்க. இது போதாது. முதல்வர்லேருந்து கடைசி மந்திரி வரைக்கும் நம்ம ஜாதி ஆளுதான் ஆட்சி பண்ணனும். நம்ம கொடி பறக்கணும். என்ன சொல்றப்பா நீ?”
“என்னாத்த சொல்ல. ஒரு தாய்ப் புள்ளைங்களா இருந்தது...”
“எப்ப இருந்தது? ஒரு தாய்ப்புள்ளைங்களா? இன்னிக்குக் கூட உன்னை வூட்டு உள்ள உடமாட்டான்!”
“அப்படி இல்லை”
“ஆமா அப்படித்தான்”
“கீரை சாப்புடறதே இப்போ ஐய்யருங்கதான். பசேல்னு கீரையப் பார்த்துட்டு ஒரு ஐயரும் தாண்டிப் போறதில்லை”
”இப்ப எதுக்கு சொல்ற அதை?”
“கீரை மதம் குறைக்கும். திமிர் அடக்கும். அவங்க அன்னிக்கும் சண்டைக்கு வந்ததில்லை. இன்னிக்கும் வரமாட்டாங்க”
மருமகள் சொன்னாள்.
”இப்போ ஜாதியா சோறு போடுது. சாப்பிட வாங்க”
“ஜாதி சோறு போடும்டி. ஒத்துமையா இருந்தா. நமக்குள்ளே நாப்பது பிரிவு. இப்பிடிப் பிரிச்சுப் போட்டது பாப்பானுங்க”
“சரி. அதான் இப்ப ஒன்னாயிட்டீங்களே? வாங்க”
- ஷங்கருக்கு வசனம் எழுத பாலகுமாரன் கிடைத்தது எவ்வளவு பெரிய வரம்?
கதை கிழவன், மகன், மருமகளை தாண்டி மார்க்கெட்டுக்கு ஓடுகிறது. வாட்ச்மேன் சண்முகம், புருஷன் ஓடிவிட்ட மதமதப்பான சிறுவியாபாரி வேணி, காய்கறி வேன் ஓட்டும் முகமது பாஷா, வேணியை ஒருமாதிரியாக பார்க்கும் பாஷாவின் இளவட்ட தம்பி அன்வர், சக மார்க்கெட்டுக் காரர்கள் என்று கதையின் களமும், மாந்தர்களும் வேறு தளம். ஐம்பத்துநாலு ரூபாய் எழுபது பைசாவுக்காக வேணி அன்வர்பாஷாவோடு பிள்ளையார் கோயில் பக்கமாக ஒருமுறை ஒதுங்குகிறாள்.
சட்டென்று, அந்த சாதி சங்கத்தைப் பற்றி பாலகுமாரன் இவ்வாறாக அறிமுகப்படுத்துகிறார். சென்னையில் அந்த சாதிசங்கம் வலுவானதாக இருந்தது. ஆனால் வேகமானதாக இல்லை. காசு புழக்கம் அதிகமில்லை. காசு புழங்குமளவுக்கு வளரவும் இல்லை. செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்தவர்கள் செயல்வீரர்களாக இருந்தார்கள். சென்னையில் இருப்பவர்கள் ஒன்று சேருகிறார்களே ஒழிய, செயல்திறன் இல்லை.
இந்த சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும், மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கும் போஸ்டர் ஒட்டுவதில் தகராறு ஏற்படுகிறது. மார்க்கெட்டில் சகலஜாதியினரும் கடைவைத்திருக்க ஒரு சாதிக்காரன் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என்று ஒட்டுமொத்தமாக பொங்கியெழுகிறார்கள். சாதிசங்கத்தினர் ஆட்களை திரட்டி வந்து மோதுகின்றனர். முடிவு?
- இந்த இரு குறுநாவல்களையும் ஒரே புத்தகமாக விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது. விசா பப்ளிகேஷன்ஸின் விசேஷம் என்னவென்றால் கார்ப்பரேட் பதிப்பகங்களிடம் அதிகவிலைக்கு சிறைப்பட்டிருக்கும் சுஜாதாவை ரொம்ப சீப்பாக விற்கிறார்கள். ஸ்ரீரங்கத்து தேவதைகளை கூட சல்லிசாக வாங்கலாம். ஏராளமான பாலகுமாரன் நாவல்களும் உண்டு.
நூலின் பெயர் : உயிர்ச்சுருள்
நூல் ஆசிரியர் : பாலகுமாரன்
விலை : ரூ.50/-
பக்கங்கள் : 160
வெளியீடு : விசா பப்ளிகேஷன்ஸ்,
புதிய எண்.16, பழைய எண்.55,
வெங்கட்நாராயணா ரோடு,
தியாகராய நகர், சென்னை-600017.
தொலைபேசி : 24342899, 24327696
நான் வாழ்வில் படித்த முதல் நாவல் தண்ணீர்துறை ! இன்னும் அதை வைத்திருக்கிறேன்
பதிலளிநீக்குஒரு கட்டத்திற்குப் பிறகு பாலகுமரன் நாவல்களை படிக்க ஏனோ விருப்பம் இருந்ததில்லை. உங்கள் விமர்சனம் இந்த நாவல்களை வாங்கி படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
பதிலளிநீக்குநாவல்கள் மறுபதிப்பாக இருப்பதைப்போல உங்கள் இந்தப் பதிவுகளும் மீள் பதிவுகளே! அதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குசரவணன்
எ நாவல் டைம்ல வந்ததுல சில நாவல்கள் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது அப்போ. இப்போ template எழுத்தாளராய்ட்டாரு.
பதிலளிநீக்குஹன்ஸிகா
ரொம்ப சுருக்கமாக முடிச்சிட்டீங்க. (என்ன திடீர்னு பாலகுமாரன் பத்தியெல்லாம்?) அவரின் எழுத்து என் என்னுடைய வாழ்நாளின் பத்து வருடத்தை ஆக்ரமித்து கொண்டது. என் மனதுக்கு நெருக்கமான தோழன் போன்றவர்.
பதிலளிநீக்கு