30 டிசம்பர், 2011

காசி


இரண்டு நாட்களாக காசியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.

ஏனெனில் போனவருஷம் இதே மாதத்தில் தான் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.

அவனுக்கு இலக்கியம் தெரியும். கதை கவிதை எழுதுவான். காதலிக்க தெரியும். வியாபாரம் தெரியும். எல்லாமே தெரியும். Jack of all. Master of none.

சிகரெட்டும், மாஸ்டர்பேஷனும் அவனால் விடமுடியாத சங்கதிகள். நிக்கோடினைப் பொறுத்தவரைக்கும் பால்வராத காம்பை உறிஞ்சுவதை மாதிரி இருக்கிறது என்கிறான். மாஸ்டர்பேஷன் கொஞ்சம் மோசம். தலையணையை அணைச்சுக்கிட்டு.. தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகள நினைவில் அடைச்சிக்கிட்டு...

திடீரென்று தத்துவம் மாதிரி ஏதோ பேசுகிறான். “தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்.. எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்குற மாதிரி.. சில சமயம் எனக்குள்ளே இருக்குற ‘நான்’தான் நிஜம் - இந்த வெளியிலே ‘நான்’ சூட்சுமம்னு பயமா தோணுதுடா...” அவன் தமிழில்தான் பேசுகிறான். இருந்தாலும் உணர்ச்சிவயப்பட்டு வாயை கோணலாக்கி அவன் ஆவேசமாக பேசும் மொழி புரிந்தும் புரியாததுமாக படுத்துகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மிக அதிக மார்க்குகள் வாங்கினானாம். 76ல் காலேஜ் விட்டு வந்தபோது இரண்டு பேப்பர்கள் ஃபெயிலாம். என்.டீ.சி. மில்லில் வேலை பார்த்தான். ஆறு மாசம். மனக்குமட்டல், மனநலத்திற்கு சிகிச்சை..

“எனக்கு எந்த ஜாப்புமே ஒத்து வரலைடா.. எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலை. தினம் தினம் ஒரே நேரத்தில் அதைச் செய்யறது, செயற்கையா ‘டாண்’னு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, ‘கன்’ டயத்துக்கு குளியல்.. தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.. இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே.. அதிகாரி உருட்டல்.. ஓவர் டைம்.. அப்பா!”

ஒரு கட்டத்தில் மனநோயாளி போல நடித்துக் கொண்டிருந்த காசிக்கு நிஜமாகவே மனநோய் தாக்கியிருக்கக் கூடும். “ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான் பைத்தியமில்லை. அவ்வளவுதான்!” என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித் திரிந்தான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும் அடிப்பதாக மனப்பிரமையில் பரிதவித்துப் போனான்.

பெரியப்பாவின் பேத்தியை கல்யாணத்துக்கு கேட்டான். “பைத்தியக்காரப் பயல் பெண் கேட்க என்ன தைரியம்?” என்று துரத்தி விட்டார்கள். தேங்காய் பருப்பியை கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில் டிக்-20ஐ காலி செய்தான். நாய்பீயை வாயில் கரைத்து ஊற்றி காப்பாற்றினார்கள். மீண்டும் மனநல மருத்துவம். மாத்திரைகள்.

அவனை ஒரு சாமியாரிடம் அழைத்துப் போனான் அவனுடைய நண்பன் குணா. “நாலு பேரு மாதிரி லைஃபிலே செட்டில் ஆவணும்கிறே ஆசையே அத்துப்போச்சி சாமி இவனுக்கு?”

“கடவுள் நம்பிக்கை உண்டா?” சாமி கேட்டாராம்.

“இல்லே சாமி. ஆனா ‘கடவுள்’னு ஒருத்தர் இருந்துட்டா கூட பரவாயில்லைன்னு படுது” காசி சொன்னானாம்.

தொடர்ச்சியாக காசியை சில நாட்கள் சாமியார் கண்காணித்திருக்கிறார். கடைசியில் தீர்வும் சொல்லியிருக்கிறார். “காசி உனக்கு செக்ஸ்தான் பிரச்சினை… யூ ஹாவ் டூ செக்ஸ் வித் ஹெர்” - சிஷ்யையை கை காட்டியிருக்கிறார். ரம்பை என்ற பெயருடைய அந்த சிஷ்யை, நம்ம காசிக்கு தங்கை மாதிரி தெரிந்திருக்கிறாள். தங்கையோடு புணர்ச்சியா? நோ வே.

எப்படியோ அவனுக்கு கல்யாணம் ஆனது. ஏற்கனவே திருமணம் ஆகி ‘டைவோர்ஸ்’ ஆன பெண். முதல் கணவனை ‘இம்பொட்டண்ட்’ என்று கூறி தாலியை வீசி எறிந்துவிட்டு வந்த பெண். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கச் சொல்லி மாமனார் வற்புறுத்தியிருக்கிறார். கதை, கவிதையெல்லாம் கட்டி எடைக்கு போடுங்க என்பது மாமனாரின் அன்பான அதிகார அட்வைஸ். ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்க்ரீம் பார், சினிமா, ரிலீஸ் ஆகாத தமிழ்ப்பட பாட்டு.. காசியின் மனைவியுடைய அன்றாட உலகம் இது.

தெனாலி கமல் மாதிரி மீண்டும் புலம்பினான் காசி. “ஒத்தயா பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னாலே முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சிடா. அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணிக்குவேன்”
இந்த காலக்கட்டத்தில் காசியிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. “காசுதான் சுதந்திரம், காசுதான் சுதந்திரம்” என்று ஒரு இன்லேண்டு லெட்டர் முழுக்க ஸ்ரீராமஜெயம் மாதிரி எழுதியிருந்தான்.

இப்படிப்பட்ட காசியோடுதான் இரண்டு நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.
காசியை ஒரு தறுதலை என்று ஒரு வார்த்தையில் நீங்கள் புறக்கணித்துவிட்டு போய்விட முடியும். ம்ஹூம். என்னால் முடியவில்லை. அவன் வாழ்க்கையை இயல்பாகவே அவன் வாழ்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு பெரிய மூட்டை.

சுலபமாக சுமப்பதாக நாமெல்லாம் பாவனை செய்துகொண்டு, வெளியில் சிரித்து, உள்ளுக்குள் அழுது, வாழ்நாள் முழுக்க துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காசி இப்படியில்லை அல்லவா?
அதுசரி. காசி இப்போது என்ன ஆனான் என்று கேட்கிறீர்களா? அவனும் பாவனை செய்ய கற்றுக் கொண்டான். எப்படி? எதனால்? என்று ‘எ, ஏ’வில் தொடங்கும் நூறு கேள்விகள் உங்கள் மனதுக்குள் எழும்பலாம்.

நான் ஒரு ‘ஆஃபர்’ கொடுக்கிறேன். நீங்களும் என்னைப்போல சில நாட்கள் காசியோடு வாழலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது...

நூல் : மீனுக்குள் கடல் (சிறுகதைகள், கவிதைகள்)
ஆசிரியர் : பாதசாரி
பதிப்பகம் : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
விலை : ரூ.15

இந்த நூலை கட்டாயம் வாங்கிப் படியுங்கள். நான் வாசித்த சிறுகதைகளில் (குறுநாவல் என்றும் சொல்லலாம். எட்டு பாயிண்ட் சைஸில் பத்தொன்பது பக்கங்கள்) மிகச்சிறந்த சிறுகதையாக பாதசாரி எழுதிய ‘காசி’யை சொல்லலாம். நீங்களும் வாசித்துப் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கும் இதே உணர்வு தோன்றக்கூடும்.

இலக்கியம் என்பது படைப்பாக்கம் மற்றும் வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் வாசித்த சிறந்த இலக்கியத்தை மற்றவர்களுக்கு பகிர்வது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். காசியை எனக்கு பைத்தியக்காரன் பகிர்ந்தார். நான் மற்றவர்களுக்கும் பகிர்கிறேன்.

குறிப்பு : 80களில் எழுதத் தொடங்கிய பாதசாரி இதுவரை இரண்டே இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். எழுத்தின் தரம் என்பது குவாண்டிட்டியில் அல்ல. குவாலிட்டியில் என்று பிடரியில் அடித்தது போல புரியவைக்கிறார் பாதசாரி.

27 கருத்துகள்:

  1. என்னது விலை 15 ரூவாயா?

    பதிலளிநீக்கு
  2. ஆமாம். 48 பக்கங்கள். 1999ல் வெளிவந்த இரண்டாம் பதிப்பு.

    பதிலளிநீக்கு
  3. தன்னை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் காசி தன் நன்றியை தெரிவிக்க சொன்னான் லக்கி...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி அண்ணாச்சி.

    காசியோடு பலவருடமாக குடித்தனம் நடத்துவதால் உங்கள் மூலமாக காசி நன்றியை தெரிவிக்க சொல்லியிருக்கலாம் :-)

    பதிலளிநீக்கு
  5. நல்ல அறிமுகம். நன்றி
    :)
    மறுபடியும் தமிழ்மணத்திற்கு வந்தாச்சா?

    பதிலளிநீக்கு
  6. குவாலிட்டி மேட்டர்ஸ் ...

    நல்லாயிருக்குன்னு - சொல்லிட்ட போக மனம் ஒப்பலை

    புத்தகம் கிடைக்கட்டும் (மிச்ச சுவாசத்தை)சுவாசித்துட்டு சொல்றேன் மிச்சத்தை ...

    பதிலளிநீக்கு
  7. எறும்பு!

    உங்களைப் போன்ற நண்பர் யாராவது தமிழ்மணத்தில் இணைத்திருக்கக் கூடும். பொதுவாக அண்ணன் கோவியார் என் மீது கொண்ட பாசம் காரணமாக பதிவுகளை இணைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  8. பைத்தியக்காரன், லக்கி - இருவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா3:33 PM, ஜனவரி 12, 2010

    தோழர்,நண்பர் பாதசாரியின் இந்த புத்தகத்தை 2003ஆம் ஆண்டு படித்தபின் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..பல இலக்கியவாதிகளை சந்தித்திருந்தாலும் பாதசாரியும், கல்யாண்ஜியும் தான் இலக்கியவாதிகளுக்கான உண்மையான அர்த்தம் பொதிந்தவர்கள் என்று தோன்றுகிறது., பாதசாரி..அப்ப அப்பா அவன் காதலனடா...எவ்வித எதிர்பார்ப்புமற்ற அன்பை மட்டுமே பொழியும் மானுடன் பாதசாரி! மேலும் மக்களுக்கான அரசியல் அறிவை கொண்டவர் பாதசாரி..சும்மா இலக்கியம் என்கிற பெயரில் அளப்பரை செய்யும் நபரல்ல; அப்படி செய்வோரையும் குறை கூறுபவரும் அல்ல..நிறைய கற்றுக் கொண்டேன் பாதசாரியிடமிருந்து..
    -மயில்வண்ணன்

    பதிலளிநீக்கு
  10. வாசக உலகில் அதிகம் அறியப்படாதவர் பாதசாரி. இப்பதிவு, அவரைப்பற்றிய நேர்த்தியான அறிமுகத்துடன் அமையப்பெற்றது மட்டுமல்லாமல், வாசகர்களை பாதசாரியின் எழுத்துக்களை நோக்கிச்செலுத்தும் விதமாகவும் இருப்பது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  11. இது போன்ற கதைகள் மனச்சோர்வை ஏற்படுத்துவதை போல் உள்ளன...

    பதிலளிநீக்கு
  12. ராடான்! கலக்குறீங்க போங்க.

    ஆனா ஜக்குபாய் மேட்டர்லே தான் கோட்டை விட்டுட்டீங்க :-)

    பதிலளிநீக்கு
  13. The full story is available in a tamil blog which has stories by Mouni and others.

    பதிலளிநீக்கு
  14. இந்த கதை, எண்பதுகள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டே இதழ்களுடன் நின்றுபோன, "புதுயுகம் பிறக்கிறது" என்ற பத்திரிகையில் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த பத்திரிகை. விடுதலைப் புலிகளின் பண உதவியுடன் வெளியிடப்படுவதாக ஒரு வதந்தி இருந்தது. ஆனால் அதன் அறிகுறிகள் உள்ளடக்கத்தில் துளியும் தெரியவில்லை, ஆன்டன் பாலசிங்கம் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையைத் தவிர. அந்த பத்திரிகையில் எழுதிய பலர், பாதசாரி உள்பட, பிறகு அதிகமாக எழுதியதாகத் தெரியவில்லை. தமிழில் இப்படி ஒரு பத்திரிகையா வியந்துக்கொண்டிருக்கையிலேயே மின்னல் போல தோன்றி மறைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  15. //
    எழுத்தின் தரம் என்பது குவாண்டிட்டியில் அல்ல. குவாலிட்டியில் என்று பிடரியில் அடித்தது போல புரியவைக்கிறார் பாதசாரி.
    //

    உண்மை தான்...கதை அபாரமா இருக்கு...

    (நான் கூட, லக்கி ஸ்டைல மாத்தி எழுத ஆரம்பிச்சாட்டாரான்னு யோசிச்சிக்கிட்டே படிச்சேன்...கடைசில தான் தெரிஞ்சது..)

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா8:02 AM, ஜனவரி 13, 2010

    'இந்த கதை, எண்பதுகள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டே இதழ்களுடன் நின்றுபோன, "புதுயுகம் பிறக்கிறது" என்ற பத்திரிகையில் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த பத்திரிகை. விடுதலைப் புலிகளின் பண உதவியுடன் வெளியிடப்படுவதாக ஒரு வதந்தி இருந்தது. ஆனால் அதன் அறிகுறிகள் உள்ளடக்கத்தில் துளியும் தெரியவில்லை, ஆன்டன் பாலசிங்கம் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையைத் தவிர. அந்த பத்திரிகையில் எழுதிய பலர், பாதசாரி உள்பட, பிறகு அதிகமாக எழுதியதாகத் தெரியவில்லை. தமிழில் இப்படி ஒரு பத்திரிகையா வியந்துக்கொண்டிருக்கையிலேயே மின்னல் போல தோன்றி மறைந்துவிட்டது.'

    Yes sir.If you have copies please scan and put in the web.

    பதிலளிநீக்கு
  17. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி மயில் மற்றும் மு.சுந்தரமூர்த்தி.

    பாதசாரி எழுதிய கட்டுரை தொகுப்பு இரண்டும் கூட தமிழினியில் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா3:51 PM, ஜனவரி 13, 2010

    http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  19. பாதசாரியின் எழுத்துகளை இப்பவும் தமிழினி மாத இதழில் வாசித்து வருகிறேன்.

    அங்கதம் நிரம்பிய சமுதாய சிந்தனை நிரம்பிய எழுத்துகள்.

    சில சமயம் சுய புலம்பல்போல் தோன்றும்படியாக தோன்றினாலும். சுகமாக தான் இருக்கிறது.

    - தேவன்

    பதிலளிநீக்கு
  20. மிகச்சிறப்பான பகிர்வு லக்கி. சமயங்களில் காசி மாதிரி இருந்துவிடலாமா என்று தோன்றுகிறது. கதையை படிக்க ஆவலாகயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. One of best short story in tamil I ever read. Flow is so nice.

    பதிலளிநீக்கு
  22. நமக்குள்ள தூங்குற காசியை தட்டி எழுப்பிவிட்ருவீங்க போலருக்கே. ;-)

    பதிலளிநீக்கு
  23. விரைவில் படிக்கணும்...

    பதிலளிநீக்கு
  24. ..இரண்டே இதழ்கள்.புதுத் தடம் பதித்து விட்டது ‘புது யுகம்’. முதல் இதழில் காசி வெளியானது.24 பக்கங்கள்.வாழ்வின் அவலம், துயரம் அசலாகப் பதிவாகியிருந்தது காசியில்.
    சேஷையா ரவிதான் ஆசிரியர்.தமிழினி வசந்தகுமாரின் புகைப்படஙகள்,கம்ப்யூட்டர் எழுதிய கவிதை,ஜே.கே பற்றிய கட்டுரை(எழுதியது அடேல் பாலசிங்கம்),காசி என வசீகரமாய் இருந்தது.

    இரண்டாவது இதழில் இந்தித் திணிப்பு பற்றிய சிறப்புக் கட்டுரை முக்கியமானது.
    மூன்றாம் இதழ் வரவில்லை.

    பாதசாரி என்ற விஸ்வனாதன் கோவையில் வசிக்கிறார்.தொழில் உலகம் இத்ழில் பணி.
    என் நண்பரோடு பேசுங்கள்
    97862 71119

    பதிலளிநீக்கு
  25. http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_23.html

    இந்த இணைப்பில் காசியை இலவசமாக படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  26. நானும் காசியும் எதிரெதிர் திசையில் பயணிப்பவர்கள்.

    ஆனால் காசியை அறிமுகப்படுத்திய "புதுயுகம் பிறக்கிறது" என்னை கவர்ந்த இதழ். பாடப்புத்தகங்களுக்கு வெளியே உலகை தேடத் தொடங்கியபோது கிடைத்தது.

    மீனவர்கள் வாழ்நிலை குறித்த "வலைகளில் சிக்காத வாழ்க்கை" என்ற கட்டுரையும், இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தி மொழியை நன்கு அறிந்த ஒருவர் எழுதிய ஆழமான கட்டுரையும் என்னுள் எழுத்து ஆர்வத்தை தூண்டிய முக்கியமான கட்டுரைகள்.

    பதிலளிநீக்கு
  27. காசி திசை பயணியர் சங்கம்4:55 PM, ஜனவரி 01, 2012

    வழக்கறிஞர் சுந்தரராஜன்சார் அவர்களே நல்லவேளை சொன்னீங்க போங்க இல்லன்னா ஒரே திசையில் பயணிப்பவர் சங்கத்தில் உங்களையும் சேர்க்க அழைத்திருப்பேன்.

    பதிலளிநீக்கு