4 ஜனவரி, 2012

அனைவரும் வருக!


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12

நேரம் : மாலை 6 மணி

விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்



வெளியிடப்படும் புத்தகங்கள் :


சங்கர் நாராயண்
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)

என். உலகநாதனின்நான் கெட்டவன் (இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)

யுவகிருஷ்ணா
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)


சிறப்பு அழைப்பாளர்கள் :


இயக்குனர் மீரா கதிரவன்


இயக்குனர் கே.பிபி நவீன்


இயக்குனர் தனபாலன்


இயக்குனர் ஹரீஷ்



மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

தோழர் உலகநாதனின் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய்  பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது.  உங்கள் ஆதரவை தாரீர்.

3 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவனின் கதை!

போன வருடம் புத்தகக் காட்சியின் போது கிழக்கு முட்டுச் சந்தில் பாரா சொன்னார். “இந்த வருஷம் ஒரு கதை எழுதுடா! கதைப் புஸ்தகம் இப்போ நல்லா சேல்ஸ் ஆவுது”. நான் ஒரு மோசமான கதை சொல்லி என்று எனக்கே தெரியும். எனவே நழுவப் பார்த்தேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் கூப்பிட்டார். “கதை எழுத சொன்னேனே? என்ன டாபிக்குன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்லை சார். எனக்கு கதையெல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும். ஒன்லைனர் சொல்றேன். அப்படியே நூல் புடிச்சி போய், ஒரு இருவத்தி ரெண்டாயிரம் வார்த்தைலே எழுதிடு”

அவர் சொன்ன ஒன்லைன் தான் அழிக்கப் பிறந்தவன். “2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா டிசம்பர் 31-ஆம் தேதியே திருட்டு டிவிடி பர்மா பஜாருக்கு வந்துடுது”

இதை எழுதி முடிக்க பாரா கொடுத்த டெட்லைன் சரியாக ஒரு மாதம். ஆனால் இரண்டு மாதத்துக்குப் பிறகுதான் அவரிடம் கதையை முடித்து கொடுக்க முடிந்தது.

முதல் மூன்று, நான்கு அத்தியாயங்களை எழுதுவதில் பெரியதாக சிரமம் இருக்கவில்லை. க்ரைம், செக்ஸ் என்று பிடித்த ஏரியாவை பிடித்துக்கொண்டு கும்மியடிக்க முடிந்தது. அதற்குப் பிறகு நான் உருவாக்கிய பாத்திரங்கள் என்னையே அலைக்கழிக்கத் தொடங்கின. இஷ்டத்துக்கும் முடிச்சு போட்டுவிட்டு, எந்த முடிச்சை எங்கே போட்டோம் என்பது மறந்துவிட்டது. ஒவ்வொன்றாக பாதி கதைக்கு மேல் லாஜிக் இடிக்காமல் அவிழ்த்தாக வேண்டும். இது மாதிரி மசாலா நாவல் எழுதுவது ஆகக்கடினமான வேலை என்பது புரிந்தது. தேவையில்லாமல் சேர்த்துவிட்ட சில கேரக்டர்களை, சம்பவங்களை தணிக்கை செய்துக்கொண்டே வந்தேன். இறுதியாக மூன்று, நான்கு பாத்திரங்களை வைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் அழித்துவிட்டேன். ‘சிக்’கென்று நறுக்காக பிறந்தான் அழிக்கப் பிறந்தவன்.

ஜெயமோகனின் ‘உலோகம்’ இரண்டாம் முறையாக கிழக்கு த்ரில்லரில் அச்சிடப்பட்டபோது பின்னட்டையில் ‘அழிக்கப் பிறந்தவன்’ குறித்த விளம்பரம் வந்திருந்தது. ‘கிழக்கு த்ரில்லர்’ உடனடியாக அழிக்கப் பிறந்தவனை வெளியிடமுடியாததால், வலைப்பூவில் தொடராக பதிவிட்டு வந்தேன். ஏனெனில் 2012ன் தொடக்கத்தில் நண்பன் வெளியாகிறது. மேலும் திருட்டு டிவிடி என்கிற சந்தையே இவ்வாண்டின் இறுதியில் இருக்குமா என்கிற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. ‘டாபிக்கல்’ ஸ்டோரி என்பதால் ஆறப்போடுவதில் விருப்பமில்லை.

இதை பதிவாக வாசித்த கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் போன்ற நண்பர்கள் புத்தகமாக கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார்கள். புதியதாக “உ” பதிப்பகம் துவங்கும் நண்பர் உலகநாதனிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். கடைசியாக “புத்தகமாகப் போட முடிவெடுத்திருக்கிறோம். ஃபைலை அனுப்பி வைங்க” என்று கேபிள் கேட்டார். எனக்கே அப்போதுதான் இது புத்தகமாகப் போகிறது என்கிற தகவல் தெரியும். இதனால் நண்பர் உலகநாதனுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிற ஒரே கண்டிஷனின் பெயரில் ஃபைலை அனுப்பி வைத்தேன். மார்க்கெட்டிங், விற்பனை பற்றியெல்லாம் ஏற்கனவே ‘பக்கா’வாக பிளான் போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எழுதியதைத் தவிர்த்து, அழிக்கப் பிறந்தவன் புத்தகத்தில் வேறு எந்தப் பெருமையுமே எனக்கில்லை. எல்லாவற்றையுமே நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். உலகநாதன் நாவலை வாசித்ததோடு மட்டுமில்லாமல், வெளிவருவதற்கு முன்பே விமர்சனமும் எழுதிவிட்டார்.

’உ’ பதிப்பக நூல்களின் விற்பனை உரிமையை டிஸ்கவரி புக் பேலஸ் எடுத்திருக்கிறது. எனவே ‘அழிக்கப் பிறந்தவன்’ டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும். சென்னை புத்தகக் காட்சியிலும் டிஸ்கவரி ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். விலை, பக்கங்கள் உள்ளிட்ட எந்த விவரமும் இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. இணையத்திலும் விற்பனைக்கு கிடைக்குமென நினைக்கிறேன். நாளை ‘புத்தக வெளியீடு’ அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியமென்று யாரும் ஈஸியாக அவதூறு செய்துவிட முடியாத மொழிநடையிலேயே எழுதியிருக்கிறேன். ஒரு கதையை எழுத என்னென்ன மலினமான யுக்திகளை கடைப்பிடிக்க முடியுமோ அத்தனையையும் கடைப்பிடித்திருக்கிறேன். இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அழிக்கப் பிறந்தவனுக்கு என்னால் தர முடிந்த உத்தரவாதம் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை நூறு சதவிகித சுவாரஸ்யம் மட்டுமே.

பாரா, பைத்தியக்காரன், தோழர் அதிஷா (நாவலின் ஒரு அத்தியாயத்தை இவர் எழுதியிருக்கிறார்) ஆகியோருக்கும், நூலை வெளியிடும் உலகநாதன் மற்றும் கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் ஆகிய நண்பர்களுக்கும் நன்றி!

2 ஜனவரி, 2012

போட்டுத் தாக்கு!

‘நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை’ என்கிற இந்த இரண்டு நேரெதிர் மதிப்பீடுகளில் நமக்கு நம்பிக்கை எதுவும் கிடையாது. இந்த ‘நல்ல, கெட்ட’ விஷயங்களை யார் வரையறுக்கிறார்கள் என்பது தெரியாதது முதல் காரணம். ‘கெட்ட வார்த்தை’ என்று சொல்லப்படும் வார்த்தைகள் நமக்கு இயல்பானவை என்பது இரண்டாம் காரணம். ஒரு காலத்தில் ‘ஓத்தா’ இல்லாமல் எந்த விவாதமுமே சாத்தியமில்லை என்கிற காலக்கட்டமும் இருந்தது. இனிஷியல் மாதிரி எந்த வாக்கியத்துக்கும் முன்பாக ‘ஓத்தா’ போடுவது ஒரு நோயாகவே இருந்தது. குடும்பத்தினரிடம் பேசும்போதுகூட ‘ஓத்தா’ போட்டுப் பேசி பேஜாராக்கியிருக்கிறேன். கொஞ்சம் டீசண்டான கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்தபிறகு, அங்கிருந்த பீட்டர்களோடும், ஸ்டெல்லாக்களோடும் பேசும்போது இந்த ஓத்தா வந்துவிடுமோவென மிக கவனமாகத் தவிர்த்து, இப்போது பேசும் இந்த அடாசு மொழிநடைக்கு வந்துத் தொலைத்திருக்கிறேன். ஆனால் பீட்டர்களோடு இஷ்டத்துக்கும் ‘பஃக்’கலாம் என்பது வேறு விஷயம். ‘ஓத்தா’ மாதிரி சொற்களுக்கு விபரீதமான அர்த்தம் உண்டென்றாலும், இம்மாதிரி இயல்பாக பேசும்போது வரும் கெட்டச் சொற்களுக்கு நேரடி அர்த்தம் எதுவும் கிடையாது என்பதுதான் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. படவா, ராஸ்கோலு, திருட்டுப்பையா மாதிரியான சொற்களால் கொஞ்சுவது மாதிரி, தன் குழந்தையை ‘தெவ்டியா பையா/தெவ்டியா’ என்று கொஞ்சும் அப்பாக்களை கூட சென்னையில் பார்க்க முடியும்.

சரி, இந்த வார்த்தைகளை சமூகம் எப்படியோ ‘கெட்ட’’ வார்த்தைகள் என்று கண்டறிந்து, இவற்றை உச்சரிப்பவனை கெட்டவன்(!) என்று மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுத் தொலைத்துவிடுவோம். மாண்புமிகு சமூகம் ‘நல்ல’ வார்த்தைகள் என்று கருதும் சில வார்த்தைகள்கூட எப்படி ஆபாச/கெட்ட நோக்கத்துக்கு மாறியது என்பது குறித்த ஒரு வெளிச்சத்தை எதிர்நோக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உதாரணத்துக்கு ‘போடுவது’. கண்ணாடியை கீழே போட்டு உடைத்தான். நாடகத்தின் ராஜா வேஷம் போட்டான். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வெறிதாங்காமல் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். இப்படி ஏராளமான வாக்கியங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் நாம் போடுபோடுவென இந்தச் சொல்லை போடலாம். ஆனால் சாமானிய சமூகத்தில் ‘போடுவது’ என்பது பாலியல் உறவினை குறிப்பதாக எப்படி மாறியது என்று தெரியவில்லை. ’அவன்தான் அவளைப் போடுறானாமே?’ என்று சர்வசாதாரணமாக க்ளிண்டன் –மோனிகா விவகாரம் மாதிரி ஏதோ கிசுகிசுவை நம் காதில் யாரோ போட்டுவிட்டுச் செல்லும்போது எவ்வளவு மோசமான அர்த்தத்தை தருகிறது?

“கவலையே படாதீங்க. ரெண்டு நாளுலே நானே போட்டுர்றேன்“ என்று கடந்துப்போகும் யாரோ ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டுச் செல்ல, ‘பக்’கென்று ஆகிறது. கெட்டப் பொருளைத் தரும் இந்த நல்ல வார்த்தைகளின் பிரச்சினையே இதுதான். சமயசந்தர்ப்பம் புரியாமல் ஏதாவது கெட்ட அர்த்தத்தை தந்துத் தொலைக்கும். இந்தப் ‘போடு’, எந்தப் ‘போடு’ என்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

‘போடுவது’ என்பதாவது வினைச்சொல். நல்ல பெயர்ச்சொற்களும் கூட இந்த ஆபாச உருமாறுதலுக்கு தவறுவதில்லை. சாமான், சொம்பு மாதிரியான சொற்கள் பயன்படுத்தப்படுவது பாலுறுப்புகளை குறிப்பிடுவதற்காக. மளிகைக் கடைக்குப் போய் சாமான் லிஸ்ட்டு கொடுக்கும்போது இதனால் சிறு உறுத்தல் ஏற்படுகிறது. அதையடுத்து சாமானை ஏத்தியாச்சி, சாமானை எறக்கியாச்சி என்று தொடர்வினைகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் தரும் மன உளைச்சல்களுக்கு அளவேயில்லை.

காமவெறி புத்தகங்களில் முயல், பாம்பு மாதிரியான உயிரினங்களை கூட காமகொடூர எழுத்தாளர்கள் விட்டு வைப்பதில்லை. அவற்றை அவர்கள் உவமானமாகப் பயன்படுத்தும் இடங்கள் படு கொச்சையானவை. அடப்பாவிகளா.. பாம்பையே நல்ல பாம்பு என்கிறார்கள். அதைக்கூட ‘கெட்ட’ அர்த்தத்துக்கு உபயோகித்துக் கொள்கிறார்களே? பாம்பை விடுங்கள். அது வாழும் புற்றைக்கூட ஆபாசக்’குறி’யாக்கி விட்டார்களே இந்த காமவெறியர்கள்?

மாங்காய், வாழைக்காய், கேரட் என்று காய்கறிகள் படும்பாடு அநியாயம். எலுமிச்சைப் பழத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. நல்லவேளையாக பூசணிக்காய், தர்ப்பூசணியெல்லாம் அளவில் பெரியதாக இருப்பதால் தப்பியது. புடலங்காய்க்கு எப்படி ஆபாச நிழல் விழுகிறது என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

மாமா என்கிற அற்புதமான உறவையே கொச்சைப்படுத்துகிறது இந்த ஆபாசக் கலாச்சாரம். தாய்மாமன் என்கிற உறவின் அருமை பெருமைகளை நாம் பாசமலர் மற்றும் கிழக்குச் சீமையிலே ஆகிய திரைப்படங்களைப் பார்த்து உணர்ந்திருக்கிறோம். ஆனால் இன்று ‘மாமா’ என்கிற சொல்லே கூட்டிக் கொடுப்பவர் என்கிற அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. பாருங்கள். பேசிக்கொண்டேப் போகிறோம், எவ்வளவு ‘நல்ல வார்த்தைகள்’ கெட்ட அர்த்தத்தில் வருகின்றன? கூட்டிக் கொடுப்பது, அதாவது ஏற்கனவே கொடுத்த தொகையிலிருந்து அதிகமாக்கிக் கொடுப்பது என்கிற நல்ல விஷயம் கூட எப்படி திரிகிறது பாருங்கள். ‘சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுங்க’ என்று எங்கேயாவது கேட்டோமானால், அது எப்படிப்பட்ட பொருளைத் தரும்?

இப்படியே எழுதிக்கொண்டே போனால் ‘நல்ல’ வார்த்தைகளில் எவ்வளவு ‘கெட்ட’ அர்த்தங்கள் இருக்குமென ஒரு புத்தகமே ‘போடலாம்’. ஆனால் அளவில் ‘சிறிய’’ கட்டுரைகளைதான் இணைய வாசகர்கள் விரும்புகிறார்கள். அதுதான் அவர்களை ‘எழுச்சி’ பெறச் செய்கிறது என்பதாலும், இப்பிரச்சினை குறித்த விவாதத்தை தொடங்கும் புள்ளியாக இந்த கட்டுரையை ‘போட்டு’ வைக்கிறேன்.

இருந்தாலும் மனம் ஆற மாட்டேன் என்கிறது. தமிழர்கள் மங்கல நிகழ்வுகளாக இருந்தாலும் சரி. அமங்கல நிகழ்வுகளாக இருந்தாலும் சரி. விளக்குக்கு முதன்மையான இடத்தை தங்கள் அன்றாட வாழ்வில் சங்கக் காலத்தில் இருந்து தந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ‘விளக்கு’ கூட கொச்சையானப் பொருளில் இந்நூற்றாண்டில் இருந்து புரிந்துக்கொள்ளப் படுகிறது. ‘விளக்கு புடிப்பது’ என்கிற சொல் ‘மாமா’க்களைதான் குறிக்கிறது என்றாலும், மின்தடை காரணமாக வேறு வழியின்றி, இரவுகளில் நாம் கூட கையில் விளக்கைப் பிடித்தாக வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் மாலை ஆறு மணி ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் “விளக்கேத்தியாச்சா?” என்கிற குரல் ஒலிக்கும். இனி இம்மாதிரி யாரேனும் சொன்னால், அது எப்படி புரிந்துக்கொள்ளப்படும் என்கிற சமூகக்கவலை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமான கவலை ஒன்று உண்டு. இலக்கியவாதிகளுக்கு ‘விளக்கு விருது’ என்று ஒன்று தருகிறார்கள். வேறு ஏதாவது பெயரில் விருது கொடுத்துத் தொலைக்கக் கூடாதா? அந்த விருதை கையில் பிடித்திருக்கும் இலக்கியவாதியை ஊரென்ன பேசும்... இந்தப் பெயரிலான விருதை வாங்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு உடலும், மனமும் கூசுமே?

இந்த வலைத்தளத்தை ‘வாசிப்பவர்களுக்கு’ (இந்தச் சொல் கூட ஆபாச அர்த்தம் தந்து தொலைக்கிறதே) புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த ஆண்டு புத்தாண்டுப் பதிவு : சரோஜா தேவி!

31 டிசம்பர், 2011

சோழிகள் - குறுநாவல் விமர்சனம்!

"சிரித்தபடி சிதறின சோழிகள்" இவ்வளவு எளிமையான ஒரு அறிமுகத்தோடு கூடிய ஒரு கதையை வாசித்ததாக நினைவேயில்லை.

ரேகை ஜோசியம் பார்த்திருக்கிறேன். கிளி ஜோசியம் பார்த்திருக்கிறேன். எலி ஜோசியம் பார்த்திருக்கிறேன். ஏன் கொஞ்சநாட்களுக்கு முன்பாக ஆக்டோபஸ் ஜோசியம் கூட பார்த்திருக்கிறேன். சோழிகளை உருட்டி ஆரூடம் சொல்லுவது எனக்கு புதிது. நாவலுக்கான காலம் ஐம்பதுகள் என்பதால், அப்போது ஒருவேளை இம்முறை பரவலாக இருந்திருக்கலாம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் வார்த்தைகளை கொண்ட இந்த நெடுங்கதையில் மொத்தமே ஐந்தே ஐந்து பாத்திரங்கள். இவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களும் ரொம்ப குறைவு என்பதால், மீதி இடங்களை எழுத்தாளரே எடுத்துக்கொண்டு பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம். சலசலவென்று ஓயாமல் ஓடைபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மனித வாழ்வு தொடர்பான எதிர்மறை நியதிகளை விசாரிக்கும் நேர்மறை சிந்தனைகள். கொஞ்சம் நவீனமாகச் சொல்லவேண்டுமானால், 'பார்ப்பனத் தமிழில் புரட்சிவாதம்' என்றுகூட சோழிகளை சொல்லலாம்.

திருவல்லிக்கேணி கதைக்கான களம். அறுபதைக் கடந்த ராயர் நாயகன். ஜோசியம் முழுநேரத் தொழிலல்ல என்றாலும், கேட்பவர்களுக்கு சோழிகளை உருட்டித் துல்லியமாக சொல்கிறார். வாழ்வின் இறுதிக்காலத்தை மற்றவர்களுக்கு உதவி நிம்மதியாக வாழநினைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர். திருவல்லிக்கேணி இடையர்களுக்கு அடிக்கடி மாடு தொலைந்துபோவது பெரியப் பிரச்சினை. ராயரிடம் ஆரூடம் கேட்பார்கள். "மந்தவெளி காடுதாண்டி நடைபோடுது. சாயரக்‌ஷைக்குள்ளே பிடிச்சாந்துடு. கோபதாபத்துலக் குச்சிய வீசிடப் படாது. வாயில்லா ஜீவனை அடிக்கறதுக்கான ஆயுதமில்லையே இதுசும்மா அதட்டதான் புரியறதோ" - பெரும்பாலும் இதுதான் ராயரின் ஜோசியம்.

ஒருநாள் சூர்யஸ்தமனத்துக்குப் பிறகு கைக்குழந்தையோடு ஒரு பெண் வருகிறாள். வெள்ளிக்கிழமை கார்த்தாலே வேலைக்குப் போன ஆத்துக்காரர் ரெண்டு நாளா வீடு திரும்பலை. "ஆரூடம் பார்க்கோணும் ஸாமி" எப்படி கேட்கக்கூடாதோ அப்படிக் கேட்கிறாள். ராகவேந்திரசாமிகள் மீது பாரத்தை போட்டுவிட்டு சோழிகளை உருட்டுகிறார் ராயர். அவராலேயே நம்பமுடியவில்லை. உருண்ட சோழிகள் உண்மையை சொல்கிறது. இதுவரை இப்படியொரு ஆரூடம் சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்ததில்லை. ஒருவேளை சோழிகள் பொய் சொல்கிறதோ?

மீண்டும் உருட்டுகிறார். மீண்டும் அதே பதில். இவர் கேட்க கேட்க சோழிகள் எந்த உணர்வுமில்லாமல் சொன்ன பதிலையே திரும்ப சொல்கிறது. சோழிகள் அஃறிணை. உணர்ச்சியோ நெகிழ்ச்சியோ கிடையாது. ராயர் மனிதர் ஆயிற்றே? அந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்வார்? குழந்தைக்கு ஒன்று, ஒன்றரை வயதுதான் இருக்கும். "என்னமோ தெரியல. கணக்கு தப்பாவே வந்துண்டிருக்கு. செத்த ஸ்ரமம் பாக்காம காத்தால வர முடியுமாம்மா" என்று சமாதானம் சொல்லி அனுப்புகிறார்.

அந்த கிருஷ்ணபட்சத்து இரவு ராயருக்கு தூங்கா இரவு. அவரது பத்தினி சுலோசனா பாய் தனது பர்த்தாவை இந்தக் கோலத்தில் கண்டதேயில்லை. கடவுளோடு மனதில் பேசுகிறார். அல்ப மனித வாழ்வு குறித்த ஆத்ம விசாரம். தர்ம நியாயம். காற்றில் வெறுமனே கத்தி சுத்தி களைப்படைகிறார். இவ்வளவுதானா மனிதவாழ்வு? காலையில் அந்தப் பெண் வந்துவிடுவாள். மகள் வயதில் இருப்பவளிடம் என்ன பதில் சொல்வது? சோழிகள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடலாமா? நல்ல ஆரூடம் சொல்வேன் என்று என்னை நம்பி வந்தவளை நானே ஏமாற்றலாமா?

இப்படியாகப் போகிறது கதை. கடைசியில் "நதி எதுவாய் இருந்தாலும் சங்கமித்தாக வேண்டிய இடம்தானே கடல்" என்ற யதார்த்த வரியோடு முடிகிறது.

விமலாதித்த மாமல்லன் எடுத்தாண்டிருக்கும் பார்ப்பன மொழி மிக மிக அழகானது. தூர்தர்ஷன் நாடகங்களிலும், தமிழ் சினிமாவிலும் நாம் கண்ட, கேட்ட மொழியல்ல இது. நாவல் முழுக்கவே இம்மொழியாளுகை மிகச்சிறப்பாக எழுத்தாளருக்கு கைவந்திருக்கிறது. ஆனாலும் ஒரு நறுக்கென்ற சிறுகதைக்கான புள்ளியை குறுநாவலாக - வேறு சில சம்பவங்களை புத்திசாலித்தனமாக கோர்த்திருந்தாலும் - நீளமாக இழுத்திருப்பதால், இடையில் மெகாசீரியல் அலுப்பு வாசகனுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கதையின் தொடக்கத்தில் பார்த்தசாரதி கோயில் பட்டரோடு ராயர் பேசும் சமூக விவாதம் இக்கதையின் ஹைலைட் என்று எடுத்துக் கொள்ளலாம், அது கதைக்கு சம்பந்தமற்ற, இடைச்செருகலான நிகழ்ச்சி என்றபோதிலும்.

"பிராம்மண குலத்தையே வாய்க்கு வந்தபடி தூஷிக்கிற துடைப்பக்கட்டைப் பயல்களுக்கெல்லாம் சோழி உருட்டி ஜோசியம் சொல்றீரே சொரணை இல்லையோ உமக்கு" - பட்டர்.

ராயர் சிரிக்கிறார்.


"நேக்கு வயத்தப் பத்திண்டு வரதுக்கு சிரிப்பா இருக்காங்காணும்"

"படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்னு இருக்கறவாளைப் பாத்து சிரிக்காம வேற எண்ணப் பண்ணச் சொல்றேள்"

"நாத்தழும்பேற நாஸ்திகவாதம் பேசற நாய்களைப் போய் சப்போர்ட் பண்றீரே நியாயமாய்ப் பட்றதா உமக்கு"

ராயர் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கிறார். பூணூல் போட்டிருந்தா பார்ப்பானா? போட்டவாளுக்குப் பொறந்துட்டா பார்ப்பானா? எத்தனை பேரு வேளை தவறாம சந்தி பண்றான்? எத்தனை பேரு அர்த்தம் புரிஞ்சி காயத்ரி சொல்றான்? முக்காலே மூணு வீசம் பேருக்கு முதுகு சொறியத்தான் பூணூல் உபயோகப்பட்டுண்டிருக்கு என்று பிராமண நிந்தனை செய்கிறார்.

"க்ருஷ்ண. க்ருஷ்ண" என்று தலையில் அடித்துக் கொள்ளும் பட்டர், "என்னங்காணும் நீர். நாயக்கரை (பெரியாரை) தோக்கடிச்சிடுவீர் போலிருக்கே? உம்ம பூணூலை கழட்டிப் போட்டுற வேண்டியதுதானே?" என்று சொல்லிவிட்டு பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறார்.

டீடெய்லிங் கொடுப்பதில் விமலாதித்த மாமல்லன் கிங். கதாபாத்திரங்களுக்கான விவரணை ஆகட்டும், போலவே சம்பவங்களுக்கான விவரணை ஆகட்டும். மிக சுவாரஸ்யமாக, விஸ்தாரமாக - திண்ணையில் அமர்ந்து வெத்தலைப்பெட்டி செல்லத்தை திறந்து இலையின் காம்பை ஒடித்து, விரலில் சுண்ணாம்பு சுரண்டி இலையின் பின்பக்கத்தில் அளவுப் பார்த்து தடவி, ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு சேர்த்து, சொகுசாக வெத்தலைப்போடும் லாவகம் அவரது எழுத்துகளில் மிளிர்கிறது.

1994ல் எழுதப்பட்ட இந்த குறுநாவல் 1996ல் மாலைக்கதிர் இதழில் வெளிவந்திருக்கிறது. இருபது வயதுகளிலேயே தீவிர இலக்கியத்தில் முத்துக்குளித்து, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கவனிக்கப்பட்ட இவர் அடிக்கடி வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவரின் பதினாறு ஆண்டுகால வனவாசத்தை அகநாழிகை இலக்கிய இதழ் முடித்து வைத்திருக்கிறது. 'சோழிகள்' குறுநாவல் செப்டம்பர் - நவம்பர் 2010 தேதியிட்ட அகநாழிகை இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இவரின் கும்பகர்ண இலக்கியத் தூக்கத்தை நீர் தெளித்து எழுப்பியிருக்கிறார் அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன். இதன் மூலமாக அடுத்த இலக்கிய இன்னிங்சை துவக்குவதற்கான வாய்ப்பு விமலாதித்த மாமல்லனுக்கு வாய்த்திருக்கிறது. இச்சூழலில் இது ஒரு முக்கியமான இலக்கிய நடவடிக்கையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

இடைப்பட்ட காலத்தில் ஒன் டே மாட்சுகள் மட்டுமின்றி, டி20 மாட்சுகளும் பிரபலமாகி விட்டது மாமல்லன் சார். இதையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு விளையாடுங்க. உங்க அடுத்த இன்னிங்ஸுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!


விமலாதித்த மாமல்லன் கதைகள் - கடந்தாண்டு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதிய மொத்த முப்பது கதைகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. விலை ரூ.180. பக்கங்கள் : 312

சில இணைப்புகள் :


30 டிசம்பர், 2011

காசி


இரண்டு நாட்களாக காசியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.

ஏனெனில் போனவருஷம் இதே மாதத்தில் தான் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.

அவனுக்கு இலக்கியம் தெரியும். கதை கவிதை எழுதுவான். காதலிக்க தெரியும். வியாபாரம் தெரியும். எல்லாமே தெரியும். Jack of all. Master of none.

சிகரெட்டும், மாஸ்டர்பேஷனும் அவனால் விடமுடியாத சங்கதிகள். நிக்கோடினைப் பொறுத்தவரைக்கும் பால்வராத காம்பை உறிஞ்சுவதை மாதிரி இருக்கிறது என்கிறான். மாஸ்டர்பேஷன் கொஞ்சம் மோசம். தலையணையை அணைச்சுக்கிட்டு.. தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகள நினைவில் அடைச்சிக்கிட்டு...

திடீரென்று தத்துவம் மாதிரி ஏதோ பேசுகிறான். “தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்.. எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்குற மாதிரி.. சில சமயம் எனக்குள்ளே இருக்குற ‘நான்’தான் நிஜம் - இந்த வெளியிலே ‘நான்’ சூட்சுமம்னு பயமா தோணுதுடா...” அவன் தமிழில்தான் பேசுகிறான். இருந்தாலும் உணர்ச்சிவயப்பட்டு வாயை கோணலாக்கி அவன் ஆவேசமாக பேசும் மொழி புரிந்தும் புரியாததுமாக படுத்துகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மிக அதிக மார்க்குகள் வாங்கினானாம். 76ல் காலேஜ் விட்டு வந்தபோது இரண்டு பேப்பர்கள் ஃபெயிலாம். என்.டீ.சி. மில்லில் வேலை பார்த்தான். ஆறு மாசம். மனக்குமட்டல், மனநலத்திற்கு சிகிச்சை..

“எனக்கு எந்த ஜாப்புமே ஒத்து வரலைடா.. எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலை. தினம் தினம் ஒரே நேரத்தில் அதைச் செய்யறது, செயற்கையா ‘டாண்’னு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, ‘கன்’ டயத்துக்கு குளியல்.. தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.. இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே.. அதிகாரி உருட்டல்.. ஓவர் டைம்.. அப்பா!”

ஒரு கட்டத்தில் மனநோயாளி போல நடித்துக் கொண்டிருந்த காசிக்கு நிஜமாகவே மனநோய் தாக்கியிருக்கக் கூடும். “ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான் பைத்தியமில்லை. அவ்வளவுதான்!” என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித் திரிந்தான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும் அடிப்பதாக மனப்பிரமையில் பரிதவித்துப் போனான்.

பெரியப்பாவின் பேத்தியை கல்யாணத்துக்கு கேட்டான். “பைத்தியக்காரப் பயல் பெண் கேட்க என்ன தைரியம்?” என்று துரத்தி விட்டார்கள். தேங்காய் பருப்பியை கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில் டிக்-20ஐ காலி செய்தான். நாய்பீயை வாயில் கரைத்து ஊற்றி காப்பாற்றினார்கள். மீண்டும் மனநல மருத்துவம். மாத்திரைகள்.

அவனை ஒரு சாமியாரிடம் அழைத்துப் போனான் அவனுடைய நண்பன் குணா. “நாலு பேரு மாதிரி லைஃபிலே செட்டில் ஆவணும்கிறே ஆசையே அத்துப்போச்சி சாமி இவனுக்கு?”

“கடவுள் நம்பிக்கை உண்டா?” சாமி கேட்டாராம்.

“இல்லே சாமி. ஆனா ‘கடவுள்’னு ஒருத்தர் இருந்துட்டா கூட பரவாயில்லைன்னு படுது” காசி சொன்னானாம்.

தொடர்ச்சியாக காசியை சில நாட்கள் சாமியார் கண்காணித்திருக்கிறார். கடைசியில் தீர்வும் சொல்லியிருக்கிறார். “காசி உனக்கு செக்ஸ்தான் பிரச்சினை… யூ ஹாவ் டூ செக்ஸ் வித் ஹெர்” - சிஷ்யையை கை காட்டியிருக்கிறார். ரம்பை என்ற பெயருடைய அந்த சிஷ்யை, நம்ம காசிக்கு தங்கை மாதிரி தெரிந்திருக்கிறாள். தங்கையோடு புணர்ச்சியா? நோ வே.

எப்படியோ அவனுக்கு கல்யாணம் ஆனது. ஏற்கனவே திருமணம் ஆகி ‘டைவோர்ஸ்’ ஆன பெண். முதல் கணவனை ‘இம்பொட்டண்ட்’ என்று கூறி தாலியை வீசி எறிந்துவிட்டு வந்த பெண். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கச் சொல்லி மாமனார் வற்புறுத்தியிருக்கிறார். கதை, கவிதையெல்லாம் கட்டி எடைக்கு போடுங்க என்பது மாமனாரின் அன்பான அதிகார அட்வைஸ். ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்க்ரீம் பார், சினிமா, ரிலீஸ் ஆகாத தமிழ்ப்பட பாட்டு.. காசியின் மனைவியுடைய அன்றாட உலகம் இது.

தெனாலி கமல் மாதிரி மீண்டும் புலம்பினான் காசி. “ஒத்தயா பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னாலே முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சிடா. அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணிக்குவேன்”
இந்த காலக்கட்டத்தில் காசியிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. “காசுதான் சுதந்திரம், காசுதான் சுதந்திரம்” என்று ஒரு இன்லேண்டு லெட்டர் முழுக்க ஸ்ரீராமஜெயம் மாதிரி எழுதியிருந்தான்.

இப்படிப்பட்ட காசியோடுதான் இரண்டு நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சதா சர்வநொடியும் நிழலாய் தொடர்கிறான். கூடவே ஒருவன் இருப்பது அந்தரங்க விஷயங்களுக்கு அச்சுறுத்தல் என்றாலும், அவனை தனியாக இருக்க வைக்க மனம் ஒப்பவில்லை.
காசியை ஒரு தறுதலை என்று ஒரு வார்த்தையில் நீங்கள் புறக்கணித்துவிட்டு போய்விட முடியும். ம்ஹூம். என்னால் முடியவில்லை. அவன் வாழ்க்கையை இயல்பாகவே அவன் வாழ்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு பெரிய மூட்டை.

சுலபமாக சுமப்பதாக நாமெல்லாம் பாவனை செய்துகொண்டு, வெளியில் சிரித்து, உள்ளுக்குள் அழுது, வாழ்நாள் முழுக்க துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காசி இப்படியில்லை அல்லவா?
அதுசரி. காசி இப்போது என்ன ஆனான் என்று கேட்கிறீர்களா? அவனும் பாவனை செய்ய கற்றுக் கொண்டான். எப்படி? எதனால்? என்று ‘எ, ஏ’வில் தொடங்கும் நூறு கேள்விகள் உங்கள் மனதுக்குள் எழும்பலாம்.

நான் ஒரு ‘ஆஃபர்’ கொடுக்கிறேன். நீங்களும் என்னைப்போல சில நாட்கள் காசியோடு வாழலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது...

நூல் : மீனுக்குள் கடல் (சிறுகதைகள், கவிதைகள்)
ஆசிரியர் : பாதசாரி
பதிப்பகம் : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
விலை : ரூ.15

இந்த நூலை கட்டாயம் வாங்கிப் படியுங்கள். நான் வாசித்த சிறுகதைகளில் (குறுநாவல் என்றும் சொல்லலாம். எட்டு பாயிண்ட் சைஸில் பத்தொன்பது பக்கங்கள்) மிகச்சிறந்த சிறுகதையாக பாதசாரி எழுதிய ‘காசி’யை சொல்லலாம். நீங்களும் வாசித்துப் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கும் இதே உணர்வு தோன்றக்கூடும்.

இலக்கியம் என்பது படைப்பாக்கம் மற்றும் வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் வாசித்த சிறந்த இலக்கியத்தை மற்றவர்களுக்கு பகிர்வது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். காசியை எனக்கு பைத்தியக்காரன் பகிர்ந்தார். நான் மற்றவர்களுக்கும் பகிர்கிறேன்.

குறிப்பு : 80களில் எழுதத் தொடங்கிய பாதசாரி இதுவரை இரண்டே இரண்டு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். எழுத்தின் தரம் என்பது குவாண்டிட்டியில் அல்ல. குவாலிட்டியில் என்று பிடரியில் அடித்தது போல புரியவைக்கிறார் பாதசாரி.