21 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 6

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |    அழிக்கப் பிறந்தவன்-5

ருடான்உருவாவது அத்தனை சுலபமான விஷயமில்லை. கீழக்கரை அப்துல் காதர் என்கிற வாப்பா ஒரே இரவில்டான்ஆகிவிடவில்லை. வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ஒரு ஏஜெண்டு பதினேழு வயது அப்துல் காதரை ஏமாற்றி விட்டு பணத்தோடு ஓடினான். இவ்வளவு பெரிய மாநகரில் எங்கே போய் தான்அவனைத் தேடுவது?

தெருத் தெருவாக அலைந்து திரிந்து நடந்து கொண்டிருந்தார். கையில் அஞ்சு காசில்லை. டீக்கடைகளில் தண்ணீர் குடித்து, வயிற்றுப் பசியாற்றிக் கொண்டிருந்தார்அந்தக் காலத்தில் வீட்டுக்கு தகவல் தெரிவிக்க போன் வசதியுமில்லை. சென்னையில் தெருத் தெருவாக அலைவதாக ஒரு போஸ்ட் கார்டில் கடுதாசி போட்டிருந்தார். அந்த கடிதம் கிடைத்து, ஊரிலிருந்து ஆட்கள் சென்னைக்கு வந்தாலும் இவரை எங்கே தான் பிடிக்க முடியும்?
என் விதியை நானே தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வீட்டின் முதல் பையன் துபாய் போய் சம்பாதித்து, தம்பி தங்கைகளை கரை சேர்ப்பான் என்று குடும்பம் நம்பிக் கொண்டிருக்கிறது. இங்கே அனாதையாய், பிச்சைக்காரன் மாதிரி திரிந்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முதலில் தேவை, உடனடியாக ஒரு வேலை. பிறகு, பணம். பணம். பணம். பணத்தைத் தவிர வேறொன்றும் இலட்சியமில்லை. பணம் இருந்தால் பத்தும் செய்யலாம். இந்த நகரத்தில் எல்லாரும் பணத்தைத் தேடித்தானே அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்? பணம்தான் உலகம். பணம்தான் மகிழ்ச்சி. பணம்தான் வாழ்க்கைபணம் குறித்த வைராக்கியம் காதருக்கு அப்போது தான்வந்தது.
கடை கடையாக ஏறி இறங்கி வேலைக்கு முயற்சித்தான். இவனது அழுக்கான உடையை கண்டு, பிச்சைக்காரன் என்று நினைத்து கழுத்தைப் பிடித்து சிலர் தள்ளினார்கள். அதுவொரு தீபாவளி சீஸன். மும்முரமாக வியாபாரம் ஆகிக்கொண்டிருந்த கடைகளில் போய்வேலை ஏதாவது இருந்தா கொடுங்கஎன்று  தலையைச் சொறிந்துக்கொண்டு ஒருவன் நின்றுக் கொண்டிருந்தால் கடை முதலாளிகளுக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. துரத்தி அடித்தார்கள். ஒரு சிலர் மட்டும் ‘தீபாவளி முடிஞ்சி வந்துப்பாரு’ என்று ஆறுதல் அளித்தார்கள்.
சோர்வாக அந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்தான். அன்றுதான்தீபாவளி. ஊரே வெடி வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. தன்னைத் தவிர இந்த மாநகரில் எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதாக அவனுக்குப் பட்டது.
அவன் நடந்துகொண்டிருந்தது சவுகார்பேட்டையின் ஒரு தெரு. ராஜஸ்தான், குஜராத்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அடகுக்கடைதான். சிலர் எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்தார்கள். எல்லா வீடுகளுமே இரண்டு, மூன்று மாடிகள் கொண்டது. கீழே கடை அல்லது அலுவலகம். மேலே வீடு.
ஒவ்வொரு வீட்டுப் பால்கனியிலும், கொழுத்த உடலமைப்பு கொண்ட நடுத்தர வயது பெண்ணோ அல்லது ஆணோ கட்டாயம் இருந்தார்கள். சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஏதோ ஒரு ஸ்வீட்டை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்கள். தர்ப்பூசணி சைஸில் முகம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம். தமிழன் எல்லாம் வற்றிப்போய் கொத்தவரங்காய் மாதிரி கிடக்கிறான்.
பொழுது சாயும் நேரம். எல்லா வாசலிலும் சொல்லி வைத்தாற்போல அடுக்கடுக்காகதீபம் ஏற்றப்பட்டிருந்தது. முக்காடு போட்ட பெண்கள் சிலர் கையில் பூக்கூடையுடன் ஏதோ கோயிலுக்கு போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். சிவந்த அல்லது வெளுத்த புஷ்டியான பளபளவென்று இடுப்பும், ஆழமான தொப்புளும் அப்பட்டமாக தெரிய சேலை கட்டும் இவர்கள் வினோதமானவர்களாக காதருக்கு தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஊரில் முகத்தைத் தவிர வேறெதையும் வெளியாட்களுக்கு காட்டாத உடையணியும் பெண்களை மட்டுமே அதுவரை ஊரில் கண்டிருந்தவன் அவன்.
மெட்ராஸ் ஒரு மாதிரியாக தானிருக்கிறது. இங்கு வந்த முதல்நாளே முழங்கால் தெரிய கவுன் அணிந்த வெள்ளை வெளேர் பெண்கள் நிறையபேரை பார்த்து வெட்கப்பட்டான். காற்றடிக்கும்போது கவுன் தூக்கி அவர்களது வாளிப்பான தொடையும் கூட சில நேரங்களில் (நமக்கு அதிர்ஷ்டமிருந்தால்) தெரியும். அதைப்பற்றி இந்தப் பெண்கள் பெரியதாக சட்டை செய்வதாக தெரியவில்லை. அவர்களை வெள்ளைக்காரப் பெண்கள் என்று ஆரம்பத்தில் நினைத்தான். இல்லையாம். ஆங்கில இந்திய கலப்பின பெண்களாம். கூட்டம் கூட்டமாக நிறையப் பேர் சென்னையில் இருந்தார்கள்.
சிகப்புச் சேலையணிந்த அந்தப் பெண்ணை தூரத்திலேயே கவனித்தான் காதர். தலையில் முக்காடிட்டு அடக்க ஒடுக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்புறமாக அந்த எருது வேகமாக ஓடிவருவதை யாருமே கவனிக்கவில்லை. காதர் மட்டும் தான் கவனித்தான். சிகப்புச்சேலை அணிந்திருக்கிறாள். அதைக்கண்டு எருது மிரட்சியடைந்திருக்கலாம். இன்னும் சில வினாடிகளில் தனது கொம்பினை அவளது உடலுக்குள் சேர்த்து, தூக்கி கிழித்தெறியப்போகிறது. எருதுக்கு வெகுபின்னால், அதன் உரிமையாளன் தலைதெறிக்க ஓடி வந்துக் கொண்டிருந்தான்.
காதருக்குள் இருந்த வீர தீரமான அசல் ஹீரோ விழித்துக் கொண்டான். அழகான ஒரு பெண்ணுக்கு முன்பாக சாகசம் செய்யும் வாய்ப்பு. ஊரில் ஆடு, மாடு, எருது எல்லோவற்றுடனும் புழங்கியவன் தான். தபதபவென்று சிகப்புச்சேலைக்கு முன்பாக ஓடினான். அவளுக்கு தனக்குப் பின்னால் எருது முட்ட வருவது தெரியாது. முன்னால் காதர் ஓடிவருவதுதான் தெரிந்தது. காதரைக் கண்டு மிரட்சியடைந்தாள். ஓடிவந்த காதர், இவளையும் தாண்டிச் சென்று எருதுக்கு முன்பாக நின்றான்.
தனக்கும், தனது டார்கெட்டுக்கும் இடையே புதுசாக ஒருஆப்ஜெக்ட். எருது ஒரு நிமிடம் குழம்பி நின்றது. இவனை முட்டலாமா வேண்டாமா. அவளைதானே முட்டப் போய்க் கொண்டிருந்தோம். இந்த முட்டாள் ஏன் இடையில் புகுந்து நிற்கிறான். காதரை அச்சுறுத்தும் விதமாக முன்னங்கால்களை தரையில் தேய்த்துக் காட்டியது எருது. புழுதி பறந்தது. நம் ஹீரோ காதர் அசரவே இல்லை.
எருதுவுக்கு ஏற்பட்ட இந்த சில நொடி குழப்பம், எருதுவின் எஜமானனுக்கு போதுமானதாக இருந்தது. பின்னாடியே துரத்தி வந்தவன், பாய்ந்து வந்து மூக்கணாங்கயிறைப் பிடித்துகண்ட்ரோல்செய்தான். அதற்குள்ளாக கூட்டம் கூடிவிட்டது.
மாட்டை கட்டிப்போட்டு வளர்க்கக் கூடாதா? உசுரு போயிருந்தா யாரு பொறுப்பு?”
இல்லே சாமி. கட்டிதான் பொட்டு வெச்சுருந்தேன். நம்ம மாடு சாதுவானது தான். இன்னிக்கு தீவாளி பட்டாசு சத்தத்துலே கொஞ்சம் மிரண்டுப் போயி கட்டை அவுத்துட்டு வந்துடிச்சி. அம்மா வேற செவப்பு சேலை கட்டி இருந்தாங்களா? துரத்திட்டு வர ஆரம்பிச்சிடிச்சி!”
அந்த சிவப்புப் புடவைப் பெண் பயந்துப் போயிருந்தாள். இருபத்தாறிலிருந்து முப்பது வயதுக்குள் அவளுக்கு இருக்கலாம். படபடவென்ற பயத்தில் பெரிய மார்புகள் ஏறி இறங்கிக் கொண்டு இருந்தது. முன்வழுக்கையோடு சிகப்பாக இருந்த ஒரு நடுத்தர வயது மனிதரிடம், காதரைக் காட்டி அவள் தூரத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மனிதர் இவனை நோக்கி நடந்து வந்தார்.
ரொம்ப தேங்க்ஸுப்பா. நம்ப சம்சாரத்தை நீதான் காப்பாத்துனேன்னு சொன்னாங்க
இருக்கட்டும் சார். ஆபத்துலே யாரிருந்தாலும் உசுரை காப்பாத்துறதுதான் மனுசனோட கடமை. இதுக்கு எதுக்கு தேங்க்ஸெல்லாம்?”
அழுக்கான காதரின் தோற்றத்தைக் கண்டவருக்கு ஏதோ நிரடியிருக்க வேண்டும். “மெட்ராஸா உன் வூரு. ட்ரிப்ளிகேணி ஏரியாவா?”
காதருக்கு தன்னுடைய கதையை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் போலிருந்தது. கீழக்கரையிலிருந்து பஸ் ஏறியது. ராயப்பேட்டையில் ஏஜெண்ட் ஏமாற்றியது. எழும்பூர் ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் பெட்டி, படுக்கையை கவனமில்லாமல் இழந்தது. பசியோடு வேலைக்காக தெருத்தெருவாக அலைந்து கொண்டிருப்பது.
மெட்ராஸ் வந்து சேர்ற எல்லாரு கதையும் இதுதாம்பா. எம்பேரு ரத்தன் லால். பாரிஸ் கார்னர்லே அடகுக்கடை பிசினஸ் பண்ணுறேன். எங்கிட்டே வேலைக்கு வர்றியா?” இதற்காகத்தானே காத்துக் கொண்டிருந்தான் காதர். தங்க இடமும், சாப்பிட சாப்பாடும், செலவுக்குப் பணமும் தாராளமாககிடைத்தது.
ரத்தன் லாலின் வியாபாரம் மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ அடகுக் கடை வட்டி வியாபாரம் மாதிரி தெரியும். ஆனால் அந்த வியாபாரத்தைத் தவிர மத்த எல்லா வியாபாரமும் செய்துக் கொண்டிருந்தார். குறிப்பாக தங்கம். கணக்கில் இல்லாத பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் பலரும், தங்களது பணத்தை இவரிடம் கொடுத்து பதிலுக்கு தங்கமாக வாங்கிச் செல்வார்கள். அதாவது பிஸ்கட் வடிவில். விற்ற தங்கத்துக்கும், பெற்ற பணத்துக்கும் எல்லாம் முறையான கணக்கு வழக்கு எதுவுமில்லை. அரசாங்கத்தின் கண்களில் கண்ணைத்தூவி நடக்கும் பிசினஸ்களில் ஒன்றுஇது.
காதருக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. கஷ்டப்பட்டு தொழில் செய்பவர்கள் எதற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும்? அரசாங்கம் என்ன மும்பைக்கு போய் தங்கத்தை வாரி வந்து சேட்டிடம் கொடுக்கிறதா அல்லது கருப்புப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் - அதாவது சேட்டுடைய வாடிக்கையாளர்கள் யார்  யாரென்று சேட்டுக்கு அடையாளம் காட்டிக் கொடுக்கிறதா? ஒன்றுமேயில்லை. எல்லா வேலையையும் சேடு தான் ஆட்களை வைத்து செய்ய வேண்டியிருக்கிறது. போலிஸ்காரர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த வேலையில் எங்குமே தொடர்பில்லாத அரசாங்கம் அவ்வப்போது ஆட்களை அனுப்பி பணப்பரிமாற்றத்துக்கு கணக்கு கேட்குமாம். டாக்குமெண்ட் கேட்குமாம். எங்கேயாவது நடக்குமா இந்த அநியாயம்? ஏனோ அப்போதிருந்தே அரசாங்கம் என்கிற நிறுவனத்தை காதருக்கு பிடிக்காமல் போய்விட்டது. நல்லத் தொழிலோ, கள்ளத் தொழிலோ. கஷ்டப்பட்டு செய்பவன் ஏன் அரசாங்கத்துக்கு படியளக்க வேண்டும்? அரசாங்கம்தானே மக்களுக்கு படியளக்கணும்?
சின்னப் பையனாக இருந்தாலும் காதருக்கு தொழிலின் நேக்கு நன்றாக செட் ஆகிவிட்டது. எந்தச் சரக்காக இருந்தாலும் சரி. அசால்ட்டாக எடுத்து வருவான், எடுத்துப் போவான். காதரின் கண்களில் பயமோ, கள்ளமோ எந்த சூழலிலும் தெரியாது. இது ஒரு பலம். நிழல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு கண்கள் முக்கியம். கண்கள் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் இருப்பது ரொம்ப முக்கியம்.
ஒன்றரை வருடம் காதர் இங்கே வேலை பார்த்தான். ஒரு நாள் ரத்தன்லாலிடம் வந்து சொன்னான். “பீச்சுக்கு பக்கத்துலே வரிசையா கடை போடுறாங்க சேட்டு. நானும் சொந்தமா கடை போடலாம்னு இருக்கேன். ஊர்லே இருந்து கொஞ்சம் காசு கொடுத்து விட்டிருக்காங்க. ஒண்ணரை வருஷம் வேலை பார்த்ததுக்கு நீயும் ஏதாவது பார்த்து ஹெல்ப் பண்ணு!”
என்ன கடை, ஏது கடையென்று விசாரித்தார் லால். புதியதாக அமையப்போகும் பஜாரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது அவருடைய பழைய தொழில் அனுபவத்தில் அனுமானிக்க முடிந்தது. ஏற்கனவே அங்கிருந்த கடைகளில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் நன்கு விற்றுக் கொண்டிருந்தது. வெளியூர்களில் இருந்து வந்தெல்லாம் வாங்கிச் செல்கிறார்கள். தமிழர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது மோகம் அதிகரித்து வருகிறது. மெட்ராஸ்காரர்கள் கூட ரேடியோ பொட்டிகள் நிறைய வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். சின்ன ரிஸ்க். பெரிய லாபம். கோல்ட் பிசினஸ் மாதிரி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டாது என்றாலும், கொஞ்சம் டீசண்டான பிசினஸ். கவுரவமாக நடத்தலாம்.
நீயேண்டா கடை போடுறே? நானே அங்கே நாலு கடை போட்டுத் தாரேன். பார்த்துக்கோ. சம்பளம் வேணும்னா கூட கூட்டித்தாரேன்
இல்லை சேடு. சொந்தமா தொழில் பண்ணலாமுன்னு...”
சேடு இதை விரும்பவில்லை. தனக்குக் கீழே வேலைபார்ப்பவன், தனக்கு சமமாக கடை போட்டு வியாபாரம் செய்வதை அவர் ரசிக்கவில்லை. தொழிலாளி முதலாளி ஆவதா? எந்த ஊரு நியாயம் இது?
காதரு. நான் செய்யுற தொழில் என்னா மாதிரி தொழில்னு உனக்கே தெரியும். இதுலே நான் மட்டுமில்லே. என்னைப் பின்னாடி இருந்து இயக்குற ஆளுங்களும் இருக்காங்க. எங்கிட்டே வேலை பார்க்குறது நீ மட்டுமில்லே. உன்னை மாதிரி நிறைய பேரு. எங்கிட்டே வேலை பார்த்துட்டுப் போன பசங்க தனியா போனா சிக்கலு. நிறைய ரகசியம் கசியும். புரிஞ்சுக்கோ. இதையெல்லாம் என்னோட பார்ட்னருங்க விரும்பமாட்டாங்க. நான் நல்லவன். ஆனா அவங்களும் அப்படின்னு சொல்லமாட்டேன். தனியா போனவனுங்க எவனும் உசுரோட இல்லை காதரு. புரிஞ்சுக்கோ!” குரலில் தித்திப்புத் தடவி நேரடியாக மிரட்டினார் ரத்தன் லால். என்னிடம் வேலை பார். அல்லது இறந்து போ என்பதுதான் அவரது பேச்சின் சாரம்.
அன்றிரவு, ஒரே நேரத்தில் ரத்தன்லாலின் வீட்டிலும், அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கில் பணமும், நகையும், இன்னபிற சமாச்சாரங்களும் அடையாளம் தெரியாதவர்களால்கொள்ளை அடிக்கப்பட்டது. ரத்தன்லால் மார்பில் கத்தி செருகிய நிலையில் அவருடைய படுக்கை அறையில்பிணமாய் கிடந்தார். அன்று எருதுவின் கொம்புக்கு தப்பிய சேட்டின் மனைவி, இன்று ஒரு பிச்சுவா கத்தி வயிற்றில் சொருகப்பட்டு குடலை வெளியே சரித்தபடி பூஜையறையில் உயிர் இழந்திருந்தாள்.
ஆறு மாதம் கழிந்து அப்துல் காதர் பர்மா பஜாரில் கடைபோட்டான். பெரிய முதலீடு போட்டு சரக்குகளை கைமாற்றித் தந்தான். ஓயாமல் உழைத்தான். ஆயிரங்களாக, லட்சங்களாக லாபத்தைக் குவித்தான். பஜாரின் தவிர்க்க இயலாத முக்கியத் தலையாக உருவெடுத்தான்.

(தொடரும் - 6)

10 கருத்துகள்:

  1. ஆறாம் பகுதியில் மசாலா கொஞ்சம் தூக்குதலா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறந்த நாவலாக உருமாறும் அத்தனை சாத்தியங்களும் தெரிகின்றன... ரசிக்கும்படியான நடை...

    பதிலளிநீக்கு
  3. பீர் விட்டுக்கொண்டே படித்தேன். முடிச்சதும் கருத்து சொல்றேன் சார்!
    என் வலை; Chilledbeers

    கதறிய தோழி!

    பதிலளிநீக்கு
  4. சிகப்புச்சேலை அணிந்திருக்கிறாள். அதைக்கண்டு எருது மிரட்சியடைந்திருக்கலாம்.....anne athungaluku color etuvum theriathu....oru information....

    பதிலளிநீக்கு
  5. Sooooooooooooooper Yuva Sir !!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. //காற்றடிக்கும்போது கவுன் தூக்கி அவர்களது வாளிப்பான தொடையும் கூட சில நேரங்களில் (நமக்கு அதிர்ஷ்டமிருந்தால்) தெரியும்//
    இந்த வரி ஏதேதோ அர்த்தம் சொல்லுதே....

    //தனக்கும், தனது டார்கெட்டுக்கும் இடையே புதுசாக ஒரு ‘ஆப்ஜெக்ட்’. எருது ஒரு நிமிடம் குழம்பி நின்றது.//
    படிச்ச எருமையோ?!


    வாழ்த்துக்கள் யுவா! தொடர்ந்து எழுதுங்கள்.

    http://kurukkaalapovaan.blogspot.com/2011/06/blog-post_9573.html

    பதிலளிநீக்கு
  7. ஆளப்பிறந்தவர் - ஆத்திரப்பட மாட்டார்!
    அழிக்கப் பிறக்க மாட்டார்!

    பதிலளிநீக்கு
  8. என்ன ஆச்சு... 7 எப்போ...?

    பதிலளிநீக்கு