10 டிசம்பர், 2011

இசை எதிலேருந்து வருது?

சேலம், பிள்ளையார் நகரைச் சேர்ந்த மைக்கேலுக்கு அப்போது வயது பத்து. அரசுப்பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். உணவு இடைவேளையில் சக மாணவர்கள் சினிமாப் பாடல்களை பாடும்போது, தாளம் பிசகாமல் வகுப்பறை மேசையில் தட்டுவார். அடிப்படை இசைஞானம் எதுவுமில்லையென்றாலும், மைக்கேல் ஒரு பிறவிக் கலைஞன்.

இவரது இந்த ஆற்றலைக் கண்ட ஆசிரியர்களும், நண்பர்களும் ‘ஒரு டிரம்ஸ் வாங்கி இசைக்கலாமே?’ என்று மைக்கேலுக்கு ஆலோசனை சொன்னார்கள். மைக்கேலுக்கும் ஆசைதான். அப்பாவிடம் கேட்டார். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த அப்பா மோகனுக்கு, பிள்ளை கேட்டதை வாங்கித்தர விருப்பமிருந்தது. ஆனால் கிடைத்த சொற்ப வருமானமோ குடும்பத்தின் பசியைப் போக்கவே போதுமானதாக இல்லை. மைக்கேலின் அம்மா ஒரு தையற்கலைஞர். வீட்டிலேயே ஒரு பழைய தையல் மெஷின் வாங்கி அக்கம் பக்கம் வீடுகளுக்கு துணி தைத்துக் கொடுப்பார்.

டிரம்ஸ் கிடைக்காத மைக்கேல், அம்மாவின் தையல் மெஷினை மூடும் மரமூடியை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். தவிலில் இருந்து வெளிவரும் இசையை தையல் மெஷின் மூடியில் இனம் கண்டார். குறிப்பிட்ட இசை என்பது அது அதற்குரிய வாத்தியங்களில் மட்டுமில்லை. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் கூட இருக்கிறது என்பதை கண்டறிந்தார். வாத்திய இசையை எந்தெந்தப் பொருட்களில் உருவாக்க முடியும் என்கிற தேடலில் ஈடுபட்டார் மைக்கேல்.

சாப்பாடு சாப்பிட உபயோகப்படுத்தும் எவர்சிலவர் தட்டுகளில் மேற்கத்திய டிரம்ஸ் இசையையும், செரலாக் பால் டின்னிலும், மினரல் வாட்டர் கேனிலும் பம்பை வாத்திய இசையையும் உருவாக்க முடிந்ததை கண்டு கொண்டார். இப்படியே நூல் பிடித்து பழைய ஹெல்மெட் மூலம் கடம், அண்டா தூக்கு ஆகிய பொருட்கள் மூலம் தபேலா, வாட்டர் ஃபில்டர் பிளாஸ்டிக் பக்கெட் மூலம் டிரம்ஸ் என்று இசையை உருவாக்கும் நூற்றுக்கணக்கான பொருட்களை அடையாளம் கண்டார். . கல்யாண மேளம், பம்பை, நையாண்டி, சண்ட மேளம் (கதகளி), கடம், மிருதங்கம் தபேலா உள்ளிட்ட கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வகையான beatகளை இக்கருவிகளைக் கொண்டு இப்போது அச்சு அசலாக மைக்கேலால் உருவாக்க முடிகிறது.

“இந்தக் கட்டத்தில் எனக்கு அசல் வாத்தியங்கள் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வமே போய்விட்டது. அந்த வாத்தியங்களின் இசையை எளியப் பொருட்களில் கொண்டுவருவதில் ஒரு சவால் இருக்கிறது. அந்த சவாலை எதிர்கொள்வது எனக்கு விருப்பமான ஒன்று. எந்தப் பொருளில் எந்த இசையைக் கொண்டு வரமுடியும் என்று கண்டுபிடிப்பதில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது. சிறுவயதிலேயே எனக்கு இந்த சூட்சுமம் பிடிபட்டுவிட்டது” என்கிறார் மைக்கேல்.

வித்தியாசக் கருவிகள் மூலமாக மைக்கேல் இசையமைப்பது அவரது வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அவரது பகுதியில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் இக்கருவிகளை வைத்து கச்சேரி செய்ய ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. கச்சேரி அமோகமாக அமைய அடுத்தடுத்து சேலம் மாவட்டம் முழுக்க மைக்கேலுக்கு வாய்ப்பு மழை.

இதற்கிடையே, தங்கள் பள்ளி மாணவன் இவ்வகையில் புகழ்பெறுவது பள்ளிக்கும் பெருமை என்பதால் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் அவரை ஊக்குவித்தார்கள். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த இசைப்போட்டிகளுக்கு மைக்கேலை அனுப்பி வைத்தார்கள். அம்மாதிரியான ஒரு போட்டியில் மாவட்டத்திலேயே முதலிடம் மைக்கேலுக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் மதிவாணனுக்கு மைக்கேலின் இசை பிடித்துப் போனது. மாவட்ட நிர்வாகம் தொடர்பான அரசு விழாக்களுக்கு இசையமைக்க மைக்கேலை சிபாரிசு செய்தார். ஏற்காடு கோடைவிழாவில் இசையமைக்கும் அரியவாய்ப்பும் மைக்கேலுக்கு இப்படித்தான் கிடைத்தது.

இப்போது மைக்கேல் உள்ளூர் கேபிள் சேனல்களில் பிரபலம். பேட்டி, நிகழ்ச்சி என்று சக்கைப்போடு போடத் தொடங்கினார். சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ‘சிறந்த சாதனையாளர் விருது’ம் பெற்றார். எந்தப் பொருளையாவது வைத்து, எதையாவது தட்டிக் கொண்டிருக்கும் மகனை ஆரம்பத்தில் கவலையோடு பார்த்த அவரது பெற்றோர், இப்போது மைக்கேலை அங்கீகரிக்கவும், ஆதரிக்கவும் தொடங்கினார்கள்.

அடுத்து?

இசைத்துறையில் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி கண்டாயிற்று. அரசு அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிக்கவும் ஆரம்பித்தாயிற்று. சேலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பிரபலமாகவும் வளர்ந்தாயிற்று. வேறென்ன? சினிமாதான்.

அதற்கு முன்பாக இசை குறித்து கற்க ஆசைப்பட்டார் மைக்கேல். “எனக்கு போதுமான பிராக்டிக்கல் அறிவு இருந்தாலும், தியரிட்டிக்கலாக இசை கற்க நினைத்தேன். எனக்குத் தெரிந்த கர்னாடக சங்கீதம் முழுக்க முழுக்க கவனிப்பின் அடிப்படையில் அமைந்தது. முறையாக இசையை கற்பது என் எதிர்காலத்துக்கு உதவும் என்பதால், +2 முடித்தவுடனேயே 2008ல் சென்னைக்கு வந்தேன்” தான் சென்னைக்கு வந்த கதையை சொல்கிறார் மைக்கேல்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப்பள்ளியில் சேருவது மைக்கேலின் அன்றைய லட்சியமாக இருந்தது. ஆனால் அவர் நினைத்த மாதிரியில்லாமல் இங்கே இசை படிக்க நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. மைக்கேலிடம் அவ்வளவு பணமில்லை. மனம் வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவரது செல்போனில் வந்தது ஒரு அழைப்பு.

மைக்கேலின் வாழ்க்கையையே மாற்றியமைத்த அழைப்பும் கூட இது. சென்னைக்கு வந்தபோது ‘எதுக்கும் இருக்கட்டுமே?’ என்று லயோலா கல்லூரியில் சேர வேண்டாவெறுப்பாக விண்ணப்பம் போட்டிருந்தார். மைக்கேலுக்கு வந்த அழைப்பு கல்லூரியிலிருந்து. கணிப்பொறி அறிவியல் இளங்கலை படிப்பில் சேர அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. ஒரு கதவு மூடினால், ஓராயிரம் கதவு திறக்குமென்பதை மைக்கேல் உணர்ந்தார்.

சென்னையின் பழமையான, பிரசித்திப் பெற்ற லயோலா கல்லூரி மைக்கேலுக்கு அள்ளி, அள்ளி வழங்கிய வாய்ப்புகள் ஆயிரம் ஆயிரம். கல்லூரி நிர்வாகம் அவரது படிப்புக்கு பொருளாதாரரீதியாக உதவியோடு, இசை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்துக்கொள்ள ஊக்கமும் தந்தது. கல்லூரிகளுக்கு இடையிலான இசைப்போட்டிகளில் தனது வித்தியாசமான இசைக்கருவிகளோடு களமிறங்கி அதகளப்படுத்தத் தொடங்கியதில் மாநிலத் தலைநகரில் பிரபலமானார் மைக்கேல். அடுத்தடுத்து காமராஜர் அரங்கம், ராணி சீதைமன்றம் என்று சென்னையின் பிரபலமான அரங்குகளில் மைக்கேலின் இசை ராஜாங்கம்தான்.

வித்தியாசக் கருவிகளில் ‘டிரம்ஸ்’ இசைப்பதில் ஆர்வம் கொண்ட இசைக்கலைஞர் சிவமணி முன்பாகவும் ஒரு நிகழ்ச்சியில் வாசித்துக் காட்டினார் மைக்கேல். தன்னைப் போன்றே ஒரு கலைஞனை கண்டுகொண்டதில் சிவமணிக்கு மகிழ்ச்சி. கட்டிப்பிடித்துப் பாராட்டினார். இசைக் கலைஞர்களான விக்கு விநாயக், பாலமுரளி கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்று பலரும் மைக்கேலின் வித்தியாச இசையைப் பாராட்டித் தள்ளினார்கள்.

இருபது வயது முடிவடைவதற்குள் தான் விரும்பியத் துறையில் சொல்லிக் கொள்ளத்தக்க பெயர் பெற்றுவிட்டார் மைக்கேல். இவ்வருடம் கல்லூரிப் படிப்பும் முடிந்துவிட்டது. மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட நூறு தனி மேடை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியாயிற்று.

மைக்கேலின் அடுத்த திட்டம் என்ன?

சினிமாதான். அதற்கு முன்பாக தான் ஆசைப்பட்ட இசைப்படிப்பை படித்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார். தனக்கு இசை தெரியும் என்று சொல்லிக் கொள்வதற்கான உறுதிச் சான்றிதழாக படிப்பை கருதுகிறார்.

“என்னுடைய லட்சியம் ஆஸ்கர்தான் சார். இப்போது எனக்கு முறையான வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் நல்ல பயிற்சியுண்டு. இருந்தாலும் புதுப்புதுக் கருவிகளில் புதுப்புது இசையை தேடிக்கொண்டே இருக்கிறேன். இப்போது கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது கருவிகளை கொண்டு இசையமைக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அதைச் சரியாக அடையாளம் கண்டு போராடுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. நான் வெற்றிப் பெற்றுவிட்ட மமதையில் இதைச் சொல்லவில்லை. போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான என் சகோதரர்களுக்காக இதை சொல்கிறேன்” என்று தத்துவார்த்தமாக பேச்சை முடித்துக் கொள்கிறார்.

வறுமையை திறமை வென்றதற்கு ஏற்கனவே கோடி உதாரணங்கள் உண்டு. மைக்கேல் ஒரு கோடியே ஒன்றாவது உதாரணம்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 டிசம்பர், 2011

ஒஸ்தி

மசாலாவே பிடிக்காது என்பவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுங்கள். ஜனவரி வரை தமிழ்நாட்டில் ஒஸ்தி.. ஒஸ்தி.. ஒஸ்திதான்!

அத்தி பூத்தாற்போல ஆண்டுக்கு ஒருமுறையாவது பைலட் மாதிரி தியேட்டர்களில் ‘ஹவுஸ்புல்’ போர்டு மாட்ட ‘ஒஸ்தி’ மாதிரி படங்கள் வேண்டியிருக்கிறது. அவ்வகையில் தரணிகளும், பேரரசுகளும் தமிழ் சினிமாவுக்கு தவிர்க்க இயலாதவர்கள்.

சிம்புவுக்கு தன்னை எப்படி பிராண்டிங் செய்துக் கொள்வது என்பதில் நல்ல தெளிவு இருக்கிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ மாதிரி அவ்வப்போது நல்ல பெயர் எடுத்தாலும், வசூல்ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொண்டால் மட்டுமே தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்கு குப்பை கொட்ட முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

‘தபாங்’கை தமிழில் ரீமேக்க முடியுமாவென்று, அந்தப் படம் பார்த்தபோது சந்தேகம் இருந்தது. இந்திப் படங்களிலேயே ‘தபாங்’குக்கு சில பிரத்யேக தன்மைகள் உண்டு. மும்பை, டெல்லி என்று நகரங்களை விட்டு உத்தரப் பிரதேசத்தின் ரூரல் கதைக்களம். எழுபதுகளின், எண்பதுகளின் ஹீரோக்களையும், மசாலா படங்களையும் இடைவிடாமல் கிண்டலடிக்கும் மசாலா பகடி. குறிப்பாக இந்திய சினிமாக்களின் அடிநாதமான உறவுமுறை செண்டிமெண்டுகளை நோண்டி நோன்பெடுக்கும் உச்சம் தபாங். இந்த தன்மைகள் எதுவும் தமிழ் ‘ஒஸ்தி’யில் பெரியளவில் பிரதிபலிக்கவில்லை.

அதே நேரம் பார்த்திபனின் ‘உள்ளே வெளியே’வுக்குப் பிறகு தமிழகக் காவல்துறையின் அருமை, பெருமைகளுக்கு அசத்தலாக ‘ஆப்பு’ அடித்திருப்பதில் ஒஸ்தி வென்றிருக்கிறது. பாலாவின் ‘அவன் இவன்’ படத்திலும் கூட மிகக்குறைவான அளவில் இம்மாதிரி காட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் போலிஸ் அதிகாரிகளாக புகழ்பெற்ற தங்கப்பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி, காக்கிச்சட்டை கமல், வால்டர் வெற்றிவேல் சத்யராஜ், சத்ரியன் விஜயகாந்த், ஜெய்ஹிந்த் அர்ஜூன் என்று அத்தனைப் பேரையும் ‘ஒஸ்தி’யில் காமெடி பீஸ்களாக மாற்றியதில் இயக்குனர் தரணி வென்றிருக்கிறார்.

சிம்புதான் பெரிய டார்ச்சர். பராபரியாக அவர் வரும் எல்லா சீன்களிலும் ரசிகர்களை தாலியறுக்கிறார். சில காட்சிகளை காணும்போது சூர்யாவை விட சிம்பு குள்ளமானவரோ என்கிற சந்தேகம் வருகிறது. ஒருவேளை இளையதளபதி இந்த வேடத்தை ஏற்றிருந்தால் படம் ‘கில்லி’ ரேஞ்சுக்குப் போயிருக்கலாம்.

நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் ஆச்சரியகரமாக ஜித்தன் ரமேஷ் நன்றாக நடித்திருக்கிறார். சந்தானம், வெண்ணிற ஆடை ராமமூர்த்தி மாதிரி எவர்க்ரீன் ஐகானாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது. ஹீரோயின் பெரிய லெட்-டவுன். அவருடைய இடுப்பு மட்டுமே அழகாக, அம்சமாக தெரிகிறது. சோகையான முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லை. ஹீரோயின் அறிமுகமாகும் முதல் காட்சியில் ‘பிரம்மாண்டமான மேற்படி எஃபெக்ட்டை’ கிராபிக்ஸில் உருவாக்கித் தொலைத்திருப்பார்கள் போல.

வசனம், இசை, எடிட்டிங், கேமிரா என்று மிகச்சரியான விகிதத்தில் கலந்தடித்து கிண்டப்பட்ட மசாலா. குறிப்பாக பரதனின் வசனங்களுக்கு விசில் அடித்து, விசில் அடித்தே வாய் வீங்கிவிடுகிறது. ‘குருவி’யில் வாங்கிய மரண அடியால் வெறிபிடித்து உழைத்திருக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன், காமெடி, கவர்ச்சி என்று பார்த்து பார்த்து செதுக்கி இருப்பதால், மீண்டும் டைரக்டர்களில் ‘ஒஸ்தி’ ஆகியிருக்கிறார் தரணி.

7 டிசம்பர், 2011

சாரு – எக்ஸைல் : டிட்பிட்ஸ்

  • தமிழ் இலக்கியம் சாமானிய மக்களிடம் பரவலாகிறது என்று பரவசப்பட்டுக் கொள்ளலாம். அல்லது தமிழ் இலக்கியம் இவர்களால் வணிகமயமாகி சீரழிகிறது என்று சீற்றமும் கொள்ளலாம். போஸ்டர், ட்ரைலர், கட்டவுட், பிரம்மாண்ட அரங்கில் வெளியீடு என்று டிசம்பர் புத்தகக் கச்சேரியை களை கட்ட வைத்திருக்கும் சாருவின் எக்ஸைலை நீங்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் கபிலன் வைரமுத்துவின் உயிர்சொல்லை இந்த விஷயத்தில் எக்ஸைல் அடித்துக் கொள்ளமுடியவில்லை என்பதே நிஜம்.

  • கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா வெளியீட்டுக்குப் பிறகு அதிகளவில் கூடிய வாசகர் கூட்டம் எக்ஸைலுக்குதான் என்று சொன்னால் மிகையில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாருவுக்காக மட்டுமே கூடினார்கள் என்பது மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி. ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. சர்வநிச்சயமாக தமிழிலக்கிய சாதனை.

  • இணையத் தளங்களில் சாருவை வன்மமாக கிண்டலடிப்பதின் மூலமாக மட்டுமே இலக்கிய அந்தஸ்து கிடைத்து விட்டதாக கருதிக் கொள்பவர்கள் சிலர் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கன்னத்தில் மச்சம் வைத்துக் கொண்டு மாறுவேடத்தில் அங்குமிங்குமாக அலைந்ததை காண முடிந்தது.

  • சாருவின் ‘கெட்டப்எக்ஸைல் விழாவின் ஹைலைட். முழுக்க வெள்ளை முடி, வெள்ளை குறுந்தாடி. டாலடிக்கும் கோட்டு, சூட்டு. ஏனோ சாருவை இந்த கோலத்தில் பார்க்க ‘பாட்டுக்கு நான் அடிமைபடத்தில் ‘இண்டர்நேஷனல் மியூசிக் ஃபெஸ்டிவலில் (?)ராமராஜன் பொன்னாத்தா பாட்டு பாடும் காட்சி நினைவுக்கு வந்தது.

  • மேடையில் மூன்றே மூன்று நாற்காலிகள். ஒன்று கவிஞர் வாலிக்கு. இரண்டு இந்திரா பார்த்தசாரதிக்கு. மூன்று சாருவுக்கு. சாருவின் முந்தைய புத்தக வெளியீடு கூட்டங்களில் மேடை நிறைந்த நட்சத்திரங்களை தரிசித்தவர்களுக்கு இந்த மேடை ‘வாழ்ந்து கெட்ட வீட்டை நினைவுப்படுத்தியிருக்கும். ஒருவேளை சாரு தனிமைப்படுத்தப் படுகிறாரோ என்கிற எண்ணம் கூட தோன்றியது.

  • சாரு ஒரு மோசமான நிகழ்ச்சித் தொகுப்பாளர். நிகழ்ச்சியைத் தொகுக்க வேறு யாரையாவது (அழகான பெண்ணாகப் பார்த்து) ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் இறுதியில் அவர் ஆற்றிய உரை உருக்கமானதாகவும், வழக்கம்போல சிறப்பானதாகவும் இருந்தது. புத்தகம் கிழிப்பு அல்லது யாரையாவது போட்டுத் தாக்கி டார் டாராக கிழிப்பு இம்முறை மிஸ்ஸிங்.

  • கடந்த ஆண்டு மேடையிலிருந்த மதன் இம்முறை பார்வையாளராக வந்திருந்தார். அவரை சாரு மேடைக்கு அழைக்க, எக்ஸைலுக்கு சிறப்பான அணிந்துரை கிடைத்தது. இயக்குனர் வெற்றிமாறனையும் பார்வையாளர் வரிசையில் காணமுடிந்தது.

  • வாலியின் வழக்கமான எதுகை மோனை பேச்சாக இல்லாமல் சுமாராகதானிருந்தது. இ.பா. சுத்தம்.

  • வாசகர் வட்டத்தினரின் ஏற்பாடுகள் அபாரம். நூலை 50 ஆயிரத்துக்கும், 25 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தவர்கள் தங்கள் முகம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஏலம் கேட்டவ மற்ற 20 பேருக்கு மேடையிலேயே புத்தகம் வழங்கப்பட்டது.

  • புத்தக வெளியீட்டாளரான பத்ரியை சாரு மேடைக்கு அழைத்தும் அவர் ஏனோ செல்லவில்லை. மேடைக்கு கீழேயே நின்று மொத்த நிகழ்வையும் வீடியோவில் கவர் செய்வதில் பிஸியாக இருந்தார்.

  • சாருவின் பழைய இலக்கிய சகாக்கள் கவிஞர் ராஜசுந்தரராஜன், எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஆகியோர் வந்திருந்தனர். மாமல்லன் கண்ணை கூச வைக்கும் பச்சைநிற ஃப்ளோரசண்ட் டீ-ஷர்ட் அணிந்திருந்தார். அந்த வண்ணத்தை சாரு ஏக்கமாகப் பார்த்ததாக தெரிகிறது. அடுத்த நிகழ்ச்சியில் இதேமாதிரி ஃப்ளோரசண்ட் வண்ணச் சட்டையில் சாருவை காணமுடிந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஷோபாசக்தி ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

  • எத்தியோப்பிய எழுத்தாளரின் புத்தக வெளியீடு விழா என்பதால், எத்தியோப்பிய மன்னரின் வருகையை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். மன்னருக்கு நகர்வலம் இருந்திருக்கலாம். வரவில்லை. அதுபோலவே எஸ்.ரா.வும் வரவில்லை. எஸ்.ரா நிகழ்வுக்கு வந்து, நூலைப்பற்றிப் பேசப்போவதாக சாரு தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால், ஒரு சுவாரஸ்யமான, நீண்டகாலத்துக்கு அசைபோடும் விழாவாக இது அமையவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம்தான்.

  • ஆனாலும் யாரை நம்பி நான் பொறந்தேன்ரேஞ்சில் தன் வாசகர்களை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இவ்வளவு பெரிய விழாவை ஏற்பாடு செய்து பெரும் கூட்டத்தோடு வெற்றி கண்டிருப்பது சாருவின் அசாத்திய மனத்திடத்தை காட்டுகிறது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகமும் வாங்கினார்கள் என்பதே சாருவுக்கு நிஜமான வெற்றி. இந்நிகழ்வுக்கு வாசகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு போக்கு தொடருமேயானால், அது மற்ற எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும்கூட நல்லதுதான்.

  • புத்தகத்தை மேலோட்டமாக மேய்ந்ததில் சாருவின் ‘கடின உழைப்புதெரிகிறது. காமரூபக் கதைகள், தேகம் மாதிரியாக இல்லாமல் பழைய சாரு ஃபார்முக்கு திரும்பியிருப்பதாகவே நினைக்கிறேன். எக்சிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனுக்கும், ராஸலீலாவுக்கும் பிறந்த குழந்தையாகவே ‘எக்ஸைல்இருக்குமென தெரிகிறது. ஏதோ ஒரு பக்கத்தில் பிரெஞ்சு கவிதை வாசித்தேன். நமக்கு பிரெஞ்சு தெரியாது என்பதால், இந்தப் பக்கத்தை வாசிப்பதற்காகவே பிரெஞ்சு கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுகிறது. வில்லனுக்கு ‘கொக்கரக்கோஎன்று பெயரிட்டிருப்பதின் மூலமாக சாருவின் திராவிட அரசியல் எதிர்ப்பு பளிச்சிடுகிறது. இதுவரை சாரு எழுதிய நாவல்களில் சாருவே ஹீரோ, சாருவே வில்லன் என்பதுதான் வழக்கம். எக்ஸைலில் முதன்முறையாக சாருவுக்கு வில்லன் தோன்றியிருக்கிறார். புத்தகத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ இந்திய ஞான தத்துவ மரபு மாதிரி மேட்டர்கள் இருக்கும் போல தெரிகிறது. சாமியே சரணம் அய்யப்பாஎன்று முல்லைபெரியாறின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு படித்துவிட வேண்டியதுதான்!

6 டிசம்பர், 2011

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க...

முன்பு டீக்கடைகளில் மோதிக்கொண்டார்கள். பின்பு மேடைகளில், தெருக்களில், தேர்தல் பூத்துக்களில், பத்திரிகைகளில், டி.வி.க்களில், கிடைத்த இடங்களிலெல்லாம். தகவல் தொழில்நுட்ப யுகம் என்பதால், இப்போது இணையத்துக்கும் வந்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூக்கள் என்று சமூக வலைத்தளங்களில் ‘அரசியல் அனல்’ பறக்க ஆரம்பித்திருக்கிறது.

உலகளவில் ஒபாமா, ஹ்யூகோ சாவேஸ் என்று தலைவர்கள் கலக்க, நம்மூர் தேசிய அரசியலிலும் அத்வானி, சுஷ்மா ஸ்வரராஜ், நரேந்திரமோடி, சசிதரூர், கார்த்திக் சிதம்பரம், உமர் அப்துல்லா என்று அரசியல் நட்சத்திரங்கள் களமிறங்கி விட்டார்கள்.

இணையம் ஒன்றுதான் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிப் பிழைத்த களம். அதையும் ஏன் இப்போது அவர்கள் விட்டுவைப்பதில்லை?

ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் ஒரு சின்ன கணக்கீடு : ‘இந்தியாவில் தோராயமாக பத்துகோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம். இவர்களில் சுமார் ஆறரை கோடி பேருக்கு சமூக வலைத்தளங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் மொபைல் போன்களிலும் இணையத்தை பாவிக்கிறார்கள்’

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கி, பெருகிக்கொண்டே போகிறது. மேடை போடாமல், ஊர் ஊராக அலையும் அலைச்சல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான் இல்லையா?

உதாரணத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கருத்தை பேட்டியிலோ, அறிக்கையிலோ தெரிவித்து அது டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து... அதை எத்தனை பேர் வாசித்து...? இந்தத் தொல்லையெல்லாம் இணையத்தில் இல்லை. நரேந்திரமோடியை ட்விட்டர் என்கிற இணையத்தளத்தில் தற்போது தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். ’நறுக்’கென்று தன்னுடைய கருத்தை மோடி வைத்தால், அதை சுமார் நாலு லட்சம் பேர் உடனுக்குடன் அறிந்துக் கொள்கிறார்கள். அவர்கள் அக்கருத்தை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பகிர பகிர லட்சக்கணக்கானோர், கோடிக்கணக்கானோருக்கு அக்கருத்து காட்டுத்தீ மாதிரி வேகவேகமாக பரவிவிடுகிறது. அவரை பின் தொடர்பவர்களுக்கு மோடியே தங்களோடு நேரடியாகப் பேசுவதைப் போன்ற உணர்வும் ஏற்படுகிறது. இதுதான் இணையத்தின் வசதி. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டிய யாருக்குமே இணையம் ஒரு வரப்பிரசாதம்தான்.

உலகளவிலும், தேசிய அளவிலும் இணையத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருக்கிறது. நம்மூரில் எப்படி?

சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நீக்கப்பட்டபோது, அதிகம் அதிர்ந்தது ஃபேஸ்புக் இணையத்தளம்தான். ஏனெனில் வேல்முருகனின் ஃபேஸ்புக் நண்பர்கள் மட்டுமே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கட்சியை விட்டு நீக்கப்பட்டதற்காக வேல்முருகனுக்கு ஆறுதலாகவும், பா.ம.க. தலைமைக்கு எதிராகவும் இணையத்தில் இவர்களில் பெரும்பாலானோர் பொங்கியெழத் தொடங்கினார்கள்.

“தமிழக அரசியல்வாதிகளில் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய முன்னோடிகளில் நான் ஒருவன். எனக்கு உலகநாடுகள் முழுக்க நண்பர்கள் உண்டு. அவர்களோடு தொலைபேசியில் உறவாடி வந்தேன். கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபடும்போது, இதுபோன்ற அழைப்புகளை ஏற்று பேசமுடியாது. எனவேதான் இணையத்தளத்தை பயன்படுத்தத் தொடங்கினேன். நிறைய தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர், இணையத்துக்கு வந்து தங்களோடு நெருக்கமாக உறவாடுவது ஊக்கமாக இருந்தது. அரசியல், தமிழர் பிரச்சினைகளை என்னிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். இப்போது கிராமப்புறங்களுக்கும் கம்ப்யூட்டரும், இணையமும் வந்துவிட்டது. மக்களுடன் தொடர்புகொள்ள எந்தெந்த நவீன வசதிகள் வந்துக் கொண்டிருக்கிறதோ, அத்தனையையும் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எனக்கென்று பிரத்யேகமாக ஒரு இணையத்தளத்தை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் வேல்முருகன்.

இவரைப் போலவே இளையதலைமுறை அரசியல்வாதிகள் சமீபக்காலமாக ஆர்வமாக இவ்விஷயத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். கடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலின் போது சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் சைதை துரைசாமி, திமுகவின் மா.சுப்பிரமணியம் இருவருமே ஆளுக்கொரு ஃபேஸ்புக் கணக்கினைத் தொடங்கி சரமாரியாக பிரச்சாரம் செய்தார்கள். தேர்தலில் வென்ற சைதை துரைசாமி, தற்போது அப்பக்கத்தில் சென்னை மாநகர மக்கள் தங்கள் குறைகளை பதிவுசெய்ய அனுமதித்திருக்கிறார்.

“அந்தப் பக்கத்தில் பதியப்படும் அனைத்து புகார்களும், ஆலோசனைகளும் தொகுக்கப்பட்டு அவைகளின் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதிகூறுகிறார் சென்னை மேயர் சைதை துரைசாமி. மேயரே நேரடியாக இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்ப்பார் என்பதால் பலரும் இங்கே தங்கள் குறைகளை பதிவுசெய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே பதியப்பட்டிருக்கும் குறைகளில் பெரும்பாலானவை சமீபத்திய மழையில் அடித்துச் சென்ற சாலைகளைப் பற்றிதான். மேயர் சார், சீக்கிரம் ரோடு போடுங்க...

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான கரூர் ஜோதிமணி, வேறுவிதமாக இணையத்தை அணுகுகிறார்.

“டிவியிலும், செய்தித்தாள்களிலும், வானொலியிலும் செய்திகளை அறிந்துகொள்வதை விட, இணையம் மூலமாக மக்கள் நேரடியாக தரும் உள்ளூர் செய்திகளை அறிய விரும்புகிறேன். அரசியல் பணி நிமித்தமாக, டெல்லியில் இருக்கும் எனக்கு நம் தமிழ் மக்களின் நாடித்துடிப்பை அறிய ஃபேஸ்புக் பயன்படுகிறது. இணையம் ஒரு அற்புதமான தகவல் தொடர்பு ஊடகம். ஆரோக்கியமான விவாதக் களமாக இதைப் பயன்படுத்தலாம். டெல்லி அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். நம்மூர் ஆட்களும் இங்கு வந்துசேரவேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது” என்கிறார்.

சமீபத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக களமிறங்கியிருக்கும் குஷ்பூவின் ட்விட்டர் செயல்பாடுகள் ஜனரஞ்சகமானவை. அரசியல்வாதியாக மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாயாக, திரைக்கலைஞராக, ரசிகராக, சமூக ஆர்வலராக என்று தன்னுடைய பன்முகங்களை காட்டுகிறார் குஷ்பூ. அவ்வப்போது அவர் அள்ளித்தெளிக்கும் அரசியல் தத்துவங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. உதாரணத்துக்கு ஒன்று : “நீங்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், உங்கள் சுய அடையாளத்தை இழந்துவிட்டதாக அர்த்தமில்லை. சுயம் சுயமாகவே இருக்கும்!”

இவர்கள் மட்டுமன்றி சி.பி.எம். எம்.எல்.ஏ., பாலபாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ரவிக்குமார் என்று ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் திறம்பட செயலாற்றுகிறார்கள். மக்களோடு மட்டுமின்றி, தங்கள் ஆதரவாளர்களோடும் உரையாட இது அவர்களுக்கு வாகாக இருக்கிறது. தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமாருக்கும் கூட ஒரு ஃபேஸ்புக் கணக்கு உண்டு.

மதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிறையபேரை அடிக்கடி ஃபேஸ்புக்கில் காணமுடிகிறது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இணையத்தளத்தில் செயல்படும் மதிமுகவினருக்கு என்று பிரத்யேகமான கூட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நடத்தினார். இதன் அடிப்படையில்தான் ஒரு மேடையில் “இணையத்தளத்தில் இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சி மதிமுக” என்று அவர் பெருமிதமும் பட்டார்.

தமிழகத்தின் எந்தக் கட்சியை விடவும் திமுக இணையத்தள பயன்பாட்டில் கூடுதல் ஆர்வம் செலுத்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் செல்வாக்கைப் பெற (குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களின்) திமுக தவறிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதாலோ என்னவோ, திமுக தனது படையை இணையத்தில் களமிறக்கியிருக்கிறது.

அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஏற்கனவே வலைப்பூவில் எழுதிவருகிறார். திமுகவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., இளைஞர் அணி துணைப் பொதுச்செயலர் ஹசன் முகம்மது ஜின்னா, அரியலூர் மாவட்டச் செயலர் சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு என்று ஏராளமானோர் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் இணைய செயல்பாடுகள், எழுதப்படும் கட்டுரைகள் ஆகியவற்றை ‘பிரிண்ட் அவுட்’ எடுத்து, அக்கட்சியின் தலைவர் கலைஞரும் வாசிக்கிறார். சமீபத்தில் ‘இணைய உடன்பிறப்புகள் ஒன்றுகூடல்’ என்கிற பெயரில் திமுகவின் இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் ஒரு கூட்டமும் கூட்டப்பட்டது. இணையத்தில் செயல்படும் அக்கட்சியினர் மாநிலம் முழுக்க இருந்து இக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் இக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ‘திராவிடப் பாடம்’ நடத்தினார்.

திமுகவின் இந்த அசுரப் பாய்ச்சலை அதிமுகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளும் அதிகளவில் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று களமிறங்கலாம். அதிசமீபத்திய தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கும் நம் முதல்வரே இறங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவரது பெயரில் போலியாக யாரோ ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கியபோது, உடனடியாக அது தனதல்ல என்று மறுப்பு தெரிவித்து, அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னோட்டமாக சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில், ‘இணைய அதிமுகவினர் சந்திப்பு’ என்று ஒரு சந்திப்பும் நடந்தேறியிருக்கிறது. அரசின் திட்டங்களை இணையத் தளங்களில் எடுத்துச் சொல்வது, எதிர்க்கட்சிகளின் புகார்களை எதிர்கொள்வது என்று பலவிஷயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

எல்லா கட்சிகளும் இணையத்தில் தொடை தட்டி இறங்கிவிட, அதிரடி அரசியலுக்குப் பெயர்போன தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிக மட்டும் இன்னும் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை. தேமுதிக தலைவர்கள் யாரையும் சமூக வலைத்தளங்களில் காண இயலுவதில்லை. தொண்டர்களும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சீக்கிரமா நீங்களும் துண்டு போட்டு சீட்டு புடிங்க கேப்டன்!

(நன்றி : புதிய தலைமுறை)

5 டிசம்பர், 2011

இணையமும், எழுத்தாளர்களும்!

உயிர்மை : பிரபல தமிழ் எழுத்தாளர்கள் இணைய தளங்களில் எழுத வரும்போது அவர்கள் தங்கள் புதிய வாசகப் பரப்பை எதிர்கொள்ளும் விதம் குறித்து என்ன கருகிறீர்கள்?

யுவகிருஷ்ணா : எழுத்தாளர் சுஜாதா ‘அம்பலம்’ இணையத் தளத்தில், வாசகர்களோடு ‘சாட்டிங்’ மூலம் உரையாடத் தொடங்கியதை ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாக கருதலாம். பொதுவாக வெகுஜன வாசகர்களிடம் சுஜாதாவுக்கு ஒரு இமேஜ் உண்டு. வாசகர்களிடம் அவர் சகஜமாகப் பழக மாட்டார், மனம் விட்டு பேசமாட்டார் என்பார்கள். ‘ஒரு நல்ல வாசகன், எழுத்தாளனை சந்திக்க விரும்பமாட்டார்’ என்பது சுஜாதாவின் பிரபலமான சொல்லாடலும் கூட.

சுஜாதா சினிமாவிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அவ்வளவு நேர நெருக்கடியான காலக்கட்டத்திலும், வாரந்தோறும் சனிக்கிழமை மிகச்சரியாக பத்து மணிக்கு ‘அம்பலம் சாட்டிங்’குக்கு வந்துவிடுவார். நம்மோடு உரையாடுவது சுஜாதாதானா என்றுகூட பல வாசகர்களும் நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவ்வளவு இயல்பான உரையாடல்கள் அவை. தேவன் வானுலகில் இருந்து கீழிறங்கி வந்து, மனிதர்களோடு தோளோடு தோள் உரசி பழகுவது மாதிரியான உன்னத உணர்வினை சுஜாதாவின் வாசகர்களுக்கு அம்பலம் வழங்கியது.

தொடக்கத்தில் தன்னை வாசித்தவர்களை, ஆராதித்தவர்களையே எதிர்கொண்டதால் சுஜாதாவுக்கும் இந்த உரையாடல் சுளுவாகவே இருந்தது. ஆண்டாள் முதல் ஐசக் அசிமோ வரை எதை கேட்டாலும் அட்சயப் பாத்திரமாக அள்ள, அள்ள பேசிக்கொண்டிருந்தார். வாசிப்புப் பழக்கத்தை முதன்முறையாக இணையத்தில் தொடங்கியவர்களும், பெரிய எழுத்தாளரோடு பேசுகிறோம் என்கிற உணர்வில் கலந்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த உரையாடல் அளித்த உற்சாக உணர்வால் சுஜாதாவை தேடித்தேடி வாசித்தார்கள்.

ஆயினும் இணையம் வெறும் இலக்கிய/வெகுஜன வாசகர்கள் நிரம்பியது மட்டுமல்ல. இணையத்தில் பங்குபெறுபவர்களில் கணிசமானோர் அரசியல் சிந்தனை கொண்டவர்களாகவும் அல்லது அவ்வாறு இருப்பதாகவும் நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் நிறைய பேர் தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர்களும் கூட. இது போதாதா? சுஜாதாவின் அம்பலம் உரையாடல்களுக்குள் இவர்கள் நுழைந்தபோது வெடித்தது கலகம். ‘சுஜாதாவின் அரசியல் நிலைப்பாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஜாலியாக இவர்களை கையாண்டுக் கொண்டிருந்த சுஜாதா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துப் போனார். ‘நான் அரசியல்வாதி கிடையாது. அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நான் ஏன் விடையளிக்க வேண்டும்?’ என்கிற தொனியில் எரிச்சலும் அடைந்தார்.

அம்பலம் உரையாடல்களில் சுஜாதாவுக்கு ஆரம்பத்தில் கிடைத்த மகிழ்ச்சியும், பிற்பாடு அது எரிச்சலாக மாறிய அனுபவமும், இணையத்தில் எழுதவரும் எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஏற்படுவதுதான். ஒரு பானை சோற்றுக்கு ஒரே ஒரு சுஜாதா பதம். சமீபத்தில் இங்கே வந்த விமலாதித்த மாமல்லன்வரை இப்போக்குக்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம். இதற்காக இணையத்தில் இயங்குபவர்களை எரிச்சலோடு எழுத்தாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதாக, ஒட்டுமொத்தமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இங்கே உருவாகும் புதிய வாசகப் பரப்பு எதையுமே புனிதப்படுத்துவதில்லை. பிரபலங்களுக்கு இங்கே இடமில்லை. தமிழில் நான்கு பத்திகளை தொடர்ச்சியாக வலைப்பதிவிலோ, ஃபேஸ்புக்கிலோ எழுதத் தெரிந்த யாருமே, தன்னை படைப்பாளியாக கருதிக் கொள்ளும் போக்கு தமிழ் இணையத்துக்கு உண்டு. இணையத்தின் இந்த அபத்தத் தன்மையை மிகச்சரியாகப் புரிந்துக்கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டக்கால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.

இணையத்துக்கு வரும் எழுத்தாளர்கள் தங்களுக்கு வாசகர் வட்டங்களை உருவாக்குவதிலும், ஃபேஸ்புக்கில் ‘லைக்’குகள் வாங்குவதில் செலுத்தும் ஆர்வத்தைக் காட்டிலும், தீவிரமான சில புதிய வாசகர்களை தங்களுக்கு உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இணையத்துக்கு அவர்கள் வந்ததன் நோக்கமும் நிறைவேறும்.

(நன்றி : உயிர்மை நூறாவது இதழ்)