9 டிசம்பர், 2011

ஒஸ்தி

மசாலாவே பிடிக்காது என்பவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுங்கள். ஜனவரி வரை தமிழ்நாட்டில் ஒஸ்தி.. ஒஸ்தி.. ஒஸ்திதான்!

அத்தி பூத்தாற்போல ஆண்டுக்கு ஒருமுறையாவது பைலட் மாதிரி தியேட்டர்களில் ‘ஹவுஸ்புல்’ போர்டு மாட்ட ‘ஒஸ்தி’ மாதிரி படங்கள் வேண்டியிருக்கிறது. அவ்வகையில் தரணிகளும், பேரரசுகளும் தமிழ் சினிமாவுக்கு தவிர்க்க இயலாதவர்கள்.

சிம்புவுக்கு தன்னை எப்படி பிராண்டிங் செய்துக் கொள்வது என்பதில் நல்ல தெளிவு இருக்கிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ மாதிரி அவ்வப்போது நல்ல பெயர் எடுத்தாலும், வசூல்ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொண்டால் மட்டுமே தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்கு குப்பை கொட்ட முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

‘தபாங்’கை தமிழில் ரீமேக்க முடியுமாவென்று, அந்தப் படம் பார்த்தபோது சந்தேகம் இருந்தது. இந்திப் படங்களிலேயே ‘தபாங்’குக்கு சில பிரத்யேக தன்மைகள் உண்டு. மும்பை, டெல்லி என்று நகரங்களை விட்டு உத்தரப் பிரதேசத்தின் ரூரல் கதைக்களம். எழுபதுகளின், எண்பதுகளின் ஹீரோக்களையும், மசாலா படங்களையும் இடைவிடாமல் கிண்டலடிக்கும் மசாலா பகடி. குறிப்பாக இந்திய சினிமாக்களின் அடிநாதமான உறவுமுறை செண்டிமெண்டுகளை நோண்டி நோன்பெடுக்கும் உச்சம் தபாங். இந்த தன்மைகள் எதுவும் தமிழ் ‘ஒஸ்தி’யில் பெரியளவில் பிரதிபலிக்கவில்லை.

அதே நேரம் பார்த்திபனின் ‘உள்ளே வெளியே’வுக்குப் பிறகு தமிழகக் காவல்துறையின் அருமை, பெருமைகளுக்கு அசத்தலாக ‘ஆப்பு’ அடித்திருப்பதில் ஒஸ்தி வென்றிருக்கிறது. பாலாவின் ‘அவன் இவன்’ படத்திலும் கூட மிகக்குறைவான அளவில் இம்மாதிரி காட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் போலிஸ் அதிகாரிகளாக புகழ்பெற்ற தங்கப்பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி, காக்கிச்சட்டை கமல், வால்டர் வெற்றிவேல் சத்யராஜ், சத்ரியன் விஜயகாந்த், ஜெய்ஹிந்த் அர்ஜூன் என்று அத்தனைப் பேரையும் ‘ஒஸ்தி’யில் காமெடி பீஸ்களாக மாற்றியதில் இயக்குனர் தரணி வென்றிருக்கிறார்.

சிம்புதான் பெரிய டார்ச்சர். பராபரியாக அவர் வரும் எல்லா சீன்களிலும் ரசிகர்களை தாலியறுக்கிறார். சில காட்சிகளை காணும்போது சூர்யாவை விட சிம்பு குள்ளமானவரோ என்கிற சந்தேகம் வருகிறது. ஒருவேளை இளையதளபதி இந்த வேடத்தை ஏற்றிருந்தால் படம் ‘கில்லி’ ரேஞ்சுக்குப் போயிருக்கலாம்.

நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் ஆச்சரியகரமாக ஜித்தன் ரமேஷ் நன்றாக நடித்திருக்கிறார். சந்தானம், வெண்ணிற ஆடை ராமமூர்த்தி மாதிரி எவர்க்ரீன் ஐகானாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது. ஹீரோயின் பெரிய லெட்-டவுன். அவருடைய இடுப்பு மட்டுமே அழகாக, அம்சமாக தெரிகிறது. சோகையான முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லை. ஹீரோயின் அறிமுகமாகும் முதல் காட்சியில் ‘பிரம்மாண்டமான மேற்படி எஃபெக்ட்டை’ கிராபிக்ஸில் உருவாக்கித் தொலைத்திருப்பார்கள் போல.

வசனம், இசை, எடிட்டிங், கேமிரா என்று மிகச்சரியான விகிதத்தில் கலந்தடித்து கிண்டப்பட்ட மசாலா. குறிப்பாக பரதனின் வசனங்களுக்கு விசில் அடித்து, விசில் அடித்தே வாய் வீங்கிவிடுகிறது. ‘குருவி’யில் வாங்கிய மரண அடியால் வெறிபிடித்து உழைத்திருக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன், காமெடி, கவர்ச்சி என்று பார்த்து பார்த்து செதுக்கி இருப்பதால், மீண்டும் டைரக்டர்களில் ‘ஒஸ்தி’ ஆகியிருக்கிறார் தரணி.

13 கருத்துகள்:

  1. நாளைக்கு போகலாம்னு இருக்கிறேன். அது என்ன திடீர்ன்னு விஜய் மேல பாசம் உங்களுக்கு ? (இளைய தளபதி)

    பதிலளிநீக்கு
  2. விஜயைவிட மாஸ் கட்டுறதுல விக்ரம்தான் பெஸ்ட் (தில்,தூள்,ஜெமினி,சாமி).தபாங் ரி மேக் கூட அவரே பண்ணியிருக்கலாம் ஆனா ஒன்னு சல்மான் பண்ணதுல பாதிகூட சிம்பு பண்ணியிருக்கமாட்டார்.

    பதிலளிநீக்கு
  3. இந்த மாதிரியான கேரக்டர்களில் சிம்பு?. நினைக்கவே பயமாக இருக்கிறது. போஸ்டர்களில் பார்த்தால் எதோ பிளஸ் டூ பையனுக்கு போலிஸ் வேஷம் போட்டது போல் இருக்கிறது.

    அதுவும் சல்லு பாயோட இடத்துல சிம்புவ பார்த்தா சிரிக்கிறதா அழுவறதா என்றே தெரியவில்லை.

    இந்த கேரக்டரில் தமிழில் விக்ரமை விட்டால் ஆள் இல்லை. அணில் எல்லாம் முடியவே முடியாது.

    அதே போல சிங்கம் படத்திலயும் சூர்யா வை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. படம் நல்லாருக்குனு சொல்றீங்களா...தல தியேட்டர்ல எல்லாரும் அசிங்க அசிங்கமா கத்தறானுங்க...முக்காவாசி படத்துலயே முக்காவாசி தியேட்டர் காலி...இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாப் ஒஸ்தி தான்...மசாலா படங்கள வச்சேதான் சொல்றேன்...இது நாத்தம் அடிக்கும் மசாலா. மசாலா ரசிகர்கள கூட இந்தப்படம் திருப்திப்படுத்தாது...

    பதிலளிநீக்கு
  5. யுவா,

    எப்பொழுதும் விஜய்யை அணில் என செல்லமாக அழைப்பீர்கள். இப்ப என்ன? இளையதளபதி என குறிப்பிடுகிறீர்கள். நண்பன் டிரைலர் பார்த்து மனம் மாறிவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  6. பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்... neengalum thaan :)

    நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

    ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

    பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

    பதிலளிநீக்கு
  7. சக்கரைப் பொங்கலுக்கு சால்னாவா ஒத்தே வரலையே அப்பூ!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  8. கரடி கிட்ட காசு வாங்கிடிங்க யுவா... Very Bad, pathetic movie of the year.

    :(

    பதிலளிநீக்கு
  9. இது ஒசத்தியில்ல கொசுவர்தீ

    பதிலளிநீக்கு