7 பிப்ரவரி, 2012

கதிரேசன் செட்டியாரின் காதல்

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அழகான வடிவமைப்பு கொண்டவை என்கிற ஒரே காரணத்துக்காகவே சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று மா.கிருஷ்ணன் எழுதிய ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’. அவரே வரைந்த முகப்பு ஓவியத்தோடு, கவர்ச்சிகரமான தலைப்போடு.. அதேநேரம் மனதை மயக்கக்கூடிய vintage feelingஐ உருவாக்கியது இந்த நூலின் அட்டைப்படம். அட்டையிலேயே subcaption ஆக ‘ஒரு துப்பறியும் நவீனம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழையநூல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் என்கிற எண்ணத்தோடு, வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்றியே புரட்டினேன்.

இந்நூலின் அட்டையை வடிவமைத்த சந்தோஷ் தற்போது உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிரபல பதிப்பகங்களின் பெரும்பாலான நூல்களின் மேலட்டையை அலங்கரித்து வருகிறார். ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ நூலில் உள்ளே இடம்பெற்ற படங்களை மிக சுமாரான தரத்தோடு இவர்தான் வரைந்திருக்கிறார். என்னை மாதிரியே சந்தோஷும் இது நாற்பதுகளிலோ, ஐம்பதுகளிலோ நடைபெறும் கதையென்று நினைத்து வரைந்திருப்பார் போல. போலிஸ்காரர்கள் டவுசர் அணிந்திருக்கிறார்கள்.

மாறாக இது 1989ல் நடக்கும் கதையென்று நாவலின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1995ல் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது நூலாசிரியரின் வயது 83. அடுத்த ஆண்டே காலமாகிறார். அதே ஆண்டுதான் இந்நூலும் முதல் பதிப்பு பெறுகிறது. உலகளவில் பிரபலமான சூழலியலாளரான மா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. 1970லேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர் இவர். எனக்கென்னவோ நாவலை விட இந்த பின்னுரை ஏகத்துக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கதிரேசன் செட்டியாரின் வீட்டு வேலைக்காரன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது. நேரடியாக கதைக்குள் இறங்கிவிடும் ஆசிரியர், அடுத்தடுத்து ஏராளமான பாத்திரங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி நிதானமாக டெஸ்ட் மேட்ச் ஆடியிருக்கிறார். விறுவிறுப்பான நடையிலேயே துப்பறியும் நாவல்களை வாசித்து பழகிய நமக்கு இது ஒரு புதுவித அனுபவம்தான்.

ஒரு கொலை மட்டுமே முழுநீள நாவலுக்கு போதுமான சரக்கில்லை என்பதை நாவல் எழுத முயற்சிப்பவர்கள், எழுதியவர்கள் அறிந்திருப்பார்கள். மா.கிருஷ்ணனும் எழுதத் தொடங்கும்போது உணர்ந்திருப்பார். எனவே ஊரில் நடைபெற்ற ஒரு கோயில் கொள்ளையையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். விவேக், நரேன், கணேஷ்-வசந்த் என்று ஆக்‌ஷன் ஹீரோக்களையே பெரியளவில் வாசித்த நமக்கு இந்நூலில் ஆற, அமர விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகள் ‘திக்கை’யாக தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை.

நூலின் மிகப்பெரிய பலம் மா.கிருஷ்ணனின் மொழி. இவ்வளவு வசீகரமான மொழியை சமீபத்தில் நான் வாசித்ததேயில்லை. விசாரணை அதிகாரியான முகைதீன் என்கிற பாய் கூட ‘அவா ஊதுனா, இவா வருவா’ ஸ்டைலில் பிராமண பாஷைதான் பேசுகிறார். இந்த மாதிரி ‘லாஜிக்’கெல்லாம் பெரிய பொருட்டல்ல என்று நினைக்கக்கூடிய வாசிப்பின்பப் பிரியர்களுக்கு இந்நூல் சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் சைட் டிஷ்ஷாக கொண்ட மட்டன் பிரியாணி விருந்து.

ஏகத்துக்கும் கேரக்டர்களை அறிமுகப்படுத்திவிட்டு ஆசிரியர் திணறுவதாக சில இடங்களில் தோன்றுகிறது. முடிச்சு மேல் முடிச்சு போட்டுவிட்டு அவிழ்ப்பது என்பதுதான் க்ரைம் தில்லர்களின் அடிப்படையே. மாறாக எங்கே முடிச்சுப் போட்டோம், அதை எங்கே அவிழ்க்கப் போகிறோம் என்கிற திட்டமிடல் க்ரைம் நாவல்களை எழுதுபவர்களுக்கு அவசியம். மசலா கதைகளுக்கு லாஜிக் பார்ப்பது பாவம்தானென்றாலும், 89ல் மதுரைக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுநகர காவல்நிலையத்தில் போன் கூட இருக்காதா என்றெல்லாம் எடக்குமடக்காக யோசிக்கத் தோன்றுகிறது. இந்நாவலை மட்டும் லாஜிக் லபக்குதாஸூகளான விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வாசித்தால், கிழித்து தோரணம் மாட்டி, வூடு கட்டி குத்தாட்டம் போடுவார்.

இருபத்தாறு அத்தியாயங்கள் வரை சாவகாசமாக வெத்தலைப்போட்டு அன்னநடை நடந்துக் கொண்டிருந்த நாவலாசிரியர் திடீரென முடிக்கும் பொருட்டு சஸ்பென்ஸை மொக்கையாக கட்டுடைக்கிறார். அதன் பிறகு திடீரென கதைக்கும், கதையின் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருப்பார். நாவலின் கடைசி மூன்று பாராகிராப்புகளில் அட்டகாசமாக சம்பந்தப்படுத்தி முடிக்கிறார். இந்த ‘யூ’ டர்ன்தான் இந்நாவலை ஒரு கலைப்படைப்பாக மனதுக்குள் நிறுத்துகிறது. இதுவரை வாசித்த கதையின் பரிமாணத்தை அப்படியே ஒட்டுமொத்தமாக வேறு பரிமாணத்துக்கு அள்ளிச் செல்லுகிறது. இந்த புதிய பரிமாணத்தில் மீண்டும் ஒருமுறை உடனே வாசிக்க வைக்கத் தூண்டுகிறது.


நூல் : கதிரேசன் செட்டியாரின் காதல்

ஆசிரியர் : மா.கிருஷ்ணன்

பக்கங்கள் : 244

விலை : ரூ.125/-

வெளியீடு : மதுரை பிரஸ்
60-பி, கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
மின்னஞ்சல் : maduraipress@gmail.com

4 பிப்ரவரி, 2012

தமிழ்ப் பதிப்புத்துறைக்கு நெருக்கடியான காலம்!

வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம் என்ற அறிஞர் அண்ணாவின் வழியில் வந்த கட்சிகள்தான் மாறி, மாறி மாநிலத்தை ஆளுகின்றன. ஆனால் அரசு நூலகங்களுக்கு கூட கடந்த சில ஆண்டுகளாக நூல்களே வாங்குவதில்லை.

தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் கீழ் 4028 நூலகங்கள் இயங்குகின்றன. இந்த நூலகங்களுக்கு எந்த நூல்களை தேர்வு செய்வது என்று ஒரு குழு அமைக்கப்பட்டு வருடா வருடம் நூல்கள் தேர்வு செய்யப்படும். ஆரம்பத்தில் 600 நூல்கள் என்றிருந்த எண்ணிக்கையை 2007ல் இருந்து 1000 என்று உயர்த்தி முந்தைய அரசு ஆணையிட்டது. பதிப்பாளர்களும், வாசகர்களும் இந்த ஆணையால் அடைந்த மகிழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு கூட நீடிக்கவில்லை.

2009ல் இருந்து இன்றுவரை நூலகங்களுக்கு அரசு நூல் வாங்குவதில்லை. புதிய நூல்கள் இடம்பெறாததால், அவற்றை படிக்க விரும்பும் நூலகத்துக்கு வரக்கூடிய வாசகர்கள், வேறு வழியில்லாமல் சொந்தக் காசு போட்டு புதிய நூல்களை வாங்க வேண்டியிருக்கிறது. காசு கொடுத்து நூல்களை வாங்க வசதியில்லாதவர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய நூல்கள் சென்று சேருவது தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மாவட்டங்களில் சொத்துவரியோடு சேர்த்து பத்து சதவிகிதமாய் வசூலிக்கப்படுகிற வரி நூலகவரி. இந்தப் பணம் அந்தந்த மாவட்ட நூலக வளர்ச்சிக்காக மட்டுமே செலவழிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நெ.து.சுந்தரவடிவேலு இருந்தபோது இந்த விதி அமலுக்கு வந்தது. இவ்வகையில் நூலகவளர்ச்சிக்கு கிடைக்கும் தொகையை ஒட்டுமொத்தமாக, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைக்க அரசு பயன்படுத்திக் கொண்டதாலேயே, புதிய நூல்களை வாங்கவும், மற்ற மாவட்ட நூலகங்களை பராமரிக்கவும் தற்போது நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

கருப்பன் சித்தார்த்தன் என்பவர் பொதுநூலகத்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில நூல்களை குறிப்பிட்டு இவையெல்லாம் 2006-10 காலக்கட்டத்தில் எத்தனை பிரதிகள் பொதுநூலகத்துறைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது, விபரங்களை தரமுடியாது என்றும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதில்லை என்கிற பிரச்சினை புத்தகப் பதிப்பாளர்களைதான் அதிகம் பாதிக்கும். இருப்பினும் இவர்கள் சார்பான அமைப்புகள் அவ்வப்போது அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுப்பதோடு தமது கடமையை முடித்துக் கொள்கின்றன. பதிப்பாளர்களும் எதிர்கால நலன் கருதி, இதுகுறித்து வெளிப்படையாக வாய்திறக்க அச்சப்படுகிறார்கள்.

உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன், “தமிழ்ப் பதிப்புத்துறைக்கு கடும் நெருக்கடியான காலம் இது” என்று வருத்தப்படுகிறார்.

“தமிழில் புத்தகங்கள் வெளியிடும் பெரும்பாலான பதிப்பகங்கள் பொது நூலகத்துறையைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. புத்தக விற்பனைக்கான போதுமான சில்லறை விற்பனை மையங்கள் இல்லாத பதிப்பாளர்களுக்கு நூலக ஆணைதான் வாழ்வாதாரம். கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகங்கள் வாங்கப்படாததால், எப்போதும் இல்லாத வகையில் தற்போது புதிய நூல்களை வெளியிட முடியாத அளவுக்கு பதிப்புத்துறை முடங்கிப் போயிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு, இந்த அறிவுசார் துறையை காப்பாற்ற முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறார் மனுஷ்யபுத்திரன்.

தமிழக நூலகங்களில் நூல்கள் வாங்கப்படாதது மட்டும் பிரச்சினையில்லை. நூலகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான அடிப்படைப் பணிகள் கூட நடைபெறுவதில்லை என்பதுதான் சோகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்துறையில் காலியாக இருக்கும் சுமார் ஆயிரம் நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை. இதே காலக்கட்டத்தில் சுமார் எட்டுநூறு பேர் ஓய்வும் பெற்றிருக்கிறார்கள்.

நூலக வரியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் வசூலிக்கப்படும் வரியை நூல்கள் வாங்கவும், நூலகங்களை மேம்படுத்தவும் செலவிட்டாலே போதுமானது. தமிழக அரசு இதற்கான நிதி எதையும் தனியாக ஒதுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பொது நூலகங்கள் அடிப்படை வசதியற்ற நிலையிலேயே இருக்கின்றன. தமிழக அரசு உடனடியாக புதிய நூலக தேர்வுக் குழுவை அமைத்து, கடந்த மூன்றாண்டுகளுக்கான நூல்களை வாங்குவதின் மூலம் பதிப்பாளர்களை நெருக்கடிச் சூழலிலிருந்து காப்பாற்ற முடியும். இது தமிழ் பதிப்பாளர்களின் தொழில் பிரச்சினை மட்டுமல்ல. எண்ணற்ற எழுத்தாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் கூட.

உடனே கவனிக்குமா அரசு?

2 பிப்ரவரி, 2012

இந்த பொழைப்புக்கு…?

இன்று காலை செய்தித்தாளைப் பிரித்ததுமே கடுமையான அதிர்ச்சி. முப்பதாவது நாளிலேயே காற்று வாங்கிக் கொண்டிருந்த ‘வேலாயுதம்’ நூறு நாட்கள் ஓடியதாக ஒரு விளம்பரம்.

சரி, விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள தியேட்டர்களில் நிஜமாகவே இப்படம் ஓடுகிறதாவென்று ஆராய்ந்துப் பார்த்ததில், இது அப்பட்டமான புளுகு என்று தெரியவருகிறது. வேண்டுமானால் இந்த தியேட்டர்களின் இணையத்தளத்துக்கு சென்று நீங்களே வேலாயுதம் ஓடுகிறதா என்று பார்வையிட்டுக் கொள்ளுங்கள். ஒரு தியேட்டரில் கூட ஓடாத ஒரு படத்துக்கு ஏன் நூறாவது நாள் போஸ்டர்.. அதுவும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில்? விஜய்யின் சொந்த தியேட்டர் என்று சொல்லப்படும் ஃபேம் நேஷனலில் கூட வேலாயுதத்தை தூக்கி ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.

ஊத்தி மூடப்பட்டுவிட்ட ஒரு படம் நூறு நாள் ஓடுகிறது என்கிற பில்டப்பை மக்களுக்கு பொய்யாக ஏற்படுத்தி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? கடந்த ஐந்து வருடங்களாக தயாரிப்பாளர்களுக்கு பல நூறு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்திவரும் விஜய்யின் சம்பளத்தை மட்டும் ஒவ்வொரு தோல்விப்படத்துக்குப் பிறகும் சில கோடிகள் ஏற்றுவதைத் தவிர்த்து வேறென்ன சாதனையை இம்மாதிரி விளம்பரங்கள் கொடுத்து செய்யப் போகிறார்கள்?

இம்மாதிரி பொய் விளம்பரம் கொடுத்தவர்களை, மக்களுக்கு தவறான தகவல் கொடுத்ததாக கூறி உள்ளே தள்ளுவதுதான் சட்டப்படி சரியான செயலாக இருக்க முடியும். இந்த விளம்பரத்தைப் பார்த்த கோயிந்தசாமி யாராவது சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு வேலாயுதம் பார்க்கச் சென்று, அதைவிட மொக்கையான ஏழாம் அறிவையோ, தேனி மாவட்டத்தையோ பார்த்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், இந்த பேரிழப்பு யார் ஈடு செய்வது? ஏற்கனவே காவலன் என்கிற படா மொக்கைப் படத்தையும் இப்படித்தான் நூறு நாள் ஓடவைத்தார்கள்.

போதாக்குறைக்கு இப்போது இந்த தோல்விப்பட ஹீரோவின் அப்பாதான் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் கூட. நியாயமாக நன்றாக வசூலிக்க வேண்டிய ‘நண்பன்’, தனது மகனது அநியாய சம்பளத்தால் பெரிய பட்ஜெட்டாக எகிறி, மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தும் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தையாவது திருப்பி எடுக்க தாவூ தீர வைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான், “ஏப்ரல் வரை எந்த பெரிய படமும் வெளியிடப்பட்டு விடக்கூடாது” என்று தன்னுடைய பதவியை தவறாக உபயோகித்து அடாவடியாக ஒரு விதியைப் போடுகிறார். அப்படியாவது ‘நண்பன்’ நூறு நாள் ஓடுமா என்கிற ஆதங்கம்தான் அவருக்கு. அப்படியும் கூட ‘நண்பன்’ ஓடும் தியேட்டர்கள் வாரயிறுதி தவிர்த்து மற்ற நாட்களில் ஈயடித்துக்கொண்டு இருக்கிறது. இதே மாதிரி மோசடிப் போஸ்டர் ஒட்டியாவது நண்பனையும் வெள்ளிவிழா காண வைப்பார்கள் என்பது உறுதி.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நூறு, நூற்றியைம்பது சம்பளம் ஏற்ற வேண்டுமென்றால் ரோஷம் பொத்துக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் இதுமாதிரி லெக் தாதா ஸ்டார்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பதினைந்து கோடி, இருபது கோடியென்று கொட்டியழுவதால்தான் சினிமாத்துறை நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நான்கு கோடி செலவழித்தாலேயே உருப்படியாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும். ஏழு எட்டு கோடிகள் வரை வியாபாரம் செய்யமுடியும் என்பதுதான் யதார்த்தம். மாறாக விஜய் மாதிரி தொடர் தோல்விப்பட ஹீரோக்களுக்கு மட்டுமே இருபது கோடி ரூபாய் கட்டியழுதால், அப்படத்தை இயக்கும் இயக்குனர் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்குக்கும் சில கோடிகளை சாப்பிட, இடி மொத்தமாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகள் மீது விழுகிறது. தம் மேல் விழுந்த பாரத்தை ரசிகர்கள் மீது அவர்கள் சுமத்த... தொடர்ச்சியாக ஸ்டார்களின் மொக்கைப் படங்களை நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிப் பார்த்து ஆப்பு வாங்கிக் கொண்ட ரசிகனோ திருட்டு டிவிடியை ஆதரிக்கத் தொடங்கிவிடுகிறான்.

இளைய தளபதியை ஒப்பிடுகையில் நம் பவர் ஸ்டார் ஆயிரம் மடங்கு தேவலாம். மகாலட்சுமி திரையரங்கில் நேர்மையாக காசு கொடுத்தாவது தன் படத்தை இருநூற்றி ஐம்பது நாள் வரை ஓட்டினார். ஓடாத படம் ஓடுவதாக விஜயை மாதிரி டுபாக்கூர் விளம்பரம் கொடுத்து தனக்கு ‘பில்டப்’ ஏற்றிக்கொள்ளவில்லை.

30 ஜனவரி, 2012

மனிதநேயக் கலைஞன்

இசைஞானி இளையராஜாவைப் பற்றி டிரம்ஸ் கலைஞர் சிவமணி எழுதுகிறார் :

அவரைப் பற்றி எழுத நான் யார்?

இந்தக் கேள்வியை எனக்குள் நானே இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு இசைக்கலைஞன். அவரோ இசைக்கே அரசர். அவரைப் பற்றிக் கட்டுரை எழுதக் கலைஞன் என்ற தகுதி மட்டுமே போதுமா? ராஜா அண்ணனைக் குறித்து யோசிக்கும்போதே பல்வேறு அனுபவங்களும், நிகழ்வுகளுமாக, என் இதயம் புயல் அலையில் ஆடும் ஓடம் போலத் தத்தளிக்கிறது

அவருக்கும் எனக்குமான உறவு என்பது இசையோ, தொழிலோ மட்டுமல்ல என்பதை அழுத்தமாக உணர்கிறேன். அவர் என்னுடைய குரு. என்னை ஆன்மீக வழியில் செலுத்திய சித்தர். கோடி சாமிகள் என்கிற மாபெரும் மகானை நான் அடையக் காரணமாக இருந்தவர். என் வாழ்வின் பாக்கியம் ராஜாவால் வந்தது. அவர் எனக்கு குருநாதர் மட்டுமல்ல. அண்ணனும் கூட.

இளையராஜாவுக்கு அப்போதெல்லாம் டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தவர் நோயல். அவரது வேலை ராஜாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நோயலின் மறைவுக்குப் பிறகே நான் ராஜாவோடு பணியாற்ற ஆரம்பித்தேன். நோயலின் இழப்பை ஈடு செய்யும் வகையில், அவர் பாணியிலேயே நானும் வாசிப்பேன். எனவே, ராஜாவுக்கு என்னுடைய இசையும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை. "பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தைத் தேவர்கள் உண்டார்கள்" என்று படித்திருக்கிறோம். இளையராஜாவோடு பணியாற்றும் போது எனக்கும் அமிர்தம் உண்ட உணர்வு ஏற்படும்.

அவர் ரெக்கார்டிங் செய்யும் அழகைக் காண எத்தனையோ கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது. அவர் வயலின் அரேஞ் செய்த பிறகு பொழியும் இசையைக் கேட்கும்போது, என் கண்களில் கண்ணீர் கொட்டுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. ஏன், இளையராஜாவின் இசை ஜீவனுள்ள இசை என்று சர்வதேச அளவில் இசைமேதைகள் பேசுகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர முடியும். பணக்காரன் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசையை எத்தனை முறை கேட்டுப் பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இசையில் மட்டுமல்ல. நட்புகளை, உறவுகளைப் பேணுவதில் அவர் ராஜாதான். சிவா என்றுதான் என்னை அன்பாக அழைப்பார். வேலை பார்க்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு சீரியஸாக வேலை வாங்குகிறாரோ, அதே சீரியஸ்னஸ்சை மற்ற நேரங்களில் அன்பைப் பொழியும்போதும் காட்டுவார்

’47 நாட்கள்’ என்றொரு படத்திற்கு இசையமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வர அன்று ஏதோ காரணத்தால் தாமதமாகி விட்டது. மதிய நேரம், எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது. ஸ்டுடியோவில் இருந்த ராஜாவின் கம்போசிங் ரூமில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. டேபிளில் வாழை இலை விரிக்கப்பட்டு இருந்தது. 'உட்காரு சிவா! சாப்பிடு!' என்றார். எப்படித்தான் என் பசி அவருக்குத் தெரிந்ததோ? இதனால் தான் அவரை சித்தர் என்கிறேன். ஞானி என்கிறேன். ‘இல்லண்ணே..! எஸ்.பி.பி. வந்துட்டாருன்னா ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆயிடும்' என்று தயங்கினேன். நான் தயங்கியபடியே எஸ்.பி.பி.யும் வந்து விட்டார்.

உடனே ரெக்கார்டிங் ரூமில் இருந்த இஞ்சினியர்கள் இருவரையும் ஃபோன் செய்து அழைத்தார் ராஜா. அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டே இருந்தார்.

“பசியோட வேலை பார்க்கக் கூடாது. இப்போ உன்னாலே ரெக்கார்டிங் லேட்டுன்னு யாரும் சொல்லிட முடியாது. ஏன்னா ரெக்கார்டிங் பண்ண வேண்டிய இஞ்சினியர்கள் கூட நான் பேசிகிட்டு இருந்தேன். அதனால், என்னாலேதான் லேட்டு." என்றார். மனித நேயம் அருகிக் கொண்டிருக்கும் உலகில், ராஜாவுக்குள் இருக்கும் இந்த ஈரம்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. சக மனிதர்கள் மீதான இந்தப் பண்பும், அன்பும் அரிதிலும் அரிதானது.

கலைஞர்களே பிரமிக்கும் கலைஞர் அவர். ரீ-ரெக்கார்டிங்கின்போது சில நொடிகளே வரும் அருமையான பிட் ஒன்றினைக் கொடுப்பார். அப்படியே அள்ளிக்கொண்டு போகும். அந்த சில நொடி பிட்டுகளையே நான் ஐந்து பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வாசித்துப் பழகுவேன். இதுபோலச் செய்வது ஒரு தியானத்துக்கு ஒப்பானது. இசைக்கு இதைப் போன்ற ஆன்மீகப் பலம் நிறைய உண்டு.

இளையராஜா பேசுவது, சிலருக்கு சில நேரங்களில் புரியாது. அவரது பேச்சில் நேரடி அர்த்தத்தை எதிர் பார்த்தால் அப்படித்தான். அவர் ஒரு யோகி. உன்னிப்பாக கவனித்தோமேயானால், அவரது பேச்சில் பன்முக அர்த்தங்கள் பொதிந்திருக்கும். வாழ்வுக்கு உபயோகமான கருத்துகள் அடங்கியிருக்கும். இவரைப் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றும், பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பது என் பெற்றோர் செய்த புண்ணியமாகத் தான் இருக்கும்.

ஒரு முறை வாழ்த்து அட்டை ஒன்றில் இவ்வாறாக எழுதி எனக்குக் கொடுத்தார். "உன்னை இன்னொருவனால் உருவாக்க முடியாது. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்."

அண்ணன் என்ன சொன்னாரோ, அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு : யுவகிருஷ்ணா

(நன்றி : புதிய தலைமுறை)

இப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது!

'நண்பன்’ திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் திருட்டு டிவிடி ஜனவரி 1 அன்றே மார்க்கெட்டுக்கு வந்து விட்டது. அதிர்ந்துப் போன இயக்குனர் ஷங்கர் போலிஸ் கமிஷனிரிடம் புகார் கொடுக்க வருகிறார்...

இப்படியொரு அதிரடி தொடக்கத்துடன் ஒரு நாவல் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது. அந்த நாவலின் பெயர் ‘அழிக்கப் பிறந்தவன்’. விலை ரூ. 50. சென்னை கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸில்’ கிடைக்கும் இந்த நாவல், நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டிருக்கிறது.

திருட்டு டிவிடி எப்படி தயாராகிறது.. எப்படி கடைக்குச் செல்கிறது.. என்பதில் தொடங்கி பர்மா பஜாரில் இயங்கும் நிழல் உலக வாழ்க்கையை இன்ச் பை இன்ச்சாக தோலுரித்துக் காட்டும் இந்த நாவலை எழுதியிருப்பவர் யுவகிருஷ்ணா. ’வசந்தம்’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான இவரது முதல் நாவல் இதுதான் என்பது ப்ளசண்ட் சர்ப்ரைஸ்.

”புதுப்படங்களை யாரும் பார்ப்பதற்கு முன்பாக நாம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும்தான். எனக்கும் இருந்தது. ‘இன்னும் தியேட்டரில் ரிலீஸே ஆகாத புதுப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. பார்க்கிறாயா?’ என்று நண்பன் ஒருவன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நான் பார்த்த படம்தான் கார்த்திக் நடித்த ‘சுந்தர பாண்டியன்’. படம் வெளிவருவதற்கு முன்பாக திருட்டு விசிடி வந்துவிட்டதால், அப்படம் திரையரங்குக்கே வரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சினிமா நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான், திருட்டு விசிடி சமாச்சாரம் ஒரு சினிமாத் தொழிலையும், அத்தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதை நேரடியாக உணர்ந்தேன். எங்கள் நிறுவனம் பெரும் முதலீடு செய்து கையகப்படுத்திய ஒரு பெரிய படம், திருட்டு சிடி வந்துவிட்டதால், மிகப்பெரிய நடிகர் நடித்திருந்தும் ஓபனிங் கூட கிடைக்காமல் படுத்துவிட்டது.

இக்காலக்கட்டத்தில்தான் திருட்டு சிடி எந்த வழியிலெல்லாம் தயாராகிறது, எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். இந்த உலகம் விஸ்தாரமானது. உலகளாவியது. அவ்வப்போது காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் ரோட்டில் விற்பனை செய்யக்கூடிய அப்பாவிகள்.ஐம்பதுக்கும், நூறுக்குமாக உழைப்பவர்கள். மாஸ்டர் காப்பி போடும் ‘பாஸ்’கள் மாட்டுவதேயில்லை என்பதை தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிப்பவர்கள் உணரமுடியும்.

இப்படிப்பட்ட அப்பாவிகளில் உலகத்தைதான் நாவலில் களமாக்கியிருக்கிறேன். நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று அடிக்கடி பார்ப்பதற்கும், பஜாரின் பழைய கதைகளை தெரிந்துகொள்வதற்கும் ஒரு மாத காலம் செலவிட்டேன்.

சினிமாத் தொழிலை அழிக்கப் பிறந்த திருட்டு டிவிடியைதான் ’அழிக்கப் பிறந்தவன்’ என்று சுட்டியிருக்கிறேன்” என்கிறார் யுவகிருஷ்ணா.

(நன்றி : தினகரன் வசந்தம் 29.01.2012 இதழ்)